குறட்செல்வம்/இன்பமே எந்நாளும்

5. இன்பமே எந்நாளும்


உயிரினம் ஆசைகளால் உந்தப்பெற்று, விருப்பு வெறுப்புகளுக்குள்ளாவது இயற்கை. ஆசைகள் விருப்பு வெறுப்புகளின் தாய், விருப்பு வெறுப்புகள் வினைகளின் நிலைக்களன். வினைகள் இன்ப துன்பத்திற்குக் காரணம். இன்ப துன்பங்கள் பிறப்பிற்கு அடிப்படை. பிறப்பு துன்பத்தோடு தொடர்புடையது.

ஆனாலும், பிறப்பின் வழிப்பட்ட இவ் வாழ்க்கையின் இலட்சியம் பிறப்பிலிருந்தும், அவ் வழி வரும் துன்பத்தில் இருந்தும் விடுதலை பெறுவது. ஒன்றின் இயல்பு ஒன்றாக இருக்குமானால் இதனோடு அதற்கு மாறுபட்ட இயல்பு ஒன்றை முறையாகக் கூட்டுவித்தால் அவ்வியல்பு மாறும்—வளரும்.

உயிரின், மேற்கூறிய இயல்பை மாற்றி, அன்பின் வழிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தூய்மையான நல்வாழ்க்கையைப் பெறச்செய்ய வேண்டுமானால் இயல்பிலேயே விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்ட கடவுளோடு—சிவ பரம்பொருளோடு இந்த உயிருக்குத் தொடர்பு ஏற்பட வேண்டும்.

கடவுள் தொடர்பின் வழியாக உயிர்களிடம் உள்ள குற்றங்கள் குறைந்து நிறைவு பெருகும். அவ்வழி உயிர்கட்கு எங்கும் எப்பொழுதும் இன்பமே கிடைக்கும்.

இக் குறிப்பினையே அப்பரடிகள் "இன்பமே எந் நாளும் துன்பமில்லை" என்று குறிப்பிடுகின்றார். இக் கருத்தினையே திருவள்ளுவரும் "யாண்டும் இடும்பை இல" என்று பேசுகின்றார். ஆதலால் வாழ்க்கையில் எந்தக் காரணத்தை மூன்னிட்டும் வேண்டுதல் வேண்டாமை பாராட்டுவது சமய ஒழுக்கமாக மாட்டாது.

வேற்றுமைகளைக் கடந்த விழுமிய மனித குல ஒருமைப்பாடே சமய உலகத்தின் நியதி. ஆதலால், அன்றாட வாழ்க்கையில், இந்தச் சமய சமுதாய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து உய்தி பெறுவோமாக!

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து என்றும் இன்பமாக வாழ்ந்து, வாழ்விப்போமாக!