குறட்செல்வம்/அறமும் சிவிகையும்
6. அறமும் சிவிகையும்
திருவள்ளுவர் முற்போக்கான கருத்துக்களையுடையவர். அவர் சமுதாயத்தின் குணங்களையும் குறைகளையும் நடுநிலை உணர்வோடு விமரிசனம் செய்கிறார். அந்த விமரிசனப் போக்கில் பழமையை ஏற்றுக் கொண்டதும் உண்டு; பழமையைச் சாடியதும் உண்டு.
ஒருவன் பல்லக்கிலே போகிறான். இன்னொருவன் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போகிறான். பல்லக்கில் ஏறிச் செல்பவன் அறம் பண்ணினவன் என்றும், பல்லக்கைத் தூக்கிச் செல்வோன் அறம் செய்யாதவன் என்றும், அதன் பயனாகவே பல்லக்கைச் சுமந்து செல்லுகிறான் என்றும் சொல்லுவது தமிழகத்தின் பழைய பழக்கங்களில் ஒன்று.
"அறத்தாறிது என வேண்டா" என்ற இந்தத் திருக்குறளுக்குக் கூட அந்தப் பழைய வழக்குப்படியே பலர் பொருள் கொண்டுள்ளார்கள். ஆனால், திருவள்ளுவரின் கருத்து அஃதன்று.
திருவள்ளுவர் பல்லக்கில் சவாரி செய்வதையும், பல்லக்கைத் தூக்குவதையும் காரணமாகக் காட்டி, அறத்தாறுதான் இந்த வேற்றுமைக்குக் காரணம் என்று சொல்லாதே என்று சொல்லுகின்றார். "இதுவென வேண்டா" என்ற சொற்றொடர் இந்தப் பொருளையே தருகிறது.
சிவிகை ஊர்தலுக்கும், தூக்குதலுக்கும், அறத்திற்கும் உறவில்லை. காசுக்குத்தான் உறவு. நிறையச் செல்வம் உடையவர்கள்—ஜமீன்தார்கள்—ஜமீன்தாரிணிகள் ஆகியோர் கூலி கொடுத்துத் தூக்கச் செய்து போகிறார்கள். இஃதெப்படி அறமாகும்?
செல்வமுடைமையும் அறமன்று. 'பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள' என்று பின்னே வள்ளுவர் பேசுகிறார். அதனால், சிவிகை ஊர்தல்—தாங்குதல் என்ற வாழ்க்கை வேறுபாடுகள் உலகியலாலும் செல்வ வேறுபாட்டாலும் தோன்றுவதே தவிர, அறத்தின்பாற் பட்டதன்று என்பதே திருவள்ளுவரின் தெளிந்த கருத்து.
ஒரோ வழி அறத்தின் காரணமாகவும் சிவிகை ஊர்தலும் உண்டு. சிவிகை தாங்குதலும் உண்டு. அப்பொழுது சிவிகை ஊர்கிறவர்களும் சிவிகை தாங்குகிறவர்களும் ஒத்த உணர்வினராய்— ஒத்த தகுதியுடையவராய் இருப்பர்.
அங்கு ஒருவருக்கொருவர் பெருமைப்படுத்திக் கொள்ளும் பண்பாட்டின் வழியிலேயே, சிவிகை தாங்குதல் நிகழ்கிறது. அங்கு சிவிகை தாங்குதலும் அறமேயாம்.
இக் காட்சியைத் திருஞான சம்பந்தர் ஊர்ந்த சிவிகையைத் திருநாவுக்கரசர் தாங்கியதிலிருந்து நன்கு உணரலாம்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.