குறட்செல்வம்/தீது உண்டோ?
23. தீது உண்டோ?
மனித உலகத்தின் விழைவு இன்பமேயாம். உலகத்து இயற்கையும் இன்பமே யாம். இங்ங்னம் கூறுவ்து "இன்னா தம்ம இவ்வுலகம்" என்று முன்னோர் மொழிந்த கூற்றுக்கு முரணாகாதா? இயற்கை என்பது மாற்ற முடியாத ஒன்றேயாம்.
மாற்றுதலுக்கும், மாறுதலுக்கும் உரியன எல்லாம் இயற்கையாகா. அவை ஒருவகை செயற்கையேயாம். அதனாலேயே "இன்னாதம்ம இவ்வுலகம்" என்று மொழிந்தவர் அதனைத் தொடர்ந்து "இனிய காண்க" என்று ஆணையிட்டார்.
இன்னாதன என, கருதத் தக்கவை பெரும்பாலும் முறைகேடான தன்னலச் சார்புகளிலும், தற்சலுகைகளிலுமே தோன்றுகின்றன. முறைகேடான தன்னலச் சார்பு என்பது பிறர்க்குத் தீங்குகளைத் தந்து அவ்வழி தன்னலமாக விளங்குபவை யாகும்.
ஆதலால் ஒரு தனி மனிதனிடத்தில் திடீரென்று குற்றங்கள் தோன்றிவிடா. அந்தக் குற்றங்களைத் தோற்றுவிப்பவர்கள்—குற்றங்கள் தோன்றுவதற்கு உரியவாறு வாழுகிறவர்கள் தங்களுடைய குற்றங்களை எண்ணிப் பார்க்காமல் தங்களுடைய குற்றங்களின் காரணமாகப் பிறரிடம் தோன்றும் குற்றங்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறார்கள்.
காவிரிநதியை தஞ்சையிலும் பார்க்கிறோம், திருச்சியிலும் பார்க்கிறோம். அதனால், காவிரி தஞ்சையிலோ திருச்சியிலோ தோன்றுகிறது என்று சொல்ல முடியாது. அது குடகு மலையில் தோன்றியே தஞ்சையையும், திருச்சியையும் வந்து சேர்ந்தது. அதுபோலவே குற்றங்களுக்குரிய காரணங்கள் தோன்றும் இடம் வேறு. குற்றங்கள் விளங்கிப் புலனாகின்ற இடம் வேறு.
உண்மையை ஒத்துக்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள் பொய்யைத் தோற்றுவிக்கிறார்கள். நியாயமான உரிமைகளை ஏற்று வழங்காதவர்கள் பொய்யினைத் தோற்றுவிக்கிறார்கள். மற்றவர்களுடைய மன உணர்ச்சிகளை மதித்து உடன்படவோ அல்லது மாற்றவோ சக்தி அற்றவர்கள் ஒடுக்கம் கொள்கையின் மூலம் பொய்யினைத் தோற்றுவிக்கிறார்கள். இவறிக் கூட்டிச் செல்வம் சேர்ப்பவர்கள்—செல்வத்தின் பயனை மறைப்பதன் மூலம் கள்வர்களைத் தோற்றுவிக்கிறார்கள்.
அழிபசி தீர்க்கும் பொருள் வைப்புழித் தெரியாத புல்லறிவாளர்கள் களவினைத் தோற்றுவிக்கிறார்கள். மற்றவர்கள் அன்றாட வாழ்வுக்கே வறுமையில் ஆழ்ந்து அவலப்படும்பொழுது வளம்பல படைத்து ஆடம்பரமாக வாழ்பவர்கள் அழுக்காற்றினைத் தோற்றுவிக்கிறார்கள். பலர் துய்க்காதனவற்றைப் பலர் அறியத் துய்த்து மகிழ்கிறார்கள். அவாவினைத் தோற்றுவிக்கிறார்கள். ஆதிக்கம் செலுத்துபவர்கள் அடிமைத்தனத்தையும் வளர்ந்துழி அடங்காமையையும் தோற்றுவிக்கிறார்கள்.
இங்ஙனம் ஆய்வு செய்யின் குற்றங்களுக்குக் குற்றங்களை உடையோரும் குற்றங்களைச் செய்வோரும் மட்டுமே பொறுப்பினர் ஆகார். அவர்களோடு தொடர்புடைய மற்றவர்களுக்கும், குறிப்பாகச் சமுதாய அமைப்பிற்கும் நிறைய பொறுப்பும் பங்கும் உண்டு. இங்ஙனம் ஆராய்ந்து முடிவு செய்வதே நியதியும், நீதியும் ஆகும். இந்த ஒப்பற்ற நீதியைப் புதுமை என்றும், பொதுமை என்றும் இன்று பலர் கூறுகின்றனர். ஆனால் நமது வள்ளுவர் அன்றே கூறியுள்ளார்.
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
என்பது குறள். இந்தக் குறள் நினைந்து நினைந்து உணரத்தக்க குறள். புதுமையும் புரட்சியும் நிறைந்த குறள். நிலைபெற்ற மனித உயிர்கள் உலகத்தைப் பற்றிப் பிடித்து அலைக்கும் பகைமைக்கும் ஒழுக்கக் கேட்டிற்கும் அருமருந்தென விளங்கும் குறள். ஏதிலார், அயலார் என்பது பொதுவான பொருள். சிறப்பாக மாறுபட்ட பகை உணர்ச்சி உடையவர் என்றும், பொருள் கொள்ளலாம்.
முதலில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அயலார் பகைவர் என்று கருதுதலே அடிப்படையில் தவறு. அங்ங்ணம் கருதுகின்ற பகையினாலேயே நல்லனவும் தீயனவாகத் தோன்றும். அன்புடையார் மாட்டுத் தீமையே தோன்றினாலும் நன்மையே தோன்றும். ஆதலால் ஒருவன் பிறிதொருவனை ஏதிலானாகக் கருதுதல் மூலமே குற்றங்கள் தோன்றுவதற்குரிய களம் ஏற்பட்டுவிடுகிறது.
அடுத்து பிறரிடத்தில் காணப்படும் குற்றங்களுக்குத் தன்னிடத்தில் உள்ள குற்றங்கள் எவ்வளவுக்குக் காரணமாக அமைந்து கிடக்கின்றன என்பதைப் பார்க்கக்கூடிய தைரியம் ஏற்பட்டு சுய விமரிசனத்திற்கு உரிய அறிவு பெற்றுத் தன்னுடைய குற்றங்களை நீக்கிக் கொண்டால் பிறருடைய குற்றங்களும் நீங்கிப் போகும். அதன் மூலம் சமுதாயத்திலும் குற்றங்கள் குறையும்; நிறை பெருகும்; பகை மாறும்; பண்பு வளரும். இதனையே இந்த அறநெறியையே இந்தக் குறள் வலியுறுத்துகிறது. அதாவது ஒழுக்கக்கேடு என்பது ஒருவரை மையமாகக் கொண்டது மட்டுமன்று; பலரை—அதாவது மனித சமுதாயத்தை மையமாகக் கொண்டு வளருவதே ஒழுக்க நெறி.
இந்தக் குறள் புறங் கூறாமையில் இருக்கிறது. புறங் கூறுகிறவர்கள் நேரடியாகச் சொல்லுதற்குரிய ஆளுமையும் அசைவிலா உறுதியும் இன்மையின் காரணமாகவே புறங் கூறுகிறார்கள். புறங்கூறுவதே ஒரு குற்றம் என்று கருதும் அறிவு இருக்குமானால் புறங்கூற மாட்டார்கள். அவ்வழித்திரிபுகள் ஏற்படா. ஒரு தவற்றில் பலர் பங்கு ஏற்கக்கூடிய வாய்ப்பும் தடைப்படும். காலமும் மிஞ்சும். மனித சக்தியும் மிஞ்சும், பகையும் குறையும். எதிர்பார்க்கின்ற குறைகளும் நீங்கி, நிறைகளும் ஏற்படும்.
ஆதலால் பிறர் குற்றம் காண்பதற்கு முன் நமது குற்றத்தை நாமே பார்த்து திருத்திக் கொள்வோமாக.
நாம் அனைவரும் நல்லவர்களாகி அவ்வழி மற்றவர்களையும் நல்லவர்களாக வாழச் செய்வோமாக!