குறட்செல்வம்/மனத் தூய்மையே அறம்



2. மனத் தூய்மையே அறம்


கருதியதை முடிப்பதற்குரிய வழிவகைகளைக் காட்டுவதில் திருவள்ளுவர் வல்லவர். ஒன்றினைச் சாதித்துக் கொள்வதன் மூலம் பலவற்றை அடைந்து அனுபவிக்கும் வண்ணம் வழி காட்டுவதில் வல்லவர் அவர்.

அறம் செய்தல் பற்றிப் பல்வேறு வகையான கருத்துக்கள் இவ்வுலகில் உண்டு. "அறத்தைச் செய்க" என்று ஆணையிடுவது பிறமொழிகளின் மரபு. "அறம் செய்ய விரும்பு" என்பது தமிழ் மொழியின் மரபு.

மனம், மொழி, மெய்—இவற்றின் துணைகொண்டு அறம் இயற்ற வேண்டும்; செய்ய வேண்டும். இவற்றுள் மொழியால்—மெய்யால் செய்யக்கூடிய அறங்களில் பொய்ம்மையும் வஞ்சனையும் இருக்கக்கூடும். மனத்தால் எண்ணிச் செய்யக்கூடிய அறமே சிறந்தது. மொழியும் மெய்யும் இரட்டை வேடம் போட முடியும்.

ஆனால் மனத்தால் இரட்டை வேடம் போட முடியாது. அதன் இயற்கை இயல்பு, ஒரே தன்மையாக இருக்கிறது. செயல்கள் அனைத்திற்கும் சிந்தனையே அடிப்படை. சிந்தனையின் நிலைக்களன், மனம்.

நாம் செய்யும் செயல்கள் பலவற்றில் தூய்மை காண வேண்டும் என்று தனித்தனியாக முயல்வதைவிட, செயல்கள் அனைத்திற்கும் பொறுப்பாக உள்ள சிந்தனையைத் திருத்தி மனத்தை மாசின்றி வைத்துக் கொள்வது நல்லது; சிறந்தது. இதன் மூலம் நாம் செய்யும் அறங்களும், மிகச் சிறந்து விளங்கும். 

மேலும், வாழ்வியல் முறை எண்ணத்தின் வழி இயங்கி பயன் கூட்டுவிக்குமே அன்றி, செயல்கள் வழி மட்டுமல்ல. மனத்தூய்மை இன்றிச் செய்யப்பெறும் அறங்கள் செய்பவர்க்கும் பயன் தராது; செய்யப் பெறுவோர்க்கும் பயன் தராது.

மனத்தூய்மை வாழ்க்கை முழுவதையுமே சாதித்துத் தரக்கூடியது. அதை முயன்று பெறுவதே அறம். மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மையுடையன என்றே திருவள்ளுவர் கூறுகிறார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.