குறட்செல்வம்/வானும் ஒழுக்கமும்

3. வானும் ஒழுக்கமும்


திருவள்ளுவர் மனித குலத்தின் ஒழுக்க நெறியை உயர்த்த, நூல் செய்தவர். அவர் செய்த திருக்குறள் ஒரு முழு ஒழுக்க நூல். பல்வேறு வகையான துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் உரிய இயல்பான ஒழுக்கத்தை வலியுறுத்தி உள்ளார்.

ஆனாலும் திருவள்ளுவர் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும்பொழுது நாட்டின் நடைமுறையை யதார்த்த நிலையை மறந்துவிட்டு உபதேசிக்கவில்லை. சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தே சொல்லுகிறார். பொதுவாக ஒழுக்கத்தைப்பற்றி உபதேசிப்பது எளிமையானதொன்று. ஆனாலும், அதைத் தன் வாழ்வில் கடைப்பிடிப்பதும், மற்றவர் கடைப்பிடித்து ஒழுகுதற்குரிய முறையில் சூழ்நிலையை உருவாக்குவதும் அவசியமாகும்.

பெரும்பான்மையான மனிதர்கள் இயல்பில் நல்லவர்கள். ஆனாலும் தவறுகள் செய்வதற்குக் காரணம் அவர்களின் சூழ்நிலையேயாகும். உதாரணமாகக் களவு, பொய் வெஃகுதல், அழுக்காறு ஆகிய ஒழுக்கக் கேடுகள் மனித குலத்தில் தோன்றிய செயற்கைத் தவறுகளே. ஏன்? வாழ்க்கைக்குரிய இன்றியமையாத் தேவைகளை மனிதன் பெற்றுவிட்டால், இக் குறைகள் குறையும் - இல்லாமலே கூடப் போகலாம். மேலும், செல்வ உலகத்தில் அருவருக்கத்தக்க வகையில் - விபத்துக்களை உண்டாகக்கூடிய வகையில் மேடு பள்ளங்கள் இருப்பதும் குறைகளை வளர்க்கத் தக்க சூழலே.

ஆதலால் இவ்வுலகில் எல்லோரும் எல்லாச் செல்வங்களும் உடையவர்களாக வாழும் சூழல் அமைந்த சமநிலைச் சமுதாயம் அமைய வேண்டும். இத்தகு சமுதாயத்தை, இருப்பதை விநியோகிப்பதன் மூலம் அமைக்க முடியாது. இம் முறையில் வறுமையைத்தான் பங்கிட முடியும்.

எனவே, வளத்தைப் பெருக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். இவ்வாறு வளத்தைப் பெருக்கும் முயற்சியில் மனித குலத்திற்குத் துணை நிற்க வேண்டியது — துணை நிற்பது மழையேயாகும். மழை யின்றேல் மண்ணில் வளமில்லை. ஊற்று வளமும் குன்றும். இதன் பயனாக வறுமையே தோன்றும். பசிப்பிணியால் உந்தப் பெற்ற மக்கள் ஒழுக்கக்கேடான செயல்களிலும் ஈடுபடுவார்கள். ஆதலால், மனித குல ஒழுக்கத்திற்கு மழையே இன்றியமையாதது என்கிறார் திருவள்ளுவர்.

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு

என்பது திருக்குறள். இக் குறட்பாவை மேற்கூறியவாறு சிந்தனை செய்யாமல், 'வான் இன்றி மழையில்லை" என்று பொருள் காண்பது நிறைவாகாது.

மேலும், ஒழுக்கச் சூழல் காண, குளித்தலும் தண்ணீர் குடித்தலும் அவசியமாகும். மனித உடலின் வெப்ப நிலை அதிகமாகும் சூழ்நிலை ஒழுக்கக் கேடுகளையும் விளைவிக்கிறது. உடலின் வெப்ப நிலையை அளவோடு வைத்துக் கொள்ளத் தண்ணீரில் குளித்தலும், தண்ணீரைக் குடித்தலும் அவசியம். அதனாலன்றோ உடல்நலம் பற்றிய நூல்கள் பலகாலும் குளித்தலையும், தண்ணீர் குடித்தலையும் வற்புறுத்துகின்றன. நல்ல உடல் நல்ல மனம் ஆகியவை ஒழுக்கத்தின் விளை நிலங்கள். எனவே, வான் இவ் உலகிற்குத் தண்ணீர் வளம் தருவதோடு, ஒழுக்கம் சிறக்கவும் உதவுகிறது.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.