குறுந்தொகை 31 முதல் 40 முடிய

பாடல்: 31 (மள்ளர்)

தொகு

மருதம் - தலைவி கூற்று

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

என்பது, நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது.

பாடியவர்
ஆதிமந்தியார்.

செய்தி

தொகு

ஆட்டக்காரி என்று நாம் கூறும் ஆடுகளமகள் ஒருத்தியின் காதல் கதை இது. உறவுக்கார நொதுமலர் அவளை மணக்கப் பெண் கேட்டனர். அவளோ தன் காதலனாகிய அவனை மணக்க எண்ணிக்கொண்டிருக்கிறாள். தன் எண்ணத்தைத் தோழியிடம் சொல்லி வெளிப்படுத்துகிறாள்.

அவனை(என்காதலனை) மள்ளர் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் துணங்கை ஆடும் இடங்களிலும் அவனைத் தேடினேன். எங்கும் அவனைக் காணமுடியவில்லை. அவன் மாண்புள்ளவன். என்னை மணக்கும் தகுதி உள்ளவன். நான் ஓர் ஆடுகள மகள். அவனும் ஓர் ஆடுகள மகன். அவன் பெருமை மிக்கவன். ஆடுகளக் கூட்டத்துக்குக் குரிசில்(தலைவன்). அவனை நினைத்து என் கைவளையல் நழுவுகிறது.

  • மள்ளர் = உழவர். மள் < மண் - மண்ணைப் பிணைந்து தொழில் புரிவோர்.
  • துணங்கை = வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடும் பொழுதுபோக்கு விளையாட்டு நடனம்.

வழக்கம்

தொகு
  • சங்கை அறுத்து வளையல் செய்தனர். ('கோடு ஈர் இலங்கு வளை')
  • மள்ளர் மகளிர் இரவு வேளையில் தாம் பகலில் உழைத்த களைப்பு போகும் மகிழ்ச்சிக்காகத் துணங்கை ஆடுவர்.

வரலாறு - ஆதிமந்தி

தொகு

ஆதிமந்தி என்பவர் சோழன் கரிகாலனின் மகள் என்பர். நீச்சல்-நடன விளையாட்டுவீரன் ஆட்டன் ஆத்தி என்பவனை அவள் காதலித்தாள். காவிரியாற்றில் கழார் என்னும் ஊரிலிருந்த நீர்த்துறையில் ஆட்டனத்தி என்பவன் நீச்சல் நடனம் ஆடினான். இந்த நீச்சல் நடனம் கரிகாலன் முன்னிலையில் நடந்தது. காவிரி என்பவள் 'தாழிருங் கதுப்பு' கொண்டவள். ஆற்றுவெள்ளம் காவிரியை ஈர்த்தபோது அவள் ஆட்டனத்தியைப் பிடித்துக்கொண்டாள்('வௌவலின்'). வெள்ளம் இருவரையும் அடித்துச் சென்றுவிட்டது. காவிரி ஆற்றுவெற்றத்தில் மாண்டுபோனாள். ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.மருதி என்பவள் அவனைக் காப்பாற்றினாள். ஆதிமந்தி தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட கற்பரசி மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள், (அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 ஆகிய பாடல்களின் தொகுப்புச் செய்தி இது).

பாடல்: 32 (காலையும்)

தொகு

குறிஞ்சி - தலைவன் கூற்று

காலையும் பகலுங் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலொடு மறுகிற் றோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

என்பது, பின்னின்றான் கூறியது.

பாடியவர்
அள்ளூர் நன்முல்லையார்.

செய்தி

தொகு

பொருள் தேடச் செல்ல முடிவெடுத்த தலைவன் செல்லாமல் பின்தங்கிய நிலையில் கூறுகிறான்.

(ஒரு நாளை ஆறு சிறுபொழுதுகளாகப் பகுத்துக் காண்பது தமிழ்நெறி.) பொருள் தேடச் செல்லலாம் என்று நினைத்த தலைமகன் தன் காதலியை எண்ணிப் பின்தங்கிவிட்டான். காலை, பகல், மாலை, யாமம், விடியல் என்று எந்த நேரத்திலும் காமம் பொய்யாகிவிடுகிறது. அது மெய்யாகிக் கிட்டுவதற்கு மடலேறலாம் என்றால் ஊர்மக்கள் பற்றிய நினைவு வருகிறது. ஊர்மக்கள் என்னைத் தூற்றினால் எனக்குப் பழி. ஊர்மக்கள் என்னை வாழ்த்தினால் என் காதலியின் பெற்றோருக்குப் பழி. எனவே மடலேறுதலும் தக்கதன்று. என்ன செய்வேன்? - என்று அவன் கலங்குகிறான்.

பாடல்: 33 (அன்னா)

தொகு

மருதமு - தலைவி கூற்று

அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே.

என்றது, வாயிலாகப் புக்க பாணன் கேட்பத் தோழியை நோக்கித் தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது.

பாடியவர்
படுமரத்து மோசிகீரன்.

பாடல் தரும் செய்தி

தொகு

அவன் பரத்தையிடமிருந்து தன் இல்லம் மீண்டான். அவனுக்குத் தூதாகப் பாணன் வருகிறான். உள்ளே வர ஒப்புதல் தருகிறாள் இல்லத்தரசி. அதனைத் தோழியிடம் சொல்வாள் போலச் சொல்கிறாள்.

அன்னாய்(தோழி)! இங்கே வந்திருக்கும் பாணன் ஓர் இள மாணாக்கன்(பிரம்மச்சாரி). என் வீட்டுக்காரர் பரத்தையிடம் சென்ற ஊரில் எப்படி இருந்தானோ தெரியவில்லை. அந்த இல்லத்தில் பிச்சை எடுத்த உணவு போதவில்லை போல் இருக்கிறது. இந்த இல்லத்தில் விருந்து சாப்பிடுவதற்காக வந்திருக்கிறான். என்றாலும் அவன் உயர்ந்தவன்(செம்மல்).

செந்தமிழ்

தொகு

இள மாணாக்கன் = பிரம்மச்சாரி

பாடல்: 34 (ஒறுப்ப)

தொகு

மருதம் - தோழி கூற்று

ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
தமிய ருறங்குங் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோ
டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை யன்னவெம்
குழல்விளங் காய்நுதற் கிழவனு மவனே.

என்பது, வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.

பாடியவர்
கொல்லிக் கண்ணன்.

பாடல் தரும் செய்தி

தொகு

திருமணம் உறுதியாயிற்று. ஊராரின் கௌவைப் பேச்சு அடங்கிவிட்டது என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

குட்டுவன் வெற்றிக் கொண்டாட்டப் பறை முழக்கத்தைக் கேட்ட நாரைகள் மருண்டன. அதுபோல என் உறவைப் பற்றி ஏதேதோ பேசியவர்கள் என் திருமணச் செய்தி கேட்டு மருள்கின்றனர்.

வரலாறு

தொகு

மாந்தை என்னும் ஊரைக் குட்டுவன் கைப்பற்றினான். அவனது படை வெற்றி ஆரவாரம் செய்தது.

பாடல்: 35 (நாணில)

தொகு
தலைவி கூற்று
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழிதுளி தலைஇ
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.

என்றது, பிரிவிடை மெலிந்த கிழத்தி, தோழிக்குச் சொல்லியது.

பாடியவர்
கிழார்க்கீரன் எயிற்றியார்.

பாடல் தரும் செய்தி

தொகு

அவன் பிரிந்திருந்தபோது அவளது கண்களில் நீர்த்துளிகள். தன் கண்களைப் பார்த்துத் தானே பேசுகிறாள்.

இந்தக் கண்களுக்குக் கொஞ்சங்கூட வெட்கம் இல்லை. அழுகின்றன. அழுதால் ஊரார் சிரிப்பார்களே என்று நாணவேண்டாமா? என்கிறாள் தலைவி.

உவமை

தொகு
  • கரும்புப் பூ விரியும் மொட்டு சினையுற்றிருக்கும் பாம்பு போல் இருக்குமாம்.
  • கரும்புப் பூ விரிவது போல் கண்ணீர்த் துளிகள் சிதறுமாம்.

பாடல்: 36 (துறுகலயல)

தொகு
தலைவி கூற்று
துறுக லயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்
நெஞ்சுகள னாக நீயலென் யானென
நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன்
தாவா வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி னானே.

என்பது, வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளெனக் கவன்று வேறுபட்ட தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.

பாடியவர்
பரணர்.

பாடல் தரும் செய்தி

தொகு

அவன் பிரிந்தால் அவள் தாங்கமாட்டாள் என்று கவலைப்பட தோழிக்கு அவள்(தலைவி) சொல்கிறாள்.

(மாணை என்பது ஒருவகைக் கொடி. இக்காலத்தில் அதனைக் கட்டுக்கொடி என்பர்.) பாறைக்கல் அருகே முளைத்த மாணைக்கொடி அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் யானையைப் பாறை என்று நினைத்துக்கொண்டு அதன்மேல் ஏறிப் படர்வது போல நான் என் மனத்தை அவன்மேல் படரவிட்டேன். யானை செல்வது போல அவன் பிரிந்து சென்றுவிட்டான்.

பாடல்: 37 (நசைபெரிது)

தொகு

பாலை - தோழி கூற்று

நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.

என்பது, தோழி கடிது வருவாரென்று ஆற்றுவித்தது.

பாடியவர்
பாலைபாடிய பெருங்கடுங்கோ.

பாடல் தரும் செய்தி

தொகு

அவன் பிரிவால் அவள் கவலைப்படுகிறாள். தோழி அவளைத் தேற்றுகிறாள்.

பெண்யானைக்குப் பசி. அதனைப் போக்க ஆண்யானை யா மரத்தை ஒடிக்கும். அந்தக் காட்டின் வழியாகத்தான் அவர் சென்றிருக்கிறார். அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது அவருக்கு உன் நினைவு வரும். எனவே விரைவில் திரும்பிவிடுவார். (யா மரத்தை இக் காலத்தில் கூந்தல் பனை என்பர்)

பாடல்: 38 (கானமஞ்ஞை)

தொகு

குறிஞ்சி - தலைவி கூற்று

கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும்
குன்ற நாடன் கேண்மை யென்றும்
நன்றுமன் வாழி தோழி யுண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே. (உள்ளாது அகறல் - என்பதும் ஓர் பாடம்)

என்பது, வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது.

பாடியவர்
கபிலர்.

பாடல் தரும் செய்தி

தொகு

திருமண காலம் நீட்டித்தபோது தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

மயிலின் முட்டையைக் குரங்குக் குட்டி நல்ல வெயிலில் உருட்டி விளையாடிக்கொண்டிருக்கும் குன்று அவன் நாடு. அவனோடு எனக்கிருக்கும் நட்பும் அப்படித்தான் இருக்கும். அவன் பிரிவைத் தாங்கிக்கொள்ள வல்லவர்களுக்கே அது தகுதி. என் கண்கள் நீர் கொட்டுகின்றனவே. என் செய்வேன்?

இவள் மயிலின் முட்டையாம். அவன் குரங்குக் குட்டியாம்.

பாடல்: 39 (வெந்திறற்)

தொகு

பாலை - தலைவி கூற்று

வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்
மலையுடை யருஞ்சுர மென்பநம்
முலையிடை முனிநர் சென்ற வாறே.
பாடியவர்
ஔவையார்

என்பது, "பிரிவிடை ஆற்றல் வேண்டும்" என்ற தோழிக்கு, "யாங்ஙனம் ஆற்றுவேன்!" எனத் தனது ஆற்றாமைமிகுதி தோன்றத் தலைமகள் கூறியது.

பாடல் தரும் செய்தி

தொகு

தலைவி தன் ஆற்றாமையைத் தோழியிடம் சொல்கிறாள்.

அய்யகோ! பெருங்காற்று போந்து நான் உதிர்த்து வைத்திருக்கும் பொங்கர்ப் பூக்களையெல்லாம் அள்ளிச் செல்கின்றனவே என்று வாகை மரத்தின் நெற்றுகள் கலகலக்குமாம். என்னைத் தழுவியவர் அந்தச் சூறாவளி வீசும் காட்டில் சென்றிருக்கிறாரே!

பாடல்: 40 (யாயு)

தொகு

குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.


பாடியவர்
செம்புலப் பெயனீரார். (தன் பாடல் தொடரால் பெயர் பெற்றுள்ள புலவர்)

பாடல் தரும் செய்தி

தொகு

என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ;அதுபோன்று நம் அன்பு நெஞ்சங்களும் ஒன்றாய்க்கலந்தனவே...