குறுந்தொகை 81 முதல் 90 முடிய
பாடல் 81 (இவளேநின்)
தொகு- திணை - குறிஞ்சி
- நெய்தல்திணை
- தோழி கூற்று
- இவளே, நின்சொற் கொண்ட வென்சொற் றேறிப் // //இவளே நின் சொல் கொண்ட என்சொல் தேறி
- பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் // // பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை
- புதுநல னிழந்த புலம்புமா ருடையள் // // புது நலன் இழந்த புலம்பு மார் உடையள்
- உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் // //உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்
- நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் // // நிலவும் இருளும் போல புலவு திரை
- கடலுங் கானலுந் தோன்றும் // // கடலும் கானும் தோன்றும்
- மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. // // மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே.
- என்பது, தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது.
- பாடியவர்
- வடமவண்ணக்கன் பேரிசாத்தன்
செய்தி
தொகுதலைவியும் தலைவனும் தன்னிச்சையாகக் கூடி இன்பம் கண்டனர். பின்னர் தலைவன் தோழியின் உதவியால் தலைவியைப் பெற்றுத் தலைவியுடன் புணர்ந்து இன்பம் கண்டான். பிரியும்போது தோழி இனித் தலைவன் தலைவியை மணந்துகொண்டு தலைவியை அடையுமாறு கூறும் பாடல் இது.
ஞாழல் மரக் கிளைகள் நிலத்தோடு மோதிக்கொண்டிருக்கும் மறைவிடத்தில் தலைவி தலைவன் கூறிய சொற்களை நம்பித் தன்னைப் பறிகொடுத்தாள். இப்போது அவள் புலம்புகிறாள். அதோ பார் எங்கள் ஊர் நிலவொளியைப் போலக் கானல்நில மணலும், இருளைப் போல கடலும் இணைந்திரும் இடத்தில் தெரிகிறது. அங்கு வந்து முறையாக மணந்துகொள் - என்கிறாள் தோழி
பாடல் 82 (வாருறு)
தொகு- குறிஞ்சித்திணை
- தலைவி கூற்று
- வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர் // // வார் உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு
- பழாஅ லென்றுநம் மழுதகண் டுடைப்பார் // // அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார்
- யாரா குவர் கொ றோழி சாரற் // // யாராகுவர் கொல் தோழி சாரல்
- பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற் // // பெரு புனம் குறவன் சிறு தினை மறுகால்
- கொழுங்கொடி யவரை பூக்கு // // கொழு கொடி அவரை பூக்கும்
- மரும்பனி யச்சிரம் வாரா தோரே. // // அரும் பனி அச்சிரம் வாராதோரே.
- என்பது, பருவங் கண்டு அழிந்த தலைமகள், வருவரென்று வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.
- பாடியவர்
- கடுவன் மள்ளன்
செய்தி
தொகு- இப்பாடல் கருப்பொருளால் குறிஞ்சி. உரிப்பொருளால் பாலை.
அவளைப் புணந்த காலத்தில் அவன் அவளது கூந்தலை வாரிப் பின்புறமாக விட்டு அவளது கண்ணீரைத் துடைத்தான். அப்போது அவளது தந்தை குறவன் புனக்காட்டில் தினை விதைத்திருந்தான். அது விளைந்து அறுவடையாகிவிட்டது. (தினைப்புனம் காக்க வந்த அவளைப் புணர்ந்தான். இப்போது தினை அறுவடையாகி மறுகால் பயிராக அவரை வளர்துள்ள அவரை பூக்கும் பனிக்காலம் வந்துவிட்டது. அவர் வரவில்லை. (இவளும் இல்லத்தில் இருக்கிறாள்) இப்போது இவள் கூந்தலை வாரிவிட்டு இவளது கண்ணீரைத் துடைப்பவர் யார்? - தலைவியும் தோழியும் இவ்வாறு பேசிக்கொள்கின்றனர்.
வேளாண்மை - புன்செய் நிலத்தில் மறுகால் பயிர்
தொகுதினை விதைக்கும்போது அவரை விதையையும் ஊன்றுவர். தினை அறுவடைக்குப் பின்னர் அவரை மறுகால் பயிராகப் பூத்துக் காய்த்துப் பலன் தரும்.
பாடல் 83 (அரும்பெற)
தொகு- குறிஞ்சித்திணை
- தலைவி கூற்று.
- அரும்பெற லமிழ்த மார்பத மாகப் << >> அரு பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக
- பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை << >> பெரு பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
- தம்மிற் றமதுண் டன்ன சினைதொறுந் << >> தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
- தீம்பழந் தூங்கும் பலவி << >> தீ பழம் தூங்கும் பலவின்
- னோங்குமலை நாடனை வருமென் றோளே. << >> ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே.
- என்பது, தலைமகன் வரைந்தெய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது.
- பாடியவர்
- வெண்பூதன்.
செய்தி
தொகுதலைவியைப் பெண் கேட்க வருமாறு தலைவியின் அன்னள தலைவனுக்குச் சொல்லியனுப்பியுள்ளாள். இது கிடைத்தற்கு அரிய அமிழ்தம் பெற்று ஊரெல்லாம் ஒன்றுகூடி உண்பது போல இனித்து உயிரைத் தழைக்கச் செய்கிறது. - இவ்வாறு சொல்லித் தோழி செவிலியை வாழ்த்துகிறாள்.
திருக்குறள் ஒப்புமை
தொகுஇப்பாடலில் வரும் 'தம் இல் தமது உண்டு அன்ன' என்னும் தொடர் 'தம் இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால்' எனத் திருக்குளில் வரும் தொடரை நினைவூட்டுகின்றது.
பாடல் 84 (பெயர்த்தனென்)
தொகு- குறிஞ்சித்திணை
- செவிலித்தாய் கூற்று
- பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றன<< >>பெயர்த்தனென்முயங்கயான்வியர்த்தனன் என்றனள்
- ளினியறிந் தேனது துனியா குதலே << >> இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே
- கழறொடி யாஅய் மழைறவழ் பொதியில் << >> கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
- வேங்கையுங் காந்தளு நாறி << >> வேங்கையும் காந்தளும் நாறி
- யாம்பன் மலரினுந் தான்றண் ணியளே. << >> ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.
- என்றது, மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
- பாடியவர்
- மோசிகீரன்.
- சிறப்பு
- கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய ஆய் வள்ளல் பற்றிய குறிப்பு.
செய்தி
தொகுசெவிலித்தாய் வயது வந்த தன் மகளை ஆரத் தழுவினாள். அப்போது அவளது மகளின் மேனியில் நறுமணம் கமழ்ந்தது. அந்த மணம் வீரக்கழலை அணிந்த ஆய் அரசனின் மழைமேகங்கள் தவழும் பொதியமலையில் பூத்திருக்கும் வேங்கை மலர் போலவும், காந்தள் மலர் போலவும் இருந்தது. அந்த ஆய் நாட்டுச் சுனையில் பூத்திருக்கும் ஆம்பல் மலர் போல் குளுகுளுவென்று இருந்தது. (இனிக்கட்டுமே என்று எண்ணிக் கையை எடுத்துவிட்டு) மீண்டும் தழுவினேன். அவள் எனக்கு வியர்வை வருகிறது விட்டுவிடு என்றாள். (ஏன் அப்படிச் சொன்னாள் என்பது) இப்போது புரிந்துவிட்டது, நான் அவளைத் தழுவுவதை விரும்பவில்லை என்று.(தன் காதலன் தழுவும்போது கிட்டும் இன்பத்தை நினைத்திருக்கிறாள். அவனைத் தழுவிக்கொண்டு அவனுடன் என்னை விட்டுவிட்டு ஓடிவிடப் போவதை நினைத்திருக்கிறாள்.)
பாடல் 85 (யாரினு)
தொகு- மருதத்திணை
- தோழி கூற்று
- யாரினு மினியன் பேரன் பினனே << >> யாரினும் இனியன் பெரு அன்பினனே
- யுள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவற் << >> உள் ஊர் குரீஇ துள்ளுநடை சேவல்
- சூன்முதி்ர் பேடைக் கீனி லிழைஇயர் << >> சூல் முதிர் பேடைக்கு ஈன் இல் இழைஇயர்
- தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பி << >> தேம் பொதி கொண்ட தீ கழை கரும்பின்
- னாறா வெண்பூக் கொழுதும் << >> நாறா வெண் பூ கொழுதும்
- யாண ரூரன் பாணன் வாயே. << >> யாணர் ஊரன் பாணன் வாயே.
- என்பது, வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி வாயின் மறுத்தது.
- பாடியவர்
- வடமன் (வடம வண்ணக்கன் தாமோதரனார் என்பதும் பாடம்)
செய்தி
தொகுதலைவன் பரத்தையைத் துய்த்துவிட்டுத் தன் வீட்டுக்கு மீள்கிறான். பாணனைத் தூதாக அனுப்புகிறான். தோழி தலைவியின் எண்ணப்படி வீட்டுக்குள் நுழைய மறுக்கிறாள். அதனை உணர்த்தும் வகையில் உள்ளுறை உவமத்தால் நயம்படத் தன் கருத்தை வெளிப்படுத்துகிறாள்.
முட்டை போடும் நிலையில் சூலுற்றிருக்கும் தன் பெட்டைக் கோழிக்கு அதன் சேவல்கோழி சுவைமிக்க கரும்பில் பூத்திருக்கும் சுவையே இல்லாத கரும்புப் பூவைத் தன் அலகால் கொழுதிக் காட்டுவது போல உள்ளதாம். (பரத்தை- கரும்பு, தலைவி - கரும்புப்பூ)
பாடல் 86 (சிறைபனி)
தொகு- குறிஞ்சித்திணை
- தலைவிகூற்று
- சிறைபனி யுடைத்த சேயரி மழைக்கட் << >> சிறை பனி உடைத்த செ அரி மழைக் கண்
- பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் << >> பொறை அரு நோயொடு புலம்பு அலைக்கலங்கி
- பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந் << >> பிறரும் கேட்குநர் உளர்கொல் உறை சிறந்து
- தூதை தூற்றுங் கூதிர் யாமத் << >> ஊதை தூற்றும் கூதி்ர் யாமத்து
- தானுளம் புலம்புதொ றுளம்பும் << >> ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
- நாநவில் கொடுமணி நல்கூர் குரலே. << >> நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.
- என்பது, ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
- பாடியவர்
- வெண்கொற்றன்.
செய்தி
தொகு- நுளம்பு = மாட்டைக் கடிக்கும் பெருங்கொசு.
ஊதைக்காற்று வீசும் குளிர்கால நள்ளிரவில் பசு குளிரில் நடுங்கிக்கொண்டு படுத்திருக்கும்போது, அதனை நுளம்பு கடிக்க, அப்போது அந்தப் பசு தன் தலையை ஆட்டி நுளம்பை ஓட்ட, அதன் கழுத்தில் கட்டியிருந்த மணியின் ஒலி கேட்டதாம்.அந்த ஒலியைக் கேட்டுகொண்டு தலைவி உறங்காமல் இருக்கிறாளாம். குளிர்காலத்துப் பனி அவளைச் சிறை வைத்திருக்கிறதாம். அந்தச் சிறையை உடத்துக்கொண்டு அவளது கண் மழையைப் பொழிகிறதாம். இப்படிப் புலம்பிக்கொண்டு தலைவி காமநோயோடு கலங்கிக்கொண்டிருக்கிறாளாம். அவள் கேட்கும் மணியொலியைக் கேட்பவர் வேறு யாராவது இருந்தால்தானே தலைவியின் துன்பத்தைப் போக்குவார். - தோழியும் தலைவியும் இவ்வாறு பேசிக்கொள்கின்றனர்.
பாடல் 87 (மன்றமராஅத்த)
தொகு- குறிஞ்சித்திணை
- தலைவி கூற்று
- மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் << >> மன்றம் மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
- கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதுங் << >> கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்
- கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர் << >> கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
- பசைஇப் பசந்தன்று நுதலே << >> பசைஇ பசந்தன்று நுதலே
- ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே. << >> ஞெகிழ ஞெகிழ்ந்ன்று தட மென் தோளே.
- என்பது, தலைமகள் தெய்வத்திற்குப் பராயது. (பராயது= வேண்டிக்கொண்டது).
- பாடியவர்
- கபிலர்.
செய்தி
தொகுதலைவனின் பிரிவால் தலைவி வாடுயிருக்கிறாள். அவளது நெற்றியில் பசலை படர்ந்திருக்கிறது. தோள் வளையல் கழலும்படி மெலிந்துபோனதுடன் தானும் துவண்டுபோயிற்று. இந்த நிலைக்குக் காரணம் தலைவனின் பிரிவுதான். உண்மையில் தலைவன் கொடுமைக்காரன்.
ஊர்மன்றத்தில் மரா மரத்தடியில் குடிகொண்டிருக்கும் அச்சம் தரும் முதிர்ந்த கடவுள் கொடியோரைத் தண்டிக்கும் என்பார்கள். ஒருவேளை, தன் தலைவரை அது தண்டிக்குமோ என்று தலைவி அஞ்சுகிறாள். தன் தலைவர் கொடியவர் அல்லர் என்று அத் தெய்வத்திதிடம் கூறி அவரைத் தண்டித்துவிடாதே என்று வேண்டிக்கொள்கிறாள்.
தன் மேனியில் நேர்ந்துள்ள மாறுதல்களுக்குக் காரணம் அவர் அல்லர். ஏனோ நெற்றி அதுபாட்டுக்குப் பசந்துவிட்டது. தோள் அதுபாட்டுக்கு வாடிவிட்டது. அவ்வளவுதான் என்று தெய்வத்திடம் சொல்கிறாள்.
பாடல் 88 (ஒலிவெள்)
தொகு- குறிஞ்சித்திணை
- தோழி கூற்று
- ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன் << >> ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
- சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித் << >> சிறு கண் பெரு களிறு வய புலி தாக்கி
- தொன்முரண் சோருந் துன்னருஞ் சாரல் << >> தொல் முரண் சோரும் துன் அரும் சாரல்
- நடுநாள் வருதலும் வரூஉம் << >> நடு நாள் வருதலும் வரூஉம்
- வடுநா ணலமே தோழி நாமே. << >> வடு நாணலமே தோழி நாமே.
- என்பது, இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது.
- பாடியவர்
- மதுரைக் கதக்கண்ணன்.
செய்தி
தொகுதலைவன் வெள்ளருவி ஒலிக்கும் உயர்ந்த மலைநாட்டை உடையவன். (மரை போல் உயர்ந்தவன். ஓயாது அருவிபோல் நம்மை நோக்கி ஒழுகுபவன்) அவன்யாமத்தில் வருகிறான். ஆண்யானை புலியைத் தாக்கித் தாக்கித் தன் தொன்மையான வலிமையையெல்லாம் இழந்து சோர்ந்துபோயிருக்கும் வழியில் வருகிறான். (யானையே புலியைத் தாக்கித் தாக்கிச் சோர்ந்துபோய்விட்டபோது அவன் வரும் வழியில் வரும் புலிக்கு ஈடு கொடுக்க முடியுமா?) எனவே நம்மிடம் இருக்கும் நாணம் நன்மை தராது. நமக்கே வடுப்போல உள்ளது. இந்த நிலையில் நாம் இங்கு நலமாக உள்ளோம். (இது தகாது. நாணத்தை விட்டுவிட்டு அவனுடன் சென்றுவிடவேண்டும்) - இப்படித் தோழி தலைவியிடம் சொல்கிறாள்.
பாடல் 89 (பாவடி)
தொகு- குறிஞ்சித்திணை
- தோழி கூற்று
- பாவடி யுரல பகுவாய் வள்ளை << >> பா அடி உரல பகு வாய் வள்ளை
- ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப << >> ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப
- வழிவ தெவன்கொலிப் பேதை யூ்ர்க்கே << >> அழிவது எவன்கொல் இ பேதை ஊர்க்கே
- பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் << >> பெரு பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி
- கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய << >> கரு கண் தெய்வம் குட வரை எழுதிய
- நல்லியற் பாவை யன்னவிம் << >> நல் இயல் பாவை அன்ன இ
- மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே. << >> மெல் இயல் குறு மகள் பாடினள் குறினே.
- என்பது, 1.தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.
- 2.தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி வாயின் மறுத்ததுமாம்.
- சிறப்பு
- பொறையன் (சேரமன்னன்) கொல்லி. கொல்லிமலையில் தெய்வம் எழுதிய கொல்லிப் பாவை பற்றிய செய்தி
- பாடியவர்
- பரணர்.
செய்தி
தொகுஊர்மக்கள் வள்ளைப்பாட்டுப் பாடிக்கொண்டு குற்றுகின்றனர். அவர்களுக்கு உரல் இல்லை. பாறையில் தங்கள் கால்பாதத்தையே உரலாக்கித் தள்ளிவிட்டுக்கொண்டு குற்றுகிறார்கள். கொல்லிப்பாவை போன்ற தலைவியின் அழகை வள்ளைப்பாட்டில் பாடிக்கொண்டு குற்றுகிறார்கள். அத்துடன் தலைக்கும் தலைவனுக்கும் உள்ள தொடர்பையும் பாடிக்கொண்டு குற்றுகின்றனர். அவர்கள் அப்படித்தான் குற்றுவார்கள். அதற்காக 'நீ உன்னை அழித்துக்கொண்டு நோவது ஏன்? - என்கிறாள் தோழி தலைவியிடம்.
(ஊர்வாயை மூட உலைமூடி ஏது?)
(உரல் இல்லாதவர்கள் காலால் தானியத்தைத் தள்ளித் தன் காலையே உரலாக்கிக்கொள்பவர்கள் உன்னை வாயால் சொல்லி மெல்வதில் வியப்பொன்றுமில்லை - எனகிறாள்)
(காரி அரசன் ஓரி அரசனைக் கொன்று பொறையனுக்குக் கொடுத்தது முதல் கொல்லிமலை பொறையன் என்னும் சேர மன்னனுக்கு உரியதாயிற்று)
பாடல் 90 (எற்றோ)
தொகு- குறிஞ்சித்திணை
- தோழி கூற்று.
- எற்றோ வாழி தோழி முற்றுபு << >> எற்றோ வாழி தோழி முற்றுபு
- கறிவள ரடுக்கத் திரவின் முழங்கி << >> கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கி
- மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் << >> மங்குல் மாமழை வீழ்ந்து என பொங்கு மயிர்
- கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி << >> கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி
- வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉம் << >> வரை இழி அருவி உண் துறை தரூஉம்
- குன்ற நாடன் கேண்மை << >> குன்ற நாடன் கேண்மை
- மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே. << >> மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்று அன்றே.
- என்பது, வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
- பாடியவர்
- மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்.
செய்தி
தொகுதலைவன் தலிவியை அடைய வெளிப்புறத்தில் காத்திருக்கிறான். திருமணம் செய்துகொள்வதில் காலம் கடத்துகிறான். தலைவனுக்குக் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்கிறாள். (தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அடையலாம். இப்போது அடைய முடியாது என்பது கருத்து.)
மிளகுக்கொடி வளர்ந்திருக்கும் மலையடுக்கத்தில் இரவெல்லாம் முழங்கிக்கொண்டு மழை பொழிய, கலைமான் சுளையைத் தின்றபின் கோதுமயிரினை உடைய பலாப்பழம் வரைப்பாறையிலிருந்து விழும் அருவியில் மிதந்து வரும் நாட்டை உடையவன் தலைவன். (மான் பலாச்சுளையை உண்ணல் தலைவன் தலைவியின் நலனை உண்டதற்கும், கோது அருவில் மிதந்துவருவது தலைவி அலைக்கழிக்கப்படுவதற்கும் தடரப்பட்டுள்ள இறைச்சிப் பொருள்)
இத்தகையவனோடு கொண்டுள்ள கேண்மை(உறவுவோடு கூடிய நட்பு) என் தோளை இளைக்கச் செய்துவிட்டது. என்றாலும் சான்றாண்மை உள்ளது. மேலும் சான்றாணமையைத் தோற்றுவிக்கிறது.