குற்றால வளம்/நல்லன நாடல்


நல்லன நாடல்

மக்கள் யாக்கைபடைக்கப்பட்டதன் நோக்கம் நல்லன நாடுவதற்கேயாகும். யாண்டு நல்லன. இருக்கபோதினும் அவற்றை நாடிப் பெற்றுக்கொள்ள முயல வேண்டுவது மக்கள் கடன். "கடனென்ப நல்லவை யெல்லாம்" என்றருளினார். உலகெலாம் போற்றும் ஒரு பெரும் புலவர். நல்லன யாண்டு யாண்டு உளவோ ஆண்டியாண்டு நுழைந்து அவற்றை நாடிக் கடனாகக் கொள்ளுதல் வேண்டும். நல்லவை இருக்குமிடம், உயர்ந்ததா தாழ்ந்ததா; நம்நாடா பிற நாடா; நம் சமயமா பிற சமயமா; என்பனவற்றை யாய்ந்து, அவை உயர்ந்த இடத்திலிருக்காற்றான் நம் நாட்டிலிருந்தாற்றான் நம் சமயத்திலிருந்தாற்றான் கொள்ள வேண்டுமென்பதும். இவற்றிற்கு எதிரிடையானால் தள்ளவேண்டுமென்பதும் இல்லை. நோக்கம் நல்லவை ஒன்றிலேயே இருக்க வேண்டுமன்றிப் பிற சாதனங்களில் இருத்தல் ஆகாது?. கள்ளருந்தும் ஒருவனிடத்து நல்லதொன்றிருக்குமானால் அந்நல்லதை ஏன் கொள்தல் ஆகாது? பிற நாட்டில் நல்லன. இருக்குமானால் அவற்றைக் கொள்வதில் என்ன தப்பிதம்? பிற சமயங்கள் கூறும் நல்லொழுக்கங்களை யெல்லாம் ஏன் கையாளுதல் படாது?  கருத்து நல்லன. நாடுதலிலேயே பதிதல் வேண்டும். "நல்லன யாவையும் நாடுறு நாடு” என்று நமது நாட்டை அலங்கரித்துக் கூறினார் நல்லிசைப் புலவர். அந்நாட்டம் மெய்யாக நம் நாட்டவர்க்குச் செயலில் வருதல் வேண்டுமென்பதே எனது பெரு விருப்பம்: இவை நல்லன. இவை தீயனவெனப் பொருள்களை ஆராய்ந்து அறிவு கொண்டு காண்டல் வேண்டும். ஒவ்வொன்றையும் பொறுமையோடு ஆய்தல் வேண்டும். ஆராயாமல் எந்தப் பொருள்பற்றியும் திடமான முடிவு கொள்தல் படாது. ஆராய்ச்சி யின்றிப் பரம்பரை வழக்கமாகவோ பிறர் கொள்கை கருதியோ எதினும் உறுதி பூணுதல் நன்றன்று. அவ்வாறு கொள்வோர்க்கு உண்மை புலப்படாது. நடை முறையில் பலரைப் பார்க்கின்றோம். எதையேனும் சரியாகவோ தவறுகவோ மெய்யென நம்பி விடுகின்றார்கள்; அப் பொருளின் தன்மையை யாரும் விளக்கினால் காது கொடுத்துக் கேட்கவும் அஞ்சுகின்றார்கள்; அவற்றை உளத்தில் வாங்குகின்றாரில்லை; ஆராய்கின்றாரில்லை; தாம் சிறிதும் ஆராயாமல் உறுதிபூண்டிருக்கும் அக் கொள்கையை ஆராய்ச்சியோடு மறுப்பாரைக் காய்கின்றார்; அவரைச் சீறுகின்றார்; அதைப்பற்றிச் சிந்திக்கவே ஒருப்படுகின்றாரில்லர்; இறுதிவரை நன்மை தீமையறிந்து கொள்ளாராகி விடுகின்றார். அந்நிலையுள்ளார் பலர் வாழ்கின்றார் நம்பெரு நாட்டில்,  அவரையெல்லாம் நோக்கி இறைவன் கொடுத்த பகுத்தறிவை நடைமுறையில் கையாண்டு தம்மறிவால் நல்லனகண்டு ஒழுகவேண்டுமென்று பன்முறையும் வேண்டுவோம்.


எவர், தங்கருத்துக்கு மாறாக என்ன கூறின போதினும் ஏன்? அதனால் என்ன முழுகிப் போகும்? எவர் எதைக் கூறியபோதினும் அமைதியாகக் கேட்கலாம்; ஆராயலாம்; நல்லன உளவேல் கொள்ளலாம். இவ் உயர் கருத்து நம் நாட்ட்வர்க்கு அரும்புதல் வேண்டும். நம் நாட்டில் புராணங்கள் மிகப் பல இருக்கின்றன. அவற்றைப்படித்த அன்பர்களுள் ஒரு பகுதியார் அக் கூற்றை அன்புடன் வரவேற்பார்கள். மற்றொரு பகுதியார் அதன்மீது சீறி விழுகின்றார்கள். நம் நாட்டவரோடு பழகிய தன்மைகொண்டு கான் அவ்வாறு கூறுகிறேன். இருகூட்டத்தாரும் குருட்டுப் பிடியாக ஒன்றைப் பிடித்துக் கொண்டு, அதற்கு மாறு பட்டுக்கூறும் கருத்துக்களைக் காரணங் கூறாது மூலை முடுக்குகளில் வெறுத்துப் பேசி வருவதையே கடனாகக் கொண்டொழுகுகின்றார். அது பெருந்தவறு. நான் பலப்பல புராணங்களைப் படித்திருக்கின்றேன். புராணங்களில் நல்லன பல உள. அவற்றை நாம் எடுத்துக் கொள்ளச் சிறிதும் தயங்கலாகாது. நல்லன. யாண்டிருந்தபோதிலும், கொள்தல் கடமை யன்றோ? அதுபோல் தீயன எங்கிருந்த போதிலும் தள்ளுதலும் கடனே. நமக்குச்  செயலிலெயே குறி. எவ்வளவு உயர்ந்த ஒருவரெனினும் அவர் கூறுவது தவறானால் அதை தள்ள நான் ஒரு நொடியும் தாழ்த்தப் போவதில்லை அவ்வாறே தாழ்ந்த நீர்மை வாய்ந்த ஒருவர் உரைக்கும் நலனைக் கொள்ளவும் பின்வாங்கப் போவதில்லை.


நல்லன யாண்டிருந்த போதினும் கொள்தல் என்ற முறையில் புராணங்களிலிருக்கும் நல்லனவற்றைக் கொள்ள ஏன் அஞ்ச வேண்டும்? புராணங்களில் உயர்க்க அறங்கள் பலவுள; உயர்க்க கருத்துக்கள் பலவுள; உயர்ந்த கதைப்போக்குகளும் பலவுள. அவற்றை நாம் பொன்போற் போற்றி ஏற்போம். ஏன்? நல்லனநாடல் கடனன்றோ? புராணங்களிலுள்ள தீமைகளை யெல்லாம் கொள்ளக்கூடாது புராணங்களில் தீமை பயப்பவைகள் பலவுள. புராணங்களிலுள்ள கெட்ட கதைகளை யெல்லாம் நாம் சிறிதும் கொள்ளலாகாது. அவ்வாறு கொள்வோரை அறிவற்றவர் என்று கொஞ்சமும் கூசாது கூறலாம் ஒழுக்கங்கொல்லும் கதை புராணங்களில் மலிவு. அவைகளை மெய்யென நம்புதல் மக்கள் ஒழுக்கத்திற்குப் பெருந்தீங்கு பயக்கும். ஒழுக்கங்கொல்லும் நெறி யாண்டிருந்த போதினும் அதைவோறுத்தல் அறிஞர் கடன். புராணங்கள் முழுமையும் உள்ளவாறே நிலை பெற வேண்டுமென்று கருதி, அவைகளை முற்றும் ஏற்பார் ஒழுக்க நெறியை  மாய்ப்பவரேயாவர். " புராணங்கள் நடந்தவைகளைக் கூறும் பனுவல்கள் அன்று; அவை கட்டுக் கதைகளே" என்ற உண்மையை அறிந்துகொள்வரேல் அவைகளை அப்படியே முற்றும் நம்ப ஒழுக்கநெறி பேணும் எவரும் துணியார்.


புராண்ங்கள் கட்டுக் கதைகள் என்பவற்றிற்குச் சான்றுகள் எண்ணற்றன உள. ஒரே கதையைப்பற்றிப் பல புராணங்கள் ஒன்றுக் கொன்று மாறுபட்டுக்கூறுவதே நல்ல சாட்சி. புராணங்கள் புனை கதைகள் என்பவற்றை உளத்திருத்தி அவைகளைப் படித்தல்வேண்டும். நான் கூறும் ஒன்று கொண்டுமட்டும் அவை புனை கதைகள் என்று துணியுமாறு நான் எவரையும் வற்புறுத்தவில்லை. அவரவரும் ஆராயலாம். அவை புனை கதைகள் என்ற முடிவே கிடைக்க முடியும். அன்றி, தக்க காரணங் கொண்டு மெய்யாக நடந்தவைதாம் என்று கண்டு பிடிக்கப்படுமேல் அக்கூற்றை நானும் ஏற்றுக்கொள்ளத் தயாராக விருக்கிறேன். அவை புனைகதை என்பதிற்சிறிதும் ஐயமில்லை. அன்றி மெய்க்கதையென்று வேண்டுமானுலும் வைத்துப் பேசுவோம். அப்படியிருந்தபோதினும் நல்லன் நாடவேண்டுமே யன்றித் தீயனவற்றை-ஒழுக்கங்கெட்ட கதைகளைக் கொள்ள வேண்டுவதில்லை. எல்லாவற்றினும் மேம்பட்டது ஒழுக்கம். மற்றவை பின்னரே.


ஒரு கருத்தை ஒருவர் கூறுவாரானால் அதை நன்கு சிந்தித்து அது நலனானால் கொள்ள  வேண்டுவதே அறிஞர் கடன். நமக்குப் புராணம் பாடிய எவரும் பகைஞரல்லர். அவ்வாசிரியர்களை அவர்கள்கூறும் நல்லனகொண்டு நாம் பெரிதும் மதிக்கின்றோம். புராண ஆசிரியர்களுள் பெரும்புலமை கொண்டார் பலர் உளர். அவர் புலமையை நாம் போற்றாதிருக்கமுடியுமா? கம்பநாடரின் அருங்கருத்துக்களையும், அழகிய கவிகளையும், சேக்கிழாரின் சிறந்த பாடல்களையும், பரஞ்சோதி முனிவரின் பலதுறை வன்மையையும், புகழேந்தியின் இனிய வெண்பாவையும், அதிவீர ராமனின் அகன்ற வர்ணனையையும், வேறு பலரின் மேலான செய்யுட்களையும் எல்லோரும் கற்றல் வேண்டும். அவற்றின் கட்பொதிந்து கிடக்கும் நல்லன எல்லாவற்றையும் கைக்கொண்டொழுகுதல் வேண்டும்.


நல்லன யாண்டிருந்த போதினும் கொள்ளப் பின் வாங்குதல் ஆகாது. சிலர் ஆட்களையே நோக்குகின்றனர். அது பெரியதோர் மூடத்தனம். நல்லவை எங்கிருந்தாலும் உடனே பற்றுதல் வேண்டும். நல்லவை எவை யென்பவற்றை ஆராயும் அறிவுபெற்றவர்தாம் மக்கள் என்பது அறிஞர் பலரும் கண்ட உண்மை. எனவே, மக்களாவார் கல்லவை அறியமுடிய வில்லையே என்று நவிலமாட்டார். நம் நாட்டவர் காலங் கற்பிக்க முடியாத நிலைமையில் பன்னெடு நாட்களாக மிகவும் நாகரிகம் வாய்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றனரேயன்றி, செயலில் இந்நாள் அநேகம் சிறு காரியங்களிலெல்லாம் தவறுசெய்து விடுகின்றார். தாங்களாகவே செய்துகொள்ள வேண்டிய சிலவற்றைப் பிறநாட்டவரைப் பார்த்தேனும் செய்துகொள்கின்றாரில்லை.


நன்மை யாண்டிருந்தாலும் கொள்ள வேண்டுமென்று நான் கூறியபடி பிறநாட்டவரிடம் காணப்படும் நல்லவைகளை யெல்லாம் உடனே கொள்ளுதல் வேண்டும். முதலாவதாக ஒவ்வொன்றையும் குறித்த காலத்தில் செய்வது என்ற ஒன்றை வெளிநாடுகளைப் பார்த்தும் நம்நாடு கற்றுக்கொள்ளாமலிருப்பது பெரிதும் வருந்தத் தக்கது. நான்கு மணிக்குக் கூட்டமென்றால் ஆறு மணிக்கு ஏன் கூடுதல் வேண்டும்? நான்கென்றால் ஆறு ஆறென்றால் எட்டு, எட்டென்றால் பத்தென்பது கூட்வே கூடாது. ஒரு மணி நேரம் ஒருவருக்கு உரையாடக் குறிக்கப்பெற்றிருந்தால் ஒன்றரை இரண்டு மணி நேரங்களும் அதற்குமேலுங் கூடப் பேசுவது கூடாது. காலத்தை அது சரித்தே செல்லுதல் வேண்டும். இன்ன காலத்தில் இன்ன காரியத்தைச் செய்வதென்று வைத்துக்கொள்ளுதல் மிகவும் நல்லது.


அநாவசியமாக எவரையும்பற்றிப் பேசாதிருத்தல்-பெண்களைச் சமமாக நடத்தல்-குழந்கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளல்-உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல்-அழுக்கில்லாத ஆடைகளையே அணிதல்-எல்லாப் பொருள்களையும் பரிசுத்தமாக நாள்தோறும்

துடைத்துவைத்துக் கொள்தல் முதலியவற்றில் எல்லாம் வெளிநாட்டாரைப் பின்பற்ற வேண்டுவது அவசியமாக விருக்கிறது. இவை யெல்லாம் வெளிநாட்டாரைப் பார்த்துத்தான் செய்யவேண்டுமென்பதில்லை. நாமாகவே செய்ய வேண்டுவது. நம்மில் பலர் செய்யவில்லை. இந்நாள் வெளியே பலர் செய்கின்றார்: அவர்களைப் பார்த்தும் அவர்கள்பால் உள்ள நல்ல்னவற்றை நம்மவர் கொள்ளா துறைதல் 'வெட்ககரமானது, ஆனால், நல்லன கொள்தலை விடுத்துத் தீயன பலவற்றை வெளிநாட்டாரிடம் கொள்கின்றார் நம்மிற் பலர். தீயன வெளிலேயிருந்தும் கொள்ளலாகா; நம்மிட முள்ளவற்றையும் இன்னே தொலைத்தல் வேண்டும். நல்லன யாண்டியாண்டு கிடைப்பினும் எல்லாவற்றையும் நாடிக்கொண்டு நல்லனவே செய்து வாழவேண்டுவது மக்கள் பெருங்கடன்.