குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/ஆமையாரின் அவசரம்
பையன்
ஆமையாரே, ஆமையாரே,
எங்கே போகிறீர்?
அவசரமாய்ப் போகிறீரோ?
சொல்லுமே ஐயா.
ஆமையார்
அருமையுள்ள பேரனுக்குத்
திருமணம் என்றே,
அவசரமாய்த் தந்திஒன்று
வந்த தப்பனே.
பையன்
வண்டி கட்டிச் சென்றி ருந்தால்
வசதி யாகுமே?
ஆமையார்
வண்டி மாடு படுத்துக் கொண்டால்
நேர மாகுமே!
பையன்
காரில் ஏறிச் சென்றிருந்தால்
காற்றாய்ப் பறக்குமே?
ஆமையார்
காட்டு வழியில் நின்றுவிட்டால்
மோச மாகுமே!
- பையன்
- பையன்
ரயிலில் ஏறிச் சென்றி ருந்தால்
நன்மை யாகுமே?
ஆமையார்
நடுவ ழியில் கவிழ்ந்து போனால்
நாச மாகுமே!
பையன்
சரி, சரி, என் சைக்கிள் பின்னால்
ஏறிக் கொள்ளுவீர்.
சரச ரென்றே ஓட்டிடுவேன்
விரைவில் செல்லுவீர்.
ஆமையார்
(தம்பி, நீயோ சின்னப் பையன்,
தாறுமாறாக ஓட்டி, யார் மேலேயாவது
மோதிவிட்டால்…?
வேண்டாம், வேண்டாம்.)
போலீஸ்காரர் பிடித்துக் கொள்வார்
இரண்டு பேரையும்.
போதும், போதும், நடந்தே செல்வேன்.
வணக்கம் அப்பனே!