குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/உருவப் படம்

உருவப்படம்

“என்றன் படத்தைப் பெரிதாக
எழுதித் தந்திட வேண்டு”மெனச்
சொன்னர் கனவான் ஒருவருமே,
சித்திர நிபுணர் ஒருவரிடம்.

பத்தே நாளில் அவர்உருவப்
படத்தை எழுதித் தந்திடவே
ஒத்துக் கொண்டார் ஓவியரும்.
உடனே, வேலை தொடங்கினரே.

தவணை சொன்ன நாள் தனிலே
தமது நாயுடன் கனவானும்
அவரது படத்தைப் பார்த்திடவே
ஆவல் பெருகச் சென்றனரே.

எழுதிய படத்தை ஓவியரும்
எடுத்துக் காட்டினர் அவரிடத்தே.
அழகாய் அப்படம் அமைந்திருந்தும்,
அந்தக் கனவான் குறைசொன்னார் :


“இந்தப் படத்தில் என்உருவம்
இயல்பா யில்லை. அதனால்தான்
என்றன் நாயும் அதனருகில்,
இதுவரை செல்லா திருக்கிறது.”

என்றனர் மிகவும் சலிப்புடனே.
ஏன் இதைக் கூறினர். அறிவீரோ ?
அன்னவர் கூலியைக் குறைத்திடவே
அப்படி ஒருபொய் உரைத்தனராம்!

“நன்றாய்த் திருத்தித் தருகின்றேன்.
நாளை மாலையில் வந்திடுவீர்.”
என்றார் அந்த ஓவியரும்,
ஏதோ மனத்தில் நினைத்தபடி.

மறுநாள் ரொட்டித் துண்டொன்றை
வாங்கி வந்தார் ஓவியரும்.
உருவப் படத்தில் தடவினரே,
ஒருவரும் காணா வகைதனிலே,

மாலையில் ஓவியர் வீட்டிற்கு
வந்தார் கனவான். வந்ததுமே,
வாலினை ஆட்டி அவர்படத்தை
மகிழ்வுடன் நாயும் நக்கியதே!


படத்தில் ரொட்டியின் மணமிருந்தால்
பார்த்துக் கொண்டா நாய்நிற்கும்?
உடனே ஓவியர் கனவானை
உற்றுப் பார்த்தார் சிரித்தபடி.

“எப்படி உருவம் இருக்கிறது?
இயல்பாய் இதுவும் இல்லையெனில்,
அப்படி நாயும் நக்கிடுமோ?
அசலாய் உங்கள் உருவம்தான்!”

என்றே ஓவியர் கூறியதும்,
ஏதும் கூற வழியின்றி
முன்னர் ஒப்புக் கொண்டபணம்
முழுதும் கொடுத்தார் அக்கனவான்!