குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/கணபதியும் கந்தனும்

கணபதியும் கந்தனும்

தொந்திப் பிள்ளை யாருடன்
துணைவ னாகக் கந்தனும்

பயணம் வைத்தான். இருவரும்
பகலில் எல்லாம் சுற்றினர்.

வழியில் பெரிய மலையிலே
வாய்க்கு நல்ல பழங்களாய்

இருக்கும் செய்தி கேட்டதும்
ஏறப் பார்த்தார், இருவரும்.

‘குடுகு’ டென்று குமரனே
குதித்து மலையில் ஏறினன்.

மலையைக் கண்டு பிள்ளையார்
மலைத்துத் தொந்தி தடவினார்.

‘களைப்பு அதிகம் ஆனது.
காலும் மெத்த வலிக்குது.



தம்பி, நீபோய் வந்திடு.
தங்கி இருக்கி றே’னென

அரச மரத்தின் அடியிலே
அமர்ந்தார், தொந்திப் பிள்ளையார்.

காற்ற டித்த ஓசையில்
காது கேளாக் குமரனும்,

சிறிது தூரம் சென்றுதான்
திரும்பிப் பார்த்தான், அண்ணனை-

அங்கும் இங்கும் பார்த்தனன்;
அண்ணன் வரவே இல்லையாம்!

உச்சி மலையில் ஏறினன்;
உற்று எங்கும் நோக்கினன்.

காண வில்லை அண்ணனை
கண்ணுக் கெட்டும் வரையிலும்.

மலையின் மேலே நின்றிடின்
மரத்தின் கீழே தெரியுமோ?

பார்த்துப் பார்த்து உச்சியில்
பாவம், கந்தன் நிற்கிறான்,

காத்துக் காத்துக் கணபதி
காற்று வாங்கும் காட்சிபார்!