குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/காந்தி வாக்கு
சென்னையி லிருந்து மதுரைக்குச்
சென்றேன் ரயிலில், அன்றொருநாள்.
இரவு முழுதும் வண்டியிலே
இருந்தேன்; மறுநாள் காலையிலே,
திருச்சி வந்தது. பலகாரம்
தின்றிட இறங்கிச் சென்றேனே.
வடையும் காபியும் அங்கொருவர்
வைத்து விற்றனர். பார்த்ததுமே,
பைக்குள் கையை விட்டேனே.
பணத்தை விரைவாய் எடுத்தேனே.
எடுத்தே அவரிடம் கொடுத்தேனே.
எனது பசியைத் தீர்த்தேனே.
மறுபடி வண்டியில் ஏறியதும்,
வண்டி நகர்ந்தது, விரைவுடனே.
வண்டி நகர்ந்ததும் எங்களிடம்
வந்தார், ‘டிக்கெட்’ சோதகராம்.
‘எங்கே உனது டிக்கெட்டை
எடுப்பாய்’ என்றார் அம்மனிதர்.
உடனே, பைக்குள் கைவிட்டேன் ;
உள்ளே காணோம் டிக்கெட்டை !
‘ஐயோ!’ என்றேன் ; திடுக்கிட்டேன்.
அலசிப் பார்த்தேன் ; பயனில்லை !
‘பலகா ரத்தை வாங்கிடவே
பணத்தை விரைவாய் எடுக்கையிலே
டிக்கெட் கீழே வீழ்ந்திருக்கும்’
நினைத்தேன், இப்படி. அதற்குள்ளே,
‘ஏனோ தம்பி நடிக்கின்றாய் ?
என்னை ஏய்த்திட முடியாது !
எடுப்பாய் பணத்தை இருமடங்கு
இங்கே எதுவும் பலிக்காது!’
என்றார், அவரிடம் உண்மைதனை
எடுத்துக் கூறியும் பயனில்லை !
அத்தனை பேர்கள் மத்தியிலே
அவமானத்தால் தலைகுனிந்தேன்.
உண்மை உரைத்தேன்; ஆனாலும்,
என்னை நம்பா திருந்ததுஏன் ?
கவனக் குறைவே இத்தனைக்கும்
காரணம் என்பதை நன்குணர்ந்தேன்.
‘சத்தியம் பேசும் மனிதனுக்குத்
தகுந்த கவனமும் வேண்டு’ மெனக்
காந்தித் தாத்தா சொன்னமொழி
காதில் ஒலித்தது, அச்சமயம்.