குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/கிளியின் நன்றி
கிளியின் நன்றி
கறுப்பன் பச்சைக் கிளியொன்றைக்
காட்டில் பிடித்து வந்திட்டான்.
அறுத்து விட்டான் சிறகுகளை.
அடைத்து வைத்தான் கூண்டினிலே,
தினமும் கறுப்பன் பழங்களெலாம்
தின்னக் கொடுப்பான். ஆனாலும்,
மனத்தில் வருத்தம் கொண்டதுவே.
வாழ்வும் கசந்து போனதுவே.
கறுப்பன் ஒருநாள் அக்கூண்டின்
கதவைத் திறந்தான். ஆனாலோ,
இறுக்கிச் சரியாய் மூடாமல்
எங்கோ விரைந்து போய்விட்டான்.
அலகால் கிளியும் அக்கூண்டை
அசைத்தே ஆட்டித் திறந்ததுவே.
உலகில் சுதந்திர மூச்சுடனே
உயரப் பறக்கக் கிளம்பியதே.
அறுத்து விட்ட சிறகுகளோ
அதற்குள் எப்படி முளைத்துவிடும் ?
பறந்து செல்ல முடியாமல்
பட்டெனத் தரையில் வீழ்ந்ததுவே !
கீழே கிடந்த அக்கிளியைக்
கிழித்துக் கடித்துக் கொன்றிடவே,
பாழும் பூனை ஒன்றங்கே
பாய்ந்தே ஓடி வந்ததுவே !
கண்ணன் என்பவன் இக்காட்சி
கண்டதும் உடனே பூனைதனைக்
குண்டாந் தடியால் விரட்டினனே ;
கொஞ்சும் கிளியைக் காத்தனனே.
கருத்துடன் சிலநாள் வளர்த்தனனே
கண்ணன் அந்தக் கிளிதனையே.
சிறகுகள் நன்றாய் வளர்ந்தனவே ,
தெம்புடன் பறக்க முடிந்ததுவே.
காலையில் ஒருநாள் அக்கிளியைக்
கண்ணன் கையில் எடுத்தனனே.
சோலையை நோக்கிச் சென்றனனே.
சுகமாய்த் தடவிக் கொடுத்தனனே.
“கொடுமைகள் இனிமேல் உனக்கில்லை.
கூண்டில் வாழ்வதும் இனியில்லை.
விடுதலை பெற்றுப் பறந்திடுவாய்.
வேண்டும் இடங்கள் சென்றிடுவாய்.”
உரைத்தனன் இப்படி. அக்கிளியை
உயரப் பறக்க விட்டனனே.
பறந்திடும் கிளியை வெகுநேரம்
பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனனே.
அரைமணி நேரம் ஆனதன்பின்
அடைந்தனன் கண்ணன் தன்வீட்டை.
விரைவாய்ப் பல்லைத் துலக்கினனே;
முகம்கால் கைகள் கழுவினனே.
துண்டால் முகத்தைத் துடைக்கையிலே,
தொப்பென ஏதோ வீழ்ந்ததுவே.
கண்ணனின் கண்கள் எதிரினிலே
கண்டன ஆப்பிள் பழம் ஒன்றை!
உடனே நிமிர்ந்து பார்த்தனனே.
“ஓகோ, நமது கிளியேதான் !
அடடே, நமக்குப் பரிசாக
ஆப்பிள் தந்தது” எனமகிழ்ந்தான்.
கண்ணன் அருகில் அக்கிளியும்
களிப்புடன் நெருங்கி வந்ததுவே.
அன்புடன் அதனைக் கண்ணனுமே
அனைத்துக் கொஞ்சி மகிழ்ந்தனனே!
இன்றும் அக்கிளி கண்ணனிடம்
இனிக்கும் ஆப்பிள் பழத்துடனே
நன்றி செலுத்த வருவதனை
நானும் அறிவேன், நண்பர்களே!