குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/கோழிக் குஞ்சின் கதை

கோழிக்குஞ்சின் கதை

பையன் :
கோழிக் குஞ்சே, உன் கதையைக்
கூறிடு நீயும் என்னிடத்தே.

கோழிக் குஞ்சு :
அண்ணா, கதையைக் கூறுகிறேன்.
அதைநீ நன்றாய்க் கேட்டிடுவாய்.

தாயின் வயிற்றில் சில நாட்கள்
தங்கி யிருந்தேன். அதன் பின்னே

மூலை ஒன்றில் என் அம்மா
முட்டை யாக இட்டனளே.

அதனைக் கண்ட ஒருமனிதன்
அவனது அருமை மனைவியிடம்

“முட்டை தோசை சுட்டுத்தா,
மிகவும் ஆசை” என்றிடவே,

“அடைக்கு வைப்போம் இதனைநாம்
அப்புறம் சிறிய குஞ்சுவரும்.


குஞ்சு வளர்ந்து சிலநாளில்
கோழி யாகும். அக்கோழி

தினமும் முட்டை இட்டுவரும்.
தின்ன லாமே இருபேரும்”

என்றனள். அவனும் ‘சரி’யென்றான்.
என்றன் உயிரும் தப்பியது !

அடியேன் முட்டைக் குள்ளேயும்
அம்மா முட்டை மேலேயும்

இருந்தோம் மிக்க பொறுமையுடன்
இருபத்தொருநாள் ஆயினவே.

எத்தனை நாள்தான் அடைபட்டு
இருப்பது என்ற கோபமுடன்

மூக்கால் முட்டையின் ஓட்டினைநான்
முட்டி உடைத்து வெளிவந்தேன்.

வந்ததும் என்னை என்அம்மா
மகிழ்ச்சியோடு வரவேற்றாள்.

நாட்கள் வளர இறக்கையுடன்
நானும் வளர்ந்து நடைபோட்டேன்.


கொக்கக் கோவென என்தாயும்
கூப்பிட நானும் ஓடிடுவேன்.

அன்புடன் என்னைப் பத்திரமாய்
அழைத்துச் செல்வாள் அவளுடனே.

குப்பை கிளறி ஆகாரம்
கொத்தித் தின்னப் பழக்கிடுவாள்.

பருந்தைக் கண்டால் இறக்கைக்குள்
பதுக்கி என்னை வைத்திடுவாள்.

குருணையோடு தானியங்கள்
கொடுக்கின் றார்கள் மனிதர்களும்.

தின்று தின்று என்உடலும்
தினமும் கொழுத்து வருகிறது.

என்னை இப்படி வளர்த்திடுவோர்
என்று கழுத்தைத் திருகுவரோ?

ஈசன் கருணை புரிவாரோ!
எனது உயிரைக் காப்பாரோ!