குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/சமயோசித புத்தி



சமயோசித புத்தி


வயல்கள் நிறைந்த சிற்றூரில்
வாழ்ந்து வந்தான், ஒருவணிகன்.

சரவணன் என்பது அவன்பெயராம்.
சரஸ்வதி என்பவள் அவன் மனைவி.

தந்தி ஒருநாள் புறப்படென
வந்தத னாலே வணிகனுமே

பட்டணம் செல்ல அன்றிரவே
பொட்டணத் துடனே புறப்பட்டான்

சரஸ்வதி மட்டும் தனியாகத்
தங்கி வீட்டில் இருந்தனளே.

நடுஇர வதனில் திருடர்களில்
நால்வர் வீட்டில் நுழைந்தனரே.

சத்தம் கேட்டுச் சரஸ்வதியும்
சத்தம் போட முற்பட்டாள்.


‘சத்தம் சிறிதும் போதாதே
ஜாக்கிர தை!’யென மிரட்டினரே,

‘அறையின் சாவி கொடுத்திடுவாய்.
அல்லது மண்டை உடைந்துவிடும்’

என்றவர் கூற சரஸ்வதியும்
எடுத்துக் கொடுத்தாள் சாவிதனை.

அறையைத் திறந்து ஆவலுடன்
அவர்களில் மூவர் நுழைந்தனரே.

நால்வரில் ஒருவன் சரஸ்வதியை
நகரா திருந்து காத்தனனே.
 
எண்ணம் பலப்பல சரஸ்வதிக்கு
எவ்வெவ் வாறோ தோன்றினவே.

யுக்தி ஒன்று உதித்திடவே
உடனே அந்தத் திருடனிடம்,

‘உள்ளே பங்கு போடுகிறார்,
உனக்குச் சிறிதும் இல்லாமல்,

ஏமாந் தேநீ போகாதே!
எழுந்து உள்ளே பார்த்திடுவாய்’


என்றே கூறிட அத்திருடன்,
எழுந்தனன்; உள்ளே பாய்ந்தனனே.

விரைவில் சென்று சரஸ்வதியும்
‘வெடுக்’கெனக் கதவைப் பூட்டினளே !

திருடர் நால்வரும் அறைக்குள்ளே
‘திருதிரு’ எனவே விழித்தனரே !

சரஸ்வதி தெருவில் வந்தனளே;
சத்தம் போட்டுக் கத்தினளே.

‘ஐயோ! திருடன்! ஐயையோ !
அபாய’ மெனவே அலறினளே.

ஊரார் எல்லாம் தடியுடனே
ஒன்றாய்க் கூடி வந்தனரே.

கதவைத் திறந்து திருடர்களைக்
கயிற்றால் கட்டி இழுத்தனரே.

காவல் நிலையம் சேர்த்தனரே;
கைதி யாக நிறுத்தினரே.

ஊரார் எல்லாம் சரஸ்வதியை
ஒருங்கே புகழ்ந்து பேசினரே.


சர்க்கார் மெச்சி அவளுக்குத்
தகுந்த பரிசும் தந்தனரே.

சரவணன் இக்கதை கேட்டதுமே
சந்தோ ஷத்தால் பூரித்தான்.

‘சமயம் பார்த்து யுக்தியுடன்
சரியாய்க் காரியம் நீசெய்தாய்.

புத்தி மிகுந்த உன்னுடைய
புருஷன் ஆனேன்!’ எனமகிழ்ந்தான்.