குழந்தைச் செல்வம்/ஒற்றுமை

54. ஒற்றுமை

ஒற்றுமையாக உழைத்திடுவோம் - நாட்டில்
     உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்;
வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் - இன்னும்
     வீணாய்ப் புராணம் விரிக்கவேண்டாம். 1

சாதி இரண்டலால் வேறுளதோ?-ஒளவைத்
     தாயின் உரையும் மறந்தீரோ?
ஆதி இறைவன் வகுத்ததுவோ?-மக்கள்
     ஆக்கிய கற்பனை தான் இதுவோ? 2

வீட்டுக்குள் சண்டைகள் போடுவதேன்? - கூரை
    வெந்து விழுவதும் கண்டிலிரோ?
நாட்டுக்கு நன்மையை நாடுபவர் - இந்த
    நாடகம் ஆடல் நகைப்பலவோ? 3

மன்னுயிர்க் காக முயல்பவரே - இந்த
    மாநிலத் தோங்கும் குலத்தினராம்;
தன்னுயிர் போற்றித்திரிபவரே - என்றும்
    தாழ்ந்த குலத்தில் பிறந்தோர், அம்மா! 4