குழந்தைச் செல்வம்/வீரத்தாய்

55. வீரத்தாய்

[போர்முனைக்குச் செல்லும் தன் மகனை நோக்கி ஒரு வீரத்தாய் கூறுவது.]

தாயிற் சிறந்த தப்பா ! - பிறந்த
     தாய்நா டதுபேணார்
நாயிற் கடையரென - இந்த
     நானிலம் சொல்லும், அப்பா! 1

தாய்நிலம் காத்திடவே - ருஷியர்
     சாவும் மதித்திடாமல்
காய்சினப் போரதிலே - சென்று
     கலப்பதும் கண்டிலையோ? 2

நன்றுபுரி வதற்கே - உடலை
     நாமிங் கெடுத்தோம், அப்பா!
நின்று தெரிந்திடுவாய் - அதுதான்
     நீர்மேற் குமிழி, அப்பா! 3

பாரத நாடளித்த - உன் றன்
     பரம்பரை முன்னோரின்
வீரச் செயலை யெல்லாம் - நீயும்
     மேற்கொள்ள வேண்டும், அப்பா! 4

புகழ்வி ளையுமிடம் - அந்தப்
     போர்முனையே, அப்பா!
மகனே உன்தாயின் - உள்ளம்
     மகிழச் செய்வாய்,அப்பா! 5

சற்றும் தளராமல் - இன்று
     சண்டைக்குப் போய்வருவாய்!
வெற்றி கிடைக்கும், அப்பா! - ஈசனை
     வேண்டித் தொழுதேன், அப்பா! 6