குழந்தைச் செல்வம்/கிளியை அழைத்தல்
8. கிளியை அழைத்தல்
பச்சைக் கிளியே! வா வா ;
பாலும் சோறும் உண்ணவா ;
கொச்சி மஞ்சள் பூச வா ;
கொஞ்சி விளையாட வா.
1
கவலை எல்லாம் நீங்கவே,
களிப் பெழுந்து பொங்கவே,
பவழ வாய் திறந்து நீ
பாடுவாயோ தத்தம்மா!
2
வட்டமாய் உன் கழுத்திலே
வான வில்லை ஆரமாய்,
இட்ட மன்னர் யாரம்மா!
யான் அறியக் கூறம்மா!
3
பையப் பையப் பறந்து வா,
பாடிப் பாடிக் களித்து வா;
கையில் வந்திருக்க வா.
கனி அருந்த ஓடிவா.
4
பவழக் காரத் தெருவிலே
பவழங் காண வில்லையாம்;
எவர் எடுத்துச் சென்றனர்?
எனக் கறிந்து சொல்வையோ?
5
பங்க ஜாட்சி கையிலே
பவழங் காண வில்லையாம்;
எங்கும் உன்னைத் தேடினார்.
எடுத்த துண்டோ? தத்தம்மா?
6
அரசர் மார்பில் ஆரத்தை
ஆரோ கொண்டு போனாராம்;
திருடிச் சென்றார் எவரம்மா?
தெரியு மானால், சொல்லம்மா!
7