குழந்தைச் செல்வம்/சூரிய காந்தி
25. சூரியகாந்தி
ஆகாய வீதி யுலாவி வருமிந்த
ஆதித்த னேஉன தன்பனடி!
வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்துநீ,
விண்ணிலே கண்ணாக நிற்பதேனோ?
1
பொன்னிற முண்டு, பொலிவுண்டு, கண்டுனைப்
போற்ற இனிய வடிவுமுண்டு ;
என்ன அரிய வரம்பெற, இன்னும் நீ
இத்தவம் செய்வது, பூமகளே!
2
காயும் கதிரவன் மேனியை நோக்க, உன்
கண்களும் கூசிக் கலங்காவோ?
நேயம் மிகுந்தவர் காய வருத்தம்
நினைப்பதும் இல்லையோ? சொல், அடியே!
3
காலையி லேகதிர் வீசிவர - நிதம்
கண்டு களித்து மகிழ்ந்திடும் நீ.
மாலையி லேமுகம் வாடித் தளர்ந்திட,
வந்த வருத்தமும் ஏதடியே?
4
செங்கதிர் செல்லும் திசையது நோக்கி, உன்
செல்வ முகமும் திரும்புவதேன்?
மங்கையே உன்மண வாளனாகில் - அவன்
வார்த்தை யொன்று சொல்லிப் போகானோ?
5
ஆசை நிறைந்தஉன் அண்ணலை நோக்கிட,
ஆயிரங் கண்களும் வேண்டுமோடி?
பேசவும் நாவெழ வில்லையோடி?-கொஞ்சம்
பீத்தற் பெருமையும் வந்ததோடி?
6
மஞ்சள் குளித்து முகமினுக்கி - இந்த
மாயப் பொடிவீசி நிற்கும்நிலை
கஞ்ச மகள் வந்து காணிற் சிரிக்குமோ?
கண்ணீர் உகுக்குமோ? யாரறிவர்?
7
உன்பெயர் சூரிய காந்தியென்றார் - அதன்
உண்மையும் இன்றே அறிந்துகொண்டேன்;
இன்பம் அளித்திடும் பூவுல கத்துனக்கு
யாரும் இணையில்லை, இல்லையம்மா!
8