குழந்தைச் செல்வம்/தாலாட்டு

2. தாலாட்டு

ஆராரோ? ஆராரோ?
      ஆரிவரோ? ஆராரோ? 1

மாமணியோ? முத்தோ?
      மரகதமோ? மன்னவர்தம்
தாம முடிமீது
      தயங்கும் வயிரமதோ? 2

முல்லை நறுமலரோ?
     முருகவிழ்க்குந் தாமரையோ?
மல்லிகைப் பூவோ?
     மருக்கொழுந்தோ? சண்பகமோ? 3

தெள்ளமுதம் உண்டு,
      தெவிட்டாக் கனி உண்டு, எம்
உள்ளங் குளிர
      உரையாடும் பைங்கிளியோ? 4

கற்கண்டு, சீனி,
      கனியுங் கனிந்தொழுகு
சொற்கொண்டு, எமக்குச்
      சுகமளிக்கும் பூங்குயிலோ? 5

நெஞ்சிற் கவலையெலாம்
      நீங்கத் திருமுகத்தில்
புஞ்சிரிப்பைக் காட்டி, எம்மைப்
      போற்றும் இளமதியோ? 6

ஆரடித்தார் நீ அழுதாய்,
      அடித்தாரைச் சொல்லி அழு;
சீரெடுத்த செல்வச்
      சீமான் திருக்குமரா! 7

பாலை விரும்பினையோ?
      பணிகாரம் வேண்டினையோ?
சோலைப் பசுங்கிளியே!
       சுந்தரமே ! சொல்லி அழு. 8

சப்பாணி கொட்டித்
       தளர்ந்தனையோ? அல்லதுன்றன்
கைப்பாவைக் காகக்
       கலங்கி அழுதனையோ? 9

தித்திக்கும் தேனும்,
      தினைமாவும் கொண்டுன்றன்
அத்தை வருவாள்,
      அழவேண்டாம்; கண்மணியே! 10

மாங்கனியும், நல்ல
      வருக்கைப் பலாக்கனியும்
வாங்கி, உன் அம்மான்
      வருவார்; அழவேண்டாம்! 11

கண்ணுறங்கு, கண்ணுறங்கு;
      கண்மணியே! கண்ணுறங்கு ;
ஆராரோ? ஆராரோ?
      ஆரிவரோ? ஆராரோ? 12