குழந்தைச் செல்வம்/தைப் பொங்கல்
48. தைப் பொங்கல்
பொங்கல்! இன்று பொங்கல்!
புதுவருஷப் பொங்கல்!
மங்கலங்கள் பொங்க
மனையிலிடும் பொங்கல்!
1
சந்தனத்தைக் குழைத்துத்
தரையைமெழு கிடுவோம்;
சிந்துரத்தாற் கோலம்
சேர அதில் அமைப்போம்.
2
எங்கள் கண பதியை
எழுந்தருளச் செய்வோம்;
மங்கலநற் பொருள்கள்
வரிசைகொள வைப்போம்.
3
வாசமிக வீசும்
மலர் எடுத்து வருவோம்;
நேசமொடு தூவி
நின்றுதொழு திடுவோம்.
4
தலைகள் விரித் திடுவோம்;
இளநீர்கள் வைப்போம்;
குலைகுலையாய்க் கனிகள்
கொண்டுவந்து வைப்போம்.
5
பச்சைமஞ்சள் இஞ்சி
படைபடையாய் வைப்போம்
இச்சைதரு கரும்பும்
இடையிடையே நடுவோம்.
6
அகில் விறகை மாட்டி
அடுப்பில் எரி மூட்டி,
பகவன் அடி போற்றிப்
பானையேற்றி வைப்போம்.
7
தங்கத்தினால் பானை,
தரளம் என அரிசி.
பொங்கலும்பால் பொங்கல்,
புத்தமுதப் பொங்கல்!
8
பானையுமே பொங்கிப்
பால்வடியும் வேளை,
வானம்எழக் குரவை
வழங்கிவலம் வருவோம்.
9
கடவுட்கமு தளிப்போம்;
காகத்துக்கும் இடுவோம்.
உடனிருந்தெல் லோரும்
உண்டுமகிழ்ந் திடுவோம்.
10