குழந்தைச் செல்வம்/நெற்பானையும் எலியும்

34. நெற்பானையும் எலியும்

பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப்
      பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் - அதன்
      உள்ளே புகுந்துநெல் தின்றதடா! 1

உள்ளே புகுந்துநெல் தின்று தின்று - வயிறு
      ஊதிப் புடைத்துப் பருத்ததடா!
மெள்ள வெளியில் வருவதற்கும் - ஓட்டை
      மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா! 2

பானையைக் காலை திறந்தவுடன் - அந்தப்
      பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா!-ஓடிப்
     போய் அதைக் கொளவியே சென்றதடா! 3

கள்ள வழியினிற் செல்பவரை - எமன்
     காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ள படியே நடப்பவர்க்குத் - தெய்வம்
     உற்ற துணையாக நிற்குமடா!