குழந்தைச் செல்வம்/அப்பம் திருடின எலி
35. அப்பம் திருடின எலி
செட்டியார் வீட்டில் அடுக்களையில் - சென்ற
தீபா வளியன் றிரவுதனில்
வட்டியில் அப்பம் இருந்ததம்மா! - அதை
வாசத்தினால் அறிந்தோர் எலிதான்;
1
'நெய்யினில் சுட்ட பணிகாரம் - இது
நேர்த்தியாய்ச் சுட்ட பணிகாரம்,
பையப் பையக் கடித் துண்பதற்கும் - வெகு
பக்குவமான பணிகாரம்.
2
யார்க்கும் கிடையாப் பெருநிதியாம் - இதை
யான் இன்று பெற்றதென் பாக்கியமே;
பார்க்கும் பொழுதேநீர் வாயினிலே - ஊறிப்
பாய்கின்றதே,பசி யாகின்றதே.
3
[அப்போது வேறு சில எலிகள் சத்தமிடக் கேட்டு :]
என்ன சத்தம்! ஓ ! ஓ! தம்பிமார்கள் - கூடி
இங்கு விளையாட வந்தனரோ?
அன்னவர் ஓடி வருமுன்னமே -யானும்
அட்பத்தைக் கொண்டு மறைந்திடுவேன்.
4
ஏதும் ஒருபொடி யாகிலும் - யான் அவர்க்கு
ஈந்திடேன்; முற்றுமே தின்றிடுவேன்;
திய தானம் தனக்குப்போக - மீதி
உள்ளவர் அல்லவோ செய்திடுவார்?'
5
என்று சொல்லி, அந்த அப்பத்தினை - வாயில்
ஏந்திக் கடித்திழுத் தோடிடவே,
கன்றப் பசித்த இளைஞரெல்லாம் - வந்து
கால்கடுக்கத் தேடிப் போயினரே.
6
ஆரும் அறியாத மூலையிலே - அந்த
அப்பத்தை அவ்வெலி கொண்டுவைத்துக்
கூறிய பல்லால் கறம்பி ஒருபொடி
கூடச் சிதறாமல் தின்றதம்மா!
7
மட்டுக்கு மிஞ்சிப் புசித்ததனால் மூச்சு
வாங்கி, வருந்தி, வயிறூதி,
கட்டப் படுவதைச் சுற்றத்தார் எல்லோரும்
கண்டொரு பண்டிதர்க் காளும்விட்டார்.
8
பண்டிதர் வந்துகை பார்த்தனர் ; அவ்வெலி
பண்டம் முழுதையும் உண்ட கதை
விண்டதும் கேட்டு, குறிகளும் நோக்கி,
விதிப்படி ஆய்ந்து விளம்பினரே.
9
அப்பம் முழுதும் நீ தின்றனையே - அதை
அன்பிற் குரியஉன் தம்பியர்க்கும்
ஓப்பவே பங்கிட் டளித்திருந்தால் - துன்பம்
ஒன்றும்வந் துன்னை அணுகாதே.
10
அன்றியும் உன் தம்பி மாரும் கடும்பசி
ஆறிக் களித்திருப்பார்கள் அன்றோ?
இன்றினிச் செய்வதென்? இவ்வுலகம் விட்டு
யாத்திரை போவது திண்ணம்' என்றார்.
11
ஆனதனாலே கிடைத்த பொருளை - நாம்
ஆகும் மட்டும்பகுத் துண்ணவேண்டும்;
ஈனமாந் தன்னயத் தால்வருந் துன்பமே;
இன்பம் அளிக்கும் பொதுநயமே.
12
அளவு கடந்திடில் ஆரமுதும் - விஷம்
ஆகும் என்று நம தான்றோர்கள்
உளபடியே சொன்ன வாக்கியத் துண்மையை
உள்ளத்திற் கொள்ளுங்கள், தோழர்களே!
13