குழந்தை இலக்கியம்/கல்வி

கல்வி





46. மெய்ப்பொருள் கல்வி ... 97
47. பள்ளிக்கூடம் ... 100
48. பள்ளிக்கூடம் - II ... 102
49. பள்ளிச் சிறுவர் ... 104
50. படிக்க வேண்டும்! ... 105
51. தாய்மொழியே தமிழ் ... 107
52. கட்டாயக் கல்வி ... 110
53. உடற் பயிற்சி ... 113
54. எப்படி ஆள்வீர்? ... 114
46

லைசிவிப் பள்ளிக்கே ஒடு!-நல்
தங்கப் பதுமையாம் தோழர்க ளோடு!
விலையில்லா மெய்ப்பொருள் கல்வி!-அதை
விரும்பிப் படித்தால் அறிவுண்டாம் செல்வி! 1

அழுக்கில்லா ஆடையே மேன்மை-அதை
அணிவதா லல்லவோ உடற்குண்டாம் தூய்மை!
ஒழுங்கோடு நூல்களைத் தூக்கி-நில்லாது
ஓடடி ஓட்டி பள்ளியை நோக்கி! 2

சின்னஞ் சிறுகுயில் போல-இசை
சிந்திச் சிரித்துச் செவ்விதழ் காட்டு!
பொன்னொத்த தோழர்க ளோடு-பள்ளி
போகும் வழியிலும் ஒற்றுமை காட்டு! 3

வழியிற் பெரியோரைக் கண்டால்-நல்
'வணக்கம்' எனச்சொல்லு! ஒரமாய்ச் செல்லு!
இழிந்தவர் கல்லாத மக்கள்!-என்ன
இருந்தாலும் கல்லாதார் வயல்வெளிப் புற்கள்! 4

வேளை கடந்து செல்லாதே!-பள்ளி
வெளியினில் அங்கிங்கு மாக நில்லாதே!
நாளைக் கடத்திடப் போமோ?-சென்ற
நாளும் திரும்பி வருதலும் ஆமோ? 5

தப்பாமல் கல்வியை ஓது!-கல்வி
தரும்புகழ்க் கீடிந்த உலகினில் ஏது?
மப்பில்லா வானம்போல் ஆகும்!-கல்வி
வளமில்லா வாழ்க்கையில் பயனற்றுப் போகும்! 6

கற்பிப்போர் கண்கொடுப் போரே!-அந்தக்
கணக்காயர் உரையினில் இருசெவி சேரே!
நற்பெயர் எடுத்திட வேண்டும்!-நாளும்
நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்! 7

அன்போடு கணக்காயர் போற்று!-பள்ளி
அறிவுரை வாழ்க்கையின் இருளுக்கு மாற்று!
என்றென்றும் கற்றிட லாகும்!-அறிவு
இல்லாமை என்கின்ற சொல்லற்றுப் போகும்! 8

பள்ளியிற் சள்ளை பொல்லாதே!-உடன்
பயில்பவர் மீதுநீ கோளும் சொல்லாதே!
கள்ளத் தனத்தைக் கொள்ளதே!-செல்லாக்
காசாவாய்! கற்காமல் நாளைத் தள்ளாதே! 9

கற்றுத் தெளிவதே மேன்மை!-கல்வி
கல்லாத மக்களால் வருவதே தீமை!
பெற்றவர் காதுக்குத் தேனாம்-பிள்ளை
பேச்சாளி, அறிவாளி என்பது தானாம்! 10



47

றிவைப் பெருக்கும் கூடம்;
அன்பைப் பெருக்கும் கூடம்;
மறைவு நீக்கி உம்மை
மனிதன் ஆக்கும் கூடம்! 1

ஒழுக்கம் சேர்க்கும் கூடம்;
உணர்வைச் சேர்க்கும் கூடம்;
வழுவை நீக்கி உம்மை
வாழ வைக்கும் கூடம்! 2

கண்ணை அளிக்கும் கூடம்;
கருத்தைக் கொடுக்கும் கூடம் ;
எண்ணம் தன்னில் தூய்மை
என்றும் சேர்க்கும் கூடம்! 3

கடமை காட்டும் கூடம்;
கைத்தொழில் பழக்கும் கூடம்;
மடமை போக்கி உம்மை
வாழ வைக்கும் கூடம்! 4

நாட்டுப் பற்றை ஊட்டும்;
நலிவை நெஞ்சில் ஒட்டும்;
ஏட்டுச் சுரை ஆகாமல்
ஏறாய் ஆக்கும் கூடம்! 5




பள்ளிக்கூடம் - II
48

ள்ளிக் கூடம் போவோம்!-நாம்
பள்ளிக் கூடம் போவோம்!
துள்ளி ஒடி ஆடி-நாளைத்
தொலைத்தால் என்ன உண்டாம் ? 1

உடலைத் தேய்த்துக் குளித்தே-வீட்டில்
உள்ள ஆடை உடுத்தே
பொடியோ டெண்ணெய் தோசை-அப்பம்
புசித்து நூலை எடுத்தே- 2

அடக்கத் தோடே செல்வோம்!-மணி
அடிக்கு முன்னே செல்வோம்!
இடக்கு வழியிற் செய்தால்-காண்போர்
ஏசிப் பழிப்பார்! வேண்டாம்! 3

தோழ ரோடு சேர்ந்தே-நூலைத்
துருவித் துருவி ஆய்ந்தே
ஆழ மாகக் கற்றே-நல்ல
அறிவை யடைய வேண்டும்! 4

கற்றுக் கொடுப்போர் மேலோர்!-அவர்
கருத்தை ஏற்று நடப்போம்!
கற்றுக் கொடுப்போர்க்(கு) அன்பை-என்றும்
காட்ட வேண்டும்! வேண்டும்!5



49

துள்ளிக் குதித்து வருகின்றார்
பள்ளிச் சிறுவர் சாலைக்கு;
கள்ளம் கபடம் அறியாதார்;
கவலை ஒன்றும் தெரியாதார்! 1

பேச்சைச் சிரிப்பைக் கேட்பீரே;
பின்புற மிருந்து பார்ப்பீரே;
கூச்சம் இன்றி அவர்எண்ணக்;
கோட்டை நுழைந்து பார்ப்பீரே! 2

பாட்டம் ஆட்டம் பார்த்திடுவீர்;
பரிகசச் சொல்லைக் கேட்டிடுவீர்;
கூட்ட மாக அவர்களுக்குள்
செய்யும் குறும்பைக் கண்டிடுவீர்! 3

அடக்கம் ஒடுக்கம் கற்றிடுவோம்;
அன்புப் பெருக்கைக் கொண்டிடுவோம்;
துடுக்கை விட்டுச் சிறுவரைப்போல்
தூய எண்ணம் பெற்றிடுவோம்! 4

50

படிக்க வேண்டும் ஆண்பெண்!
படித்தால் உண்டாம் முக்கண்!
படிக்கச் சிறக்கும் வாழ்வு!
படியார் அடைவார் தாழ்வு! 1

வயலை விளைக்கப் படிப்பு!
வேண்டும்! செந்நெல் முடிப்புப்
பெயலே இல்லாப் போதும்
பெருகச் செய்யும் படிப்பு! 2

சின்னச் சின்னத் தொழிலைச்
செழிக்கச் செய்யும் படிப்பு!
பொன்னை அளிக்கும் படிப்பு!
புகழை அளிக்கும் படிப்பு! 3

வீட்டைத் துலக்கப் படிப்பு!
வீரம் செழிக்கப் படிப்பு!
நாட்டைத் துலக்கப் படிப்பு!
நாளும் வேண்டும் படிப்பு! 4

இன்னே படிக்க வேண்டும்!
என்றும் படிக்க வேண்டும்!
உன்னை ஈன்ற நாட்டிற்(கு)
உழைக்கப் படிக்க வேண்டும்! 5

தொழிலைப் படிக்க வேண்டும்!
தொழில் துறையைப் படிக்க வேண்டும்!
அழிவே இல்லாக் கல்வி
ஆண்பெண் படிக்க வேண்டும்! 6


51

தாய்மொழியே தமிழ்மொழியாம்! கண்டாய்!-அதைத்
தட்டாமல் நீபடிப்பாய் நன்றாய்!
காய்நிலவின் இனிமை நனிஉண்டு!-நாளும்
கற்றுணரக் கட்டிக் கற்கண்டு! 1

செந்தமிழோ தீங்கருப்பஞ் சாறு!-பள்ளி
சென்றுகற்கப் பொன்னிவள ஆறு
சொந்தமொழி தமிழ்மொழியைப் போல-உனக்(கு)
எந்தமொழி இனிமைதரும் கூறு? 2

கற்றவரே கண்ணுடையார் என்றும்!-கல்வி
கல்லாதார் புண்ணுடையார் இன்றும்!
உற்றபொருள் கல்வியல்லால் உண்டோ?-நாட்டில்
மற்றபொருள் நிலைத்திருப்ப துண்டோ? 3

கொடுக்கக் குறையாத பொருள்கல்வி!-என்றும்
கொள்ளக் குறையாத பொருள்கல்வி!
எடுக்கக் குறையாத பொருள்கல்வி!-மாற்றார்
எரிக்கக் குறையாத பொருள்கல்வி! 4

இளமையினில் கற்கை மிகநன்று-அந்த
இளமையினைப் போக்கி வீணேநின்று
வளமிழந்த பேர்கள் பலருண்டு!-மூத்த
வயதினிலும் படித்தாற் பயனுண்டு! 5

படித்துணரார் விளையாட்டுப் பொம்மை-ஏட்டுப்
படிப்பிலையேல் என்னுண்டாம் நன்மை?
அடுத்தடுத்து நீபடிக்க வேண்டும்!-நல்ல
அறிவுண்டாம் புகழ்உண்டாம் யாண்டும்! 6

கற்றபடி நீநடக்க வேண்டும்!-ஏட்டில்
கண்டகளை நீவிலக்க வேண்டும்!
பெற்றவர்கள் உனைக்கண்டு மகிழ்வார்-வேறு
பிறநாட்டார் உனைக்கண்டு புகழ்வார்! 7

படித்தபயன் அறிவோடு வாழ்தல்!-அந்தப்
பண்பிலையேல் உனக்குண்டாம் தாழ்தல்
படித்தவருக் கெந்நாடும் நாடே!-நன்னூல்
படியாதார்க் கெந்நாடும் காடே! 8

கல்வியினால் உலகம்முன் னேறும்!-இதைக்
காணும்பொருள் ஒவ்வொன்றும் கூறும்!
கல்வியினால் வாழ்வளிக்கக் கூடும்!-வான்
கதிர்நிலவைக் கைக்கொள்ளக் கூடும்! 9

கல்வியின்றேல் தொழில்சிறப்ப தில்லை!-எந்தக்
கவின்கலையும் நாடடைவ தில்லை!
செல்வமிது செல்வமிது தேடே!-என்றும்
செழித்திருக்கும் உனையின்ற நாடே! 10



52

ட்டாயம் கல்வி! கட்டாயம் யார்க்கும்!
கட்டாயம் கல்வி! கட்டாயம் என்றும்!
பொட்டல் வெளிக்கு நிழலைப் போலப்
பூத்த மலர்க்கு மணத்தைப் போல- 1

நட்ட நிலத்து வரப்பைப் போல
நன்செய் புன்செய் மழையைப் போலக்
கட்டிய வீட்டுக்குக் கதவைப் போலக்
கைவி ளக்குக்கு நெய்யைப் போல- 2

கட்டை வண்டிக்(கு) ஆனியைப் போலக்
காளை மாட்டுக்குக் கயிற்றைப் போலப்
பெட்டி பேழைக்குச் சாவியைப் போலப்
பெரிய குளத்திற்குப் படியைப் போல-3

விளைந்த தோப்புக்குக் காவல் போல
வெள்ள ஆற்றுக்குக் கரையைப் போல
வளர்ந்த கொடிக்குக் கொம்பைப் போல
மங்கை எழிற்கு விழியைப் போல- 4

உண்ணும் உணவுக்(கு) உப்பைப் போல
ஊரின் இருளுக்(கு) ஒளியைப் போல
பண்ணுக் கியைந்த பாடல் போலப்
படிப்புக் கேற்ற ஒழுக்கம் போல- 5

உடலை மறைக்கும் ஆடை போல
உழைப்புக் கேற்ற விளைவு போலக்
கடலை நோக்கும் விளக்கைப் போலக்
கண்ணைக் காக்கும் இமையைப் போல- 6

வறுமை மாற்றப் புரட்சி போல
வாழ்வுக் கேற்ற வளப்பம் போலப்
பொறுமைக் கேற்ற புகழைப் போலப்
புலிக்கு வாய்த்த வலியைப் போல - 7

காலை தோன்றும் கதிரைப் போலக்
கடலில் தோன்றும் முத்தைப் போல
மாலை தோன்றும் மதியம் போல
வாழ்க்கைக் கேற்ற நெறியைப் போல- 8

ஊருக் கேற்ற ஆறு போல
உடலுக் கேற்ற உணவு போல
ஏரிக் கேற்ற மதகு போல
இளமைக் கேற்ற வளமை போல- 9

புண்ணுக் கேற்ற மருந்து போலப்
பொருளுக் கேற்ற கொடையைப் போலக்
கண்ணுக் கழகாம் கருணை போலக்
கதைக்கு மூலக் கருவைப் போல- 10


53

காலை மாலை உடற்பயிற்சி
கடுநோய் போக்கும் நல்முயற்சி!
காலை மாலை உடற்பயிற்சி!
கைகால் உடலுயிர் நல்வளர்ச்சி! 1

குந்தி எழுந்தாற் கால்கையும்,
குடரும், இடையும் வலிவெய்தும்!
பந்தை அடித்தால் துடைமார்பும்
பாறை போல் விரிவடையும்! 2

நிலவில் 'பாரி' அடிப்பதுவும்,
நீரில் 'ஓரி' அடிப்பதுவும்,
அலைகடல் மூழ்கிக் குளிப்பதுவும்
அறிவுடற் காக்கம் அளிப்பனவாம்! 3

கைகால் சோர ஆடுவதும்,
கடற்கரை மணலில் ஒடுவதும்,
மெய்யை வளைத்துப் பின்நிமிர்ந்தே
விறைத்து நடப்பதும் நன்மருந்தே!4

சிலம்பக் கூடம் உண்டாக்கி
முன்னாள் செய்தார் உடற்பயிற்சி!
நலங்கொள் உடலே பெருஞ்செல்வம்!
நாளும் செய்வாய் உடற்பயிற்சி! 5

54

ள்ளி பயிலும் சிறுவர் நாளை
பாரை ஆளப் போறீர்!-தமிழ்
ஊரை ஆளப் போறீர்!
பள்ளிப் படிப்பு பாதி யானால்
பாரை எப்படி ஆள்வீர்?-தமிழ்
ஊரை எப்படி ஆள்வீர்? 1

கல்வி பயிலும் சிறுவர் நாளை
கடலைத் தாண்டப் போறீர்!-நீர்த்
திடலைத் தாண்டப் போறீர்!
கல்வி கற்றுத் தெளியா விட்டால்
கடலை எப்படி ஆள்வீர்?-நீர்த்
திடலை எப்படி ஆள்வீர்? 2

சாலை பயிலும் சிறுவர் நாளை
தண்டெ டுக்கப் போறீர்!-மறத்
தொண்ட ளிக்கப் போறீர்!
சாலைப் படிப்பைத் தட்டிக் கழித்தால்
தண்டெ டுக்கப் போமோ?-மறத்
தொண்ட ளிக்கப் போமோ? 3

மன்றம் பயிலும் சிறுவர் நாளை
வானம் ஆளப் போறீர்!-தமிழ்
வானம் ஆளப் போறீர்!
மன்றப் படிப்பின் வளங்கு றைந்தால்
வானம் ஆளப் போமோ?-தமிழ்
மானம் மீளப் போமோ? 4

அரங்கு பயிலும் சிறுவர் நாளை
ஆட்சி செய்யப் போறீர்!-தமிழ்
ஆட்சி செய்யப் போறீர்!
அரங்குக் கல்வி குறைந்தால் நாளை
ஆட்சி செய்யப் போமோ?-தமிழ்
மீட்சி செய்யப் போமோ? 5

திண்ணை பயிலும் சிறுவர் நாளை
மண்ணை ஆளப் போறீர்!-தமிழ்
மண்ணை ஆளப் போறீர்!
திண்ணைப் படிப்புச் சிறுத்து விட்டால்
மண்ணை ஆளப் போமோ?-தமிழ்
விண்ணை ஆளப் போமோ? - 6

வீட்டிற் பயிலும் சிறுவர் நாளை
வெற்றி கொள்ளப் போர்!-பகை
வெற்றி கொள்ளப் போரீர்!
வீட்டுப் படிப்பு மிகக்கு றைத்தால்
வெற்றி கொள்வ தெப்போ?-பகை
சுற்றி உள்ள திப்போ! 7

றையில் பயிலும் சிறுவர் நாளை
ஆக்கஞ் செய்யும் அறிஞர்!-தமிழுக்(கு)
ஊக்கஞ் செய்யும் அறிஞர்!
அறைப்ப டிப்பும் அறையில் நின்றால்
ஆக்கஞ் செய்வ தெப்போ?-தமிழுக்(கு)
ஊக்கஞ் செய்வ தெப்போ? 8

தொழில் பயிலும் சிறுவர் நாளை
தொழில் நிறைக்கப் போறீர்!-நாட்டின்
எழில் நிறைக்கப் போறீர்!
தொழிற் பயிற்சி துண்டு பட்டால்
துயர்து டைப்ப தெப்போ?-நாட்டின்
உயர்வ ளிப்ப தெப்போ? 9

கலை பயிலும் சிறுவர் நாளை
நிலை யுயர்த்தப் போறீர்!-நாட்டின்
நிலை யுயர்த்தப் போறீர்!
கலைப் பயிற்சி கருகி விட்டால்
நிலை யுயர்த்தல் எப்போ?-மக்கள்
தலை யுயர்த்தல் எப்போ? 10


"https://ta.wikisource.org/w/index.php?title=குழந்தை_இலக்கியம்/கல்வி&oldid=1249333" இலிருந்து மீள்விக்கப்பட்டது