குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்/குழந்தையும் பெற்றோரும்

11. குழந்தையும் பெற்றோரும்

குழந்தையிடம் அன்பில்லாத தாய் தந்தையர் இருப்பார்களா ?

"இதென்ன கேள்வி? இருக்கமாட்டார்கள் என்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே!" என்று பொதுவாக எல்லோருடைய மனத்திலும் எண்ணமுண்டாகும். குழந்தையிடம் அன்பு கொள்வதுதான் பெற்ருேரது இயற்கை. 'பெற்ற மனம் பித்து' என்ற பழமொழியும் அதனாலேயே தோன்றியிருக்கிறது. இந்த அடிப்படையைக் கொண்டே இதுவரை மனத்தத்துவ உண்மைகளே எழுதியிருக்கிறேன்.

ஆனால் மகவிடம் வாஞ்சையில்லாத ஒரு சில பெற்ரறோர்கள் இருத்தலும் கூடும். அந்த உண்மையையும் நாம் உணரவேண்டும். லட்சத்தில் ஒருவர் இருக்கலாமோ என்னவோ என்று நினைப்பீர்கள். நான் அப்படிக் கூடத் தைரியமாகக் கணக்கிட முன்வரவில்லை. நான் சொல்வதெல்லாம் இதுதான். அதாவது குழந்தைகளிடம் அன்பு கொள்ளாத பெற்றோர்களும் இருப்பார்கள் என்பதே. அதன் காரணத்தைச் சுருக்கமாகக் கீழே விளக்கியிருக்கிறேன்.

அன்பில்லாம லிருப்பதோடு குழந்தையிடம் வெறுப்புணர்ச்சியும் சில பெற்ரறோர்களிடம் காணப்படுகிறது. வெறுப்புணர்ச்சி என்றால் அன்பே சிறிதும் கலவாத தென்று யாரும் எண்ணக்கூடாது. மொத்தத்திலே பார்க்கும்போது வெறுப்புணர்ச்சியே மேலிட்டு நிற்கும் நிலையைத்தான் நான் குறிப்பிடுகிறேன். இந்த மாதிரி அறியாமையால் ஏற்படலாம். அல்லது தம்மை அறியாமலேயே பெற்றோர்கள் இவ்வெறுப்புணர்ச்சியைக் கொண்டிருக்கலாம்.

இங்ஙனம் உண்டாகும் வெறுப்புணர்ச்சியைப்பற்றி விரிவாக ஆராய்ந்த பிட்ஸ் சைமன் (Fitz Simon) என்பார் அது சாதாரணமாக எவ்வாறெல்லாம் நடத்தையில் வெளியாகிறது என்பதை வகுத்துக் கூறியிருக்கின்றார்.

குழந்தையிடம் குறைபாடுகளேயே காணுதல் கடுமையான தண்டனை கொடுத்தல்
பயமுறுத்துதல்
பூட்டி வைத்தல்
பழித்துப் பேசுதல்
சிறிது நேரங்கூட அன்போடு பேசாதிருத்தல்
இஷ்டம்போல எங்கு வேண்டுமானலும்
திரியும்படி விட்டுவிடுதல்
மற்றக் குழந்தைகளோடு ஒத்திட்டு இழிவு படுத்துதல்
எதிர்பார்க்க முடியாத செயல்களை எதிர்பார்த்தல்
பேணுது விடுதல்
வீட்டைவிட்டுத் துரத்துதல்

என்று இப்படிப் பலவேறு வகைகளில் அந்த வெறுப்பானது வெளிப்படுகின்றது. இவ்வாறு ஏதாவது ஒரு வகையில் கடந்து கொள்ளும் சில பெற்ரறோர்கள் தங்கள் நடத்தையில் வெறுப்புணர்ச்சி இருக்கிறதென்றும் அது குழந்தையைப் பாதிக்கிறது என்றும் அறியாமலும் இருக்கலாம்.

வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் சாதாரணமாகக் கீழ்க் கண்ட தன்மைகள் காணப்படுகின்றன.

பிறரிடம் சண்டையிடுதல்
கலகம் உண்டாக்குதல்
விரோதம் கொள்ளுதல்
பொருமை கொள்ளுதல்
பிறருக்குத் துன்ப்ம் விளேத்தல்
தன்னைப் பிறர் கவனிக்கும்படியாகக் குறும்பு செய்தல்

இவற்றோடு திருடவும் பொய் சொல்லவும் அக்குழந்தைகள் பழகிக் கொள்கின்றன. சில குழந்தைகள் வீட்டைவிட்டு ஒடி விடுவதும் உண்டு. இம்மாதிரி செய்கைகளால் பெற்றோரின் மன அமைதியைக் குலைக்க வேண்டுமென்று தம்மை அறியாமலேயே அக்குழந்தைகளுக்கு ஆசை ஏற்படுகின்றது.

நல்ல முறையில் குழந்தை வளர வேண்டுமாயின் அதை அன்புடன் பேணவேண்டும். அன்பில் மலர்கின்ற குழந்தை எவ்விதமான மனக் கோளாறுமில்லாமல் வளர்கின்றது. மித மிஞ்சிய அன்பினாலும் தீங்கு நேர்வதுண்டு. ஆனல் அதைவிட வெறுப்புணர்ச்சியின் விளைவாக உண்டாகும் தீமைகளே அதிகம். அன்பு சற்று அதிகமாகவே இருக்கலாம்; ஆனால் வெறுப்புணர்ச்சி கூடவே கூடாது.

சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் அன்பு மிகுந்த பெற்றோரிடத்திலும் சில சமயங்களிலே இந்த வெறுப்புணர்ச்சியின் சாயல் ஒரு விநாடியாவது படிவதுண்டென்பதை நாம் அறியலாம். நீடித்து நிற்கும் வெறுப்பல்ல; ஆனால் குழந்தையால் ஏற்படும் தொந்தரவுகளினால் ஏற்பட்ட மின்னலாய்த் தோன்றி மறையும் வெகுளி, உணர்ச்சி. அதைத் தவிர்ப்பதென்பது யாருக்கும் முடியாத காரியமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. தாய்க்கு ஒரு சமயம் இது சாத்தியமாகலாம். தாய்மை எய்திய பெண்களிடத்திலே ஒரு அபார சக்தி இருக்கின்றது. அது மிக ஆச்சரியமானது. அதனால் அவர்களால் அது முடியுமென்றாலும் நான் இதுவரை குழந்தையிடம் சில வேளைகளிலாவது கோபத்தைக் காட்டாத தாயைப் பார்த்ததில்லை. கையால் ஒரு சின்ன அடிபோட்டு விட்டு அக்கணத்திலேயே குழந்தையை அணைத்துக் கொள்ளும் தாயையும், லேசான சுடுசொல் ஒன்றை உச்சரித்துவிட்டு அடுத்த கணத்திலே அன்பு பொழியும் தாயையும் நான் குறிப்பிடவில்லை. வெறுப்புணர்ச்சி என்ற அலையே தோன்றாத உள்ளமுடைய தாயைத்தான் நான் கண்டதில்லை என்று சொல்லுகிறேன்.

இம்மாதிரி வெகு அரிதாகத் தோன்றும் வெறுப்புணர்ச்சியால் குழந்தையின் உள்ள வளர்ச்சிக்குப் பெரியதொரு திங்கு ஏற்பட்டுவிடாது. சில சமயங்களிலே அந்தச் சிறு வெறுப்புணர்ச்சியே நன்மை பயப்பதாகவும் இருக்கும். தாய் ஏதாவதொரு செயலைக்கண்டு வெறுப்படைகிறாள் என்றால் குழந்தை அதை விட்டுவிட முயலும், அவ்வகையில் அது நன்மையாகவே முடிகின்றது. மேலும் எப்பொழுதாவது லேசாக உண்டாகும் வெறுப்புணர்ச்சியானது குழந்தையின் உள்ளத்தில் ஆழ்ந்து பதியாதவாறு பெற்றோறின் இயல்பான அன்பு அதைத் துடைத்து விடுகின்றது. ஆதலால் அவ்வித வெறுப்புணர்ச்சியைப் பற்றிக் கவலைப் படவேண்டியதில்லை.

ஆனால் யாரிடமாவது இவ் வெறுப்புணர்ச்சி சற்று மிகுந்து காணப்படுமானால் அதனால் குழந்தைக்குத் தீங்கு விளைகின்றது என்பது நிச்சயம். ஆகவே அதுபற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

குழந்தையிடம் வெறுப்புணர்ச்சி உண்டாவதற்குப் பல காரணங்கள் உண்டு. போதுமான ஒய்வு கிடைக்காமல் செய்யும்படியான அதிக உழைப்பும் பலஹீனமும் பொறுமையைச் சீக்கிரம் இழக்கும்படி செய்துவிடுகின்றன. சம்ரட்சணை செய்ய இயலாத நிலையில் பல குழந்தைகள் பிறப்பது வெறுப்புணர்ச்சிக்கு ஒரு காரணமாகிறது. இப்படிப்பட்ட வெளிப்படையான காரணங்கள் அநேகம் உண்டு. இவற்ரறோடு மறை உள்ளத்திலிருந்து மறைமுகமாக வேலை செய்யும் காரணங்கள் உண்டு. ஆவலோடு எதிர்பார்த்திருந்தபடி ஒரு குழந்தை அழகாக இராது: அல்லது அதி தீட்சண்ணியம் காண்பிக்காது. தாய்க்குத் தன் கல்யாண விஷயத்திலேயே திருப்தி ஏற்பட்டிருக்காது. இவைபோன்ற காரணங்கள் எல்லாம் பெற்றோருக்கே தெரியாதபடி மறைவாக அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் அழுந்திக் கிடந்து கொண்டு வெறுப்புணர்ச்சியை மேலே கிளப்புகின்றன. இவற்றின் உண்மைகளை அறிந்து கொள்வதால் கூடுமானவரை இவற்றைச் களைய நாம் முயற்சி செய்யலாம்.