கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/கைமாற்று

11. கைமாற்று

அமைப்பு:

25அடி விட்டமுள்ள வட்டம் ஒன்று சுண்ணாம்புக் கோட்டினால் போட்டிருக்கவேண்டும். அந்த கோட்டைச் சுற்றி, ஆட இருப்பவர்கள் அனைவரும் அருகருகே ஒருவருக்கொருவர் கைகெட்டுந் தூரத்தில் இருப்பது போல, நின்று கொண்டிருக்க வேண்டும்.

வட்டத்திற்கு மத்தியில் ஒருவர், தனது கண்களை ஒரு துண்டுத் துணியால் கட்டி மறைத்துக் கொண்டு, வாயில் விசிலையோ அல்லது இசைக்கருவி ஒன்றையோ வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை:

வட்டமாக நிற்பவர்கள், ஒருவர்க் கொருவராக ஒவ்வொருவரும், அருகருகே உள்ளவரிடம் பந்தைக் கைமாற்றிக் கொண்டே வரவேண்டும், பந்து ஆளுக்கு ஆள் கைமாறி வட்டம் சுற்றி வந்து கொண்டேயிருக்கும்.

கண்களைக் கட்டியிருப்பவர், விசிலை ஊதுவார் அல்லது இசைத்துக் கொண்டிருக்கும் இசைக் கருவியை நிறுத்தி விடுவார். விசில் ஊதப்படும்பொழுது, அல்லது இசை ஒலி நிறுத்தப்படுகிற பொழுது, யார் கையில் பந்து இருக்கிறதோ, அவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

ஆள் குறையக் குறைய வட்டமும் குறுகிக்கொண்டே வரும். இவ்வாறு ஆட்டத்தின் இறுதியில், ஒருவர் மிஞ்சும் வரை ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

குறிப்பு:

விசிலுக்குப்பதிலாக, இசைத்தட்டின் மூலமும் இந்த ஆட்டத்தை ஆடலாம். பந்து கை மாறிக்கொண்டிருக்கும்பொழுது, இசையும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். இசை நிறுத்தப்படும் பொழுது, பந்தைக் கையில் வைத்திருப்பவர். ஆட்டம் இழக்கிறார்.

ஆகவே, கைமாற்றும்போது சுறுசுறுப்புடனும் பரபரப்புடனும் ஆடவேண்டும். பந்துக்கு பதிலாக, வேறு எந்தப் பொருள் கிடைத்தாலும், அதனை பயன்படுத்திக் கூட ஆடி மகிழலாம்.