கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/பழம் பொறுக்கும் போட்டி

82. பழம் பொறுக்கும் போட்டி

நான்கு குழுக்களாக ஆட்டக்காரர்களைப் பிரிக்க வேண்டும். ஒடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் குழுக்கள் அவரவர் இடங்களில் வரிசையாக உட்கார வேண்டும்.

ஒவ்வொரு குழுவுக்கும் எதிராக, கோட்டிலிருந்து 3 அல்லது 4 அடி இடைவெளியில் 6 கட்டங்கள் போட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு எலுமிச்சம் பழம் அல்லது பழம் போன்ற கட்டை ஒன்று வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆறு பழத்துக்கும் அப்பால் ஒரு கட்டம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவின் முதல் ஆட்டக்காரரிடமும் ஒரு கரண்டி (Spoon) இருக்கும்.

போட்டித் தொடங்கிய உடனே, முதல் ஆட்டக்காரர் ஒடத் தொடங்கி, முதல் பழத்தைக் கரண்டியில் எடுத்து, அதைக் கொண்டுபோய் கடைசிக் கட்டத்தில் வைத்துவிட்டு, பிறகு ஓடிவந்து 2ம் கட்டத்தின் பழத்தை எடுத்து மீண்டும் போய்க் கடைசிக் கட்டத்தில் வைக்கவேண்டும். இவ்வாறு 6 கட்டப் பழங்களையும் ஒவ்வொரு தடவை வந்து வந்து பொறுக்கி எடுத்துக் கொண்டு போய் கடைசிக் கட்டத்தில் குவித்துவிட்டுத் தன் குழு நோக்கி ஓடி வந்து அடுத்தவரிடம் கரண்டியைக் கொடுத்து விட்டு, கடைசியில் போய் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.

இரண்டாமவர் ஓடிப் போய், குவித்துள்ள பழங்களில் ஒன்றை கரண்டியால் எடுத்து, முதல் கட்டத்தில் வந்து வைக்க வேண்டும். இவ்வாறு பழங்களை எல்லாக் கட்டங்களிலும், ஒவ்வொன்றாக ஒவ்வொரு முறையும் எடுத்து வந்து பரப்பி விட்டு, ஓடிவந்து மூன்றாவதாக உள்ளவரிடம் கரண்டியைத் தந்துவிடவேண்டும்.

இவ்வாறு ஒருவர் பழங்களைக் குவிக்கவும், பின் வருபவர் கட்டங்களில் பரப்புவதுமாக ஆடி ஓடி, முதலில் முடிக்கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.

குறிப்பு: எக்காரணத்தை முன்னிட்டு, பழங்களைக் கைகளால் தொடக்கூடாது. பழத்தை எடுக்கும்போதும் தவறியபோதும் கரண்டிதான் எடுத்தாடப் பயன்பட வேண்டும்.