கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/மாறும் பாதை

44. மாறும் பாதை

அமைப்பு:

ஆட்டத்தில் பங்கு பெறுபவர்களை நான்கு சமமான குழுவாகப் பிரித்துவிடவும். ஒவ்வொரு குழுவையும் வரிசையாக நிற்கச் செய்யவும், அதாவது முன்னால் நிற்பவருக்கும் பின்னால் நிற்பவருக்கும் உள்ள இடைவெளியானது தன் கையின் நீள அளவு இருந்தால் போதும். அதேபோல் அடுத்த குழுவும் முன்னும், பின்னும், பக்கவாட்டில் உள்ளவர்களின் கைகளை இணைக்கும் தூரத்திலே நின்று கொண்டிருக்க வேண்டும்.

விரட்டிப் பிடிக்க ஒருவர் - விரட்டப்பட ஒருவர், என இருவர் மட்டும் தனியாக நின்றுகொண்டிருப்பார்கள். நான்கு குழுவில் உள்ள முதல் ஆட்டக்காரர்கள் அனைவரும் முதலில் பக்கவாட்டில் கைகளை விரித்திருப்பதுபோல் அடுத்தடுத்து உள்ளவர்களும் அதேபோல் கைகளை விரித்துக் கோர்த்திருக்க பாதைகள் அமைந்து விடுகின்றன.

ஆடும் முறை:

ஆட்டத்தை நடத்துபவர் முதலில் ஆட்டத்தைத் தொடங்கியதும், முன் பக்கமாகப் பார்த்து நின்று, பக்கவாட்டில் விரித்த கைகளுடன் உள்ள பாதையில், விரட்டுபவர் ஓடுபவரைத் துரத்தத் தொடங்குவார். அவர் பிடிபடும் நிலையில், ஆட்டம் நடத்துபவர் குழலொலி மூலம் சைகை தருவார். (முதல் படம்)


உடனே அடுத்தக் குழுவினரின் கையை விட்டுவிட்டு, வலதுபுறம் எல்லோரும் திரும்பித் தங்கள் குழுவினருக்குள்ளேயே நின்ற நிலையில், கைகளைப் பக்கவாட்டில் விரித்து பிடித்துக் கொள்ள, இப்பொழுது பாதைமாறி விடுகிறது. (படம்2)

இவ்வாறு பாதை மாறி மாறி வரவர, ஓடுவோருக்கும். துரத்துவோருக்கும் இன்பமாகவும் இருக்கும். பாதை அமைக்கின்ற ஆட்டக்காரர்களுக்கும் பொழுது போக்காகவும் இருக்கும்.

ஓடுபவர் பிடிபட்டவுடன், மீண்டும் இருவரைத் தேர்ந்தெடுத்து ஆட்டத்தைத் தொடங்கி ஆடவேண்டும்.