கெடிலக் கரை நாகரிகம்/பாசனமும் பயிரும் - அணைக்கட்டுகள்

18. பாசனமும், பயிரும்
அணைக்கட்டுகள்

பாசனம்

ஆற்றுப்பாசனம் பெரும்பாலும் அணைக்கட்டுகளின் வாயிலாக நடைபெறுகிறது. கெடில ஆற்றின் குறுக்கே பல் வேறிடங்களில் பாசனத்திற்குப் பயன்படும் ஐந்து அணைக்கட்டுகள் உள்ளன, அவை முறையே முகலாற்று அணை, புத்தனேந்தல் அணை, திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவயிந்திரபுரம் அணை என்பனவாம். இவற்றுள் முதல் இரண்டு அணைகளும் திருக்கோவலூர் வட்டத்திலும் இறுதி மூன்று அணைகளும் கடலூர் வட்டத்திலும் உள்ளன. இவ்வைந்தனுள் இறுதி மூன்றுமே சிறந்தவை - பழமையானவை.

1. முகலாற்று அணை

மேற்கே திருக்கோவலூர் வட்டத்தின் தொடக்கப் பகுதியில் இந்த அணை உள்ளது. அருங்குறுக்கை என்னும் ஊருக்கு மேற்கே 3 கி.மீ. தொலைவில் முகலாறு என்னும் ஊருக்கு அருகில் சிறிய அளவில் ஒரு தடுப்பு போல் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது. சீரழிந்த நிலையிலுள்ள இச் சிறு அணையால் பெரும் பயன் இல்லை. அணை என்ற பெயரளவில் இருக்கிறது இது.

2. புத்தனேந்தல் அணை

இது, திருக்கோவலூர் வட்டத்தில் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே ஏறக்குறைய 15 கி.மீ. தொலைவில் புத்தனேந்தல் என்னும் ஊர் எல்லையில் உள்ளது. ஆற்றின் தென்கரையில் புத்தனேந்தல் ஊர் இருக்கிறது. இங்கே இயற்கையாகவே கெடிலத்தின் குறுக்கே அணைத்தடுப்புபோல் பாறைகள் உயர்ந்துள்ளன. அந்தக் குறுக்குப் பாறைத் தடுப்பு ஒரு சிறிய அணை போல் சிறிய அளவில் பயன் தந்து வந்தது. இங்கே ஆற்றிற்குத் தென்பால் தாமல் என்னும் ஊர் இருப்பதால் தாமல் அணை எனச் சிலரும், வடபால் மேமாளூர் என்னும் ஊர் இருப்பதால் மேமாளூர் அணை எனச் சிலரும் அழைத்து வந்ததும் உண்டு. இங்கே உள்ள குறுக்குப் பாறைமேல் 1953 ஆம் ஆண்டு சுவர் எழுப்பப்பட்டு உயரமாகச் செயற்கை அணை கட்டப்பட்டது. அதனால் இவ்வணை மற்ற அணைகளினும் மிகவும் உயரமாய்த் தோற்றமளிக்கிறது. அணைக்கு மேற்புறம் ஆற்றின் இருபக்கமும் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக 519 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பாசனத்தால் அந்த வட்டாரத்து வயல்கள் மிகவும் செழிப்பாக உள்ளன.

3. திருவதிகை அணை

அடுத்தாற்போல் கடலூர் வட்டத்திற்குள் புகுவோமானால் திருவதிகை அணையைச் சந்திக்கலாம். கடலூருக்கு மேற்கே 21 கி.மீ (13 கல்) தொலைவில், திருவதிகை என்னும் ஊருக்குக் கீழ்பால் 1847 - 1848 ஆம் ஆண்டு காலத்தில் இது கட்டப்பட்டது. அதற்குமுன் அங்கே களிமண் அணையே இருந்தது. அதை அகற்றி இந்த அணை கட்டப்பட்டது. முதலில் 443 அடி நீளமே கட்டப்பட்டிருந்தது. பின்னர் மேலும் நீட்டப்பட்டு இப்போது 523 அடி நீளம் உடையதாகத் திகழ்கிறது. அணைக்கு மேற்புறம் ஆற்றின் வடகரையிலிருந்து கால்வாய் பிரிந்து சென்று பல ஊர்களுக்குப் பாசன வசதி செய்கிறது. பெரிய கால்வாயிலிருந்து பல கிளைக் கால்வாய்கள் பிரிந்து அந்தப் பகுதி நெடுகிலும் ஊடுருவிச் செல்கின்றன. அந்தப் பகுதியில், மேல் பட்டாம் பாக்கம் என்னும் ஊரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிற்குள் உள்ள பாலூர்ப் பக்கம் வரவேண்டுமானால், இடையே பன்னிரண்டு வாய்க்கால்களில் ஏறி இறங்கவேண்டும். அண்மையில்தான் இந்த வாய்க் கால்களின் மேலே பாலங்கள் கட்டப்பட்டன.

திருவதிகை அணையின் வடபகுதி பார்ப்பதற்கு மிகவும் இனிமையான குளிர்ச்சியான தோற்றம் உடையது. ஆற்றின் கரையிலும் கால்வாய்க் கரையிலும் உள்ள சோலைகளும் தோப்புக்களும் கண்களுக்கு மிக்க கவர்ச்சி ஊட்டுகின்றன. அமைதியான சூழ்நிலையுடைய அந்த இடத்தில் எவ்வளவு நேரம் இருந்தாலும் சலிப்புத் தட்டாது. கோடைக் காலத்தில் குன்னுருக்கும் குற்றாலத்திற்கும் கோடைக்கானலுக்கும் போய்த்தான் தீரவேண்டும் என்பதில்லை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அணைக்கரைக்குச் சென்று பொழுது போக்கினாலே போதும். இளங்காதலர்கள் தனித்து இன்பப் பொழுது போக்குதற்கு உரியது மட்டுமன்றி, எழுத்தாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஏன், தவம் புரியும் முனிவர்களுக்குங்கூடத் தக்க சூழ்நிலை உடையது அந்த இடம். அத்தகைய திருவதிகை அணையின் படம் முன்பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது.

முன்பக்கமுள்ள படம் அணையின் அழகான வடகரையில் இருந்துகொண்டு எடுத்த படம். அணைக்குமேல் நீர் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அணைக்கு நடுவே, அணையின் சமதளத்துக்குமேல் சிறிது உயரமாக, மூடப்பட்டுள்ள நான்கு கண்கள் தெரிவதைப் படத்தில் காணலாம். 1967 சனவரி நான்காம் நாள் பிடித்த படம் இது. கோடைக் காலத்தில் இதுபோல் அணைக்குமேல் நீர் நிரம்பி வழிந்துகொண்டிருக்காது. அணைக்குக் கீழேதான் தண்ணீர் இருக்கும். கண்களைத் திறந்தே தண்ணீர் விடவேண்டும். ஆனால், என்றுமே தண்ணிர் வற்றுவது கிடையாது. எந்தக் காலத்திலும் ஒரளவு தண்ணிராவது அணைவழியாக வெளியேறிக்கொண்டிருக்கும். இப்போது அணையின் சமதளத்துக்கு மேல் கணுக்கால் அளவு தண்ணிர் வழிந்தோடுவதைப் படத்தில் காணலாம். மீனவர்கள் இக்கரைக்கும் அக்கரைக்குமாக அணையின்மேல் நடந்து சென்று மீன் பிடிக்கிறார்கள். அணையின் தளத்தில் இருக்கும் பாசி வழுக்கிவிடாமல் இருப்பதற்காக, மீனவர்கள் தம் கால் கட்டை விரல்களில் தழைகளைச் சுற்றிக் கொண்டு, கட்டை விரல்களை அழுந்த ஊன்றித் தேய்த்துக்கொண்டே நடந்து செல்லும் காட்சி, ஒரு வகை ‘சர்க்கஸ்’ காட்சிபோல் இருக்கிறது.

4. வானமாதேவி அணை

திருவதிகை அணையைத் தொடர்ந்து கிழக்கே ஏழு கி.மீ. தொலைவு வந்தால் வானமாதேவி அணையைக் காணலாம். இது, கடலூருக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் வானமாதேவி என்னும் ஊருக்குச் சிறிது தொலைவில் கட்டப்பட்டுள்ள அணையாகும். இது, 1862 - 1863 ஆம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. முதலில் கட்டினபோது. இதன் நீளம் 421 அடியளவே பிறகு இது மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது இதன் நீளம் 506 அடியும் 3 அங்குலமுமாகும். அணையின் தென்கரையிலிருந்து கால்வாய் பிரிந்து வாணமா தேவியைச் சார்ந்த பகுதிக்கும் அதன் கீழ்ப்பகுதிக்கும் பாசன வசதியளிக்கிறது. இவ்வணையிலும், கோடைக் காலத்திலும் கண்வாய்களிலிருந்து நீர் வெளியேறிக்கொண்டிருக்கும்.

வழக்குப் பெயர்

வானமாதேவி அணை என்னும் பெயர் இருப்பினும், ‘பல்லாநத்த அணை’ என்னும் பெயராலும் மக்கள் பலர் இதனை அழைக்கின்றனர். அண்மையில் ‘பல்லவராயன் நத்தம்’ என்னும் சிற்றுாரும் உள்ளதால், அவ்வூரின் பெயரால் மக்கள் அழைக்கின்றனர். ‘பல்லவராயன் நத்தம்’ என்னும் முழுப்பெயர்தான் மக்கள் வழக்கில் ‘பல்லா நத்தம்’ எனக் கொச்சையாகச் சிதைந்து மருவிவிட்டது. வானமாதேவி, பல்லவராயன் நத்தம் என்னும் ஊர்ப்பெயர்கள், பெரிய வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுபடுத்துகின்றனவன்றோ? இவ்வூர்களைப் பற்றி, ‘கெடிலக்கரை ஊர்கள்’ என்னும் தலைப்பில் பின்னர்க் காண்போம்.

5. திருவயிந்திரபுரம் அணை

வானமாதேவி அணையைத் தொடர்ந்து கீழ்பால் எட்டு கி.மீ. தொலைவு வந்தால் திருவயிரந்திரபுரம் அணையை அடையலாம். இது கடலூருக்கு மேற்கே ஏழு கி.மீ. தொலைவில் உள்ள திருவயிந்திரபுரம் என்னும் ஊரை யொட்டிக் கட்டப்பட்டுள்ளது. 1835 - 1836 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணையின் நீளம் 436 அடி ஆகும். 1903 இல் இது நன்கு வலுப்படுத்தப்பட்டது.

இந்த அணைக்குமேல் ஆற்றின் வலப்பக்கத்தில் கால்வாய் பிரிகிறது. இக்கால்வாய் கடலூரின் தென்பகுதியில் பாய்ந்து அவ்வட்டாரத்தில் உள்ள பல ஊர்களுக்குப் பாசன வசதி அளிக்கிறது. பெரிய கால்வாயிலிருந்து சிறிய கால்வாய்கள் பல பிரிகின்றன. அவற்றிலிருந்து சிறுசிறு கால்வாய்கள் மேலும் பல பிரிகின்றன. ஓர் ஒப்புமையால் விளக்கவேண்டுமானால், நம் உடம்பு முழுவதும் உள்ள குருதிக் குழாய்கள் (இரத்த தாரைகள்) போல, இப்பகுதி முழுவதும் கெடிலத்தின் கால்வாய்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிப் பிணைந்து ஓடிக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, திருப்பாதிரிப் புலியூரிலிருந்து தெற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள வண்டிப் பாளையம் வருவதற்கு ஏழு வாய்க்கால் பாலங்களைக் கடந்தாக வேண்டும்.

இந்தப் பகுதியை வற்றாத வளம் உடையதாகவும், கண்ணுக்கு இனிய காட்சி தருவதாகவும் செய்து கொண்டிருக்கிற பெருமை, திருவயிந்திரபுரத்து அணையினுடையதே. கடைசி அணையும் இதுதான்! முதலாவது அணையும் இதுதான். இதற்குங் கிழக்கே கெடிலம் கடலோடு கலக்கிற வரைக்கும் இடையே வேறு அணை இல்லாததால் இது கடைசி அணை எனப்பட்டது. முதல் அணையும் இதுதான் என்பது எப்படி? புத்தனேந்தல் அணை 1953ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதற்கும் 90 ஆண்டுகளுக்குமுன் 1862 - 1863இல் வானமாதேவி அணை அமைக்கப்பட்டது. அதற்கும் 15 ஆண்டுகளுக்கு முன் 1847 - 1848இல் திருவதிகை அணை உருவாக்கப்பட்டது. அதற்கும் 12 ஆண்டுகளுக்குமுன் 1835 - 1836இல் இந்தத் திருவயிந்திரபுரம் அணை கட்டப்பட்டதால், இது முதலாவது அணை என்னும் பெருமைக்கு உரியதாயுள்ளது. மற்றும், கெடிலத்தின் அணைகளுள், ஏனைய அணைகளினும் இந்த அணைதான், அணை கட்டுவதற்கு ஏற்ற இயற்கைச் சூழ்நிலை மிக்கது என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

திருவயிந்திரபுரம் அணைப் பகுதிக்கும் திருவதிகை அணைப் பகுதிக்கும் இடைப்பட்ட தொலைவு 14 கி.மீ. அளவாகும். இந்தக் குறுகிய தொலைவிற்குள் வானமாதேவி அணை உட்பட மூன்று அணைகள் இருப்பதைக் காண்கிறோம். மூன்றனுள், மேல் புறத்தில் உள்ள திருவதிகை அணை 523 அடி நீளமும், இடையிலுள்ள வானமாதேவி அணை, முன்னையதினும் 17 அடி குறைவாக 506 அடி நீளமும், இறுதியில் கீழ்பால் உள்ள திருவயிந்திரபுரம் அணை, தனக்குமுன் உள்ளதினும் 70 அடி குறைவாக 436 அடி நீளமும் உடைத்தாயிருப்பது, கெடிலம் கீழ் நோக்கி வரவர அகலத்தில் சுருங்குகிறது என்பதை அறிவிக்கிறது. ஆறுகள் தோன்றும் இடத்தில் சிறுத்தும் நடுவில் பெருத்தும் முடிவில் மீண்டும் சிறுத்தும் போவது பொது இயல்பு தானே! கங்கையென்ன காவிரியென்ன - அவையும் இப்படித் தானே! கெடிலம் மட்டும் இதற்கு விதிவிலக்கா? ஆனால், கங்கையும் காவிரியும் முடிவில் சிறுத்துப் போகும் விகித அளவுக்குக் கெடிலம் முடிவில் சிறுக்கவில்லை.

கடலூர் வட்டத்திற்குள் உள்ள இந்த மூன்று அணைகளாலும் ஏறக்குறைய 8,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கெடிலத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மொத்தம் ஐந்து அணைகளாலும் ஏறக்குறைய 10,000 ஏக்கர் நிலங்கள் பயன் அடைகின்றன. உலக ஆறுகளை நோக்கிக் கெடிலம் ஆற்றால் பயன்பெறும் நிலப்பகுதி அளவில் சிறியதாயினும், அப்பகுதி, ஐரோப்பாவின் மகிழ்விடம் (இன்பபுரி) ஆகிய அளவில் சிறிய சுவிட்சர்லாந்து போன்றதாகும்.

இவ்வணைகளேயன்றி, திருநாவலூர் - சேந்தமங்கலம் பகுதியில் கெடிலத்தில் ஒர் அணை கட்டவேண்டும் என்னும் ஒரு திட்டம் நெடுநாளாய்ப் பேச்சளவில் இருந்து வருவதாகத் தெரிகிறது. இஃது ஒருநாள் நிறைவேறலாம்.

பாசன முறை (ஆறு)

அணையின்மேல் புறத்தில் பெரிய வாய்க்கால் வெட்டப்பட்டிருக்கிறது. அந்த வாய்க்காலின் வழியாகச் சுற்று வட்டாரப் பகுதிகள் பயனுறுகின்றன. பெரிய வாய்க்காலிலிருந்து சிறிய வாய்க்கால்கள், அவற்றிலிருந்து இன்னும் சிறிய கால்வாய்கள், அவற்றிலிருந்து ஒற்றையடிப் பாதை போன்ற சிறுசிறு கால்கள் - இப்படியாகப் பிரிந்து நீர் ஒடுவதால் நிலங்கள் நேரடிப் பயன்பெறுகின்றன. சிறிது மேடான இடங்களில், வாய்க்கால்களிலிருந்து ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சப்படும். பள்ளமான இடங்களில் ஏற்றம் தேவைப்படாமல் சிறுசிறு கால்களின் வாயிலாகத் தானாகவே நீர் பாயும்; ஒருவர் மண்வெட்டியால் மடை மாற்றிவிட்டுக் கொண்டிருப்பார்; அவ்வளவுதான்! இந்தப் பகுதி நிலங்கள் மிகவும் உயர்ந்தனவாக மதிக்கப்படும். மற்றும், அணையில்லாத சில பகுதிகளிலும் ஆற்றிலிருந்து வாய்க்கால் வெட்டி நீர்ப்பாசனம் செய்கின்றனர்.

கொண்டம் போடுதல்

மேடான இடங்களில் வாய்க்கால்களில் ஏற்றம் போட்டு இறைப்பதுதான் வழக்கம். அங்கேயும் சில வேளைகளில், ஏற்றம் இறைக்காமலேயே நீர் பாய்ச்சுவதற்கு ஒரு முறை கையாளப்படுகிறது. அஃதாவது: உழவர்கள் பலர் ஒன்று திரண்டு ஒரு நாள் மாலையில், குறிப்பிட்ட ஒரிடத்தில் வாய்க்காலின் குறுக்கே ‘செயற்கை அணை’ கட்டுவார்கள், அஃதாவது, வாய்க்காலின் குறுக்கே கம்பங்களை நட்டு; கம்பங்களுக்கிடையே குறுக்குக் கழிகளைக் கட்டி அவ்விடத்தில் தழைக்கட்டு, வைக்கோல் கட்டு, மணல் முதலானவற்றைப் போட்டு உயரமாக நிரப்பி வாய்க்காலை அடைப்பார்கள். அந்தச் செயற்கை அணைக்குக் கீழ்ப்புறம் தண்ணிர் போகாமல் மேல்புறமே தேங்கிக் கரைக்கு மேல் வழிந்து நிலத்திற்குப் பாயும். இதற்குக் ‘கொண்டம் போடுதல்’ என்று பெயர் சொல்வார்கள். பெரும்பாலும் ஏற்றம் உள்ள இடங்கட்கு கீழ்பால் கொண்டம் போடுவதால், தேங்குகிற நீர் ஏற்றப் பாதையின் வழியாக வழக்கம் போல் சென்று நிலத்தில் பாயும். ஏற்றம் இறைத்துத் தொல்லைப்படும் உடலுழைப்பினைக் குறைக்கும் மாற்று முயற்சியே இது. இம்முறையில் இரவு முழுவதும் நீர் பாய்ச்சப்படும், பின்னர் வைகறையில் கொண்டத்தை எடுத்து விடுவார்கள். இவ்வாறு கொண்டம் போடுதல் அடிக்கடி நடைபெறாது. எப்போதோ ஒருவேளை உரியவரிடம் ஒப்புதல் பெற்றே செய்யப்படும். மற்ற வேளைகளில் ஏற்றமே பயன்படுத்தப்படும். மிகுந்த மேடான பகுதிகளில் இரட்டை ஏற்றமும் (இரண்டு ஆட்கள் மிதிப்பது), மேடுகுறைவான இடங்களில் ஒற்றை ஏற்றமும் (ஒராள் மிதிப்பது) பயன்படுத்தப்படும்.

பிற பாசனங்கள்

கெடிலக்கரைப் பகுதிகளில் பெரும்பாலும் ஆற்றுப் பாசனமே நடைபெறுகிறது. பெண்ணையாறு பக்கத்தில் இருப்பதால் அந்த ஆற்றுப் பாசனமும் சில இடங்களில் கெடிலக் கரை ஊர்கட்குப் பயன்படுகிறது. ஆற்றுப் பாசனமேயன்றி, சில இடங்களில் சிறுபான்மை ஏரிப்பாசனம், ஊற்றுக் கால்வாய்ப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகியவையும் நடைபெறுகின்றன.

பயிர் வகைகள்

கெடிலக்கரை நாட்டில் நெல், கரும்பு, மணிலா, கம்பு, கேழ்வரகு, எள், உளுந்து, காராமணி, மிளகாய், தென்னை, முந்திரி, மா, பலா, வாழை, வெற்றிலை, பருத்தி, சவுக்கு, ஆமணக்கு, அவுரி, முதலியவை பெரிய அளவிலும் சிறிய அளவிலுமாகப் பயிரிடப்படுகின்றன. மற்றப் பகுதிகளிலுள்ள பல்வேறு காய் கனி கிழங்கு கீரை வகைகளும் இங்கே உண்டு.

இந்தப் பகுதியில் பெரும்பாலும் இருபோகமே உண்டு. முப்போகம் மிகமிகக் குறைவு. அணை உள்ள பகுதிகளில் சில இடங்களில் இரு போகமும் நெல்லும், சில இடங்களில் ஒரு போகம் நெல்லும் - இன்னொரு போகத்தில் ஏதேனும் புன்செய்ப் பயிரும் விளைவிக்கப் படுகின்றன. கரைக்குத் தொலைவான இடங்களில் இரு போகமுமே புன்செய்ப் பயிர்கள் செய்யப்படுகின்றன.

நெல்

நெல் கடலூர் வட்டத்தில் சிலவிடங்களில் இருபோகமும் செய்யப்படுகிறது; மேற்குப் பகுதிகளில் ஒரு போகம் செய்யப் மொத்தத்தில் கெடில நாட்டில் சிறு மணி செங்கற்பட்டு சிறுமணி, பட்டரை சம்பா, கிச்சிலி சம்பா, ஒட்டு கிச்சிலி, குதிரைவால், கம்பன் சம்பா, சீரக சம்பா, சீவன் சம்பா, கோயமுத்துார் சம்பா, வையக் கொண்டான், கல்ச்சர். ஒட்டு கல்ச்சர், சொர்ணவாரி, பூம்பாளை, கார், பூங்கார், வெள்ளைக்கார், கருடன் சம்பா, வாடன் சம்பா, கலிக்கன் சம்பா முதலிய நெல் வகைகள் பல்வேறிடங்களிலும் பயிர் செய்யப்படுகின்றன. இத் துறையில் பாலூர் ஆராய்ச்சிப் பண்ணை உழவர்கட்கு உறுதுணையாயுள்ளது.

கரும்பு

கெடிலக் கரைக்குச் சிறிது தொலைவில் நெல்லிக் குப்பம் என்னும் ஊரில் ஒரு பெரிய கரும்பு ஆலை இருப்பதைக் கொண்டு இந்தப் பகுதியின் கரும்பு விளைச்சலைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை பாரி கம்பெனி நிறுவனத்தது; எட்வர்டு காம்ப்பல் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. அவர் திருவெண்ணெய் நல்லூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலும் ஆலைகள் நிறுவிக் கரும்பு விளைச்சலுக்கு வழி செய்தார். ஆயினும், நெல்லிக்குப்பம் ஆலையொன்றே அழியாமல் பெருவளர்ச்சி பெற்றுப் பேர் சொல்லுகிறது. பல்லாண்டுகட்கு முன் வண்டிப்பாளையம் என்னும் ஊரில் கூட ஒரு சிறு கரும்பு ஆலை இருந்து மறைந்து போயிற்று. கடலூர் நகராட்சியின் வடக்கு எல்லையாகிய வில்வராயநத்தம் என்னும் சிற்றுாரில் பாரத அரசின் கரும்புப் பண்ணை ஒன்று இப்போது செயல்பட்டு வருகிறது. இத்தகைய அமைப்புகள் எல்லாம் கெடிலக்கரையின் கரும்பு விளைச்சலைப் பற்றிச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கரும்பு பயிரிட்டதால் பணக்காரரானவர் பலர் இப்பகுதியில் உளர்.

மணிலாக் கொட்டை

தென்னார்க்காடு மாவட்டத்தை ‘மல்லாகொட்டை ஜில்லா’ என்று கேலி செய்வது வழக்கம். மல்லாகொட்டை என்பது மணிலாக்கொட்டை என்பதன் திரிந்த கொச்சை உருவம். இதனை வேர்க்கடலை, நிலக்கடலை, கடலைக்காய் என்றும் அழைப்பர். மணிலா விளைச்சலில் உலகிலேயே இந்தியாதான் மிக்கது; இந்தியாவில் தமிழகம் மிக்கது: தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டம் மிக்கது. இம் மாவட்டத்தில் ஒரு தோற்றம் நான்கு நூறாயிரம் (4 இலட்சம்) ஏக்கர் நிலத்தில், இரண்டு நூறாயிரம் (2 இலட்சம்) டன் மணிலா விளைகிறது. இங்கே மிகுதியாக விளையும் ஒரு சிறப்போடு நின்று விடவில்லை; இங்கே விளையும் மணிலா ஏனைய இடங்களில் விளைவதனினும் மிக்க தரமும் உடையது. எனவே, மணிலா விளைச்சலில் இம் மாவட்டம் அளவு (Quantity), தரம் (Quality) என்னும் இருவகையாலும் சிறந்தது எனலாம். ‘மணிலாக்கொட்டை மாவட்டம்’ அல்லவா?

பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையரால் தொடங்கப் பெற்ற மணிலாப் பயிர், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று இம் மாவட்டத்தின் செல்வச் செழிப்பிற்கு வழி செய்துள்ளது. இம்மாவட்டத்தில் மணிலா எண்ணெய் ஆலைகள் பல உள்ளன. மணிலா விளைவைப் பெருக்க அரசு நல்ல திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. திண்டிவனம் ஆராய்ச்சிப் பண்ணை இந்தத் துறையில் செய்யும் பணி பாராட்டற்பாலது. பாரத அரசு 25 நூறாயிரம் ரூபாய் செலவில் மணிலா ஆராய்ச்சிப் பண்ணைக்கு ஏற்பாடு செய்துள்ளது. மொத்தத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில் நெற்களஞ்சியமாகிய சிதம்பரம் வட்டம் தவிர மற்ற வட்டங்கள் யாவும் மணிலாப் பயிரால் பெரும் பயன் பெற்று வருகின்றன.

பிற பயிர்கள்

இப் பகுதியில் எள், உளுந்து, காராமணிப் பயறு, கேழ்வரகு முதலியவை தனியே பயிரிடப் படுவதன்றி மணிலாவுடன் ஊடு பயிராகவும் விளைவிக்கப்படுகின்றன. பல இடங்களில் கம்பும் பயிரிடப் படுகிறது. முன்பெல்லாம். கம்பும் கேழ்வரகும் கலந்து ஆக்கிய கூழ்தான் பகல் உணவாக இருந்தது; இரவில்தான் மக்கள் அரிசிச்சோறு உண்டு வந்தனர். இப்போது காலை, நண்பகல், மாலை, இரவு, இவற்றின் இடைவெளிகள் ஆகிய எல்லா வேளைகளிலும் நாகரிக வளர்ச்சி என்னும் பேரால் அனைவரும் அரிசி உணவையே நாடுகின்றனர்.

கெடிலக்கரைப் பகுதியில் தென்னைக்கு வண்டிப் பாளையம் வட்டாரமும், பலாவுக்குப் பண்ணுருட்டி வட்டாரமும், முந்திரிக்குக் கேப்பர் மலை வட்டாரமும் பண்ணுருட்டி வட்டாரமும், வெற்றிலைக்கும் கரும்புக்கும் நெல்லிக்குப்பம் வட்டாரமும், மணிலாக் கொட்டைக்கு எல்லா வட்டாரங்களும் பேர் பெற்றவையாய்த் திகழ்கின்றன.