கேரக்டர்/‘ஜம்பம்’ சாரதாம்பாள்
‘ஜம்பம்’ சாரதாம்பாள்
"சங்கரா!"—சாரதாம்பாளின் கம்பீரமான குரல் கேட்டுச் சமையல் கட்டிலிருந்து சங்கரன் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸுடன் ஓடிவந்தான்.
"இந்த டிரைவர் ஸ்டுடிபேகரை எடுத்துண்டு எங்கடா தொலைஞ்சான்?...'ரோமியோ'வை எங்கே காணோம்? ரெண்டு நாளா அதுக்கு உடம்பே சரியாயில்லையே?... மணி எட்டாகப் போகிறதே? சாமளா இன்னும் மாடியிலே தூங்கிண்டுதான் இருக்காளா? டான்ஸ் வாத்தியார் வந்து எத்தனை நாழியா காத்திண்டிருப்பார்? அவளுக்கு 'பெட் காப்பி' கொடுத்து எழுந்திருக்கச் சொல்லுடா. டெலிபோன் மணி அடிக்கிறது பாரு; அப்படியே யாருன்னு எடுத்துக் கேட்டுட்டுப் போ!"
"வெடர்னரி டாக்டர் வீட்டிலேருந்து டிரைவர்தான் பேசறாம்மா! 'ரோமியோ'வை டாக்டர் கிட்டே காட்டினானாம் அதுக்கு 'த்ரோட்லே ஏதோ டிரபிளாம். நாலு நாளைக்கு அது 'ரெஸ்ட்' எடுத்துக்கணுமாம். அதிகமாகக் குரைக்கக்கூடாதாம்!" என்றான் சங்கரன்.
"உடம்பு சரியில்லாம இருக்கிறபோது பாவம், அதை ஏண்டா டாக்டர் வீட்டுக்கு அழைச்சுண்டு போனான்? போன் பண்ணினா டாக்டர் இங்கே வந்துட்டுப் போறார். சரி, அவனைச் சீக்கிரம் வரச்சொல்லு. 'ஷாப்பிங்' போகணும்!..."
சாரதாம்பாள் மூச்சு விடாமல் பேசிவிட்டு, சங்கரனிடமிருந்து சாத்துக்குடி ஜூஸை வாங்கி நாசூக்காக அருந்தினாள்.
பிறகு இரண்டு மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். அப்புறம் சாவகாசமாக ஒரு சோபாவில் போய் உட்கார்ந்துகொண்டு, தன்னுடைய இடது கை வைர வளையல்களை ஒரு தடவை பட்டுப் புடைவையின் தலைப்பால் துடைத்துவிட்டுக்கொண்டே, விரல்களிலுள்ள மோதிரங்களைத் திருப்பித் திருப்பி அழகு பார்த்துக் கொண்டாள்.
வைரத்தாலும் தங்கத்தாலும் இழைக்கப்பட்ட இரட்டை நாடி சரீரம். காஞ்சீபுரம் பட்டுப் புடைவை. பளபளக்கும் மேனி. பிரபல அட்வகேட்டின் சம்சாரமல்லவா? பேச்செல்லாம் கொஞ்சம் 'தோரணை'யாகவேதான் இருக்கும்.
தான் அந்த வீட்டில் கால் எடுத்து வைத்த பிறகுதான் தன் கணவருக்கு அதிருஷ்டம் ஏற்பட்டதென்பது அவள் நினைப்பு. அந்தப் பெருமை அவள் பேச்சில் அடிக்கடி பல்லவி போல் வந்துகொண்டேயிருக்கும். வெளியிலே போனால் தன் 'ஜம்பம்'தான். யாரைப் பார்த்தாலும் தன் குழந்தைகளின் பிரதாபந்தான். சங்கீதக் கச்சேரிக்குப் போனால் அமெரிக்காவில் இருக்கும் தன் சின்னப்பிள்ளையைப் பற்றிப் பக்கத்திலிருக்கும் அம்மாளிடம் 'போர்' அடிப்பாள். தன் பெண்ணை மணந்துகொள்ள ஐ. ஏ. எஸ். பையன்கள் 'க்யூ'வில் நிற்பதாகச் சொல்லுவாள்.
"வரச் சொன்னீங்களாம்மா?" என்று கேட்டுக்கொண்டே வாசலில் வந்து நின்றான் ஆசாரி.
"ஆமாம்; இந்தக் காசுமாலையை அழிச்சு, கல் வெச்சு ஓட்டியாணமா செஞ்சுக் கொடுத்துடு, சாமளா டான்ஸு அரங்கேற்றத்துக்கு உதவும். அதுக்குத்தான் கூப்பிட்டேன். அந்த ஜட்ஜ் வீட்டுப் பெண்ணுக்கு செஞ்சிருக்கே பாரு ஒரு ஒட்டியாணம், அதேமாதிரி மாடல்லே செய்யணும். தெரிஞ்சுதா...?"
இதற்குள் அல்சேஷனுடன் காரில் வந்து சேர்ந்தான் டிரைவர்."டிரைவர்? நாளைக்குக் கல்கத்தா போகணும். ஸ்டேஷனுக்குப் போய் மெயில்லே மூணு பஸ்ட் கிளாஸ் ஸீட் ரிசர்ல் பண்ணிண்டு வா..." இதற்குள் சாமளா ஓடிவந்து, "அம்மா, அம்மா, எனக்கு டென் ருபீஸ் வேணும், கான்வெண்ட்லே 'மதர்ஸ் டே'யாம்" என்றாள்.
"சரி,சங்கரன்கிட்டே வாங்கிண்டு போ! நாளைக்கு கல்கத்தா போகணும். ஸ்கூல்லே லீவு போட்டுட்டு வாடி!..."
அட்வகேட் கோர்ட்டுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார். "நாளைக்குக் கல்கத்தா போகணும். டிக்கட் புக் பண்ணியாச்சு. அப்புறம் கேஸ் கீஸ்னு சொல்லாதீங்கோ..."
கல்கத்தாவில் அவள் தங்கையின் பெண்ணுக்குக் கலியாணம். கலியாணத்தில் எல்லோரும் சாரதாம்பாளையே வந்துவந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். "என்ன மாமி! சௌக்கியமா?" என்று கேட்டவர்களுக்கெல்லாம், “எனக்கு இந்தக் கல்கத்தா க்ளைமேட்டே ஒத்துக்கலை. கலியாணம் முடிஞ்சதும் மெட்ராஸுக்குப் போகணும்" என்று பதில் கூறிக் கொண்டிருந்தாள். தெரிந்தவர்களையெல்லாம் அருகில் அழைத்து ஒவ்வொருவரிடமும் தன்னுடைய பெருமையைச் சொல்லிக்கொண் டிருந்தாள். சாமளாவைக் காட்டி, "இவள் உங்க பெண்ணா?” என்று யாராவது விசாரித்தால், "ஆமாம்; டான்ஸ் கத்துண்டிருக்கா. கான்வெண்டிலே வாசிக்கிறா. அவளுக்கு இப்பத்தான் 'டான்ஸில்' ஆபரேஷன் ஆச்சு" என்பாள்.
"நீங்க காப்பி சாப்பிடலையா?" என்று கேட்டால். "நான் காப்பியே குடிக்கிறதில்லை. எனக்கு ஷுகர் இருக்காம் சாப்பிடக் கூடாதுன்னுட்டார் டாக்டர். அடிக்கடி பிளட் பிரஷர் வேறே அதிகமாயிடறது. வெயிலே தாங்க மாட்டேங்கறது. போன வருஷம் ஊட்டிக்குப் போயிருந்தேன். அதுக்கு முன் வருஷம் கோடைக்கானல். இந்த வருஷம் சிம்லாவுக்குப் போகணும்னு சொல்லிண்டிருக்கேன். அவரானால் டார்ஜீலிங் போகலாங்கறார்."
"யாருடீ நீ? சீதாவின் பெண்ணா? அடியம்மா! பெரியவளா வளந்துட்டியே, எங்கே? துர்க்காபூர்லயா இருக்கே? உன் ஹஸ்பெண்டுக்கு என்னடி வேலை? அவனை அழைச்சுண்டு வரது தானேடி? மெட்ராஸுக்கு வரப்போ லெட்டர் போடு. ஸ்டேஷனுக்குக் கார் அனுப்பறேன்...இந்தப் பெண் யார் தெரியுமோன்னோ? என் அத்தானுக்கு அம்மாஞ்சியோட சித்தப்பா பெண், பாவம்; இதுக்குக் கலியாணம் பண்ண முடியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். நான்தான் வரன் பார்த்துக் கொடுத்தேன். கலியாணத்தையே நான்தான் செய்து வைத்தேன். தூரத்து உறவுதான். ஆனாலும் விட்டுட முடியறதா? ஏண்டிம்மா, செளக்கியமா இருக்கயா?"
"ஏன் மாமி, எப்ப மெட்ராஸுக்கு போகப் போறேள்?" என்று கேட்டாள் அந்தப் பெண்.
"நாளைக்கே போகவேண்டியதுதான். நாயைத் தனியா விட்டுட்டு வந்துட்டேன். அதுக்கு உடம்பு எப்படி இருக்கோன்னு ஒரே கவலையாயிருக்கு. 'பிளேன்' லேயே போயிடலாம்னு பார்த்தா, டாக்டர் என்னை பிளேன் டிராவல் பண்ணக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருக்கார்... எனக்கு பிளட் பிரஷரோன்னோ...!"