கேரக்டர்/‘பப்ளிசிடி’ பங்காருசாமி
‘பப்ளிசிடி’ பங்காருசாமி
நிலைக்கண்ணாடிமுன் நின்றபடி தம்மை அழகு பார்த்துக் கொண்டிருந்தார் பங்காருசாமி. தலைப்பாகையிலும், அங்கவஸ்திரத்திலும் பளபளக்கும் சரிகை, 'பங்காருசாமி', 'பங்காருசாமி' என்று அங்கவஸ்திரத்தின் கரை முழுவதும் அவருடைய நாமதேயம் பளபளத்துக்கொண்டிருந்தது. இடது கையில் தங்கப் பட்டைக் கடியாரம். வாய் நிறையத் தங்கப் பற்கள். விரல்களிலே வைர மோதிரங்கள்.
"ஐயா, உங்க போட்டோவும் பெயரும் பேப்பர்லே வந்திருக்குது" என்று ஒரு பத்திரிகையை நீட்டினார் கார் டிரைவர்.
பங்காருசாமி தம்முடைய தங்கப் பற்கள் தெரிய, அந்தப் பத்திரிகையை ஆவலோடு வாங்கிப் பார்த்தார். அவருடைய 'போட்டோ'வும் பெயரும் அந்தப் பத்திரிகையில் வெளியாகி யிருப்பதைக் கண்டபோது அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. அயல் நாட்டுக் கலைஞர் ஒருவர் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது பங்காருசாமி அந்தக் கலைஞருக்கு மாலை போடுகிற போட்டோ அது. பிரபலஸ்தர்கள், சினிமா நட்சத்திரங்கள் இவர்களில் யாராவது வெளிநாட்டுக்குப்போனாலும், வெளி நாட்டிலிருந்து வந்தாலும் அவர்களை வரவேற்கவோ வழி அனுப்பவோ பங்காருசாமிதான் முதலில் ஆஜராவார். அவர்தான் மாலை போடுவார். அவர்தான் கை குலுக்குவார். மறுநாள் தாம் மாலை போட்ட செய்தி பத்திரிகையில்வந்திருக்கிறதா என்று எதிர்பார்ப்பார். அச்சில் தம்முடைய பெயரைப் பார்ப்பதில் அவருக்கு அத்தனை ஆசை! அவருடைய கலியாணத்தின்போது முகூர்த்தப் பத்திரிகையில் அச்சடிக்கப்பட்டிருந்த தம்முடைய பெயரைப் பலமுறை பார்த்துப் பார்த்து மகிழ்ந்தவர் ஆயிற்றே அவர்?
ஒரு சங்கத்தின் ஆண்டு விழாவுக்கு மந்திரி ஒருவர் விஜயம் செய்தபோது, பங்காருசாமி ஆள்உயர மலர் மாலையை மந்திரியின் கழுத்தில் சூட்டினார். மந்திரியுடன் கை குலுக்கினார். ஆனால் குலுக்கிய கையை ஐந்து நிமிஷம் வரை விடாமல் பிடித்தபடியே போட்டோகிராபருக்குப் 'போஸ்' கொடுத்துக்கொண்டிருந்தார்! அந்த நேரத்தில் மந்திரி பாடு ரொம்பவும் அவஸ்தையாகப் போய்விட்டது.
ஊரில் யார் எந்தக் காரியம் செய்தாலும் பங்காருசாமிக்கு தூக்கம் வராது. தாமும் அதே காரியத்தைச் செய்து முடித்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பார். அதற்காக எவ்வளவு பணம் செலவானாலும் அதைப்பற்றி அவருக்குக் கவலை கிடையாது. அவருடைய பெயரும் போட்டோவும் பொது மக்கள் கண்களில் அடிக்கடி பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் அவருடைய ஆசை.
கலியாண ஊர்வலம், சுவாமி புறப்பாடு என்றால் பங்காருசாமிதான் ஊர்வலத்துக்கு முன்னால் வருவார். இரு பக்கங்களிலும் காஸ் லைட்டுகள் ஒளி வீச, அந்த ஒளியில் அவருடைய வைர மோதிரங்கள் பளபளக்க நடந்து வருவார் அவர்.
வடக்கே யாரோ ஒரு பைராகிச் சாமியார் சகல வியாதிகளையும் குணப்படுத்துவதாகக் கேள்விப்பட்ட பங்காருசாமி, அந்தச் சாமியாரைத் தம்முடைய பங்களாவிலேயே அழைத்து வந்து வைத்துக்கொண்டார். "பங்காருசாமி பங்களாவில் பைராகிச் சாமியார் தங்கியிருக்கிறாராம்” என்று நாலுபேர் அவருடைய பெயரைச் சொல்லுவார்கள் அல்லவா?
ஒரு சமயம் அவர் தேர்தலுக்கு நின்றார். பதினாயிரக் கணக்கில் பணத்தை அள்ளி வீசினார். தம் பெயரையும் போட்டோவையும் பிரசுரித்துப் பிரபலப்படுத்தினார். தேர்தலில் தோல்வி அடைந்தபோது அவர் சிறிதும் வருத்தப்படவில்லை. தம்முடைய போட்டோவும், பெயரும் பத்திரிகைகளில் வெளியிடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்ததே, அது போதாதா?
ஒரு சமயம், ரயிலில் முதல் வகுப்பு வண்டியில் அவருக்கு ஒரு சீட் ரிசர்வ் செய்யப்பட்டது. கம்பார்ட்மெண்டுக்கு வெளியில் ஒட்டப்பட்டிருந்த பெயர் ஜாபிதாவில் இவருடைய பெயரும் டைப் செய்யப்பட்டிருந்தது. பங்காருசாமி ரயில் ஏறும்போது ஞாபகமாகத் தம்முடைய பெயர் ஜாபிதாவில் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார். பெயர் இருந்தது; ஆனால் பங்காருசாமி என்பதற்குப் பதிலாகக் கங்காருசாமி என்று தப்பாக டைப் அடிக்கப்பட்டிருந்தது. உடனே தம்முடைய பெயர் தப்பாக இருப்பதை ரயில்வே அதிகாரிக்குச் சுட்டிக் காட்டி அதைத் திருத்தி எழுதிய பிறகுதான் அவர் ரயிலுக்குள் ஏறிச் சென்றார்.
போட்டி அபேட்சகர் பஞ்சாட்சரம் ஒரு சமயம் தம்முடைய பேரக் குழந்தையை முதல் முதலாகப் பள்ளிக்கு அனுப்பியபோது, குழந்தையைக் குதிரை மீது வைத்து, பாண்டு வாத்தியம், நாதஸ்வரம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்றார். அந்த ஊர்வலம் பங்காருசாமியின் வீதி வழியாகப் போயிற்று. அவ்வளவுதான்; அந்தக் காட்சியைக் கண்டதும் பங்காருசாமிக்கு எங்கிருந்தோ ஒரு வேகம் பிறந்தது.
தமக்கு ஒரு பிள்ளைகூட இல்லையே என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை. தூரத்து உறவினர் ஒருவருடைய குழந்தையை அழைத்துவந்து காது குத்து விழா நடத்தினார். அவர் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் சொல்லவேண்டுமா, தடபுடலுக்கு? வாணவேடிக்கை, பாண்டு வாத்தியம், நாதஸ்வர இசை எல்லாம் சக்கைப்போடு போட்டன. குதிரைக்குப் பதிலாக யானையையே ஊர்வலமாக விட்டார்.
யானை ஊர்வலம் என்றால் கூட்டத்துக்குக் கேட்க வேண்டுமா? அக்கம்பக்கத்துக் குடிசையில் வாழ்ந்த குழந்தைகளெல்லாம் யானையைச் சுற்றி வட்டமிட்டன. பங்காருசாமி மிக்க பெருமையோடு யானையின் முன்னால் நடந்து செல்ல ஊர்வலம் நகர்ந்துகொண்டிருந்தது.
திடீரென்று யானை மீதிருந்த குழந்தை பயந்துபோய்க் கீழே இறங்கவேண்டுமென்று அழுது பிடிவாதம் பிடித்தது. பங்காருசாமி கவலைப்படவில்லை. போட்டிக்கு ஊர்வலம் விட்டாகவேண்டும். அவ்வளவுதானே அவருடைய நோக்கம்? குழந்தை யாருடையதாயிருந்தால் என்ன? சுற்றி நின்ற குடிசை வாழ் குழந்தைகளில் ஒன்றைப் பிடித்து யானைமீது ஏற்றிவிட்டார். அந்தக் குழத்தை ரொம்பக் குஷியாக 'ஜம்' மென்று யானைமீது ஏறி உட்கார்ந்து சவாரி செய்தது.
யாரோ ஒரு சினிமா நட்சத்திரம் வீடு கட்டிப் புது மனை புகுவிழா நடத்தியதாகப் பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தி பங்காருசாமியின் கண்ணில் பட்டுவிட்டது.
புதிதாக வீடு கட்டுவதென்றால் நாட்கள் ஆகுமே. எனவே, உடனே தாமும் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி விழா நடத்தினார். விழா முடிந்தவுடன் வீட்டை விற்று விட்டார். வீடு வாங்கியது விழா நடத்துவதற்குத்தானே? தங்கப் பற்கள் கட்டிக்கொள்வதற்காகத் தம்முடைய அசல் பற்களையே எடுத்தவருக்கு இது ஒரு பிரமாதமா என்ன?