கேரக்டர்/‘வீட்டுக்கார’ வெங்கடாசலம்
‘வீட்டுக்கார’ வெங்கடாசலம்
"என்னங்க, ஆறுமுகம் பிள்ளையா? வாங்க வாங்க, எங்கே இப்படி இவ்வளவோ தூரம்? ஓகோ! புரசவாக்கம் வீட்டு விஷயமா வத்தீங்களா? உங்களுக்குத் தெரிஞ்சவருக்கு யாருக்கோ வேணும்னு சொன்னீங்களே. நல்லது; அவரே எடுத்துக்கட்டும். கண்டிஷன்லாம் தெரியுமில்லே? மூணு மாசம் அட்வான்ஸ், வாடகை எழுபத்தஞ்சு ரூபா. இரண்டாந்தேதிக்குள்ளே வாடகை கரெக்டா வந்துடணும் ரசீது கொடுக்க மாட்டேன். எலெக்ட்ரிக்பில் தனி. செவத்துலே ஆணி அடிக்கக் கூடாது. கதவைப் 'படால் படால்'னு சாத்தக் கூடாது. தோட்டத்துலே செடி செட்டு போடக்கூடாது.
"என்னடா வெங்கடாசலம் இவ்வளவு கண்டிப்பா பேசறானே'ன்னு நினைக்கலாம். இந்த வீட்டுச் சமாசாரத்திலே அவ்வளவு கஷ்டப்பட்டுப் போயிருக்கேங்க நானு. அப்புறம் மனஸ்தாபம் ஒதவாது பாருங்க.
"வெங்கடாசலமா! ஐபோ! அவன் பெரிய பேராசைக்காரன், சுத்தக் கருமி, அப்படி இப்படிம்பாங்க. சொல்றவங்களுக்கென்னாங்க? நாள் அநாவசியமாகக் காலணா
செலவழிக்கவும் மாட்டேன். இன்னொருத்தர் சொத்துக்கு ஆசைப்படவும் மாட்டேன். எனக்கு எதுக்குங்க? என் சம்பாதனை எனக்கிருக்குது. செளகார்பேட்டையிலே மூணு வீடு, திருவல்லிக்கேணியிலே இரண்டு வீடு. புரசைவாக்கத்திலே ஒரு வீடுஇருக்குது. எல்லாத்திலேயும் வாடகை வருது. பென்ஷன் வேறே வருது.
"இதுவரைக்கும் எங்க வீட்டுக்குக் குடிவந்தவங்க எல்லோரும் சொந்த வீடு கட்டிகிட்டுதாங்க போயிருக்காங்க. கடைசியா வந்த அந்த வக்கீல் ஒருத்தர்தாங்க வாடகையே குடுக்காமே என்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டாரு. வாடகை கேக்கப்போனா 'தோட்டத்துக் கதவு சரியில்லே. மழைநாள்ளே தாப்பாளே போடமுடியலே வெய்யநாள்ளே காத்தே இல்லே குழாயிலே தண்ணியே வல்லே. அப்படி'ன்னு சும்மா ஏதாச்சும் குத்தம் சொல்லிக்கிட்டேயிருந்தாரு. அவருக்கு, அஞ்சாறு பசங்க. பசங்களா அதுங்க? வால் ஒண்ணுதான் பாக்கி அதுங்களுக்கு. வீட்டுக் கதவுகளை 'நாசனம்' பண்ணி வெச்சுட் டுதுங்க. செத்தெல்லாம் ஆணியாலே குத்தி குத்திப் பொளிஞ்சு வெச்சிட்டுதுங்க. எங்க கண்டாலும் மூட்டைப் பூச்சியை நசுக்கி, சுண்ணாம்படிச்ச செவுத்தெல்லாம் பாழாக்கிட்டுதுங்க. கதவெல்லாம் படால் படால்னு அடிச்சு உடைச்சுட்டுதுங்க. கதவுன்னா எப்படிக் கதவுங்கறீங்க? இப்ப அந்த மாதிரி கதவு போடணும்னா நானூறு ஐந்நூறு ஆவுங்க. எல்லாம் ரங்கூன் டீக்கு. இப்ப என்ன வெலை விக்குது தெரியுமா? குழி அம்பது அறுவதுக்குக் குறைவில்லே! இதையெல்லாம் பாக்கறப்போ எனக்கு வயிறு எரிஞ்சுப் போச்சுங்க.
"என்னங்க? நீங்க சொல்லுங்க; குழாயிலே தண்ணி வல்லேன்னா என்னங்க? 'கிணறு' இருக்குது. தண்ணி கல்கண்டாட்டும் இருக்கும். அதுலே தண்ணி எடுத்துக்கோன்னேன். என்ன மாதிரி கிணறு தெரியுங்களா அது? குளமாட்டம் இருக்குங்க. ஒரு காலத்திலே அக்கம்பக்கத்து ஜனமெல்லாம் வந்து சேந்திக்கினு போவாங்க.
"கிணத்துலே சேந்த முடியாது. குழா ஹைட்லே இருக்குது; அதனாலே கீழே இறக்கி வைக்கணும்னான்.
"சரி; நீங்களே செலவு செஞ்சு குழாவைக் கீழே இறக்கிக்குங்க. ஆறசெலவை வாடகையிலே கழிச்சுக்கோன்"னேன்.
"அப்புறம், ஸீலிங் ஃபேன் போட்டுக்குடுங்க. காத்தே வரவேன்னு வாதாடினான்" வக்கீல் பாருங்க!
"வெய்ய நாள்லே, பீச்சிலேயே காத்து வல்லயே, அதுக்கு என்ன செய்றதுன்'னேன். அதெல்லாம் முடியாதுன்னான்.
"சரி; ஸீலிங்பேனும் வாங்கிப் போட்டுக்க; வாடகையிலே கழிச்சுக்கோ'ன்னேன், மழை நாள் வந்தது. தாப்பாள் சரியில்லேன்னான். மழை பேஞ்சா இம்பீரியல் பாங்க் தாப்பாக்கூடத் தான் பிஞ்சுக்குது. வேணும்னா புதுத் தாப்பா ஒண்ணு வாங்கி போட்டுக்க! வாடகையிலே கழிச்சுக்கோன்னேன். அப்புறம் சமையல் ரூம்லே புகைபோக்கி இல்லே. வெச்சிக்குடுன்னான். புகைபோக்கி வைக்கறதுன்னா சும்மாவா? அம்பது, நூறு யாரு கைவுட்டு வைக்கறது?
- புகை ஜன்னல் வழியாப் போயிடும். புகைபோக்கி வேணாம்னேன். என்னங்க நான் சொல்றது? வேறே வழியில்லேன்னா புகை, ஜன்னல் வழியாப் போய்த்தானே ஆவணும்? அதுவும் முடியாதுன்னான். சரி; நீயே புகைபோக்கி ஒண்ணு கட்டிக்க. ஆற செலவை வாடகையிலே புடிச்சுக்கோன்னேன்.
"கடைசிலே என்ன பண்ணான் தெரியுங்களா? வாடகையும் குடுக்காமெ, நோட்டீசும் குடுக்காமெ, வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டான். அது மாத்திரமா? கார்ப்பரேஷன் லேருந்து வீட்டு வரிகாரன் வந்தப்போ, 'வாடகை நூறுரூபாய் கொடுக்கிறேன். வீட்டுக்காரர் ரசீது கொடுக்கறதில்லே'ன்னு வேறே சொல்லிட்டுப் போயிட்டான். அதைக் கேட்டுக்கிட்டு கார்ப்பரேஷன்காரன் வீட்டு வரியை ஒசத்திட்டான். என்னங்க செய்யறது? இந்த வீடுங்களை வெச்சுக்கிட்டு ரொம்ப பேஜாரா இருக்குதுங்க. அரை வட்டிகூடக் கட்டலீங்க.
"அந்தப் புரசவாக்கம் வீடு என்னமாதிரி வீடு தெரியுங்களா? வெய்ய நாள்ளே, வீட்டுக்குள்ளே உட்கார்ந்துட்டா சும்மா ஊட்டி மாதிரி ஜிலு ஜிலுன்னு இருக்குங்க.
"காலையிலே கிணத்து ஜலத்திலே நாலு வாளியைத் தூக்கித் தலைமேலே ஊத்திக்கிட்டு உட்கார்ந்துட்டாப் போதும் காத்துபாட்டுக்கு ஜிலுஜிலுன்னு வீசிக்கிட்டிருக்கும்.
"என்னங்க, அந்த வக்கீல் மாதிரி ஆசாமிங்களா ரெகமன்ட் பண்ணிடாதீங்க.அப்புறம் அவஸ்தை! சுண்டிஷன்லாம் ஞாபகம் இருக்குதுங்களா? அட்வான்ஸ் மூணு மாசம். வாடகை எழுபத்தஞ்சு ரூபா. ரசீது கிடையாது. எலெக்ட்ரிக் பில் தனி. கார்ப்பரேஷன்காரன் வந்தால் வாடகை நாற்பதுன்னு சொல்லணும். கதவைப் படால்னு அடிச்சுச் சாத்தக் கூடாது. ரங்கூன் டீக்; வெலை ஜாஸ்தி, செவத்திலே ஆணி அடிக்கக்கூடாது. மூட்டைப் பூச்சியை நசுக்கக்கூடாது. தோட்டத்திலே கீரை கொத்தமல்லி பயிரிடக்கூடாது. அந்த வேருங்க அஸ்திவாரத்துலே போச்சுன்னா கட்டடம் 'கிராக்' விட்டுப்போவும். குழாயிலே தண்ணிவல்லேன்னா கெணத்துலே தான் சேத்திக்கணும். தண்ணி கல்கண்டு மாதிரி இருக்கும். ஆமாம்; எல்லாத்தையும் முன்னாடியே சொல்லிட்டேன். முக்கியமா ரெண்டாந் தேதிக்குள்ளே வாடகை கரெட்டா வந்துடணுங்க!"