கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு

15. ஆட்சியாளர் மனப்போக்கு
(கடிதம் 15, காஞ்சி—27-12-64)

தம்பி!

25—4—64

இன்று மாலை, துளசிங்கம், கிருஷ்ணன் உள்ளிட்ட 15 தோழர்கள் 'ஜாமீனில்' வெளியே சென்றனர். என்னைக் காண ராணி, பரிமளம், சரோஜா மூவரும் வந்திருந்தனர். திருவண்ணாமலை சண்முகம் இல்லத்தில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றதாகவும், மணமக்களை வாழ்த்திப் பேசியதாகவும் பரிமளம் சொல்லக் கேட்டு ஆச்சரியமடைந்தேன்; ஏனெனில் கூச்சம் காரணமாக, பரிமளம் பேசுவது இல்லை, மாணவர் கூட்டங்களிலேகூட. என்றாலும், இம்முறை இரண்டொரு விநாடிகள் பேசியதாகக் கூறினான். 'காஞ்சிபுரத்திலிருந்து பரிமளத்துடன் திருவண்ணாமலை திருமணத்துக்கு, ராஜகோபால் சென்று வந்ததாகவும் அறிந்துகொண்டேன்.

பரிமளம்—இளங்கோவன்—கௌதமன்—பாபு இவர்களில் பாபு, கடைசிப் பையன்—சிறுவன்—இவர்களில், அரசியல் ஈடுபாடு, கழகத் தொடர்பு யாருக்கு அதிகம் என்று நண்பர்கள் கேட்டார்கள். கௌதமன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான்; எனவே, அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் அரசியல் கூட்டங்களுக்குக் குறிப்பாகக் கழகக் கூட்டங்களுக்குச் செல்லுவான், பத்திரிகைகளும் படிப்பதுண்டு; சிறுவனாக இருந்த பொழுது, நாவலர் நெடுஞ்செழியன் பேசுவதுபோலவே பேசிக்காட்டி மகிழ்விப்பான். ஆனால், அவன் அரசியலில் ஈடுபடக் கூடியவனாக எனக்குத் தெரியவில்லை. பரிமளம் அரசியல் பிரச்சினைகளையும், குறிப்பாகக் கழகப் பிரச்சினைகளை மிக நல்லமுறையில், அறிந்து வைத்திருக்கிறான். ஆனால், மருத்துவ துறையில் ஈடுபடத் தன்னைத் தயாரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அவனும் அரசியலில் ஈடுபட இயலாது என்பது தெரிகிறது. இளங்கோவன் அச்சகம் நடத்துவது, புத்தகம் வெளியிடுவது, பத்திரிகை நடத்துவது ஆகியவற்றில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்திருக்கிறான். இந்தத் துறையில், பரிமளம் அவனுக்குப் பெருந்துணையாக இருக்க முடியும். 'திராவிட நாடு' இதழ் நடத்த இயலாமல் நிறுத்தப்பட்டுப் போய் விட்டது; நின்று அதிக நாள் ஆகிவிட்டதால், அதற்கான சர்க்கார் அனுமதியும் நீக்கப்பட்டுவிட்டது; எனவே மீண்டும் வெளிவர இயலாத நிலை. இந்நிலையில் அல்லி அச்சகம் என்ற அமைப்பை நடத்தவும், காஞ்சி என்ற வார இதழ் வெளியிடவும் இளங்கோவன் முனைந்திருக்கிறான். 'காஞ்சி' இதழில்தான், இனி நான், தம்பிக்கு கடிதம், ஊரார் உரையாடல், அந்திக்கலம்பகம் போன்ற பகுதிகளை வெளியிடவேண்டி ஏற்படும் என்று நினைக்கிறேன் என்று விவரம் கூறினேன். 'காஞ்சி' என்பது ஊரின் பெயர்; அப்படித்தானே என்று நண்பர்கள் கேட்டார்கள். ஊரின் பெயர் மட்டுமல்ல, அது ஒருவிதமான உள்ளப்பாங்கையும், முறையையும் கூடக் குறிக்கும் சொல் என்று கூறினேன். காஞ்சி எனும் சொல்பற்றிய விளக்கத்தை அன்பழகன் எடுத்துக் கூறினார்.

இன்றிரவு, தி. மு. க. மாநாட்டு முகப்பு வாயில் ஓவியம் ஒன்று வரைந்தேன்.

ஒரு வேலைநிறுத்தத்தைப் பின்னணியாகக் கொண்ட 'அல்லும் பகலும்' என்ற ஆங்கிலக் கதைப் புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். நீதி கேட்கும் தொழிலாளர்களைப் பொதுஉடைமை வாதிகள், பலாத்காரவாதிகள் என்று குற்றம்சாட்டி அடித்து நொறுக்குவதும், சுட்டுத் தள்ளுவதுமான கொடுமைகளைச் செய்யும் ஆட்சிமுறையைக் கண்டித்து எழுதப்பட்டுள்ள புத்தகம். எளிய நடையில், ஆனால் உள்ளது உள்ளபடி தெரியத்தக்க முறையில், எழுதப்பட்டிருக்கிறது.

26—4—64

குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் இல்லை. எல்லாத் தோழர்களும் ஏதேனும் படித்தபடி இருக்கிறார்கள்.

இரண்டு நாட்களாக மதியழகனுக்கு உடல்நலமில்லை; காலில் பாதத்தருகே வலி; இலேசாக எலும்பு முறிவு, கீறவளவுக்காகிலும் இருக்குமோ என்று எனக்கு சந்தேகம். இன்று இங்குவந்த டாக்டரிடம் எக்ஸ்ரே எடுக்க, மருத்துவ மனைக்கு அனுப்பலாமே என்று யோசனை கூறினேன். செய்யலாம் என்றார். ஆனால் பிறகு பெரிய டாக்டர் இது தேவை இல்லை என்று கூறிவிட்டதாக அறிந்து கொண்டேன்.

வெப்பம் அதிகமாகிக்கொண்டு வருவதாலும், இரவு நேரத்தில் எங்களைப் போட்டு அடைத்து வைக்கும் கொட்டடிக்குள் காற்றுப் புகுவதில்லை என்பதாலும், எல்லோருக்குமே ஒரு விதமான அயர்வு ஏற்பட்டுவிட்டிருக்கிறது.

அன்பழகன், என்னைப் போலப் படம் போடத் தொடங்கிவிட்டார். மணிக்கணக்கிலே அதிலே ஈடுபட்டு விடுகிறார். ஓவியங்கள் எப்படி இருந்தபோதிலும், எங்கள் மூவருடைய உடல், பலவண்ணக் கலவையாகி விடுகிறது. காட்டுக்காட்சி ஒன்று வரையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்—ஓரளவுக்குத் தயாராகிவிட்டிருக்கிறது. அடர்ந்த காடு—மலைகள்—ஒருபுறம் வேங்கை மற்றோர்புறம் யானை. யானையைவிட, வேங்கை பெரிய அளவாக இருப்பதாகச் சுந்தரம் கேலி பேசினார்- தம்பி! உனக்குப் பதினாறு அடி வேங்கையைப்பற்றித் தெரியாது! அது இது என்று கூறிச் சமாளித்துக்கொண்டேன். எப்போதுமே எனக்கு ஓவியம் என்றால் மிகுந்த விருப்பம். நமது தோழர்களில் பலருக்கு வீண்செலவு என்று தோன்றினாலும்கூட, ஒவ்வொரு மாநாட்டிலும் ஓவியக்காட்சி நடத்தச் சொல்லி வற்புறுத்துவதும், இந்த விருப்பம் காரணமாகத்தான். நடுத்தர நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் ஓவியக்காட்சி மூலம் நல்லறிவு பரப்பும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆவல். ஒலியக் கண்காட்சி, நாடகம் எனும் இந்த இரண்டும் ஒப்பற்ற பலனளிக்கத் தக்க முறைகள், என்பதில் அனேகமாக ஒருவருக்கும் சந்தேகம் எழாது என்று கருதுகிறேன்.

27—4—64

இன்று காலையில், சிறைத் துணை மேலதிகாரி, பார்த்தசாரதியை அழைத்துவரச் செய்து, இனி காலை 7-30 மணியிலிருந்து மாலை 4-30 மணிவரையில் சிறை உடையில்தான் இருக்கவேண்டும் என்று கூறி அனுப்பினார்—கண்டிப்புடன். காரணம், இங்கு சில தோழர்கள் காலையில் சிறை உடை அணியாமல், கீழே நின்று பேசிக்கொண்டிருந்தார்களாம். அதை அதிகாரி பார்த்துவிட்டிருக்கிறார். எனவே கண்டிப்பான உத்திரவு அனுப்பிவைத்தார்.

சிறையில் ஏற்பட்டுவிடும் எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்கும், சிறை அதிகாரிகளின் பேரில் வருத்தப்பட்டுக் கொள்வதிலோ, கோபித்துக்கொள்வதிலோ, பொருளும் இல்லை, பலனும் இல்லை என்று, வருத்தப்பட்டுக்கொண்ட தோழர்களுக்குக் கூறினேன். அரசு நடத்துபவர்கள், அரசியல் கைதிகளை நடத்தும் முறை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு மேற்கொண்டாலொழிய, சிறையில் அமுல் இதுபோலத்தான் இருக்கும்.

இன்று பத்திரிகை பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம், கைது செய்து கொண்டுவரப்பட்ட, மாநகராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணன் சிறையில் தாக்கப்பட்டார் என்ற செய்தியை. பதறினோம்; வருத்தப்பட்டோம். முழுத் தகவல் கிடைக்கவுமில்லை; நிகழ்ச்சிக்குக் காரணம் கூறுவாருமில்லை.

சிறையில், புதிய ஜெயிலர் வந்திருக்கிறார்; இளைஞர். நல்லவராகக் காணப்படுகிறார். இன்று சிறையில் எங்கள் பகுதிக்கு வந்திருந்து, நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த வேலையில் அமர்ந்தாராம். இதுவரை சேலம் மத்திய சிறையில் வேலை பார்த்துவிட்டு இப்போது இங்கு வந்திருக்கிறார்; பெயர் குணசேகரன் திருச்சி—மாவட்டமாம்; லால்குடிக்கு அருகே ஒரு ஊர்.

சேலம் சிறையில் மூன்று ஆண்டு வேலை பார்த்தான பிறகு, மற்ற இடங்களில் வேலை பார்ப்பது எளிதுதான், என்று நான் கூறினேன்—அவரும் சிரித்துக்கொண்டு, 'ஆமாம்', என்றார். சேலம் சிறை, திரும்பத் திரும்பச் சிறைப்படும் கைதிகள் நிரம்பிய இடம். பல முறை சிறைக்கு வருபவர்களை, கருப்புக் குல்லாய் என்பார்கள்.

இன்று மெயில் பத்திரிகையில் ஒரு செய்தி பார்த்து, ஒரு கணம் பதறிப் போனேன்; இந்தி எதிர்ப்பு அறப்போரினை நான் வெளியே வந்ததும். நிறுத்திவிட எண்ணுவதாகவும், என்னை வந்து பார்த்த முக்கியமான நண்பர்கள் சிலரிடம் இதுபோல நான் சொல்லி அனுப்பியதாகவும், மெயிலில் சேதி வந்திருந்தது. நான் நினைத்துக்கூடப் பார்த்திராத ஒன்றை, இப்படித் துணிந்து, மெயில் இதழ் வெளியிடுவது கண்டு நான் பதறிப்போனேன். இவ்விதமான பத்திரிகைத் தாக்குதல்களிவிருந்து தப்பிப் பிழைத்து, இந்த அளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, பெருமிதம் எழத்தான் செய்கிறது. 'அண்ணா! இந்தப் பத்திரிகைகளில் வெளிவருவதை நமது தோழர்கள் நம்பமாட்டார்கள்; ஏனெனில். நீங்கள் தான் முன்பே சொல்லிவிட்டிருக்கிறீர்களே. இந்தி எதிர்ப்பு அறப்போர் சம்பந்தமாக, நம்நாடு, முரசொலி எனும் ஏடுகளில் வருவதைத் தவிர மற்று எதனையும் நம்பவேண்டாம் என்று' என்று அரக்கோணம் ராமசாமி கூறினார். அவர் சொன்னது போலவே, நமது கழகத் தோழர்கள் பத்திரிகைகள் இட்டுக் கட்டி வெளியிடுபவைகளை நம்பமாட்டார்கள் என்ற உறுதி எனக்கும் இருக்கிறது என்றாலும், பத்திரிகைகள் திட்டமிட்டு இந்தக் காரியத்தை செய்து வருவது பற்றி மிகுந்த கவலை எழத்தான் செய்கிறது; கழகத்துக்கு ஊறு தேடுகிறார்களே என்பதல்ல எனக்குள்ள கவலை, ஜனநாயக முறை வெற்றி பெறுவதைக் குந்தகப்படுத்துகிறார்களே என்பதுதான். இதே நாட்டிலே இனி ஒரே கட்சி ஆட்சிதான் என்று அறிவித்து விட்டால்கூட நிலைமை எத்துணையோ நல்லதாக இருக்கும்; ஜனநாயகம், எதிர்க்கட்சி: பொதுத்தேர்தல்; பேச்சுரிமை என்று உதட்டளவில் கூறிக்கொண்டு, செயலில், எதிர்க் கட்சிகளே வளரமுடியாதபடி நடந்துகொண்டு வரும் போக்குதான், மிகவும் ஆபத்தானது. இது குறித்து நண்பர்களுடன் இன்று பேசிக்கொண்டிருந்தேன்.

28—4—64 தமிழகத்தில், சட்டமன்ற பாராளுமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான வெளியீடு, குழுஉறுப்பினர் மதியழகனுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. நமது நண்பர்கள் இதனை மிகுந்த ஆவலுடன் ஆராய்ந்து பார்க்கலாயினர். எந்தெந்தத் தொகுதிகளில் என்னென்ன மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டிருக்கின்றன, அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகம் என்னென்ன என்பதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பல தொகுதிகளைப் பிய்த்து எடுத்து, சிலசில பகுதிகளை வேறு தொகுதிகளுடன் ஒட்டவைத்திருக்கிறார்கள். சில பொதுத்தொகுதிகளை இப்போது தனித்தொகுதியாகவும், சில தனித்தொகுதிகளைப் பொதுத் தொகுதியாகவும் மாற்றி விட்டிருக்கிறார்கள். சில தொகுதிகளின் அமைப்பு ஜாதி உணர்ச்சிக்கு இடம் தருவதாகவும் இருக்கிறது. இந்தப் பிரச்சினையை, நமது கழக, மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் கொண்ட ஒரு கூட்டத்தில், தொகுதி அமைப்புக்குழு உறுப்பினர்களான மதியழகனும் ராஜாராமும் எடுத்துவிளக்கிக் கலந்து பேச வேண்டும் என்று நினைக்கிறேன். விரைவில் இது பற்றி மிகத் தீவிரமான கவனம் செலுத்தவேண்டும். புதிதாகத் தொகுதிகளை அமைக்கும்போது, இதுபோன்ற ஒட்டு வெட்டு ஏற்படத்தான் செய்யும். ஆனால் இது, வெறும் வசதிகாரணமாக மட்டும் அமைந்துவிடுவதில்லை; கட்சி, ஜாதி, மேட்டுக்குடி ஆகியவைகளால் எழுப்பிவிடும் உணர்ச்சிகளும் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. இவைபற்றி எல்லாம் கழகத் தோழர்கள் கவனம் செலுத்த வேண்டும். தொகுதிகளை வெட்டி ஒட்டி உருவை மாற்றி விடுவதன் மூலம், அதனை ஒரு கட்சியின் செல்வாக்கிலிருந்து மற்றோர் கட்சியின் செல்வாக்கிற்குள் கொண்டு வந்துவிடமுடிகிறது; குறைந்தபட்சம் அதற்கான முயற்சியாவது நடைபெற வழி ஏற்பட்டுவிடுகிறது. இத்தகைய உள்நோக்கங்கள் பற்றி ஆராய்ந்தறிந்து, பொதுமக்களிடம் நாம் விளக்கிச் சொல்லவேண்டும், என்று மதியழகனிடம் கூறினேன். மே, இரண்டாவது மூன்றாவது வாரத்தில், தொகுதிக்குழு கூடும்போது, இதுபற்றி வாதாடும்படி, மதியழகனிடம் சொல்லியிருக்கிறேன். இந்தக் குழுவில், காங்கிரஸ் கட்சியினரே, பெருவாரியானவர்கள்; நமது கழக உறுப்பினர், இருவர் மட்டுமே. எனவே, கழக உறுப்பினரின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிடும் என்று உறுதி இல்லை. கடமையைச் செய்துவிட்டு, நிலைமையை மக்களிடம் எடுத்து விளக்க வேண்டும். காஞ்சிபுரம் தொகுதியைப் பொறுத்தமட்டில், கீழ்கதிர்ப்பூர், மேல்கதிர்ப்பூர், விஷார், நரப்பாக்கம், விப்பேடு, திருப்பருத்திக் குன்றம், செவிலிமேடு, கோழிவாக்கம், அய்யங்கார்குளம், ஓரிகை, சின்ன அய்யங்குளம், தேனம்பாக்கம், நெல்வாய், தண்டலம், ஆரியம்பாக்கம், தொடூர், கூத்தரம்பாக்கம், பூண்டித்தாங்கல், காரை, ஈஞ்சம்பாக்கம், வேடல், இலுப்பப்பட்டு, ஆட்டுப்புத்தூர், சிறுவேடல், அத்திவாக்கம், ஆலப்பாக்கம். திருமல்பட்டு, மும்மல்பட்டு, சிங்காடிவாக்கம், கரூர், ஏனாத்தூர், வையாவூர், உழவூர், ஆகிய ஊர்களை வெட்டி எடுத்து, சிலவற்றை உத்திர மேரூர்த் தொகுதியிலும், சிலவற்றைக் குன்றத்தூர் தொகுதியிலும் கொண்டுபோய் இணைத்துவிட்டிருக்கிறார்கள்.

இதுபோல, ஒவ்வொரு தொகுதியிலும் புகுத்தப் பட்டுள்ள மாறுதல்கள் குறித்து நமது கழகத் தோழர்கள் கருத்துடன் கவனித்துப் பார்க்கவேண்டும்.

தொகுதிகளைத் திருத்தி அமைப்பதிலே அரசியல் நோக்கமும், கட்சி நோக்கமும் இருக்கமுடியுமா என்று சிலருக்கு ஐயப்பாடு எழக்கூடும். இந்த இரண்டு நாட்களாக இது சம்பந்தமான ஒரு நிலைமை, பத்திரிகைகளில் வந்தபடி இருக்கிறது. அதுகுறித்தும் இங்கு நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

ஆட்சியிலே, கன்சர்வேடிவ் கட்சி இருந்திடும்போது கூட, இலண்டன் மாநகராட்சி மட்டும், தொழிற் கட்சியிடமே இருந்து வருகிறது. இது கடந்த முப்பது ஆண்டுகளாக உள்ள நிலைமை. இந்த நிலைமையை, ஒருவிதமான தலைவலி என்று கன்சர்வெடிவ் கட்சி கருதிற்று; மாற்ற முனைந்தது. அதற்தாக, இலண்டன் மாநகராட்சியின் தொகுதிகளை விரிவுபடுத்தி, புதிய இடங்களை இணைத்துப் புதிய தொகுதிகளை அமைத்தது, இவ்விதமாகப் பரப்பும் அமைப்பும் புதிதாக்கப்பட்டால், முப்பது ஆண்டுகளாக தெழிற்கட்சிக்கு இருந்துவரும் ஆதிக்கம் ஒழிந்துவிடும் என்பது கன்சர்வேடிவ் கட்சியின் எண்ணம். இந்த உள்நோக்கத்தைத் தொழிற்கட்சி மக்களிடம் எடுத்து விளக்கிற்று. சர்க்காரின் போக்கைக் கண்டித்தது. என்றாலும், இப்போது நடைபெற்ற தேர்தலில், இவ்வளவு திட்டமிட்டும், கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெறவில்லை. மறுபடியும் தொழிற் கட்சியிடமே இலண்டன் மாநகராட்சி மன்ற ஆட்சி வந்து சேர்ந்தது.

இங்கு, தொகுதிகளைத் திருத்தி அமைப்பதால் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டாலும், நமது கழகம் முன்னதாகவே அவைகளைக் கணக்கெடுத்து பணியாற்றினால். தொழிற் கட்சி வெற்றி ஈட்டியதுபோல், வருகிற பொதுத் தேர்தலிலும் கழகம் வெற்றிபெற முடியும். எதற்கும் நிலைமைகளை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். தொகுதிகளைத் திருத்தி அமைப்பது பற்றிய பிரச்சினை பற்றிய பேச்சு, அடுத்த பொதுத்தேர்தல் பற்றியதாக வளர்ந்தது. பல தொகுதிகளைப் பற்றியும், பிரச்சார முறைகள் பற்றியும் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

29—4—64

'அல்லும் பகலும்' என்ற புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். ஏழைகள் அமைத்துக் கொண்டுள்ள குடிசைகளை அப்புறப்படுத்த, அடிமனைச் சொந்தக்காரர் போலீசின் உதவியைப் பெறுவதிலிருந்து துவங்கி, கைது, கலகம், சிறை, துப்பாக்கிச்சூடு, தப்பி ஓடுதல் என்னும் கட்டங்கள் கொண்டதாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. பொதுவுடைமைக் கட்சியை ஆதரிப்பதாக இந்த ஏடு இருந்தபோதிலும், 'ஏழைகளின் உள்ளப்போக்கை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதில்' மிகநேர்த்தியாக அமைந்திருக்கிறது. பொதுமக்களின் போக்கறியாத போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளால், நிலைமை எப்படி எப்படிச் சீர்குலைகிறது என்பதனை, எவரும் ஒப்புக்கொள்ளத்தக்க விதமாக இந்த ஏடு எடுத்துக்காட்டியிருக்கிறது. நிகழ்ச்சி, அமெரிக்காவில் நடப்பதாகக் கதை. எனவே, கிருஸ்தவ மார்க்கத்தைப் பற்றியும் இதிலே இங்கும் அங்குமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. ஏழைகளின் கஷ்டத்தைத் துடைக்க, தொழிற்சங்கம் நடத்துபவர்கள், பொதுவுடைமைக் கட்சியினர் மட்டுமல்லாமல், உண்மையான கிருஸ்தவர்களும் முனைந்து நிற்கிறார்கள். "எங்களுக்குப் பொதுவுடைமைக் கட்சியின் கோட்பாடும் தெரியாது, சட்ட நுணுக்கமும் புரியாது, ஆனால் இதயம் இருக்கிறது; ஏழைபடும்பாடும் கஷ்டமும் புரிகிறது. அன்பு போதனைதான் கிருஸ்தவ மார்க்கம்; எனவே ஏழைகளிடம் அன்புகாட்டுவது கிருஸ்தவரின் கடமை என்று உணருகிறோம், செய்கிறோம்," என்று ஏழைக்கு உதவுபவர்கள் பேசுவதாகக் குறிப்பிடும் பகுதி, உருக்கம் நிரம்பியதாக இருக்கிறது. ஏழ்மை, அறியாமை, பிணி, கொடுமை இவைகளிலே சிக்கி உழன்றபோதிலும், தொழிலாளர்களிடம், அக்ரமத்தை எதிர்த்து போரிடும் உணர்ச்சி உள்ளத்தின் அடித்தளத்திலே எப்போதும் கொழுந்து விட்டு எரிந்தபடி இருக்கிறது என்ற கருத்து, நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.

என் கைவலிக்கு இரண்டுநாட்களாய் புதிய மருந்து போட்டுக்கொண்டு வருகிறேன். சிறை அதிகாரிகளில் ஒருவர் சொன்ன யோசனை இது. இப்படிப்பட்ட வலிபோக, தென்ன மரக்குடி எண்ணெய் தடவ வேண்டும் என்று சொன்னார். மாயவரத்திலிருந்து பரிமளம் அந்த எண்ணெய் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். இரண்டு நாட்களாக, அதைத் தடவி, சுடுசோறு ஒத்தடம் கொடுத்துக்கொள்கிறேன். ஒரு வாரம் கழித்துத்தான், ஏதேனும் இதனால் பலன் இருக்கிறதா என்பது தெரிய முடியும்.

இரவுவலி எடுத்தால், புலித்தைலம் தடவிக்கொள்கிறேன். இன்றுகூட அந்த மருந்து தடவிக்கொண்டு, அது ஒருவிதமான விறுவிறுப்பை ஏற்படுத்தியதும், உறங்கச் செல்கிறேன்.

30—4—64

இன்று மாநகராட்சி மன்ற உறுப்பினர், கழகத் தோழர் சு. பாலன், ஏதோ கலவர வழக்கு சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு, சிறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்தேன். பாலனைப் பார்க்க இயலவில்லை. விரைவில் ஜாமீனில் போகக்கூடுமென்று கூறுகிறார்கள். உட்பகுதியில் இருப்பதாகத் தெரிகிறது. மாநகராட்சிமன்ற இடைத் தேர்தலின்போது கலவரம் விளைவித்ததாக அவர்மீது வழக்கு தொடர்கிறார்களாம். நானும் பார்க்கிறேன், தேர்தல் கலவரம் காரணமாகக் கைது செய்யப்பட்டு, சிறைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் அனைவரும் கழகத் தோழர்கள், அல்லது தொடர்புடையவர்கள், அல்லது ஆதரவாளர்கள் என்பவர்களாக இருக்கிறார்கள்—ஒரு காங்கிரஸ்காரர்கூட இல்லை. அவ்வளவு ஒழுங்காகத் திட்டமிட்டு, கழகத் தோழர்கள் மீது பழி வாங்கப்படுகிறது. வீணான வழக்குகளிலே சிக்கவைப்பதும், போலீஸ் மூலம் தொல்லைகள் விளைவிப்பதும், கழகத் தோழர்களின் மனதில் பீதியைக் கிளப்பிவிடும், தொல்லை தாங்கமாட்டாமல், கழகத்தைவிட்டு விலதி விடுவார்கள் என்று ஆளுங்கட்சியினரில் சிலர் நினைக்கக் கூடும். கழகத் தோழர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்பது எனக்குத் தெரியும். இதனால் அவர்கள் குழம்பிப் போகமாட்டார்கள். ஆனால் பொதுமக்கள் மனதிலே இந்தப் போக்கு ஒருவிதமான கிலியை ஏற்படுத்தத்தான் செய்துவிடும். வீண் வழக்குகளைத் கொடுக்கும்போது, கழகம் பொதுமக்களிடம் முறையிட்டு, நிதி திரட்டி, வழக்காடவேண்டும். அவ்விதம் செய்ததில், பலமுறை நமது கழகத் தோழர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகளை, நீதிமன்றங்கள் தள்ளிவிட்டிருக்கின்றன—கழகத் தோழர்கள் குற்றமற்றவர்கள் என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஷேக் அப்துல்லா, பண்டித நேருவைச் சந்தித்துப் பேசிடும் நிகழ்ச்சி குறித்த செய்தியை, மிக்க ஆவலோடு படித்துக்கொண்டிருந்தோம்.

பேச்சின் விளைவு எப்படி இருக்கும் என்பது உடனடியாகக் கூறிவிடக் கூடியது அல்ல என்றாலும், காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத்தின் மனப்போக்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது; டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் பேச்சு இதனை நன்கு புரியும்படி செய்துவிட்ருக்கிறது.

ஷேக் அப்துல்லா வருவதற்கு முன்னதாகவே, பல ஆயிரக்கணக்கான மக்கள் கொண்ட ஒரு ஆர்ப்பாட்ட அணிவகுப்பு, பாராளுமன்றத்தின் முன்பு நடத்தப் பட்டிருக்கிற செய்தியைப் பார்த்தோம். அந்த அணிவகுப்புக்கு, காஷ்மீரைச் சார்ந்த ஜனசங்கத் தலைவர் தோக்ரா தலைமை வகித்திருக்கிறார்; 'அப்துல்லாவைச் சிறையில் தள்ளு!' என்பது அணிவகுப்பின் முழக்கங்களில் ஒன்று.

இந்தப் பின்னணிக் கீதத்துடன், சமரசப் பேச்சு தொடங்கியிருக்கிறது.

னக்குத் தெரிந்தவரையில், ஷேக் அப்துல்லாவிடம், பண்டிதரும் ஆளுங்கட்சியினரும் பேசுவதற்கு முன்பாகவே, ஜெயப்பிரகாஷ் நாராயணாவும், வினோபாவும் பேசி, ஒரு சமரசத் திட்டம் வகுத்துக்கொள்ளவேண்டும்—அந்த சமரசத் திட்டத்தின்மீது, பண்டிதருடன் பேச்சு நடத்த வேண்டும். என்றாலும், பண்டித ஜவகர்லால்நேரு, இந்தப் பிரச்சினையை அதற்குத் தேவையான நிதானத் தன்மையுடன் பரிசீலிப்பார் என்று நம்புகிறேன். ஒரு வாரத்தில் இது பற்றிய வடிவம் ஓரளவுக்குத் தெரியக்கூடும் என்று எண்ணுகிறேன்.

கம்யூனிஸ்டு கட்சியிலே ஏற்பட்டுவிட்ட 'பிளவு' விரிவாகிவிட்டதற்கான நிகழ்ச்சிகள் பெருகிவிட்டிருக்கின்றன. இருசாராருமே, கம்யூனிஸ்டு கட்சி என்ற பெயருடன், இரண்டோர் ஆண்டுகள் வேலை செய்வார்கள் போலத்தெரிகிறது. இது பொதுமக்கள், சந்தித்தாக வேண்டிய புதிய குழப்பமாகிவிடுகிறது. கம்யூனிஸ்டு கட்சியின் எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியை அடுத்த தேர்தலில் வெகுவாக ஒன்றும் செய்யாது என்ற எண்ணம், இப்போதே காங்கிரஸ் வட்டாரத்திலே எழும்பிவிட்டது. இதனை எடுத்துக்காட்டுவது போல, கேரள முதலமைச்சர் சங்கர் பேசிய பேச்சு பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. கட்டுக்கோப்பான கட்சி, முறை நிரம்பிய கட்சி, தனித்தலைவர்களை நம்பாமல், அமைப்புக்கே முதலிடம் தரும் கட்சி, பிரச்சினைகளை விவாதிப்பதிலே துளியும் சளைக்காத கட்சி, வெளியே பிளவுகள் தெரிய ஒட்டாமல் தன்னைத்தானே கட்டிக் காத்துக் கொள்ளும் கட்சி என்றெல்லாம் பெருமை பேசுவார்கள் கம்யூனிஸ்டு கட்சியைப்பற்றி. நமது கழகத் தோழர்களிலே சிலருக்குக்கூட, கம்யூனிஸ்டு கட்சிபோல், முறையோடு நமது கழகம் இயங்கவேண்டும் என்று கூறுவதிலே ஆர்வம் பொங்குவது உண்டு. இப்போது கம்யூனிஸ்டு கட்சியிலே ஏற்பட்டுவிட்ட நிலைமையைப் பார்த்த பிறகு, அந்தக் கட்சியை நடத்திவரும் முறையில் என்னென்ன கோளாறுகள் உள்ளன என்பதனைத் தோழர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். இது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் சொன்னேன். நாம், இரண்டு வெவ்வேறான நிலைமைகளையும் சந்தித்திருக்கிறோம்—சமாளித்திருக்கிறோம், -குழப்பம் ஏற்படாதபடி பார்த்துக்கொண்டிருக்கிறோம்—இறுதியில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். திராவிடர் கழகத்திலிருந்து நாம் வெளியேறினோம்—சிறு பான்மையினர்—அல்ல நாம் விரும்பி இருந்தால், திராவிடர் கழக அமைப்பே நம்முடைய நிர்வாகத்தில் வரவேண்டும் என்று வாதாடி இருக்கலாம்—சிலர் என்னிடம் அதுபோல வற்புறுத்தியும் பார்த்தார்கள்—ஆனால், நாம் வாதிடுவது, வழக்கிடுவது, வம்பு வல்லடிக்குச் செல்வது என்பவைகளிலே காலத்தையும் கருத்தையும் செலவிட்டுப் பாழடிப்பதைவிட, நமக்குப் பிடித்தமான கொள்கைகளுடன் ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்திக்கொண்டு, நமது அறிவாற்றலை அந்த அமைப்பின் வெற்றிக்காகப் பயன்படுத்தி வருவோம்— நம்முடைய நோக்கம் தூய்மையானதாக இருந்தால், பொதுமக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று திட்டமிட்டுத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பைத் துவக்கித் தொண்டாற்றினோம்—வெற்றியும் பெற்றோம். எங்களுடையதுதான் உண்மையான திராவிடர் கழகம்—பழயவர்களிடம் இருப்பது போலித் திராவிடர்கழகம் என்ற வம்பிலே நாம் ஈடுபடவில்லை. எனவேதான், இத்துணை ஏற்றத்துடன் நமதுகழகம் இன்று ஒளிவிடுகிறது. ஒரு அமைப்பிலிருந்து பிரிந்து வந்து, புதிய அமைப்பு துவக்கி, அதனை ஏற்றமடையச் செய்வதிலே வெற்றிபெற்றோம். அதுபோலவே, நமது அமைப்பிலிருந்து சிலர் விலகினார்கள்—விசாரப்பட்டோம். ஆனால் விரோதத்தைக் கக்கிக்கொண்டிருப்பதிலேயே, காலத்தை பழாக்கிக்கொள்ளவில்லை—நிதானம் இழக்காமல், நெறிதவறாமல், பணியாற்றிவந்தோம். நமது அமைப்பு, புதிய வடிவுடனும் பொலிவுடனும் இன்று இயங்குகிறது.

ஆக, இரு வெவ்வேறான நிலைமைகளிலும், நாம் நம்முடைய தூய்மை நோக்கத்தின் காரணமாகவும், தொண்டின் நேர்த்திகாரணமாகவும், வெற்றி பெற்றோம்.

திராவிட கழகத்திலிருந்து நாம் பிரியும்போது, நமக்கு இருந்த நிலைமை நமக்கும் நாட்டுக்குப் புரியும். கழகத்தின் நிர்வாகத்தில் ஒரு நகராட்சிகூடக் கிடையாது. தி. மு. கழக மாக வளர்ந்து, சட்டசபையில் 15-இடங்கள், பாராளு மன்றத்தில் இரண்டு இடங்கள், சென்னை மாநகராட்சி நிர்வாகம் எனும் இவைகளைப் பெற்றோம். நாங்கள் தான் உண்மையான திராடவிர்கழகம் என்ற வம்பு வல்லடியில் ஈடுபட்டிருந்தால் என்ன கிடைத்திருக்கும், வளர்ச்சி எந்த முறையில் இருந்திருக்கும் என்பதை, நான் சொல்லத் தேவை இல்லை.

திராவிட முன்னேற்றக் கழக வெற்றி, திராவிடர் கழகத்தை முறையாக நெறியாக நடத்தினால், எத்தகைய அரசியல் நிலைமை உருவாகி இருக்கும் என்பதை, அரசியல் அறிந்த அனைவரும் அறிந்து கொள்ளச்செய்தது. நிதானத்துடனும், பொறுமையுடனும், பொறுப்புடனும் செயலாற்றுவதற்குப் பலன் கிடைத்தே தீரும் என்ற பாடத்தைப் பலரும் பெறச்செய்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து சிலர் பிரிந்து போயினர்—திட்டமிட்ட விளம்பர பலத்துடன் புதிய அமைப்பு கண்டனர் வழக்கம்போல, தி. மு. கழகத்தின் முதுகெலும்பு முறிந்துவிட்டது, ஜீவன் போய்விட்டது, என்று பத்திரிகைகள் பாடிவிட்டன. நாமோ, பகைக்காமல், பதறாமல், வியர்வையைப் பொழிந்து பணியாற்றினோம்; பிரிந்தவர்கள் நம்மோடு இருந்தபோது சட்டசபையில் நாம் 15—அவர்கள் போனபிறகு சட்டசபையில் நாம் 50—பாராளுமன்றத்தில் முன்பு 2—இப்போது 8—மீண்டும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் நம்மிடம்—புதிதாகப் பத்துக்கு மேற்பட்ட நகராட்சிகள் நம் வசம்.

நாம் ஒரு அமைப்பிலிருந்து பிரிந்துவந்தபோதும் சரி, நமது அமைப்பிலிருந்து சிலர் பிரிந்து சென்ற போதும் சரி, நாம் நமது பாதையை ஒழுங்காக்கிக் கொண்டு, மனிதப் பண்பை இழக்காமல், நம்பிக்கையுடன் நெறியாகப் பணியாற்றி வெற்றி பெற்றிருக்கிறோம்.

இதுபற்றி இங்கு நான் எடுத்துச்சொன்னபோது, நண்பர்கள் மெத்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.

1—5—64

மேதினி போற்றிடும் மேதினம். வெளியே இருந்திருந்தால், ஏதேனும் ஓரிடத்தில் மேதினம்பற்றிப் பேசி இருப்பேன். இந்த ஆண்டு மேதினம், இல்லாமை, அறியாமை எனும் கொடுமை நிரம்பி உள்ள காரணத்தால், சூழ்நிலை பாழாகி, கழுத்தறுப்பவன், கன்னம் வைப்பவன், கைகால் ஒடிப்பவன், பூட்டு உடைப்பவன், கள்ளச் சாராயம் காய்ச்சுவோன், கத்தரிக்கோல் போடுவோன் என்னும் இன்னோரன்ன பிற வழிதவறிய மக்களை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலையில், ஒரு கொட்டடியில் இருந்துகொண்டு இருக்கின்றேன். இங்கு நான் பார்க்கிறேன், நடத்திச் செல்பவர்கள் அமையாத காரணத்தாலேயே கெட்டவழி சென்று விட்டவர்களை; மீண்டும் சமூகத்தில் இடம் கிடைக்காது என்று மனம் ஒடிந்துபோய், 'கைதிஜாதி'யில் சேர்ந்து விட்டவர்களை; இங்கு உள்ள ஆயிரத்துக்குமேற்பட்ட கைதிகளில், ஏ.பி.வகுப்புக் கைதிகள் தவிர, மற்றவர்கள் சொந்தத்தில் வீடுவாசல், தொழில் ஏதுமற்ற ஏழ்மை நிலையினர். வயிறாரச் சாப்பிட்ட நாட்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். குடிசையிலே வாழ்ந்தவர்களே பெரும்பகுதியினர்.

சமூகத்திலே ஒரு பிரிவினர் இதுபோல் ஆகாபடி தடுத்திட, சமூக அமைப்பிலேயும் பொருளாதார அமைப்பிலேயும் புரட்சிகரமான மாறுதல் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை உலகம் உணர்ந்திடச் செய்வதிலே மேதினம் பெருமளவு வெற்றி பெற்றிடுகிறது.

வெளியே இல்லையே இந்தத் திருநாளை கொண்டாட என்று ஒருகணம் எண்ணினேன்—ஏக்கத்துடன்—மறுகணமோ, இல்லை, இல்லை, இன்று வெளியே இருந்து கடற்கரைக் காற்றின் இனிமையைப் பெற்றுக் கொண்டே பாட்டாளி படும்பாடுகள் பற்றிப் பேசுவதை விட பாட்டாளிகளாகவும் இருக்கமுடியாமல், வழி தவறிக், கெட்டு, கைதிகளாகிவிட்டுள்ளவர்கள் அடைபட்டுக் கிடக்கும் சிறையில் இருந்துகொண்டுதான், மேதினம் பற்றிச் சிந்திக்கவேண்டும்—அதுதான் பொருத்தம் என்று எண்ணிக் கொண்டேன்.

பாட்டாளிகளின் மனப்பான்மையில் புரட்சிகரமான மாறுதல் ஏற்படும் முறையில் பிரசாரம் செய்வதில் நாம் முனைந்திருந்த போது, அந்தப் பிரசாரத்தை நாத்தீகப் பிரசாரம் என்று கூறிப் பலரும் தாக்கிவந்த நிலைமைபற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். தொழிலாளர்களிடம் மேலும் அதிகமான அளவு தொடர்புகொள்ள வேண்டும், புதிய புதிய தொழிற்சங்கங்கள் அமைக்க வேண்டும் என்பதுபற்றி அன்பழகன் வலியுறுத்தினார். இப்போது, நமது கழகத் தோழர்களில் குறிப்பிடத்தக்க சிலர், இந்த முனையில் நல்ல பணியாற்றிக்கொண்டு வருகிறார்கள் என்பது குறித்து, மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம்.

2—5—64

இன்று, தொகுதி திருத்தி அமைக்கும் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளத்தக்க முறையில், தன் விடுதலை நாள் அமையுமா என்று அறிந்துகொள்ள மதியழகன் சிறை மேலதிகாரியிடம் பேசிவிட்டு வந்தார். குறிப்பிட்டு ஏதும் சொல்ல அதிகாரி மறுத்துவிட்டாராம். மேலும் சிறை அதிகாரிகளின் நோக்கம், விடுதலை நாளை முன்கூட்டித் தெரிவிக்கக் கூடாது—சிறைவாயிலில் வரவேற்புகள் நடக்க விடக்கூடாது என்பதாக இருப்பதாகத் தெரிகிறது. விடுதலை, எதிர்பாராத முறையில் இருக்கும் போலத் தெரிகிறது. எப்படியும், குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வசதி கிடைக்கும் என்று மட்டுமே கூறமுடியும் என்று சிறை அதிகாரி கூறியதிலிருந்து மதி, மே முதல் வாரம் முடிவடைவதற்குள் விடுதலை செய்யப்படலாம் என்று கருதுகிறேன்.

சிறைவாயிலில் வரவேற்பு நடத்தவிடக்கூடாது என்று ஏன் எண்ணவேண்டும், இது என்ன போக்கு என்று நண்பர்கள் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். இது போன்ற பல பிரச்சினைகளில், இன்றைய ஆட்சியினர் கலியாணத்தைத் தடுக்க சீப்பை ஒளித்து வைத்த புத்திசாலியாகத்தான் நடந்துகொள்கிறார்கள் என்று நான் சமாதானம் கூறினேன்.

உலகத்தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் திருநாள், மே தினம். இந்த ஆண்டு, இந்தத் திருநாளில், கம்யூனிஸ்டு கட்சியினர் இரு பிரிவுகளாகி, தனித்தனியாக மே தினம் கொண்டாட வேண்டி ஏற்பட்டுவிட்டிருப்பது வருந்தத்தக்க நிகழ்ச்சியாகும். தொடர்ந்து இந்த நிலை இருக்கும் என்பது, கம்யூனிஸ்டு தலைவர்களின் பேச்சிலிருந்து தெரிகிறது.

கம்யூனிஸ்டு கட்சியின், எந்த ஒரு பிரிவுக்கும் தமது ஆதரவை அதிகாரப்பூர்வமாக, நண்பர் ம.பொ.சி அளிக்கவில்லை என்றாலும், இந்த மே விழாத் தொடர்பான கூட்டத்தில்—ஓட்டல் தொழிலாளர் மாநாட்டில்—ராமமூர்த்தியுடன் இணைந்து, கலந்துகொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி எதேச்சாதிகாரத்தை வளர்ப்பது பற்றிக் கண்டித்துப்பேசி, காங்கிரசிடம் உறவு கொண்டாடிச் சந்தர்ப்பவாதிகள் சலுகைகளைப் பெறுவதையும் எடுத்துக்காட்டி இருக்கிறார். ம. பொ. சி.யின் இந்தப் போக்கு எந்த முறையிலும், அளவிலும், இனி வளரும் என்பது தெரியவில்லை. போகப் போகத்தான் தெரியும் என்று எண்ணுகிறேன்.

சோஷியலிஸ்டு கட்சியின் ஒரு பிரிவினர், ராமமூர்த்தியின் கம்யூனிஸ்டு பிரிவுடன் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. இந்த நிலைமையும், உறுதியான வடிவம் பெறுமா என்பது புரியவில்லை.

தென் ஆற்காடு மாவட்டத்தில், மறியலில் ஈடுபட்ட கழகத்தோழர்களை, துரிதமான விசாரணை நடத்தி, மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதித்து விட்டிருக்கிறார்கள். சட்ட மன்ற உறுப்பினர்கள் சண்முகம், ராஜாங்கம், தங்கவேல், மூவரும் சிறை புகுந்துள்ளனர்.

இதுபோல உடனுக்குடன் விசாரணை நடத்தி, வழக்குகளை முடித்துவிடாமல், மதுரையிலும் காஞ்சிபுரத்திலும் காலத்தை நீடித்துக்கொண்டே போவதும், தோழர்கள் 'காவலில்' வாட்டப்படுவதும் வருந்தத்தக்கதாக இருக்கிறது என்பதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

எப்படியும், நான் விடுதலை ஆவதற்குள், நண்பர் கோவிந்தசாமியும், மற்றவர்களும், சென்னை சிறைக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்று கருதுகிறேன்.

இன்று ராணியுடன் என் இரண்டு மருமகப்பெண்களும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நலன்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.