கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!

16. சிறை நிர்வாகமே தனி!
(கடிதம் 16, காஞ்சி—28-2-65)

3—5—64

நாளையத்தினம், மதியும் மற்றும் சிலரும் விடுதலை செய்யப்படபோகிறார்கள் என்று சிறையிலே ஒரு பேச்சு பலமாக அடிபடுகிறது. நானேகூட நம்பிக்கை கொள்ள வேண்டி ஏற்படுகிறது. வெளியில் சென்றதும், தொகுதி திருத்தி அமைப்பதுபற்றி, மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து பேசும்படி மதியிடம் கூறினேன். இன்று மறுபடியும் தொகுதிகள்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஏற்கனவே சிறைபட்டிருப்பவர்கள் குறித்தும், வழக்கின் முடிவுக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள் பற்றியும், பேசிக் கொண்டிருந்தோம். கழகம் வகுத்த திட்டத்திலே தோழர்கள் தொடர்ந்து காட்டிக்கொண்டு வரும் ஆர்வமும், மக்கள் தரும் ஆதரவும் அளித்திடும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நிலையில், சிறையிலே ஏற்படக்கூடிய தொல்லைகள் மிகச் சாதாரணமானவைகளாகிவிடுகின்றன. ஒன்று மட்டும் மறப்பதற்கில்லை. வேறு எந்தக்கட்சிக்காரர்கள் கிளர்ச்சிக்காரர்களிடம் காட்டாத அளவுக்குக் கசப்பும் கோபமும், இன்றைய ஆளுங்கட்சியினர், கழகத்திடம் காட்டுகின்றனர் என்பதை உணர்ந்துள்ள அதிகாரிகள், அதற்குத் தகுந்தபடி தமது போக்கை அமைத்துக்கொண்டுள்ளனர். 'முன்போல அல்ல! இது ஒரு மாதிரியான காலம்!' என்று சிறைக்காவலாளிகளேகூடப் பேசிக்கொள்கிறார்கள். எங்களிடம் பேசவும் பழகவும் கூடப் பயப்படுகிறார்கள். ஆனாலும், சென்னை மாநகராட்சிமன்றத் தேர்தல் வெற்றியைக் கண்டபிறகு, அவர்களுக்கே ஒரு எண்ணம்—சர்க்காருடைய கொடுமை வளரவளர, பொது மக்களுடைய ஆதரவு கழகத்துக்கு வளரத்தான் செய்கிறது என்ற எண்ணம். இதை அவர்கள் பாபம், பேச்சின் மூலமாக அல்ல, பார்வையின் மூலமாகவே தெரிவிக்கிறார்கள். சில வேளைகளிலே அவர்கள் காட்டும் கண்டிப்புகூட, 'ஜான் வயிற்றுக்காக' என்கிறார்களே, அதுதானே தவிர, எங்களிடம் கோபமோ வெறுப்போ இல்லை என்பதையும் உணருகிறோம். காவலாளிகள் வாழ்க்கையும் எவரும் பார்த்துப் பச்சதாபப் படக்கூடியது தான்.

இன்று சீக்கிரமாக 'லாக்கப்' செய்துவிட வேண்டும். என்று சில காவலாளிகள் துடித்துக்கொண்டு வருவார்கள். காரணம், எங்களை வெளியே ஒரு அரைமணி நேரம் விட்டு வைக்கக்கூடாது என்ற கெட்ட எண்ணம் அல்ல. ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து, அந்தக்காவலாளிகள் வீட்டுக்குப் போய்ச்சேர, இரவு ஒன்பது ஆகிவிடுகிறது. ஒரு நாளைக்காவது வீட்டிலே, பொழுது சாயுமுன் போய், குழந்தை குட்டிகளுடன் பொழுது போக்கவேண்டும் என்ற ஆவல் இருப்பது இயற்கைதானே! மொத்தத்திலே இங்கு பார்க்கும்போது, காவலாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது புரிகிறது. அதனால்தான், காவலாளிகள் கடினமான வேலையில் உழலவேண்டி இருக்கிறது. காவலாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான்; அளவுக்கு மீறிய வேலை செய்வதால் ஏற்படும் சலிப்பு உணர்ச்சி எழாமலிருக்கும். 'வாங்க! வாங்க! மணி ஆறு அடிச்சாச்சி' என்று கூப்பிட்டார் ஒரு காவலாளி கீழே இருந்த எங்களை. குரல் கேட்டதும், இயற்கையாக, 'இதற்குள்ளாகவா?' என்றுதான் கேட்கத் தோன்றும். ஆனால், அந்தக் காவலாளியின் முகத்தைப் பார்த்ததும், எனக்கு உடனே எழுந்து, மாடிக்குச் சென்றுவிட வேண்டும் என்றுதான் தோன்றிற்று. ஏன் என்றால், அவருடைய பேச்சு, அவ்விதம் இருந்தது.

"மூணு ஜென்மம் ஆயிட்டுது, இன்னும் இருப்பது சாராயக்கேஸ் தண்டனை காலம்தான்"—என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டார். புரியவில்லையா?

மூணு ஜென்மம், முப்பது ஆண்டுகள்! ஒரு ஆயுள் தண்டனை, கிட்டதட்ட பத்து ஆண்டுகள்—ஒரு ஜென்மம், அதுபோல மூணு ஜென்மம் அளவுக்கு, அதாவது முப்பது ஆண்டுகள் வேலை பார்த்தாகி விட்டதாம். காவலாளி, தன் வேலை நாட்களை, கைதியின் தண்டனை நாட்கள் போன்றவை என்று எண்ணுகிறார், ஏக்கத்துடன் பேசுகிறார். நாலுவாரம் தண்டனை என்பது சாராய வழக்கிலே கிடைப்பது. இந்தக் காவலாளி இன்னும் நாலு வாரம்தான் வேலையில் இருப்பாராம்—பிறகு விலகப்போகிறார். வேலையில் இருக்கவேண்டிய நாட்களை, தண்டனை நாட்கள் என்று கருதுகிறார். காவலாளிகளின் வேலை நேரம்—வேலைமுறை—இவைகளைப் பார்ப்பவர்கள், அந்த வயதானவர் கூறினதை மறுக்க மாட்டார்கள்.

4—5—64

ஏமாற்றம்! எதிர்பார்த்தபடி, மதிக்கும் மற்றவர்களுக்கும் விடுதலை கிடைக்கவில்லை; காரணமும் தெரியவில்லை. வழக்கமாக உலவும் வதந்திகளின்படி சர்க்காரிடமிருந்து 'உத்திரவு வரவில்லை' என்று தெரிய வருகிறது. உண்மை என்னவென்றால், விடுதலை ஆகப்போகிறார்கள் என்ற செய்திதான், ஆதாரமற்ற வதந்தி.

இன்று, S.S.ராஜேந்திரன் வந்திருந்தார். நான், மதி அன்பழகன் மூவரும் கண்டு பேசினோம். சிறைமேலதிகாரியின் அறையில், அவர் முன்னிலையில், நண்பர்களைக் குறித்துக் கேட்டறிந்து கொண்டோம்.

"அண்ணா! ரவி என்ன சொல்கிறான் என்பதைக் கேளுங்களேன்" என்று பாசத்துடன் ராஜேந்திரன் கூறினார்; ரவி அவர் மகன்.

"அண்ணா! ஜெயில் கதவோட கம்பிகளை எடுத்துட்டு வெளியே வந்துவிடுங்க." என்கிறானே!

சிறை மேலதிகாரியைக் காட்டி, "இவர் யார் பார்த்தாயா? சும்மாவிடுவாரா?" என்றேன்; குழந்தை பயந்தே போனான். இதற்கு முன்பு எப்போதும் என்னைப் பார்த்திராத முற்றிலும் வேறான இடம், அதனால் அச்சம் ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் மிகக் கலகலப்பாகச் சிரித்துப் பேசுவான். நான், அவனுக்கும் "அண்ணா"; அவனுடைய அப்பாவுக்கும் "அண்ணா"; அப்படி அழைத்தே பழகிவிட்டான்.

பார்க்க வருகிறவர்களும், மிகுந்த ஆவலுடன் ஏதேதோ பேசவேண்டும் என்றுதான் வருகிறார்கள். நாங்களும், வருகிறவர்களிடம் நிறையப் பேசவேண்டும், எதை எதையோ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாகத்தான் பார்க்கிறோம். ஆனால், பேசும் இடத்தில் குறைந்தது இரண்டு அதிகாரிகளாவது எதிரே, மிக அருகாமையில் உட்கார்ந்து கொள்ளும்போது, எப்படிப் பேசவரும், எதைப்பேசத்தோன்றும்? பார்த்தோம், நலன் கேட்டறிந்து கொண்டோம், அதுபோதும் என்று சில நிமிடங்களிலேயே தோன்றிவிடுகிறது. அப்படித்தான் இன்று ராஜேந்திரனிடமும், மிகச் சுருக்கமாகவோ பேச்சை முடித்துக் கொள்ள வேண்டி நேரிட்டது. டில்லி போய் வந்த 'சேதி' பற்றி ஒரு விநாடி நாராயணசாமி மகன் உடல் நிலை பற்றி மற்றோர் விநாடி, இப்படி மூன்று நான்கு விஷயங்கள் பேசி முடித்ததும், மேற்கொண்டு என்ன பேசுவது என்பது இருவருக்கும் புரியவில்லை. பேச விஷயமா 'இல்லை'! கழக விஷயம் பேச ஆரம்பித்தால் நாள் போதாது. ஆனால் ‘அரசியல்'தான் பேசக்கூடாதே!!

இதைக் கூடவா சர்க்கார் கவனிக்கிறார்கள்? என்று நான் ஒரு சிறை அதிகாரியைக் கேட்டேன். சரியாப்போச்சு. உங்களுக்கென்ன தெரியும்? உங்களைப் பார்க்க யாரேனும் கழகத்தார் வந்தார்கள் என்றால், அவர்கள் உங்களைப் பார்த்துவிட்டுப்போன உடனே, துப்பறியும் துறைக்காரர் வருகிறார். 'என்ன பேசினார்கள்?' என்று கேட்கிறார்; "விவரம் விசாரிக்கிறார்" என்று கூறினார். 'கள்ள மார்க்கட்காரனையும் கொள்ளை இலாபம் அடிப்பவனையும் கண்டுபிடித்து அடக்க இந்தத் துப்பறியும் திறமை பயன் படக்கூடாதா? எதையும் ஒளிவு மறைவு இல்லாமல், மக்களுக்கும் சர்க்காருக்கும் அறிவித்துவிட்டுச் செய்யும் எங்கள் கழக சம்பந்தமாகவா இவ்வளவு திறமையையும் வீணாக்க வேண்டும்?' என்று நான் கேட்டேன். "அதெல்லாம் பெரிய விஷயம்!" என்று சொல்லிக்கொண்டே அந்த அதிகாரி சென்று விட்டார். இந்தப் பேச்சை எவனாவது கேட்டுவிட்டு, ஏதாவது கோள்மூட்டி விடப்போகிறான் என்று அவருக்குப் பயம். சுயராஜ்யம் ஏற்பட்ட பிறகு தொடங்கிய இந்தப் 'பயம்'. நாளாகவாக வளர்ந்தபடி இருக்கிறது. அதிலே ஒரு கூறுதான் இங்குள்ள அதிகாரிகளின் போக்கிலே நான் காண்கிறேன். இத்தகைய பயம் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. ஆனால், நடைபெறுவது பெயரளவுக்குத்தானே ஜனநாயகம்!

இன்று நடைபெற்று வரும் போக்குக்கு, காஞ்சீபுரம் கே.டி.எஸ்.மணி ஒரு எடுத்துக்காட்டு கூறினார்.

கே. டி.எஸ் மணி திருவேங்கிடம் இருவரும் காஞ்சி நகராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் கைது ஆகிச் சிறையில் இருந்தனர்—வழக்கு முடிவு பெறவில்லை. இடையில், நகராட்சி மன்றத் தலைவர் தேர்தல். இருவருடைய ஓட்டுகளும் கழக வேட்பாளருக்குக் கிடைக்காதபடி தடுத்துவிட்டு, வேறு சில வேலைகளையும் செய்து முடித்துக் கொண்டால், காஞ்சீபுரம் நகராட்சி மன்றத் தலைவராக ஒரு காங்கிரஸ் காரரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது காங்கிரசின் திட்டம். இதைத் தெரிந்துகொண்ட நமது கழகத்தவர், மணி, திருவேங்கிடம் இருவரையும் 'பொறுப்பில்' வெளியே கொண்டு வரவேண்டும், தலைவர் தேர்தலில் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினர்—பொறுப்பிலே விடுதலை செய்யப்பட்டனர்.

வேடிக்கை என்பதா, விபரீதம் என்பதா கூறுங்கள்- பொறுப்பிலே விடுதலை செய்யப்பட்ட இரு தோழர்களும் காஞ்சீபுரம் திரும்பினார்கள்; மறுநாளே பொறுப்பு ரத்துச்செய்யப்பட்டு சிறைக்கு மறுபடியும் அழைத்துச் செல்லப் படுகிறார்கள். காஞ்சீபுரத்துக் காங்கிரஸ்காரர்கள் கைகொட்டிக் கேலியாகச் சிரிக்காமலிருக்க முடியுமா? 'பயல்களை மறுபடியும் உள்ளே தள்ளியாச்சு!' என்று எக்காள மிடுகின்றனர்.

முன்நாள் பொறுப்பிலே விடுதலை—மறுநாள் அந்த உத்திரவு திரும்பப் பெறப்படுகிறது மறுபடியும், சிறை! யார் காரணம் கேட்பது! எவருக்கு இதற்கான விளக்கம் புரிகிறது! போக்கு எவ்விதம் இருக்கிறது என்பதுதான் நன்றாகத் தெரிகிறது.

தெரிந்து? உயர்நீதிமன்றம் சென்று, அந்த இருதோழர்களுக்கும், மறுபடியும் பொறுப்பிலே விடுதலை கிடைத்து, அவர்கள் தேர்தலில் கலந்துகொண்டு, கழகத்தவரும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்விதமான போக்குக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இதற்குத் தனித்தனியான பரிகாரம் கிடையாது: ஒரே கட்சிதான் நாட்டை ஆளும் என்ற நிலைமையை மாற்றி அமைத்து, உண்மையான மக்களாட்சியை ஏற்படுத்துவது ஒன்றுதான், விரும்பத்தகாத முறைகேடுகளையும், விபரீதமான போக்கினையும் ஒழித்துக் கட்டும் வழி என்று கூறினேன். நண்பர்களின் கண்கள், அடுத்து வர இருக்கும் பொதுத் தேர்தலின்மீது பாய்ந்திடக் கண்டேன். விழிப்புடன் இருக்கிறார்கள், உறுதியுடன் இருக்கிறார்கள், என்ற எண்ணம் இனிப்பளித்தது.

5—5—64

ஓவியம் வரைவதிலே, மற்ற இரு நண்பர்களும் அக்கறை இழந்துவிட்டனர்; நானோ தொடர்ந்து அதிலே விருப்பம்கொள்கிறேன். இரவு வெகுநேரம் வரையில், வண்ணங்களைக் கலப்பதும், எதை எதையோ வரைவதும். மனதுக்குப் புதுவிதமான மகிழ்ச்சி தரத்தான் செய்கிறது. நண்பர்கள் என்னை மகிழச் செய்வதற்காக, ஓவியம் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது; கண் இல்லையா காண! ஓவியம் வரையத் தெரியாவிட்டாலும், வண்ணங்களைக் குழைத்து எதையாவது வடிவமெடுக்கச் செய்யும்போது களிப்பு எழுகிறது. ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், அந்தக் கலையில் எத்துணை இனிமை காணமுடியும் என்பதனை உணர இது ஒரு வாய்ப்பு. மலையும் மடுவும், மாவும் பலாவும், காலைக் கதிரவனும் மாலை மதியமும், கோட்டைகொத்தளங்களும் கொடி படர்ந்த குடிலும், வாளேந்திய வீரனும் வேல்விழியாளும், பாசம் நிறைந்த பார்வையும் பகை கக்கும் விழிகளும், மழலைமொழிக் குழவியும் பெருமிதமிகு தாயும், இன்னோரன்ன பிற காட்சிகளைத் தமது கைவண்ணத்தால் ஓவியர்கள் உயிர்பெறச் செய்யும்போது, தனித்தன்மை வாய்ந்த ஓர் மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்யும். ஓவியக் கலையினர் குறித்து, நான் படித்திருந்த சிறு கதைகள், நெடுங்கதைகள் பலவும் இந்த நேரம் என் நினைவிற்கு வருகின்றன.

இன்றுகூட, உட்அவுஸ் என்பவர் எழுதியுள்ள ஒரு கதைத் தொகுப்பில் ஓவியம்பற்றிய தொடர்புடைய சிறு கதை ஒன்று படித்தேன். ஓவியம் வரைவதிலே விருப்பம் மிகுந்திருந்த வேளை—எனவே, அந்தச் சிறு கதை எனக்கு அதிக அளவு சுவை அளித்தது.

ஓவியம், நூல் எழுதுதல், இசைபயிலுதல், நடனம் போன்ற நுண்கலைகளில் பெரிதும் நாட்டம்கொண்டு, ஆண்டுக் கணக்கில் ஈடுபட்டு, வறுமையால் தாக்கப்பட்ட போதிலும், உலகம் பாராட்டத்தக்க கலைத்திறனை ஒரு நாள் இல்லாவிட்டால் மற்றோர் நாள் பெறத்தான் போகிறோம், பொன்னும் பொருளும் வந்து குவியத்தான் போகிறது என்ற நம்பிக்கையின் துணையுடன் உழல்பவர்களைக் குறித்து, நம் நாட்டில் உள்ளவற்றினைவிட, மேனாடுகளில் அதிக அளவுள்ள கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளிவந்துள்ளன.

உட்அவுஸ், நகைச்சுவை ததும்பும் எழுத்தோவியம் புனைபவர்—வாழ்க்கைச் சிக்கல், பிரச்சினைகள் ஒன்றோடொன்று மோதிப் போரிடுதல் போன்றவைகளைவிட, அசட்டுத்தனம், போலிகளில் மதிப்புவைத்திடும் பான்மை, மேட்டுக்குடியினரின் மேனாமினுக்கித் தன்மை, போன்றவைகளைப்பற்றி அதிகச் சுவையுடன் எழுதுபவர்—எனினும் அந்த எழுத்தோவியத்தில் வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, இழையோடுவதுபோல நல்ல கருத்தும் இருக்கும்.

ஒரு வீட்டின் மாடி அறையில் ஒருவன் குடி இருக்கிறான்; கீழ் அறையில் ஒரு பெண் குடி இருக்கிறாள்; வீட்டின் மற்றமற்றப் பகுதிகளிலும் இதுபோலப் பலர் குடி இருக்கிறார்கள். வாடகை வீடு.

கீழ்த்தளத்தில் குடி இருக்கும் பெண், இசைத்துறையில் வெற்றிபெற விரும்பி வெகுபாடுபடுபவள்; பாடல்கள் புனைகிறாள், பாடிப்பார்க்கிறாள். இசைக் கருவியின் துணையைச் சேர்த்து சுவை எங்கனம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முனைகிறாள். சிலருக்கு இசைப்பயிற்சி அளிப்பதிலே கிடைக்கும் சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு, புன்னகை தரும் பொற்காலம் வரப்போகிறது என்று காத்துக்கொண்டிருக்கிறாள்.

மாடி அறையில் குடி இருப்பவன், இந்தப் பெண்ணுடைய இசை ஈடுபாட்டைக் கலைப்பதுபோல, அறையின் தரையில் தட்டி ஒலி எழுப்புகிறான். அவளோ இசை நுணுக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தான் புனையும் பாடல், இசை உலகினரால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க தரம்பெற என்ன செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லற்படுகிறாள்! மேலே இருந்து கிளம்பும் ஒலியோ அவளுடைய மனநிலையை, சிந்தனைத் திறனைக் கெடுக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்க்கிறாள், முடியவில்லை. மளமளவென்று மாடி ஏறி, ஒலி கிளம்பும் அறையைக் கண்டறிந்து, கதவைத் தட்டுகிறாள்; திறக்கப் படுகிறது; உள்ளிருந்து வந்தவனோ, அவளுடைய கோபத்தை, வெறும்பார்வையாலேயே போக்கிவிடக்கூடியவனாக இருக்கிறான். நல்லவனாகவே இருக்கிறான். அழகாகவும்கூட இருக்கிறான். எரிந்துவிழவேண்டும், பொறிந்து தள்ளவேண்டும் என்ற துடிப்புடன் வந்தவள், அவனுடைய தோற்றத்தைக் கண்டு, மென்மையைக் குழைத்துப் பேச்சை வழங்குகிறாள்.

"மேலே இப்படி ஒலியைக் கிளப்பியபடி இருக்கலாமா? என் வேலையைக் கெடுக்கிறீர்களே! இசைபற்றிய எண்ண ஓட்டம் தடைப்படுகிறது! ஏன் அப்படி ஒலி எழுப்புகிறீர்கள்?"

"அதுவா? அது... அது... நீங்கள், ஒரே பாடலைத் திரும்பத் திரும்பப் பாடுகிறீர்கள்—சில
சமயம் அந்தப் பாடலின் ஒரே அடியைக்கூடத் திரும்பத்திரும்பப் பல தடவை பாடுறீகிர்கள்... சலிப்பு ஏற்படும்படி...அது ஏன்?"

"நான், பாடுகிறேன் என்றா எண்ணுகிறீர்கள். பாடகர்களுக்கான புதுப்பாடல்களை
இயற்றுகிறேன். அந்தப் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதைக் கண்டறிய, மெருகேற்ற, திரும்பத்திரும்பப் பாடுகிறேன்."

"பாடல்கள் புனைவது மற்றவர்களுக்காகவா?"

"ஆமாம், திறமையாகவும் இனிமையாகவும் பாடக் கூடியவர்களுக்காக. அவர்கள் பாடுவதாலே அந்தப் பாடல்கள் புகழ்பெறும்—புகழ் பெற்ற பாடல்களை நாட்டுமக்கள் விரும்பி விலைகொடுத்து வாங்குவார்கள்."

"அப்படியா? இப்போது உங்களுடைய பாடலை எந்த இசைவாணனும் வாங்கவில்லையா?"

"இல்லையே! ஒரு பாடல் வெளியிடப் பட்டிருக்கிறது. அதற்கே ஏகப்பட்ட பணச் செலவு?"

"யாருக்குப் பணச் செலவு?"

"எனக்குத்தான். நான் பணம் கொடுத்து வெளியிட்டது தானே. பலரும் வாங்கினால், செலவழித்த பணமும் வரும், வருவாயும் கிடைக் கும். அதுசரி, நீங்கள் என்ன...?"

"நானா? நான் ஒரு ஓவியன்.. அதாவது ஓவியம் வரைகிறேன்... வரைந்து வரைந்து திறமைபெற்றால் ஓவியனாகலாம் அல்லவா?"

"ஓவியமா! எனக்கு நிரம்பவிருப்பம் ஓவியம் காண. என்ன வரைந்திருக்கிறீர்கள்?"

அவன் தான் வரைந்திருந்த ஓவியத்தைக் காட்டினான்—ஒரு பூனையை குழந்தை தூக்கிவைத்துக் கொண்டிருக்கும் காட்சி. அந்த ஓவியம் மிக நன்றாக இருப்பதாக அவள் கூறினாள்; அவளுடைய இசைப்புலமையை அவன் புகழ்ந்தான். உலகமோ, இருவருடைய கலையையும் கண்ணெடுத்துப் பார்க்க மறுத்தது. அவர்கள் இருவரும் கண்படைத்த காரணத்தால், ஒருவர் கலையை மற்றவர் புகழ முடிந்தது; அதற்குக் காரணம், ஒருவர் உள்ளத்தில் மற்றவர் இடம் பெற்றதுதான்.

அதே வீட்டில் மற்றோர் அறையில் மற்றோர் ஓவியன் திறமை மிக்கவன் என்ற நினைப்பு கொண்டவன்; நிலை சாதாரணம்தான்.

அவன், பூனையும் குழந்தையும் என்ற ஓவியத்தைப் பார்த்துவிட்டு, ஏளனம் செய்கிறான். குழந்தை இப்படியா இருக்கும், பூனைகூடச் சரியாக இல்லையே என்று குத்தல் பேசுகிறான்; அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இளம் ஓவியனோ, குற்றம் இருப்பதை எடுத்துக் காட்டியவருக்கு நன்றி கூறுகிறான்.

"அந்த ஓவியனுக்கு ஏன் அவ்வளவு பணிந்து போகிறீர்கள். உங்கள் ஓவியம் நேர்த்தியாக இருக்கிறது. இவன் யார், குறை கூற? இவனுடைய ஓவியங்கள் மட்டும், ஊரிலே ஓகோவென்று விலைபோகின்றனவோ? இனி அவனிடம் பணிந்து போகக்கூடாது."

காரிகை, கண்டிப்பாகக் கூறுகிறாள்; காதல் உணர்ச்சி அவளுக்கு அத்தனை சொந்தத்தை ஏற்படுத்தி வைத்து விடுகிறது.

பெரிய ஓவியனுடைய இயற்கைக் காட்சி ஒன்றை நல்ல விலை கொடுத்து, ஒருவர், வெளியூர்க்காரர் வாங்குகிறார்—பேட்ஸ் என்பது அவர் பெயர்... முன்னிலும் முடுக்காகி விடுகிறான் பெரிய ஓவியன்.

இளம் ஓவியன், கடை கடையாகக் கொண்டு போய்க் காட்டுகிறான் தன் ஓவியத்தை. கடைசியில் பெரிய ஓவியனுடைய சிபாரிசின் பேரில் ஒரு கடைக்காரர். 'வைத்து' விட்டுப் போங்கள், யாராவது பார்த்து ஆசைப்பட்டால், விற்க முயற்சிக்கிறேன்' என்று கூறி அனுப்பினார்.

"கவலைப்படாதீர்கள். காலம் இப்படியேவா இருந்து விடப் போகிறது. நல்ல காலம் பிறக்கும். நல்ல விலைக்கு ஓவியத்தை வாங்கப் போகிறார்கள் பாருங்கள்" என்று பெண், பரிவுடன் பேசி வந்தாள்.

நல்ல காலம் பிறந்தது.நல்ல விலைக்கு விற்க ஆரம்பித்தது. ஓவியம் அல்ல; அவளுடைய பாடல்கள்; பல பதிப்புகள் வெளிவந்தன; எல்லாம் உடனுக்குடன் செலவாயின். பணம் குவியலாயிற்று. அவளுக்கு மகிழ்ச்சி தான்—ஆனாலும், பூனையும் குழந்தையும் மட்டும் விலை போகவில்லையே என்ற விசாரம் அவளுக்கு.

ஒருநாள், டெலிபோனில் யாரோ பேசுகிறார்கள்—அவள் பதில் அளிக்கிறாள்.

"பேட்ஸ் இருக்கிறாரா?"

"இல்லையே. அப்படி ஒருவரும் இங்கு கிடையாதே."

"எட்டாம் நம்பர் வீடுதானே?"

"ஆமாம்."

"மாடி அறையில் இருக்கிறாரே...அவர் தான் பேட்ஸ்... தெரியாதா...பரவாயில்லை.. அவர் வந்ததும் நான் சொன்னதாகச் சொல்லுங்கள்... "

"நாள் என்றால், யார்?"

"பேட்சுடைய நண்பன். அவனுடைய விடுதியில் தங்கி இருப்பவன். அவனுக்குத் தெரியும். உங்களுக்கு, ஏன் அந்த விவரமெல்லாம். வந்த உடன் அவனைக் கேளுங்கள், கட்டு கட்டாக பாடற்புத்தகங்கள் வந்து குவிகின்றனவே. இடம்கொள்ளாமல், அவைகளை என்ன செய்வது? என்று கேளுங்கள். நான் குடி இருக்க இடமே கொஞ்சநாளில் இல்லாமல் போய்விடும்போல இருக்கிறது. அவ்வளவு கட்டுகள் ஒவ்வொருநாளும்—ஒரேவிதமான பாடல்...அது மட்டுமா, எத்தனை பெரிய படம், இயற்கைக் காட்சியாம். சிகப்பும், நீலமும், பச்சையும் மஞ்சளுமாக குழைத்து வைத்திருக்கிறார், அதை என்ன செய்வது....?

"பாடல், யார் வெளியிட்டது? எந்தக் கம்பெனி?"

பாடல் வெளியிட்ட கம்பெனியின் பெயரை டெலிபோனில் அந்த ஆசாமி சொன்னதும், அவளுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. மாடி ஆசாமி ஓவியன் அல்ல—சீமான். அவன்தான், விலை போகாதிருந்த பாடல்களை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறான்—தன்னை உற்சாகப்படுத்த பெரிய ஓவியன் படத்தை வாங்கியதும் மாடி அறைச் சீமானேதான் என்பது புரிந்தது. கோபமும் வந்தது; ஒரு புன்னகையும் தவழ்ந்தது. அவனும் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான். காரணமும் கூறினான்: காதல்.

அது மட்டுமா சொன்னான்? என்னுடைய ஓவியத்தைக்கூட விலைகொடுத்து வாங்க ஒருவர் முன்வந்திருக்கிறார்; இதோ, கடைக்காரருக்கு, அவர் அனுப்பிய கடிதம் என்று கூறி ஒரு கடிதத்தைக் காட்டினான். அவள் கூச்சத்துடன் தலை கவிழ்ந்தபடி நிற்கிறாள்—கடிதம் அவள் எழுதியது.

இந்தக் கருத்துடன் தீட்டப்பட்ட சிறு கதை, நான் படித்தது. ஆடவனும் ஆரணங்கும், கதையில்; எனவே காதல், காரணமாக அமைந்தது. நான் வரையும் ஓவியங்களை நண்பர்கள் பார்த்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம், என்னை மகிழச் செய்யவேண்டும் என்ற எண்ணம்தான்—வேறென்ன? அப்படிப்பட்ட பற்றும் பாசமும் கொண்ட நண்பர்களின் முகாமாக உள்ள கழகத்தில் இருக்கிறோம் என்பதிலே நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் அடையத்தான். செய்வோம். இவ்விதமான பற்றும் பாசமும், கலையாமல் குலையாமல் இருக்கும் வரையில், நமது கழகத்தை எத்தனை பெரிய வலிவுள்ளவர்ங்கள் கூடித்தாக்கினாலும் அச்சமில்லை என்ற உணாச்சி என்னை ஊக்குவித்தபடி இருக்கிறது.

6—5—64

பகல் பொழுதைக் கழிப்பதைவிட, இரவுகள்தான் அதிகமாகத் தொல்லை தருகின்றன. அதிலும் இப்போது மிகக் கடினமாக இருக்கிறது. செங்காய்களைப் பறித்து வந்து, அவை கனிவதற்காக வைக்கோற் போரில் போட்டு ஒரு அறையில் போட்டு மூடிவைப்பார்கள். குமுறிக் கனிவதற்காக, இரவு, அறைகளிலே உள்ள நிலைமை இதுபோல். காற்று துளியும் கிடையாது. வியர்வை பொழிந்தபடி, இரண்டு மணிக்காவது முன்பு தூக்கம் வரும். இப்போது மூன்று, நான்குகூட ஆகிவிடுகிறது. பகலில் உள்ள வெப்பத்தை இயற்கையாக வீசும் காற்று தணியச்செய்கிறது; இரவில் ஒரே புழுக்கம். நாங்கள் உள்ள பகுதியில் உள்ள மரங்களில் சிலவற்றில் இலை உதிர்ந்து, மொட்டையாகி நின்றன. பாதாம் மரத்தின் இலைகள் பச்சையாக இருந்தவை, இரத்தச் சிகப்பாக மாறின; பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது; ஆனால் சிகப்பு கருஞ்சிவப்பாகி, மஞ்சள் கலந்ததாகி, சருகாகி, உதிர்ந்துவிட்டன. நான்கூட வேடிக்கைக்காக நண்பர்களிடம் இங்கே கூறினேன்—உங்களுக்கெல்லாம், எப்போது தெரியுமா? இந்த பாதாம் மரத்திலுள்ள மற்ற இலைகளும் உதிர்ந்ததும் என்று. இலைகள் உதிர்ந்து, மொட்டையாகி விட்ட அந்த மரம், இந்த நிலையில் தன்னை உலகம் விரும்பாது என்பதால் மேலும் மறுபடியும் துளிர்க்கத் தொடங்கிவிட்டது. மரத்திலேயே கல்லறையும் தெரிகிறது, தொட்டிலும் தெரியத் தொடங்குகிறது. இங்கு உள்ள அரச மரம் முன்பு களைத்தும் இளைத்தும் காணப்பட்டது. இப்போது பச்சைப் பசேலென மாறிக்கொண்டு வருகிறது. தொலைவிலிருந்து பார்க்கும்போது, இலைகளை எடுத்துத் தடவி மகிழலாமா என்றுகூட ஆசை பிறக்கிறது. சற்றுத் தொலைவில், நாங்கள் உள்ள பகுதிக்கு வெளியே மற்றோர் அரச மரம். அந்த மரம், இந்த நேரத்தில், மொட்டையாகிக் கொண்டு வருகிறது; பத்து நாட்களுக்கு முன்பு இலைகள் அவ்வளவும் மஞ்சளாகி, காலைக்கதிரவன் ஒளியில் பொன்தகடுகள்போல காட்சி அளித்து வந்ததைக் கண்டேன். இப்போது, இலைகள் வேகவேகமாக உதிர்ந்துவிடக் காண்கிறேன்; வெகு விரைவில் மொட்டையாகி வருகிறது. அந்த அரசமரத்தில், காக்கை கூடு ஒன்று அமைத்துக்கொண்டிருக்கிறது, உச்சிக்கு அருகில். இங்கு அறையிலிருந்து பார்த்தாலேகூடத் தெரிகிறது. முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் நிலை போலும். அதனால், காக்கை காவல் காத்தபடி இருக்கிறது; ஒரு காக்கை காவல் பார்க்கும் போது மற்றோர் காக்கை இரைதேட வெளியே செல்கிறது. முறை போட்டுக்கொண்டு வேலை பார்க்கின்றன. இதைப் பார்த்துவிட்டு, எனக்குக் காட்டி, என்னையும் பார்க்கச் சொன்னவர் அன்பழகன். எதற்காகப் பார்க்கச் சொன்னாரோ தெரியவில்லை! ஒரு வேளை, காக்கை குருவிகள்கூட குடும்பத்தைக் கட்டிக்காத்து வருகின்றனவே, நீ, எங்களை எல்லாம் குடும்பத்தைக் கட்டிக்காத்திடும் கடமையையும் மறந்து சிறையிலே வந்து வாடும்படி செய்திருக்கிறாயே, நியாயமா என்று கேட்கிறாரோ! தெரியவில்லை. அவர் அவ்விதமான எண்ணம் கொண்டிருந்தாலும் கொண்டிரா விட்டாலும், பலருடைய குடும்ப வாழ்க்கையில், சோகப் புயல் வீசம் நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை நான் உணருகிறேன்; ஆனால் அவர்கள் தங்கள் நெஞ்சு உரம் காரணமாக, அந்தச் சோகத்தைத் தாங்கிக்கொள்கிறார்கள் என்பதையும் நான் உணர்ந்து பெருமிதமடைகிறேன்.

நாட்டு மக்களை, இன்றுள்ளவர்களை மட்டுமல்ல, எதிர்காலத்தவர்களையும் வாட்டக்கூடிய ஒரு கேட்டினை எதிர்த்து, சிலராவது, தம்மைத்தாமே வருத்திக்கொள்வது தூயதோர் தொண்டு என்ற உணர்ச்சி, தனிப்பட்ட வாட்டவருத்தத்தை விரட்டிவிடக்கூடிய, வலிவு கொண்டது, மேன்மை நிறைந்தது. கழக வளர்ச்சியைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், நமது அறப்போர் குறித்துக் கேலிபேசுவதை அறிந்து, துவக்கத்தில், சிறிதளவு துக்கப்பட்ட தோழர்கள்கூட, தாங்கள் சிறைபுகுந்திருப்பது நல்ல காரியத்துக்காக, அதன் பலன் உடனடியாக இல்லாவிட்டாலும் ஓர் நாள் கனிந்தே தீரும் என்ற நம்பிக்கை பெறுகிறார்கள். இந்தி ஆதிக்கத்தைத் தமிழர்கள் எதிர்க்கின்றனர் என்று இன்று எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல, எதிர்ப்புணர்ச்சி காட்டப்பட்டது என்று என்றென்றும் கூறித் தீரவேண்டிய, ஒப்புக்கொண்டாக வேண்டிய ஒரு நிலை ஏற்படத்தான்போகிறது. கொடுமைகளை எதிர்த்து பல்வேறு நாடுகளில், பல்வேறு காலங்களில் சிறை சென்றவர்களைப்பற்றிப் பேசி, எழுச்சி பெறுவதிலே, தனி இன்பம் காண்கிறோம். இந்த சென்னைச் சிறையில், நான் இந்தி எதிர்ப்பு காரணமாகவே முதன்முதலாகவே 1939-ல் புகுந்தேன். அந்த நாட்களைப்பற்றி, நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். சிறையில், அப்போதும் இதேபோலக் கெடுபிடி இருந்ததா? என்று நண்பர்கள் கேட்டார்கள். இல்லை! அப்போது இருந்த முறையிலே பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அப்போது ஒரு பகுதியில் உள்ள நமது தோழர்கள் மற்றோர் பகுதியில் உள்ள நமது தோழர்களைப் போய் பார்த்துவிட்டு வரக்கூட அதிகாரிகள் அனுமதி அளித்தார்கள். வாராவாரம் நடந்தப்படும் 'பார்வையிடும்' சடங்கிலே கூட, எங்களை ஈடுபடுத்துவதில்லை. இப்போது காங்கிரஸ் அரசுக்கு நாம் விரோதிகள், ஆகவே, நாம் எவ்வளவுக்கெவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கிறோமா அவ்வளவுக்கவ்வளவு காங்கிரஸ் அரசு மகிழ்ச்சி அடையும் என்ற ஒரு இலக்கணத்தை வைத்துக்கொண்டே, சிறை நிர்வாகிகள் நடந்து கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. முன்பு, இவர்கள் இந்தியை எதிர்க்கிறார்கள் என்று மட்டுமே, காங்கிரஸ் அரசு நினைத்தது; இப்போது இவர்கள் இந்தியை அல்ல, காங்கிரஸ் அரசை எதிர்க்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அந்த நினைப்பு காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்குக் கசப்பையும் கோபத்தையும் கிளப்பிவிடுகிறது. ஒரு கட்சி அரசு நடத்துவதை எதிர்த்து ஆட்சி நடத்தும் வாய்ப்பினை எமக்குத் தாருங்கள் என்று பொதுமக்களை அணுகிக் கேட்கும் உரிமைதான், ஜனநாயகத்துக்கு அடிப்படை. இந்த அடிப்படையில் நம்பிக்கை அற்றுப்போகிற காரணத்தால், காங்கிரஸ் அரசையா எதிர்க்கிறீர்கள் என்று, காங்கிரஸ் காரர்கள் கனல் கக்குகிறார்கள். அந்தக் கனலின் சிறுபொறிகள், இன்றைய சிறைநிர்வாகத்தில் நிரம்பி இருக்கக் காண்கிறேன். முன்பு நிலைமை இப்படி இல்லை என்று நான் விவரம் கூறினேன்.

7—5—64

மாயவரத்திலிருந்து தருவித்த எண்ணெய் பல நாள் தடவியும், கைவலி நீங்கவில்லை. சலித்துப்போய், இன்று அந்த எண்ணெய் தடவிக்கொள்வதை நிறுத்தி விட்டேன். வெளியே வந்தபிறகு தக்க முறையில் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நண்பர்கள் வலியுறுத்தினார்கள். நானும் அது தேவைதான் என்பதை உணருகிறேன்.

இராமாயணப் பிரச்சாரம், கதா காலட்சேபமாக சென்னையிலும் வெளி இடங்களிலும் வேகமான அளவிலே நடத்தப்பட்டு வருவதுகண்டு, பெரியார் கடுங் கோபம் கொண்டிருக்கிறார்; எதிர்ப்பிரசாரத்துக்காகத் தொண்டர் படை நடத்தப்போகிறார். என்று செய்தி வந்திருப்பது பற்றி இன்று நண்பர்கள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தனர். பெரியார், எந்த நேரத்தில் எவ்விதமான போக்குடன் நடந்துகொள்வார் என்பதை நம்மாலே கூறமுடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இத்தகைய எதிர்ப்பு காங்கிரசுக்குக் கேடாக முடியும் என்று அவருக்கு எடுத்து கூறப்பட்டால் போதும், தமது திட்டத்தை விட்டுவிடுவார். இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால், இராமாயண காலட்சேபம் செய்யும் கிருபானந்தவாரியாரும், இராமாயுண எதிர்ப்புப்பிரசாரம் செய்யும் பெரியாரும், காங்கிரசுக்கே ஓட்டுச் சேகரிக்கும் காரியத்தைச் செம்மையாகச் செய்கிறார்கள். இராமாயண ஆதரவு இராமாயண எதிர்ப்பு எனும் இரண்டுமே, காங்கிரசுக்கு ஓட்டுப் பெற்றுத்தரப் பயன்படுகிறது. பகுத்தறிவாளர், பழமை எதிர்ப்பாளர், துடிப்புள்ளபோக்கினர் ஆகியோரிடம் பெரியார் இராமாயண எதிர்ப்புப் பிரசாரம் செய்யட்டும், கையோடு கையாகக் காங்கிரசுக்கு ஓட்டு திரட்டித்தரட்டும், பெற்றுக் கொள்ளலாம்; பழமை விரும்பிகள், பக்தர்கள் ஆகியோரிடை கிருபானந்தவாரியார் இராமாயண காலட்சேபம் சுவையாகச் செய்யட்டும், அதே மூச்சில் காங்கிரசுக்கு ஓட்டு வாங்கித்தரட்டும், பெற்றுக்கொள்ளலாம்; நமக்கு இந்த இரண்டு உக்திகளில் எது கெலித்தாலும் எது தோற்றாலும் கவலை இல்லை, நமக்கு வேண்டியது ஓட்டு, இருவரும் அதை நமக்கு வாங்கிக் கொடுக்கட்டும், என்பது இன்று தமிழகக் காங்கிரசை நடத்திச் செல்லும் முதல்வருடைய எண்ணம். நாட்டு மக்கள் மனதை, இராமன், ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன. நமக்கு வேண்டியது நாட்டை ஆளும் ஓட்டு வலிவு—அதை இராமனைக் கடவுள் அவதாரம் என்று கூறிக்கொள்பவரும், கபடவேடதாரி என்று கண்டிப்பவரும், நமக்காக அரும் பாடுபட்டு பெற்றுத்தர முன்வருகின்றபோது, நாம் ஏன் அந்தப் பொன்னான வாய்ப்பை இழந்துவிடவேண்டும்—இராமாயண காலட்சேபமும் நடக்கட்டும், எதிர்ப்பும் நடக்கட்டும்; என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது என்பது குறித்து எடுத்துச் சொன்னேன்.

பெரியாரின் போக்கு எப்போது எப்படி வடிவமெடுக்கும் என்று அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏது—-முன்போல இன்று இந்தப் பேச்சு எழுந்தபோது, அவருடன் இருந்த நாட்கள், பிரிந்துவந்த நிலை, இவைபற்றி எண்ணிப்பார்த்தேன். கணக்கெடுத்துப் பார்க்கும்போது, பெரியாருடன் இணைந்திருந்து நான் பணியாற்றிய காலத்தைவிட, அவரைவிட்டுப் பிரிந்து வந்து பணியாற்றிவரும் காலம் அளவில் அதிகம் என்பது தோன்றிற்று. நான் அவருடன் மிக நெருக்கமாக இருந்து பணியாற்றிய காலம் 1939லிருந்து 1949 வரை—பத்தாண்டு காலம்—அவரை விட்டுப் பிரிந்து பணியாற்றத் தொடங்கி இப்போது பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கணக்கு பார்த்த பொழுதுதான், எனக்கே வியப்பாக இருந்தது—நேற்று பிரிந்ததுபோல ஒரு நினைப்பு இருந்துவந்தது—அது எத்தகைய பொய்த் தோற்றம் என்பதை, இந்தக் கணக்கு மெய்ப்பித்தது.

இன்று எனக்கு ஒரு புதிய நட்பு கிடைத்தது—எதிர்பாராத முறையில். நூற்றுக்கணக்கான சிட்டுக் குருவிகள் இங்கு உள்ளன என்பதுபற்றி முன்பு குறிப்பிட்டேன். அந்தக் குருவிகளில் ஒன்றை, பக்குவமாகப் பறந்து தப்பித்துக்கொள்ள முடியாததை, ஒரு காக்கை கொத்திவிட்டது—இங்குள்ளவர்கள் காக்கையை விரட்டி குருவியைக் காப்பாற்றினார்கள்—என்னிடம் வந்து சேர்ந்தது. எனக்குத்தான், பறவைகள் வளர்ப்பதிலே மிகுந்த விருப்பமாயிற்றே, குருவி கிடைத்ததாலே மிகுந்த மகிழ்ச்சி. அதை எப்படி வளர்ப்பது என்பதுபற்றி நெடுநேரம் பேசி, நாளையத்தினம் ஒரு கூண்டு செய்வது என்று முடிவு செய்து, இன்றிரவு மட்டும் ஒரு பெரிய கூடையில் குருவியைப் போட்டு வைக்கலாம் என்று திட்டமிட்டோம். பகலெல்லாம் குருவியைப் பார்ப்பதிலேயும், அதற்குத் தீனி தருவதிலேயும் தனியான மகிழ்ச்சி பெற்றேன். மாலை, அறை பூட்டப்படுகிறபோது பெரிய ஏமாற்றம் என்னைத் தாக்கிற்று, குருவி எப்படியோ எங்கேயோ பறந்து போய்விட்டது. தேடிப்பார்த்துப் பயன் காணவில்லை. அந்தக் கவலையுடன் இன்றிரவைக் கழிக்க வேண்டியதாகிவிட்டது.

இன்று பிற்பகல், மதியை பெரிய மருத்துவ மனைக்கு நாளையத்தினம் அனுப்பப்போவதாக, டாக்டர் கூறிவிட்டுச் சென்றார். என் கைவலிக்கும் ஊசி போட்டார்.

8—5—64

குருவி காணாமற் போய்விட்டது பற்றி நான் மிகுந்த கவலையாக இருப்பது தெரிந்த நண்பர்கள், இன்று விடிந்ததும், குருவியைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தக் குருவி, தப்பிச் சென்றதே தவிர, நீண்டதூரம் பறந்து போக முடியாததால், காக்கைக்குப் பயந்துகொண்டு, என் அறைக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் மாமரத்தில் பதுங்கிக் கொண்டிருக்கிறது. விடுவார்களா! பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தார்கள்—மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதை மீண்டும் ஒருமுறை இழந்துவிடலாமா? ஆகவே உடனே, கூண்டு தயாரிக்கும் வேலையைத் தொடங்கினோம். தோழர்கள் கே.டி.எஸ்.மணியும் ஏகாம்பரமும், இரண்டு அட்டைகளை, மூங்கில் குச்சிகள், தென்னை ஈக்குகளைக் கம்பிகளாக்கி, கூண்டாக மாற்றிவிட்டார்கள். உள்ளே குருவி உட்கார, ஊஞ்சல் போன்ற அமைப்பு—தீனிக்கு ஒரு சிறு குவளை —பல்பொடி டப்பா—மற்றோர் குவளை தண்ணீருக்கு! இத்தனை ஏற்பாடுகளையும் செய்து முடித்துக் கொடுத்தார்கள்—குருவி கூண்டிலே, முதலில் கவலையுடன் இருந்தது—ஆனால் மெல்ல மெல்ல இரை தின்னத் தொடங்கிற்று. அதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே, நீண்ட நேரம் ஈடுபட்டிருந்தேன். என்ன இருந்தாலும் தன்னிசையாகப் பறந்து திரிந்து மகிழ்ந்துகொண்டிருந்த குருவியைப் பிடித்துக் கூண்டிலிட்டு இம்சிக்கலாமா; பாபம் அல்லவா என்று கேட்கத் தோன்றும் பலருக்கும். இந்தக் குருவி, இப்போதுள்ள நிலையில் வெளியே விட்டால், காக்கையால் கொத்தப்பட்டுச் சின்னாபின்னமாகிவிடும். ஆகவே இப்போது அதைக் கூண்டிலே. போட்டிருப்பது, அந்தக் குருவிக்கே நல்லது தான்.

பாபம் என்று கூறுவார்களே என்ற எண்ணம் எனக்குத் தோன்றாமலில்லை! இரண்டு நாட்களாக நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம், பாபம் என்றால் என்ன வினாவுக்கு விடைகாணும் முயற்சிபற்றியது. சித்திரலேகா எனும் கதை!ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது; மொழிபெயர்ப்பு. சாம்ராஜ்யம் அமைத்து அரசாண்ட சந்திரகுப்தன் காலத்தையொட்டிப் பின்னப்பட்டுள்ள கதை. இதிலே, பாபம் என்றால் என்ன என்ற பிரச்சினை விவாதிக்கப்படுகிறது. அந்தப் பிரச்சினையைச் சுவையான ஒரு கதையாக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர்.

ரத்னாம்பர் என்றோர் யோகி—அவருக்கு சிவதாண், விசால்தேவ் எனும் இரு சீடர்கள். உபதேசம் முடிந்து, சீடர்கள் குருவைவிட்டுப்பிரியும் நேரம்—அவர்களுக்கு ஒரு ஐயப்பாடு எழுகிறது. பாபம் என்றால் என்ன, என்பது பற்றியே ஐயப்பாடு. குரு கூறினார், பாபம்பற்றிய விளக்கம் அவ்வளவு எளிதாகக் கூறிவிடமுடியாது, வெறும் தத்துவ விளக்கத்தால் மட்டும் புரிந்துவிடக் கூடியதல்ல. அனுபவத்தின் மூலம் தான், பாபம்பற்றிய விளக்கம் பெற முடியும். வாருங்கள் உங்களை நான் அதற்கான யாத்திரையில் ஈடுபடுத்துகிறேன் என்று கூறி, மலைச்சரிவை விட்டுக் கிளம்பிச் சென்று, விசால்தேவ் எனும் சீடனை குமாரகுரு எனும் யோகியிடம் அழைத்துச் சென்று, இவன் என் சீடன்—பாபம்பற்றி விளக்கம் பெற விழைகிறான். முற்றும் துறந்தவரான தங்களிடம் ஓராண்டு சீடனாக இருந்து அந்த அறிவு பெறட்டும் என்று கூறுகிறார். சிவதாண் என்பவனை, பாடலிபுரத்தில் காமக்களியாட்டத்திலே மூழ்கிக்கிடக்கும் ஒரு சீமான், பீஜகுப்தா எனும் பெயரினன், அவனிடம் அழைத்துச் சென்று விவரம் கூறி, அங்கு இருந்துகொண்டு, பாபம் என்றால் என்ன என்பதற்கான விளக்கம் பெற்றுக்கொள் என்று கூறுகிறார். இரு சீடர்களும் ஓராண்டுக்குப் பிறகு தன்னை வந்து பார்த்து, பெற்ற பாடம்பற்றிக் கூறவேண்டும் என்பது குருவின் ஏற்பாடு.

பாடலிபுத்ரம் முழுவதும் மதிப்பு மிகப்பெற்ற யோகி குமாரகிரி—சாணக்கியரிடமே தத்து வார்த்த வாதம் புரிறார்—அரச அவையில் தனி இடம் பெற்றவர்—முற்றுந் துறந்தவர்.

பாடலிபுரத்திலேயே இவனைப்போலக் குடியிலும் கூத்தியரிடம் கூடிக்கிடப்பதிலும் எவரும் இல்லை என்ற பெயரெடுத்தவன் பீஜ்குப்தா. பீஐகுப்தா ஆடலழகி சித்ரலேகாவிடம் மையல் கொண்டு, அவளுடன் காமக்களியாட்டம் நடத்திக் கிடப்பவன். அங்கு சிவதாண்.

சித்ரலேகா ஆடற் கலையில் வல்லவள்—பேரழகி—மன்னர் அவையிலும் மாளிகை வட்டாரத்திலும், அவளுடைய அழகொளி, கலையொளி, புகழொளி பரவி இருந்தது. பொற்கொடி போன்ற சித்திரலேகா, இளம் விதவை: பார்ப்பன குலம்.

ஒவ்வொரு நாளும், சித்திராவும் பீஜகுப்தாவும் மது அருந்தி, மகிழ்ச்சியில் மூழ்குபவர்—பாப விளக்கம் பெற வந்திருந்த சிவன், மதுவை உட்கொள்ள மறுக்கிறான், சில நாட்கள். துவக்கத்தில் சித்திரா சிரிப்பொலி காட்டுகிறாள். அவன் மதுக் கிண்ணத்தைத் தூக்கிக் கொள்கிறான். போதையின் இனிமையைப் பெறுகிறான் இளைஞன் என்று கெக்கலி எழுகிறது.

காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் அந்த இருவரிடமும், யோகியிடம் சீடனாக இருந்து மிகுந்த உபதேசம் பெற்ற சிவன், துளியும் வெறுப்பு கொள்ளவில்லை, கோபம் கொள்ளவில்லை—பீஜகுப்தாவின் தாராளத்தன்மையும், சித்ராவின் லலிதமும் அவனை அவ்விருவரிடம் மிகுந்த நட்புகொள்ளச் செய்கிறது.

ஒரு நாள் அரச அவையில் தத்துவவிவாதம்—சாணக்கியன் ஒருபுறம், குமாரகிரி போன்ற யோகிகள் மற்றோர் புறம்.