கைதி எண் 6342/கடமை நினைவுகள்

2. கடமை நினைவுகள்...
(கடிதம் 2 — காஞ்சி, 27-9-64)

தம்பி

ஒருபுறத்தில், 'திறந்த சிறை'த் திட்டம் அமுலாக்கப் பட்டு நல்ல வெற்றி கொடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அதேபோது வேறோர் புறத்திலே, தங்கள் மனதுக்குச் சரியென்று பட்ட கொள்கைக்காகக் கிளர்ச்சியில் ஈடுபடும் பொதுவாழ்க்கைத் துறையினருக்கு, போலீஸ் கொட்டடியிலும், சிறைக்கூடத்திலும் பழைய முறையிலே நடத்தப்படும் போக்கு இருந்து வருகிறது.

போலீஸ் என்றால் கண்டிப்பு என்றுதான் பொருள். சட்டத்தைக் காத்திட அவர்கள் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள்பற்றி நாம் வருத்தப்பட்டுக் கொள்வதோ கோபித்துக்கொள்வதோ கூடாது, முறையாகாது என்று ஒரு முறை, இன்றைய முதலமைச்சர் பக்தவத்சலனார், சட்டசபையிலே பேசியதை நான் கேட்டிருக்கிறேன். தம்முடைய அனுபவத்தையே கூடச் சொன்னார்: "ஒருமுறை சத்யாக்கிரகக் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது என்னை ஒரு போலீஸ் அதிகாரி அடித்தார்; தடியால் அடித்தார்; கையிலே அடித்தார்; கையிலே அடிபட்டது; வலிதான், பொறுத்துக் கொண்டேன்; அடித்தவரிடம் கோபித்துக் கொள்ளவில்லை. நான் மந்திரியான பிறகுகூட, அவரைப் பார்த்தேன்; கோபித்துக்கொள்ளவில்லை" என்று பேசினார். நான்கூட போலீஸ் அதிகாரிகளிடம் கோபம் கொள்ளவில்லை. கோபம் கொள்ளச் சொல்லவும் இல்லை. நான் கேட்பதெல்லாம், வெள்ளைக்கார ஆட்சியின்போது இருந்து வந்த "தர்பார்" முறைகளை மாற்றக்கூடாதா? மாற்றவேண்டிய பொறுப்பு பக்தவச்சலனார்களுக்கு இல்லையா, என்பது தான். அதேமுறை! அதே அமுல்! அதே தர்பார்!—என்றால், இவர்கள் ஆட்சிக்கு வந்ததால், ஆள் மாறிற்றே தவிர முறை மாறவில்லை என்றுதானே ஏற்படுகிறது. இது புகழ்தரும் நிலையா? என்றுதான் கேட்கிறேன்.

லாக்-அப்பில் என்னைத் தள்ளிவிட்ட பிறகு, போலீஸ் அதிகாரிகளும் இதுபோல எண்ணாதிருக்க முடியுமா! தம்பி! நீயும் நானும், நமக்குத் தோன்றுவதை வெளியே கூறுகிறோம். அவர்களுக்கு அந்த உரிமையும் இல்லையே! இங்குதான் இதழில் படித்தேன், ஒரு போலீஸ்காரர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணியினர் ஒருவருடைய தாயார் இறந்துபோனதற்கு அனுதாபக் கடிதம் எழுதியதற்காக, வேலைக்கே ஆபத்து வந்ததுபற்றியும், சென்னை உயர்நீதி மன்றம்வரை சென்று அந்தத் தோழர் முறையிட்டு நீதிபெற்றதையும் பற்றிய தகவலை! இந்த நிலையில் நாட்டு ஆட்சி இருக்கும்போது, நெஞ்சில் எழுவது நாவுக்கு வருமா! சில கடமைகளைத்தான் அவர்களால் செய்ய முடிகிறது. அந்தக் கடமை உணர்ச்சியுடன், மாலையில் எனக்குச் சிற்றுண்டியும் காப்பியும் தருவித்தார்கள். நான் அதற்குள் அதிகாரிகள் உட்காரும் பெஞ்சு நாற்காலி ஆகியவற்றிலே அமரும் நிலையிலிருந்து லாக்-அப் ஆகும் நிலைக்குச் சென்றுவிட்டவன்! ஆகவே, சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு கொட்டடிக்குச் சென்றேன். "உட்கார்ந்துதான் சாப்பிடுங்களேன்!" என்று ஒரு குரல் கேட்டது. அதிகாரிதான்! அந்த ஒரு வாக்கியத்தில், மனித உள்ளம் சில நிலைமைகள் காரணமாக அடையும் வேதனை முழுவதும் தோய்ந்து இருந்தது.

இரவு மறுபடியும் லாக்-அப்! நான் எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தில் ஒன்றைக் கேட்டு வாங்கி, கம்பிகளின் இடுக்கு வழியாக வந்த ஒளியின் துணைகொண்டு படித்துக் கொண்டிருந்தேன். இடம், போலீஸ் கொட்டடி! நிலை, லாக்-அப்! படித்த புத்தகமோ கிரேக்க நாட்டில் வாழ்ந்து வந்த கீர்த்திமிக்கவர்களைப்பற்றி புளுடார்ச்சி என்பார் எழுதிய, சுவையும் எழுச்சியும் தரவல்ல ஏடு.

துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர், கொட்டடிக்கு வெளியே காவல்!

பனிரெண்டு மணிக்குமேல் தூங்கிவிட்டேன்—பிறகு, மேலே பன்னீர் தெளிப்பதுபோல, தூற்றல் விழவே, விடிவதற்குள் விழித்துக் கொண்டேன். நான் படுத்திருந்த இடத்தைச் சுற்றி மழைத் தண்ணீர் சிதறிக்கிடந்தது. கொட்டடி அவ்வளவு ஒழுக்கல். போலீஸ் அதிகாரிகள், தயாராக நிற்கக் கண்டேன். வெளியே கொண்டுவரப் பட்டேன்; காப்பி தரப்பட்டது, துணைக்கமிஷனர் வந்திருந்தார்; என்னை அழைத்துக் கொண்டு கிளம்பினார், கமிஷனர் அலுவலகத்துக்கு. 17-ந் தேதி காலை, திருவல்லிக் கேணி கடற்கரை பக்கமாகச் சென்றேன் என்றேனே, இந்தப் பயணம்தான்!

புறப்படுவதற்கு முன்பு, துணைக் கமிஷனர், பத்திரிகையில் வெளிவந்த கழக அறிக்கைபற்றி என்னிடம் கூறினார்; பேப்பரில் பார்த்திருப்பீர்களே!—என்றார். இல்லை—பேப்பர் பார்க்கவில்லை என்று நான் கூறவில்லை. அவரே அதை யூகித்துக்கொண்டு, போலீஸ் அதிகாரிகளைப் பார்த்து, "ஏன் அவருக்கு, பேப்பர் தரவில்லையா?" என்று கேட்டார். இல்லை! என்றார்கள் அவர்கள். விதி இல்லையே—என்று கூறுவதாகவே அவர்களின் பேச்சு உணர்த்திற்று. அதைக் கேட்டு, துணைக்கமிஷனர், "செச்சே! என்னப்பா! இப்படியெல்லாமா நடந்துகொள்வது? பேப்பர் கொடுத்தால் என்ன? இவர் என்ன, கொள்ளை வழக்கில் ஈடுபட்டவரா! வம்புவல்லடியில் சிக்கினவரா!" என்றெல்லாம் பேசினாரா, என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? அப்படி ஒன்றும் அவர் கேட்கவில்லை. மேலதிகாரி கேள்வி கேட்டார்; உட்பட்ட அதிகாரிகள் பதில் அளித்தார்கள். ஒழுங்காக நடந்து கொண்டார்கள் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது.

பேப்பர் கொடுக்கவில்லையா? என்று கேட்டாரே மேலதிகாரி, அந்த அரை விநாடி இதயம் பேசுகிறது; பிறகு, அதிகாரி ஆகிவிட்டார்.

வழியிலேதான் சொன்னார்; "உங்கள் சம்பந்தியை விடுதலை செய்துவிட்டோம்" என்று.

கமிஷனர் அலுவலகத்தில் நடைபெறவேண்டிய சட்டச் சடங்குகள் முடிந்து, என்னைச் சைதாப்பேட்டை சப்ஜெயிலில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

அங்க அடையாளங்கள், உடைமை இவைபற்றிய குறிப்புகள் எழுதிக்கொள்ளப்பட்டன; மூக்கின் மீது ஒரு மச்சம், இடதுகை தோள்பட்டைச் சமீபம் ஒரு மச்சம். வயது-55! உயரம்பற்றி விவாதம் வந்தது. சுவரிலேயே குறிபோட்டிருந்தார்கள்—5-3! என்று கணக்கு காட்டிற்று. இவ்வளவும், பொதுவாழ்க்கைத் துறையினர் சம்பந்தப் பட்ட வழக்குகளில் தேவைதானா?

அடையாறு போலீஸ் கொட்டடிக்கும், சைதைச் சிறைக்கும், என்வரையில் உடனடியாகக் கிடைத்த 'முன்னேற்றம்'—இரண்டு கம்பளிகள் சைதையில் தரப்பட்டன. ஒன்று விரிப்பு, மற்றொன்று போர்வை, அல்லது தலைக்கு! இதிலே என்ன சுகம் கண்டாய் அண்ணா! என்று கேட்கத் தோன்றும்! அந்தச் சுகம், ஒரு இரவு போலீஸ் கொட்டடியில் அடைபட்டுக் கிடந்தவர்களுக்கு மட்டுந்தான் புரியும், தம்பி! வெறும் வார்த்தைகளால் விளக்க இயலாது.

1938-ல் இந்தி எதிர்ப்பின் போதும் இப்படித்தான் நமது தோழர்களை எல்லாம் சென்னைச் சிறையில் போட்டு விட்டு, என்னை மட்டும் இதே சைதைச் சிறையில் கொண்டுவந்து வைத்திருந்தார்கள். இப்போது நினைத்துக் கொண்டாலும் எனக்குச் சிரிப்பு வருகிறது—தொத்தா என்னை அங்கு வந்து பார்த்ததும், அங்கு ஜெயிலராக இருந்த முஸ்லீமிடம், என் உடல் நிலை பற்றிச் சொல்லி, குளிக்க வெந்நீர் போட்டுக் கொடுக்கச் சொன்னதும், அந்த "அனுபவசாலி" "இங்கு எப்போதும் வெந்நீர்தான் குளிப்பதற்கு!! என்று பதில் அளித்ததும். இப்போது தொத்தாவின் உடல்நிலை எழுந்து நடமாடக் கூடியதாக இல்லை; பழையபடி இருந்திருந்தால், இந்நேரம் ஏழெட்டு முறையாவது வந்து பார்த்திருப்பார்கள். இந்த வயதில் நான் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து பரிவுடன் பணிவிடை செய்ய வேண்டியது முறை. ஆனால், நான் மேற்கொண்டுவிட்ட கடமை, ஒரு மகன் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செய்ய முடியாமலாக்கி விட்டது. இதைத் தொத்தாவும், அம்மாவும் உணர்ந்துவிட்டனர் என்பது என் உள்ளத்தில் எழும் சங்கடத்தைப் பாதியாக்கி விடுகிறது. இருந்தாலும், அவ்வப்போது மனம் உறுத்தியபடியும் இருக்கத்தான் செய்கிறது. என் பொது வாழ்க்கைத் துறை என்னுடைய இயல்புகளையே அடியோடு மாற்றிவிட்டது என்பதை அவர்கள் இருவரும் மிக நன்றாக அறிவார்கள். தொத்தாவாகிலும், பேசித் தன் உணர்ச்சிகளைக் கொட்டிவிடுவதன் மூலம், மனதை அழுத்திக் கொண்டிருக்கும் வேதனையை ஓரளவுக்குக் குறைத்துக் கொள்வார்கள். அம்மா அப்படி அல்ல; மனதிலேயே வேதனையைத் தாங்கித் தாங்கித் தத்தளிக்கும் நிலை. எல்லாம் புரிகிறது; ஆனால், நான் மேற்கொண்டுள்ள கடமைக்காக, இந்த வேதனையை அவர்களும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்ற நிலை நிலைத்துவிட்டது. இதிலிருந்து இனி விடுதலை ஏது!
மற்றத் தடவைகளை விட, இம்முறை தொத்தா, மனதிலே இயற்கையாக ஏற்படக்கூடிய சங்கடத்தை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, மிகக் கலகலப்பாக இருந்து, என்னை காஞ்சிபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தது, என் உள்ளத்துக்குப் புதியதோர் எழுச்சியைத் தெம்பைக் கொடுத்தது. நல்ல காரியத்துக்காகப் பணியாற்றுகிறான் மகன் என்ற பெருமிதம், அவர்களின் கண்ணொளியிலே கண்டேன். என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்டவர்கள் முதுமையால் நலிவுற்று இருக்கும் நாட்களில் நான் இங்கு வந்திருக்கிறேன். என் துணைவி ராணி, இம்முறை சிறையிலே என்னை வந்து பார்த்தபோது, கண்களில் நீர் துளிர்த்தது கண்டு, மிகவும் சங்கடப்பட்டேன். வயதான இருவருக்கும், தைரியம் கூறிக்கொண்டிருக்கும் பொறுப்பு உனக்கு, நீயே இப்படி இருக்கலாமா? என்று கேட்க விரும்பினேன்—ஆனால், நான் மனைவி மக்களுடன், பேசிக் கொண்டிருக்க அனுமதி கிடைத்ததே தவிர, எங்களுடன், இரண்டு சிறை 'சூப்பரிண்டுகள்' ஒரு ஜெயிலர், மற்றோர் அதிகாரி, இவ்வளவு பேர்கள் இருந்தார்கள். என் மூத்த மருமகப் பெண் சரோஜா இத்தகைய இடம் பற்றி, புத்தகத்தில்தான் படித்திருக்க முடியும்—எனக்கு மருமகப் பெண்ணாக வந்த பலன்—சிறையையும் வந்து பார்த்தாகி விட்டது. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பரிமளமும், அச்சகப் பொறுப்பையும் பரிமளம் பதிப்பக வேலையையும் கவனித்துக் கொள்ளும் இளங்கோவனும், உடன்வந்தனர். ஒவ்வொரு நாளும், நண்பர்கள் வருகின்றனர்—ஆனால் வழக்கு முடிந்து தண்டனை என்று ஆகிவிட்ட பிறகு, இப்படி அடிக்கடி வரமுடியாது—பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் பார்க்க முடியும். அந்தப் பழக்கம் கவனத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, ராணி, என்னை உடனடியாகச் சைதாபேட்டை சிறையில் வந்து பார்க்க விரும்பியபோது "வேண்டாம் ஒருவாரம் போகட்டும்" என்று சொல்லி அனுப்பினேன். பல சொல்லிப் பயன் என்ன! பொது வாழ்க்கைத்துறையில் முழுக்க முழுக்க என்னை ஒப்படைத்து விட்டேன் என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி என் குடும்பத்தினர் தங்களுடைய நினைப்புகளைச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டியது தான்! வேறு முறை இல்லை!

சைதைச் சிறைக்கு நான் வந்து சேர்ந்ததும், நண்பர் இராகவானந்தத்தின் மூலம், பல வசதிகளைப் பெற முடிந்தது. என்னுடைய தலைமையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கலப்புத் திருமணம் செய்து கொண்ட ராமச்சந்திரன் எனும் தோழர், ரயில்வே துறையில் பணியாற்றி வருபவர், சைதையிலிருந்து கொண்டு என்னுடைய தேவைகளைக் கவனித்துக் கொண்டார்.

சைதைச் சிறையில் நான் இருப்பதை அறிந்து கொண்ட கருணாநிதி, நாவலர், அன்பில் ஆகியோர் அங்கு வந்தபோதுதான், காஞ்சிபுரத்திலிருந்து நான் புறப்பட்ட போது, வேறு வண்டியில் கிளம்பி வந்து கொண்டிருந்த நண்பர்கள் நடராசன்—கோவிந்தசாமி ஆகியோரும் 'பிடி பட்டார்கள்'—சென்னைச் சிறையில் அடைபட்டார்கள். என்ற செய்தி தெரியவந்தது. மூலைக்கு மூலை வலைவீசி, ஊருக்குஊர் திட்டமிட்டு, கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு வருகிற செய்தி கேள்விப்பட்டேன். இவ்வளவு 'மதிப்பு' அளிக்கமாட்டார்கள், தி. மு. க. கிளர்ச்சி தன்னாலே மங்கிவிடச் செய்வார்கள் என்று கொண்ட அரசியல் அப்பாவிகளை எண்ணிச் சிரித்துக் கொண்டேன். தம்பி! அறப்போர் துவக்கமே செய்யப்படவில்லை; அதற்குள் தமிழகத்தில் 2000 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையிலிருந்து நெல்லைவரை, சேலத்திலிருந்து செங்குன்றம் வரை, கைது செய்யும் படலம்! பெரிய நகரம் மட்டுமல்ல, சிற்றூர்களிலும்! கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஒருமுறை நீயே தயாரித்துப் படித்துப்பார், தம்பி! கழகம் எவ்வளவு உயிரோட்டம் உள்ள அமைப்பாக இருக்கிறது என்பது புரியும்; உன் உழைப்பின் பலன் வீண்போகவில்லை என்பது விளங்கும். எத்தனை வழக்கறிஞர்கள்! எத்தனை பட்டதாரிகள்! பஞ்சாயத்துத் தலைவர்கள்! நகராட்சி மன்றத் தலைவர்! சட்டமன்ற உறுப்பினர்கள்! கண்ணியமான வாழ்க்கை நடத்துபவர்கள்! கிராமத்தில் பெரிய குடும்பத்தினர்! மளமளவென்று நாலுநாட்களில் 2000! இத்தனைக்கும், இந்தப் பட்டியலில் நாவலரும், கருணாநிதியும், மதியும், மனோகரனும், அன்பழகனும், ராஜாராமும், செழியனும், தருமலிங்கமும், சண்முகமும், இப்படிப் பலர் இடம்பெறவில்லை. 'முதல் ரவுண்டு' என்பார்களே அதிலேயே 2000! கழகம் கலகலத்துவிட்டது, பொலபொலவென உதிர்ந்து கொண்டிருக்கிறது என்று ஓசை கிளப்பிக் கொண்டிருப்பவர்கள், திகைத்துப் போகக்கூடிய தொகை அல்லவா இது! திட்டமிட்டு நடத்தப்பட்ட அறப்போரில் ஈடுபட்ட மொத்தப் பேர்களின் எண்ணிக்கை அல்ல? சர்க்கார் பார்த்து, ஊருக்கு நாலு பேர்களையாவது பிடித்துப் பார்ப்போம். ஒரு பீதி ஏற்படுகிறதா பார்க்கலாம் என்ற முறையில் பிடித்தபோது, தொகை 2000 !!

எவ்வளவு வலிவு குறைந்த சர்க்காராக இருந்தாலும், எத்துணை வலிவுடன் நடத்தப்படும் கிளர்ச்சியையும் தடுத்துவிட முடியும்—முடிகிறது. இத்தகைய முறையில், கிளர்ச்சி நடத்தப்படும் என்று முன்கூட்டியே, அறிவித்து விட்டால், முன்கூட்டியே எவறவர் ஈடுபடுவார்கள் என்று தகவல் கிடைக்கிறதோ, எவறவர் ஈடுப்படக்கூடும் என்று யூகித்தறிய முடிகிறதோ, அவர்களை முன்கூட்டியே பிடித்து அடைத்துவிட்டால்; கிளர்ச்சி நடைபெறாதபடி பார்த்துக்கொள்ளலாம்—சர்க்கார் அதைத்தான் செய்கிறது. செய்வது மட்டுமல்ல, சர்க்காரை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டுள்ள கட்சியின் தலைவர்களிலே சிலர்—அறிவுக்கரசர்கள்—ஏளனம்கூடச் செய்கிறார்கள்; கிளர்ச்சி நடைபெறவில்லை!!—என்று

கிளர்ச்சி நடைபெற்றிருந்தால் எவ்வளவு பேர்களைப் பிடிக்கவேண்டி இருந்திருக்குமோ அதனைவிட அதிக எண்ணிக்கையுள்ளவர்களைப் பிடித்து அடைத்துவிட்டு, கிளர்ச்சி நடக்கவில்லை என்று பேசுவது, கேலிப் பேச்சிலே கூட, மிகமிக மட்டரகம்! ஆனால் என்ன செய்வது? மிக உயர்ந்த இடத்துக்குச் சென்ற பிறகு கூட, சிலருக்கு இத்தகைய மட்டரகப் பேச்சுத்தான் பேசமுடிகிறது! தங்கக் கலயத்திலே ஊற்றிவைத்தாலும், கள் பொங்கி வழிந்து நாற்றம் வீசத்தானே செய்யும்?

ஒருகட்சி நடத்தத் திட்டமிடும் கிளர்ச்சி, தோல்வியாகிவிட்டது என்று எப்போது கூறலாம் என்றால், அந்தக் கட்சி, கிளர்ச்சிக்கான திட்டத்தை அறிவித்து அழைக்கும் போது, அந்தக் கிளர்ச்சியிலே ஈடுபட ஒருவரும் முன்வர வில்லை என்ற நிலை ஏற்படும்போது.

இங்கு நாம் கண்டது என்ன? கிளர்ச்சியின் துவக்கம் தொட்டிலில் இருக்கும்போதே, 2000-கழகத் தோழர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட விந்தையை! இந்தத் திருவிளையாடலையும் செய்துவிட்டு, தி. மு. க. கிளர்ச்சிக்கு ஆதரவே இல்லை, அனுதாபமே இல்லை, கிளர்ச்சி நடக்கவே இல்லை! என்று வேறு திருவாய் மலர்ந்தருளுகிறார்கள்!!

மூலைக்குமூலை மிரண்டோடி 2000 -பேர்களைச் சிறையிலே போட்டு அடைத்துவிட்டது மட்டுமா! சிறையிலே அவர்களைப் போட்டுவிட்டு, காமராஜர் ஊரூருக்கும் சென்று, கழகத்தவர்களை,

கோழைகள்

சூதாடிகள்

நாடோடிகள்

என்றெல்லாம் அர்ச்சிக்கும் கைங்கரியத்தையும் வேகமாக நடத்தக் காண்கிறோம் (பத்திரிகைகளில் பார்த்தேன்). கணவனை, மகனை, அப்பனை. அண்ணன் தம்பியை, மைத்துனன் மாமனை, உறவினனை, சிறையில் தள்ளி விட்டார்களே என்று வயிறு எரிந்துகிடக்கும் தாய்மார்கள் காதுக்கு இவர் பேச்சு நாராசமாகத்தான் இருந்திருக்கும். இப்படியும் ஈவு இரக்கமற்ற ஒரு சுபாவமா! என்று கேட்டுக் கண்ணீர் சிந்தியிருப்பார்கள். ஆனால், இது ஜனநாயகக் காலம். ஆகவே அவர் இந்த அளவோடு இருக்கிறார். நாக்கை அறு! கை கட்டை விரலை வெட்டு! உயிரோடு போட்டுப் புதைத்துவிடு! என்றெல்லாம் ஆதிக்கக்காரர்கள் ஆர்ப்பரித்த காலம் ஒன்று இருந்தது. மகனைக் குத்திக் கொல்லச்செய்து, அந்தக் கோரத்தைத் தாய்க்குக் காட்டுவது! குழந்தையைத் தூக்கி எறிந்து சாகடித்து, அதைக் கண்டு பெற்றவள் மாரடித்து அழுவதைக் காண்பது! இப்படிப்பட்ட காட்டுமிராண்டி முறைகள் இருந்தன! இப்போது ஜனநாயகக் காலமாக இருப்பதால் சிறையிலும் தள்ளிவிட்டு, சீரழிவாகவும் ஏசிப் பேசுவதோடு இருந்துவிடுகிறார்கள்.

இதெல்லாம் நல்லதற்கு அல்ல என்றும், இந்த வாழ்வு எத்தனை நாளைக்கு என்றும், இந்த இலட்சணத்துக்கு ஓட்டு வேறு வேண்டுமாம், என்றும்,

எத்தனை எத்தனை தாய்மார்கள் சபித்தனரோ, எத்தனை பெரியவர்கள் மனம் நொந்து பேசினார்களோ? யார் கண்டார்கள்!

இவைகளை எல்லாம், ஆளவந்தார்கள் துச்சமென்று மதிப்பவர்கள் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தம்பி! இப்படிப்பட்ட அக்ரமத்தை அழித்திடும் அதிகாரம் பெற்றவர்கள் பொதுமக்கள்—வேட்டு முறையால் அல்ல; ஓட்டுமுறையினால். அந்தப் பேருண்மையைக் கூட மறந்துவிடுகிறார்கள், ஆளவந்தார்கள்.

'கிளர்ச்சி நடத்தி இவர்கள் கண்ட பலன் என்ன?' என்று கேலிபேசும் கண்ணியவான்கள், இதை உணரவேண்டும். கிளர்ச்சிகள், ஆளவந்தார்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடிகள்!

'கிளர்ச்சிகள் வீண்போகா' என்பதிலே தொக்கியுள்ள பொருள் நிரம்பிய தத்துவம் இதுவே.

தம்பி! சைதைச் சிறையிலேயும்; சென்னைச் சிறையிலும், நான் இவைபற்றி எண்ணியபடி இருந்தேன். ஒவ்வொரு நாளும் என்னைவந்து பார்த்துவிட்டுச் சென்ற நண்பர்கள், அவர் பிடிபட்டார்! இவர் பிடிபட்டார்! என்ற செய்திகளையே கொண்டுவந்தனர். கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் கிளர்ச்சி நடைபெற்றால் எழும்பி இருக்கக்கூடிய பரபரப்பு, ஒரே கிழமையில் ஏற்பட்டுவிட்டது, அதிதீவிர அறிவுக் கூர்மையுடன் ஆளவந்தார்கள் திட்டமிட்டு நட வடிக்கையில் ஈடுபட்டதனால்.

இந்தக் கிளர்ச்சிகளை எல்லாம் கண்டு நாங்களா பயப்படுவோம்!

என்று, ஆளுங்கட்சியைச் சார்ந்த ஒருவர் பேசியதைப் பத்திரிகையில் படித்த இரு கைதிகள் சைதைச் சிறையில் பேசிக்கொண்டனர்; கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தீனா மூனா காரனுங்களைக் கண்டு நாங்க பயப்பட மாட்டோம் என்று பேசி இருக்கிறார், ஒரு காங்கிரஸ் மந்திரி.

அடே அப்பா! இதிலே என்ன அதிசயம். தீனா மூனாக்காரனுக்கிட்டவா, போலீசும் பட்டாளமும் ஜெயிலும் கஜானாவும் இருக்குது, கண்டு பயப்பட! எல்லா அதிகாரமும் இப்ப காங்கிரசுக்காரர்கிட்ட இருக்குது. பின்னே, தைரியமாத்தான் இருப்பாங்க. ஏன் பயப்படப் போறாங்க.

அதைத்தான் சொல்றாங்க, நாங்க பயப்படலே...ன்னு

அட யார்டா இவன் அறிவுகெட்டவனா இருக்கறே, இத்தனை போலீசு பட்டாளம் கோர்ட் ஜெயிலு எல்லாம் இந்தக் காங்கிரசுகிட்ட இருக்கிறது தெரிஞ்சிருந்தும், தீனா மூனாகாரரு, பயப்படாம கிளாச்சி செய்கிறாங்க; அது அதிசயமே தவிர, ஆட்சி செய்கிறவங்க பயப்படவில்லைன்னு பேசிக்கொள்வது பெரிய அதிசயமாப் பேசவந்துட்டான், அநியாயம்!

கைதிகள் பேச்சைத்தானா கூறுகிறீர் என்று கேட்கிறாயோ, தம்பி! வேறு, எதை நான் கூறமுடியும்—கைதிகள் பேசுவதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன், 'கனம்கள்' பேசுவதைக் கேட்கக்கூடிய இடமா இது!! சிறையிலே இருக்கும் கைதிகளுக்குக் கூடப் புரிகிற மிகச் சாதாரண உண்மை, கனம்களாகி விட்டவர்களுக்குப் புரியவில்லையே, ஏன்! ஒரு வேளை, கனம்களாகிவிட்டதாலோ!! தெரியவில்லை, ஆனால் பேசுகிறார்கள், நாங்கள் கிளர்ச்சிகளைக் கண்டு பயப்படவில்லை என்று. இத்தனைக்கும், இந்தக் கிளர்ச்சி கட்டுக்கு அடங்கியதாக, திட்ட மிடப்பட்டது; இதனால் சமுதாயத்துக்குச் சங்கடமோ சஞ்சலமோ ஏற்படாது; இது நவம்பர் கிளர்ச்சி; இவர்கள் நடத்திய ஆகஸ்ட்டு அல்ல! இருந்தும், இதை ஒடுக்க ஏன் இவ்வளவு பதைபதைப்பு, துடி துடிப்பு! "இவ்வளவு தானா நீங்கள்? இந்தியை எதிர்த்து ஒரு கிளர்ச்சி நடத்தப்படுகிறது. தடுக்கத் திறமை இல்லையா?" என்று கேட்டுவிடுவார்களே, டில்லியில்! அந்தப் பயம் உச்சியைப் பிடித்துக் குலுக்குகிறது. தடைச் சட்டத்தை மீறாததால், கழகமே கலகலத்துப் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள்—இப்போது கழகம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்தத் திட்டம் போட்டிருக்கிறது என்கிறீர்கள்—கலகலத்துப் போனது உண்மையானால் அந்தக் கழகத்தினால் ஒரு கிளர்ச்சி நடத்த முடியுமா? ஆதரவு இல்லாமலா ஒரு கிளர்ச்சிக்குக் கழகம் திட்டமிடும்? உங்கள் பேச்சை, நடவடிக்கைகள் மெய்ப்பிக்கவில்லையே; தவறான தகவல்களைக் கொடுத்து நிலைமையை மறைக்கிறீர்களே!—என்றெல்லாம் டில்லி மத்திய சர்க்கார் கேட்டுவிடுமே—அந்தக் கிலி! தமிழகக் காங்கிரசு அரசு மேற்கொண்டு விட்ட 'கெடுபிடி' நடவடிக்கைக்குக் காரணம் இதுதான், தம்பி!

எங்கே, அந்தப்பய? எங்கே? கோபமாகக் கூவுகிறான் கணவன்.

ஏன் இப்படிப் பதைக்கிறீங்க? பையன், என்ன செய்து விட்டான்?—பதறிக் கேட்கிறாள் மனைவி.

என்ன செய்தானா? அடியே! என் தலைக்குத் தீம்பு தேடிட்டான். என் பிழைப்பிலே மண்ணைப் போட்டுட்டான்—ஆத்திரத்துடன் பேசுகிறான் கணவன்.

என்னத்தைச் செய்துட்டான் சொல்லித் தொலையுங்களேன்—மனைவி கேட்கிறாள்.

குரலைச் சற்றுத் தாழ்த்தி, கணவன் கூறுகிறான்;

அவனோட அம்மாதானேடி நீ? உனக்கு வேற எப்படி இருக்கும் புத்தி. தெருவிலே யார், தெரியுதா? எஜமானரு! ஏன் நிற்கறாரு தெரியுதா? அவரோட அருமையான நாயை, இந்தப்பய, நம்மவண்டி, உன்னோட பிள்ளை என்ன செய்தான் தெரியுமா? இவனைக் கடிக்க வந்துதாம், அதுக்காக, கல்லாலே அடிச்சிருக்கான். எஜமானரு பதைக்கிறாரு, பதருறாரு; கொண்டாடா அந்தப் பயலை, உன்னாலே அடக்க முடியாவிட்டா நான் முதுகுத் தோலை உரிச்சிப்போடறேன்னு கொதிக்கிறாரு.

நல்லா இருக்குங்க நியாயம்! நாயி கடிக்க வந்தது, கல்லைத் தூக்கிப்போட்டான், அது பெரிய தப்பா? நாயி கடிக்கலாமா? இவரு வூட்டு நாயி, நம்ம மகனைவிட ஒசத்தியா—மனைவி கேட்கிறாள், கோபத்துடன்.

கணவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஓங்கிக் கொடுக்கிறான் முதுகில்...கன்னத்தில். ஐயோ! அப்பாடா! அம்மாடி! என்ற அலறல்.

எஜமானர், மீசையை முறுக்கியபடி, வீட்டை விட்டு வெளியே செல்கிறார், தமது மாளிகைக்கு—வெற்றிக் களிப்புடன்.

அது வெறிநாய் — எல்லோரையுந்தான் கடிக்க வருது—என்று ஊரிலே பலர் பேசிக்கொள்கிறார்கள்.

கதை என்கிறாயா தம்பி! கட்டப்பட்டது, கருத்துக்காக. இரண்டு முறை படித்துப்பார். தமிழக அரசு மேற்கொள்ளும் போக்குக்கான காரணம் விளங்கும்.

இவைபற்றி எல்லாம் பேசும் வாய்ப்பு எனக்குச் சைதைச் சிறையிலும் கிட்டவில்லை. இன்றுவரை (நவம்பர் 27) சென்னைச் சிறையிலும் கிட்டவில்லை.

விலைவாசிக் குறைப்புக்கான கிளர்ச்சியின் போது, வேலூர் சிறையில் இருந்தபோது, நமது தோழர்கள் அனைவரும், சிறையிலே ஒரு தனிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பகலில், கழகத் தோழர்கள் பலரிடம், பல்வேறு பிரச்சினைகள்பற்றிப் பேசிட வாய்ப்புக் கிடைத்தது. இரவுகளிலேயும், என்னோடு தோழர்கள் பொன்னுவேலுவும் ராஜகோபாலும் ஒரே அறையில் இருந்தனர். இரவு நெடுநேரம் வரை பேசிக்கொண்டிருப்போம். எனக்கு வலப்புறத்து அறையிலே, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்—இடப்புற அறையில், சட்டமன்ற உறுப்பினர் முல்லை வடிவேல்!

பாராளுமன்ற உறுப்பினர், எல்லாப் பழய சினிமாப் பாடல்களையும், உரத்த குரலில் பாடுவார்—பாட்டு என்று அவர் எண்ணிக்கொண்டு ஓசை கிளப்புவார்—பாகவதர் பாடல்களை!! கேட்டுக் கொண்டிருப்பேன்.

வடிவேலுவின் இசையோ, உள்ளபடி உருக்கமாக இருக்கும்—ஒவ்வொரு பாட்டையும் அவர் எனக்காக அல்ல—பிரிந்துள்ள சோகத்தைத் தெரிவிக்க வேண்டியவர்களுக்குத் தெரிவிக்கும் கருத்துடன்—பாடுவார். முறைப் படி பயிற்சி பெற்றால், எல்லோருமே கேட்டு இன்புறத் தக்கதாகவே அவருக்கு மெல்லிசை வரக்கூடும். ஆனால் சிறை தந்த இசைதான் அது, என்று பிறகு அறிந்து கொண்டேன்.

இப்போதுகூட காதிலே ஒலிப்பது போலவே இருக்கிறது, திருவண்ணாமலை சண்முகத்தின் வெண்கலச்சிரிப்பொலியும், வேலூர் சாரதியின் வெடிச்சிரிப்பும், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் தங்கவேலுவின் கூச்சம் கலந்த புன்னகையும், வானூர் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணனின் போலீஸ் நடையும், போளூர் சுப்பிரமணியத்தின் சிரிக்கும் கண்களும்! எல்லாம் விருந்தாக இருந்தன, வேலூர் சிறையில். இங்கு இது வரையில் (நவம்பர் 27) தொடர்புகொள்ள, தோழமையுடன் அரசியல் பிரச்சினைகள் பற்றிப் பேச வாய்ப்பே இல்லை. சைதாப்பேட்டையில் இருக்கும் வரையில் இந்தச் சங்கடம் இருக்கும். சென்னை சென்றுவிட்டால், நம்முடைய தோழர்களுக்கு மத்தியில் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என்னை சென்னைச் சிறைச் சாலைக்கு அழைத்துச் செல்லப்போகிறார்கள் என்ற சேதியை அன்பில் தர்மலிங்கம் சொன்னபோது, களிப்பூர் செல்லப்போகிறோம் என்று நிச்சயித்துக் கொண்டேன். அன்று என்னைக் காணவந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஜெயிலருடன் வந்து பேசிக் கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்த்து, நாணிக் கோணிக் கிடந்தார். நான் அறிமுகம் செய்து வைத்த போதுதான், விஷயம் புரிந்தது, நண்பர் பாலகிருஷ்ணன் எட்-கான்ஸ்டபிளாக இருந்தபோது, அந்தப் பகுதியில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர் ஜெயிலருடன் பேசிக் கொண்டிருந்தவர். இருவரும் சிறிது நேரம் 'அந்த பழய' நாட்களைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கூட எனக்கு, அந்த அதிகாரி என்பொருட்டுத்தான் அங்கு வந்திருக்கிறார் என்பது தெரியாது. சிறிது நேரத்திற்கெல்லாம் துணைக்கமிஷனர் வந்து சேர்ந்த போதுதான், விவரம் புரிந்தது. அவரும் போலீஸ் அதிகாரியும், என்னை அழைத்துச் சென்று, சென்னை மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். நான் வருவது தெரிந்து, அங்கு வந்திருந்த நமது நண்பர்கள் எவரும், என் அருகே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே சென்றேன்; மெத்த மகிழ்ச்சியுடன்; நம்பிக்கையுடன். ஏனெனில், நண்பர்கள் நடராசனும், கோவிந்தசாமியும், சிற்றரசும், கலியாண சுந்தரமும், அ. பொ. அரசும், செல்வராசும், ஆசைத் தம்பியும் மற்றும் பலரும் உள்ளே இருக்கிறார்கள். கச்சேரி பாஷையில் சொல்வதானால், பெரிய ஜமா! கண்டதும் களிப்படைவார்கள். களிப்புப்பெறலாம் என்று எண்ணினேன். ஆனால், என்னை சிறையின் முன்பகுதியில் உள்ள மாடிக் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர். கொஞ்சம் சோர்வு தட்டிற்று என்றாலும், அதற்கு இடையிலும் ஒரு சிறு நம்பிக்கை, ஒரு சமயம், நமது தோழர்களில் சிலரையாகிலும் இங்குக் காணலாம் என்ற நம்பிக்கை. நான் அங்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, மணி 7-க்கு மேலாகிவிட்டது. படி ஏறும்போதே, அண்ணாவா! அண்ணா', என்ற அன்புக்குரல் கேட்கும் என்று எதிர்பார்த்தேன்—ஒரு அழைப்பும் இல்லை, உள்ள அறைகள் நாலு. அதிலே இரண்டு அறைகளிலே வேறு யாரோ காணப்பட்டார்கள். ஐந்தாம் நம்பர் அறையில் என்னை விட்டு விட்டு, ஒரு துண்டு ரொட்டியும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் கொடுத்துவிட்டு, பூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். எனக்குப் பெருத்த ஏமாற்றம், மனச்சங்கடம். சைதாப்பேட்டை போலவேதான் சென்னையிலும் நான் 'தனியன்' ஆக இருந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டது, உள்ளபடி வேதனையாக இருந்தது. தனியனாக இருப்பது எனக்கு வேதனை தரும் என்று அறிந்துதானோ என்னவோ இந்த ஏற்பாடு! யார் கண்டார்கள்!

உடன் இருப்பவர்கள் யார் எனத் தெரியவில்லை; இரண்டு நாட்கள் கழித்து அவர்களும் சொன்னார்கள், பொழுது விடிந்து ஒரு வார்டர் சொல்லுகிற வரையில் தங்களுக்கும் புதிதாக வந்திருப்பது யார் என்பது தெரியாது என்று. ஆனால் காலையில் நான் எழுந்த உடனே, இருவரும் இன் முகத்தோடு வந்தனர். எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்கள். அது முதல், என்னைத் தங்கள் 'விருந்தினன்' போலவே அன்புடன் நடத்தி வருகிறார்கள். உணவு, உரையாடல், ஆகிய எதிலேயும் எனக்குக் குறை ஏற்படாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் உள்ளே நமது நண்பர்களைக் காணமுடியவில்லையே, பேச முடியவில்லையே, என்ற ஏக்கம் என்னை வாட்டியபடி இருந்தது. குறிப்பாகக் காஞ்சி கலியாண சுந்தரத்தின் பேச்சைக் கேட்கவேண்டும் என்று ஒரு ஆவல்! வேறு யாரிடம் பேசுவதைக் காட்டிலும், என்னிடம் பேசும் போதுதான், கலியாணத்துக்குத் துணிவும் தாராளமும் நிரம்ப வரும். என்னிடம் அளவற்ற அன்பு—அதுபோலவே தான் எனக்கும். வேறு எவரிடம் கேட்கமுடியாத சில கருத்துகளை, சில பாணிகளைக் கலியாணத்திடம் கேட்க முடியும். சைதையிலிருந்து புறப்பட்டபோது எண்ணிக் கொண்டேதான் வந்தேன்—நம்மைப் பார்த்த உடன் கலியாணம்,

"வா! வா! வந்து சேர்ந்தயா!" என்று அழைக்க,

"ஆமாம்! உன்னை ஏன் அழைத்துக் கொண்டு வந்தார்கள்?" என்று நான் கேட்க,

"அழைத்துக் கொண்டு வந்தார்களா! இது மாமியார் வீடா! தீபாவளி வரிசை வைத்து அழைத்து வந்தார்களா! இழுத்துக் கொண்டு வந்தார்கள்" என்று கலியாணம் சொல்ல.

"ஏன் இப்படி இவ்வளவு பேர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள்" என்று நான் ஐயத்துடன் கேட்க,

"பின்னே, நீ செய்கிறவேலைக்கு, எங்களைச் சும்மாவா விட்டுவைப்பார்கள்" என்று கலியாணம் குத்த,

"உனக்கு வேண்டியதுதான்!" என்று நான் கேலி செய்ய,

"எவனெவனோ இருக்கறான், அவனை எல்லாம் பிடித்துக் கொண்டு வரல்லே. ரொம்பக் காரியமா, என்னை இழுத்துக்கொண்டு வந்துவிட்டானுங்க” என்று எரிச்சலோடு சொல்ல,

வேடிக்கையாகப் பொழுதுபோகும் என்று எண்ணிக் கொண்டு வந்தேன். ஆனால் எனக்குக் கிடைத்ததோ. தனிமை! கழகத் தோழர்களின் தொடர்பும் தோழமையும் அற்ற நிலை. உள்ளபடி சிறைவாசம்!! என்ன செய்ய!

நான் வந்திருப்பது கேள்விப்பட்டு அவர்களும் உள்ளே அல்லற்பட்டிருக்கிறார்கள். அமைப்புச் செயலாளருக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை; ஜெயிலிலும் இருக்கும் என்ற நினைப்புடன், நடராசன் கேட்டிருக்கிறார் சிறை அதிகாரியை; எங்களை அண்ணா இருக்கும் இடத்தில் கொண்டுபோக வேண்டும் என்று. இங்கு இருக்கிறாரே, சிறை அதிகாரி, அவர், இல்லை என்று கூறுவதே இல்லை. ஒரு அழகான புன்னகை! அதற்குப் பொருள், என் முறைப்படி தான் காரியம் இருக்கும்; அதை மாற்றச் சொல்லிக்கேட்டுப் பயன் இல்லை—என்பதுதான்.

வெளியிலிருந்து வருபவர்களைச் சில நிமிடநேரம் பார்த்துப் பேசுவது போலவே, சிறை அதிகாரியின் அனுமதி பெற்று, நடராசனையும் தோழர் கோவிந்தசாமியையும், ஒருநாள் பார்த்துப் பேசினேன்— அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அவர்கள் வெளியே போகிறவரையில் இதேநிலைதான். வெளியே சென்றுவிட்டு, மறுபடியும் என்னைப் பார்க்க நடராசன், கோவிந்தசாமி, அரசு, செல்வராசு, ஆசைத் தம்பி வந்திருந்தனர்—சத்தியவாணிமுத்துவும் உள்ளே இருந்தபோது பார்க்க, பேச, கிடைக்காத வாய்ப்பு, அவர்கள் விடுதலை பெற்ற பிறகுதான் எனக்கு ஓரளவு கிடைத்தது. இதேமுறைதான் நீடிக்குமா, சில நாட்களுக்குப் பிறகு ஏதாவது மாறுதல் ஏற்படுமா என்று தெரியவில்லை.

சென்னைச் சிறையில், ஒவ்வொரு நாளும், கருணாநிதியும் நாவலரும் வருகிறார்கள்—இரண்டொரு நிமிடங்கள் பேசுகிறோம். நானே, விரைவில் அவர்களை அனுப்பி விடுகிறேன்—ஏனெனில் சூழ உட்கார்ந்திருக்கும் அதிகாரிகள் நாங்கள் அதிகநேரம் பேசிக்கொண்டிருப்பதைத் தொல்லையாகக் கருதிவிடுவார்களோ என்பதுதான். மேலும், அரசியல் பிரச்சினைகளைப் பேசக்கூடாது; கழகத்திலே மேற்கொண்டு இன்னின்னது நடத்தப்பட வேண்டும் என்று சொல்லக் கூடாது; எதைப் பேசவேண்டுமோ, எதைப் பேசினால் சுவையும் பயனும் எங்களுக்கு ஏற்படுமோ அவைகளைப் பேசக்கூடாது! மாற்றப்பட முடியாத விதிமுறையல்லவா அது!! ஆக இரண்டொரு நிமிடங்களிலேயே பேச்சு முடிந்துவிடுகிறது.

எப்படி?

பரவாயில்லை.

தனியாகவா?

இல்லை; இரண்டு பேர் இருக்கிறார்கள்.

யார் அந்த இருவர்?

வேறு வழக்கிலே வந்தவர்கள்.

சாப்பாடு எப்படி?

பரவாயில்லை, குறையில்லை. அங்கேயே சமைக்கிறார்கள்.

ஏதாவது கொண்டு வரவா?

புத்தகங்கள் கொடுத்தனுப்புங்கள்.

நம்ம பத்திரிகைகள் வருகின்றனவா?

நம்ம பத்திரிகைகளா? கிடையாது. வராது.

மற்றப் பத்திரிகைகள் அனுப்பலாம்.

வீட்டுக்கு என்ன சேதி?

வந்திருந்தார்கள்! வரச்சொல்லுங்கள்.

இவ்வளவுதானே பேச முடிகிறது! இதையே பின்னிப்பின்னி எவ்வளவு பேச முடியும். ஆகவே விரைவாகவே அனுப்பிவிடுகிறேன். இங்கு முதல் முறையாக, பரிமளம் சரோஜாவுடன், ராணியையும் மகன் இளங்கோவனையும் அழைத்து வந்தபோதுகூட, அதிக நேரம் பேசிக்கொண்டிருக்க இயலவில்லை. இரண்டாவது முறையாக வந்தபோது, D.V. நாராயணசாமியும் அவர் துணைவியார் பாப்பாவும் உடன் வந்தனர்—என்ன எண்ணிக்கொண்டார்களோ, மிக விரைவாகவே பேச்சை முடித்துக்கொண்டு எழுந்து விட்டேன். அதிகாரிகள் காவல் காத்துக் கொண்டிருக்கும்ன சூழ்நிலை, மெத்தச் சங்கடத்தைத் தருகிறது. அதனால் நான் அதிக நேரம் பேச முடிவதில்லை. வழக்கறிஞர் நாராயணசாமியிடம், சட்ட சம்பந்தமாக நிறையப் பேச முடிகிறது. சட்டத்தின் பல்வேறு காவல் அலுவலர்களிலே சேர்ந்தவர்கள் தானே சிறை அதிகாரிகள். ஆகவே, சட்டம் பற்றிப் பேசுவது, அவர்களுக்குத் 'தகாத' பேச்சாகப்படாது என்ற எண்ணம் எனக்கு.

ஆனால் இந்த அளவு பேச்சுகூட, வழக்கு நடந்து முடியும்வரையில் தான்! தண்டனைக் கைதி என்று ஆகிவிட்ட பிறகு, இந்த அளவுக்கு அடிக்கடி பார்க்கவோ, பேசவோ முடியாது—அனுமதி கிடைக்காது.

வழக்கு தொடுத்திருக்கிறார்கள் என்பதை, நாவலரும் கருணாநிதியும் தெரிவித்தார்கள். நான் திடுக்கிட்டுப் போய்விடவில்லை; உண்மையிலேயே, அன்று என்மனம் என்னைப்பற்றிய நினைவிலே இல்லவே இல்லை. அமெரிக்கக் குடி அரசுத் தலைவர் கென்னடி படுகொலை செய்யப்பட்ட பாதகத்தை எண்ணி எண்ணி நான் மிகுந்த வேதனையில் ஆழ்ந்து போயிருந்தேன். வேலூர் சப்ஜெயிலில் இருந்த போதுதான், கென்னடி பற்றிய புத்தகங்களையும், அவர் எழுதிய நூற்களையும், ஆர அமரப் படித்து, அந்த ஆற்றல் மறவனுடைய அருங்கருத்துகளை உணர்ந்து, பெரும் பயன் அடைந்தேன். உலகே திடுக்கிட்டுப் போகத்தக்க விதத்தில், ஒரு கொடியோன், அந்தப் புனிதனைச் சுட்டுக் கொன்றது பற்றிப் பத்திரிகையில் படித்துப் படித்து, உலகில் நல்லது செய்வதற்கே வாய்ப்பு இல்லையா! என்று ஓர் வெறிச்சிட்டுப் போன வேதனை கப்பிக்கொண்டிருந்த நிலை! இந்த நிலையில் என்மீது சதி செய்ததாக வழக்குத் தொடுக்கிறார்கள் என்று நண்பர்கள் சொன்னது, எனக்குச் சரியாகக்கூடக் காதிலே விழவில்லை. அவர்கள் சென்ற பிறகு, பத்திரிகைகளிலேதான், வழக்கு பற்றிய முழு விவரம் படித்தேன். நாளை (நவம்பர் 28) வழக்கு மன்றம் செல்லும் நாள்.