கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்
3.வழக்கும் அரசியல் போக்கும்
(கடிதம் 8-காஞ்சி, 4-10-1964)
தம்பி!
வெளியிலிருக்கும்போதேகூட, தேதிகள் பற்றிய நினைவு எனக்குச் சரியாக இருப்பதில்லை; நானென்ன கடிகாரம் பார்த்து வேலைக்குச் சென்று, காலண்டர் பார்த்துச் சம்பளம் வாங்கிப் பழக்கப்பட்டவனா! வெளியே இருக்கும்போதே இந்த நிலை என்றால், சிறைக்குள்ளே அடைபட்டுக் கிடக்கும்போது தேதி எப்படித் தெளிவாகத் தெரியப்போகிறது? இங்குதான் ஒரு நாளைக்கும் மற்றொரு நாளைக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாதே, அதனால்தான் வழக்குமன்றம் செல்லும் நாள், நவம்பர் 28-என்று குறிப்பிட்டேன். வழக்கு மன்றம் போய்விட்டு வந்த பிறகுதான், 29 என்பது நினைவிற்கு வந்தது.
வழக்கு மன்றம் சென்றிருந்தேன்—சென்றிருந்தேனா! அழைத்துக்கொண்டு போகப்பட்டேன். ஒரு லாரி நிறையப் போலீஸ்—சில அதிகாரிகள்! சிறை வாயிற்படியிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத் திருப்பம் வரையில், இரும்புத் தொப்பிப் போலீசார். வழக்கு மன்றக் கட்டடத்தைச் சுற்றிலும் அதுபோலவே, காவல்!
வழக்கு மன்றம் சென்றேன். உள்ளே நாவலர்,
கருணாநிதி, மதி, ஆசைத்தம்பி, நடராசன், சத்தியவாணி, அலமேலு அப்பாதுரை, கபாலி, நீலநாராயணன், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலர் இருந்தனர். வழக்கறிஞர்களும் அதிகாரிகளும் நிரம்ப! என் நண்பர் வழக்கறிஞர் நாராயணசாமி இருந்தார். அங்குச் சில நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் வேலூர் நாராயணனையும் பார்த்தேன். யாரிடமும் இரண்டொரு விநாடிகளுக்குமேல் பேச அனுமதி கிடைக்கவில்லை. பேசினால் தானா! பார்த்துக்கொண்டிருப்பதும் பேச்சிலே ஒரு வகைதானே! அந்தத் திருப்தி ஏற்பட்டது.வழக்குமன்றத் தலைவர் வந்தமர்ந்தார் சர்க்கார் தரப்பில் வழக்கு நடத்த வந்திருந்தவர் (பப்ளிக் ப்ராசிக்யூட்டர்) வந்திருந்தார். எல்லோரும் வந்துவிட்டனர்; ஆனால் என்னுடைய 'கூட்டாளிகள்' அந்த நால்வர் காணோம். விநாடிகள் நிமிடங்களாகின்றன; வழக்கு மன்றத் தலைவர் காத்திருக்கிறார். நால்வர் வரவில்லை. இந்த வழக்கு மன்றத்துக்கு நான் முன்பொருமுறை, இதே வழக்குமன்றத் தலைவர் முன்பு கொண்டு வந்து நிறுத்தப் பட்டிருக்கிறேன்—சாட்சி சொல்ல. நண்பர் எஸ். எஸ். ராஜேந்திரன், விலைவாசிக் குறைப்புக்கான மறியலில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டபோது, என்னை வேலூர் சிறையிலிருந்து, சாட்சியம் கூற அழைத்து வந்திருந்தார்கள். அப்போது நான் கண்ட வழக்கு மன்றத் தலைவர்தான் இப்போதும்.
அரைமணி நேரம் கடந்துவிட்டது. அவர்கள் வரவில்லை. வேறு சில வழக்குகளைக் கவனித்தார்—முக்கால் மணி நேரமும் ஆகிவிட்டது, நால்வர் வரவில்லை. வழக்கு மன்றத் தலைவருக்குக் கோபமும் சங்கடமும் ஏற்பட்டது. 'நால்வர் வரட்டும், வழக்கை எடுத்துக்கொள்வோம் என்ற எண்ணத்தில்' உள்ளே சென்றுவிட்டார்.
அவர் உள்ளே சென்றுவிட்ட உடனே, அங்கு ஒரே கலகலப்பு, உரையாடல், அறிமுகப் பேச்சு எல்லாம். ஆனால் அப்போதும், நான் மற்றவர்களுடன் அளவளாவ அனுமதி கிடைக்கவில்லை. சூடு சுவையற்ற சிலபற்றி மட்டும், இரண்டொரு விநாடிகள் பேச முடிந்தது.
'நால்வர் வந்து சேர்ந்தனர்—காஞ்சிபுரத்திலிருந்து என்னோடு கிளம்பியவர்களை, 16ந் தேதிக்குப் பிறகு அன்றுதான் பார்க்கிறேன். மாப்பிள்ளைகள் போலத்தான் காணப் பட்டார்கள். எப்படி? ஏன் தாமதம்? அங்கு நிலைமை எவ்விதம்? என்று கேட்டு, அவர்கள் பதில் அளிப்பதற்குள், வழக்கு மன்றத் தலைவர் வந்துவிட்டார்; வழக்கை எடுத்துக் கொண்டார்.
குற்றப் பத்திரிகையின் பிரதிகள் எங்களுக்குத் தரப்பட்டன—இதோ இப்போது எனக்குப் பக்கத்திலே தான் இருக்கிறது—29 தாட்கள்!பிரதிகளைத் தந்ததுடன், எங்களைத் தனக்கு அருகே, எதிரே வந்து நிற்கும்படி அழைத்து, வழக்கு மன்றத் தலைவர், 'குற்றச்சாட்டு' இது என்பதைப் படித்துக்காட்டி விட்டு, 'என்னசொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.
'இந்தத் தாள்களிலே என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்' என்றேன். 'வேறோர் நாள் வைத்துக்கொள்ளலாமா?' என்று அவர் கேட்டார்; சர்க்கார் தரப்பு வழக்கறிஞர், "அவர்கள் குற்றப் பத்திரிகையைப் படிக்க அவகாசம் தரப்படவேண்டுமல்லவா—படித்துவிட்டு அவர்கள் பதில் அளிக்கட்டும்" என்றார். நான் வேறோர் நாள்கூட வேண்டாம், இப்போதே ஒருமணி நேர அவகாசம் தரப்பட்டால்கூடப் போதும் என்றேன். நான் கேட்டுக்கொண்டபடி நண்பர் வழக்கறிஞர் நாராயணசாமி, 'வழக்கை விரிவாக நடத்திக் கொண்டுபோக என் கட்சிக்காரர்கள் விரும்பவில்லை. சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்வது போன்றகாரியம் கூட அதிக அளவில் இருக்காது. இறுதிக்கட்டத்தில், குற்றவாளிகளாகக் கொண்டுவரப்பட்டுள்ளவர்கள், தங்கள் நிலையை விளக்கி ஒரு அறிக்கை அளிக்க இருக்கிறார்கள். வழக்கை விரைவாகவே முடித்துவிடலாம்" என்றார்.
அன்றையதினம், "என்ன சொல்லுகிறீர்கள்' என்று வழக்கு மன்றத் தலைவர் கேட்டதற்குப் பதில் அளிக்கா விட்டால், அதற்காகவே வேறோர் நாள் வழக்கு நடத்த வேண்டிவரும். காலம் நீடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே, வழக்கு மன்றத் தலைவரைப் பார்த்து, "ஐயா! தாங்கள் படித்த 'குற்றச் சாட்டு' மெய்ப்பிக்கப் படுவதற்கான தகவல்கள் மட்டுமே இந்தத் தாள்களில் உள்ளன என்றால், நான் இப்போதே பதில் கூறிவிட விரும்புகிறேன்", "நான் குற்றவாளி அல்ல"—என்றேன். வழக்குகளில் ஏற்படும், தவிர்க்க முடியாத கட்டத்தில் ஒன்று அது. நால்வரும் அதுபோலவே கூறினர். எனவே, வழக்கு அடுத்து எடுத்துக் கொள்ளப்படும்போது, சாட்சிகள் விசாரணை என்ற கட்டம் நடைபெறும்; டிசம்பர் 5-ந்தேதி பகல் 12 மணிக்கு வழக்கு நடைபெறும் என்று அறிவித்தார். ஐவரும் ஒன்றாகப் போலீஸ் வானில் ஏறினோம்—நால்வரையும், சென்னைச் சிறைக்கே கொண்டு போகும்படி வழக்கு மன்றத் தலைவர் உத்திரவிட்டிருந்தார். அப்பாடா! என்ற ஒரு நிம்மதி எங்கள் ஐவர் பார்வையிலும். ஆனால், அந்த நிம்மதி எதுவரையில் இருந்தது தெரியுமா, தம்பி! சிறை நுழைகிறவரையில், சிறைக்குள்ளே சென்றதும் நான் பழயபடி, 5-ம் நம்பர் அறையில், தனியனாக! அந்த நால்வர் சிறையில் வேறோர் பகுதியில்! இது என்ன ஏற்பாடோ? ஏன் இந்த ஏற்பாடோ? புரியவே இல்லை. 16-ந் தேதியிலிருந்து அவர்களை நான் காணவில்லை. பேச நிரம்ப ஆவல். சிறையிலே எதைப் பேசி, என்ன திட்டம் போட்டு, இந்தச் சர்க்காருக்கு என்ன சங்கடத்தை நாங்கள் ஏற்படுத்திவிடப் போகிறோம்? எதற்காக இப்படிப்பிரித்துப் பிரித்து வைக்கவேண்டுமோ? தெரியவில்லை!
சரி, எனக்கு அந்த ஒரு பழக்கம். தனியனாக இருக்கும் பழக்கம்—இதுவரையில் ஏற்பட்டதில்லை; எப்போதும் நாலு பேருக்கு நடுவிலேயே இருப்பது வாடிக்கை. "அதென்ன கெட்ட பழக்கம்—தனியாக இருந்து பழகிக்கொள்" என்று சர்க்கார் எனக்குப் போதிக்கிறது போலும். நன்றி! மகிழ்ச்சி இல்லை! நன்றி!
இன்றுதான் மேயர் தேர்தல். இதைப்பற்றி வழக்கு மன்றத்தில் வந்திருந்த நண்பர்களிடம் பேச எண்ணினேன்—முடியவில்லை. நிலைமை சாதகமாக இல்லை என்பதை, கம்யூனிஸ்டுக் கட்சி காங்கிரசுக்கு ஓட்டு அளிக்க முடிவு செய்துவிட்டது பற்றிய செய்தியே காட்டுகிறது. கிருஷ்ணமூர்த்தி நல்லவர், நமது கழகம் அல்ல—ஆனாலும் பண்புள்ளவர்; பழகுவதற்கு ஏற்ற பெரிய மனிதர், இதனை விளக்கி, இவருக்கே ஆதரவு அளிக்கும்படி, 14-ந் தேதியே ஒரு அறிக்கை எழுதி, மாநகராட்சி மன்ற தி.மு.க.தலைவர் அ.பொ. அரசு அவர்களிடம் கொடுக்கச் செய்திருந்தேன். இடையிலே என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்ற முன்னாள் மேயர் முனுசாமியும், முன்னாள் துணை மேயர் செல்வராசும், அ.பொ.அரசும், எப்படியும் வெற்றி காண முயற்சி எடுத்துக்கொள்வதாகச் சொல்லி விட்டுச் சென்றார்கள். என்ன ஆகி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள ஆவல்தான், என் அறைக்கு எதிர்ப்புறத்திலே சற்றுத் தொலைவிலேதான் மாநகராட்சி மன்றக் கட்டம் இருக்கிறது. ஆனால் இது சிறை! வெளியே நடப்பது எனக்கு எப்படித் தெரியமுடியும்! எது நடை பெறுவதாயினும், நாம் நமது நண்பருக்கு ஆதரவு காட்டினோம், அதிலே ஒரு குறையும் இல்லை, களங்கம் இல்லை, என்று எண்ணித் திருப்திப்படுகிறேன். (காலமெல்லாம் எந்தக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தோழமையை விரும்பி, பெற்று, மகிழ்ந்து வந்தாரோ, அதே கம்யூனிஸ்டுக் கட்சி தான் அவரைக் கைவிட்டு விட்டது. இது, காலத்துக்கும் இருக்கப்போகும் கறை என்பதைக் கம்யூனிஸ்டுகள் உணர மறுக்கிறார்கள்.)
மாலையில், பரிமளம், வளையாபதி முத்துகிருஷ்ணனுடன் வந்து பேசிவிட்டுப் போனது, மனதுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. இத்தனை நாட்களைக் காட்டிலும் இன்று அதிக நேரமும் பேசிக்கொண்டிருந்தேன்—அதிக கலகலப்பாகவும் பேசினேன். வழக்கு தொடங்கிவிட்டது என்று ஏற்பட்ட உடனேயே, மனதிலே இருந்து வந்த ஒரு மூடுபனி விலகிவிடுகிறது, ஒருபாரம் குறைந்து விடுகிறது. அதுதான் காரணம் என்று நினைக்கிறேன், இன்று பரிமளத்திடம் கலகலப்பாகப் பேசியதற்கு.
அவர்கள் வருவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பு, பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் வந்திருந்தார்—டில்லியில் நடைபெற்றவைகளைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போனார். எனக்காகக் கொண்டுவந்த பிஸ்கட், பழங்களைக் கூட, "எனக்கு வேண்டாம், நால்வருக்குக் கொடு" என்று கூறிவிட்டேன்.
சிறையிலே நானோர் பக்கம்! அந்த நால்வர் வேறோர் பக்கம்!
உள்ளே நான்! வெளியே, என் அன்புக்குரிய தம்பிகள்!
எத்தனை நாட்களோ! எத்தனை மாதங்களோ! யாருக்குத் தெரியும்!!காலையில், பத்து பதினோருமணிக்குத்தான் தெரியும்; மேயர் யார்? என்பது.
நமது கடமையை நாம் செய்திருக்கிறோம், வெற்றிக்காக நமது பங்கினைச் செலுத்தி இருக்கிறோம், என்ற திருப்தியுடன் இன்று படுக்கச்செல்கிறேன், ஒரு நல்லவருக்குத் தக்க மரியாதை தரப்படுகிறதா இல்லையா என்பதை நாளைக் காலையிலே தெரிந்துகொள்ளலாம், என்ற எண்ணத்துடன்.
காலையில் தெரிந்துகொண்டேன், அந்த நல்லவருக்குத் துணைநிற்க, கழகம் தவிர வேறு எவரும் இல்லாததால் மேயர் தேர்தலில் அவர் தோற்றுவிட்டார் என்பதை. இழந்த கோட்டையை ஒரு படை திருப்பித் தாக்கிப் பிடித்தால் செய்தி வெளியிடுவதுபோல் நாலரை ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை கார்ப்பரேஷனைக் காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது! என்று எல்லா இதழ்களும் பெரிய தலைப்புக் கொடுத்து, இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன. திராவிட முன்னேற்றக் கழகம் வலதுசாரிக்கட்சி ஆகிவிட்டது; ஆகவே அதனுடைய ஆதிக்கத்தில், மாநகராட்சி நிர்வாகம் இருக்கவிடக் கூடாது என்ற 'தத்துவ'க் காரணம் காட்டிவிட்டு, கம்யூனிஸ்டுக் கட்சி, சென்னையின் பெரிய புள்ளிகளில் ஒருவர் என்ற நிலையில், உள்ள, ஒரு குஜராத்தி பிரமாணச் சீமானுக்கு வெற்றி தேடிக் கொடுத்து, பெருமை தேடிக் கொண்டது!!
தி. மு. கழகத்திடம் அடக்கமுடியாத அளவில் பகை உணர்ச்சி கொண்டநிலையில், ஆளுங்கட்சி மட்டுமல்ல, மற்றப்பல கட்சிகளும் உள்ளன. காரணம், ஒவ்வொருகட்சி ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்று கூறுகிறது—ஆனால் உண்மையான காரணம், அடிப்படைக் காரணம், கழக வளர்ச்சியிலே அந்தக் கட்சிகளுக்கு ஏற்பட்டுவிட்ட அருவருப்பு, திகைப்பு, ஆத்திரம். இதைப் போக்கிக்கொள்ள அவர்கள் காங்கிரசுக்கு வலிவூட்டுகிறார்கள். இது இடதுசாரிக் கொள்கையாம்!!
தி. மு. க. சுதந்திரக்கட்சியுடன் நேசத் தொடர்பு கொண்டிருப்பது ஒன்றைத்தான், இந்தக் கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்தத் தொடர்பு காரணமாக, தி.மு.க.இடதுசாரிக்கொள்கை எதனையும் இழந்துவிட்டதா என்று பார்த்தால், இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓரிரு திங்களுக்கு முன்புகூட நில உடைமைபற்றிய பிரச்சினை, பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது, உடைமையாளர்கள் பக்கம் சுதந்திரக்கட்சி வாதாடிற்று; தி.மு.க.இடதுசாரியினர் பக்கம்தான் துணை நின்றது. இதனைப் பொதுமக்கள் அடியோடு மறந்துவிடுவார்கள் என்றா இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?
இதே கம்யூனிஸ்டுக் கட்சி, சென்ற பொதுத் தேர்தலின்போது, தி.மு.கழகம் சுதந்திராவுடன் தொகுதி உடன்பாடுக்கு இசைந்தபோது, அப்படி ஒரு வலதுசாரி கட்சியுடன் உங்களுக்கு ஒட்டு உறவு இருப்பதானால், உங்களுடைய துணையோ, தோழமையோ வேண்டாம் என்று உதறித் தள்ளிவிடவில்லை, பேச்சு நடந்தது. இறுதியிலே முறிவு ஏற்பட்டதுகூட, தொகுதிகள் சிலவற்றையாருக்கு ஒதுக்குவது, கழகத்துக்கா, கம்யூனிஸ்டுக்கா என்பதிலேதான், தகராறு. இது ஊரறிந்த உண்மை. அப்போது, தி.மு.க.வலதுசாரி என்று ஏசப்படவில்லை. பேச்சு முறிந்தபிறகுகூட, திருச்சியைப் பொறுத்தவரையில் கம்யூனிஸ்டு கலியாணசுந்தரம், அனந்தநம்பியார் ஆகியோருக்கு கழக ஆதரவும், கழக எம். எஸ். மணி, அம்பில் தர்மலிங்கம் ஆகியோருக்கு கம்யூனிஸ்டு ஆதரவும் நடைமுறையில் இருந்தது; வெற்றியும் கிடைத்தது. இப்போதுதான், கம்யூனிஸ்டு கட்சி, ஒரு வெறுப்புணச்சியை வளர்த்துக்கொண்டு, அதனை ஒரு 'தத்துவம்' என்ற நிலைக்குவேறு உயர்த்திக் காட்டுகிறது. ஆனால் இந்த நிலையும் போக்கும், இதுபோலவே இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அடுத்த பொதுத் தேர்தலின்போது, வேறு தத்துவம்—வேறுநிலை—மலரும் என்று நம்புகிறேன். அது அப்படி ஆவதாக இருப்பினும், கழகத்திடம், கடுங்கோபம் மூண்டநிலையில் பல கட்சிகள் இருப்பது நன்றாகத் தெரிகிறது. கழகத்தை அழிக்கும் நோக்குடன், அதனை நடத்திச் செல்பவர்களை 'ஒழிக்க'த் திட்டங்கள் போடப்படுவதாக மிரட்டல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன—குறிப்பாக என்னையும், கருணாநிதியையும். நான் வழக்கு மன்றம் சென்றேனே -29-ல்-அன்றுகூட வழியிலேயே என்னைத் தீர்த்துவிடப் போவதாக, கடிதங்கள் வந்தனவாம்—போலீஸ் அதிகாரிகளிடம் அவை ஒப்படைக்கப் பட்டன என்று, வழக்கு மன்றத்தில் கருணாநிதி கூறக் கேட்டேன். இன்று மாலை என்னைப் பார்க்கவந்தபோது கூட கருணாநிதி, இதுபோன்ற ஒரு செய்தியை, டெலிபோன் மூலம் தன்னிடம் யாரோ கூறியதாகவும், அந்தத் தகவலையும் போலீஸ் அதிகாரிகட்கு தான் தெரிவித்ததாகவும் கூறினார். இவை வீண் மிரட்டல்களாகவும் இருக்கலாம்—ஏதாவது நடந்தாலும் நடக்கலாம்; நடந்தால் நாம் என்ன செய்யமுடியும்! திடீரென்று பாம்பு கடித்தால், பச்சிலை கிடைப்பதற்குள் ஆள் செத்துப் போவதில்லையா! என்ன நடக்கும் என்பதல்ல முக்கியம், அரசியல் எத்துணை அருவருப்பான காட்டுமிராண்டிப் போக்குக்கு இழுத்துச் செல்லப்படுகிறது என்பதுதான் முக்கியம். அத்தகைய, காட்டுமிராண்டித்தனமல்லவா கென்னடியின் உயிரைக் குடித்துவிட்டது. கொடுமை! கொடுமை!
இன்று மாலை நாவலரும், நடராசனும், கோவிந்த சாமியும், ராஜகோபாலும், கருணாநிதியும், வழக்கறிஞர் நாராயணசாமியும் வந்திருந்தனர்.
வழக்கு மன்றத்தில் நான் தருவதாகக் கூறியுள்ள அறிக்கை எந்த முறையில் இருக்கவேண்டும் என்பது பற்றி நாராயணசாமியிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். சட்டத்துக்கும் நீதிக்கும் உள்ள தொடர்பு, இருக்க வேண்டிய தொடர்பு, அறப்போருக்கு அளிக்கப்பட வேண்டிய மதிப்பு ஆகிய கருத்துக்களை, அறிக்கையில் விளக்கவேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் அதற்கான ஏடுகள் கிடைக்கக்கூடிய இடத்திலா நான் இருக்கிறேன். சிலவற்றை திங்கட்கிழமை கொண்டுவந்து தருவதாக, வழக்கறிஞர் நாராயணசாமி கூறிவிட்டுச் சென்றார்.
சைதாப்பேட்டையில் வந்து பார்த்த பிறகு, ராஜகோபால் இன்றுதான் மறுபடியும் என்னைவந்து பார்க்க முடிந்தது. ராஜகோபால் வந்தாலே, மகிழ்ச்சி பிறக்கும் வழக்கமல்லவா எனக்கு! அதற்கு ஏற்றபடி, இங்கு இரண்டு நாட்களாக 'வெற்றிலை பாக்கு' இல்லாமல் வெறும் வாயனாக இருந்துவந்தேன்—ராஜகோபால் கொண்டுவந்து கொடுத்த வெற்றிலை பாக்கு, எனக்கு மகிழ்ச்சி அளித்தது. கடந்த ஒரு திங்களாகவே, எனக்கு இருந்துவரும், இடதுகைக் குடைச்சலுக்காக, சத்தியவாணி கொண்டுவந்து கொடுத்த 'புலித் தைலம்' வேறு எனக்குக் கிடைத்தது. அதனைத் தேய்த்துக் கொண்டு, வலி சிறிதளவு குறையும் நிலைபெற்று, அதே நினைப்புடன் இன்றிரவு படுக்கச் செல்கிறேன்.
ஞாயிறு,—சிறை சந்தடியற்றுக் கிடக்கும் நாள். வெளியிலிருந்து யாரும் பார்க்க வரக்கூடாது. சிறை அதிகாரிகளின் நடமாட்டமும் மிகக் குறைவு. அன்று "கைதிகள்" சீக்கிரமாகவும் பூட்டிவிடப்படுகிறார்கள். இன்று வெளி உலகத் தொடர்பு எந்த நண்பர்கள் மூலமாகவும் இல்லை; பத்திரிகைகள் மட்டுந்தான். இன்றைய பத்திரிகையில், பண்டித ஜவஹலால் நேருவின் சென்னைப் பேச்சு பெரிய அளவில் இடம் பிடித்துக் கொண்டிருந்தது; அவரேகூட, பத்திரிகையாளர்களின் கூட்டத்தில் இந்தப் போக்கைக் கண்டித்திருந்தார். பண்டிதரின் பேச்சை, பத்திரிகைகள் எப்படிப் பெரிய அளவிலே வெளியிடாமலிருக்கமுடியும்! தி.மு.கழகக் கிளர்ச்சியைக் கண்டித்துப் பேசினாரே!! வழக்கமான கண்டனந்தான்—வார்த்தைகள் கூடப் புதிது இல்லை—சிறுபிள்ளைத்தனம்—கேலிக்கூத்து—இவைபோலத்தான். ஒரு நாட்டு மக்களின் மனதை வெகுவாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் மொழிப் பிரச்சினை பற்றி காட்ட வேண்டிய அக்கறையும், கொள்ளவேண்டிய பொறுப்புணர்ச்சியும், அவருடைய பேச்சிலே மருந்துக்கும் இல்லை. அரசியல் சட்டத்தை எரித்தால் பிரச்சினை தீர்ந்து விடுமா? என்று கேட்டிருக்கிறார். பிரச்சினை, அதனால் தீர்ந்துவிடும் என்று எண்ணிக் கொண்டு தி.மு.க கிளர்ச்சி துவக்கவில்லை, இந்தியை ஆட்சி மொழி ஆக்குவது குறித்து இங்கு நாம் எவ்வளவு மனக் கொதிப்பு அடைந்திருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதே கிளர்ச்சியின் நோக்கம். இதனைப் பல கிளர்ச்சிகளை நடத்திய பண்டிதர் தெரிந்துகொள்ளாமலா இருக்க முடியும்? அதிகாரப் பேச்சுப் பேசி இருக்கிறார். வேறென்ன கூறமுடியும்! பயப்படாதீர்கள்! அநீதி நடக்காது! என்று தைரியம் கூறி இருக்கிறார். தான் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பதாக, அடித்துப் பேசி இருக்கிறார்.
தம்பி! அவர் கொடுத்த வாக்குறுதி ஆங்கிலத்தை அகற்றமாட்டேன்—இந்தி பேசாத மக்களுடைய சம்மதம் பெறாமல் இந்தியை ஆட்சிமொழி ஆக்கிவிடமாட்டேன்—இந்தி ஆட்சி மொழியாக வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை இந்தி பேசாதா பகுதி மக்களுக்கே அளிப்பேன்—என்பதாகும்.
இது அறநெறி அரசுமுறை—நேருவின் புகழ் நிலைக்குப் பொருத்தமான முறை—ஆனால் எங்கே அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது? 1965 லிருந்து இந்திதானே ஆட்சிமொழி! சட்டம் அப்படித்தானே சொல்கிறது. அதிலிருந்து ஒரு 10 வருஷ காலம், ஆங்கிலம் சில காரியங்களுக்குப் பயன்படுத்தப்படலாம்! அதுதானே பாராளுமன்றம் நிறை வேற்றியுள்ள சட்டம்!
பண்டிநேரு தந்த வாக்குருதி, அவருடைய துரைத்தனம் நிறைவேற்றிய சட்டத்தினால் சாகடிக்கப்பட்டு விட்டிருக்கிறது.
இதனைச் சுட்டிக்காட்டியவர்கள் பலர்—இங்கு உள்ள இதழ்களில் அனேகமாக எல்லாம் இதழ்களுமே இதனைச் சுட்டிக்காட்டின. ஆனால் சென்னைப் பேச்சிலே அவர் அடித்துப் பேசினார், என் வாக்குறுதியை நிறை வேற்றி விட்டேன் என்று? சரியா? நியாயமான பேச்சா?
இவரே, பாராளுமன்றத்திலே முன்பு பேசும்போது, "நான் வாக்குறுதி கொடுத்தது உண்மை—இப்போதும் அதனை மறுக்கவில்லை, ஆனால் என் வாக்குறுதியை ஓரு சட்டத்திலே எப்படி இனைக்க முடியும்!" என்று கேட்டார். ராஜ்யசபையில், சாப்ரு எனும் மூதறிஞர், அந்த வாக்குறுதியை, ஏதாவதொரு முறையில், சட்டத்திலே இணைத்திருக்கலாம்—முடியும்—செய்திருக்க வேண்டும் என்று கூறினார். அவர் காங்கிரஸ் உறுப்பினர்.இதனை எல்லாம் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள், என்றாலும், சென்னையிலே பண்டிதர் பேசுகிறார், என் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று, பெரியவர்கள் இது போல உண்மைக்கு மாறாகப் பேசும் போது, திகைப்புத்தான் ஏற்படுகிறது.
நாட்டுப் பிரிவினையை நாம் விட்டுவிட்டதற்காகவும், நமது கழகச் சட்டதிட்டத்தைத் திருத்தி அமைத்திருப்பதற்காகவும், மகிழ்ச்சி தெரிவித்துப் பேசிவிட்டு, இது போதாது, மனம் மாற வேண்டும், இதயம் மாறவேண்டும் என்று கூறி இருக்கிறார்.
வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படும், மனுக்கள் குப்பைக்கூடைக்குப் போகும், நியாயங்கள் மறுக்கப்படும்—ஆனால் மனம் மாறவேண்டும்! எந்த விதமான நீதியோ எனக்குப் புரியவில்லை!
பண்டித நேருவின் சென்னைப் பேச்சு ஒரு பெரிய நாட்டு ஆட்சித்தலைவர், நாட்டிலே எழுந்துள்ள பிரச்சினையை அலசிப்பார்த்து பேசும் முறையில் அமையவில்லை.—ஒரு கட்சித் தலைவருடைய கண்டிப்பான பேச்சாக—அதிலும் ஆட்சியில் இருக்கிறோம், என்ற உணர்வுடன் உள்ள ஒரு கட்சித் தலைவரின் பேச்சாகவே, அமைந்திருந்தது.
தம்பி! ஆளுங்கட்சியை ஆதரிக்கும் தவறான போக்கிலே கம்யூனிஸ்டுக் கட்சி சென்று கொண்டிருப்பதனைச் சுட்டிக்காட்டியிருந்தேனல்லவா! இன்று பத்திரிகையில், கேரள முன்னாள் முதலமைச்சர் நம்பூதிரிபாத், இதே கருத்தை, தெளிவாக ஒரு அறிக்கையில் கூறியதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்றைய கம்யூனிஸ்டு போக்கு மாறிவிடக் கூடியது என்று நான் கொண்டுள்ள நம்பிக்கையை, நம்பூதிரிபாத்தின் அறிக்கை மேலும் வலிவுபடுத்தியது. இன்று கம்யூனிஸ்டுக் கட்சி, இந்திய அரசாங்கத்து வாலாகிவிட்டது என்று அவர் கூறுகிறார். நாம் மட்டும், 'வால்' என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டிருந்தால், கம்யூனிஸ்டுகள் அகோரக் கண்டனக் கூச்சலிட்டிருப்பார்கள். நம்பூதிரிபாத் அத்தோடு விடவில்லை, கம்யூனிஸ்டுக் கட்சி, சுதந்திராக் கட்சிக்கும் வாலாகி விட்டது! ஜனசங்கத்துக்கும் வாலாகிவிட்டது என்று கண்டித்திருக்கிறார்.
பொதுவாக, மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டாலொழிய, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் இவ்விதம் 'அறிக்கைகள்' வெளியிடமாட்டார்கள். பாராளுமன்றத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே ஒரு கம்யூனிஸ்டுத் தலைவர் மெத்த வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். 'உட்குழப்பம் ஏற்பட்டுவிட்டது; பிளவு அதிகிமாகிவிட்டது; முடிவு எப்படி இருக்கும் என்று கூறமுடியாத நிலை. கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களிலே பலர், காங்கிரசில் சேர்ந்துவிட்டால் கூட நான் ஆச்சரியப்படுவதற்கில்லை' என்றார்.
என்றாலும், கம்யூனிஸ்டுக் கட்சியில், குறிப்பிடத் தக்கவர்கள், தவறான தத்துவத்திலும், ஆபத்தான போக்கிலும் கட்சிசென்று கொண்டிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டிருப்பது மட்டுமல்ல, பேசவும் முற்பட்டிருப்பது, வரவேற்கத்தக்க ஒரு மாறுதலாகவே எனக்குத் தென்படுகிறது.
நாளைய தினம் மறியல்—மதி தலைமையில். என்ன முறையைச் சர்க்கார் கையாள இருக்கிறதோ தெரியவில்லை. இன்று இரவு எனக்கெங்கே தூக்கம் வரப்போகிறது! இதே நினைவாக இருக்கும். மறியல் நடத்த விடுவார்களா? கைது செய்வார்களா? அடித்து விரட்டுவார்களா? எதையும் சொல்வதற்கில்லை. ஏனெனில் காங்கிரஸ் சர்க்காரின் போக்கு எந்த இலக்கணத்துக்கும் உட்பட்டதாகவே இல்லை—கொச்சையாகப் பேசிக்கொள்வார்களே, சித்தன் போக்கு சிவன் போக்கு என்று, அது போல இருக்கிறது! எதற்கும், நாளைய தினம் மதி இங்கே வருவார் என்ற எண்ணத்துடனேயே இன்றிரவு, படுக்கச் செல்கிறேன்.