கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!
6. டாக்டர்கள்! தேர்தல் முடிவு!
சிறைச்சாலை விதிகள்!
(கடிதம் 6. காஞ்சி-25-10-64)
தம்பி!
காது மூக்கு, வாய், இந்தப் பகுதிகளிலே ஏற்படக்கூடிய வியாதிகளைத் தீர்த்துவைக்கும் நிபுணர் டாக்டர் சத்தியநாராயணா, மருத்துவருக்கு இருக்க வேண்டிய நல்லியல்புகள் பெற்றவர். முன்பு ஒருமுறை நண்பர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு, குரலொலி கெட்டுவிடத்தக்க நோய் ஏற்பட்டபோது, இதே டாக்டர் சத்திய நாராயணா அவர்கள்தான், தக்க அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார்கள். அப்போது அவர்கள் ஸ்டான்லி மருத்துவ மனையில் இருந்தார்கள். நான்கூட நண்பர் கோவிந்தசாமியைப் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன். நான் மறந்துவிட்டிருந்தேன்—டாக்டர் சத்திய நாராயணா நினைவுபடுத்தினார்கள். உயர்திரு ஆச்சாரியார், அமெரிக்கா சென்றபோது உடன் சென்றிருந்தவர், டாக்டர் சத்தியநாராயணா. அவருடைய சிரிய மருத்துவ உதவிபெற்றுப் பெரும் பயன் அடைந்தேன்.
எனக்கு ஏற்பட்டுள்ள வலி போக்க, தனியாக எந்த மருந்தும் இல்லை என்பதால், இது மெள்ள மெள்ளத் தன்னாலேதான் போகவேண்டும், தேகப்பயிற்சி செய்வது ஒன்றுதான் இதற்குக் கைகண்ட மருந்து, வலி அதிகமாகும் போது ஒத்தடம் கொடுக்கலாம், வலியை மறந்திருக்க மாத்திரை உட்கொள்ளலாம், வேறு ஏதும் செய்வதற்கில்லை என்றுகூறி, மருத்துவமனையிலிருந்து பிப்ரவரி 13-ம் நாள், என்னை மீண்டும் சென்னை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தார்கள். டாக்டர் சத்தியநாராயணா, 21-ந்தேதி் வர வேண்டும், ஒரு ஊசி போடப் போகிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள். டாக்டர் இரத்தினவேலு சுப்ரமணியம் அவர்கள், சில காலத்துக்கு, வாரம் ஒருமுறை மருத்துவமனை வந்து, பரிசோதித்துக்கொள்ள வேண்டும், அதுபற்றி நான் சர்க்காருக்கு எழுதி இருக்கிறேன் என்று கூறினார்கள். அவருடைய யோசனையை சர்க்கார் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. டாக்டர் சத்தியதாராயணா குறித்திருந்தபடி 21-ந் தேதி மருத்துவமனை சென்று, அரை மணி நேரத்திற்கெல்லாம் திரும்பினேன்—மறுபடியும், மார்ச் 20-ம் நாள் வரச்சொல்லி இருக்கிறார். இப்போது கூட, வலி இருந்தபடி இருக்கிறது—இன்று பிற்பகல் கூட, வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டேன். வலி மறப்பதற்காக ஒரு நாளைக்கு மூன்று வேளை நொவால்ஜின் மாத்திரைகள் உட்கொள்கிறேன். மருத்துவமனை சென்று திரும்பியதில் வலிபற்றி அச்சம் எழத்தக்க குழப்பம் நீங்கி, என்னோடு நீண்டநாள் இருக்கும் நினைப்புடன் இந்தவலி இருக்கிறது என்பது புரிந்துவிட்டது.
மருத்துவ மனையிலிருந்து சிறை செல்லும் ஏற்பாடு பற்றி, ராணி பரிமளம் ஆகியோருக்குத் தெரியாது—ஆகவே அவர்கள் வழக்கம்போல் அன்று மாலை வருவார்கள்—ஏமாற்றமடைவார்கள். இதைத் தவிர்க்க முடியுமா என்று எண்ணினேன்—மேலும் நான் படித்து முடித்து விட்ட புத்தகங்களை வீட்டிற்குக்கொடுத்தனுப்ப வேண்டும். எப்படி? என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் தோழர் ஆசைத்தம்பி வந்தார்—அவரிடம் புத்தகக்கட்டை கொடுத்து வீட்டிலே சேர்த்துவிடும் படியும், நான் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது பற்றிப் பரிமளத்திடம் கூறும் படியும் தெரிவித்தேன். ஆசைத்தம்பி, அதற்கு முன்பே இரண்டொருமுறை என்னை வந்து பார்த்தார்—மிகுந்த உற்சாகமாகத் தேர்தல் பணிகளைக் கவனித்துக் கொண்டு வருவதாகக் கூறினார். சென்னையில் வெற்றி நிச்சயும் என்று உறுதியாகிக்கூறினார். நான் விடுதலை ஆகிறவரையில் வைத்திருக்கப் போவதாகக் கூறி, 'தாடி' வளர்த்துக் கொண்டிருந்தார்.
மருத்துவ மனையில் எனக்குத் துணையாக இருந்து வந்த டாக்டர் மோகன் எனும் இளைஞர், நான் சிறை செல்லக் கிளம்பும்போது, மெத்த வாட்டமடைந்தார். பல நாட்களாக, என்னுடன் பாசத்துடன் பழகிவந்த காரணத்தால், நான் மீண்டும் சிறை செல்வதறிந்து, ஒரு விதமான மனச்சங்கடம், அந்த இளைஞருக்கு. மருத்துவத்துறையில் ஈடுபட்டிருக்கும் இந்த இளைஞரின் தந்தை போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றிருப்பவர்; தாயார் கல்வித்துறையில் சீரிய பணியாற்றிக் கொண்டு வருபவர்.
மருத்துவ மனையில் எனக்குக் கிடைத்த முதல் நண்பர், டாக்டர் கிருஷ்ணன்—இவர் கோவை மாவட்டத்தவர்—என்னிடம் மிகுந்த பற்றுக்கொண்டு, எனக்குப் பெரும் துணையாக இருந்துவந்தார். டாக்டர் இரத்தினவேலு சுப்பிரமணியம் அவர்களிடம், பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்—ஆகவே அவர் என்னைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பிலும் இருந்தார். இனிய இயல்பு, அன்பு ததும்பும் மனம். மருத்துவத் துறைக்கு ஏற்றவர். அவருடைய பயிற்சிக் காலம் முடிந்து, அவர் வேறு இடத்தில் வேலை பெறச் செல்லவேண்டி ஏற்பட்டது. என்னை விட்டு விட்டுப் போக மனமின்றி, ஒரு வாரம், எனக்காகவே, மருத்துவ மனையில் தங்கி இருந்தார். நான் மீண்டும் சிறைசெல்லும் வரையில், இருக்க எண்ணினார்—நான் வற்புறுத்தி, அவரை அவருடைய கடமையை மேற்கொள்ளச் சொன்னேன். டாக்டர் கிருஷ்ணன், தான் போவதற்கு முன்பு, என்னைக் கவனித்துக் கொள்ளும்படி, டாக்டர் மோகனிடம் தான் சொல்லி விட்டுச் சென்றார்.
இந்த இரண்டு இளைஞர்களையும் நான் என்றென்றும் மறப்பதற்கில்லை.என்னைக் கவனித்துக்கொண்ட டாக்டர்களில் சுந்தரகாந்தி என்பவரும், சங்கர் என்பவரும் குறிப்பிடத்தக்கவர்கள். டாக்டர் சொக்கலிங்கம் எனும் என் நண்பரும் எனக்குத் துணை புரிந்தார்.
மருத்துவ மகளிர் பலர்—உடன்பிறப்புகள் போன்ற அன்புடன் பணியாற்றிவந்தனர்.
நாவலரும், நடராசனும், கருணாநிதியும், வழக்கறிஞர் நாராயணசாமியும் அடிக்கடி வந்து என் உடல் நலம் குறித்து விசாரித்தவண்ணம் இருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன் ராஜாராம், முத்து ஆகியோரும், அரங்கண்ணல், சி.வி. ராசகோபால், கிட்டு, மற்றும் பலரும் பலமுறை வந்து அளவளாவினர்.
நகராட்சி மன்றத் தேர்தல்கள், நான் மருத்துவமனையில் இருந்தபோதே துவங்கிவிட்டன. பம்பரம் போலச் சுழன்று அதிலே பணியாற்றும் என் தம்பிகளுடன் இருந்து பொறுப்பை ஏற்கும் வாய்ப்பை இழந்து, மொத்தச் சுமையையும் அவர்கள் தாங்கித் தத்தளிக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டு, நான் மருத்துவ மனையில் படுத்துக் கொண்டேன். தேர்தல் நிலைமைகளைப் பற்றி, களைத்துப்போய் இளைத்துப்போய். கருணாநிதியும், நடராசனும், நாவலரும் மற்றவர்களும் என்னிடம் வந்து சொல்லும்போதெல்லாம், அவர்களை இவ்வளவு தவிக்கச் செய்கிறேனே என்று என்னை நானே நொந்துகொண்டேன். எத்தனை விதமான இன்னல்கள்—எத்தனை எத்தனை எரிச்சலூட்டும் நிலைமைகள்—எத்தகைய கொடிய, இழிதன்மை மிகுந்த எதிர்ப்புகள், என்னென்ன சிக்கல்கள், பிரச்சினைகள், புகைச்சல்கள்—இவ்வளவுக்கும் இடையிலே அவர்கள் உழன்று கொண்டிருக்க, நான், மருத்துவ மனையில்! எனக்கு அதனை எண்ணும்போது மிகுந்த வேதனையாகக் கூட இருந்தது. ஆனால் அந்த வேதனைக் கிடையிலேயே மற்றவர்களின் சாமர்த்தியம் தெரிந்தது. எதையும் பொறுப்பேற்றுசெம்மையாகச் செய்திடும் ஆற்றல் மிக்கதோர் அணி அமைந்துவிட்டிருக்கிறது—நாமே முன்னின்று செயல்பட வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை—என்னை மகிழ்விக்க வேண்டும் என்பதைத் தமது கடமையாக்கிக்கொண்டு பணியாற்றும் பண்பினர் கொண்ட பாசறையாகிவிட்டது தி.மு.க. என்று எண்ணி, மன மகிழ்ச்சி பெற்றேன். முதல் கட்ட தேர்தல் முடிவுகள் மருத்துவ மனையிலிருக்கும் போதே கிடைத்தன—நான் அகமகிழ்ந்தேன். இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும்போது, நான் சிறைவந்து விட்டேன். சிறையில், இரண்டாம் கட்ட முடிவுகளைக் கண்டேன்—களிப்புற்றேன். இறுதியாக, சென்னை மாநகராட்சித் தேர்தலில், கழகம் பெற்ற போற்றத்தக்க வெற்றி பற்றிய முழு விவரத்தைப் படித்துவிட்ட பிறகு தான், விட்ட இடத்திலிருந்து, இந்தக் குறிப்பினை எழுதத் தொடங்கினேன்.
நகராட்சி மன்றத் தேர்தல், மாநராட்சி மன்றத் தேர்தல், இதிலே நமது கழகம் பெற்ற வெற்றிகள், அதனால் பெறப்படும் அரசியல் பாடம், இவை தனியாகவே விளக்கப்பட வேண்டிய, பிரச்சினை. இந்தக் குறிப்பில் நான் பெற்ற மகிழ்ச்சியை மட்டுமே எடுத்துக் காட்டினேன். இந்த வெற்றிச் செய்தியைப் படித்து விட்டு, சாப்பிட உட்கார்ந்தபோது, இது சிறையாக அல்ல, சிங்கார மாளிகையாக மாறிவிட்டது! சிறை உணவு, தனிச் சுவை பெற்றுவிட்டது! நீ சிறையில் இருக்கும் போதெல்லாம் இத்தகைய சிறப்பான வெற்றிகளை ஈட்டித் தருவோம் என்று கழகத் தோழர்கள் கூறுவதுபோலிருக்கிறது வார்டர்களின் பார்வையிலே ஒரு பாசம், திடீரென்று மலருகிறது! அதிகாரிகளின் பேச்சிலே புதுமணம் வீசுகிறது. பூங்காற்று மிகுந்து இருக்கிறது! புள்ளினம் இசை பாடுகிறது. அந்த இன்ப உணர்ச்சியுடன், இன்றிரவு துயில் கொள்ளச் செல்கிறேன்.
25—2—64
பல நாட்கள் எழுதாதிருந்ததால், மொத்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து, அளவைக் குறைத்து எழுதினேன். என் உடல்நிலை குறித்தும், தேர்தல்களைப்பற்றியும் எழுதிய போது, சிறையிலேயே ஏற்பட்டிருக்கிற மகிழ்ச்சி தரும் மாறுதலைக் குறிப்பிட மறந்துவிட்டேன். இப்போது நான் சிறை வந்த அன்று எந்தப் பகுதியில் நுழைந்தேனோ அதே இடத்தில்தான் இருக்கிறேன்— ஆனால் ஆறாம் எண் அறைக்கு வந்துவிட்டேன். நான் முன்பு இருந்த ஐந்தாவது எண் அறையில், அன்பழகன் இருக்கிறார்; ஏழாவது அறையில் தையற்கலை ஆசிரியர் சுந்தரம்; எட்டாவது எண் அறையில் மதியழகன், கீழ் தளத்தில், தோழர்கள் பொன்னுவேல், வெங்கா, டி.எம்.பார்த்தசாரதி. என் 'தனிமை' ஒழிந்தது, இனிமை மலர்ந்தது தானாக அல்ல— மெத்தக் கஷ்டப்பட்டு.
மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் பழய இடத்துக்கே கொண்டு செல்வார்களோ என்ற கவலை கவலை, கலக்கம். அவர்களெல்லாம் இருக்கும் இடத்துக்கே அழைத்துக்கொண்டு போகக்கூடாதா என்று கேட்டேன். இல்லை! அவர்களில் சிலர் இங்கு வருகிறார்கள்! என்று அதிகாரி கூறினார். அன்பழகன், மதியழகன், சுந்தரம் ஆகிய மூவரும் வந்தனர். தோளில் ஏற்பட்ட வலி, இருதய சம்பந்தமானது அல்ல என்று மருத்துவர் கூறியபோது ஏற்பட்ட, மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. மூன்று நண்பர்களும் என்னுடன் இருந்திட வந்தபோது. பிரிந்திருந்த நாட்களிலே ஏற்பட்ட நிகழ்ச்சிகள்பற்றிப் பேசி மகிழ்ந்தோம். விளையாட்டுச் சாமான்கள் கிடைத்ததும் குழந்தைகள் குதூகலமடைவதுபோல, ஏதோ ஓர்வித மகிழ்ச்சி, சிரிப்பு, பேச்சு!
அன்பழகனைச் சுற்றி, ஒரே வள்ளுவர் மயம்! ஆமாம்! பரிமேலழகரின் வள்ளுவர், பரிதியாரின் வள்ளுவர், வரதராசனாரின் வள்ளுவர், இலக்குவனாரின் வள்ளுவர், குழந்தையின் வள்ளுவர், நாமக்கல்லார் வள்ளுவர், கி.வா.ஜெகனாதன் வள்ளுவர், மணக்குடவர் வள்ளுவர் இப்படிப் பலப்பல. திருக்குறள் ஆராய்ச்சி நூலொன்று திறம்பட ஆக்கிக்கொண்டிருக்கிறார் அன்பழகன். குறளாராய்ச்சி குறித்து உரையாடும் சுவைமிகு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
மதியழகன், சான்றுவிளக்க நூலும், அதுபோன்ற வேறு சட்ட நுணுக்க ஏடுகளையும் படிப்பதும், சட்ட சபைத்துறைக்கு இங்கிருந்தபடியே, பல்வேறு பிரச்சினைகள் பற்றி கேள்விகள் தயாரித்து அனுப்புவதும், இடையிடையே, பல முன்னாள்—இந்நாள் பிரச்சினைகள் பற்றி உரையாடுவதுமாக இருக்கிறார்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என்று நான் குழம்பிக்கிடந்தபோது, வெற்றி நமக்குத்தான் என்பதை, புள்ளிபோட்டே காட்டிவிட்டார். பெரும்பாலும், அவர் போட்டுக் காட்டிய 'புள்ளி' மெய்யாகிவிட்டிருக்கிறது.
சிறுவர்களுக்கான உடைபற்றிய நூலொன்று தயாரித்துக்கொண்டிருக்கிறார், தோழர் சுந்தரம்
நான் எழுதவேண்டும் என்று எண்ணிக் கொண்டுள்ள பிரச்னைக்குத் தேவைப்படும் ஏடுகள் பெற முடியாமல் திகைத்துக் கிடக்கிறேன்; கிடைக்கும் ஏடுகளைப் படித்து கொண்டிருக்கிறேன்.
அறப்போரில் ஈடுபடுவதற்காக நான் சென்னை புறப்படுவதற்கு முன் இரவு, திருவத்திபுரத்தில் பேசினேன்—புலவர் கோவிந்தன் ஒரு காகிதக்கட்டு, மைக்கூடு, எழுதுகோல் இவைகளைக் கொடுத்து, தக்கதோர் நூல் எழுதவேண்டும், சிறையில், என்றார்.
சிறையில் உள்ள இடர்ப்பாடுகளை அவர் உணரவில்லை. அதிலும் இம்முறை, சிறையில் மிகுந்த கண்டிப்பு, கெடுபிடி!!
ஆறு புத்தகங்களுக்குமேல் அனுமதிக்க முடியாது. இப்படி ஒரு கண்டிப்பு.
அந்தப் புத்தகங்கள் அரசியல் சம்பந்தப்பட்டவைகளாக இருந்தால், அனுமதி மிகக் கடினம்.
புத்தங்கள், இந்தச் சிறைக்குள்ளே நுழைந்ததும். நேரே எம்மிடம் வந்து சேரமுடியாது. ஒருவாரமோ, பத்து நாட்களோ, அவைகளுக்குக் கடுங்காவல்—அதிகாரிகளின் மேஜைக்குள்!
ஒரு வாரமாகிறது, 'அடக்குமுறைக்கொடுமை' பற்றிய ஒரு ஆங்கில ஏடு, இங்கே தரப்பட்டு மிகுந்த ஆவலுடன் அந்தப் புத்தகத்தைக் கொண்டுவரச் சொல்லி இருந்தேன். புதிய வெளியீடு—19-ந்தேதி, பரிமளம் அந்தப் புத்தகத்தை என் எதிரில்தான் சிறை அதிகாரி ஒருவரிடம் கொடுத்தான்—அவர் மேலதிகாரியிடம் காட்டி, ஒப்புதல் பெற்றபிறகு தருவதாகச் சொன்னார்—இன்றுவரை, புத்தகம் தரப்படவில்லை. தரப்படாதது மட்டுமல்ல, எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் சொல்லுகிறார்கள்.
'அடக்குமுறை' பற்றிய புத்தகம் என்ற உடனே, இந்த நாட்டு நிலைமை-இந்தச் சர்க்கார் செய்திடும் கொடுமை பற்றிய புத்தகமோ என்று எண்ணிக் கொள்ளாதீர்கள் ஐயா! இது அடக்குமுறை எனும் பிரச்சினைபற்றி, மேனாட்டார் ஒருவர் வெளியிட்டுள்ள புதிய புத்தகம்' என்றுகூட மேலதிகாரியிடம் விளக்கம் சொன்னேன். அதையும் கேட்டுக்கொண்டார். அதுதான் அவர் எனக்காகச் செய்தது. புத்தகம் என் கைக்கு வரவில்லை. சட்டமும் சமுதாயமும் என்பதுபற்றி ஒரு நூலெழுத விரும்புகிறேன் அதற்காகப் பல ஏடுகள் தேவை—எங்கே கிடைக்கப் போகின்றன!
சிறையில் இம்முறை இத்தனை கண்டிப்பு இருப்பதற்கு காரணம், புதிய சிறை அமைச்சருடைய 'பெருந்தன்மை'தான் என்று தெரிகிறது. தெரிந்து?
வாரத்துக்கு ஒரு முறை, கைதிகளை. நண்பர்கள் உறவினர்கள் வந்து பார்க்கலாம் என்பது சிறைக்கான விதிகளில் ஒன்று.
உறவினர்கள் மட்டுந்தான் பார்க்கலாம், நண்பர்கள் கூடாது என்று இம்முறை ஆக்கிவிட்டிருக்கிறார்கள்.சுய ராஜ்யம் மலரமலர அத்துணை மணம் வீசுகிறது. நண்பர்களும் வந்து பார்க்கலாம் என்றிருக்கும் விதியைக் காட்டி, முதலமைச்சரிடம் பேசிப்பாருங்கள் என்று நாவலரிடம் மருத்துவமனையில் இருக்கும் போது சொல்லிவிட்டு வந்தேன். முயற்சிசெய்து பார்க்கிறேன் என்றார்.26--2-64
இன்று, நாவலரும், கருணாநிதியும், எம்.ஜி.ராமச்சந்திரனும், கே.ஆர். ராமசாமியும், என்னைக் காண வந்திருந்தனர், முதலமைச்சரிடம் நாவலர் பேசியதன் விளைவு. எல்லோரும் களைத்துப்போயிருந்தனர், தேர்தல் அலுப்பு! எல்லோருடைய கண்களும் கீதம்பாடின—தேர்தல் வெற்றியின் விளைவு.
நாங்கள் பேச உட்கார்ந்த இடத்தில்—பக்கத்தில்—சிறையின் மேலதிகாரிகள் இருவர் உட்கார்ந்து கொண்டனர்—என்ன பேசிவிடுகிறாமோ, என்ற கவலையுடன், அவ்வளவு கண்காணிப்பு. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம்—மாநகராட்சித் தேர்தலில் சில இடங்களில் ஏற்பட்ட தோல்விகள் பற்றிக் காரணம் கேட்டறிய விரும்பினேன். எப்படிக் கேட்பது! அரசியல் பேசக் கூடாதே! ஆகவே மதுரை வழக்கு எப்போது, சட்டசபை எப்போது கூடுகிறது. மோட்டாரில் தானே வந்தீர்கள், என்ற இவைபற்றித் தான் பேசினோம். பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம் பேச முடிந்ததோ, இவ்வளவுதான்; இதற்குள்ளாகவே ஒரு அதிகாரி தமது கைகடிகாரத்தைப் பார்த்துக்கொண்டார். இந்தச் சூழ்நிலையின் சங்கடம் எனக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. விரைவிலே பேசி முடித்து, அவர்களை அனுப்பிவிடுவதே நல்லது என்று தோன்றி விட்டது.
ஒரு அதிகாரி சொன்னார், "பத்திரிகைகளில் எதையாவது போட்டு விடுகிறார்கள்—இன்னின்னார் வந்தார்கள், அண்ணாதுரையிடம் யோசனை கேட்டார்கள் என்றெல்லாம். அது, பல கேள்விகளை எழுப்பிவிடுகிறது; எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது" என்று.
சிறையில் இம்முறை உள்ள நிலைமைக்குக் காரணம் ஏதேனும் கூறவேண்டும்போல, அதிகாரிகளுக்கே தோன்றுகிறது போலும்!
நான் சொன்னேன், "பத்திரிகைகளில் வருவது பற்றிக் கவலைப்படுவதானால், இங்கு எங்களைக் காணவருகிறவர்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் கொடுமை, எங்களுக்கு எந்தவிதமான பொருளும் தருவித்துக் கொள்வதிலே இருக்கும் தடை. இவைபற்றி எங்கள் பத்திரிகைகளில் வெளியிட முடியுமே—அது விரும்பத்தக்கதா?" என்று கேட்டேன். அதிகாரி அதற்கு ஏதும் பதில் சொல்லவில்லை—"நாங்கள் சர்க்காருடைய உத்தரவின்படி நடந்துகொள்ள வேண்டியவர்கள்" என்றார். நான், "நீங்கள் எவ்வளவு உண்மையாக நடந்துகொண்டாலும், எங்களிடம் எவ்வளவு கண்டிப்பாக நடந்து கொண்டாலும், அதனாலேயே உங்களுக்கு நல்லபெயர் வந்துவிடும், சர்க்கார் அதற்காகவே உங்களைப் பாராட்டிவிடும் என்றும் நம்பிவிடாதீர்கள்". என்று சொன்னேன். பொதுவாகப் பார்க்க வருபவர்கள் மனம் சங்கடம் அடையும்படியான சூழ்நிலை இங்கு ஏற்படுத்தப்படுகிறது. நண்பர்கள், நிலையை அறிந்து கொண்டு, விடைபெற்றுக் கொண்டு சென்றனர். அதிகாரிகள் முகம் மலர்ந்தது. நண்பர்கள் பார்த்தசாரதி வெங்கா பொன்னுவேல் ஆகியோரையும், நான் தங்கி இருக்கும் பகுதிக்கே அனுப்பிவிடலாமே என்றேன்—சரி என்று அதிகாரி ஒப்புக்கொண்டு 'நீங்கள் காலையில் 7-30லிருந்து மாலைமணி வரையில் சிறை உடுப்பில் தான் இருக்கவேண்டும்' என்றார். 'சரி' என்றேன். நான் சிறைஉடுப்பில் இருப்பதை அவர் பார்க்கவில்லைபோல் தெரிகிறது. நூல் நூற்க வேண்டும் என்றார். எனக்குக் கைவலி அடியோடு போகவில்லை, இந்த நிலையில் நூற்பது இயலாது என்றேன். அதிகாரிகளின் இதயம் எவ்வளவு இளகியது என்பதைக் காண ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கைவலி காரணமாக நூற்க இயலாது என்று நான் சொன்னவுடன், அதிகாரிகளில் ஒருவர், "தேகப்பயிற்சி செய்யச் சொன்னாரே டாக்டர்" என்று கருணை பொழிந்தார். "ஐயா! டாக்டர் செய்யச் சொன்ன தேகப்பியிற்சி வேறு, நூல் நூற்பது வேறு" என்று நான் கூறிவிட்டு வந்தேன்.
27—2—64
பார்த்தசாரதி, வெங்கா, பொன்னுவேல், மூவரும் இங்கு வந்து குடியேறினார்கள்—ஐவர் அணி, மீண்டும் ஒன்று கூடிற்று என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். பொன்னேரியில் சுந்தரமும், காஞ்சிபுரத்தில் பார்த்தசாரதியும், பூவிருந்தவல்லியில் பொன்னுவேலும். செங்கற்பட்டில் வெங்காவும் சிறை வைக்கப்பட்டிருந்த சம்பவம் முதற்கொண்டு, தொடர்ந்து நடைபெற்ற பல சம்பவங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
இன்று மாலை, காஞ்சிபுரம் மறியலில் ஈடுபட்டு சிறைத்தண்டனை ஏற்றிருக்கும் கேசவன் குழுவினர், சிறை உடையில், உட்புறம் அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்டேன். அடையாளம் தெரியவில்லை. சிறை உடை அத்துணை அலங்கோலத்தைக் கொடுத்து விட்டது. நேற்று, சின்னசாமி குழுவினரும், பிறகு சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியும் சிறை கொண்டு வரப்பட்டனர். ராமசாமியை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள் வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ளனர். சிறை வார்டர்கள் மூலமாக அவர்களைப் பற்றிய செய்தி அறியலாமா என்றால், ஒருவரும் பேசுவதில்லை—அவ்வளவு அச்சம் ஊட்டப்பட்டிருக்கிறது! இன்று மாலை, எங்கள் பகுதியின் நுழைவு வாயிலருகே, தரையில் பாய் போட்டு, உட்கார்ந்து கொண்டு, தேய்ந்துபோன நிலையில் உள்ள கைதிகளை, வார்டர்கள் உட்புறம் அழைத்துக்கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவர்கள் பல்வேறு குற்றங்கள் செய்ததற்காக இங்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். இங்கு இவர்கள் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, விடுதலை பெற்று வெளியே செல்லும்போது சமூகத்திலே இடம் பெற்று, செய்யும் தொழில் கிடைக்கப்பெற்று, புதுவாழ்வு பெறப் போகிறார்களா என்பதை எண்ணிக்கொண்டேன். வெளியில் இருந்தபோது, நாணயமான தொழில் நடத்திப் பிழைக்க முடியாமல், குற்றம் இழைத்தார்கள்; உள்ளே வந்ததன் காரணமாக, எந்தத் தொழிலுக்குமே இலாயக்கற்ற 'உருவங்கள்' ஆகிவிடுகிறார்களே, இவர்கள் இனி வெளியே போய் என்ன பலன் காணப்போகிறார்கள் என்பதை எண்ணியபோது, மிகுந்த கவலையாகிவிட்டது. இந்தக் கவலையுடனேயே இன்றிரவு படுக்கச் செல்லவேண்டும் போலிருக்கிறது.28—2—64
சிறை, எதனாலே கொடுமையானதாகிறது என்பது பற்றி யோசித்துப் பார்த்தேன்; அறையில் போட்டு அடைத்துப் பூட்டி வைக்கிறார்கள் என்பதால் மட்டும் அல்ல, அதிகாரிகளின் அக்கறை அற்ற போக்கு மனதுக்குச் சங்கடம் தருகிறது என்பதால் மட்டுமல்ல, கொடுமைக்கு மிக முக்கியமான காரணம், ஒரு நாள் போலவே மற்ற எல்லா நாட்களும் உள்ளன! ஒவ்வொரு நாளும், வேக வேகமான நினைப்புகளில் நடவடிக்கைகளில், தம்மை ஈடுபடுத்திக் கெண்டுள்ளவர்கள், எல்லா நாட்களும் ஒரே விதமாகவே தோற்றமளிக்கும்படியான நிலை, சிறையில் இருப்பதைத்தான், தாங்கிக் கொள்ள முடியாத கொடுமை என்று உணருவார்கள். ஒரு நாள் நடவடிக்கையை, விவரித்தால், அதுமற்ற எல்லா நாட்களுக்கும் பொருந்துவதாக அமைந்து விடும். இன்று என்ன நிகழ்ச்சிகள் என்று கணக்கிட்டுக் காட்டுகிறேன்—காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, சிறை உடை அணிந்துகொண்டேன். மெத்த அன்புடன், முகமலர்ச்சியுடன் தோழர் பார்த்தசாரதி 'தோசை' கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்—அவருடைய முகம் எவ்வளவு மலர்ந்திருந்ததோ அந்த அளவுக்கு 'தோசை' என்ற பெயர் படைத்த அந்தப் பண்டம், கறுத்து, வறண்டுபோய் இருந்தது. கோதுமை மாவினாலே செய்யப்பட்ட மெல்லிய அடை! பிறகு காபி; நிறத்தாலே அந்தப் பெயர் பெறுகிறது. மணத்தாலும் சுவையாலும் அல்ல. பிறகு நூற்பு வேலை—இழையின் நீளம் எவ்வளவு என்பதைவிட எத்தனை முறை அறுந்தது என்பதுதான் என் நினைவிற்கு வருகிறது. பிற்பகல் I மணிக்குச் சாப்பாடு. காலையில் ஒன்பது அல்லது பத்து மணிக்கெல்லாம் செய்யப்பட்டு நன்றாக சில்லிட்டுப் போன நிலையில், எங்களுக்காக உட்புறமிருந்து கொடுத்தனுப்பப் படும் சோறு; பருப்பு கலந்த குழம்பு—கலந்த என்று உபசாரத்துக்காகச் சொல்கிறேன்—துறவிகள் உலகிலே வாழ்ந்தாலும் பற்றற்று இருப்பார்கள் என்கிறார்களே அதுபோல, பருப்பும் குழம்பும் ஒரே குவளையில் உள்ளன—ஒன்றுக் கொன்று பாசமற்று! எனவே சுவை இருப்பதில்லை. கரு நிறமுள்ள, ரசம்! பிறகு, எங்களுக்கு அளிக்கப்படும் (காபிக்காக) பாலிலிருந்து நாங்களே தயாரித்துக் கொள்ளும் தயிர்; பொரியல் ஒன்று உண்டு—ஒவ்வொரு நாளும். ஆனால் அதனை நான் குறிப்பிடாததற்குக் காரணம், நான் அதனைப் பயன்படுத்தாததுதான். பயன்படுத்தியவர்கள் படும் கஷ்டத்தை மட்டும் பார்க்கிறேன். ஒரு விவாதமே நடத்துகிறார்கள், பொரியலில் போட்டிருப்பது என்ன பண்டம்—என்ன கறி—என்பது குறித்து.
சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு மணி நேரம் ஓய்வு.
பிறகு, மறுபடியும் நூற்பது—நூற்பு முயற்சி.
ஆறு மணிக்கு, அறையில் போட்டு அடைத்து விடுகிறார்கள்—தனித்தனி அறையில்.
அந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும்.
பொது வாழ்க்கைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், ஒவ்வொரு நாளும் பல பிரச்சினைகளை, பல கோணங்களிலிருந்து, பல நண்பர்களுடன் பேசி, சுவையும் பயனும் பெறுபவர்கள். தோழமையினால் பெறப்படும் இனிமையை பெரிதும் விரும்பி வரவேற்பவர்கள். கழக அமைப்புபற்றி கழகத் தோழர்களின் எண்ணங்களைப் பற்றி அறிவதிலும், உரையாடி அகமகிழ்வதிலும், ஈடுபட்டவண்ணம் இருக்கும் என்னையும், என்போன்ற மற்றவர்களையும், செயலற்றவர்களாக இருக்கும் நிலையை மேற்கொள்ள வைக்கிறார்களே சிறையில்! இதனைவிடக் கொடுமை வேறு என்ன இருக்கமுடியும்? அதிலும் நகராட்சி மன்றத் தேர்தல்கள் நடை பெற்ற பரபரப்பான சூழ்நிலை வெளியே இருந்த போது, உள்ளே அடைபட்டுக்கிடந்தது, உள்ளபடி மெத்த வருத்தமாக இருந்தது. ஆனால், குடும்பம், அதுதரும் குளிர்ச்சி; தோழமை, அதுதரும் இனிமை; தொண்டு, அது அளிக்கும் பெருமித உணர்ச்சி இவைகளை இழந்து, சிறையில் கிடந்த போதிலும், சிறைக்கதவுகளையும் கோட்டை மதில் போன்ற சுவர்களையும் தாண்டிக்கொண்டு, எங்கள் எண்ணம், சிட்டுபோலச் சிறகடித்துக்கொண்டு பறந்து, கழக நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமெங்கணும் வட்டமிட்டபடிதான் இருக்கிறது. கண்ணுக்குப் புலனாகாமல், இருக்கும் நிலை; கருத்துக்கு எல்லாம் தெளிவாகப் புலனாகிறது. தூயதோர் நோக்கத்துக்காக, இந்தக் கொடுமையை நாமே மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமும், நம்மிடம் பற்றும் பாசமும் கொண்ட இலட்சக்கணக்கானவர்கள் வெளியே நம்முடைய நோக்கத்துக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பதை உணருவதால் ஏற்படும் எக்களிப்பும், சிறைதரும் சங்கடமான சூழ்நிலையை மறந்திருக்கச் செய்து விடுகிறது என்பதிலே ஐயமில்லை. எனக்கு உள்ளதுபோன்ற இதே உணர்ச்சிதான், இங்கு மரம் அறுக்கும் வேலையிலும், மாவு அரைக்கும் வேலையிலும், நூற்கும் வேலையிலும், ஈடுபட்டு உழலும், நமது கழகத் தோழர்கள் அனைவருக்கும் இருக்கிறது. அவர்களைப் பார்க்க, பேச, எனக்கு வாய்ப்பு இல்லை. அவர்கள், நண்பர்களையோ, உறவினர்களையோ காண்பதற்காக அழைத்து வரப்படுகிறபோது, நான் இருக்கும் பக்கமாகத்தான் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் பார்க்க, புன்னகை காட்ட, வணக்கம் கூறிக்கொள்ள முடிகிறது; அருகில் வர, சிறைக்காவலர்கள் அனுமதிப்பதில்லை.
சிறையில் உள்ள தோழர்களில், இருவர் மோகன சுந்தரம், லோகநாதன், மாநகராட்சி மன்றத் தேர்தலில் ஈடுபட்டார்கள்—இதிலே லோகநாதன் வெற்றி பெற்றார்— மற்றவர், நாவலர் நடையிலே சொல்லுவதானால், வெற்றிக்கான வாய்ப்பை இழந்துவிட்டார்.
பொதுவாக, மாநகராட்சி மன்றத் தேர்தலில் நமது கழகம் பெற்ற வெற்றி, சிறையில் உள்ள நமது கழகத் தோழர்களுக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
மோகனசுந்தரம் வெற்றிபெற முடியாமற் போய்விட்டதற்கான காரணம்பற்றி, இன்று மதியழகன் விவரமாகச் சொன்னார்—அந்த வட்டத்தின் அமைப்பு—வாக்காளர்களின் வகை—இவைபற்றி, நல்ல தெளிவான மதிப்பீடு போட முடிந்திருக்கிறது மதியழகனால். தேர்தல் களத்திற்குத் தேவையான முறைகளையும், தகவல்களையும், நமது கழகத்தோழர்கள், கூடுமான வரையில், பாராட்டத்தக்க அளவு பெற்றுவருகின்றனர்—தேர்தல் வெற்றிக்கு அது மிக முக்கியமான காரணம். தேர்தலில் கிடைத்த வாக்குகளை, பலமுறை, ஆராய்ந்து பார்த்திட்டதில், பல இடங்களில், நாம் பெற வேண்டிய வெற்றி, நமது கரத்திலிருந்து நழுவிவிட்டிருப்பது தெரிகிறது. கழகம் அடியோடு தோற்றுவிடும் என்று எழுதிய இதழ்கள், கழக வெற்றிக்குப் பிறகு, என்ன எழுதியுள்ளன என்பதனைப் படித்து, அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பல இதழ்கள், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கேடுபாடுகளைக் கண்டிக்கின்றன என்றாலும், கழகத்தை வெளிப்படையாக ஆதரித்து, காங்கிரசின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற அச்சம் கொண்ட நிலையில் உள்ளதுபற்றி நண்பர்கள் எடுத்துக் கூறினார்கள். இது இயல்புதான். ஏனெனில், நமது கழகம் 'பிரமுகர்கள்' கொண்டது அல்ல; ஆகவே இந்தக் கழக வளர்ச்சி, இதழ்களுக்குக்கூட எரிச்சலை மூட்டுகிறது; ஆனால் ஒன்று, மக்கள், இதழ்களின் இருட்டடிப்பு, இட்டுக்கட்டும் முறை இவைகளை இப்போது பொருட்படுத்துவதில்லை; எழுதப்பட்டவைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. எடை போட்டுப் பார்க்கிறார்கள் என்பதுபற்றி நான் விளக்கிக்காட்டினேன். பாராளுமன்றத் துறையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டு வரும் இந்தக் கட்டத்தில், ஒரு ஆங்கில இதழ், குறைந்த அளவு வாரஇதழாவது, கழகத்துக்கு அவசரமாகத் தேவை என்பதுபற்றி, மதியழகன் வலியுறுத்திச் சொன்னார். நான் நடத்திக்கொண்டு வந்த ஆங்கில வார இதழ் நிறுத்தப்படவேண்டி ஏற்பட்ட நிலைமைகளை எடுத்துக் கூறினேன். எத்தனை சங்கடம் இருந்தாலும், வெளியே வந்ததும், மறுபடியும் ஆங்கில வாரப் பத்திரிகையைத் தொடங்கியாக வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டிருக்கிறது. இந்த இன்ப நினைப்பை அணைத்தபடி இன்று துயிலச் செல்கிறேன்.
29—2—64
"எவனொருவன் இந்திரியங்கள் எனும் துட்டக் குதிரைகளுக்கு அறிவெனும் கடிவாளமிட்டு அடக்கி, நன்னெறி எனும் பாதையிலே செலுத்துகிறானோ, அவனே அரனடி எனும் திருத்தலத்தை அடைவான். இடையே இச்சை எனும் நச்சுக்கொடி கிடக்கும்; பச்சென்று இருக்கிறதே என்று பார்த்தாலோ சிக்கினோரைச் சீரழிக்கும். அதற்கு நிராசை எனும் சாட்டை கொண்டு குதிரையைத் தட்ட வேண்டும்."
மட அதிபரின் பேச்சல்லவா? இதை ஏன், சிறையில் உள்ள நான் எடுத்துக் கூறுகிறேன் என்று எண்ணுகிறீர்கள்.
நான் அல்ல; நண்பர் மதியழகன் இன்று, மடாதிபதி போலவே, எங்கள் அறையில் உள்ள 'சிமெண்ட்' திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, இதுபோலப் பேசினார். பேச்சு அல்ல; இது பாடம். 'சந்திரோதயம்' என்ற நாடகத்தில் அவர் அழகூர் மடாதிபதியாக வேடம் தாங்கிப் பேசுவது. அதனை இன்று நினைவுபடுத்திக் கொண்டார். ஏன் என்கிறீர்களா? நமது கழகப் பிரச்சாரத்துக்காக, முன்பு நாடகங்கள் நடத்துவோமே- அது நின்றுபோய்விட்டது நல்லதல்ல, மறுபடியும் நாடகங்கள் போட வேண்டும் என்ற யோசனை பற்றிய பேச்சு எழவே, மதி, இந்த மடாதிபதி உரையை எடுத்துக்கூறி, சட்டசபையில் மடாலயங்கள் பற்றிய விவாதத்தின்போது, இந்த வாசகங்களை, தான் கூறியதாகச் சொன்னார். அமைச்சர்கள்கூட மகிழ்ச்சி அடைந்தார்களாம். நாடகங்கள் நடத்துவதுபற்றிய பேச்சு வளர்ந்து, பொதுவாக, கழகப் பிரசார முறைகள், அளவு, இவைபற்றிய விவாதமாக மலர்ந்தது. இம்முறை மாநகராட்சிமன்றத் தேர்தலில், நமது கழக ஆதரவுக்காக மறைந்த நகைச்சுவை அரசர் என். எஸ். கிருஷ்ணனின் மகன் கோலப்பா வில்லுப்பாட்டும், சேதுராசன் பலகுரல், நிகழ்ச்சியும், நல்ல முறையில் நடத்தி இருக்கிறார்கள் என்பதை இதழ்களில் கண்டோம். அதுபற்றி மகிழ்ச்சியுடன் பாராட்டினேன். நாடகங்கள் தேவைதான்—ஆனால், நான் இனி நடிப்பது இயலாது—நீங்களெல்லாம் நடிக்கலாமே என்று அன்பழகள் ஆகியோரிடம் கூறினேன். அவர்களுக்கு விருப்பம் எழுந்ததை உணர்ந்து மகிழ்ந்தேன். நாடகம் எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார்கள். "ஆகட்டும், பார்க்கலாம்" என்று காமராஜர்போலச் சொன்னேன்.
இன்று, தோழர்கள் மதியழகன், அன்பழகன், சுந்தரம், ஆகியோரைக் காண, அவர்கள் வீட்டிலிருந்து வந்திருந்தார்கள். பரிமளம் வரக்கூடும் என்று சிறை மேலதிகாரி கூறியதாகக் கேள்விப்பட்டேன், வரவில்லை. ஒரு சமயம், காஞ்சிபுரம் போயிருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்.
1-3-64
மார்ச்சு மாதம் துவங்கிவிட்டது—துவக்க நாள் ஞாயிற்றுக்கிழமை—ஞாயிற்றுகிழமை, சிறையிலே சந்தடியற்ற நாள்.
பகலெல்லாம், நிரம்பப் பேசிக்கொண்டிருந்தோம்—கோவையாக ஒரே விஷயத்தை அல்ல, பல விஷயங்கள் பற்றி.
வெங்கா, திறமையாக நூற்பு வேலை செய்கிறார்; எனவே, அவரிடம் பயிற்சி பெற முனைந்தேன்.
இன்று பிற்பகல், விலைவாசிக் குறைப்புப் போராட்டத்தின்போது வேலூர் சிறையில் இருந்தது பற்றிய விவரங்களை, நானும் பொன்னுவேலுவும், மற்றவர்களிடம் 'கதை கதை'யாகச் சொன்னோம். அவர்களிடம் அது பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இரவெல்லாம் பேசித் தொல்லை கொடுப்பதால் முகத்தைச் சுளித்துக் கொள்ளும் என் அருமை நண்பா ராஜகோபால் என் மனக் கண்முன் வந்துநின்றார். தேர்தலில் தோற்றுவிட்டதால், மெத்தவும் திகைத்துப் போயிருப்பார்—என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்றிருந்தாலாவது சிறிது ஆறுதலாக இருந்திருக்கும்—வரக்காணோம். வேலூர் சிறை நிகழ்ச்சி பற்றிய பேச்சு நடைபெற்றதும், சாரதியின் உரத்த குரல், சண்முகத்தின் வெடிச் சிரிப்பு, வடிவேலுவின் உருக்கமான பாட்டு, தருமலிங்கத்தின் பாகவதர் பாடல், எல்லாம் நினைவிற்கு வந்தன. அந்தச் சிறையில் கழகத் தோழர்கள் பல நூறு பேர், ஒரே பகுதியில், காவலில் வைக்கப்பட்டிருந்ததால், ஒருவருடன் ஒருவர் பழக வாய்ப்பு இருந்தது.
தோழர் சுந்தரம் எனக்குப் பல ஆண்டுகளாக நண்பர்; அன்பழகனுக்கு நெருக்கமான நண்பர்; ஆனால் சிறைபுகக்கூடியவர் என்று நான் எண்ணினதில்லை. என்னிடம் அவர் அறப்போரில் ஈடுபடப் போவதாக, மற்றவர்கள் சொன்ன போது, நான் முதலில் நம்பவில்லை. பிறகு, தடுத்தும் பார்த்தேன். இன்று, அவரிடம், சிறை செல்லும் துணிவும் விருப்பமும் எப்படிப் பெற முடிந்தது என்பதுபற்றிக் கேட்டேன். என் பங்கை நான் செலுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டுதான் நான் ஈடுபட்டேன், என்று அவர் கூறினார். சிறையில், சங்கடமும், சலிப்பும், பயமும் ஏற்படவில்லையா என்று கேட்டேன். முதலில், என்னைத் தனியாக, பொன்னேரியில் கொண்டுபோய் அடைத்தார்களே, அப்போது சங்கடமாகவும், பயமாகவும் இருந்தது. நல்ல மழை. நான் இருந்த அறையிலே விளக்கும் இல்லை.பாம்பே கூட நுழைந்துவிட்டது. அப்போதுதான் பயப்பட்டேன். இங்குவந்த பிறகு, சங்கடமாகத் தோன்றவில்லை என்று கூறினார்.
இன்று மாலை, கடற்கரையில் பாராட்டுக் கூட்டம்! அதிலே கூடிடும் பெருந்திரளைக்காண்கிறேன்! மகிழ்ச்சி ஒலி காதிலே விழுகிறது! புன்னகை தவழும் முகங்களைக் காண்கிறேன்! எல்லாம் இங்கு இருந்தபடி என் வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறேன்.
நாளை இதழ்களில், செய்தி பார்த்து, மகிழ வேண்டும்.
இன்றிரவு, அத்தக் கூட்டத்திலே, 'அறிமுகம்' செய்யப்பட்டு பாராட்டுப் பெறும், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களை எண்ணி மகிழ்ந்தபடி, உறங்கச் செல்கிறேன்.