கொல்லிமலைக் குள்ளன்/18
கொல்லிமலைக் குள்ளன் நீண்ட நேரம் மூர்ச்சையுற்றுக் கிடக்கவில்லை. முகத்திலிருந்து வழிந்த ரத்தத்தாலும், அடிபட்ட அதிர்ச்சியாலும் அவன் சிறிது நேரந்தான் உணர்வற்றிருந்தான். பிறகு, அவனுக்கு மெதுவாகத் தன் நினைவு வந்தது. தரையில் படுத்துக்கொண்டே அவன் நெற்றியிலும் கன்னத்திலும் வழிந்து உறைந்து இருந்த ரத்தத்தைக் கையால் துடைத்துக்கொண்டான். அவனுடைய ஜிப்பாவின் கழுத்துப் பக்கத்திலெல்லாம் ரத்தம் படிந்து ஈரமாக இருப்பதை உணர்ந்தான். மூக்கின் இருபுறங்களிலும் நல்ல காயம் ஏற்பட்டிருந்தது. நெற்றியின் மேலே அவன் மெதுவாகத் தடவிப் பார்த்தான். அங்கேயும் காயம் இருந்தது. காயங்களிலிருந்து ஒருவகை வலி உண்டாயிற்று. அவன் அதைச் சமாளித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். அந்த இடத்திலிருந்து தப்பிப் போகவேண்டியது உடனடியாகச் செய்ய வேண்டிய வேலையென்று அவனுக்குப் பட்டது. உடனே அவன் குகையினுள் தண்ணீர் கசிந்து வருகின்ற சுரங்க வழியைத்தான் முதலில் நினைத்தான். கதவை நன்றாக வெளியில் சாத்திக் குறுக்குச் சட்டத்தைப் போட்டிருப்பார்களென்று அவனுக்குத் தெரியும். அதனால் கதவருகிலே போய் அதைத் திறக்க முயற்சி செய்து காலத்தை வீணாக்க முயலவில்லை.
அவன் சுரங்க வழியிற் புகுந்து குனிந்தும் தவழ்ந்தும் முன்னேறிச் செல்லலானான். சிறிது நேரத்தில் அவன் வஞ்சியாற்றின் பக்கத்திலிருந்த மலைத் துவாரத்திற்கே வந்துவிட்டான். பேராசிரியர் வடிவேலும் அந்த இடத்திற்கு வந்து பார்த்தாரல்லவா ? அந்தத் துவாரத்தின் வழியாகத் தப்பிப் போக முடியாது என்று அவர் நினைத்தார். எனென்றால், அது செங்குத்தான மலைப்பகுதியில் ஆற்றுமட்டத்திற்குமேல் சுமார் இரு நூறு அடி உயரத்திலிருந்தது. அங்கிருந்து ஆற்றில் குதித்தால் உயிர் பிழைக்க முடியாது. அதனால் அதன் வழியாகக் கொல்லிமலைக் குள்ளன் போயிருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது.
ஆனால், குள்ளன் தப்புவதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்திருந்தான். ஆகவே, எப்படியாவது அந்தத் துவாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று அவன் உறுதிகொண்டான். படுத்து ஊர்ந்துகொண்டிருக்கும் நிலையில்தான் அந்தத் துவாரத்தின் வழியாக எட்டிப் பார்க்க முடியும். பேராசிரியர் வடிவேல் அதன் வழியாகக் கீழே குனிந்து ஆற்றைத்தான் கவனித்தார். கீழிருக்கும் மலைப்பகுதியையும் கவனித்தார். ஆனால், அவர் மேலே நிமிர்ந்து பார்க்கவில்லை. குள்ளனோ எல்லாப் பக்கமும் பார்த்துவிட்டு மல்லாந்து படுத்து மேலேயும் பார்த்தான். அங்கே சுமார் பத்தடி உயரத்தில் பாறை இடுக்கில் எப்படியோ முளைத்து வளர்ந்த இச்சி மரத்தின் வேர்களில் ஒன்று, பாறையோடு ஒட்டினாற்போல அந்தத் துவாரத்திற்கு ஓரடி உயரத்திலே வந்து, வலப்புறமாகச் சென்றிருந்தது. குள்ளன் தனது வலக்கையை வெளியே நீட்டி அந்த வேரைப் பிடித்தான். வேர் கையின் அளவு பருமனுடையதாகவும். உறுதியாகவும் இருந்தது. இன்னும் கொஞ்சம் உயரத்திலே அது பாறையோடு ஒட்டாமல் பிடிக்க வசதி யாகவும் இருந்தது. அது ஒன்றுதான் தப்புவதற்கு வழி என்று குள்ளனுக்குத் தோன்றிற்று. ஆகவே, தனது இருகைகளாலும் மல்லாந்து படுத்தவாறே அந்த வேரைப் பிடித்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மேலே எட்டி எட்டிப் பிடித்தான். அப்படிப் பிடித்து மெதுவாகத் தன் உடம்பையும் வெளியே இழுத்தான்.
பிறகு, அந்த வேரைப் பற்றிக்கொண்டே அந்தரத்தில் தொங்கினான். இப்பொழுது மேலே நன்றாகப் பார்க்க முடிந்தது. கொஞ்சங்கொஞ்சமாக அந்த வேரைப் பற்றிக்கொண்டு மேலே தொற்ற முடியுமானால் துவாரத்தின் அடிப்பகுதியில் காலை வைத்து நன்றாக நின்றுகொள்ளலாம். பிறகு நிதானமாக அங்கிருந்து மேலே ஏறவோ, கீழே இறங்கவோ வழி கண்டு பிடிக்கலாம். இந்த எண்ணம் வரவே குள்ளனுக்கு ஒரு புதிய உணர்ச்சி பிறந்தது. இயல்பாகவே அவன் நல்ல உடலுறுதியுள்ளவன். நீச்சலினாலும் வேறு தேகப்பயிற்சிகளாலும் அவன் தன் உடம்பை லாகவமாகப் பழக்கி வைத்திருந்தான். அதனால் அவன் மூச்சுப் பிடித்து, தன் முழு சக்தியையும் பயன்படுத்திக் கைகளை மாற்றிமாற்றி வைத்து மேலே தொற்றினான். கால்களையும் பாறை மேல் வைத்துப் பார்த்துப் பார்த்து ஏதாவது சிறிது துறுத்திக்கொண்டிருக்கிற பகுதியையும் தனக்கு உதவியாகப் பயன்படுத்திக்கொண்டான். பெருமுயற்சியால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கடைசியில் துவாரத்தின் அடிப்பகுதியிலே கால்களை ஊன்றி உறுதியாக நின்றுகொண்டான். அந்த நிலையிலே சற்று இளைப்பாறினான்.
பிறகு சுற்றிலும் உற்று நோக்கினான். அவன் வலக் கைப்புறமாக இச்சி மரத்தின் வேர் கீழ்நோக்கிப் பாறை இடுக்கிலே ஓடிக்கொண்டிருந்தது. சுமார் ஐந்தடி நீளத்திற்குப் பின் பாறையிலே இடுக்கில்லாமையால் வேர் கொஞ்ச தூரம் பாறைக்கு மேலாகவே சென்று, மீண்டும் ஒரு பாறை இடுக்கிலே உள் நுழைந்திருந்தது. பாறைக்கு மேலாகச் செல்லும் வேர்ப்பகுதியை எட்டிப் பிடித்துக் கீழே தொங்க முடியுமானால் காலுக்கும் கீழே ஆறடி ஆழத்தில் துறுத்திக் கொண்டிருந்த ஒரு சிறிய பாறையை அடையலாம். தொங்கியே அதன் மேலே குதித்துவிடலாம் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால், முதலில் அவ்வேரை எட்டிப் பிடிக்கவேண்டும். எப்படியும் தப்பவேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் அவனுக்குப் பெரியதொரு துணிச்சல் ஏற்பட்டது. இடக்கையில் வேரைப் பிடித்துக்கொண்டு, வலப்பக்கமாக அப்படியே சாய்ந்து, காலை அழுத்தி ஊன்றி மேலெழும்பிக் குதித்தான். அந்த வேர் பிடிபட்டது. அங்கிருந்து கீழ்ப்பாறை மேலே குதிப்பது அவனுக்கு எளிதாக இருந்தது.
அந்த இடத்திலிருந்து மலையோரமாகவே வஞ்சியாற்றின் ஒட்டத்திற்கு எதிர்ப்புறமாகக் கொஞ்ச தூரம் போக முடிந்தது. அது அவனுக்கு மிக வசதியாக இருந்தது. ஏனென்றால், அங்கிருந்து அடுத்த திருப்பத்திலுள்ள வஞ்சியாற்றின் கரையைப் பார்க்க முடியும். அந்தக் கரையிலிருந்துதான் நூலேணி வழியாக மேலே ஏற வேண்டும். அங்கே பரிசல் அருகிலே தன் ஆள்கள் இருந்தால், பிறகு எல்லாம் எளிதாக முடிந்து விடும். அவர்களின் உதவியைக்கொண்டு தங்கமணி முதலியவர்களையும் பிடித்துவிடலாம். ரகசியக் குகையின் கதவையும் திறக்கச் செய்யலாம். அவர்கள் சுரங்க வழியாக வந்து ஒரு கயிறு வீசினால் அதைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறலாம் அல்லது ஆற்றில் இறங்கலாம். பரிசலை அந்த இடத்திற்குக் கொண்டுவரச் செய்து அதில் ஏறிக்கொள்ளவும் முடியும்.
இந்த எண்ணங்களோடு அவன் மலையில் உள்ள திருப்பத்தின் வழியாக எட்டிப் பார்த்தான். அங்கே இரு பரிசல்கள் தான் இருந்தன. ஆற்றில் யாரும் இல்லை. கட்டி வைக்கப் பட்டிருந்த வடிவேலையும் காணோம்.
'அந்தப் பயல் தங்கமணி என்னை முந்திக்கொண்டான்... ஆனால் அவன் என் ஆள்களை எப்படி ஏமாற்றினானோ தெரியவில்லையே! ஆள்களை ஏமாற்றாமல் அவன் வடிவேலைக் கட்டவிழ்த்து மேலே அழைத்துச் சென்றிருக்க முடியாது. எப்படியோ அவர்கள் ஏமாந்து போயிருக்க வேண்டும். அல்லது சிறைப்பட்டிருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அதே சமயத்தில் இனிமேல் என்ன செய்வது என்பதையும் வேகமாக நினைத்து முடிவு செய்துகொண்டான.
அந்த இடத்திலிருந்து மேலும் பத்தடி கீழே இறங்க முடிந்தது. இப்பொழுது அவன் ஆற்று நீர்மட்டத்திற்குமேலே சுமார் இருபது அடியில் இருந்தான். அங்கிருந்து அப்படியே ஆற்றில் குதித்தான்; உயரத்திலிருந்து குதிப்பதும், ஆற்றில் நீந்துவதும் அவனுக்கு எளிதான விளையாட்டு. நல்ல வேளையாக மலைகளுக்கு இடையில் செல்லும் ஆறு மிகவும் ஆழமாக இருந்தது. குள்ளன் ஆற்று வெள்ளத்தோடேயே மிதந்து சென்றான். அவன் அப்போது ஓட்டத்தை எதிர்த்து நீந்தித் தன் கைகால்கள் ஒயும்படி செய்யவில்லை. ஆற்றோட்டத் தோடேயே போவதில் மிதந்துகொண்டிருப்பதற்கு மட்டும் அவன் கைகால்களைச் சற்று அசைத்தான். இவ்வாறு அவன் சுமார் கால் மைல் தூரம் சென்றதும் மலைப்பகுதி முடிவடைந்தது. ஆறும் பரவலாக ஓடியது. அதன் வேகமும் சற்றுக் குறைந்தது. அப்பகுதியிலே அவன் நீந்திக் கரையை அடைந்தான்.
தாழிவயிறனையும், அவனுடன் இருந்த மற்றொரு ஆளையும் கைது செய்த போலீஸ்காரர்கள் அந்தப் பகுதியில் தான் கரைக்கு வந்து, இரவெல்லாம் தங்கியிருந்தார்கள். அந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரத்தில்தான் தச்சுப்பட்டறை இருந்தது. ஆற்று வழியாகக் கொல்லிமலைக் குள்ளன் அங்கு வருவான் என்பதைத் தாழிவயிறனிடம் பல கேள்விகள் கேட்டு அவர்கள் அறிந்திருந்தனர்; அவன் திருடனோ,திருடனல்லவோ எப்படியிருந்தாலும் அவனையும் கைது செய்வதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவனையும் பிடித்துவிட்டால் தங்களுக்கு நல்ல வெகுமதியும், உத்தியோக உயர்வும் கிடைக்குமென்று. அவர்கள் நம்பினார்கள்.
அவர்கள் காலை பத்து மணிவரை மறைந்திருந்து பார்த்தார்கள். குள்ளன் வருவதாகத் தெரியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. மேலும், தாங்கள் மேற்கொண்டுவந்த வேலையை அவர்கள் செய்து முடிக்கவில்லை. தங்கமணி முதலியவர்களை அவர்கள் கண்டுபிடித்திருந்தால் அவர்கள் வேலை சரியாக முடிந்திருக்கும். அதுவும் செய்யாமல் வழியிலே அதிக கால தாமதம் செய்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிப்பார் என்று தோன்றவே, அவர்கள் இரு பரிசல்களிலும் ஏறிக்கொண்டு, தாழிவயிறன் முதலியவர்களையும் எற்றிக்கொண்டு கூடல் பட்டணத்தை நோக்கிப் போய்விட்டனர்.
அது ஒரு வகையில் குள்ளனுக்கு நல்லதாயிற்று. அவன் 11 மணி அளவுக்குக் கரையில் நடந்து, தச்சுப்பட்டறையை அடைந்தான். தச்சுவேலை செய்யும் ஆள்களோடு அவனுடைய கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த பதினைந்து ஆள்களும் அங்கு வந்து இருந்தனர். அவர்களுக்கு இவனுடைய முகத்திலிருந்த காயங்களைக் கண்டு ஆச்சரியம் உண்டாயிற்று. ஆனால் யாரும் அவனிடம் அதைப்பற்றிக் கேட்கத் துணியவில்லை. கொல்லி மலைக் குள்ளன் நேராகத் தன் அறைக்குள் நுழைந்தான்; உடைகளை மாற்றிக்கொண்டான். அப்படி மாற்றும்போதே உணவு கொண்டுவரும்படி ஆணையிட்டான். பிறகு, அவனும் வேகமாகத் தன் முகக்காயங்களுக்கு மருந்து பூசிக்கொண்டான். உணவு வந்ததும் அதைச் சாப்பிட்டுக் கொண்டே மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைப்பற்றி எண்ணமிடத் தொடங்கினான். பேராசிரியர் வடிவேலும் மற்றவர்களும் மலைக் குகையை விட்டு உடனே கூடல் பட்டணத்தை நோக்கிப் புறப்பட முயல்வார்கள். அப்படிப் புறப்பட்டால் மேல் பக்கத்திலுள்ள ஏரி வழியாகப் பரிசலில் வந்து, தரைவழியாகப் கூடல் பட்டணம் போகலாம். வடிவேலுக்கு இவ்வழி தெரியாதென்றாலும் தில்லை நாயகமும், மருதாசலமும் கூறி விடுவார்கள். அந்த வழியில் வந்தால் தச்சுப்பட்டறையை அடையாமல் சென்றுவிடலாம். நூலேணி வழியாக வஞ்சியாற்றின் கரையில் இறங்கிப் பரிசலில் ஏறி, ஆற்று வழியாகவும் அவர்கள் அப்பட்டணத்திற்குப் போகலாம். ஆனால், அப்படிப் போனால் தச்சுப்பட்டறையில் இருப்பவர்களின் கண்ணில் படாமல் போக முடியாது. அதனால் வடிவேல் எரி வழியைத்தான் பயன்படுத்த நினைப்பார் என்று குள்ளன் கருதினான்.உணவை மிக வேகமாக முடித்துக்கொண்டு அவன் தன் ஆள்களைப் பார்த்து, "ஏரிக்கரையிலே சங்கம் புதர்ப்பகுதிக்கு உடனே புறப்படுங்கள். கையிலே சிலம்பத் தடியை ஒவ்வொரு வரும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டான்.
தச்சு வேலை செய்த பதினைந்து பேரும் கையில்தடியோடு புறப்பட்டார்கள். எதற்காகத் தடி என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், யாரும் அதுபற்றி அவனிடம் கேட்கத் துணியவில்லை. அவனிடத்திலே அவ்வளவு பயம். குள்ளனும் ஒரு தடியை எடுத்தவண்ணம் புறப்பட்டான். அவன் போக நினைத்த இடத்திலிருந்து ஏரிவழியாக வருபவர்களையும் பார்க்கலாம். ஆற்றின் வழியாக வருபவர்களையும் பார்க்கலாம். தனது கைத்துப்பாக்கியை இனிப் பயன்படுத்த வேண்டி நேரிடும் என்று அவனுக்குத் தோன்றியது. அதை எடுத்துக் கொண்டான். தனது உயிருக்கே ஆபத்து வரும்போது கொலை செய்யவும் அவன் தயாராக இருந்தான்.