கொள்கையில் குழப்பமேன்?/கட்டுரை 2

2

"வரது அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன். மந்திரி வெங்கடராமன் திராவிடநாடு கோருபவர்களுக்கு விடுத்த அறைகூவலை, மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்

"அவர் திராவிட நாடு பிரச்சினையை முன் வைத்துத் தேர்தலுக்கு நிற்பதற்குத் தயாராக இருப்பதாகவும், அப்படித் தேர்தல் நடந்தால் காங்கிரசுக்கு இன்னும் 10 இடங்கள் அதிகம் கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

"காங்கிரசைவிடப் பெரும்பான்மை இடங்களைச் சட்டசபையில் தி. மு. க.—வினருக்குத் தருவதன் மூலம் வாக்காளர்கள் தி. மு. க—விடம் தெரிவிக்கும் நம்பிக்கையை, மத்திய ஆட்சியிலிருந்து மாநிலம் பிரிவதற்கான வாக்கு என்று மாநில மந்திரி சபையும், மத்திய மந்திரி சபையும் ஏற்றுக்கொள்ளுமா ? அப்படி வாக்காளர்கள் தி. மு. க—விடம் தெரிவிக்கும் நம்பிக்கையைப் பிரிவினைப் பிரச்சினை மீது நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பாகக் கருதி மாநிலத்தின்மீது தங்களுக்குள்ள பிடிப்பை என்றென்றைக்கும் விட்டுவிட மத்திய சர்க்கார் ஒப்பும் என்று மந்திரி உறுதி கூறுவாரா?"

பலே ! பலே ! இது அல்லவா துணிவு ! வீரம் ! அண்ணா ! நீ எப்போதும் அச்சம், தயக்கம் காட்டும் போக்குடன் இருப்பது வாடிக்கையல்லவோ ! என் போன்றாருக்குக் கசப்புக் கூட ஏற்படுவதுண்டே அந்தப் போக்கினால். நாடு விழிப்புற்று இருக்க, வீரர் குழாம் திரண்டு நிற்க, அவர்தம் விழிகள் வேல் போல் இருக்க, ஏன் இந்த அண்ணன் இன்னமும் கனிவு, தெளிவு என்ற போக்கையே மேற்கொள்கிறார்; ஒரு கை பார்த்தே விடுவோம் என்று வீரமாக முழக்கமிட வேண்டாமோ! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு! ஆமாம், கவிதைகூட நமது தோழர் தீட்டியிருக்கிறாரே, 'அஞ்சாமை திராவிடர் உடைமையடா !' என்று, பலமுறை என் போன்றார் சலித்துக்கொண்ட துண்டு, இது மிதவாதப் போக்காயிற்றே; நமது அண்ணன் ஏன் இப்போக்குக் கொள்ளவேண்டும் என்று, சில வேளைகளில் கோபித்துச் கொண்டதுகூட உண்டு. ஆனால், அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன்—திராவிட நாடு பிரச்சினையை முன்னால் வைத்துத் தேர்தலுக்கு நிற்க தி. மு. க. தயார் ! கேளும் நிபந்தனையை என்று அமைச்சருக்குச் சுடச் சுடப் பதில் அறைந்திருக்கிறீங்க ! இஃதன்றே எமக்குக் களிப்பூட்டும் பேச்சு ! இப்படிப்பட்ட முழக்கமல்லவா, எமது இரத்தத்தில் சூடேற்றவல்லது—நரம்புகளைப் புடைத்திடச் செய்வது—என்றெல்லாம்தானே தம்பி ! எழுச்சி பொங்கக் கூறுகிறாய். ஆமாம் ! விடுதலைப் பேரார்வம் கொந்தளிக்கும் உள்ளம் உனக்கு ! திராவிடம் என் பிறப்புரிமை என்று முழக்கமிடுகிறாய் ! அந்த முழக்கத்தை எவரேனும் கேலி செய்தால் கொதிப்படைகிறாய்; களம் காணத் துடிக்கிறாய்? எனவேதான், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக் கொள்கிறேன் ! என்ற பேச்சுக் கேட்டதும், ஆர்வத்தால் துள்ளி எழுகிறாய்; அண்ணனைப் பாராட்டுகிறார் ! புரிகிறது—ஆனால், கவலைதான் குடைகிறது! ஏன் என்கிறாயா ?

வீரச் சுவை செறிந்திட, அஞ்சா நெஞ்சுடன், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன், திராவிடம் மீட்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொண்டு, தேர்தல் களம் வாரீர் ! இரண்டிலொன்று பார்த்து விடுவோம் ! என்று தீப்பொறிபறக்கப் பேசியது, தம்பி ! நான் அல்ல ! திராவிட நாடு பகற்கனவு என்று இன்று பேசும் சம்பத்து ! ஆமாம், தம்பி ! என்னால் ஆகுமா அப்படி அடித்துப்பேச ! அதே நேரத்தில் திராவிடநாடு பகற் கனவு என்று மாறிப் பேசத்தான் முடியுமா?

நான் சாமான்யன் ! அசகாய சூரத்தனமாகப் பேசுவதென்றால் எனக்கு அச்சம் ! அதுபோலவே, இவ்வளவு காலம் இலட்சக்கணக்கானவர்களிடம், ஊட்டிய நம்பிக்கையை மறந்து, எழுச்சியைத் துச்சமென்று மதித்து, எதனையும் எப்போதும் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம் என்று துணிந்து, கொண்ட கொள்கையைக் குப்பை என்று கூறிவிடமுடியாது ! நான் மெத்தக் கூச்சப்பட்டவன் !!

திராவிட நாடு பகற் கனவு என்று இப்போது அவர் கூறுவது கேட்டு உனக்கு எவ்வளவு கோபம் வருகிறதே, அதே போலத்தான், அப்போது வா ஒருகை பார்ப்போம் என்று அறைகூவல் விடுத்தபோது காங்கிரஸ்காரர்கள் கோபித்துக்கொண்டனர். இப்போது திராவிட நாடு பகற் கனவு என்று அவர் கூறக் கேட்டுக் காங்கிரசார் எவ்வளவு குதூகலப்பட்டு, இவரல்லவா அறிவாளி ! மாயையிலிருந்து விடுபட்ட மாவீரர் ! உண்மையை உணர்ந்த மேதை ! என்றெல்லாம் கொண்டாடுவதாகக் கூறுகிறார்களே, அதே போலத்தான், தேர்தல் களம் புகுந்து, திராவிட நாடு பிரச்சினைக்கு, நாம் பெருமைப்பட்டோம், பூரித்தோம், உச்சிமீது வைத்துக்கொண்டாடினோம். ஆக இதிலே யாருக்கும் கஷ்டம் இல்லை !

ஆணித்தரமான பேச்சு ! அடித்துப் பேசும் போக்கு ! அஞ்சா நெஞ்சம் காட்டுவது !!—இவை, கைவசம் உள்ள சரக்கு—ஒவ்வோர் சமயம் ஒவ்வோர் இடத்தில் விலை போகிறது !! கொலைக் குற்றம் செய்தவனையும் தப்ப வைக்க வாதத்திறமை பயன்படுகிறது ! குற்றமற்றவனைக் கூண்டில் தள்ளவும் சில வேளைகளிலே திறமையைப் பயன்படுத்துகிறார்கள். அரசியலிலுமா ? என்று கேட்கிறாய் ! ஆமாம், பார்க்கிறோமே ! என்றோ ஓர் நாள் என்னவோ நினைப்பில், ஏதோ, சொல்லிவிட்டேன், என்று கூறுவாரோ, என்று எண்ணுகிறாய். தம்பி ! இந்த அறைகூவல், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ! நெடு நாட்களுக்கு முன்பு அல்ல !!

அமைச்சர் வெங்கட்ராமன், பேசியதை நானும்தான் பத்திரிகையில் பார்த்தேன்—உடனே விடக்கூடாது ! அறை கூவலை ஏற்றுக்கொள்வதாக உடனே வீராவேசமான அறிக்கை வெளியிட வேண்டும் என்று எனக்குக் தோன்றவில்லை. தோழர் சம்பத்து அப்படியா ? விடுவாரா ? எடுத்தார் பேனா, தொடுத்தார் அறைகூவல் என்ன நடந்தது என்கிறாயா ? அமைச்சர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயம் அமைச்சர் வெங்கட்ராமனுக்கு 'ஆருடம்' தெரியுமோ, என்னவோ ! இவ்வளவு வீர தீரமாகப் பேசும் இந்த இலைஞர், எண்ணி மூன்றே ஆண்டுகளில், திராவிடநாடு பகற்கனவு என்று பேசப் போகிறார்; இடையிலே ஏதோ சிறிது விறுவிறுப்புப் பேச்சு ; இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டாரோ, என்னவோ !

தம்பி ! இப்படி யெல்லாம், அறைகூவல் விடுவது—அடித்துப் பேசுவது—பரணி பாடுவது—முரசொலிப்பது—போன்றவைகளில் நான் ஈடுபடாததைத்தான் மிதவாதம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள் ! இப்போது விளங்குகிறதல்லவா, போலி அதி தீவிரவாதம், என்ன கதிக்கு ஈடுபட்டோரைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்ற உண்மை ?

திராவிடநாடு பகற்கனவு என்று சொல்வதைக் காட்டிலும், செல்வாக்கு மிகுந்த நுழைவுச் சீட்டு—இல்லை—காங்கிரஸ் மணிமாடம் செல்ல—வழிவிடு ! வழிவிடு ! என்று பலரும் கூறுவர் ; வரவேற்பர் ! பித்தம் தெளிந்த நிலை என்றல்லவா, கூறிப் போற்றுகின்றனர், இன்றைய அவருடைய போக்கை.

தம்பி ! அமைச்சர் வெங்கட்ராமனே, பார்க்கிறார், என்று வைத்துக்கொள், தோழர் சம்பத் அவர்களை, கண்களிலே ஒரு குறும்புப்பார்வை ! உதட்டிலே ஒரு கேலிச்சிரிப்பு ! உள்ளம் என்னென்ன எண்ணும் !!

'மிஸ்டர் ! நம்மை ஒரு போடு போட்டுப் பயம் காட்டியே விட்டீர்களே, வா, பார்க்கலாம் தேர்தலில் என்று!!'—அமைச்சர் கூறுவார், இவர்...?

'எனக்குத் தெரியும் மிஸ்டர் ! நீங்களே, கட்டாயமாக மாறிவிடத்தான் போகிறீர்கள் என்பது.'—இதுவும் அமைச்சர், இவர்...?

பகற்கனவு என்று சரியான சூடு கொடுத்தீர்கள், மிஸ்டர் ! நீங்கள் சொல்லவே, சும்மா இருக்கிறார்கள், திகைத்துப்போய். நாங்கள் சொன்னபோது, அடே அப்பா ! எப்படி யெப்படிக் கண்டிப்பார்கள்— நீங்களும் தான் இலேசாகவா கண்டித்தீர்கள் !"—இதவும் அமைச்சர் ! இவர்...?

தம்பி ! சில மாதங்களுக்கு முன்பு, சென்னை சட்ட சபையில், அமைச்சர் வெங்கட்ராமன் இப்போது கொண்டுள்ளதாகக் கூறும் போக்குக்கு முற்றிலும் மாறான முறையில், டெல்லி பாராளுமன்றத்தில் அவர் உறுப்பினராக இருந்தபோது பேசியவைகளை நான் எடுத்துக் காட்டிப் பேசினேன். அமைச்சர் வெட்கம் கலந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தார். பிறகு தொழிலாளர் பிரச்சினையாக அவரைச் சென்று காணவேண்டி நேரிட்டது. என்னைப் பார்த்த உடனே அவர் கோபத்தோடு அல்ல, குழையக் குழையக் கேட்ட முதல் கேள்வி, 'சார்', எங்கே இருந்து நான் முன்பு பேசியதை யெல்லாம் தேடிப் பிடித்து எடுத்து வைத்துக் கொண்டீர்கள் ?' என்பதுதான் ! என் பாராளுமன்ற நடவடிக்கை ஏடுகளிலே இருந்து தான் ! இன்னும் கூட இருக்கிறதே, நிரம்ப' என்றேன். அவர் கோபித்துக் கொள்ளவில்லை; மாறாக, அந்தக் கருத்துக்களைத் தான் இப்போது வலியுறுத்த முடியாதபடி அமைச்சர் பதவி தடுக்கிறது என்பதைப் பார்வையால் காட்டினார்.

ஆக, நான் அமைச்சரைப் பார்க்கும்போது, அவருக்குத் தான், கூச்சமாக இருந்தது—வெறும் உறுப்பினராக இருந்த போது, தொழிலாளர் உரிமைக்காக, வீரதீரமாகப் பேசினோம், இப்போது இப்படி ஆகிவிட்டோமே !—என்ற கவலையும், வெட்கமும்தான் அவரைப் பிய்த்துத்தின்றது.

திராவிடநாடு பிரச்சினையை வைத்துத் தேர்தலே நடத்தி விடுவோம்; நான் தயார் ! நீங்கள் எப்படி ? என்று அறைகூவல் விடுத்தவர், திராவிடநாடு பகற்கனவு என்று ஏசும் நிலை அடைந்த கோலத்தில், அமைச்சர் அவரைக் காண நேட்டால் ! பரிதாபமாகத்தான் இருக்கிறது, நினைக்கும்போதே !!

1958 ஜனவரி 28-ல் சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில், அமைச்சர் வெங்கட்ராமன் பேசிய பேச்சுக்குத் தோழர் சம்பத் விடுத்த அறைகூவல் அறிக்கையுடன், 1961 ஏப்ரல் 19-ல் திராவிடநாடு பகற்கனவு என்று அவர் அவருடைய உலகுக்கு விடுத்துள்ள அறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால்.....! சே ! எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது ! அந்தச் சிவாஜியா, நான்...? நினைவிருக்கிறதல்லவா, தோழர் சம்பத் சிவாஜி வேடத்தில் பேசிய உருக்கமான வாசகங்கள் !!

“அஞ்சா நெஞ்சன் எங்கே ? பஞ்சையிடம் பணியப் போகும் நான் எங்கே ?......வீழ்ச்சிதான் ! வேதனைதான் ! ஆனால், வேறு வழியில்லை !" எனக்கென்னவோ, தம்பி ! அந்தக் காட்சியே தெரிவது போல் இருக்கிறது.

படிப்போர் படபடக்க, அமைச்சர் வெடவெடக்க, காங்கிரஸ் பேச்சாளர் துடிதுடிக்க, அறைகூவலை ஏற்றுக் கொண்டேன். அமைச்சரே! களம் வாரீர்—என்றழைத்த அன்றைய தம்பி சம்பத்துடன், இன்றைய தோழர் சம்பத் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால், வேதனையாகத்தான் இருக்கிறது ! என்ன செய்வது !!

1958-ல் அப்படித்தான் நினைப்பு—பிறகு அது மெள்ள மெள்ளத் தளர்ந்து, உலர்ந்து, பொடியாகி, இப்போது காற்றோடு காற்றாகக் கலந்துவிட்டது. அதனால் என்ன?—என்றுகூட வாதமோ, சமாதானமோ, விளக்கமோ கூறமுடியாத நிலையில், 1961 ஏப்ரல் 8-ந் தேதி வரையில் திராவிடநாடு விடுதலைக்காக விழிப்புடன், போர் உடையில் உலவி வரும் வீரராகவன்றோ, காட்சி அளித்து வந்தார் ! நானல்லவா இப்படிப்பட்ட விடுதலை வீரர்களைக் கொண்டு வீரப்போர் நடாத்தி வெற்றியைப் பெற்றுத் தரும், திறமற்றுக் கிடந்தேன்—என்றார்கள். கேட்கிறாயா, விடுதலைப் போர்ப்பரணி, கேள், தம்பி ! இனித்தான் கேட்க முடியாதாமே—இதையாவது கேட்டு இன்புறுவோமே !!

"இரயில் என்ஜின்களுக்கு ஆயுள் 40 ஆண்டுகள் என்று நிபுணர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். அதாவது 40 ஆண்டுகள் தான் ஓட வேண்டும் என்பதாகும். தென் பகுதியில் இருப்பவை ஏதோ ஓடுகின்றன. ஆனால், வடக்கே கனமான என்ஜின்கள்—புதியவை ஓடுகின்றன. அங்குப் பல ஆண்டுகள் ஓடியவை—புதியன வந்தபின், நெற்கே தள்ளப்படுகின்றன—பூமாலை போடப்பட்டு ! பழையவை இங்கே ! புதியவை அங்கே ! அங்கு கழிக்கப்பட்டவை தள்ளப்படுகின்ற குப்பைத தொட்டி தென்னாடு ! இவை எல்லாம் தெரிந்தும் பேசாமல் இருக்கின்றனர் நமது அமைச்சர்கள். இவர்கள் எட்டுப் பேர் அந்தஸ்து உயர்ந்தால் போதுமா ?

"வாழ்வும் இல்லை—மதிப்பும் இல்லை—எனவே, ஏன் வெறும் சோற்றுப் பிண்டங்களாக நாம் வாழவேண்டும் ? 100-க்கு 99 பேர் உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் நான் நம்மவர்கள் இருக்கிறர்கள். இப்படி உழைக்கின்ற உழைப்பு நமக்குப் பயன்பட வேண்டும். அதற்குத் திராவிடநாடு திராவிடருக்காக வேண்டும்."

17—1—60 உதகைப் பேச்சு. தம்பி ! 19—1—61-ல் அவருடைய அந்தப் பேச்சு உதவாப் பேச்சு ஆகிவிட்டது— நல்லவேளையாக நமக்கு அல்ல—அவருக்கு, ஏழ்மை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாமல் விட்டு விடும் தாய் நிலை போலும் ! நாமும் ஏழைகள் தாம், என்றும் கன்னத்தில் குழி விழுந்தபடி, பிஞ்சுக் கரத்தை நீட்டுகிறதே குழந்தை ! எடுத்து வளர்ப்போம்—இரக்கம் இருக்கிறது—இதயம் இருக்கிறதே ! எனவேதான் இன்று புதுக்கட்சி தேவைப்படுவதால் எந்தெந்தக்கருத்துக் குழவிகளை, காட்டிலும், மேட்டிலும் போட்டு விட்டுப் பெற்றவர் போய் விட்டாலும், நாம் எடுத்துப் பாராட்டி வருகிறோம்.

"வடக்கே வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறார்கள்—தெற்கே வாழ்க்கைத் தரத்தைத் தாழ்த்துகிறார்கள்! வடக்கே வளமான தொழிற்சாலைகள் உருவாக்குகிறார்கள்—தெற்கே உருவாகும் நிலை இருந்தும் உதாசீனம் செய்கின்றார்கள் ! எனவே, திராவிட முன்னேற்றகக் கழகம், தெற்கே உள்ள மாநிலங்கள் நான்கும் தனி உரிமை பெற்று, திராவிடநாடு என இயங்க வேண்டும் என்கிறது. இதற்குத் தமிழகத்தில் ஆதரவு பெருகிவிட்டது; மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகின்றன—நம்முடைய முயற்சிகள் இல்லாமலேயே அங்கெல்லாம் இன்று கழகம் வளர்ந்து வருகிறது.

"ஆந்திரா சட்ட மன்ற உறுப்பினர் வாவில்ல கோபால் (ரெட்டி) என்பவர், 'அந்தந்த மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்' என்றும், 'தனித் தனியே இராணுவம் வேண்டு' மென்றும் பேசியிருக்கின்றார்; இப்படிக் காங்கிரசிலிருந்து நம்மை நோக்கி வருகிறார்களே தவிர, யாரும் இங்கிருந்து அங்கே செல்லவில்லை !"

நம்மை நோக்கி வருகிறார்கள்—என்று 1960-ல் சொல்ல முடிகிறது—அந்தத் தித்திப்புப் பேச்சுப் பெற்றுத் திராவிட மக்கள் மகிழ்ந்திருக்கும் வேளையில், எதெதற்கோ சச்சரவு என்று கூறிக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று, உங்களுக்கும் திராவிடநாடு என்னும் இலட்சியமே வெறும் கனவு—அடைய முடியாதது—என்று தோன்றுகிறது என்று கூறிவிட்டு, இத்தனை காலமும் பேசிக் கொண்டிருந்ததற்கு முற்றிலும் மாறாகப் புதிய கொள்கைகளைக் காட்டுகின்றனர்.

கொள்கைகள், மக்களின் இதயத்தில் இடம் பெற்றுவிட்டன ; இவர்களோ, தாம் இதுவரை பேசி வந்தது உதட்டளவே என்று துளியும் கூச்சமின்றி, மக்கள் என்ன எண்ணுவார்கள் என்பது பற்றிக் கவலையற்று, வேறு பேசுகிறார்கள்.

பிரிவினை வேண்டாம், திராவிடக் கூட்டாட்சி வேண்டாம், சமதர்மத் திட்டம் வேண்டாம் என்றல்லவா கூறுகின்றனர்.

டாடாவும், பிர்லாவும் கூடச் சமதர்மம் கூடாது, தேவையில்லை என்று பேசக் காணோம்—பேச வெட்கப்படுகிறார்கள்—புதுக் கட்சியினர் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள். சமதர்மம் போன்ற இலட்சியத்துக்கு நாங்கள் கட்டுப்படப்போவதில்லை—தொழில் வளர்ந்தால் போதும்—எந்த முறையிலேனும் என்று.

வடநாட்டு முதலாளிகளே கூடித் திராவிடம் புகுந்து தொழில் நடத்தலாமாம் ! தடை கிடையாதாம் ! வரவேற்பு உண்டு போலும்!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இப்போதைய தலைமை, மந்தமாக இருக்கிறது ; தீவிரம் இல்லை ; என்று குறைபட்டுக் கொண்டு இருந்த இளைஞர்கள், எப்படி இந்தப் பிற்போக்குத் திட்டத்தை இனிக்கிறது என்று கொள்வர். சமதர்மமே கூட அல்லவா, கசப்பாகி விட்டது. தம்பி ! என்னை விட்டு விலகினர்—வேதனையைத் தாங்கிக் கொள்கிறேன்—இலட்சியத்தையுமா விட்டு விலகிச் செல்ல வேண்டும் ? பாசமும் நேசமும் வேண்டாம், அவை வெறும் பசப்பு என்றனர்—சரி, காலம் கருத்தூட்டும் என்று காத்துக் கொண்டிருக்க முடியும். தனி அரசு கூடவா, வேம்பாகிவிடுவது? என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லையே—சிலரிடம் சீற்றமும், பொதுவாகவே ஒரு சலிப்புணர்ச்சியும் தோன்றினால், இப்படியா ஒரே அடியாக அடிப்படையையே அழித்து விடுவது? நம்பிக்கை நாசமாகி விட்டதா ? எப்படி ? 1959-ல் கூட அல்லவா, நம்பிக்கைச் சங்கு ஊதினார்கள்.

"ஆதிக்கத்திலிருந்து பழகிப்போன நமக்கு விடுதலை கிடைக்கும், எதிர்காலம் அதிவிரைவிலே கிட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை விரைவில் சாதித்துக் கொள்ள தி. மு. கழகம் நல்ல புடம் போட்டெடுத்த அரிய வீரர்களை வைத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சாதிக்க நமக்கிருக்கிற சாதனம், கூர் ஏறி ஒளி பெற்று வருகிறது. மெல்ல மெல்ல உறுதியாக வளர்ந்து வருகிறது, என்றைக்காவது ஒரு நாள் அந்த ஆவலைப் பூர்த்தி செய்து கொள்ளத்தான் போகிறோம் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது."

இப்படிப் புதுவையில் பேசியதைக் கேட்டவர்கள் பூரித்துப் போயினர் என்பது மட்டுமல்ல, இந்த எழுச்சியும் நம்பிக்கையும் இரண்டே ஆண்டுகளில் உருக்கிப் போய்விடும், உருத்தெரியாமல் போய்விடும் என்று எந்தக் காங்கிரஸ்காரராவது கேலிக்காகச் சொல்லி இருந்தால் கோபம் கொப்பளிக்கும் நிலை பெற்று, "ஏடா ! மூடா ! இந்தப் பேச்சுக் கேட்ட பிறகுமா உனக்குக் கெடுமதி ? பேசினவரின் வார்த்தைகளில் வெளிப்பட்ட வீராவேசத்தைக் கவனித்தனையோ ? இவர் போன்றார், களத்திலே நிற்போர், கிலிகொண்டு கடுகி ஓடிவிடினும், தன்னந்த தனியாக நின்றேனும், இலட்சிய வெற்றிக்கு உழைக்கும் தன்மையினர் என்பதை உணருகிறாயா ? இப்படிப்பட்டவர்கள் ஊட்டும் எழுச்சியா உலர்ந்து போகும் ! என்னே உன் அறிவீனம்!"—என்று கடிந்துரைத்திடும் நிலையினராயினர்.

நல்ல புடம் போட்டெடுத்த அரிய வீரர்கள், கூர் ஏறிய ஒளிவிடும் சாதனங்கள், இரண்டே ஆண்டுகளிலா இடுப்பொடிந்தோர் ஆகிவிட்டனர் ! நம்ப முடியுமா ? ஆதாரம் காட்ட இயலுமா? கூர் மழுங்கியா விட்டது? ஒளி மங்கியா போய் விட்டது? பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியும், இந்தியை எதிர்க்கத் திரண்டு நின்ற எழுச்சியும், கூர் மழுங்கியதையா காட்டுகிறது !! பேதையும் கொள்ளனே அப்படி ஒரு எண்ணத்தை ? பின்னர் ஏன் புதுக்கட்சிதேடினோர். தி. மு. கழகம் பயனற்றுப் போய்விட்டது என்று கூறுகின்றனர் ? ஏன் ?

அதற்கென்ன செய்யலாம், மழை காலத்தில் காளான் முளைக்கிறது ! பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெரிதுமாகிறது ! ஆனால், நிலைத்து நிற்கமுடிகிறதோ ? அதுபோலத்தான் இந்தத் தி. மு. க.! திடீரென்று முளைத்திருக்கிறது—வெகு விரைவிலே, இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடப் போகிறது—என்று மாற்றார்கள் பேசினர், மார் தட்டிக் கொண்டு பேசினார், இன்று தி. மு. கழகம் உருப்படாது என்று பேசுபவர்; "தி. மு. கழகம் துவங்கிப் பத்து ஆண்டுகளாகி விட்டன ; துவங்கும்போது கழகத்திற்கு எந்த வசதியும் இல்லை ; இதன் ஆயுளைப்பற்றி ஆருடம் கணித்தவர்கள் பலர் உண்டு. அரசியலில் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்திருக்கிறது காளான், நாளை அடிக்கும் காற்றில் மறைந்து விடும் என்றார்கள். அப்படிச் சொன்னவர்களைத்தான் இப்பொழுது காணமுடியவில்லை."

19—9—59-ல் பல்கலைக் கழக மாணவர்கள் உலவிடும் சிதம்பரத்தில், புதுக்கட்சிக்கு உடையார், பேசியது இது. இப்போது அவர், ஆருடம் கணிக்கிறார், தி. மு. கழகம் அழிந்து போகும், போய்விடும் என்று. அவர் பேசியது அவருக்கு நினைவிருக்குமானால், இன்று இப்படி ஆருடம் கணிப்பாரா ? அப்படிப்பட்ட ஆருடம் கணித்தவர்களை இவர் முன்பு எவ்வளவு கடுமையாகத் தாக்கி இருக்கிறார், தெரியுமா ? தம்பி !

துறையூரில் 1959, ஜூன் 20, 21-ல் நடைபெற்ற தி. மு. கழக மாநாட்டுக்கு வந்திருக்க வேண்டும், 'நமது அரசு' என்ற தலைப்பில், இன்று வடவரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கலாம்—வெட்டிக்கொண்டு போகும் உரிமையுடன் என்று பேசுபவர், ஆற்றிய பேருரை, கேட்க—அமைச்சர் பக்தவச்சலம் அகப்பட்டார் அன்று !

"தாசர் புத்தி தலைக்கேறிவிட்ட திருக்கூட்டத்தின் தனித் தலைவர் பக்தவத்சலமே !" இப்படி அழைத்து, அமைச்சர் பக்தவத்சலத்தின் அரசியல் அப்பாவித்தனத்தை எள்ளி நகையாடி, 'நமது அரசு' இருந்தால் என்னென்ன நடைபெற முடியும்; நலன்கள் கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார். இப்பொழுது அமைச்சர் பக்தவத்சலம், என்ன எண்ணிக்கொள்ளுவார் ? துள்ளுகிற மாடு பொதி சுமக்காது என்பார்கள் ! அதுபோல் அல்லவா ஆகிவிட்டது. அன்று நான், திராவிட அரசு என்பது வீண் பிரமை என்றேன். ஏ ! அப்பா ! என்னென்ன சுடு சொல் என்மீது வீசப்பட்டது. தாசர் புத்தி தலைக்கேறிவிட்டதாம், அதனால், திராவிட அரசு வேண்டாம் என்கிறேனாம் ! சொன்னார் ! இன்று அவரே சொல்கிறார், திராவிட நாடு ; கனவு என்று !! எப்படி அவர் போக்கு !!—என்று கூறி, கெக்கொலி செய்வாரே,

பக்தவத்சலம், தாசர் திருக்கூட்டத் தலைவர் ! ஒரு சமயம், நேரு பெருமகனாரிடம் மதிப்பு வைத்துப் பேசினாரோ என்று கேட்கத் தோன்றும. இல்லை, தம்பி ! இல்லை ! அவரை மட்டும் விடுவாரா ? கதருடை தரித்த சர்வாதிகாரி ! துறையூர் மாநாட்டிலே பேசியதுதான், இரண்டே ஆண்டுகளுக்கு முன்பு.

கதருடை தரித்த சர்வாதிகாரி இன்று இந்தியத் துணைக்கண்டத்தை ஆளுகிறார்.

சரி! ஆளட்டுமே, அதனால் என்ன ? அவருடைய ஆட்சி தான். அசைக்க முடியாததாக, ஈடு எதிர்ப்பு அற்ற வலிவுடன் இருக்கிறதே !—என்று காங்கிரசார் எக்காளமிடுவர். அதற்கு இடமளிப்பாரா ? இதோ அவர்களுக்கு அடி வயிற்றில் கலக்கம் ஏற்படும்படியான பேச்சு; "இந்தியப் பேரரசு இன்னும் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்று சொல்வதற்கில்லை. ஒரு அரசாங்கம் அழிவதற்கு மூல காரணம், நிர்வாகத்திலே ஊழல்கள் மலிவதுதான், இன்றைக்கு இந்தியப் பேரரசின் நிர்வாகத்தில் ஊழல்கள் மறைக்க முடியாத அளவுக்கு வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முந்திரா, டால்மியா போன்ற வடநாட்டுப் பெரு முதலாளிகள் கையிலே பேரரசு சிக்கி, மீளமுடியாத ஊழலிலே அகப்பட்டுக் கொண்டது. அந்த ஊழல் நிர்வாகம் நீடிக்காது என்பது உறுதி !" உறுதி ! உறுதி ! உறுதி ! உரையில் ! இப்போது ? கதருடை அணிந்த சர்வாதிகாரியினால் நடத்தப்பட்டு வருவதும், விரைவிலே அழியப் போவதுமான இந்தியப் பேரரசிலே இணைந்துதான், தமிழ் நாடு இருக்கும்—ஆனால் ஒரு சலுகை ! இஷ்டப்பட்டால், பிரிந்து போகலாம் !! அப்படி ஒரு உரிமை !!

ஆதித்தனார் அதனால்தான் கேட்கிறார், தமிழ் நாடு என்கிற வரையில், மெத்த சந்தோஷம் ; வரவேற்கிறேன் ; ஆனால், அது இந்தியப் பேரரசுடன் இணைந்து இருக்கும் என்றால் நான் ஒப்புக்கொள்ளமுடியாது, 'நாம்—தமிழர்' இயக்கம் இலட்சியத்தை இழந்துவிடச் சம்மதிக்காது என்கிறார். நம்மை ஆகரிக்கத்தானே வேண்டும் என்று எண்ணிக்கொள்ளக்கூடுமே, புதுக்கட்சி என்று, ஆதித்தனார் தெளிவாக, திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்—இந்தியப் பேரரசுடன் இணைந்த தமிழ் நாடு உமது கொள்கையானால், நாம் ஏற்கோம் ; நமக்கென்று இலட்சியம் இருக்கிறது ; அதனை இழப்போமா எல்லோரும் என்கிறார். யாரைப் பார்த்து ? இலட்சிய முழக்கம் செய்து வந்தவரைப் பார்த்து !!—தெளிவு—உணர்ச்சி—எழுச்சி ததும்பும் பேச்சல்லவா !!

தம்பி ! அதற்கும் அதே துறையூரில், விளக்கம் தந்தார். ஒன்றைக்கூட பாக்கியாக விடவில்லை, ஒரு வேளை, சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லியாகிவிட்டது—மேலும் பேசினால் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும் ; சலிப்பாக இருக்கும் ; ஆகவே, முற்றிலும் புதிய பாணியில் பேசியாக வேண்டும் ; நாம் பேசியதற்கு நாமே மறுப்புரைப்போம், என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம் மற்றவர்கள்—என்ற சோதனையோ, இந்தப் புதிய முயற்சி என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

வடநாட்டு முதலாளிகளுக்கு இந்தியப் பேரரசின்மீது உள்ள பிடிப்புக் குறையவில்லை; மாறாக நாளுக்கு நாள் வலுவாகிறது; வடநாட்டு முதலாளிகள் மட்டுமல்ல, அந்நிய முதலாளிகளின் பிடியும் வலுவாகி வருகிறது. அந்த நிலையிலே எந்த மாறுதலும் இல்லை.

நிர்வாக ஊழலோ நாளும் வளருகிறது ; ஒரு அரசின் அழிவுக்கான மூல காரணம் என்றல்லவா அது கூறப்படுகிறது. அந்த நிலையிலேயும் மாறுதல் இல்லை.

கதருடை தரித்த சர்வாதிகாரியாகத்தான் நேரு, இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். அதிலேயும் ஒரு மாறுதலும் இல்லை.

இந்த நிலையை தி. மு. க. எதிர்த்து வருகிறது. அதிலேயும் மாறுதல் இல்லை.

ஆனால், இதைப் புட்டுப் புட்டுக் காட்டி, தி. மு. கழகத்தில் புடம்போட்டு எடுக்கப்பட்ட வீரர்கள் உளர் என்று கூறி, நமது அரசு வேண்டும் என்ற எழுச்சியூட்டி, அதை உணர மறுக்கும் அமைச்சர் தாசர் புத்தி தலைக்கேறியவர்களின் தனிப்பெருங் தலைவர் என்று கண்டித்து, விடுதலைப் போர்ப் பரணி பாடியவரின், நிலையில்தான், நாம் யாரும் எதிர்பார்க்காத, ஆனால், நமது அரசியல் எதிரிகள் அடிக்கடி குத்திக் கிளறிக் காட்டிக்கொண்டு வந்த மாறுதல், ஏற்பட்டிருக்கிறது.

அவனுடைய நிலையில்தான், நம் நெஞ்சை வேகவைக்கும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது தவிர, அவர் எடுத்துக்காட்டிய காரணங்களின் தரம் குறையவில்லை; ஆதாரங்கள் ஆபத்தங்களாகிவிடவில்லை; பூகோளம் பொய்த்துப் போய்விடவில்லை புள்ளி விவரங்கள் புகைந்து போய்விடவில்லை; அவை அன்றுபோல் இன்றும் அருமையாகத்தான் உள்ளன ! மறுக்கொணாதவைகளாகத்தான் உள்ளன ! உள்ளம்தான் மாறிவிட்டது; உண்மையுமா, மாறிவிடும்!! உண்மையின் இலக்கணமே அது அல்லவே.

அவர் மறந்துவிடலாம், மறைக்க முற்படலாம்; மண்ணாங்கட்டி என்று கூறிவிடலாம்; ஆனால் அந்த இலட்சியத்தின் தரம் கெட்டாவிடும்? ஒருபோதும் இல்லை !

நேருவைவிட ஜனநாயகவாதி இல்லை !

இந்தியப் பேரசைவிட சிலாக்கியமான நிர்வாகம் கிடையாது.

ஊழல், ஓடோடி ஒளியும் இந்தியப் பேரரசின் பார்வைபட்டால்.

வடநாட்டு முதலாளிகள், கைகட்டி வாய் பொத்தி வருவாயை வரியாகக் கொடுத்துவிட்டு, வேளா வேளைக்கு வயிறாரச் சோறு போட்டால் போதும், என்று இந்தியப் பேரரசிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றனர்—என்றெல்லாமா, தம்பி! இனிப் பேச முடியும், எடுக்குமா? பேச்சிலே சுவை, எழுச்சி காணக்கிடக்குமா அதுபோலப் பேச முற்பட்டால்? முடியாது! பேசுபவர்கள், குளறவேண்டும்—கேட்போரோ ஐயோ! காது குடைகிறதே என்று அலறவேண்டும்.

தம்பி! எழுச்சிமிக்க பேச்சு என்பது நாவன்மையைப் பொறுத்தது மட்டுமில்லை. நாவன்மை தேவை—ஆனால் பயன்பட, பேசப்படும் பொருள், உள்ளத்தில் ஒளி உண்டாக்கத்தக்கதாக இருக்கவேண்டும்.

"கதிரவன் காய்வான், கலங்காதீர்கள் ! கண்களிலே ஒளி படச் செய்திடும், குழம்பாதீர்கள் ! குத்துங்கள், குடைத்திடுங்கள் ! வெட்டுங்கள் ! ஆழமாக வெட்டுங்கள் ! அலுப்பைப் பாராது வெட்டுங்கள் ! கருவியில் கூர் மங்கினாலும் பரவாயில்லை ! ஆழமாக வெட்டுங்கள்!"

என்று ஒரு பேச்சாளர் வீராவேசமாகப் பேசிடக் கேட்போர், உணர்ச்சி வயப்பட்டு நிற்பர். ஆனால் இறுதியில், "ஆழமாக வெட்டி, அருமையான கத்தரிச் செடி நடவு செய்யுங்கள்" என்று முடித்தால், கேட்போர் என்ன சொல்வர்? இதைத்தானா இத்துணை வீராவேசமாகப் பேசினாய் ! கத்தரிச் செடி நடவு வேலைக்காகவா இத்தனை கொக்கரிப்பு என்றெல்லவா கேலி பேசுவர்.

எடுத்துக்கொள்ளும் பொருள் நம் இதயத்தைத் தொடும் அளவுக்கு இருக்குமானால், அந்தக் கொள்கையிலே நமக்கு நீங்காப் பற்று இருந்தால் மட்டுமே, பேச்சு, சுவையும் பயனும், எழுச்சியும் எழிலும் கொண்டதாக அமையும். இதனை மற்றவர்க்குப் புதுக்கட்சியார் அறிவித்திருக்கிறார்.

"நாம் விடுபட வேண்டும் என்ற எண்ணம், நம் இதயத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

"நம்முடைய இலட்சியத்தை யார் ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் பேச்சிலே தெளிவு இருக்கும்—உணர்ச்சி இருக்கும்—எழுச்சி இருக்கும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஏதேதோ காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். " இவ்வளவு தெளிவாக பேச்சுக்கும், பொருளுக்கும் உள்ள தொடர்பை விளக்கி விட்டுச், சமதர்மம் வேண்டாம்—கூட்டாட்சி வேண்டாம்—பிரியக்கூட வேண்டாம்—ஒட்டிக் கொண்டு இருப்போம், வெட்டிக் கொள்ளும் உரிமையை வாங்கிக் கொண்டு—எனும் பொருளைத் தமக்கு உரியது ஆக்கிக் கொண்டு, ஊராரையும் அழைக்கிறார். இதற்கு ஒரு தனிக்கட்சியாம் ! ஆதித்தனார் ஆற்றல் மிக்கவர் என்றல்லவா எவரும் கூறுவர், தமிழகம் இந்தியக் குடிஅரசிலிருந்து தனியாக வேண்டும்—அம்மட்டோ? கடல் கடந்து வாழும் தமிழர்கள், இருந்து வரும் இடங்கள், தமிழ் இராஜியத்தில் உறுப்புகளாக வேண்டும்—பரந்த தமிழகம் வேண்டும்—இந்தியாவுடன் ஒட்டிக் கொண்ட நிலையில் அல்ல, தனி அரசு எனும் நிலையில் என்று, அவருடைய கரத்தையாவது வலுவாக்கி இருக்கலாம்—அந்த இலட்சியத்துக்காவது பாடுபடலாம். இதிலே கொஞ்சம், அதிலே கொஞ்சம் எல்லாம் இருக்குது, இல்லை பஞ்சம் என்று ஒரு பண்ணா ?

எவ்வளவு கெட்டு விட்டது என்று, தி. மு. கழகத்தைக் குறித்து, விலகினோர் கூறிடினும், இந்தப் புதிய கட்சியின் கதம்பக் கொள்கையைவிட ஆயிரம் மடங்கு மேல் என்று மிக மிகச் சாமான்யர்களும் அறிவார்களே, கழகத்தின் மீது ஏன் இத்துணை கடுப்பு ?

"விடுதலைப் போராட்டத்தில் வேலி யோரத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவர்களும், காட்டிக் கொடுத்தவர்களும், தங்கள் கைவரிசையைக் காட்டினால், ஐயோ என்று அலறி ஓடிவிடுவோம் என்று நினைத்தார்கள். ஆனால், நாமே கண்டு மயங்கும் அளவுக்கு நம் கழகம் வளர்ந்து வருகிறது" இந்த நிலையிலிருந்து, கழகம் எந்த முறையில், இப்போது கெட்டு விட்டது என்பதை எடுத்துக் காட்டினார்களா? காலமெல்லாம், தனிநாடு, தனிநாடு என்று பேசிப் பேசிக் குடும்பத்தைக்கூட மறந்துவிட்டுக் கொள்கை வீரர்கள் அணி அணியாகக் கிளம்பிக் குருதி கொட்டிய பிறகு, திடீரென்று ஓர் நாள் அவர்களைப் பார்த்து, "வீரர்காள் ! பின்பு பொறுத்திடுவீர் ! வீண் வேலையில் உம்மை ஈடுபடுத்திவிட்டேன். திராவிடநாடு என்பது கற்பனை, அது வேண்டாம் நமக்கு" என்றா கூறுவது? எதேச்சாதிகாரிகள் கூட, இப்படிக் கூறத் துணிவதில்லையே. கூடிப் பணியாற்றிடுவோரைக் கூட்டி வைத்துக் கொள்கைபற்றி ஏற்பட்டுவிட்ட கருத்து வேற்றுமை பற்றிப் பேசிட வேண்டாமா ? ஆண்டவன் அடி எடுத்துக் கொடுக்க, அடியார் பாடிடும் அருள் தரும் பாசுரம் போலவா. தலைவர், எப்போதும், என்ன சொல்வார் ; அதை அப்போது நமக்கு உகந்தகொள்கை யெனக் கொள்வோம் என்று மக்கள் ஏற்க வேண்டும் ? இதுதான், மக்கள் ஆட்சிக்கு அச்சாணியா ? மாண்புள்ள செயலா ? கூடிப் பணியாற்றுவோரிடம், கொள்கை பற்றிப் பேசிடக் கூச்சம் ஏன் ? தயக்கம் ஏன் ? அவர்களைத் தம் வழி கொண்டு செல்லத் தக்க ஆதாரங்கள், விளக்கங்கள் இருப்பின், ஏன் அந்த முறையைக் கையாண்டிருக்க கூடாது ? ஏகாதிபத்தியவாதி கூட அல்லவா, தான் தர இருக்கும் அரசியல் சீர்திருத்தம் குறித்து, பெறுவோரிடம் கலந்து பேசுகிறான் ? அந்த அளவுக்குக் கூடவா, பொறுப்புணர்ச்சியைப் பூரணமாகக் கொள்ளக் கூடாது ? கொண்டனரோ ? முதலில் விலகல்—பிறகு விளக்கம்—அடுத்தது திட்டம்— அதற்குப் பிறகு கொள்கை !!—இப்படி யாமே இலக்கணம்! அக்கறை கொள்வோர், இதனை எப்படி ஏற்கமுடியும் ! திகைக்கிறேன், தம்பி ! திகைக்கிறேன்.

தம்பி ! திகைக்கிறேன்.

திடீரென, தென்னகம், தெற்கு, திராவிடம் என்ற சொல் கசப்பாகிப் போவானேன் ? பொருளற்ற சொற்கள் இவை என்று புது வியாக்யானம் கூறுவானேன்.......? வடக்கு—தெற்கு என்று வறட்டுக் கூச்சலிடுகிறார்கள், என்று நம்மைக் காங்கிரசார், கேலியாகக் கண்டித்த போது, தோழர் சம்பத் அவர்கள் எப்படி எப்படி ஆத்திரம் பட்டார் ! அரிய பெரிய விளக்கம் தர முற்பட்டார் ! இப்போது அவரேவா அவருடைய வாதங்களைச் 'சொத்தை' என்று பேசுவது ? காலத்தின் கோலமா, கோபத்தின் விளைவா ? அவருடைய பொருள் செறிந்த வார்த்தையைச் சொல்வதானால், கொள்கைக் குழப்பமா ? என்ன காரணம் இதற்கு?

தம்பி ! நீயும் நானும், வடக்கு—தெற்கு என்று பேசுவது தவறு என்று கூறுபவர்களைக் கண்டிக்கக் கூசுவோம். மிகக் கடுமையான சொல்லே, அவர்களை, 'பாரத புத்திரர்கள்' என்று சொல்வதாகும். சின்னாட்களுக்கு முன்பு கூடச் சென்னை மாநகராட்சி மன்றத்திலே 'பாரத புத்திரர்கள்' என்று பேசியதை ஏசல் எனக் கொண்டு சிலர் கோபித்துக் கொண்ட செய்தி பத்திரிகைகளில் வந்தது ; கண்டிருப்பாய். அகில இந்தியா பேசுபவர்களை, நாம் கண்டிக்க முற்படும்போது கூட, அவர்கள் மனம் புண்படக்கூடாது, நமது நாக்கும் நரம்பற்றது என்று பலரும் நினைத்து விடும்படி பேசிவிடலாகாது என்ற முறையில், பேசி வந்தோம்—பாரத புத்திரர்கள் என்று.

துரோகிகள், கங்காணிகள், என்று கூறி யிருக்கிறோமா, அகில இந்தியா பேசுபவர்களை? நான் கூறினதில்லை. ஆனால், தோழர் சம்பத்து ? அதையுந்தான் கேளேன் ! இன்று, அவருடைய அறிவாற்றலைப் பத்தி பத்தியாக வெளியிடும், அகில இந்தியாக்களும் கேட்கட்டும் !

"தென்னகத்தில் இருந்துகொண்டு அகில இந்திய அரசியல் பேசினால்—பாரதப் பண்பாடு பற்றிப் பேசினால்—அவர்கள், பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிறார்கள், என்பதுதான் பொருள். அவர்கள் எங்கேயோ இருக்கிறவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத் தானிருக்க முடியும். இது குறுகிய புத்தியால் சொல்வதல்ல,—பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் பரந்த எண்ணம். தத்துவ ரீதியில், வடக்காவது தெற்காவது என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள்.—அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள் !"

இந்த விளக்கத்தின்படி, துரோகிப் பட்டியலில், கங்காணிப் பட்டியலில், எவரெவர் என்று தம்பி, எண்ணிப்பாரேன் ! காமராசரும், கனம் சுப்பிரமணியமும், கங்காணிகள் ! நவ இந்தியாவும் அகில இந்தியாவை ஆதரிக்கும் ஏடுகளும் கங்காணிகள் ! எவரெவர், இங்கு இருந்துகொண்டு, அகில இந்தியா பேசுகிறார்களோ, அவர்கள் துரோகிகள்—கங்காணிகள், நீயும் நானும் இல்லை அந்தப் பட்டியலில், பெரியார் இராமசாமி இல்லை, அந்தப் பட்டியலில், ஆதித்தனார் இல்லை அந்தப் பட்டியலில் !

ஆனால், வெட்டிக் கொண்டு செல்லும் உரிமையைப் பெற்றுக் கொண்டு, அகில இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் கொள்கையினர்? எனக்குக் கூச்சமாக இருக்கிறது தம்பி! சொல்ல !

ஆனால், காரணம் காட்டாமல் கண்மூடித்தனமான, கற்பனையாக, வடக்கு—தெற்கு என்று, அவர் பேசிக்கொண்டிருந்தாரா? இல்லை ! அழகழகான ஆதாரங்களுடன் ! இன்று அவருக்கு அவை பிடிக்கவில்லையாம் ! ஆனால், படித்துப் பார்க்கச் சொல், எவரையும், பல நாட்கள் ஏடுகளில் உள்ளது பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துத், தெளிவு பெற்றுத் துணிவு பெற்றுப் பேசியிருக்கிறார் என்பது தெரியும். அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்ததுபோல் அல்ல.

"தென்னகத்துக்கென ஓர் தனிப் பண்பாடு இன்னும் இருந்து வருகிறது. இந்தத் தனிப் பண்பை எல்லாத்துறைகளிலும் காணமுடிகிறது. கோயில் சிற்பங்களை எடுத்துக் கொண்டால், தமிழ் நாட்டிலுள்ள அதே சிற்பக் கோயில் அமைப்பு முறையை ஆந்திரத்திலும் காணலாம்—கருநாடகத்திலும் காணலாம்—கேரளத்திலும் காணலாம்; இந்த நான்கு மாநிலங்களிலும் ஒரே வகையான கட்டிட அமைப்பினைக் காணலாம். இதற்கு, 'திராவிடக் கட்டிடக்கலை' என்று இன்றும் வழங்கி வருகிறது."

"இன்று தமிழகத்தில் வளர்த்துள்ளது போல் ஆந்திரத்தில் தி. மு. கிளைகள் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இந்த நான்கு மாநிலங்களிலும் கலையில்—பண்பாட்டில் ஒருமைப் பாட்டினைக் காணலாம்."

"இசைத் துறையை எடுத்துக்கொண்டாலும், 'வடநாட்டு இசை—தென்னாட்டு இசை' என இரண்டு வகையாகப் பிரிந்து கிடக்கிறது."

"தென்னாட்டு இசையான கர்நாடக இசையில் புகழ் படைத்த சித்தூராரானாலும், செம்பையானாலும், தென்னக மாநிலங்கள் நான்கில் எதில் வேண்டுமானாலும் பாடலாம்—இந்த நான்கு மொழிகளுக்கிடையே இசையில் ஒரு ஒற்றுமை நிலவுகிறது."

"இந்தி பேசினால் அதை வங்காளி புரிந்துகொள்ளமுடியும்; ஆனால் ஒரு தென்னாட்டுக்காரன் அதைப் புரிந்து கொள்ளமுடியாது. இதற்குக் காரணம், இந்தி சமஸ்கிருகத்திலிருந்து பிறந்தது, மற்ற வடநாட்டு மொழிகள் அனைத்துக்கும் சமஸ்கிருதம்தான் அடிப்படை."

"தென்னாட்டு மொழிகள் வடநாட்டு மொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டவையாகும். வடநாட்டிலுள்ள எந்த மாநிலத்திலும் இந்தியில் பேசினால் அங்குள்ளவர்கள் புரிந்துகொள்ளுகிறார்கள்; ஆனால் வடநாட்டவர் தென்னாட்டில் வந்து இந்தியில் பேசினால் அதில் ஒரு அட்சரம்கூடத் தென் நாட்டினரால் புரிந்து கொள்ளமுடியவில்லை, என்று காந்தி, நேரு போன்ற தலைவர்களெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்."

"தென்னாட்டு மொழிகளுக்குள் சிறு சிறு உருமாற்றம் இருக்கலாமே தவிர, வடநாட்டுத் தொடர்பு சிறிதும் அவற்றிற்குக் கிடையாது. தமிழிலே பேசினால் ஆந்திரரும், கர்நாடகரும், மலையாளியும் புரிந்துகொள்ளமுடியும். இதிலிருந்து, தென்னாட்டுக் கலை, மொழி, பண்பாடு அனைத்தும் வடநாட்டினின்றும் முற்றிலும் வேறுபட்டது என்பதை உணரலாம்."

"இப்பொழுது இருந்து வருகின்ற இந்தத் திராவிட இன ஒருமைப்பாட்டினை அவசரப்பட்டுப் பிரிக்கத் தேவையில்லை. சிலர் நம்மைப் பார்த்துப் பேராசைக்காரர்கள் என்று சொன்னாலும், கெக்கலித்து ஏளனம் செய்தாலும் நமக்குக் கவலை இல்லை, இந்தத் திராவிட இனத் தனிப்பண்பை—உணர்ச்சியை ஒரு அரசியல் சக்தியாக மாற்றக் கூடிய ஓர் சக்தி பிறக்கவேண்டும்."

"'தென்னக அரசியல்' என்ற தலைப்பில் நான் பேசும் போது, தென்னக அரசியல் என்பதை நானே கற்பனை செய்து கொண்டதாகச் சிலர் சொல்வார்கள்—'தென்னாடு—வடநாடு என்று பிரித்துப் பேசுவது குறுகிய மனப்பான்மை'—என்று."

"தெற்கு—வடக்கு என்பது நாம் புதிதாகப் பாகுபாடு காட்டுவதல்ல, இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடே அப்படித்தான் அமைந்திருக்கிறது. அதன் நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதிலே வடக்கு—தெற்கு பிரிந்து கிடப்பதைக் காணலாம். அரசியலிலும், கலையிலும் இன்ன பிற துறைகளிலும் இந்தப் பிரிவினையைக் காணலாம்."

"வெள்ளையன் தன் துப்பாக்கி முனையால் இந்தியத் துணைக் கண்டத்தைப் பிரித்து, மிச்சப்பட்டதை வடநாட்டு வெறியர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றான். 'ஏக இந்தியா' என்ற இந்தப் பரந்த நிலப் பரப்பை, பெரிய மக்கள் தொகையைக் கட்டியாள, வடநாட்டு ஏகாதிபதியவாதிகளால், இந்தியக் கலாச்சாரம்—இந்தியப் பண்பாடு—இந்திய ஒற்றுமை என்று இன்று பேசப்படுகிறது."

"இந்தியா மட்டுமல்ல—ஆசியாக் கண்டம் முழுவதுமே ஒன்றாக இருந்தால் நன்றாகத்தானிருக்கும். ஒன்றாக இல்லையே! அதனாலேதான், தென்னக அரசியல் என்ற கண்ணோட்டத்தில் நாம் எதையும் காணவேண்டி உள்ளது."

“நாம் சொல்வதை ஆத்திர—கேரள—கர்நாடகத்தினர் கேட்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் தென்னக அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று வளர்ந்துள்ளதுபோல் ஆந்திர—கேரள—கர்நாடகத்தில் தி. மு. க. வவரவில்லை என்பது மெய்தான். அதைவிட மெய்யானது தென்னக அரசியல் என்று ஒன்றிருக்கிறது என்பது."

"இன்று வடநாட்டுத் தலைவர்கள் எங்கு எப்பொழுது பேசினாலும் அது பாராளுமன்றக் கூட்டமானாலும்—பள்ளித் திறப்பு விழாவானாலும், அங்கெல்லாம் தென்னக அரசியலை பற்றித்தான் பேசுகிறார்கள். 'தெற்கை நாங்கள் புறக்கணிக்கவில்லை' என்று பேசுகிறார்கள்; 'தமிழ் நாட்டைப் புறக்கணிக்கவில்லை' என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள், மேற்கத்தியப் பண்பாடு, கிழக்கத்தியப் பண்பாடு என்று பேசுவதில்லை—மராட்டியப் பண்பாட்டை மேற்கத்திப் பண்பாடு என்றோ, வங்காளத்துப் பண்பாட்டைக் கிழக்கத்திப் பண்பாடு என்றோ சொல்வதில்லை."

"பார்லிமென்டிலே சேத் கோவிந்ததாஸ் என்பவர் பேசும் போதெல்லாம். 'தட்சிண பாரத்' என்று, தான் குறிப்பிடுவாரே தவிர, தமிழ் நாட்டை மட்டும் தனியாகக் குறிப்பிடுவதில்லை."

"தென்னாடு தனித் தன்மையுடன் விளங்கக் காரணம், இந்தியா ஒன்றாக்கப்பட்ட ஒன்றே தவிர, என்றும் ஒன்றாக இருந்ததில்லை. இந்தியா ஒன்றாக்கப்பட்ட வரப்பிரசாதம் வெள்ளையனால் கிடைத்தது. வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் இடையில் எண்ணற்ற எண்ணமோதல்கள்—ஆசாபாசங்கள்—முரண்பாடுகள்—ஏராளமான பேதா பேதங்கள் அரசியலில் இருப்பதை இன்னும் நாம் உணராவிட்டால், நாம் உணர்ந்ததை மற்ற மூன்று திராவிட மாநிலங்களுக்கும் உணர்த்தாவிட்டால், 'தமிழ் நாட்டில்தான் இந்தக் கூச்சல் இருக்கிறது' என்று வடநாட்டினர் சொல்லும் நிலைமை ஏற்படக்கூடும்."

"'தென்னக அரசியல்', ஏதோ தி. மு. க. வாழ்வுக்காகப் புதிதாக அமைத்துக்கொண்ட மேடை என்று கருதுவதற்கில்லை."

"டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் எதிர்பாராவிதத்தில் மந்திரி சபையில் இடம் பெற்றதைக்கண்டு அவருக்கு ஓர் பாராட்டு அளிக்கப்பட்டதும் அந்தப் பாராட்டு விழாவில் கூட வடநாட்டுக்காரர்கள் பேசும் போதெல்லாம், 'டாக்டர் சுப்பராயனுக்கு மந்திரிப் பதவி கிடைத்ததன் விளைவாகத் தென்னகத்திற்குத் திருப்தி ஏற்படலாம்' என்றுதான் குறிப்பிட்டார்கள். மற்ற வடநாட்டு மாநிலக்தைச் சேர்ந்த எவரேனும் மந்திரி பதவி பெற்றால் அவர் இன்ன மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரவர் மாநிலத்தின் பெயரைக் கூறித்தான் பாராட்டுவார்கள். ஆனால், டாக்டர் சுப்பராயனைப் பாராட்டும்போது, அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதாகப் பாராட்டவில்லை, 'தென்னாட்டுக்காரர்' என்ற முறையிலே பாராட்டினார்கள்."

"மக்கள் சபையில், என்னுடனிருக்கின்ற கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் நாகி ரெட்டி, இந்திப் பிரச்சினை பற்றித் தென்னாட்டு உணர்ச்சி பீறிட்டு வரும் அளவுக்கும் பேசினார். மற்றக் கம்யூனிஸ்டுகளுக்கு அந்த உணர்ச்சி இல்லை."

"தென்கை அரசியலை மனத்தில் வைத்துக்கொண்டு எவர் எந்தக் கட்சியிலிருந்து பேசினாலும் அவர்களை நான் பாராட்டுவேன்."

"தென்னகத்தில் இருந்துகொண்டு அகில இந்திய அரசியல் பேசினால்—பாரதப் பண்பாடுபற்றிப் பேசினால், 'அவர்கள், பிறந்த மண்ணுக்கும் துரோகம் செய்கிறார்கள்' என்பதுதான் பொருள். அவர்கள், எங்கேயோ இருக்கிறவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத் தானிருக்கமுடியும்! இது குறுகிய புத்தியால் சொல்வதல்ல—பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் பரந்த எண்ணம்! தத்துவ ரீதியில், 'வடக்காவது தெற்காவது' என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூச்ழ்கியிருக்கிறார்கள்—அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள்."

தத்துவ விளக்கம் தரமாகத்தான் இருக்கிறது—ஒப்புக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. இதைப் படித்த பிறகு, எவரும், தென்னக அரசியல் என்பது தெகிடு தத்தம் அல்ல என்பதை உணருவார்கள் என்றெல்லாம் தோன்றுகிறதல்லவா நமக்கு ! ஆயினும், பெரிய இடங்களில் உள்ளவர்கள், இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்—அகில இந்தியா என்பதுதான் உண்மை. நியாயம், தேவை ; சட்டம் என்கின்றனர்—அவர்களை என்னென்பது?

தெளிவற்றவர்கள், பிடி பட்டவர்கள், வாழ்வை நாடுவோர், என்று இப்படியெல்லாம் தான் சுற்றி வளைத்துக் சூடு குறைத்துக் கண்டனச் சொல்லைக் கரும்புச் சாற்றினில் தோய்த்தெடுத்துப் பயன் படுத்துவோம். நமக்கெங்கே வருகிறது, தீப்பொறி! நாம் தான் எல்லோரும் இசைவு தர வேண்டும், அதற்கான முறையில், கனிவாகப் பேச வேண்டும், என்ற பைத்தியக்காரத் திட்டம் கொண்டவர்களாயிற்றே! தீர்த்துக் கட்டு! வெளுத்து வாங்கு! என்ற போக்கு, வருவதில்லையே நமக்கு—நல்ல வேளையாக!! தெற்காவது வடக்காவது, எல்லாம் ஒன்று என்று, காமராசர் பேசுகிறார், கக்கன் பேசுகிறார், சுப்பிரமணியம் பேசுகிறார். நவஇந்தியா எழுதுகிறது, மேலும் பலர், பலப்பலர்! இவர்களைத் தோழர் சம்பத், என்ன கூறி அழைத்திருக்கிறார் தெரியுமா, தம்பி. நம்மை விட்டு விலகியதும் அப்பாவி என்கிறார்கள், ஆபாச நடையுடையோன் என்கிறார்கள்—அது கேட்டு, நீ ஆயாசமடைகிறாய். காமராசர் போன்றோரும், அவர் கட்சி ஏடுகளும், பூரித்துப் போகின்றன. ஆனால் அந்த அகில இந்தியாக்களை அவர் என்ன பெயரிட்டு அழைத்திருக்கிறார், தெரியுமா? அகப்பட்டதைச் சுருட்டுபவன்! ஆமாம், தம்பி! அது ஆனானப்பட்ட காமராசராகட்டும், அகிலம் சுற்ற ஆரம்பித்திருக்கும் கனம் சுப்பிரமணியமாகட்டும். இதுதான் தோழர் சம்பத் அவர்கள் தரும் சிறப்புப் பட்டம்!

இப்போது, அப்போது அப்படி எல்லாம் பேசியது 'பாதகம்'—பொறுத்தருள்வீர் என்றுகூடப் பேசக்கூடும். ஆனால், அதைக் கேட்பவர்கள் இப்போது பேசுவதற்கு மீண்டும் எப்பொழுது, பொறுத்திடுக ! கூறுவாரோ, என்று தான் வியந்து பேசுவர். பன்னிரண்டு ஆண்டுகளாகப் பேசிக் கொண்டு வந்தது பாதகம் என்று இன்று அவருக்குப் புரிகிறது போலும்! இப்போது பேசுவதும், அதே ரகமாக இருக்காது என்பதற்கு என்ன உறுதி, இருக்க முடியும் ? இப்போது பேசுவதை எப்போது மறுப்பாரோ, யாரறிவார்? இவர் எதைப் பேசினாலும், அது எப்போதேனும் இவராலேயே மறுக்கப் பட்டுவிடக்கூடுமே என்ற பயத்தோடு அல்லவா இருந்து தொலைக்க வேண்டும். அப்படிப்பட்ட பேச்சை எப்படி நம்பிக் கொண்டிருப்பது? இப்போது, எப்படி, திராவிடநாடு கனவு என்று பேசுகிறாரோ, அதுபோல, இப்போது பேசும் 'தேசீயம்' ஒரு பித்தலாட்டம் என்பதை உணர்ந்து கொண்டேன்! இது வரையில் உங்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்றதற்காக மன்னித்திடுக! என்று கூறுவாரோ? நாம், இவர் பேச்சை, நம்பிக்கையுடன் கேட்பதே ஆபத்து—என்றல்லவா மக்கள் கருதுவர்—திகில் ஏற்படும் !

தம்பி ! இவர் அகில இந்தியா பேசுவோரிடம் உள்ள திகிலைப் பற்றியும் பேசுகிறார்.

"தெற்காவது வடக்காவது, எல்லாம் ஒன்று என்று பேசுபவன், அகப்பட்டதைச் சுருட்டுபவனே தவிர, அரசியல் தீர்க்கதரிசி அல்ல."

"சர்க்கஸ் கம்பெனியில் கம்பத்தின் உச்சியில் ஏறிவித்தைகள் செய்பவன், எந்த நிமிடத்தில் கீழே விழுவோமோ என்று அஞ்சிக் கொண்டே இருப்பது போல அகில இந்தியா என்று உதட்டளவில் பேசிக் கொண்டிருந்தாலும், அத்தனை பேர் மனதிலும் ஒரு திகில்—எந்த நேரத்தில் எந்தப் பிரச்னையில் இந்தியா உடையுமோ என்ற திகில் இருந்து கொண்டே இருக்கிறது."

தம்பி ! இவை பூவிருந்தவல்லியில் 1959, செப்டம்பர் 11,12 நாட்களில் மாநாட்டிலே பேசப்பட்ட மணி மொழிகள் ! இப்போது இவை யாவும் குப்பை, கூளம் என்று தள்ளிவிடச் சொல்கிறார் !

அந்த மாநாட்டிலேதான், இங்கு என்னை ஏசும் அதே விறுவிறுப்புடன், அமைச்சர்களுக்கு அர்ச்சனை நடந்தது.

"இங்குள்ள பக்தவத்சலமும் சுப்பிரமணியமும் டெல்லியிலே வந்து கர்ணம் போடுகிறார்கள்."

"சில இளிச்சவாயர்கள் கையில் 8 கோடி பேர்கள் திராவிடர்கள், மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சிலர் டெல்லியிலிருந்து கட்டியாளுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் விடுபட்டாக வேண்டும்." இவ்வளவு திட்டவட்டமாகப் பேசினார்—பேசினால் என்ன? இப்போது, லேபில் மாற்றிக் கொண்டார், அது அவருடைய விருப்பம் என்று அவரைப் பூஜைக்குரியவராக—பொன்னான தலைவராகக் கொண்டு விட்டவர்கள் கூறிடக் கூடும். ஆனால், அதற்கும் அவர் இடம் வைக்கவில்லை.

"எவர் எவர் லேபில் எப்படி யெப்படி மாறினாலும், தென்னக உணர்ச்சி மட்டும் மறைந்து விடப் போவதில்லை." தம்பி ! அன்று அவருக்கு இருந்த அந்த நம்பிக்கை எனக்கும் உனக்கும், நம் போன்ற இலட்சக் கணக்கானவர்களுக்கும் இன்றும் இருக்கிறது. இதற்காக, நம்மை அப்பாவிகள் என்று ஏசட்டும்—ஆபாச நடையினர் என்று தூற்றட்டும்—கவலை இல்லை—தடித்த வார்த்தைகளை உபயோகிப்பது அவருடைய வாடிக்கை—கைவசமுள்ள சரக்கு என்பதுதான் நமக்குத் தெரிகிறதே. முன்பு ஒரு சாரர்மீது கோபித்துக் கொண்டார்—அப்போது,

துரோகிகள், கங்காணிகள் இளிச்சவாயர், தாசர் புத்தியினர், கர்ணம் அடிப்போர், அகப்பட்டதைச் சுருட்டுவோர்—என்று ஏசினார். இப்பேது நம்மீது கோபம், நாலுவார்த்தை பேசுகிறார், எப்படிச் சும்மா இருக்க முடியம்? சுறுசுறுப்பான சுபாவம், விறுவிறுப்பூட்டும் வயது!!

"இந்த நான்கு மாநிலங்களின் நாகரிகமும் தொன்மையான திராவிட நாகரிகமாகும்; அதனுடைய பளபளப்பு இடையிலே கொஞ்சம் மங்கி யிருக்கலாம்; இருந்தாலும் திராவிட நாகரிகத்தின் கருப்பொருள் இன்றும் தங்கியிருக்கிறது."

"தென்னகத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த திராவிட நாகரிகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் நாம். உதய சூரியன் போல் நமது இலட்சியம் எல்லோருடைய கண்களுக்கும் தெரியத்தான் போகிறது. இரவிலே மலையுச்சியைப் பார்த்தால் இருட்டாக இருக்கிறது. இயற்கை விதிப்படி சிலமணி நேரத்தில் உதய சூரியன் வரும். உதய சூரியன் தோன்றியதும் ஆந்தையும், கோட்டானும், ஓடிப் பதுங்குவது போல, இன்று நம்மைப் பார்ந்து அலறும் ஆந்தைகளும், கோட்டான்களும் ஓடிப் பதுங்கத்தான் போகின்றன என நம்பித்தான் இந்த அரிய இலட்சியத்திலே எங்கள் கருத்தைச் செலுத்திப் பணியாற்றுவதிலே ஈடுபட்டிருக்கிரறோம்"

இப்படி விளக்கங்கள் !

சின்னாட்களுக்கு முன்பு அமைச்சர் சுப்பிரமணியம் ஒரு அற்புதமான கண்டு பிடிப்பு நடத்தினார். தோழர் சம்பத் அவர்கள் டில்லி பாராளுமன்றம் சென்ற பிறகு பண்டித் நேருவின் பெருமையை அறிந்து கொண்டாராம். இனி எப்படியோ ! இதுவரை, அப்படி நேருவின் பெருமையை அறிந்து கொண்டதாகவோ பாராட்டியதாகவோ, தெரியவில்லை.

"நேருவை நாங்கள் அன்னியராகவே கருதுகிறோம், அன்னிய நாட்டுக்காரராகவே கருதுகிறோம்."

"இந்த நாட்டிலே இருக்கிற கோடிக் கணக்கான மக்கள், நேருவினுடைய ஏகாதிபத்தியத்கை எட்டி உதைத்து விட்டுச் சுதந்திரம் பெறுவதற்கு ஆயத்தமாகி விட்டார்கள்."—பண்டித் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியை விளக்கி, சென்னைக் கடற்கரையில் பேசிய பேச்சிலே ஒரு துளி இது. 21—1—58-ல் பாராளுமன்றப் பிரவேசத்துக்குப் பிறகுதான் !!

"நாம் நியாயத்தின் அடிப்படையில் நின்று 'திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும்' என்று உரிமை முழக்க மிடுகிறோம்; ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள். நமது கோரிக்கை நியாயத்தின் அடிப்படையில் எழுந்தது ; அவர்களின் மறுப்பு மமதையினால் எழுந்தது ; மக்களை மக்களாக மதிக்காது, மாக்களாக நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள். இப்படி இவர்கள் மமதையோடு பேசுவதற்குக் காரணம், இவர்களிடமுள்ள ஆதிக்க அரசியல் நிலைதான் என்பதைத் தவிர வேறென்ன ?"

"இந்த அரசியல் நிலை, வெளி விவகாரங்களில் கூட—எதிர் பாராத இடங்களில் இருந்தெல்லாம் கூட, சிற்சில நேரங்களில் வெற்றியைத் தேடித் தரக் கூடும் ; ஆனால், உள் நாட்டில் என்றென்றைக்கும் இந்த அரசியல் நிலை அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்குமே துணைபோய்க் கொண்டிருக்காது என்பதை மமதையோடு பேசுபவர்கள் உணர்ந்தாக வேண்டும்."

"நமது கோரிக்கையை எந்தக் காரணங் காட்டி இவர்கள் மறுக்கிறார்கள்? எவருக்கு இதுவரை இந்தத் துணிவு இருந்தது?"

"நாம் நமது கோரிக்கையின் நியாயத்தை எந்த மன்றங்களிலும், எவரிடத்திலும் வாதிட்டு நிலைநாட்டத் தயாராயிருக்கிறோம்—என்று, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சொல்லி யிருக்கிறோம்."

"உலகத்திலே நீதிமான்கள்—நேர்மையாளர்கள்—என்றுள்ள எவரையும் அழைத்து வாருங்கள் ; எங்கள் கோரிக்கை நியாயமா, இல்லையா ? என்று கேட்போம்—என்று கூறி யிருக்கிறோம்."

"அகில இந்தியா என்று துவங்குகிற எந்த ஒரு காரியமானாலும் சரி—அது—நாடகக் கழங்கள், இசைக் கூடங்கள் என்ற கலை நிறுவனங்களாயினும் சரி—அல்லது அகில இந்திய உளுத்தம் பருப்பு உடைப்போர் சங்கம் என்றிருப்பதாயினும் சரி—அரசியல் கட்சிகளாயிலும் சரி—அவைகள் வடக்கிற்கு வாழ்வும் ஏற்றமும் தரவும், தெற்கிற்குச் தேய்வும் தாழ்வும் தரவுந்தான் பயன்பட முடியும்."

"'அகில இந்தியா' என்ற ரீதியில் துவங்கும் எந்த பொருளாதார நிறுவனம் ஆயினும் அதில் வடவர் ஆதிக்கந்தான் நிலவுகிறது."

"பாங்குகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் முதலியவற்றில் எல்லாம் வடநாட்டவரின் முதலீடுதான் ஆதிக்கம் செலுத்துகிறது."

"அண்ணா அவர்கள் 'பணத்தோட்டம்' என்று தொடர் கட்டுரை ஒன்று எழுதினார்கள். அதில், வடநாட்டவரின் பொருளாதார ஆதிக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருக்கிறது—என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்."

"இப்படி, அரசியல், பொருளாதாரத் துறைகளில் வடநாட்டவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு பெற்றிருப்பதனால் தான், 'தெற்கு—குமரி எங்களுக்குச் சொந்தம்' என்கிறார்கள், தங்களின் இன்பம் கருதி—பயன் கருதி !"

"நாம் இந்த வடவரின் ஆதிகத்திற்கு அடிமைப்பட்டு கிடப்பதால் தாழ்வுறுகிறோம்—விழுகிறோம், என்று புள்ளிவிவரங்களை பிரித்துக்காட்டி கேட்கிறோம்—'எங்கள் நாடு எங்களுக்காக வேண்டு' மென !"

"நமது இந்த நியாயமான கோரிக்கையை எந்தக் காரணம் காட்டி, இவர்கள் 'தவறு' என்று கூறுகிறார்கள்?"

"குறி சொல்லுவதுபோல இங்குள்ள சிலர், 'திராவிட நாடாவது கிடைப்பதாவது ? இந்தியாவையாவது—பிரிப்புதாவது ? திராவிட நாடு வெறும் காட்டுக் கூச்சல் ! அது கிடைக்காது ! தரமாட்டோம்' என்று பேசுகிறார்களே தவிர, நாம் காட்டுகிற காரணங்களை மறுத்துப் பேச வாய்திறப்பதைக் காணோம் !"

சென்னைப் பேச்சு ! அறைகூவி அழைத்திருக்கிறர் திராவிட நாடு காட்டுக் கூச்சலென்று பேசுவோரை !

மூன்றாம், நான்காம் படிவம் படிக்கும் மாணவர்களைக் கேட்டால் கூட விளக்கம் கிடைக்கும், "திராவிட நாடு" பற்றி என்றும் பேசினார். அது, இது:

நாம் நமது இலட்சியம் கொள்கை, கோரிக்கைகளுக்கான நியாயங்களை வேறு எவராலும் முடியாத அளவிற்கு தொகுத்தெடுத்துச் சொல்லியிருக்கிறோம் ; சொல்லி வருகிறோம், என்றாலும், காமராசர் திராவிட நாடு என்றால் என்ன? என்று எனக்குப் புரியவில்லை என்கிறார். திராவிட நாடு என்றால் என்ன? திராவிட நாடு வேண்டுமா? வேண்டாமா? என்று இந்த மாநிலத்திலுள்ள பள்ளிகளில் மூன்றாம்—நான்காம் படிவங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு கட்டுரைப் போட்டி வைத்தால் அவர்கள் அழகான விளக்கங்களை எழுதிக் காட்டுவார்கள் வேண்டுமானால் காமராசர், அவர்களை அணுகுகிற முறையில் அணுகிப் பார்க்கட்டும்.

"தி. மு. கழகத்தைப் பொறுத்தவரை, திராவிட நாடு ஏன் என்பதற்கான விளக்கம் தரும் வேலையை முடித்துக் கொண்டு, அந்த விளக்கம் பெற்றோரை ஒன்று திரட்டி, திராவிட நாட்டை அடைவதற்கான வேலைகளில் ஈடுபடும் தறுவாயில் இருக்கிறது; இந்த நேரத்தில் போய் காமராசர் நம்மிடம் விளக்கங்கேட்கிறார்; வேடிக்கையாக இருக்கிறது!"

இப்படி எல்லாம் பேசினவரே இன்று திராவிட நாடு கனவு என்று பேசுகிறாரே, ஏனோ இந்தக் கொடுமை செய்கிறார் என்று எண்ணி ஆயாசம் அடையாதே, தம்பி! இவர் இன்று சொல்லுகிறார், வேறு பலர், முன்பு சொன்னபோது அலட்சியப்படுத்திவிட்டு, அடித்துப் பேசிவிட்டு! நாம் அவர்களின் பேச்சுக்கு எந்த மதிப்புத் தந்தோமோ, அதேதான் இதற்கும்.

அகிலம் சுற்றிவந்தவன், கூறுகிறேன், கேள்மின் திராவிட நாடு கனவு! என்றார் பண்டித் நேரு. அகிலம் சுற்றுவது தெரியும், எமது இன இயல்பு அறிய எங்கெங்கோ சுற்றிப் பயனன்ன? என்று கேட்டோம். நேருவின் பேச்சுக் கேட்க மறுத்தோம்.

இப்போது இவர், திராவிட நாடு கனவு என்று கூறுகிறபோது, நேரு பண்டிதரிடம் நாம் காணாத மேதா விலாசம், அனுபவம், வாதத் திறமை இவரிடம் இருக்கிறது என்றா சொக்கிவிடப் போகிறோம். நேருவாவது, துவக்க முதல் திராவிடநாடு கூடாது—கிடைக்காது என்று பேசி வருகிறார், அதனால் என்ன என்று அலட்சியம் செய்கிறோம். இவரோ, பன்னிரெண்டு ஆண்டுகள் பேசிப் பேசி தமது பேரறிவு போதும், எதிர்ப்பாளர்களை அழித்து ஒழிக்க என்று கூறி வந்துவிட்டு, திடீரென்று இப்போது திராவிட நாடு கனவு என்கிறார், அப்படியா? சரி! விட்டுவிடுகிறோம் என்றா கூறத்தோன்றும். கனவு! தம்பி! கனவு! மாநாடுகளிலே முழக்கமிட்டது—பொதுக் கூட்டங்களிலே பரணி பாடியது—பத்தி பத்தியாக எழுதியது—பார்முழுதும் பார்க்கச் சொல்லிப் படம் காட்டியது எல்லாமே கனவு, எப்போது? பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு! திராவிட நாடு என்பது வீண் மனக்கோட்டை, வெறும் கனவு என்கிறார் சிலர், கனவு காண்பது என்பது ஒரு சமுதாயத்திற்கு மிக மிகத் தேவை. இதோ வானத்தில் வண்ணமதி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு இருந்த சந்திரன் வேறு, இப்பொழுது உள்ள சந்திரன் வேறு, பத்து நாள் முன் வாழ்ந்த வையம் வேறு.

"ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரோ ஒருவன் கனவு கண்டதன் விளைவாகத்தான் சந்திரனை எட்டிப் பிடித்து, பூமியிலிருந்த பொருளை சந்திரனில் சேர்க்க முடிந்தது. இன்று சந்திர மண்டலத்தை "ராக்கெட்டு" எட்டிப் பிடிக்க வித்தூன்றியவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கனவு கண்டவன்தான். அப்படிக் கனவு காண்பதற்கு இன்று சிலர் தேவைப்படுகிறார்கள்."

என்ன அண்ணா! கனவுக்கே ஒரு விளக்கம் கொடுத்து விடுவாய் போலிருக்கிறதே என்று என்னைக் கேட்காதே தம்பி! இது என் பேச்சல்ல, தோழர் சம்பத் அவர்களின் பேச்சுத்தான். நெடுங்காலத்திற்கு முன்பு நிகழ்த்தியது அல்ல; 17—6—59-ல் அன்று என்னைப் பாராட்டிப் பேசினார் அவர், எனக்கு வயது 50 என்பதற்காக, அப்போதுதான் கனவு என்கிறார்களே, திராவிட நாடு பிரச்சினையைச் சில பைத்தியகாரர்கள். அவர்களின் மரமண்டையில் படும்படி பேச வேண்டும் என்று அவருக்குத் தோன்றவே, சந்திரனைப்பற்றி முன்பு கண்ட கனவு, 'ராக்கெட்' கண்டு பிடிப்பு வரையில், அறிவாற்றலைக் கொடுத்தது என்று விளக்கினார். விளக்கி விட்டு, எனக்கும் சில அன்புரைகள்!

"அண்ணா அவர்கள் அப்படிப்பட்டதொரு அரிய கனவைக் காண்கிறார். அந்தக் கனவு நனவாக நாம் மனமார உழைத்தால், நம் காலத்திலேயே அதைச் சாதிக்கலாம்."

கனவு காண்பதுகூடத் தேவைதான் என்று தத்துவ விளக்கம் தந்தவரே, திராவிட நாடு வெறும் கனவு என்று ஏன் பேசுகிறார்? சலிப்பு! அலுப்பு! இயற்கையாக எழக்கூடியது! கட்டுப்படுத்தாவிட்டால் மனம் குழம்பும், மார்க்கம் வேறுபடும், மதிப்பீட்டுத் திறமையும் மங்கி மடிந்துவிடும்.

"சிலருக்கு இதிலே சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. அலுத்துப் போனதால், தாங்கள் அமைந்த வேறு ஒரு கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டார்கள். திராவிட நாடு திராவிடருக்கே என்று சொன்னவர்களுக்கே அந்த இலட்சியத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும், தமிழகமும், சேர்ந்து திராவிட நாடு என்று முழக்கமிட்டவர்கள், இன்று தமிழ் நாடு மட்டும் போதும் என்று பாதைமாறி, எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார்கள்." அன்று அவர் கூறிப்பிட்ட, பாதை மாறி எங்கோ அலைந்து கொண்டிருக்கும், நிலை, தமக்கே இவ்வளவு விரைவாக, திடுக்கிடத்தக்க முறையில் ஏற்படும், என்று அவர் எண்ணியிருந்திருக்க முடியாது, அன்று இரக்கம் கலந்த குரலில் பாதை தவறிச் சென்றிருக்கிறார்களே! என்று யாரை எண்ணிக்கொண்டு, இவர் பேசினார்? பெரியாரை! வெகு விரைவில் நமக்கும் பாதை தவறி அலையும் நிலை ஏற்படப் போகிறது என்பது அறியாமல்!

பாதை புதிதாக வகுத்துக்கொண்டேன் என்று பின்பற்றுவோர் கண் மூடிக்கிடக்கும் வரை பேசலாம். ஆனால் பெரியார், இதே காரியம் செய்தபோது, அவரைக் கேலி செய்துவிட்டு, இன்று இவரே, அதுபோலாகிவிட்டதுடன்—அதற்கு ஒரு சமாதானம் தேடிக்கொள்கிறாரே, என்றுதான் எவரும் கூறுவர்—பரிதாப்படுவர்! பெரியாராவது, தமிழ் நாடு போதும், என்று அளவைக் குறைத்துக்கொண்டார்! வகையை அல்ல! வடநாட்டுத் தொடர்பு அறவே ஆகாது என்று கூறுகிறார். அகில இந்தியா பேசுவோரைக் கங்காணிகள், துரோகிகள், அகப்பட்டதைச் சுருட்டுவோர் என்றெல்லாம் கர்ச்சித்த ஆற்றல் மிக்கவர், தமிழ் நாடு அகில இந்தியாவிலேயே இருக்கும்—ஆனால் பிரிந்து போக விரும்பினால், அதற்கு உரிமைபெற்று இருக்கும், என்று பேசுகிறார்—பெரியார் போலத் திட்ட வட்டமாக, வடநாட்டுப் பிடிப்புக்கூடாது என்று கூற அச்சம், கூச்சம், தயக்கம், ஏனோ? அளவைக் குறைத்துக்கொண்டதற்கே, பெரியார், பாதை மாறி எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார் என்று கேலி பேசினாரே.—ஏன் ? அதற்கும் அவரே பதில் அளிக்கட்டும்.

"அரசியல்களிலே தன் கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்களில் இரண்டு ரகம் உண்டு, அவசரக்காரர்களாக இருப்பவர்கள் அவசரப்பட்டுத் தன் கொள்கையை மாற்றிக் கொள்வது ஒரு ரகம் ; தம் வாழ்நாளில் பெரும் பகுதியும் தம் ஆற்றல் முழுவதையும் காட்டித் தீர்த்துவிட்டு வெற்றிகிட்டாது அவசரத்தால் கொள்கையை மாற்றக் கொள்பவர் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள் ; வேறு சிலர் இருக்கிறார்கள்—அவர்கள் உள்ளமே அவ்வளவுதாள் !"தம்பி ! திடீரென்று இப்பொழுது, கொள்கையை மாற்றிக் கொண்டாரே, இவர், எந்த ஏகம்? காளை வயது ! கடுஞ்சிறையில் ஆண்டு பல அடைபட்டு உருகி, உடல் கருகி வெளிவந்து பார்த்துத் தன் உழைப்பு உருவான பலன்தராதது கண்டு மனம் வெதும்பிக் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்க முடியாது, உள்ளமே அவ்வளவுதான் — என்று கூறப்படும் ரகத்தில், சேர்க்க மனம் இயம் தரவில்லை. மிச்சம் இருப்பது? மீண்டும், படித்துத்தான்பாரேன்—புரிகிறது! இந்த இலட்சணத்தில், நாடு தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று வேறு எதிர்ப்பார்ப்பதா? எப்படி என்று கேட்டால்—ஏன்? முன்பு வந்தக் கொள்கைக்காக எப்படியெப்படி அடித்துப் பேசுனேனொ அதுபோல் இந்தப் புதுக் கொள்கைக்கும் பேசுகிறேன்—மக்களா சேரமாட்டார்கள்? என்றா கூறுவது. மக்கள் என்ன மெழுகா—விருப்பம்போல உருவம் பெறச்செய்ய !

ஆனால், அண்ணா! முழுக்க முழுக்க நீங்கள் கழகத்துக்கே பயன் படவேண்டும் என்று யோசனை கூறினாராம்—கலைத்தொடர்பு வேண்டாம் என்றாராம், கேட்க வில்லையாம், அதுதான் கோபமாம் !

அப்படியா தம்பி ! யோசனை என்ன ? புத்திமதி கூறட்டும்; பரவாயில்லை; நான் இப்பொழுது, கழகக்காரியத்தைக் கவனிக்கும் அளவுடன், யோசனை கூறுபவரின் அலுவலை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறாய் அல்லவா ? மணி மூன்று— விடியற்காலம், எழுதிக் கொண்டிருக்கிறேன் ; இது முடிந்ததும் ஆங்கில ஏட்டு வேலை இருக்கிறது. கலை உலகுத் தொடர்பு எனக்கு எந்த அளவு ? என்ன வகை ? அதற்கு நான் செலவிடும் நேரம் என்ன ? ஒரு கணக்குப் பார்க்கலாமா, என்று கேட்டுப் பாரேன்—குறை கூறுவோரை. புதிய வீடு வாங்க— அலங்காரச் சாமான்கள் வாங்க—அனந்தராம் தீட்சதரின் காலட்சேபம் கேட்க—வாடகைப் பணம் முறைப்படி பெற—வழக்கு வேலைகளைக் கவனிக்க—செலவிடும் நேரம், உண்டா, எனக்கு! இவைகளைக் கவனிக்கத் தேவைப்படும்நேரத்தில் ஒரு பங்குகூட இராதே, எனக்குள்ள கலை உலகத் தொடர்பு ! நான் தெடர்பு கொண்டுள்ளது, இரண்டு படங்கள்—ஒன்று எம். ஜி. ராமச் சந்திரன் நடிப்பது—மற்றொன்று கே ஆர். இராமசாமி, எஸ். எஸ். இராஜேந்திரன், எம். ஆர். ராதா நடிப்பது ; இரண்டுக்கும் நானல்ல, கதைகளைத் தேடிக்கொண்டிருப்பவன் ; உள்ள கதைக்குப் புது உருவம் கொடுக்கும் அளவு தான், என் தொடர்பு ! மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சில மணி நேரம் ! எடுத்த படத்தைக்கூட தோழர் சம்பத் அவர்கள் பார்த்தாராம்—நான் சரிவரப்பார்க்கக் கூட இல்லை ! இது என் தொடர்பு! இது கழக வேலையை என்ன பாதித்து விட்டது? துளியேனும் உண்மையான மனக்குறை யிருந்தால் விளக்கலாமல்லவா ? போகட்டும்—இதைக் தவிர, இனி, என்றென்றும் கலைத் தொடர்பு வேண்டாமென்று, தம்பி ! உனக்குக் தோன்றினால், யோசனை என்ன? கட்டளையிடு ! ஏற்றுக் கொள்கிறேன்! பொதுத் தேர்தல் வருவதற்குள் ஒரு படத்துக்காவது, கதை எழுதுங்கள் அண்ணா ! என்று என்னிடம் சொன்னவாரா நாட்டினரைப் பார்த்து, சேச்சே! இப்படி ஒரு தலைவனா? படத்துக்குக் கதை எழுதுகிறானே—என்றா பேசுவது?

அதுதான், மனக் குமுறலுக்குக் காரணம் என்றால், தம்பி! ஏற்கனவே கொடுத்துவிட்ட, எதையும் தாங்கும் இதயம்—நல்லவன் வாழ்வான் எனும் இரண்டோடு என் கலை உலகத் தொடர்பை நிறுத்திக்கொள்கிறேன்; யோசனை கூறி என்னை நல்வழிப்படுத்திக் கழகத்தைச் செம்மைப்படுத்தும் அவரைக் கொள்கையை விட்டுவிடாமல், சமதர்மத்தை இழந்துவிடாமல் பணியாற்றச் சொல்லேன்—பார்ப்போம்.

இந்த அளவு கலைத் தொடர்புகூட ஏன் எனக்கு ? அதன் மூலமாக ஏதேனும் நல்லறிவுப் பிரசாரம் செய்ய வழிகிடைக்குமா என்ற ஆவல் தான்! கலை உலகத் தொடர்பு கூடாது என்பதுதான் என் மனக்குமுறல் என்று இன்று பேசுபவரே, கலை உலகில் நான் தொடர்பு கொண்டதாலே பகுத்தறிவுத் துறைக்குக் கலை திரும்பிற்று என்று பேசிக் கேட்டு மகிழ்ந்து, நம்பிச் செய்யத் தொடங்கியது தான்.

போலிவாதம் பேசும் அரசியல் மேதைகளுக்கு ஈ. வி. கே. சம்பத் எச்சரிக்கை என்ற தலைப்பில், அவருடைய சென்னைப் பேச்சு, ஒன்று இருக்கிறது. அதில் இது இடம் பெற்றிருக்கிறது;

"திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி அல்ல; அது டிராமா, சினிமா, கட்சி என்று அந்த 'அரசியல் மேதை'கள் நம்மைப்பற்றிக் கூறியிருக்கிறார்கள். உலகில் எந்தக் கட்சியில்தான் கலைஞர்கள் இல்லை ? எல்லாக் கட்சியிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். நம்மிடம் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்.

"இந்த நாட்டில் காங்கிரஸ் உலவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? காந்தியாருக்கு அடுத்தபடியாகச் சத்திய மூர்த்தியும், கே. பி. சுந்தரம்பாள் என்ற அம்மையாரும் தான்! நன்றி கெட்ட காங்கிரசார் வேண்டுமானால் இதை மறந்திருக்கலாம்.

"கலைஞர்களின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நாட்டு மக்களிடம் சென்று ஓட்டுகேட்டவர்கள் தான், இன்று நம்மைப் பார்த்து நடிகர்கள் என்று குறை கூறுகிறார்கள்—விதவை, கன்னியைப் பார்த்துக் கேலி செய்வது போல !

"இதை எல்லாம் தெரிந்து கொண்டிருப்பதால்தான், இவர்களுடைய மானம் சந்தி சிரிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பேசின நேரு பண்டிதர், 'அரசியல் துறைமட்டும் அல்லாமல், ஏதாவது பிழைப்பதற்கு கௌரமான தொழில் வைத்திருப்பவர்கள் மட்டும் அரசியலில் வாருங்கள்' என்று கூறியிருக்கிறார். அப்படிக் கூறியிருப்பவரைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள்தான் வேறு ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களைப்பார்த்துக் கேலி பேசுகின்றனர்.

"எனவே, அரசியல் துறையில் ஈடுபட்டவர் வேறு தொழில்களில் ஈடுபடுவது பலவீனமல்ல, அது தேவையானதுதான் என்பதை நேரு பண்டிதர் விளக்கியிருக்கிறார். எனவேதான் காலை முதல் இரவு வரை உண்ணுவதைத்தான் தங்கள் தொழிலாகக் கொண்டில்லாமல், வேறு ஏதாவது ஒரு தொழிலையும் தெரிந்து கொள்ளச் சொல்கிறார் காங்கிரஸ்காரர்களை நேரு பண்டிதர்.

"திராவிட முன்னேற்றக் கழகம் நல்ல நடிகர்களையும், கலைஞர்களையும், அரசியல் பொருளாதாரத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களையும், இசைவாணர்களையும், திறமை மிக்க ஓவியர்களையும், சிற்பிகளையும், குத்துச் சண்டையில் தேர்ந்தவர்களையும்—இப்படி வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் திறமை பெற்றவர்களைக் கொண்டு விளங்குகிறது. இங்கு அரசியலை மட்டும் நம்பித்தான் வாழவேண்டுமென்ற நிலையில் யாரும் இல்லை.

"இலங்கைப் பிரதமாயிருக்கும் பண்டார நாயகரும் கதைகள் எழுதுவார்—அதுவும் மர்மக் கதைகள். மர்மக் கதைகள் என்றால் என்ன என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் அண்மையில் காமன்வெல்த் மாநாட்டை ஓட்டி இலண்டனுக்குச் சென்றிருந்தபோது, வெறுக்கையோடு போகவில்லை—தாம் எழுதின 4-மர்மக் கதைப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றார்; ஏன் ? அங்குள்ள கம்பெனி மூலம் அவைகளை பிரசாரம் செய்வதற்காகத் தான். இவர் என்ன, மர்மக்கதை எழுதுகிறாரே, இவர் அரசியலில் இருக்கலாமா? என்று இலங்கையில் எந்தப் புத்திசாலியும் கேட்கவில்லை; எந்தக் காமராசரும் கேட்கவில்லை. ஆனால், இங்கே கேட்கிறது அந்தக் குரல்.

"இப்படி, சொத்தையான வாதங்களையும் உளுத்துப் போன வாதங்களையும் கூறி நம்மை ஆபாசப்படுத்திவிட நினைக்கிறார்களே தவிர, அறிவுடனும் நீதியோடும் நேர்மையோடும் தர்க்க ரீதியாக நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இலட்சியங்களையும் எதிர்த்துப் பேசுவார் யாரையும் காணோம்."

அது முன்பு ! என்பீரேல், இதோ அவருடைய பாராளுமன்றப் பேச்சு !

தணிக்கைக் குழுவைப்பற்றிப் பேசுகிறார் டில்லி பாராளுமன்றத்தில்.

"ஒரு பத்தாண்டுகளுக்கு முன் தமிழ்ப்பட உலகில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை வழக்கமாகப் படமாக்கப்பட்டுவந்த புராணம், மற்றும் இதிகாசக் கதைகளுக்கு மாறாக நவீன காலப் பிரச்சினைகள் பற்றிய கதைகள் படமாக்கப்படும் நிலை முகிழ்த்தது. இந்த மாற்றத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தமது வேலைக்காரி—நல்ல தம்பி—போன்ற கதைகள் மூலம் தோற்றுவித்தார். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரானதால், அவரது கதைகளுக்குக் கிடைக்கிற அமோகமான ஆதரவு, அவரது கட்சிக்கும் ஆதரவையும் வலிவையும் தேடித்தரக் கூடும் என்று சிலர் அஞ்சினர். இப்படிப்பட்டவர்களின் அச்சத்தைத் தவிர்ப்பதற்றாகவோ, என்னவோ தனிக்கைக் குழுவினர் தங்களது கத்தரிக்கோலைப் பதப்படுத்திக் கொண்டனர்." தம்பி ! இப்படி இவர் பார்லிமெண்டில் பேசியது கேட்டு. நான், சரி, கலைத் தொடர்பு, அவசியம்தானா இல்லையா என்ற சந்தேகம் தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினரே, அது பாராட்டுதலுக்குரியது என்றார்—நாம் ஈடுபட்டால் தவறு இல்லை என்றுதானே எண்ணிக் கொள்வேன்;

எப்போது முதல் இவருக்கு, இப்படி ஒரு யோசனை கூறி, என்னை நல்வழிப் படுத்தும் அக்கறை ஏற்பட்டது என்பதே கூட எனக்குப் புரியவில்லை. இருவரும் சேர்ந்து ஒரு 'படம்' கூட வாங்கி, ஓட்டி நட்டப்பட்டிருக்கிறோம் !

பெரியார், சினிமாக்கட்சி என்று கூறியபோது, இவர் தான், மிகப் பலமாகத் தாக்கினவர். சினிமாவை விடு ! சிலம்பத்தை எடு! என்ற தத்துவ முழக்கத்தைக் கேட்டு, இடி இடியெனச் சிரித்தவர் இவர்.

இவருக்குத் திடீரென்று நான் கலைத் தொடர்பு கொள்ளலாகாது என்று எப்படித் தோன்றிற்று என்பதே புரிய வில்லை. மற்றொன்று, இவ்வளவிலும், ஊடுருவி நிற்கும் ஓர் விஷயத்தைக் கவனித்தாயா தம்பி ! அது ஒரு பயங்கரமான நிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

இவருக்குத் திராவிடநாடுதான் சரியான திட்டம் என்று தோன்றும்; நாம் கேட்டு நடக்க வேண்டும். இவருக்குத் திராவிடநாடு கனவு என்று தோன்றும்; தமிழ்நாடு போதும் என்று தோன்றும்; உடனே நாம் அனைவரும் தலை அசைத்தபடி அவர் காட்டும் வழி நடக்க வேண்டும்.

பிரிவைத் தவிர வேறு மருந்து இல்லை என்பார், ஆமாம் ! என்று கூறவேண்டும். திடீரென்று, பிரிவினைக்கு உரிமை மட்டும் இருந்தால் போதும் என்பார்—அப்படியா ? அதுவும் சரிதான் ! என்று நாம் பின்பற்ற வேண்டும்.

சமதர்மம் தழைத்தோங்க வேண்டும் என்பார்—சந்தோஷம் என்று கூற வேண்டும். திடீரென்று சமதர்மம் போன்ற தத்துவச் சிக்கல்களை நாம் கவனிக்கத் தேவை இல்லை. நமக்குத் தொழிலில் வளர வேண்டும், சமதர்மம் அல்ல !—என்பார் ! ஆஹா ! இது அல்லவா சரியான திட்டம் என்று கூறி அவர் காட்டும் வழி நடக்க வேண்டும். கலைத் தொடர்பு கழகத்துக்கு நல்லது என்பார். நாடகம் ஆடலாம் என்பார் ! ஆகட்டும் என்று ஆட வேண்டும். சே ! கலைத் தொடர்பு இருக்கலாமா ! அது கழகத்தைக் கெடுத்து விடும் என்று கட்டளையிடுவார் ! கீழ்ப்படிய வேண்டும் !!

அண்ணா என்றால் என்னவென்று எண்ணிக் கொண்டீர்கள் ? அவர் ஒரு தனி ஆள் அல்ல ! ஒரு ஸ்தாபனம் என்பார் ! மகிழ வேண்டும். பிறகு அண்ணா என்ன அண்ணா; அண்ணாத்துரை என்று சொல்வோம்—பூஜாமனோபாவம் வேண்டாம்—கூடாது என்பார்— உடனே டேய்! அண்ணாத்துரை! வரையில், அனைவரும் பேச முற்பட வேண்டும், அண்ணா நடையே புதுமை என்பார், பூரிக்க வேண்டும். சே! என்ன ஆபாசமான நடை! பால் வைத்து எழுதுகிறார்களே, பேசுகிறார்களே, என்பார்; பயப்பட வேண்டும்; நடையைக் காட்டி, நற்சான்று பெற முயல் வேண்டும்,

சட்டசபையில் தி. மு. க. சாதனைகள் பாரீர் என்பார். மகிழ வேண்டும்; சேச்சே! அக்கறையே—இல்லையே! திறமையே—இல்லையே! என்பார். அழவேண்டும்—பாடம் கேட்க வேண்டும்!

சிவஞான கிராமணியார் நடத்துவது ஒரு கட்சியா? என்று கேட்டுக் கேலி செய்வார்; கை தட்ட வேண்டும் களிப்புடன்; சுண்டைக்காய்க் கட்சி நடத்தும் சிவஞானத்தாரிடம் தி. மு. கழகத் தலைவர் போய்ப் பேசலாமா ? பேசி, நமது கழகத்தின் தரத்தைக் குறைத்துக் கொள்ளலாமா? என்று கடிந்துரைப்பார்; கைபிசைந்து கொண்டு நிற்க வேண்டும்; பிறகு சிவஞான கிராமணியாருடன் கூடிப் பேசுவேன் என்பார்; அதுதான் முறையான 'ராஜதந்திரம்' என்று சொல்லிப் பாராட்ட வேண்டும்.

பத்திரிகை நிருபர்கள் மெத்தக் கெட்டவர்கள், அவர்களைக் கிட்டவே சேர்க்கக் கூடாது என்று சொல்லுவார்; ஆமாம் போட வேண்டும்; பிறகு ஓர் நாள் பத்திரிகை நிருபர்களை நண்பர்களாகக் கொள்வார்; அவர்களின் சேவை நாட்டுக்குத் தேவை என்பார்; ஆமய்யா ஆமாம்! என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஆடம்பர வாழ்க்கை கூடாது என்பர்; அப்படி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடுவது கட்சிக்கே இழுக்கை ஏற்படுத்தும் என்று அறிவுரை கூறுவார்; அரை ஆடை அணிந்த அண்ணலின் மறு பதிப்பு என்று நாம் எண்ணிக்கொள்ள வேண்டும்; அடுத்த சில தினங்களில் அழகான மாளிகையில், அலங்காரச் சூழ்நிலையில், ஆடம்பரமான கொலு நடத்துவார்; விருந்துகள், வைபவங்கள் நடைபெறும்; இதுவா ஆடம்பர ஒழிப்பு என்ற எண்ணம் தோன்றினாலும் அடக்கிக் கொண்டு ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பார், பாராட்ட வேண்டும்.

அவருக்கு எவ்வெப்போது எது எது சரி என்று, முறை என்று படுகிறதோ, அதை நாம், கண்டறிந்து, ஏற்று நடக்க வேண்டும். எது எப்போது, அவருக்குப் பிடிக்காது என்று அறிவிக்கப்படுகிறதோ அப்போதே நாமும் அவைகளை, ஒதுக்கி விட வேண்டும், இவ்வளவையும் அவர் கூடிக் கலந்து பேசமாட்டார்—குறிப்பறிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்தாலொழியப் பதவிகளுக்கு வரலாகாது என்பார்—ஆமாம்! என்றுரைக்க வேண்டும் அடுத்த முறை, ஐந்தாண்டு வேண்டாம், மூன்று ஆண்டுகளே போதும் என்பார்—ஆமாம்! ஐந்தாண்டு அதிகம்—மூன்று ஆண்டுகளே போதும் என்றுரைக்க வேண்டும்.

கழகக் காரியத்தில் இன்னார் இருப்பது ஆபத்து என்பார்—விலக்கி வைத்திருக்கிறோம் என்று கூற வேண்டும்—அடடாடா; ரொம்ப நல்லவர்! நிரம்பத் திறமைசாலி! அவர் எந்த அக்னிப் பரிட்சைக்கும் தயாராக இருப்பவர்—என்பார், ஆமாம்! என்று சொல்ல வேண்டும்.

நமது கழகத்தைத் துச்சமென்று எண்ணும் கலைஞனை நாம் மதிக்கலாகது என்பார்—ஆமாம்! மதிக்கத்தான் கூடாது என்றுரைக்க வேண்டும்; கழகத் தொடர்பு இருந்தாலென்ன?இல்லாது போனால் என்ன? கலைஞனை அவனுடைய திறமைக்காகப் பாராட்ட வேண்டும் என்பார்—பாராட்டுவோம் என்றுரைக்க வேண்டும்.

தம்பி! இப்படி ஒரு பயங்கர நிலைமை வளர்ந்து, நான் எல்லாவற்றுக்கும் இசைவு தந்தேன் — என் சொந்த விருப்பு வெறுப்புப் பற்றிய கவலையைக்கூட விட்டொழித்து, ஆனால், திராவிடநாடு வேண்டாம், பிரிவினையே வேண்டாம், இந்தியப் பேரரசிலேயே ஒட்டிக் கொண்டிருக்கலாம், சமதர்மம் கூட வேண்டாம், என்பதற்குமா, நான் சம்மதிக்க முடியும்!

கொள்கையைக் கடைப்பிடித்தபடி கோபதாபம் காட்டினாலும், முறைகளை மாற்றினாலும், வசவுகளை வீசினாலும், பொறுத்துக் கொண்டேன். ஆனால், கொள்கையையே மாற்றி விடும்போது, நான் எப்படி இணங்க முடியும்— நேர்மையில் நாட்டம் கொண்ட எவர்தான் இணங்கமுடியும்?

அப்போது அப்படிச் சொன்னேன், அதைக் கேட்டு என் பின்னால் வந்தாயல்லவா? இப்போது வேறு ஒன்று, முற்றிலும் மாறானது சொல்கிறேன். பின்பற்ற வேண்டியது தானே! யோசனை என்ன? கேள்வி என்ன?—என்றா பேசுவது?

முன்பு சொன்ன சொல்லை மறந்தவர்களைச் சும்மாவா விட்டு வைத்தார், இவர்? திருச்சி மாநில மாநாடு நினைவிற்கு வருகிறதா? பண்டித நேரு, இவர் நாவில் சிக்கிப் பட்டபாடு, தெரியுமல்லவா? எதற்கு? முன்பு அப்படிப் பேசினாயே, இப்போது இப்படிப் பேசுகிறாயே, ஏன் இந்த முரண்பாடு! நீயும் ஒரு தலைவனா!—என்று கேட்டாரே!

1945-ம் வருட நேருவே! 1956-ம் வருட நேருவுக்குப் புத்தி புகட்ட வாராயோ?—என்று பேசினார். கொள்கைக் குழப்பவாதிகளுக்குத் தெளிவுரை தந்தார்.

"இன்று நம்மை மிகக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருக்கிறவர்—நமது கொள்கைகளுக்கு நேர் எதிரிடையாகப் பயமுறுத்தல்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறவர் யார் என்று சொன்னால், பிரதமர் நேரு ஆவார். அவர் பதவிக்கு வந்தபின்—அந்தப் பதவி நிலைத்தபின், 'தன் ஆயுட்காலம் வரைதானே இந்த நாட்டு அரசியல் ஆதிபதியத்தில் அமர முடியும்; தனக்கு அடுத்தாற்போல் திரும்பிப் பார்த்தால் எறும்புக் கூட்டங்களும் கரையான் கூட்டங்களும் தான் இருக்கின்றன; வாழ்கின்ற வரையில் நம்மை விட்டால் அவர்களுக்கு வேறு கதியில்லை; —என்ற கருத்து அவர் உள்ளத்திலே ஊற ஊற, அவருடைய வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் பயங்கரமாகவும், 1945-ல் இருந்த நேருவுடைய வார்த்தைகளுக்கு நேர் முரணானவையாகவும், 1945-ல் இந்திய அரசியலில் வீர நடை போட்டுக் கொண்டு வந்த நேருவின் இராஜ தந்திரத்திற்கு முற்றிலும் முரணான வகையிலும் அவருடைய பேச்சுக்கள் உருவெடுத்திருக்கின்றன.

"ஆந்திர மாநிலம் வேண்டும்—என்ற கிளர்ச்சி நடைபெற்ற போது, பண்டித நேரு எவ்வளவு ஆணவமாகப் பேசினார்! 'முடியாது, முடியாது, முடியாது; யார் அவன்—ஆந்திர மாநிலம் கேட்பவன்? இந்த மக்கள் சபையில்கூட யாரேனும் இருக்கிறார்களா' என்று முறைத்துப் பார்த்து, அதட்டி உட்கார வைத்துக் கொண்டிருந்தார்; அந்நிலையில், பொட்டி சீராமுலு உண்ணா விரதம் தொடங்கி விட்டார்; 'அவருடைய நிலை கவலைக்கிடமா யிருக்கிறது', என்று செய்தி வருகிறது; என்றாலும், மக்கள் சபையில் பிரதமர் நேரு வீர கர்ஜனை புரிந்தார்—'ஆயிரம் பொட்டி சீராமுலுகள் பிணமானாலும்—நான் என்னுடைய நிலையிலிருந்து பிறழமாட்டேன்; தனி மாகாணம் வேண்டும், என்ற கருத்துக் காட்டுமிராண்டித் தனமானது'—என்று குறிப்பிட்டார்.

"ஆனால் பழைய பண்டித நேரு—1945-ல் இருந்த நேரு என்ன சொன்னார்? கம்யூனிஸ்ட் கட்சியைவிட வேகமாக வாதாடினார்—'தனித்தனி மாகாணங்கள் வேண்டு மென்று மட்டுமல்ல; 'தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்படுபவை, தனி அரசாக வாழ வேண்டும் மென்று விரும்பினாலும் வாழலாம், அதைக் காங்கிரஸ் தடுக்காது—நானிருக்கிற வரையில் தடுக்கவிடமாட்டேன்'—என்று! அந்தப் பேச்சு எங்கே நிகழ்ந்தது என்பதை அறியும்போது இன்னமும் நமக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும்.

"காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிகழ்ந்தது, அந்தப் பேச்சு; அங்கே இருக்கிறது—நமது அனுதாபத்திற்குரிய அரசியல் ஏமாளியான ஷேக் அப்துல்லா இருக்கிறாரே, அவர், கூட்டம் ஒன்றில், நேருவுக்கு ஒரு விண்ணப்பத்தைப் படித்துக் காட்டினார்; என்ன அந்த விண்ணப்பம்? 'தனித்தனி அந்த அந்த தேசீய இனங்கள், தனித்தனி அரசை நிறுவிக்கொள்வதற்குக் காங்கிரஸ் ஆக்கமளிக்க வேண்டும்,'—என்ற தான் அவர் விண்ணப்பித்துக் கொண்டார்.

"அதைக் கேட்ட நேரு சீறி எழுந்தார்; அளிக்க வேண்டும் என்று கோருவதிலே இருந்து, நாங்கள் ஏதோ அதைப் பிரிப்பதைப் போலல்லவா கேட்கிறீர்கள்? நாங்கள் அதற்காகவே இருக்கிறவர்கள்; தனி அரசு மட்டுமல்ல—அந்தத் தனியரசிலே வாழுகிற ஒரு 'குரூப்' கோஷ்டி, அது தனியரசு வேண்டு மென்று விரும்பினாலும் 'அதில் நூற்றுக்கு நூறு நியாயம் இருக்கிறது;'—என்று பண்டித நேரு பேசினார்.

"அந்தப் பேச்சின் நான்கைந்து வாசகங்களை உங்களுக்கு நான் கூறுகிறேன்; ஏனென்றால் அவர்கள் ஏதோ பெரிய தத்துவங்களை வகுத்துக் கொண்டவர்களைப் போலவும், நாம் ஏதோ 'தத்து பித்து' என்று உணர்ச்சி வேகத்தில் கேட்கக்கூடாதவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கும் 'தப்பிலி' களைப்போலவும் பல நண்பர்கள் எண்ணி, நம்மை ஏசிப்பேசுகிறார்கள். அவர்களுக்கு விளக்கம் தருவதற்காக, 1945-ம் ஆண்டில் வாழ்ந்த நேரு, பேசியதை இங்கே எடுத்துரைக்கிறேன், நேரு பேசுகிறார், கேளுங்கள்:—

'இந்தியாவிலிருந்து எவராவது பிரிந்து செல்ல விரும்பினால், 'வேண்டாம்' என்று காங்கிரஸ் அவர்களை வேண்டிக்கொள்ளும்; வேண்டிக்கொண்டதற்குப் பின்னும், பிரிந்து தான் செல்லுவோம்' என்று சொன்னால் கண்ணியத்தோடு அதை அனுமதித்துவிடும்.'

"இது பண்டித நேரு பேசியது—1945 ஆகஸ்டு 2-ந் தேதி ஸ்ரீநகரில் பேசினார்.

'காங்கிரஸ் ஏற்கனவே தனித் தனி தேசீய இனங்களுடைய சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டுவிட்டது'—கோபத்தோடு இப்படிப் பேசினாராம் நேரு! ஏன்? "ஷேக் அப்துல்லா ஏற்றுக்கொள்ளவேண்டும் ஐயனே! என்று சந்தேகத்தோடு கேட்டார்; வேண்டுமென்ற கோரிக்கையில் சந்தேகம் தொனிக்கிறதே, சிஷ்யா! இந்த உரிமை வேண்டும் என்று நாம் தான் ஏற்கனவே தீர்மானித்துவிட்டோம்! இன்னும் உனக்கு ஏன் சந்தேகம்' என்று பண்டிதர் நினைத்துக் கொண்டிருக்கிறார் அப்படி!

"முதல் முதல் சந்தேகப்பட்ட அப்துல்லா; மிக மிகப் புத்திசாலி! ஆனால் பண்டிதரது பதிலைக் கேட்டதும், சந்தேகத்தை நீக்கிக்கொண்ட ஷேக்அப்துல்லா, உலகத்திலே இருக்கிற 'விடுதலை விரும்பி'களின் நிரந்தர அனுதாபத்திற்குரிய ஷேக் அப்துல்லாவாக மாறிவிட்டார்! அதனால்தான் அவர், காலவரையின்றிக், கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீநகரத்துச் சிறைச்சாலையில்!

"பெரிய இந்தியாவில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட 'யூனிட்'—பிரதேசம் இருந்துதான் தீரவேண்டும் என்று வற்புறுத்தமாட்டோம்' என்று பேசிய 1945-வது வருடத்திய நேருவே! இதோ பார்—உன்னுடைய 'துரோகி' 1936-வது வருடத்திய நேரு, உன்னை மறுக்கிறார்!

"முடியாது முடியாது! யார் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று கருதுகிறவர்கள்? பிளவு சக்திகளே! விடமாட்டேன்! தெருவிலே குதித்து, உங்கள் குரல்வளையைக் கடித்துக் குருதியை உறுஞ்சுவேன்! முடியாது!" என்று பேசுகிறார், 1956-வது வருடத்திய நேரு!

"பிரிந்துவிட்ட—சுயநிர்ணய உரிமைபெற்ற ஒரு மாகாணத்திலே இருக்கிற ஒரு கோஷ்டி பிரிந்து போக வேண்டுமென்று சொன்னாலும், பிரிந்துதான் போகவேண்டும் என்று கர்ஜித்த நேருவே! இதோ! பம்பாயை மராட்டியர்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்! 'மராட்டியர்களே பெரும் பகுதியினராக வாழும் பெரு நகராம் பம்பாய் மராட்டியருக்கே வேண்டு'மென்ற கோரிக்கைக்கு உமது பதில் என்ன?

"முடியாது; டில்லியின் நேரடி ஆட்சியில்தான் இருக்கும்,' என்பதுதானே!

"யாரையா அதை முடிவு செய்வது? பம்பாயிலே இருக்கிற மக்களா? டில்லியில் இருக்கிற நீரா?;'—என்று மராட்டியர் கேட்கிறார்கள்! 'நான்தான்! நானேதான்!" என்று பதில் சொல்கிறார் நேரு'

"நேருவே! 1945-ம் வருடத்திய நேருவே! நீ உயிர் பெற்று வரமாட்டாயா?—என்று நாங்கள் கோருகிறோம்.

"மக்கள் உரிமையை மதிக்காமல், மதோன்மத்தரைப் போல், பழைய காலத்துக் காட்டுமிராண்டி, இராசாக்களைப் போல் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிற இந்த 1956-ம் ஆண்டு நேருவுக்குப் புத்தி புகட்ட, நீ உயிர்பெற்று வாராயா?—என்று நான் கேட்கிறோம்!

"தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் தமிழர்கள் வாழுகிறார்கள்; அவை தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டும், என்று நாம் கோருகிறோம்.

"தமிழர்கள் வாழுவதனாலேயே அப்பகுதிகள், தமிழகத்துடன் சேராது; அங்கிருக்கிற தமிழர்கள் விரும்புவதனாலேயே அது தமிழகத்துடன் சேராது; நான் விரும்பினால் மட்டுமே அது எங்காவது சேரலாம் அல்லது செத்து ஒழியாலாம், என்று ஒருவர் பேசுகிறார்.

"1945-ம் வருடத்திய நேருவே! நீ இறங்கி வந்து, அவருக்குப் பாடம் புகட்டாயா?—என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது!"

இதே பாணியில் தம்பி சம்பத்தே! தோழர் சம்பத் அவர்களைத் திருத்தமாட்டாயா, என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், 'தம்பி' என்று கூப்பிடவே, பயமாக இருக்கிறதே ! 8—4—61-ல் தான், முதன் முதலாக, 'அவர்' என்று அழைத்துப் பேசினேன்—ஒரு புதுக் கட்சியின் தலைவர் ஆகிவிட்டவரை மரியாதையாக அழைக்காவிட்டால், கோபம் கொப்பளிக்குமே என்று. நான் 'அவர்' என்று அழைத்ததும், அவரும் என்னைக் கௌரவப்படுத்தினார். எப்படி? அண்ணா என்று அழைத்து வந்தவர், தோழர் அண்ணாத்துரை என்று பண்பு கெடாமல் அழைக்கலானார்.

சரி! அண்ணா என்று அழைக்க நாங்கள் இருக்கிறோம் இலட்சக்கணக்கில் என்று, கூறுகிறாய். உன் உள்ளன்புக்கு என் நன்றி, தம்பி!

"திராவிட நாடு பற்றி முன்பு தவறான கருத்துக்கொண்டிருந்தேன்—அதே கருத்து இப்பொழுது இருக்கவேண்டுமா?" என்று கேட்கிறார் மாறியவர். ஆனால், அவரே தான், நேருவை நையப்புடைத்தார்—சொல்லால் அவ்வளவு அழுத்தந்திருத்தமாகப் பேசினார். முதல் அவதாரத்தில் பேசினார், எட்டாவது அவதாரத்தில் அதை மறந்துவிட்டார் என்பதற்கு, 1945-ல் பேசினார். இடையில் பத்தே ஆண்டுகள்! அரசியல் வாழ்வில் அது கைநொடிப்பொழுது! இவரே, அதற்குள் அதை மறுத்து முரண்பட்டுப் பேசுகிறார் என்றால், ஏன்? நேருவின் உள்ளம் தெளிவற்ற நெஞ்சமா ! இல்லை! தெளிவுள்ள நெஞ்சம் என்பதற்காகவே இந்தியத் துணைக்கண்டத்துத் தலைமையை அவருக்குத் தாராளமாக அளித்தது இந்திய அரசியல், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்கு முரணாகப் பண்டித நேரு பேசியதற்கு இந்தப் பலத்த தாக்குதல்! மாறிப் பேசலாம்—ஆனால் 10 ஆண்டுகள் எனும் இவ்வளவு குறுகிய காலத்திலா? என்று இடித்துக் கேட்டார்! பத்து ஆண்டுகள் ஒரு கைநொடிப்பொழுது என்கிறார்.

இவர்! தம்பி! பத்து நாட்கள் கூடப் பொறுத்துக் கொள்ளவில்லை, 7—4—61-ல் தி. மு. க. வரலாற்று வெளியீட்டு விழா! 9—4—61-ல் தி. மு. கழகம் பயன் இல்லை; அதை விட்டு விலகிவிடுகிறேன், என்று அறிக்கை! இவர் தான் பத்து ஆண்டுக் கணக்கை எடுத்து வைத்துக்கொண்டு, நேருவை பிய்த்து எறிந்தவர். 9—4—61-ல், கழகத்தைவிட்டு வெளியேறினார்—19—4—61-ல் புதுக்கட்சி! அதிலே, திராவிட நாடு இல்லை! சமதர்மம் கிடையாது!? பிரிவினை கிடையாது தமிழ் நாடு, பாரதப் பிணைப்பில்!

பத்தே நாட்கள்! பத்து ஆண்டுகள், கைநொடிப் பொழுது என்றவர்தான், பத்து நாட்களுக்கும் ஒரு உவமைக் கணக்குத் தரவேண்டும்!

இவர் 'பழைய நேரு'வை அழைத்துப் புதிய நேருவுக்குப் புத்தி கூறச் சொன்னார், நாம்?

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, திருச்சி மாநில மாநாட்டுப் பேச்சு நான் தந்திருப்பது.

தம்பி! அப்பொழுது அவர், கழகத்தைவிட்டு வெளியேறப் போவதாக ஒரு சரடு விடப்பட்டது, அடேயப்பா! அதற்குப் பதில் அளிக்கும்போது, பேசின பேச்சு—ரீங்காரமல்லவா, அது?

"அண்ணனை நான் இழந்து விடுவேன் என்றோ, இழந்து விட வேண்டுமென்றோ, எவனாவது கருதினால், மடையனே! நீ புத்தி பெறுவதற்கு இன்னும் வெகுநாள் இல்லை என்று தான் கூற இயலும்." ஐந்து ஆண்டுகள்! கழகத்தைவிட்டு விலகி, எண்ணிப் பத்தே நாட்கள், தோழர் அண்ணாத்துரை ஆக்கப்படுகிறேன்! பெரியாரை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் 12 ஆகிறது—அவருடன் இருந்தபோது அழைத்தது போலவே தான் இன்றும் பெரியார் என்று மேடையில் பேசுகிறோம்; தனியாகப் பேசும்போது, எப்போதும்போல், அவர், "ஐயா!"வாகத்தான் இருக்கிறார்.

ஆனால், நம்மைப்போலவா, எல்லோரும் பைத்தியக்காரர்களாக இருப்பார்கள். தலைவர் ஆன பிறகு, அண்ணனாவது மண்ணாவது—தோழர் அண்ணாத்துரை தான்!

போகட்டும்—புதுப் பெருமை கிடைக்கட்டும்—நாட்டம் என்ன எனக்கு? நான் கூற வந்தது, எவ்வளவு மின்சாரவேக மாறுதல் என்பதை, தம்பி! நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

"அண்ணாவுக்கு வேண்டுமானால் இலட்சக் கணக்கான தம்பிகள் உண்டு; ஆனால், எனக்கு ஒரே ஒரு அண்ணன் உண்டு!" ஆண்டுகள் ஐந்து—அரைக் கைத்நொடிப்பொழுது—அண்ணனாது மண்ணாவது என்று கூறும் நிலை பிறந்துவிட்டது. எத்துணை வேகமான வளர்ச்சி!!

நமது கழகத்தில் இருந்து, விலகிப் புதுக் கட்சி அமைப்பது மட்டு மல்ல—புதுக்கட்சியின் வளர்ச்சி கூடப்பிறகு; முதலில் தி. மு. கழகத்தை அழிக்க வேண்டுமாம்! ஏனெனில், இவர் வெளியேறி விட்டாரல்லவா, அதனால்!

இது இவருடைய இப்போதைய எண்ணம். ஆனால் அன்று—5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநில மாநாட்டில் சொன்னது என்ன தெரியுமா, தம்பி!

"தி மு கழகத்தைப் பொறுத்தவரையில் நான் கூறுகிறேன்—எவருடைய இழப்பினாலேயும் தி. மு. கழகம், பெற்றிருக்கிற வளர்ச்சி, அடைந்திருக்கிற பேருரு, பாதிக்கப்படாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் விலகுவதால் உடைந்து போய் விடக்கூடிய நிறுவனம், தி. மு. கழகம் அல்ல." ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த கழக வளர்ச்சி கண்டே, இப்படிச் சொல்லவேண்டி நேரிட்டது என்றால், இப்பொது தி. மு. கழகம் பெற்றுள்ள நிலையைப் பார்த்திடும் எந்தப் பித்தனாவது, அது அழிந்து விடும் என்று பேசுவானா? அல்லது திராவிட நாடு, கிடைக்காது என்றாவது பேசுவானா?

"தாசிகள் பற்றிய கதைகள், நீங்கள் நிரம்பப் படித்திருக்கலாம்—தாசி—ஒருவனிடத்தில், பணம் இருக்கும் வரையில்தான், என்னைத் தழுவிக் கொண்டே இருங்கள்; நீங்கள் இல்லா விட்டால் நான் ஏது? நான் இல்லா விட்டால் நீங்கள் ஏது? என்று ஈருடலும் ஓருயிரும் என்பது போலப் பேசுவாள். ஆனால் அவனிடம் இருந்த பணம் பூராவும் பறி போன பிறகு, அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு என்ற நிலைக்கு வரும் போது, அவனைக் கழுத்தைப் பிடித்து, நெட்டித் தள்ளிவிடுவார்கள். அதைப் போலவே தான் ஏகாதிபத்தியங்களும்...

"நம் செல்வம் முழுவதும் சுரண்டப் படுகையில்—தாசி போல—நாமெல்லாம் பாரத புத்திரர்கள் அல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே!—என்பர், நாம் ஒட்டாண்டிகளான பின், நீங்கள் ஏன் வடநாட்டுடன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்? என்று பேசுவர்—தாசி போல, எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் வடநாட்டு ஏகாதிபத்திய அணைப்பினின்றும் விலகிக் கொள்ள வேண்டும் என்று தி. மு. கழகம், கூறுகிறது."

'அண்ணா நீயும் வேண்டுமென்றே, அவர்கள் குறை சொல்வது போலவே, பெண்கள் விஷயமாகத்தானே எழுதுகிறாய்? ஏனண்ணா; பால் உணர்ச்சி? இதைத்தானே, விலகியோர் கூடக்கண்டிக்கிறார்கள். வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிச் சக்கையாக்கிக் கீழே துப்பிவிடும் என்று சொல்லக் கூடாதா? ஆபாச ரசமான, ஒரு கதை சொல்லித்தானா இதை விளக்க வேண்டும்? இதைத்தான் அவர்கள் ஆபாச நடை என்கிறார்கள்!' என்று சொல்லுகிறாய்; தம்பி புரிகிறது! பொறுத்துக்கொள், இந்தக் கதை, நான் சொன்னது அல்ல! எழுத்தோவியமே, ஆபாச நடை, கூடாது, பால் உணர்ச்சி ஆகாது என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ள தோழர் சம்பத் அவர்களுடையது.

அவர் பேசியதா? ஆபாசம் கூடாது என்பவர் பேச்சா?—என்று கேட்டு ஆச்சரியத்தால் மூர்ச்சையாகி விடாதே! அவரேதான்! அவருக்கு விருப்பம் இருந்த போது, இப்படிக் கதை கூறினார்—இப்போது கண்டிக்கிறார்!

இதிலென்ன ஆச்சரியம், திராவிட நாடு கூடாது என்று பேசுவோர் துரோகிகள், கங்காணிகள், இளிச்சவாயர், அகப்பட்டதை சுருட்டுபவர் என்று பேசினவரேதான் இன்று, திராவிட நாடு கனவு என்கிறார்!

அவருக்கு அவரே பதில் சொல்ல, ஏற்பாடு செய், தம்பி! அவரையும் மக்கள் புரிந்து கொள்ள முடியும். இப்படிப் பட்டவர்களால் தி. மு. கழகத்தை ஏதும் செய்திட முடியாது என்பது விளங்கும்.

தப்பி! இவ்வளவும் நான் எடுத்து எழுதுவது, விலகியவரின் போக்கில் ஏற்பட்டு விட்ட விசித்திரமான மாறுதலைச் சுட்டிக் காட்டி ஏளனம் செய்ய அல்ல. உள்ளபடி எனக்கு அதை நினைவிற்குக் கொண்டு வரும் போது, வேதனை பீறிட்டு எழுகிறதே தவிர, பரிகாசம் செய்திடத்தோன்ற வில்லை. நான் அவைகளை எடுத்து எழுதுவதன் நோக்கம், நமக்கு அவர் அளித்திருக்கும் அருஞ் செல்வம், இவ்வளவு கருத்துகளைத் தந்தவர், காலக் கோளாறினால், இன்று சாய்ந்து கொள்கிறார் என்றால், நாம் கோபிக்கத் கூடாது என்பதற்காகவுந்தான்.

கேட்போரைச் சொக்க வைக்கும் இசை வாணனுக்கு காய்ச்சல் கண்டால், பக்கத்தில் உள்ளோரின் காதுகுடையும் விதமாக இருமுகிறார்! அதற்காக அவர் மீது கோபித்துக் கொள்கிறோமா? பரிதாபப்படுகிறோம்!! காது குடைச்சல் எடுக்கும் படியாக அவர் இருமும்போது கூட, அவர் நன்றாக இருந்த போது பாடிய பண்ணின் இனிமையைக் எண்ணிக்கொள்கிறோம்; அந்த எண்ணமே நமக்குத் தேன், அது போலத்தான் இது.

ஆகவே, தம்பி! இன்று ஏற்பட்டுவிட்ட போக்குக் கண்டு, மனம் பதறாதே, கோபம் கொள்ளாதே! வெளியே எடுக்கப்பட்டு விட்ட முத்து மீண்டும் சிப்பிக்குள் போய்விட முடியாது; சிப்பியும் முத்துதனை எடுத்து வைத்துக் கொண்டு, கடலிடைச் சென்று ஒளிந்துவிட முடியாது. அது போலவே, திராவிட நாடு பிரிவினைக்கான ஆதாரங்கள், வாதங்கள் ஆகியவற்றினை அளித்தவர், அவைகளைத் தம்முடன் எடுத்துக்கொண்டு போய் விடவில்லை—போய்விட முடியாது—முத்து நம்மிடம்—சிப்பி இடம் மாறிவிட்டிருக்கலாம்—அவ்வளவே.

தூற்றிப் பேசுகிறார்களே என்று துயரப்படாதே! தூற்றிப் பேசுவோரின் பட்டியலில், சில புதிய பெயர்கள் இணைக்கப்படுகின்றன; வேறொன்றுமில்லை என்று எண்ணிக் கொள். தொடர்பே இல்லாதவர்கள் நம்மைத் தூற்றவில்லையா? நாம் தாங்கிக் கொள்ளவில்லையா? அவர்களை விட, இவருக்குச் சற்று உரிமை அதிகம்தானே இருக்கும்; தொடர்பு காரணமாக, தோழமை இருந்த காரணமாக! எனவே ஏசட்டும். எரிச்சலூட்டலாம் என்ற நோக்குடன் ஏசுவர்; நீங்கள் மட்டும், ஏசல் கேட்டும் மனம் கலங்காத நிலையைப் பெற்றுவிடுவீர்களானால், அதனை விட, வலிவூட்டும் வாய்ப்பு வேறு இல்லவே இல்லை என்பதை உணருவீர்கள்.

மற்றவர்கள், நமது கொள்கையைத் தூற்றும் போதாகிலும், ஒரு விவரமும் புரியவில்லையே இவர்களுக்கு என்று நமக்கு ஆயாசம் ஏற்படும், புதுக் கட்சியார் பேசும் போது, அப்படியா? எல்லாம் தெரியும் இவருக்கு; நாடு அறியச் சொன்னவர்தானே; மாற்றார் மருளப் பேசினவர்தானே; விவரம் அறியாமலா பேசுகிறார்; அறிந்ததை மறைத்துக் கொண்டு பேசுகிறார்—மெத்தக் கஷ்டப்படுகிறார் என்பதே கூட அல்லவா, நமக்குப் புரிகிறது, புரியும் போது புன்னகை வருமேதவிர, புருவத்தை நெரிக்கவா தோன்றும்!

ஏன், இதனைச் சொல்கிறேன் என்றால், தம்பி! சென்னைக் கூட்டத்திலே, ஏசல் கேட்டு எரிச்சல் கொண்டவக்கள், பூசல் கிளம்பிவிடுமோ என்று எண்ணத்தக்க விதத்தில், கலகம் விளைவிக்க முற்பட்டனர் என்று இதழ்களில் கண்டேன்; அது மிக மிகத் தவறான போக்கு; அருவருக்கத் தக்கது; கண்டிக்கப்பட வேண்டியது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக இதனை எழுதுகிறேன்.

ஒன்று சொல்வேன், நம்மைப் பிறர் இகழக் கேட்டும், பதறாது இருக்கும் போக்கை விடச் சிறந்த பண்பு வேறு இல்லை. நமக்கு நமது கொள்கையிலே அசைக்க முடியாத நம்பிக்கை! ஆராய்ந்து பார்த்ததால் ஏற்பட்ட நம்பிக்கை இருக்கிறது என்றால், அந்தக் கொள்கையை எவர் கேவலப் படுத்திப் பேசினாலும், நமக்கு என்ன நட்டம்? ஏன் நாம் எரிச்சலடைய வேண்டும்?

கொள்கைப் பற்று என்ன, கீழே வீசினால் உடைந்து தூளாகி விடக்கூடிய, கண்ணாடிப் பாத்திரமா!'

இல்லையே—அது நமது குருதியில் கலந்து விட்ட ஒன்று அல்லவோ? அதைக் கேலி பேசுவோராலா, ஒழித்து விட முடியும்? கண்டித்து விடுவதினாலா அழித்து விட முடியும்?

நேரு வீசாத கண்டனமா, கேலிக் கணையா, இனி ஒருவர் வீசப் போகிறார்கள்? என்ன செய்தோம், அவர் உரை கேட்டு? ஏகாதிபத்தியப் போக்கு அவரை அப்படிப் பேச வைக்கிறது என்று எண்ணிக் கொண்டோம்; அவர் உரையை ஏற்க மறுத்தோம் நம்மில், தோழர் சம்பத்து போன்றவர்களோ, பழைய நேருவை விட்டுப் புதிய நேருவுக்குப் புத்தி புகட்டச் சொன்னார்கள்.

நமது கொள்கைகளை மறுப்போரின் பேச்சைக் கேட்டு, மனம் பதறாத போக்கு, கட்டாயம் ஏற்பட்டாக வேண்டும். அவர்கள் பரப்பும் தப்புப் பிரசாரத்தை மறுத்து, மக்களுக்குத் தெளிவளிக்க, நமது கொள்கையின் நியாயத்தை நிலை நாட்ட, நமக்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் நமது நியாயத்தை மெய்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையும், வாய்ப்பும், நமக்கு இருக்கும் போது, நாம் ஏன் பதற வேண்டும்—பேசுவோர் மீது ஏன் ஆத்திரப்பட வேண்டும்—கலகம் விளையும் நிலை ஏன் பிறக்க வேண்டும்?

வேண்டாம், தம்பி! வேண்டாம்! நமது கொள்கையின் தூய்மையும் வலிவும், தரமும் பழுது படாதபடி நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், எவர் நமது கொள்கைகளை, கழகத்தவரை, மனம் போன போக்கில் ஏசினாலும், ஒரு துளியும் பதறாத நிலை—அமைதியான மன நிலை, நமக்கு ஏற்பட்டாக வேண்டும். தணலில் போட்டு எடுக்கிறார்கள் தங்கத்தை, நினைவினில் இருக்கட்டும்.

புடம் போட்டு எடுக்கப்பட்ட வீரர்கள், தி. மு. கழகத்தில் இருக்கிறார்கள்—இது போனவர் சொன்னது, இதனை மறவாதே!

என்னைப் பொறுத்த வரையில், இதனைக் கூறுவேன்—என்னை எவர் இழிவாகப் பேசினாலும், கவலைப்படவில்லை. எனக்கென்ன குறை, தம்பி! உன் இதயத்தில் எனக்கு இடம் இருக்கும் போது.

பிரிந்து சென்றவர்கள் கொதித்துப் பேசும் போதும் கூட, அவர்களைப் பற்றிக் கடிந்துரைக்காதே—எனக்கு நிச்சயமாக அது பிடிக்காது என்பது மட்டுமல்ல—கனியிருக்கக் காய் கொள்ளற்க என்பது தமிழ் மறை அன்றோ—அது நமது பண்பு எனக்கொள்ள வேண்டும். எனக்கு இன்றும், பிரிந்து போனவர்கள், என்னை இழித்தும் பழித்தும் பேசுவது பற்றிக் கோபம் வரவில்லை; இருந்த நாட்களிலே நிகழ்ந்தவைகளைத்தான் எண்ணி எண்ணி உருகியபடி இருக்கிறேன்; என்ன செய்வது தம்பி! எனக்கு இதயம் இருக்கிறதே!!