கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 21

21


தற்கு முன் இந்த தான்வா திட்டத்தின் பெரிய ‘மேடம்’ என்று சொல்லப்படும் ஆபிசரைப் பல தடவைகள் செவந்தி பார்த்திருக்கிறாள். அவர் அவள் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்து ஒவ்வொரு மறுப்பையும் பொருட்படுத்தாமல் ஊக்கி இருக்கவில்லையெனில் இன்று இந்தப் பெரிய ஆபிசில் அடி வைக்க அவளுக்குத் தகுதி வந்திருக்குமோ? வாசல் கூர்க்கா முன்னறைப் பெண்மணி எல்லோரையும் தாண்டி அவளும் சரோவும் சில்லென்று குளிர்ச்சி அணையும் அந்த அறைக்குள் வருகிறார்கள்.

உள்ளே வரும் போது ஒரே அச்சம். ஒரு கூச்சம்; அச்சம்.

‘இந்தம்மா எவ்வளவு எளியராக இருந்தார்? ஆனால் எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறார்’ என்ற வியப்பு.

உள்ளே நாற்காலியில் ஒரு பருமனான பெண்மணி, காதில் பெரிய தோடு மூக்குத்தி, தங்கச் சங்கிலி வளையல்களணிந்து உட்கார்ந்திருக்கிறாள். அவளுடன் ஒரு பதினான்கு பதினைந்து வயசுப் பெண்ணும் நிற்கிறாள்.

“அடடே வாங்க செவந்தியம்மா. வா சரோ. உட்காருங்க” என்று நாற்காலிகளைக் காட்டி உட்காரச் சொல்கிறார்கள்.

சரோ “தேங்க்யூ மேடம்” என்று சொல்லிக் கொண்டு உட்காருகிறாள்.

“இந்தம்மா தஞ்சாவூர் பக்கத்திலிருந்து வந்திருக்காங்க. வளர்மதின்னு பேரு. தான்வா பயிற்சியெடுத்தவங்க. இப்ப விவசாயத்தோட பால் மாடு வாங்கி கூட்டுறவு சங்கத்தில் நூறு பெண்களை ஈடுபடுத்தி இருக்காங்க. அவங்க அனுபவம் கேளுங்க.”

“வணக்கம்” என்று சரோ அவளைப் பார்த்துக் கை குவிக்கிறாள்.

“நூறு மாடுன்னா, எப்படிங்க?”

“அதான் தான்வா மகளிர் சங்கம்ன்னு ஒண்ணு வச்சிட்டோம். அதில் நூறு பெண்களுக்கு லோன்வாங்கி மாடு வாங்கினோம். பெண்களுக்கு இதில் உபரியாய் வருவாய் இருக்கு. லோன் அடைஞ்சு அதிகமாக வருவாய். மேலும் மாடுகள் விருத்தியாகுது. இப்ப சொசைட்டிக்கு பால் விட்டது போக கூடுதலாகக் கிடைக்குது. இதை எப்படித் தொழில் பண்ணலாம்னு யோசனை கேட்க வந்தேன்.”

செவந்தி வியந்து நிற்கிறாள்.

“ஏம்மா பவர் டிரில்லர் பற்றிக் கேட்டியே. பாக்டரிக்கு போய் பார்த்தாயா?” என்று சரோவிடம் அவர் கேட்கிறார்.

“அந்த மேடத்தை ஆபீசில் பார்த்தேன். ஆனால் பாக்டரிக்கு போகவில்லை. ரிசல்ட் வந்து பர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணிட்டேன் மேடம்.”

கையில் வைத்திருக்கும் பையில் இருந்து பால்கோவாப் பெட்டியைத் திறந்து நீட்டுகிறாள்.

“வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோசம், சரோ.”

அந்தப் பெண்மணியிடமும் நீட்டுகிறாள். அவள் ஒரு துண்டை எடுத்துக் கொள்கிறாள். “நீயும் எடுத்துக் கொள்” என்று அந்தப் பெண்ணிடமும் நீட்டிவிட்டு பெட்டியை மேசைமீதே வைக்கிறாள். “மேடம், நீங்க அன்னிக்கு வந்து என்னிய துண்டிவிட்டு இழுத்திங்க. எங்க வீட்ல மகா லட்சுமி அடி வச்சதா நினைக்கிறேன். இப்ப எங்க பக்கம் ஒரு காணி அரைக்காணி வச்சிருக்கும் வீடுகள்ள ஆம்புளய எதிர்பார்க்காமல் பெண்களே விவசாயம் செய்யிறாங்க. நாங்களும் தான்வா மகளிர் சங்கம் வச்சிருக்கிறோம். மீனாட்சி மேடமும் பத்மாவதி மேடமும் வந்தாங்க. அடுத்தாப்பல உரம் ஊட்ட மேற்றுவதற்கு மண்புழு பத்தி சொன்னாங்க.. அதும் செய்யணும்னு இருக்கிறோம்...”

“நீங்களெல்லாரும் கிராமங்களை விட்டு வந்து பட்டணங்களில் அல்லல் படாமல் முன்னேறணும். நன்றாக வாழ வேண்டும். சமுதாயம் வளமடையணும் என்பதே தான்வாவின் நோக்கம்.”

“பெண்கள் எல்லாம் செய்கிறோம். உழுவதற்குத்தான் சரியாக ஆள் கிடைப்பதில்லை. ரொம்பக் கூலியாகுது. பெண்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் செய்து கொள்கிறோம். ஒருகாணி, அரைக்காணி, நடவு அறிப்பு என்றால் ஒரே மாதிரியான கூலிதான். அவங்க உழவுக்கு எம்பது நூறு நமக்குப் பதினைஞ்சான்னு கேட்டுக்கறாங்க. ஆனா நாங்க எங்களுக்குள்ள கூட்டிக்கிட்டா எல்லாருக்கும் தானே கஷ்டம்னு உசத்தல. ஆனா இதுபத்தி பேச்சிருக்கு. எங்கூட்டுக்காரரு லோன் எடுத்து டிராக்டர் வாங்கலாங்கறாரு. அவரே ஒட்டக் கத்துக்கறாரு. ஆனா ரொம்ப வெலயாவுது... போக்கியத்துக்கு வுட்ட பூமிலன்னாலும் திருப்பலான்னு....”

சரோ, அம்மாவின் முழங்காலில் மெள்ள இடிக்கிறாள். இந்த அம்மா பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அதற்குப் பொருள்.

“நீங்க வேணுமானால் “பவர் டிரில்லரப் போய்ப் பாருங்களேன். அதை ஒரு அம்மாதான் தயாரிக்கிறாங்க. டிராக்டர் விலை வராது. உண்மையில் பெண்கள் ஓட்டணும்னு தயாரிக்கிறாங்க.” “அப்படீங்களா? ஆம்புளங்க இல்லாம நாமே எல்லாம் செய்ய முடியுங்களா?”

“கேளு, சரோக்கிட்டச் சொன்னேன். டிரெயினிங் புரோகிராமுக்கே போக லெட்டர் கேட்டா; குடுத்தேன்.”

“நான் அவங்கள இங்க ஆபீசில் பார்த்து அனுமதி வாங்கிட்டேன். ஆனா கிண்டியிலேயே டிரெயினிங் புரோகிராம் முடிச்சிட்டேன். இப்பக் கூட அவங்க ஒரு லேடி தொழில் முனைவராக இருப்பதால் எங்கள போன்றவர்களுக்கு ஆதரவு கொடுப்பாங்களான்னு கேக்கலாம்னு வந்தேன்...பவர் டிரில்லரையும் பார்க்கலாமே?”

‘ஒ... தாராளமாய் போய்ப் பாருங்க!”

அந்த அலுவலகத்தைவிட்டு அவர்கள் அம்பத்துரர் தொழிற் பேட்டைக்குப் பஸ் ஏறி வந்து இறங்குகிறார்கள். பவர்டிரில்லர் தொழிற்சாலையைத் தேடி வரும்போது நண்பகல் நேரம். புரட்டாசி மாதப் புழுக்கம். கூர்க்காவிடம் சொல்லி வரவேற்பில் சரோ முன்பே பெற்று வந்த கடிதம், தான்வா மேடம் கொடுத்த கடிதம் எல்லாவற்றையும் காட்டுகிறார்கள்.

உள்ளே நுழையும் போதே நான்கு சக்கரமுள்ள ஒரு டிராக்டர் மிகச் சிறியது நிற்கிறது. இன்னொரு பக்கம் இரண்டே சக்கரமுள்ள கையால் தூக்கி உழக்கூடிய பவர் டிரில்லர்.

உள்ளிருந்து நடுத்தர வயசில் ஒரு ஒட்டு மீசைக்காரர் வருகிறார்.

“நாங்கள் தான்வா பெண்கள். இந்தப் பாக்டரி, டிரில்லர் பார்க்க வந்தோம்” என்று சரோ, தன் ஈடுபாட்டை படிப்பைச் சொல்லுகிறாள்.

“புரொப்ரைட்டர் மேடம் இருக்காங்களா?”

"அவங்க பாக்டரிக்குக் காலமே வந்திட்டுப் போயிட்டாங்க; நீங்க வாங்க, பாருங்க.” தொழிற்சாலையில் நீளப் பல பகுதிகள் இருக்கின்றன. இயந்திரங்கள் இயங்குகின்றன. அராவுதல் வெட்டுதல் வட்ட வடிவ மாக்கல் என்று...

செவந்தி மலைப்புடன் பார்த்து நிற்கையில் சரோ, ஈடுபாட்டுடன் ஒவ்வொரு பகுதியிலும் சென்று பார்க்கிறாள். வரைதல் என்று ஒரு தனிப்பகுதி. அதையும் கடந்து அவர்கள் முழுதாக உருவாக்கப்பட்ட இயந்திரக் கலப்பை நிற்கும் ஓரிடத்திற்கு வருகிறார்கள்.

“இங்க இப்ப டிமான்ஸ்ட்ரேட் வசதி இல்ல” என்று

சொல்லிவிட்டு அவர் பல இணைப்புகளைக் காட்டுகிறார்.

“இத பாருங்க இது புழுதி உழவு. ரோடோடில்லிங்.”

"இதுதா பட்லர் இல்ல?”

கட்டிகளை உடைக்கும் சீப்பு போன்ற கொழு முனைகள். இவர்கள் மாட்டுடன் இணைக்கும் மத்துக் கடைவது போல் சேற்றைக் குழம்பாக்கும் பட்லர்.

“இது என்ன கத்தி கத்தியாக?”

"இதுதான் அறுவடை செய்யும்.”

“நீங்க வாங்கறதானா ரெண்டே நாள் டிரெய்னிங் போதும். அது நாங்களே தாரோம்.”

“எவ்வளவு டீசல் ஆகுதுங்க ஒரு ஏகர் உழ?”

“ஒரு மணிக்கு ஒண்ணரை லிட்டர் ஆகும். ஒரு நாளைக்கு எட்டு மணிநேர வேலை செய்தால் மூனரை ஏக்கர் உழலாம்.”

"ஏயப்பா..” என்ற செவந்தி மலைக்கிறாள். “மூணு ஏர் மூணு சோடி மாடு...” கணக்குப் போடுகிறாள்...

ஒன்றும் புரியவில்லை.

ஆனால் சரோதான் வெகு நேரம் அவரிடம் ஏதேதோ ஆங்கிலத்தில் பேசுகிறாள். தன் கைகளால் அதன் கைகளைத் தூக்கி நிமிர்த்திப் பார்க்கிறாள். மதிய உணவு நேரம் வந்து விடுவதால் அவரவர் கலைந்து வருகிறார்கள்.

“என்னப்பா வின்சென்ட்” என்று கேட்டுக் கொண்டே அங்கே முன்புறம் வழுக்கையாக ஒருவர் வருகிறார்.

சரோவைப் பார்த்துக் கொண்டே நிற்கிறார். “ஏய்...நீ. சுகந்தா அவங்க வீட்டுக்கு வந்திருக்கல?”

“ஆமாம். நீங்கள் மிஸ்டர் கருணாகரன் இல்ல. அவங்க என் மாமி...”

“நீ டி.எம்.ஈ. படிச்சிட்டிருந்தேல்ல.”

“முடிச்சிட்டேன் சார். நீங்க மாமி தங்கச்சி வீட்டுக்குப் பின் வீட்டில இருக்கிறவங்கல்ல? நீங்க இங்கே வேலை பண்ணறீங்களா ஸார்?”

“ஆமாம்மா. ஆப்டர் ரிடயர்மெண்ட் இங்க இருக்கிறேன். நான் டிராயிங் போர்ட் பக்கமிருந்து பார்த்தேன். ஏதோ தெரிஞ்சாப்பல இருந்தது.”

"அம்மா, நம்ம மாமி தங்கச்சி இருக்காங்கல்ல. அவங்க வீட்டுக்குப் பின்னாடி உள்ள வீட்ல இருக்காங்க.இவங்க மக அருணா இவங்க எல்லாரும் அப்ப மதுரைக்கு வந்தாங்க. பயணம் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி சார். ரொம்ப சிரிக்க சிரிக்க பேசுவாங்க. நேரம் போனதே தெரியாம. அருணா என்ன பண்ணுது சார்?”

“அவ மியூசிக் காலேஜுக்குப் போறா. உங்க மாமா கூடப் போன மாசம் ஏதோ அல்சர்ன்னு டாக்டர்ட்ட காட்ட வந்தாப்பல. செயின் ஸ்மோக்கரா இருந்தாரு. இப்ப வுட்டுட்டேன்னாரு...”

“பெரியவங்களுக்கு யார் புத்தி சொல்லுறது? பட்டாத்தான் தெரியும்” என்று செவந்தி முணுமுணுக்கிறாள்.

“பவர் டிரில்லர் வாங்கப் போறீங்களா?”

“விலை ரொம்ப இருக்குமே சார்.. யோசனை பண்ணனும். டிமான்ஸ்ட்ரேட் பண்ணி காட்டுவாங்கன்னு நினைச்சேன். மேலும் டீசல் இல்லாம மான்யூல் டிரில்லர் பெண்கள் ஒட்டலாம்ன்னு சொன்னாங்க.”

“ஒண்ணு பண்ணாங்க... வொர்க்அவுட் ஆகல..”

“சார் எனக்கு இங்க வேலை கிடைக்குமா? பெண் தொழில் முனைவோர்ன்னு சொன்னாங்க. ரிசப்ஷன் டிராயிங்கலேந்து கடைசிவரை ஒரு பெண் கூட இல்லை. எங்களைப் போல இருக்கறவங்களுக்கு இங்கே வாய்ப்பே இல்லையா?”

அவர் சிரிக்கிறார். “இங்கே அவங்க பெண்களை வேலைக்கே எடுப்ப தில்லை. முன்பு ஒரு பெண்ணை டிராயிங் செக்ஷனில் வேலை கொடுத்து வைத்தாராம். அவள் நிமித்தமாக இங்கே காதல் ஊதல்ன்னு பிரச்னை வந்திட்டதாம். அதற்குப் பிறகு பாலிசியாகவே வச்சிட்டதாகக் கேள்வி. நீங்க கேட்டுப் பாருங்க...”

சரோ ஒன்றும் பேசவில்லை.

செவந்திக்கும் உவப்பாக இல்லை. வெளியே வருகிறார்கள்.

மணி இரண்டடித்து விட்டது.

ஓர் ஒட்டலைக் கண்டுபிடிக்கிறார்கள். எலுமிச்சை சாதமும் தயிர்சாதமும் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

செவந்தி சின்னம்மாவுக்காக அரை கிலோ திராட்சைப் பழம் வாங்கி வைத்துக் கொள்கிறாள்.

இருவரும் மூன்று மணியளவில் அந்த விடுதியை நாடி வருகின்றனர். பகலின் அமைதியில் விடுதி உறங்குகிறது.

சரோவைப் பார்த்ததும் கூர்க்கா உள்ளே விடுகிறான். முன்னே உள்ள விருந்தினர் கூடத்தில் வந்து மணி அமுக்குகிறாள். வார்டன் அம்மா எட்டிப் பார்க்கிறாள்.

"ஒ.... ராசாத்தியப் பார்க்க வந்தவங்களா? ராசாத்தி... ?” சின்னம்மா கிரைண்டரில் மாவழித்து கொண்டிருந்தாள் போலிருக்கிறது. அவசரமாகக் கையைத் துடைத்த வண்ணம் வருகிறாள்.

“சரோ, செவந்தி வாங்க!”

உள்ளே சென்று நன்றாகக் கை கழுவித் துடைத்துக் கொண்டு வருகிறாள்.

செவந்திக்குக் கண்ணீர் முட்டுகிறது. அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.

“சின்னம்மா, நீங்க எங்களத் தல குனிய வச்சிட்டீங்க. அப்பா நிதம் புலம்பிட்டிருக்காரு. அவரு உடம்பும் சரியில்ல. அத்தயும் இத்தயும் நினைச்சி குடிச்சிட்டு வாராரு. அம்மாவுக்கும் அவருக்கும் கொஞ்சம்கூட நெரப்பில்ல. எந்நேரமும் பிருபிருப்பும் சண்டையுந்தா. நீங்க ஒரு நடை வரணும். சின்னம்மா பழசெல்லாம் மறந்திடணும். உங்க கால்ல விழுந்து நான் கும்புடறேன்.” அவள் காலடியில் விழுந்தே பணிகிறாள்.

“சீ., இதென்னம்மா செவந்தி. அதது அந்தந்த நேரக் கோளாறு. நடந்திச்சி. பாப்பா எங்கூட இங்க வந்து தங்கிச்சி. பெரும்மையாக இருந்திச்சி. நல்ல கொணம். இங்க அத்தினி பேருக்கும் இதும் பேரில் இஷடம். எல்லாம் விசாரிப்பாங்க. மேக்கொண்டு வேலைக்குப் போகப் போவுதா? மாப்புள பாத்திருக்கிங்களா?”

“அதெல்லாம் ஒண்ணும் இப்ப யோசனை இல்ல. ஒங்க கொல்ல மேட்டுப் பூமில வெள்ளாம செய்யிறம். நெல்லுப் போட்டோம். கடல போட்டோம். முளவா போட்டோம். போனவாட்டி நீங்க சரோ இங்க இருந்ததுக்குக் கூட எதும் வாணாம்னு சொன்னிங்களாம். இப்ப இத்த வாங்கிக்கணும்...”

கைப்பை கவரில் வைத்திருக்கும் ஐநூறு ரூபாயை அவளிடம் நீட்டுகிறாள்.

"அய்ய இதென்ன! நீ போட்டுருந்த சங்கிலியக் கழட்டி வாங்கிட்டு வந்தேனில்ல? சும்மாவா குடுத்தீங்க. அது கெடக்கட்டும். வச்சிக்க. நாளையுமின்னியும் நீங்க ஒர முற நல்லாயிருந்தா எனக்குத்தா சந்தோசம். போன மாசம் முருகன் பொஞ்சாதிய அழச்சிட்டு வந்தான். ஒடம்பு சரியில்லாம எளச்சிப் போனா. மனசு சங்கடப்பட்டுது. நீங்க வந்திட்டுப் போயிருக்கிறதே எனக்குப் பெரிசு. செவந்தி பணத்த உள்ள வையி.”

“இல்ல, நீங்க உங்களுக்கில்லன்னாலும் ருக்குவுக்கு ஏதானும் வாங்கிக் குடுங்க. லீவு வந்திச்சின்னா புள்ளங்கள அழச்சிட்டு நீங்களும் வாங்க சின்னம்மா.”

அந்தக் கவரை அவள்கைகளில் வைத்து மூடிவிட்டு அவள் மகளுடன் திரும்புகிறாள்.

ஊரில் வந்து இறங்கும் போது மணி ஏழு.

சைக்கிள் கடை வெளிச்சத்தில் பட்டாளத்தார் நிற்கிறார். ரங்கன் இருக்கிறான்.

இத வந்திட்டாங்க.

“செவந்தி: கன்னிப்பன் அப்பாவாயிட்டான். காஞ்சீபுரம் ஆசுபத்திரில காலம பொண் ஒண்ணு, ஆணொன்னு.”

முதலில் லட்சுமிக்கு இருக்கும் பெண்ணைச் சேர்த்துச் சொல்லுவதாக செவந்தி எண்ணுகிறாள். "அப்ப ஆம்புளப்புள்ள பொறந்திருக்கா. நா அப்பமே நினைச்சே. சுகப்பிரசவந்தானே.”

“முதல்ல பொண்ணு பிறந்து அரைமணி கழிச்சி ஆம்புள. இங்க இந்த விலாசினி டாக்டரம்மா ரெட்டயா இருக்கும்னு கூட சொல்லல, பாருங்க. நா இப்பதா பாத்திட்டு வேணுங்கற சாமானெல்லாம் வாங்கிக் குடுத்திட்டு உங்கள கூட்டிட்டுப் போகலான்னு வந்தே..”

“நாங்க இவ வேல விசயமா போனோம். எப்படியோ சுகமாயிட்டது இல்ல? கன்னியப்பனுக்கு ரொம்பப் பொறுப்பாயிட்டது.”

“இருக்கட்டும் இருக்கட்டும். இன்ஜினிர் பொண்ணு வேலை கெடைச்சிச்சா?”

"இல்ல தாத்தா. பட்டாளத்துலதான் சேர வோணும்.”

“பலே! பலே! சேத்து வுட்டுடலாம்! இப்பதா பட்டாளத்துல உங்களையும் எடுக்கிறாங்களே!”

“அந்தப் பட்டாளம் இல்ல தாத்தா. சோத்துப் பட்டாளத்த சொல்றேன். இத்த உற்பத்தி பண்ணாத்தானே ரெட்டையும் ஒத்தையுமாப் பெருகுற உற்பத்திக்கு ஈடு கொடுக்கலாம்? பவர்டில்லர் பார்த்தம். எழுபதாயிரம் ஏறக் குறைய ஆகும். அது சரி. நமக்கு அங்க எதினாச்சிம் வேலை வாய்ப்பு இருக்குமான்னு பார்த்தே. அந்தம்மா, பொண்ணுங்கள பாக்டரில வேலைக்கு வச்சா காதல் பிரச்னை வந்திடுமாம். அதுனால எல்லாம் மீசைக்காரங்களாவே வைச்சிருக்காங்க.. நா முடிவு பண்ணிட்ட... முதல்ல பால் மாடு வாங்குவோம். பால் உற்பத்தி கூட்டுறவு. பிறகு பவர் டில்லர், அதுக்குள்ளே நாமே ஏதாலும் காம்பொனன்ட் பண்ணும் தொழில் முனைவர் இங்கேயே இங்கேயே!”

“பலே!” என்று ராமையா மீசையில் கை வைக்கிறார்.