கோவூர் கிழார்/கோவூர்கிழார்
கோவூர் கிழார்
தொண்டை நாட்டில் கோவூர் என்பது ஓர் ஊர். அங்குள்ள வேளாளர் குடி ஒன்றில் கோவூர் கிழார் பிறந்தார். சால்பும், தெய்வ பக்தியும், தமிழ்ப் புலமையும், பேரறிவும் நிரம்பிய குலத்திற் பிறந்த அவருக்கு இளமையிலே சிறந்த புலமை உண்டாயிற்று. அவருடைய தாய் தந்தையர் வழக்கப்படியே அவருக்கு ஒரு பெயர் வைத்தார்கள். இளமையில் புலமை நிரம்பிய அவர் வளர வளர, அறிவும் புகழும் வளர்ந்தன. இந்த நாட்டில் நன்கு மதிப்பிற்குரிய பெரியோர்களைப் பெயர் சொல்லி அழைத்தல் மரபன்று. அவர்களுடைய ஊரையோ, குடியையோ, வேறு சிறப்பையோ சுட்டித்தான் அவர்களைக் குறிப்பிடுவார்கள். மதுரையில் பழங்காலத்தில் ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தார். பள்ளிக்கூட ஆசிரியர் அவர். அவருடைய இயற்பெயர் இன்னதென்று இப்போது தெரியாது. ஆசிரியரைக் கணக்காயர் என்பார்கள். அந்தப் பெரியாருடைய பெயரை வெளிப்படையாக யாரும் சொல்வதில்லை; எழுதுவதும் இல்லை. ஆனால் எல்லாரும் அவரைக் கணக்காயனார் என்றே குறிப்பிட்டு வந்தார்கள். கடைசியில் அவருக்கு இயற்கையாக இருந்த பெயரை யாவரும் மறந்துவிட்டார்கள். மதுரைக் கணக்காயனார் என்ற பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. பெரும்புலவராக விளங்கிய நக்கீரருக்குத் தந்தையார் அவர். நக்கீரரைப்பற்றிப் பழம் புலவர்கள் குறிக்கும்போது, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று எழுதுவது வழக்கம். அந்தக் கணக்காயனாருடைய இயற்பெயர் இன்னதென்பது இன்று யாருக்கும் தெரியாது.
அதுபோலக் கோவூரிற் பிறந்த இந்தப் புலவர் பெருமானுக்கும் தாய் தந்தையர் வைத்த பெயர் இன்னதென்று நமக்குத் தெரிய வகையில்லை. வேளாண் குடியிலே பிறந்தவர்களுக்குக் கிழார் என்ற சிறப்புப் பெயர் உண்டு. இந்தப் புலவரை யாவரும் கோவூர் கிழார் என்றே வழங்கத் தொடங்கினர். யாவரும் இவருடைய ஊரைச் சொன்னார்களே ஒழியப் பேரைச் சொல்லவில்லை. பெரியவர்கள் ஊரைச் சொன்னாலும் பெயரை வெளிப்படையாகச் சொல்வது மரியாதை அன்று என்பது தமிழ் மக்களின் எண்ணம். “ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது” என்ற பழமொழி இந்த மரபை நினைப்பூட்டுகிறது.
கோவூர் கிழாரின் பெருமையை உறையூரில் உள்ள மக்கள் அறியும் வாய்ப்பு ஒன்று நேர்ந்தது. முதுகண்ணன் சாத்தனார் அடிக்கடி சோழ நாட்டில் உள்ள புலவர்களைக்கூட்டிப் புலவர் அரங்கை நடத்தி வந்தார். முதிய புலவர்களும் இளம் புலவர்களும் அந்த அரங்கத்துக்கு வந்தார்கள். அரங்கில் அரசனே தலைவனாக இருப்பான். முதுகண்ணன் சாத்தனார் புலவர்களில் தலைவராக விளங்குவார். அவரவர்கள் தாங்கள் அரசனைப் பற்றிப் பாடிய பாடல்களைக் கூறுவார்கள். அப்போது புலவர்களின் தகுதி நன்றாக வெளிப்படும். உறையூரில் உள்ள மக்களும் அத்தகைய அரங்கத்துக்கு வந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பார்கள். விழாக் காலங்களில் அத்தகைய புலவர் அரங்கு நிகழும். புலவர்கள் ஒருங்கு கட்டி ஆராய்வதற்கென்றே ஒரு மண்டபம் இருந்தது. அதற்குப் பட்டி மண்டபம் என்று பெயர்.
இத்தகைய விழாக் காலம் ஒன்றில் கோவூர் கிழாரும் கலந்துகொண்டார். அவர் ஆண்டில் இளையராக இருந்தார். இருப்பினும் அவருக்கு இருந்த புலமையைக் கண்டு முதுகண்ணன் சாத்தனார் வியந்தார். அவர் நாளடைவில் பெரும் புகழை அடைவார் என்ற கருத்துச் சாத்தனாருக்கு உண்டாயிற்று.
நலங்கிள்ளியின் இளமையைக் கண்டு சேர பாண்டியர்கள் அவனுடைய ஆற்றலை மதியாமல் இருந்தார்கள். “இவனைத் தக்க சமயத்தில் நாம் வென்று விடலாம்” என்று பேசிக்கொண்டார்கள். சோழநாட்டிலும் சோழமன்னர் குடியிலே பிறந்த சிலர் அங்கங்கே சிறிய ஊர்களைத் தம்முடையன வாக்கிக்கொண்டு குறுநில மன்னர்களாக வாழ்ந்தார்கள். அவர்களும் தம் மனம் போனபடியெல்லாம் பேசினார்கள்.
நலங்கிள்ளியின் தாயாதிகளில் ஒருவன் சோழ நாட்டில் ஒரு சிற்றூரில் இருந்து வந்தான். நெடுங்கிள்ளி என்பது அவன் பெயர். அவனுக்கு எப்படியாவது சோழநாட்டைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டு, தானே சோழ சக்கரவர்த்தியாக வேண்டுமென்ற ஆசை. நலங்கிள்ளியைப் போரில் வெல்லுவது எளிது என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். சில படைகளையும் திரட்டினான். “இந்த முடி என் தலையில் இருக்க வேண்டியது. நான்தான் சோழ குலத்தின் முறை யான வழித் தோன்றல்” என்று சொல்லிக் கொண்டிருந்தான். மன்னர் குலத்தில் ஒரு மன்னனுக்குப் பலர் புதல்வர்களாகப் பிறப்பார்கள். முதல் மகனுக்குத்தான் அரசுரிமை உண்டு. ஆயினும் மற்றப் பிள்ளைகள் அரசுரிமைக்கு ஆசைப்பட்டுச் சூழ்ச்சி செய்தும், படைப்பலம் கூட்டிப் போர் புரிந்தும் ஆட்சி செய்து வரும் மன்னனை விலக்கித் தாமே அரசு கட்டில் ஏறுவது சில இடங்களில் நடைபெறும். உலக வரலாற்றை ஆராய்ந்தால் இத்தகைய நிகழ்ச்சிகள் பலவற்றைக் காணலாம்.
நெடுங்கிள்ளி என்பவன் தான் சோழ குலத்தில் பிறந்த ஒன்றைத் தனக்கு வலிமையாக வைத்துக்கொண்டு, சோழ சிங்காதனத்தில் ஏற ஆசைப்பட்டான்; அதற்கான முயற்சிகளையும் செய்து வந்தான். நலங்கிள்ளியைப்பற்றி இழிவாகவும் பேசி வந்தான்.
இந்தச் செய்தியைக் கேட்டான் நலங்கிள்ளி. அவன் நினைத்தால் ஒரு நாளில் நெடுங்கிள்ளியை அழிக்கமுடியும். ஆனால் முதுகண்ணன் சாத்தனார் அமைதியையே உபதேசித்தார். பொங்கி வரும் தினத்தை அடக்கி அமைதியாக இருப்பதனால், மன்னன் புகழ் பெறுவதோடு அவனுடைய குடி மக்களும் அமைதி பெற்று வாழ்வார்கள் என்பதை வற்புறுத்திக் கூறி வந்தார்.
ஒருநாள் நெடுங்கிள்ளி படை திரட்டுகிறானென்றும், இழிவாகப் பேசுகிறானென்றும் ஓர் ஒற்றன் செய்தி கொண்டு வந்தான். அதைக்கேட்டு நலங்கிள்ளி சிங்கம்போலத் துள்ளிக் குதித்தான். கோபம் மூண்டது; சிரித்தான்; கோபத்திலும் சிரிப்பு வரும் அல்லவா? “பைத்தியக்காரன்! இவன் சோழ குலத்தில் உதித்தமையால் சோழப் பேரரசுக்கே உரியவனாகி விடுவானோ? மூத்த மகனுக்கே அரசு உரியது என்ற மரபு உலகம் அறிந்தது. அதை எண்ணாமல் இவன் தருக்கி நிற்கிறானே! ‘நான் சோழ குலத்திற் பிறந்தவன். எனக்கு அரசுரிமை வேண்டும். ஏதேனும் நிலப்பகுதி வேண்டும்’ என்று என்னிடம் வந்து கேட்கட்டும். இந்த அரசையே தந்து விடுகிறேன். ஆனால் என்னுடைய ஆண்மையை, என்னுடைய ஊக்கத்தை இழித்துப் பேசும் முட்டாளுக்கு நான் அஞ்சுவேனா? இருந்த இடத்திலேயே அடங்கிக் கிடந்தானானால் பிழைப்பான். என்னுடன் போருக்கு வந்தானானால் தொலைந்தான். சோழ நாடு வலியில்லார் நிறைந்த நாடு அன்று. போர் எங்கே வரப்போகிறது என்று தினவு கொண்ட தோள் உடையவர்களாகப் பல வீரர்கள் இருக்கிறார்கள். ஒரு வார்த்தை சொல்லவேண்டியதுதான்; அவர்கள் புறப்பட்டுவிடுவார்கள். வளைக்குள் புகுந்து கொண்டிருக்கும் எலியைப் போல இருக்கிறான் அவன். அங்கே புகுந்து அவன் இருக்கும் இடத்தை நாசமாக்கி, அழித்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பார்கள். அவன் ஏதாவது குறும்பு செய்யட்டும். நான் சென்று மூங்கிலைத் தின்னும் யானையின் காலில் அகப்பட்ட அதன் முளையைப் போல அழித்துவிடுகிறேன். அப்படிச் செய்யாவிட்டால் நான் தீய ஒழுக்க முடையவன் என்ற இழிநிலையைப் பெறுவேனாக!” என்று நலங்கிள்ளி தன் சிற்றத்தைத் தன் பேச்சிலே காட்டினான்; வஞ்சினங் கூறினான்.
அவன் பேசும் மட்டும் முதுகண்ணன் சாத்தனார் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அரசர்களுக்கு வெகுளி உண்டாகும்போது இடையிலே தடுத்துப் பேசினால் பேசுவோருக்கு அபாயம் நேரும். எந்த மனிதனும் கோபத்தில் யார் பேச்சையும் கேட்பது அரிது. அப்படி இருக்க, மன்னர் குலத்திற் பிறந்த நலங்கிள்ளியை இடையிலே பேசித் தடுப்பதென்பது எளிதா? ஆதலால் முதுகண்ணன் சாத்தனார் நலங்கிள்ளியின் வஞ்சினத்தைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தாரே ஒழிய இடையிலே ஒன்றும் பேசவில்லை.
அரசன் ஒருவாறு பேசி முடித்தான். முதுகண்ணன் சாத்தனார் கூடியவரையில் போர் நிகழாமல் செய்ய வேண்டும் என்னும் கொள்கையுடையவர். அவர் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அரசனுக்குப் படபடப்பு அடங்கிக்கொண்டு வந்தது. மெல்ல முதுகண்ணன் சாத்தனாரைப் பார்த்தான்; “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான்.
“அரசர் பெருமான் வஞ்சினங் கூறியது சரிதான். தன்னுடைய வலியையும் மாற்றான் வலியையும் துணை வலியையும் தெரிந்துகொள்ளாமல் அவன் பேசியிருக்கிறான். அந்தப் பேச்சுக்குப் பொருள் இல்லை” என்று மெல்லக் கூறினார் புலவர்.
“பொருள் இல்லை யென்று நாம் சும்மா இருப்பதா? நம்முடைய ஆற்றலை உணரும்படி செய்யவேண்டாமா?” என்று கேட்டான் நலங்கிள்ளி.
“செய்ய வேண்டியதுதான். ஆனால் இதற்காக உடனே படையெடுத்துச் சென்று போரிடுவது நம்முடைய பெருமைக்கு ஏற்றதாகாது. கொசுவைக் கொல்லக் கோதண்டம் எடுத்தது. போலாகும்.”
“பின் என்ன செய்யலாம்?”
“அவன் தான் இருக்கும் இடத்தில் இருந்து என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருக்கட்டும். நம்மிடம் வந்தானானால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்” என்றார் புலவர்.
“அவன் தன் மனம் போனபடி யெல்லாம் பேசிக்கொண்டிருக்க நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பதா? அது வீரமாகுமா?”
“அவன் வெறும் சொற்களைத்தானே வீசுகிறான்? அதற்கு ஏற்றபடி நாமும் ஏதாவது செய்து சற்றே அச்சமூட்டுவது போதும்.”
“அது எப்படி?” என்று மன்னன் கேட்டான். அந்த மன்னனுடைய கேள்வியில் ஆவல் ஒலித்தது.
“இதுகாறும் மன்னர் பிரான் உரைத்த வஞ்சினச் சொற்களை அவன் தெரிந்துகொள்ளும்படி செய்தாலே போதுமென்று தோன்றுகிறது.”
“எனக்குத் தாங்கள் சொல்வது விளங்கவில்லை. நான் இப்படி யெல்லாம் பேசினேன் என்பதை அவனிடம் யாரையாவது சொல்லும்படி செய்வதா?”
“ஒரு விதத்தில் அப்படிச் செய்வதாகத்தான் ஆகும். ஆனால் அவன் காற்றுவாக்கிலே பேசுகிற பேச்சுப்போல இல்லாமல் இது இன்னும் உரமுள்ள உருவத்தில் இருந்தால் நல்லது.”
மன்னனுக்குப் புலவரின் கருத்து விளங்கவில்லை. அவர் கருத்தைத் தெளிந்துகொள்ளும் ஆவல் மிகுதியானமையால், அவன் உள்ளத்தில் முளைத்திருந்த கோபம் ஆறியது. எனக்குத் தங்கள் கருத்தை விளங்கச் சொல்ல வேண்டும்” என்று அமைதியான குரலில் பேசினான் மன்னன்.
புலவர் அதைத்தான் எதிர்பார்த்தார். சற்றே புன்முறுவல் பூத்தார். “மன்னர்பிரான் தம் கருத்தைப் பாடலாகப் பாடி அவன் காதில் விழும்படி செய்தால் அது அவன் மனத்தில் உறைக்கும். யார் யாரிடமோ பிதற்றுகிறானே, அந்தப் பிதற்றல் போன்றதன்று இது என்ற அச்சம் உண்டாகும்” என்று தம் கருத்தைச் சொன்னார்.
நலங்கிள்ளி அவர் கூறுவதைக் கவர்ந்து சிந்தித்தான். அவருடைய சொற்கள் எப்போதும் பொருளுடையனவாகவே இருக்கும். எதையும் நன்கு ஆராயாமல் சொல்லமாட்டார் அவர் என்பதை மன்னன் அறிவான். ஆகவே, அவர் சொன்னபடியே செய்வது நலம் என்று தெளிந்தான்; தான் கூறிய வஞ்சினத்தைச் செய்யுளாகப் பாடினான்.
அந்தப் பாடல் நெடுங்கிள்ளியின் காதில் விழுந்தது. அவன் அப்போதைக்கு எந்தக் குறும்பும் செய்யாமல் ஒழிந்தான். ஆயினும் தக்கபடி படைகளைச் சேர்த்துக்கொண்டு உறையூரின் மேற் படையெடுப்பதே அவனுடைய நோக்கமாக இருந்தது.