கோவூர் கிழார்/சோழன் நலங்கிள்ளி

1
சோழன் நலங்கிள்ளி


“இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!”

“சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?”

“எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின் பெருமைக்கும் சோழ நாட்டின் சிறப்புக்கும் ஏற்றபடி ஆட்சி புரியும் ஆற்றல் இந்த இளைய மன்னனுக்கு இருக்குமா?”

“பழங்காலத்தில் சோழ குலத்தில் கதிரவனாக விளங்கிய கரிகாலன் இன்னும் இளமையில் அரசை ஏற்றான். அவன் பெற்ற புகழை யார் பெற முடியும்? இன்றும் சோழ நாடு காவிரியினால் வளம் பெற்று வாழ்கிறதற்குக் காரணம் கரிகாலன் கட்டுவித்த கரைதானே? நாம் வாழ்கிறோமே, இந்த உறையூர்; இந்நகரம் இவ்வளவு அழகாகவும் சிறப்பாகவும் இருப்பதற்கு அந்த மன்னர் பிரான்தானே காரணம்?”

இவ்வாறு உறையூரில் வாழும் குடிமக்களில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போதுதான் சோழநாட்டின் அரசனாக நலங்கிள்ளி என்பவன் அரியணை ஏறியிருந்தான். அவன் இளம் பருவமுடையவன். அதனைப்பற்றியே இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“பண்டைக் காலந்தொட்டு வரும் பழமன்னர் குடிகள் தமிழ் நாட்டில் மூன்று உண்டு. சோழர் குடியும் பாண்டியர் குடியும் சேரர் குடியும் ஆகிய இந்த மூன்று குலமும் பழமைக்கும் ஆற்றலுக்கும் அடையாளமாக விளங்குகின்றன. அந்த மூன்றிலும் சோழர் குலத்தின் பெருமையே பெருமை!”

“ஆம்! நாம் சோழ நாட்டில் வாழ்கிறவர்கள். அதனால் நமக்குச் சோழர் குலந்தான் உயர்வாகத் தெரியும். பாண்டி நாட்டில் வாழ்கிறவர்களைக் கேட்டுப் பார். அவர்களுடைய மன்னர் குடியையே சிறப்பிப்பார்கள்.”

“உண்மைதான். ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்தச் சிறப்பு மற்றவர்களுக்கு வராது. சோழ நாடு என்றாலே சோற்று வளம் உடையதென்பதை மற்ற நாட்டுக்காரர்களும் ஒப்புக்கொள்வார்கள். தமிழகத்தில் உள்ள ஆறுகளுக்குள் காவிரி பெரியது. இந்தப் பெரிய ஆற்றினால் வளம் பெறும் சோழ மண்டலத்தின் நீர் வளத்தையும் நில வளத்தையும் புலவர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.”

“வளம் சிறந்த சோழ நாட்டில் நாம் பிறந்ததற்காகப் பெருமிதம் அடையத்தான் வேண்டும்.”

“அதற்காக நான் சொல்ல வரவில்லை. இத்தகைய நாட்டைக் காக்கும் கடமையை மேற் கொள்ளும் மன்னன் அறிவும் ஆற்றலும் உடையவனாக இருக்க வேண்டும் அல்லவா?”

“சோழர் குலத்தில் உதிக்கும் யாருமே ஆற்றலுடையவர்களாக இருப்பார்கள். சில பேர் சில சமயங்களில் மக்களின் அன்புக்கு உரியவர்களாக இராமற் போனதுண்டு. ஆனால் பெரும்பாலும் சோழ மன்னர்கள் குடி மக்களின் நன்மையையே தம்முடைய நன்மையாக எண்ணி ஆவன செய்து வருவார்கள். இப்போது மன்னனாக வந்திருக்கும் நலங்கிள்ளியும் சோழ குலத்தின் பெருமையைப் பாதுகாத்துப் புகழ் பெறுவான் என்றே நினைக்கிறேன்.”

“அரசன் எவ்வளவு ஆற்றல் உடையவனானாலும் அவனுக்கு அமைகின்ற அமைச்சர்கள் தக்கவர்களாக இருக்க வேண்டும். அரசனுக்கு வழி காட்டும் அறிவும் அநுபவமும் உள்ளவர்கள் அமைச்சர்களாக இருந்தால், ஆட்சி நன்றாக நடைபெறும். குடிமக்கள் அந்த ஆட்சியின்கீழ் நன்மையை அடைவார்கள்.”

இவ்வாறு சோழ நாட்டில் பலருக்கு அரசனைப் பற்றிய ஐயம் இருந்து வந்தது. இளமைப் பிராயம் உடையவனாதலின் நலங்கிள்ளி பகைவருக்கு அஞ்சாமல் பெரும் படையைச் சேர்த்து மக்களுடைய மதிப்பையும் பெறும் நிலையில் இருந்தான். நல்ல வேளையாக அந்த மன்னனுக்கு அமைச்சராகவும் அவைக்களப் புலவராகவும் வாய்த்தார் சாத்தனார் என்ற சான்றோர். அவர் உறையூரில் வாழ்பவர்; தமிழ் இலக்கிய இலக்கணங்களில் நிரம்பிய புலமையுடையவர்; சிறந்த கவிஞர்; சோழ மன்னர்களின் பெருமையை நன்கு அறிந்தவர்; நலங்கிள்ளியின் காலத்துக்கு முன்பே சோழ மன்னனது அவைக்களத்துப் புலவர்களில் சிறந்தவராக இருந்தார். நலங்கிள்ளி தன் தந்தை இறந்தவுடன் இளமையிலே முடியைத் தாங்கவேண்டி வந்தது. சோழர் குலத்துக்குரிய அரியணையில் அவ்வளவு இளம் பருவத்தில் அவன் ஏறுவதனால் அவனுக்கு வழிகாட்டத் தக்க சான்றோர்கள் இருக்க வேண்டுமென்று அவனுடைய அன்னை எண்ணினாள். அவன் தந்தை இருந்த காலத்தில் உறையூர்ச் சாத்தனாரின் புலமையையும் சதுரப் பாட்டையும் நன்கு அறிந்தவள் அவள். ஆதலின் அப்பெரியார் தன்னுடைய மகனுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் துணையாக வாய்த்தால் நலமாக இருக்கும் என்று எண்ணினாள். ஒரு நாள் அப் புலவர் பெருமானை வருவித்துத் தன் கருத்தைத் தெரிவித்தாள்.

ஆண்டில் இளையராக இருக்கும் அரசர்களுக்கு அறிவுரை கூறும் பெரியோர்களை முதுகண் என்று சொல்வது பழைய கால வழக்கம். நலங்கிள்ளியினுடைய அன்னையின் விருப்பப்படியே சாத்தனார் என்னும் புலவர் அவ்வரசனுக்கு முதுகண் ஆனார். அதனால் அவரை யாவரும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்று சிறப்பித்து வழங்கத் தலைப்பட்டனர்.

இளைய வேந்தன் சோழ மண்டலத்தின் அரசுரிமையை ஏற்றான்; அவனுக்குரிய நல்லுரை வழங்கி, செய்யத் தக்கவை இன்னவை செய்யத்தகாதவை இன்னவை என்று அறிவுறுத்த முதுபெரும் புலவராகிய முதுகண்ணன் சாத்தனார் இருக்கிறார் என்ற செய்தி சோழநாட்டு மக்களுக்குத் தெரிந்தபோது, அவர்களுக்கு ஆட்சி இனிது நிகழும் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.

நலங்கிள்ளி தன் குலத்துக்கு ஏற்றபடி ஆண்மையிற் சிறந்தவனாக இருந்தான். மற்றவர்கள் அவனுக்கு முதுகண்ணாக இருந்தால் அவர்கள் அரசியலோடு தொடர்புடைய நுட்பங்களே மாத்திரம் அறிவுறுத்துவார்கள். ஆனால் முதுகண்ணன் சாத்தனார் பெரும் புலவரல்லவா? தமிழ் நூல்களை அவரிடம் நலங்கிள்ளி பயின்றான். பகைவரை வென்று பல நாடுகளை அடிப்படுத்தும் வேந்தனுடைய வீரம் சிறப்புடையதுதான். ஆனாலும் அந்த வீரத்தைப் பலரும் தெரிந்து கொள்ளும்படி புலவர்கள் பாடினால் வேந்தனுடைய புகழ் பரவும். புலவர் பாடும் புகழை உடைய மன்னர்களை வருங்கால மக்களுடைய பாராட்டுக்கு உரியவர்கள் என்ற உண்மையை நலங்கிள்ளி உணர்ந்தான். தமிழ் நயம் தேரும் ஊக்கம் அவனிடம் மிகுதி ஆக ஆகப் புலவர்களிடத்தில் அவனுக்கு மதிப்பு மிகுதி ஆயிற்று. ‘நாம் சோழர் குலத்திலே பிறந்ததனால் பெரிய புகழ் பெற்றோம். மன்னரைக் காட்டிலும் புலவர்களைத்தான் சான்றோர்கள் சிறந்தோராக மதிப்பார்கள். நாமும் புலவர் வரிசையில் ஒருவர் ஆகவேண்டும்’ என்ற விருப்பம் சோழனுக்கு உண்டாயிற்று.

செந்தமிழ்ப் பெரும் புலவராகிய சாத்தனார் அருகில் இருக்கும்போது நலங்கிள்ளியின் விருப்பம் நிறைவேறுவது அருமையான செயலா? அம் மன்னனும் இனிய கவிதை இயற்றும் வன்மை உடையவனானான். தானும் புலமை பெற்றதனால் புலவர்களுடைய தரத்தை உணரும் ஆற்றல் அவனுக்கு அதிகமாயிற்று. அவனிடம் இருந்த புலமைத் திறம் அவனிடம் பொறாமையை உண்டாக்காமல் புலமைக்கு மதிப்பளிக்கும் இயல்பையே வளர்த்தது. அதனால் தண்டமிழ்ப் புலவர் பலர் அவனிடம் வந்து பாடினர்; பாடிப் பரிசில் பெற்றுச் சென்றனர். அவர்கள் வாயிலாக நலங்கிள்ளியின் புகழ் சோழ நாடு முழுவதும் பரவியது. அது மாத்திரமா? புலவர்கள் எந்த நாட்டில் பிறந்தாலும் தமிழ் வழங்கும் இடம் எங்கும் போய்வரும் உரிமை படைத்தவர்கள். ஆதலால், பாண்டி நாடு, சேர நாடு என்ற மண்டலங்களுக்குப் போகும்போது அங்கும் நலங்கிள்ளியின் புகழைப் பரப்பினர். அவன் புலவர் பாடும் புகழுடையவன் ஆனான். அவனிடம் வந்த புலவர்களில் கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார், மதுரைக் குமரனார் என்பவர் பாடிய பாடல்கள் இப்போதும் நமக்குக் கிடைக்கின்றன.