சங்க இலக்கியத் தாவரங்கள்/தோற்றுவாய்

 

சங்க இலக்கியத் தாவரங்கள்

 

தோற்றுவாய்

 

உலகில் இப்போது வாழ்ந்து வரும் தாவரங்கள் ஏறத்தாழ 3,63,730 தாவரப் பேரினங்களில் அடங்கும். இவை பரிணாம முறையில் நுண்மங்கள், பாசிகள், காளான்கள், ஈரற்செடிகள், பெரணைகள், விதை மூடாத தாவரங்கள், பூக்கும் தாவரங்கள் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பூக்கும் தாவரங்களில் மட்டும் 96,680 பேரினங்கள் உலகெங்கணும் வளர்கின்றன. ஒரு பேரினத்தில் பல சிற்றினங்கள் உண்டு. பண்டைய இந்திய நாட்டில் மட்டும் வளரும் சற்று ஏறக்குறைய 47,200 சிற்றினங்களைப் பற்றிய விளக்கங்களை ஜே. டி. ஹூக்கர் (1897) என்பவர் எழுதியுள்ளார். பண்டைய சென்னை மாநிலத்தில் உள்ள ஏறக் குறைய 9300 சிற்றினங்களைப் பற்றிய விளக்கங்களை ஜே. எஸ். காம்பிள் (1915) என்பவர் எழுதியுள்ளார். இம்மாநிலத்தில் வளரும் ஏறக்குறைய 10,640 மரம், செடி, கொடிகளின் தாவரச் சிற்றினப் பெயர்களையும், தமிழ்ப் பெயர்களையும் எ. டபிள்யூ. லஷிங்டன் (1915) என்பவர் பட்டியலிட்டுள்ளார். (இவற்றுள் பல மிகைப்படுத்தப்பட்டுள்ளன). சங்க இலக்கியங்களில் மட்டும் 210 மரம், செடி, கொடிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 எல்லா வகையுங்கொண்ட அனைத்துத் தாவரங்களையும் கண்டு சேமித்து ஆய்ந்து பெயரிட்டுப் பாகுபடுத்தி, இலத்தின் மொழியில் விளக்கவுரை எழுதப்பட்டுள்ளது. அனைத்து நாட்டவர்களும் இவற்றை ஏற்றுக் கொள்ளும்படி சட்டமியற்றியுள்ளனர். இதற்கு அனைத்துலகத் தாவரப் பெயர் முறை விதிகள் (Inter-national Code of Botanical Nomenclature - ICBN) என்று பெயர். அனைத்துலகத் தாவரங்கள் எல்லாம் இலண்டன்–கியூ–நிறுவனத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி எந்த ஒரு தாவரப் பேரினப் பெயரும் ஆங்கிலத் தலைப்பெழுத்தை முதலாகக் கொண்டும். எந்த ஒரு தாவரச் சிற்றினப் பெயரும் ஆங்கிலச் சிற்றெழுத்தை முதலாகக் கொண்டும் எழுதப்பட்டு, அப்பெயர்கள் அடியில் கோடிடப்படுதல் அல்லது சாய்வு எழுத்துக்களால் எழுதப்படுதல் வேண்டும். அத்துடன் இவற்றின் சிற்றினப் பெயரைக் கண்டு சொன்னவரின் பெயர்ச் சுருக்கம் அப்பெயருடன் சேர்க்கப்படுதல் வேண்டும். இம்முறைப்படி எந்த ஒரு தாவரத்திற்கும் பேரினப் பெயரும் சிற்றினப் பெயரும் ஆன தாவர இரட்டைப் பெயர் உண்டு. இப்பெயர்கள் உலகமெல்லாம் ஏற்கப்பட்டு ஒரே மாதிரியாகக் கையாளப்பட்டு வருகின்றன.

மேலும், உலகில் நாள் தோறும் கண்டு பிடிக்கப்படும் எந்த ஒரு தாவரமும் இலத்தீன் மொழியில், முறைப்படி எழுதப்பட்டு இலண்டன்-கியூ நிறுவனத்திற்கனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். அவற்றின் உ ண்மையான தாவரப் பெயர்களை எல்லாம் திரட்டி ஐந்தாண்டுக்கு ஒரு முறை வெளியிட்டு வருகின்றனர். அப்பட்டியல் நூலுக்கு இன்டெக்ஸ் கியூவென்சிஸ் (Index Kewensis) என்று பெயர். இதுவே உலகின் உண்மையான தாவரப் பெயர்ப் பட்டியல் ஆகும்.

சங்கத் தமிழ் இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களுள் 210 மரம், செடி, கொடிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தாவரங்களைப் பற்றி விளக்கம் கூறினோர் இரு சாரார் எனலாம். ஒரு சாரார் இலக்கியப் புலவர்கள். இவர்கள் அவ்விலக்கியங்களில் கூறப்படும் மலர்களையும், மலர்களின் இயல்புகளையும், மலர்கள் உருவாகும் தாவரங்களையும் இலக்கிய நயம் புலப்படும்படியாகச் சங்கப் புலவர்களின் பாக்களுக்கு இலக்கிய உரை விளக்கம் கூறியுள்ளனர். மற்றொரு சாரார் தாவரவியல் அறிஞர்கள். இவர்களில் லஷிங்டன் என்பவர் பண்டைய சென்னை மாநிலத்தில் கண்ட தாவரங்களுக்கெல்லாம் தாவர இரட்டைப் பெயர்களையும், தமக்கு அறிவிக்கப்பட்ட வண்ணம் அவற்றின் தமிழ்ப் பெயர்களையும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அவர் இத்தாவரங்களுக்குரிய தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிப் பெயர்களையும் பட்டியலிட்டுள்ளார். ஜே. எஸ். காம்பிள் என்னும் அறிஞர் இத்தாவரங்களின் தாவரக் குடும்பப் பெயர், பேரினப் பெயர், சிற்றினப் பெயர், ஒரு சிலவற்றிற்குத் தமிழ், தெலுங்கு, மலையாளப் பெயர்களைத் தந்து, அவற்றிற்கெல்லாம் ஆங்கிலத்தில் முறைப்படி விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

ஆகவே, தமிழ் இலக்கிய வல்லுநர்கள் இத்தாவரங்களின் தாவரவியல் விளக்கங்களையோ, தாவரவியல் வல்லுநர்கள் தமிழ் இலக்கிய விளக்கங்களையோ கூறினார் அல்லர். இத்தாவரங்களில் ஒரு சிலவற்றிற்கு இற்றை நாளில் ஒரு சிலர் கூறும் தாவரப் பெயர்களையோ, தமிழ்ப் பெயர்களையோ முற்றிலும் ஏற்குமாறில்லை. என்னையெனில், இவர்கள் இத்தாவரங்களைக் கண்ணாற் கண்டு ஆய்ந்து, அவற்றின் பெயர்களைத் தெளிந்து வலியுறுத்துமாறு காண்கிலமாகலின் என்க. ஒரோவழி கூறப்பட்டுள்ளதும் ஏறலெழுத்துப் போல்வதோர் விழுக்காடாகும்.

பொதுவாக, சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள தாவரங்களின் பெயர்களைக் கொண்டு, அவற்றின் தாவரப் பெயர்களைக் கணித்தல் அரிது. இத்தாவரங்களை இந்நாளில் வெவ்வேறிடங்களில் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றனர். ஒரு சில பண்டைய தாவரங்கள் தமிழ்நாட்டில் அருகியொழிந்தனவா என்ற ஐயமும் எழுகின்றது. ஏனெனில், அனைத்துலக இயற்கை உயிரினப் பாதுகாவலர் சங்கத்தின் மதிப்பீட்டின்படி ஏறக்குறைய 20,000 தாவரச் சிற்றினங்கள் இம்மண்ணுலகத்திலிருந்து மறைந்து வருகின்றன என்பர்.[1]

மேலும், பண்டைக் காலத்துப் புலவர்கள் கூறிய தாவரப் பெயர்களைப் பிற்காலத்துப் புலவர்கள் உலக வழக்கியல்பு கொண்டு மாற்றியுள்ளனர். இன்னும் சங்கப் பாடல்களுக்கு உரை எழுதியவர்களும் இத்தாவரப் பெயர்களை விளக்குமிடத்து முரண்படுகின்றனர். அன்றியும், சங்க காலந்தொட்டே ஒரே தாவரத்திற்கு வெவ்வேறு பெயர்களும் வழங்கி வந்துள்ளன. அப்பெயர்களும் இந்நாளில் வழக்கொழிந்து போயின. இதுகாறும் இத்தாவரங்களுக்கு விளக்கம் எழுத முற்பட்டோர் எல்லோரும் செவி வழிச் செய்தி கொண்டும், பிறரைக் கேட்டும், தமக்கு முன்பு யாரேனும் எழுதியுள்ள குறிப்புகளைக் கொண்டும் பெயரிட்டு விட்டனர். எவருமே இத்தாவரங்களைக் கைக்கொண்டு, ஆய்ந்து தேர்ந்து, அவற்றின் உண்மைப் பெயர்களைக் காணவில்லை என்பது தேற்றம். அதனால் ஒரு சங்க இலக்கியத் தாவரத்திற்கு, இந்நாளைய தாவரவியல் கோட்பாடுகளுக்கேற்ப, அதனுடைய உண்மையான தாவரப் பெயரைக் காண்பது அத்துணை எளியதாக இல்லை. ஆகவே, சங்கத் தமிழ்ச் சான்றோர் கூறும் மரம், செடி, கொடிகளைப் பற்றி அன்னோர் தரும் சிற்சில குறிப்புகளைக் கொண்டு, தாவரவியல் அடிப்படையில் இந்த ஆய்வு விளக்கம் எழுதுவது இன்றியமையாது வேண்டப்பட்டது.

 

  1. Plant Research and Development (1975) : Vol : 1 : p-103.