சங்க இலக்கியத் தாவரங்கள்/நூல்–பாங்கர் முதல் வடவனம் வரை


 

பாங்கர்—ஓமை
டில்லினியா இன்டிகா
(Dillenia indica, Linn.)

குறிஞ்சிப் பாட்டில் (85) இடம் பெற்றுள்ள ‘பாங்கர்’ என்பதற்கு ‘ஓமை’ என்று உரை கூறிய நச்சினார்க்கினியர், கலித்தொகையில் வரும் பாங்கர் (111) என்பதற்குப் ‘பாங்கர்க்கொடி’ என்று உரை வகுத்தார். பாங்கர் என்ற பாலை நிலத்து மரத்திற்கு ‘ஓமை’ என்றும், பாங்கர் என்ற பெயரில் ஒரு கொடியும் (முல்லைக் கொடியுடன் இணைத்துப் பேசப்படுதலின்) உண்டு போலும் என்றும் எண்ண இடமுள்ளது.

சங்க இலக்கியப் பெயர் : பாங்கர், ஓமை
தாவரப் பெயர் : டில்லினியா இன்டிகா
(Dillenia indica, Linn.)

பாங்கர்-ஓமை இலக்கியம்

“பாங்கர் மராஅம் பல்பூந் தணக்கம்”–குறிஞ். 85

என்று கபிலர் குறிப்பிடும் ‘பாங்கர்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘ஓமை’ என்று பொருள் கூறியுள்ளார். இதற்கு ‘உவா’ என்று பெயர் எனக் காம்பிள் (Gamble) குறிப்பிடுகின்றார். கலைக்களஞ்சியம் இதனை ‘உகா’ என்று கூறுகிறது.

ஓமை மரத்தைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. உவர்நிலப்பாங்கான வறண்ட பாலை நிலச்சுரத்திலே ஓமை மரங்கள் காடாக வளரும் எனவும், இதன் அடி மரத்தைப் ‘புன்தாள்’, ‘பொரிதாள்’, ‘முடத்தாள்’ எனவும் குறிப்பிடுகின்றன. இம்மரம் புல்லிய இலைகளை உடையதென்றும், இது மிக ஓங்கி வளரும் என்றும், கவடுகளை உடையதென்றும், இதில் பருந்துகள் ஏறியமர்ந்து கூவும் என்றும், இதில் ‘சிள் வீடு’ என்ற வண்டொன்று தங்கி வெப்பம் மிக்க நடுப்பகலில் கறங்கும் என்றும், உடன்போக்கில் பாலை வழிப்போவாரும் பிறரும் இம்மரத்தின் நிழலில் தங்கி இளைப்பாறுவர் என்றும். இதன் பட்டையை உரித்து யானை உண்ணும் என்றும் கூறப்படுகின்றன.

“உவர் எழுகளரி ஓமை அம்காட்டு
 வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ்சுரம்”
—நற். 84:8-9

“உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை
 ஊர்பாழ்த்தன்ன ஓமை அம்பெருங்காடு”
—குறுந். 124:1-2

“புன்தாள் ஓமைய சுரன் இறந்தோரே”—குறுந். 260: 7-8

“கானயானை தோல் நயந்து உண்ட
 பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
 அலங்கல் உலவை ஏறி”
—குறுந். 79: 2-4

“.... .... .... .... .... .... .... .... .... .... .... ஐயநாம்
 பணைத்தாள் ஓமைப்படு சினை பயந்த
 பொருந்தாப் புகர் நிழல் இருந்தனமாக”
—நற். 318: 1-3

“உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை
 அலறுதலை ஓமை அம்கவட்டு ஏறி
 புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து”
—குறுந். 321: 1-3

“சேயின் வரூஉம் மதவலி யாஉயர்ந்து
 ஓமை நீடிய கானிடை அத்தம்”
—நற். 198: 1-2

“அத்தஓமை அம்கவட்டு இருந்த
 இனம் தீர்பருந்தின் புலம்புகொள் தெள்விளி
 சுரம் செல்மாக்கட்கு உயவுத்துணை ஆகும்”
—குறுந். 207: 2-3

“.... .... .... .... .... .... .... .... .... முளி சினை
 ஓமைக்குத்திய உயர்கோட்டு ஒருத்தல்”
—குறுந். 396: 3-4

“பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை
 அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்”
—நற். 137: 5-8

“புல்இலை ஓமைய புலிவழங்கு அத்தம்”—நற். 107: 6

“பொருத யானை புல்தாள் ஏய்ப்ப
 பசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை”
—நற். 279: 6-7

“உலவை ஓமை ஓங்குநிலை ஒடுங்கி
 சிள் வீடு கறங்கும் சேய்நாட்டு அத்தம்”
—நற். 252: 1-2

இனிப் ‘பாங்கர்’ என்ற பெயரில் ஒரு கொடியும் இருந்தது போலும்.


“.... .... .... .... .... .... .... பாங்கரும்
 முல்லையும் தாய பாட்டங்கால்”
—கலி. 111

(பாட்டங்கால்-தோட்டம்)

என்ற இக்கலித்தொகையடியில் வரும் ‘பாங்கர்’ என்பதற்குப் ‘பாங்கர்க் கொடி’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர்.

“குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்
 கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்”
—கலி. 103: 3-4

என்ற இக்கலிப்பாட்டில் கூறப்படும் பாங்கர் என்பதற்கு ‘ஓமை மரம்’ என்று பொருள் கோடலும் கூடும். இதன் மலரைக் குல்லை, குருந்து, கோடல் முதலிய மலைப்புற மலர்களுடன் சேர்த்துக்துக் கட்டி, கண்ணியாக அணிந்து கொள்வர் என்று கூறப்படுகின்றமை காண்க.

பாங்கர்–ஓமை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்–அகவிதழ் தனித்தவை.
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே (Thalamiflorae)
ரானேலீஸ் (Ranales)
தாவரக் குடும்பம் : டில்லினியேசி (Dilleniaceae)
தாவரப் பேரினப் பெயர் : டில்லினியா (Dillenia)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
சங்க இலக்கியப் பெயர் : பாங்கர்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : ஓமை
தாவர இயல்பு : மிக அழகிய, எப்பொழுதும் தழைத்து உள்ள உயரமான பெருமரம். ஈரமான ஆற்றங்கரைகளிலும், மலைப்பகுதிகளிலும் வளர்கிறது.
இலை : ஓர் அடி நீளமான பெரிய இலை.
மஞ்சரி : இலைகளுடன் கிளை நுனியில் தனியாக மலர் உண்டாகும்.
மலர் : 6 அங்குல அகலமான மிகப் பெரிய வெண்ணிற மலர்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் விரிந்து இருக்கும்.
அல்லி வட்டம் : 5 அகன்ற அகவிதழ்கள் பிரிந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : அடியில் தாதிழைகள் இணைந்தும், உட்புறத்துத் தாதிழைகள் வளைந்தும், அகவிதழ் மடல்களுக்கு உள்ளேயும் வெளிப்புறத் தாதிழைகள் வெளியே வளைந்து மடல்களுக்கு மேலேயும் வளரும்.
தாதுப் பை : தாதுப் பைகள் நீளமானவை. நுண் துளைகள் மூலமாகத் தாது வெளிப்படும்.
சூலக வட்டம் : 5–20 சூலக அறைகள் சூலகத் தண்டில் ஒட்டியுள்ளன. பல சூல்கள்.
கனி : உருண்டையானது. சதைப் பற்றான புல்லிகள் ஒட்டிக் கொண்டிருக்கும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 54 என ஹாபாக்கோ ஹியோநியோவா கணக்கிட்டுள்ளார்.

இம்மரத்தைக் கோயில் தோட்டங்களில் வளர்க்கிறார்கள் என்பார் காம்பிள்.
 

சண்பகம்
மைக்கீலியா சம்பகா
(Michelia champaca, Linn.)

சண்பகத்தைக் கபிலர் ‘பெருந்தண் சண்பகம்’ (குறிஞ். 75) எனக் குறிப்பிடுவர். இங்ஙனமே நக்கீரரும் (திருமு. 26-27) நல்லந்துவனாரும் (கலி. 150:20-21) இதனைப் ‘பெருந்தண் சண்பகம்’ என்றே கூறுகின்றனர். சண்பக மலர் மஞ்சள் நிறமான நறுமணம் உள்ளது. பெரிய மரத்தில் பூப்பது. சண்பக மரம் இந்நாளில் திருக்குற்றாலத்தில் நன்கு வளர்கிறது. இதனைச் சண்பகம் என்றுதான் அழைக்கின்றனர். சங்கப் பாடல்களில் ‘சண்பகம்’ என்ற தனிப்பெயர் காணப்படவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : பெருந்தண்சண்பகம்
உலக வழக்குப் பெயர் : சண்பகம், செண்பகம், செம்பகம்
தாவரப் பெயர் : மைக்கீலியா சம்பகா
(Michelia champaca, Linn.)

சண்பகம் இலக்கியம்

பத்துப் பாட்டில் நக்கீரரும், கபிலரும், பரிபாடலில் நல்லந்துவனாரும். ‘பெருந்தண்சண்பகம்’ என்று கூறுவது, ‘சண்பகப்பூ’வைக் குறிக்கும்.

“துவர முடித்த துகள் அரும்முச்சி
 பெருந்தண் சண்பகம் செரீஇ”
-திருமுரு. 26-27

“செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்”-குறிஞ் 75

“அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
 பெருந்தண் சண்பகம் போல”
-கலி. 150:20- 21

சண்பக மரம் தமிழ் நாட்டில் சில இடங்களில் வளர்கிறது. திருக்குற்றாலத்தில் இளவேனிற் காலத்தில் பூக்கின்றது. இதனைப் பாலைக்குரிய மலர் என்பர் . இதன் மலர் மஞ்சள் நிறமானது. நறுமணம் உள்ளது. சிவபெருமானுக்குரியது. பூசைக்குரிய எண் வகை மலர்களில் ஒன்று. சிவபெருமான் நிறத்தைக் குறிக்கும் பொருள்பட மலர்ந்த, ‘பெருந்தண் சண்பகம்’ என்றார் நல்லந்துவனார். சூரர் மகளிர், வேண்டுவனவற்றைக் கூட்டி முற்ற முடித்த குற்றமற்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகினார் என்பர் நக்கீரர். ஒரு சில மலரழகைப் புலப்படுத்தும் திருத்தக்க தேவர், இப்பூவின் வடிவமைப்பையும் நிறத்தையும் சேர்த்து, ஓர் உவமையால் விளக்குகின்றார்:

“ஓடுதேர்க்கால் மலர்ந்தன்ன வகுளம், உயர்சண்பகம்
 கூடுகோழிக் கொடுமுள்ளரும்பின்”[1]

சண்பக மலர் அலர்ந்த போழ்து போர்ச் சேவலின் காலில் உள்ள (முள்ளை) நகங்களைப் போன்றிருக்கும் என்று வடிவத்தையும் மஞ்சள் பாவிய செம்மை நிறத்தையும் அப்படியே குறிப்பிடுகின்றார். வண்டுறை மலர்களின் பட்டியலில், இப்பூவும் இடம் பெற்றுள்ளது. ‘வண்டறைஇய சண்பகம்’ என்பார் பரிபாடலாசிரியர் (பரி. 11:18).

கவி மரபில், இதனை மகளிர் நிழல் பட்டால் மலரும் என்பர். எனினும், கட்டியங்காரன் இறந்ததும் அவனது உரிமை மகளிர் நோன்பு மேற்கொண்டதைக் கூறும் திருத்தக்கத் தேவர், இவர்களைச் சண்பகப் பூவின் வாடலுக்கு உவமித்துள்ளார்.

“தாதார்க் குவளைத் தடங்கண் முத்துருட்டி விம்மி
 மாதார் மயில் அன்னவர் சண்பகச் சாம்பலொத்தார்”[2]

தாவரவியலில் சண்பகம் மக்னோலியேசி (Magnoliaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இக்குடும்பத்தில் 18 பேரினங்களும் ஏறக்குறைய 300 இனங்களும் உள்ளன. இவை பெரிதும் ஆசியாவின் வெப்ப நாடுகளிலும் அமெரிக்காவிலும் காணப்படுகின்றன. இவற்றுள், இந்தியாவில் 8 பேரினங்கள் வளர்கின்றன என்பர் ‘ஹுக்கர்’ . தாவரவியலில் சண்பக மரத்தை ‘மைக்கீலியா’ என்றழைப்பர். இப்பேரினத்தில் 8 சிற்றினங்கள் இந்தியாவில் உள்ளன. நீலகிரியில் வாழும் ‘மைக்கீலியா நீலகிரிகா (Michelia nilagirica) என்ற சிறுமரம், ‘சண்பகம்’ என்றே அழைக்கப்படுகிறது. இதன் மலர் வெண்மையானது. அகவிதழ்களில் உட்புறம் மஞ்சள் நிறமாக இருக்கும்; சிறந்த மணமுள்ளது. இவ்விரண்டு மலர்களுமே மாலையாகக் கட்டிச் சூடிக் கொள்ளப்படும்.

 

சண்பகம்
(Michelia champaca)

சண்பகம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே (Thalamiflorae)
தாவரக் குடும்பம் : மக்னோலியேசி (Magnoliaceae)
தாவரப் பேரினப் பெயர் : மைக்கீலியா (Michelia)
தாவரச் சிற்றினப் பெயர் : சம்பகா (champaca, Linn)
தாவர இயல்பு : மரம்; கிளைத்துப் பரவி ஓங்கி வளரும்.
தாவர வளரியல்பு : மீசோபைட் என்றும் பசிய பெரிய இலைகளையுடையது.
இலை : இலையடிச் செதில்கள் இலையைத் துளிரிலேயே மூடியிருக்கும்; இலை 10-12 செ. மீ. நீளமானது. மேற் புறத்தில் அகன்றது.
மஞ்சரி : தனி மலர், இலைக் கோணத்தில் நுனியில் மலருண்டாகும்.
புல்லி வட்டம் : இது அல்லிவட்டத்தைப் போன்றதே. 3 புறவிதழ்கள்.
அல்லி வட்டம் : இது 6 அகவிதழ்கள்; மஞ்சள் நிறமானவை. இரு அடுக்காக இருக்கும். இதழ்கள் பிரிந்த மலர்.
மகரந்த வட்டம் : பல தட்டையான தாள்களை உடையது. தாதுப் பை ஒட்டியிருக்கும்: உட்புறமாகத் தாது உகுக்கும்.
சூலக வட்டம் : சூலக அறைகள் நீண்ட நடுத்தண்டில் நேரடியாக ஒட்டியிருக்கும். சூல்முடி உள்வளைந்திருக்கும். தொங்கும் 2 சூல்கள் ஒவ்வொரு அறையிலும் காணப்படும்.
கனி : நீண்ட மேல்புறம் வெடிக்கும் ‘காப்சூல்’ போன்றது.
விதை : நுண் இழையினால் சூலக அறையின் மேலிருந்து தொங்கும் விதையுறை, சதைப்பற்றுடையது. எண்ணெய் போன்ற ‘ஆல்புமின்’ கொண்டது.

இம்மரம் மைசூர் முதல் திருவாங்கூர் வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலைப் பாங்கில் வளர்கிறது. இதன் மணமுள்ள மலருக்காகத் தோட்டங்களில் இது வளர்க்கப்படுகிறது.

மைக்கீலியா நீலகிரிகா (Michelia nilagirica) என்ற ஒரு சிறு மரம் நீலகிரியிலும்,பிற மலைப் பகுதிகளிலும் வளர்கிறது.

மைக்கீலியா சம்பகாவின், குரோமோசோம் எண்ணிக்கை 2n- 38 எனச் சானகி அம்மாள் (1952-சி) கூறியுள்ளார்.

 

பெருந்தண் சண்பகம்
மக்னோலியா கிராண்டிபுளோரா
(Magnolia grandiflora, Linn.)

பத்துப்பாட்டில் நக்கீரரும் கபிலரும், பரிபாடவில் நல்லந்துவனாரும் ‘பெருந்தண்சண்பகம்’ என்ற மலரைக் குறிப்பிடுகின்றனர். குறிஞ்சிப்பாட்டில் (75) கபிலர் ‘பெருந்தண்சண்பகம்’ என்று கூறுவதல்லால், சண்பக மலரைத் தனித்துரைக்கவில்லை.

மிகத் தண்ணிய உதகமண்டலத்திலும், கொடைக்கானலிலும், ஆறாயிரம் அடி உயரத்திற்கு மேல், ‘சண்பகம்’ என்று வளர்க்கப்படும் சிறுமரம் ஒன்றுண்டு. இதில் நறுமணமுள்ள மிகப் பெரிய மலர் பூக்கின்றது. இதனையே பெருந்தண்சண்பகம் என்று கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. ஆனால், இச்சிறுமரம் இவ்விடங்களில் வளர்க்கப்படுகின்றது. இது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது புலனாகவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : பெருந்தண்சண்பகம்
உலக வழக்குப் பெயர் : சண்பகம்
தாவரப் பெயர் : மக்னோலியா கிராண்டிபுளோரா
(Magnolia grandiflora, Linn.)

பெருந்தண் சண்பகம் இலக்கியம்

மக்னோலியேசி என்னும் இத்தாவரக் குடும்பத்தில் மக்னோலியா (Magnolia) என்ற ஒரு பேரினமுண்டு. இதில் 4-5 சிற்றினங்கள் இந்தியாவில் வளர்கின்றன. ‘மக்னோலியா’ கிராண்டிபுளோரா (Magnolia grandiflora) என்ற சிறுமரம் குளிர்ச்சி மிக்க நீலகிரியிலும், கொடைக்கானல் மலைகளிலும் வளர்கின்றது. இம்மரம் 10-12 மீட்டர் உயரமானது. அடர்ந்து கிளைத்து வளர்வது. மிகப் பெரிய பசிய தனியிலைகளை (10"-14" x 5"-6") எப்பொழுதும் தாங்கி நிற்பது. வடஅமெரிக்காவில் தென் பகுதியில் நன்கு வளர்வது என்பர் காம்பிள். இதன் தனி மலர் மிகப்பெரியது. ஏறக்குறைய (4" - 5") அதாவது 10-12 செ. மீ. நீளமானது. 8-10 செ. மீ. அகலமானது. வெண்ணிறமும் நறுமணமும் உடையது. இதில் இளஞ்சிவப்பு நிறமான மலருடைய சிறுமரமும் உதகையில் வளர்க்கப்படுகின்றது. புறவிதழ்கள் மூன்றும், பசிய வெண்மையான அகன்ற மடல்களாக விரியும். அகவிதழ்கள் 2-4 அடுக்காகவும், ஒவ்வொரு அடுக்கிலும் 6 முதல் 12 அகவிதழ்களும் உள்ளன. பல தட்டையான மலட்டு மகரந்தத் தாள்கள் இதழொட்டி இருக்கும். இதன் ஒருபுற வெடிகனி, ஓரிரு விதைகளை உடையது.

இதனையும் சண்பகமென்றே அழைக்கின்றனர். இது ஓர் அழகிய சிறு மரம். மிகத் தண்ணியவிடங்களில் மட்டும் வளர்க்கப்படுகின்றது. மலர் மிகப் பெரியது. சிறந்த நறுமணம் உடையது. பல நாள்களுக்கு இதன் மணம் வெகு தொலைவிலும் நுகரப்படும். இவ்வியல்புகளை உற்று நோக்கினால் இதனையே ‘பெருந்தண் சண்பகம்’ என்று கூறலாம் போலத் தோன்றுகிறது. நக்கீரர். கபிலர். நல்லந்துவனார் ஆகிய மூன்று புலவர் பெருமக்களும் சண்பக மலரைத்தான், ‘பெருந்தண் சண்பகம்’ என்று கூறியுள்ளனரா என்பது சிந்திக்கற்பாற்று. ஆனால், செந்தமிழ் நாட்டில் இவ்விருமலர் மரங்களும் வளர்கின்றன. கபிலர், குறிஞ்சிப் பாட்டில் ‘பெருந்தண் சண்பகம்’ என்றார். இவர் சண்பகத்தை தனித்துரைத்தார் அல்லர். சண்பக மலர் மஞ்சள் நிறமானது. பெருந்தண் சண்பகம் வெண்மை நிறமானது. சண்பகத்தில் 6-9 இதழ்களே உள்ளன. பெருந்தண் சண்பகத்தில் 2 முதல் 4 அடுக்கும் ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு இதழ்களும் காணப்படுகின்றன. மலரும் மிகப் பெரியது. மிகத் தண்ணியவிடங்களில் மட்டும் வளர்கிறது.

இது மக்னோலியேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சண்பகம் என்றே வழங்கப்படுகிறது.


பெருங்தண் சண்பகம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே
தாவரக் குடும்பம் : மக்னோலியேசி (Magnoliaceae)
தாவரப் பேரினப் பெயர் : மக்னோலியா (Magnolia)
தாவரச் சிற்றினப் பெயர் : கிராண்டிபுளோரா (grandiflora)
தாவர இயல்பு : சிறுமரம், 10-12 மீட்டர் உயரமான கிளைத்த மரம்.
தாவர வளரியல்பு : 6000 அடி உயரத்துக்கு மேல் குளிர்ந்த மலைப் பாங்கில் வளர்கிறது. மீசோபைட். எப்பொழுதும் பசுமையாகக் காணப்படும் மர வகை.
இலை : நீண்டு அகன்ற பசுமையான தடித்த தனி இலை. 10-12 செ.மீ. X 8-10 செ. மீ.
மஞ்சரி : தனி மலர், இலைக் கோணத்தில் நுனியில் பூக்கும்.
மலர் : மிகப்பெரியது. 10-12 செ. மீ x 8-10 செ. மீ. அழகானது. நறுமணமுள்ளது. பல நாள்களுக்கு மணமிருக்கும். விரைந்து வாடாதது.

மக்னோலியா குளோபோசா (Magnolia globosa) என்ற இன்னொரு இவ்வின மலர் இமயமலைச் சாரவில் சிக்கிம் நாட்டில் 9000-10000 அடி உயரத்தில் வாழுமென்றும், இதன் மலரும் 10-12 செ.மீ. அகலமுள்ளதென்றும், ஹூக்கர் கூறுவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n-114 என, சானகி அம்மாளும் (1952 சி), 2n = 112-114 என மொரிநாகா (1929) முதலியோரும் கூறுவர். மக்னோலியா குளோபோசாவிற்குக் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 38 என, சானகி அம்பாள் (1952 சி) கூறுவர்.

 

ஆம்பல்
நிம்பேயா பூபெசென்ஸ்
(Nymphaea pubescens, willd.)

ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்” என்பது கபிலர் வாக்கு (குறிஞ். 62). இவ்வடியில் பயிலப்படும் ‘ஆம்பல்’ என்பதற்கு ‘ஆம்பற்பூ’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். ‘ஆம்பல்’ என்பது ‘அல்லி’, ‘குமுதம்’ என வழங்கும். ஆம்பல் வகையில் தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீல நிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக்காம்பலும் (செவ்வல்லி) உள்ளன. பொதுவாக ஆம்பல் என்புழி, சங்க இலக்கியங்கள் வெள்ளாம்பலைக் குறிக்கின்றன. இதனை முதன் முதலில் நிம்பேயா ஆல்பா என்று பெயரிட்டார் லின்னேயஸ். இப்போது இதற்கு நிம்பேயா பூபெசென்ஸ் என்று பெயர். நீல ஆம்பலும் அரக்காம்பலும் (செவ்வல்லி) வெள்ளாம்பலைப் பெரிதும் ஒத்தவை. ஈண்டு வெள்ளாம்பலைப் பற்றிப் புலவர்கள் கூறியனவற்றைச் சிறிது காண்போம்.

சங்க இலக்கியப் பெயர் : ஆம்பல்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : அல்லி
உலக வழக்குப் பெயர் : அல்லி, குமுதம்
தாவரப் பெயர் : நிம்பேயா பூபெசென்ஸ்
(Nymphaea pubescens,Willd.)

ஆம்பல் இலக்கியம்

ஆம்பல் என்பது அல்லி, குமுதம் என வழங்கப்படுகின்ற நீரில் வாழும் தாவரமாகும். நெய்தல் எனப்படும் கருங்குவளையும், கழுநீர் எனப்படும் செங்குவளையும் ஆம்பல் இனத்தைச் சார்ந்தவை. ஆம்பல் இனத்தில் செவ்விய அரக்காம்பலும், மஞ்சள் நிறமுள்ள ஆம்பல் மலரும் உண்டு. எனினும், ஆம்பல் என்பதை வெள்ளாம்பல் என்றே இலக்கியங்கள் கூறுகின்றன.

 

அல்லி
(Nymphaea pubescens)

ஆம்பல், குவளை முதலான நீர்க்கொடிகள், ‘நிம்பேயா’ (Nymphaea) என்ற தாவரப் பேரினத்தில் அடங்கும். இதில் 32 சிற்றினங்கள் வெப்பநாடுகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இப்பேரினத்தைச் சார்ந்த இரண்டு சிற்றினங்களை மட்டும் காம்பிள் என்பவர் குறிப்பிடுகின்றார். அவற்றுள் ஒன்று குவளை; மற்றொன்று ஆம்பல். இப்பேரினத்தின் பெயர், அடிப்படையிலேயே நிம்பயேசீ (Nymphaeaceae) என்ற தாவரக் குடும்பப் பெயராக அமைந்துள்ளது. இக்குடும்பத்தைச் சேர்ந்த நிலம்பியம் (Nelumbium) என்ற தாமரையும் நமது நாட்டில் இயல்பாக வளர்கின்றது.

இத்தாவரக் குடும்பம் மூன்று சிறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்குடும்பத்தில் 8 பேரினங்களும் 100 சிற்றினங்களும் உள்ளன. ‘கேபம்பாய்டியே’ என்னும் இதன் சிறு குடும்பம், பெரிதும் அமெரிக்க நாட்டின் வெப்பமான பகுதிகளில் காணப்படுகின்றது. ‘நிலம்போனாய்டியே’ (Nelumbonoideae) என்ற மற்றொரு சிறு குடும்பத்தின் சிற்றினங்கள். வட அமெரிக்கப் பகுதிகளில் வளர்கின்றன. இவற்றுள் ‘நிலம்போ லூட்டியா’ (Nelumbo lutea) என்ற மஞ்சள் நிற மலர்ச் செடி நமது தாமரையை ஒத்தது. இதனை மஞ்சள் தாமரை என்று சொல்லலாம். தாமரைக் கொடி நிலம்பியம் ஸ்பீசியோசம் (Nelumbo speciosum) எனப்படும். இதனை முன்னர், நிலம்போ நூசிபெரா (Nelumbo nucifera) எனவும், நிம்பேயா நிலம்போ (Nymphaea nelumbo) எனவும் வழங்கினர். இதன் விரிவைத் ‘தாமரை’ என்ற தலைப்பில் காணலாம்.

நிம்பயாய்டியே என்னும் துணைக் குடும்பத்தை நிம்பயே (Nymphaeae) என்னும் துணைப்பிரிவாக (Sub-Order) ஹுக்கர் கூறுவார். இதில் 5 பேரினங்கள் உள்ளன. விக்டோரியா என்ற பேரினம், அமெரிக்காவில் அமேசான் மாவட்டத்தில் காணப்படுகிறது. விக்டோரியா ரீஜியா (Victoria regia) என்ற பெருந்தாமரைக் கொடி மிகவும் புகழ் வாய்ந்தது. இதன் வட்ட வடிவான இலைகள் ஆறு முதல் ஏழு அடி வரை அகலமானவை. இதன் மலர் ஓரடிக்கு மேற்பட்ட அகலமுடையது. இச்செடியை பம்பாயில் அழகுச் செடியாக வளர்த்து வருகின்றனர். தாவர உலகில் மிகப் பெரிய இலையை உடையது இச்செடிதான்.

நிம்பேயா என்னும் மற்றொரு பேரினத்தைச் சார்ந்தவைதான் ஆம்பல், குவளை முதலியன. ‘நிலம்பியம்’ (Nelumbium) என்பது இன்னொரு பேரினம். நமது நாட்டில் புகழ் பெற்ற ‘திருவளர் தாமரை’ இப்பேரினத்தைச் சார்ந்தது. அதனால், தாமரைக்கு நிலம்பியம் ஸ்பீசியோசம் (Nelumbium Speciosum) என்று பெயர். நிம்பேயா, நிலம்பியம் என்னும் இவ்விரு பேரினங்களைச் சார்ந்த மலர்கள் நம் தமிழ்நாட்டில் வளர்வதால் காம்பிள் (Gamble) என்பவர் தமது நூலில், இத் தாவரக் குடும்பத்தில் பன்னிரு பேரினங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் நிம்பேயா என்ற பேரினத்தில் நிம்பேயா பூபெசென்ஸ் (Nymphaea pubescens) எனப்படும் ஆம்பல் விவரிக்கப்பட்டுள்ளது.

“ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்”
என்பர் கபிலர்

-குறிஞ். 62
ஆம்பல் என்னுஞ்சொல் ஆம்பல் மலரையன்றி, ஆம்பற்பண்ணையும் ஆம்பற் குழலையும், பேரெண்ணையும் குறிக்கும்.

“ஆம்பலந் தீங்குழல் தெள்விளி பயிற்ற”-குறிஞ். 222
“ஆம்பற் குழலால் பயிர்பயிர்”-கலி. 108:62

என வரும் அடிகட்கு ‘ஆம்பல் என்னும் பண்ணையுடைய குழலாலே’ என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை கூறினார்.

“பையுள் செய்யாம்பலும்”[3]

என்பதற்கு, ஆம்பற் பண்ணையுடைய குழல் என்றும்

“உயிர் மேல் ஆம்பல் உலாய்”[4]

என்னுமிடத்து, ‘ஆம்பல் என்னும் பண் சுற்றிலேயுலாவி’ என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை கூறினார்.

“ஆம்பலந் தீங்குழல் கேளாமோ”

என்றவிடத்து அரும் பதவுரையாசிரியர் ‘ஆம்பல் முதலானவை சில கருவி:ஆம்பல் பண்ணுமாம்: மொழியாம்பல், வாயாம்பல், முத்தாம்பல் என்று சொல்லுவர் பண்ணுக்கு’ என்றார்: அடியார்க்கு நல்லார், ‘ஆம்பற்பண் என்பாரை மறுத்து வெண் கலத்தால் குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்த குழல்’ என்று கூறா நிற்பர்.

“ஆம்பலங் குழலின் ஏங்கி”-நற். 113

என்பதற்குப் பின்னத்துரார். அடியார்க்கு நல்லாரைப் பின்பற்றி வெண்கலததால் ஆம்பற் பூ வடிவாக அணைசு பண்ணி நுனியில் வைக்கப்பட்ட ‘புல்லாங்குழல்’ என உரை கண்டார். ஆகவே, ஆம்பல் என்பது ஒரு பண்ணென்பதும், ஒரு வகைக் குழல் என்பதும் பெற்றாம்.

இக்குழலில் இசைக்கப்படுவது ஆம்பற்பண் என்பதையும். இக்குழல் இசையைக் கோவலர் பலகாலும் மாலையில் எழுப்புவர் என்பதையும் காணலாம்.

“.... .... .... பல்வயின் கோவலர்[5]
ஆம்பலந் தீங்குழல் தெள்விளிபயிற்ற”
–குறிஞ். 221-222

என்ற இக்கபிலரின் கூற்றுக்கு, ‘இடையர் பல இடங்களிலும் நின்று ஆம்பல் என்னும் பண்ணினையுடைய அழகிய இனிய குழலிடத்து தெளிந்த ஓசையைப் பலகாலும் எழுப்ப’ என்று நச்சினார்க்கினியார் விளக்குவர். இவ்விசை வண்டின் ஒலி போன்றது; இனிமை உடையது; இரங்கி ஒலிப்பது; போரில் புண்பட்டுப் படுக்கையில் துன்புறும் வீரற்கு அமைதியைத் தருவது என்பர் இளங்கீரனார;

“இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்
ஆம்பல் குழலின் ஏங்கி”
–நற். 113: 10-11

மேலும் இங்ஙனம் போரில் புண்பட்டுக் கிடந்தவனை ஓம்பும் சுற்றம் இல்லாவிடத்துப் பேய் சுவைக்கச் சுற்றும் என்ற நம்பிக்கையைப் ‘பேய் ஓம்பிய பேய்ப்பக்கம்’ என்பார் ஆசிரியர் தொல்காப்பியர் (புறத்திணை: 19:6). அப்புண்ணோனைப் பேயினின்றும் காக்க அவனுடைய மனைவி கிட்டுதலைக் கூறுவதைத் தொடாக் காஞ்சி என்பர். இதனை விளக்கும் ஒரு புறப்பாடலை இளம்பூரணர் இந்நூற்பாவிற்கு மேற்கோளாகக் காட்டுவார். இப்பாடலைப் பேய்க் காஞ்சி என்னும் துறையில் அரிசில்கிழார் பாடுவர்.

கணவன் புண்பட்டு வீழ்ந்து கிடக்கிறான். அவனைப் பேய் அணுகாமல் காப்பதற்குப் புறப்படும் அவனது மனையாள், தோழியைக் கூப்பிடுகிறாள். ‘வம்மோ காதலந் தோழி!’ ஐயவி தெளித்து (வெண்கடுகு), ஆம்பல் குழலை ஊதி, இசைக்கும் மணியை ஆட்டி, காஞ்சிப்பண்ணைப் பாடி, நறும்புகை எடுத்து, யாழொடு பலப்பல இசைக்கருவிகள் ஒலிக்க எமது கழற்கால் நெடுந்தகையின் விழுப்புண் காக்கம்!’ என்பாளாயினள்.

(புறநா: 281)

கூத்து இலக்கணத்தில் பதினொரு வகை அகக்கூத்து உண்டு. அவற்றுள் ‘அல்லிக்கூத்து’ என்பதும் ஒன்று. அல்லிப் பெயர், நாடகத் தமிழிலும் காணப்படும். மேலும், ஆம்பல் என்னுஞ் சொல்லே பேரெண்ணையும் குறிக்கும். எட்டு விந்தங் கொண்டது ஓர் ஆம்பல்; அதாவது 1028672 ஆண்டுகள். இதன் விரிவை நெய்தல் மலர் பற்றிய தலைப்பில் காணலாம். ஆம்பல் என்பதைப் பிற்காலத்தில் குமுதம் என்றும் அழைத்தனர். அதனால், குமுதம் பேரெண்ணையும் குறிக்கும் சொல்லாயிற்று.

ஆம்பற் கொடி கடற்பரப்பிற்கு மூவாயிரம் அடி உயரத்திற்குள்ளான நன்னீர் நிரம்பிய குளங்குட்டைகளில் வளரும். இதன் கிழங்கிலிருந்து தோன்றும் இதன் இலை, நீர்ப்பரப்பிற்கு மேல் வந்து மிதக்கும். முட்டை அல்லது வட்ட வடிவினதாகிய இவ்விலையின் அடியில் நீண்ட பிளவு ஒன்றுண்டு. இப்பிளவு இலை விளிம்பிலிருந்து இலைக்காம்பு வரை நீண்டிருக்கும். இலையின் நடுவில் இதன் இலைக்காம்பு இணைந்திருக்கும். இக்காம்பு மிக நீளமானது. நீரளவிற்கு நீண்டு கொடுக்கும் இயல்பு (Elongation) இக்காம்பிற்கு உண்டு. குளங்குட்டைகளில் திடீரென நீர் நிரம்பி விடுமாயின், இவ்வியல்பினால் இலைக்காம்பு ஓரிரு நாள்களில் நீண்டு கொடுத்து இலையை நீர்ப்பரப்பின் மேல் நிலைக்கச் செய்யும். இவ்வியல்பு இதன் பூக்காம்பிற்கும் உண்டு. இலையின் கணுக் குருத்து வளர்ந்து பூவாகுமெனினும், இலைக்காம்பிற்கும், பூக்காம்பிற்கும் உள்ளமைப்பில் ஒரே ஒரு வேறுபாடு காணப்படும். இலைக்காம்பில் இரண்டு பெரிய துளைகள் நடுவில் இருக்கின்றன. பூக்காம்பில் ஐந்து பெருந்துளைகள் நடுவில் அமைந்துள்ளன. இத்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக் கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன.

“அயிரை பரந்த அம்தண் பழனத்து
 ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள் கால்
 ஆம்பல் குறுநர்...”
-குறுந் 178 : 1-3

“பொய்கைபூத்த புழைக் காலாம்பல்”-ஐங். 34 : 2

“புழற்கால் ஆம்பல் அகல் அடை”-புறநா. 266 : 3

என்பனவற்றால் தமிழர் ஆம்பலின் இலைக்காம்பிலும், பூக்காம்பிலும் உள்ள தூம்புதனை அறிந்திருந்தனர் என்பது புலனாகும்.

அல்லியின் இலைக்காம்பிலும், பூக்காம்பிலும் உள்ள புறணி எனப்படும் நாரை உரித்துப் பார்த்தால், புறணிக்கடியில் மிக அழகிய துண்ணிய நீலங்கலந்த செம்புள்ளிகள் காணப்படும். நார் உரித்த இக்காம்புகளின் புறத்துள்ள சில செல்களில் (உயிரணுக்களில்) ஆந்தோசையனின் (Anthocyanin) என்ற வேதிப்பொருள் உயிரணுச்சாற்றில் (Cell-sap) கரைந்திருத்தலின் இந்நிறம் பெற்றுத் திகழும். கண் கவரும் இந்நிறத்தை மங்கல மகளிர்க்கு இயற்கையில் உண்டாகும் பருவ கால அழகிற்கு உவமிப்பர். இதனை மாமை எனவும் மாமைக்கவின் எனவுங் கூறுவர். மாமை என்பதற்கு இள மாந்தளிர் போன்ற நிறமென்பாரும், ஈங்கைத் தளிர் போன்ற நிறமென்பாரும், அசோகின் தளிர் போன்ற நிறமென்பாரும் உளர்.

“நீர்வளர் ஆம்பல் தூம்பிடைத் திரள்கால்
 நார் உரித்தன்ன மதனில் மாமை”

-நற். 6: 1-2

“அம்ம வாழி தோழி நம்மூர்ப்
 பொய்கை ஆம்பல் நார் உரிமென்கால்
 நிறத்தினும் நிழற்றுதல் மன்னே
 இனிப்பசந்தன்று என் மாமைக்கவினே”

-ஐங். 35

இந்த ஐங்குறுநூற்றுப் பாடலைச் சற்று விரித்து உரைப்பது ஒக்கும்.

தலைமகனுக்காக வாயில் வேண்டித் தலைவியிடம் புகுந்தார். தலைவனது குணம் கூறுவாராயினர். அவர் அவனுக்கு இல்லாத குணங்களைக் கூறுவதைக் கேட்ட தலைவி, தன் தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. இப்பாடல்.

‘அம்ம தோழி வாழி! நம்மூர்ப் பொய்கையில் வளரும் ஆம்பலின் மெல்லிய காம்பிலே நார் உரித்தால் காணப்படும் அச்செவ்விய அழகு நிறத்தைக் கண்டிருக்கிறாயன்றோ?அந்நிறத்தைக் காட்டிலும் அழகாக நிழற்றும் என் மாமைக் கவினையுங் காண்டி! அங்ஙனம் திருவுடைய என் மேனி இனிக் கவின் அழியப் பசந்தது’ என்கிறாள்

மேனி பசத்தலாவது மகளிர்க்குப் பிரிவாற்றாமையால் உண்டாகும் வேறுபாடான பொன் நிறமாம் என்பர். இதனைப் ‘பசலைப் படர்தல்’ என்றும் ‘பசப்பு ஊர்தல்’ என்றும், ‘பசலை உண்ணுதல்’ என்றும் கூறுவதுண்டு (நற். 304; கலி. 15). இதனால் மகளிர்க்கு இளநலத்தால் ஓங்கும் வளமிகு கவின் அழிந்தொழியும் (குறுந். 368). மேலும், பிரிவிடை ஆற்றாத தலைவி நொந்துரைக்கிறாள், ‘எனது மாமையாகிய பேரழகை, எனக்கு அழகு தந்து நிற்கவொட்டாமலும், என் தலைவனுக்குக் காட்சியின்பம் பயக்கவொட்டாமலும், பசலையானது, தான் உண்ண விரும்புகின்றதே!’ என்று.

“எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
 பசலை உணீஇயர் வேண்டும்
 திதலை அல்குல் என்மாமைக் கவினே”
-குறு. 27:3-5

(திதலை - தேமல்; சுணங்கெனவும் படும். அல்குல் - மகளின் உந்திக்கும். குறிக்கும் இடைப்பட்ட பகுதி).

ஆம்பலின் பூக்காம்பை ஒடித்து மணிமாலை போலாக்கி மகளிர் வளையலாக அணிவர்.

“ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்”

-புறநா: 63:12, 352: 5

ஆம்பற் பூவில் நான்கு புறவிதழ்களும், பத்துப் பதினைந்து அகவிதழ்களும் உள்ளன. புறவிதழ்களின் வெளிப்புறம், பசுமையானது. மாலையில் கூம்பிய ஆம்பலின் மலருக்குக் கொக்கின் பசிய புறம் உவமிக்கப்படுகின்றது.

“பைங்காற் கொக்கின் புன்புறத்தன்ன
 குண்டுநீராம்பலும் கூம்பின”
-குறுந்: 122:1-2

“ஆம்பற்பூவின் சாம்பலன்ன
 கூம்பிய சிறகர் மனைஉறை குரீஇ”
-குறுந்: 46:1-2

ஆம்பலில் இருவகை உண்டு. ஒன்று வெள்ளாம்பல் (நற். 290) மற்றொன்று செவ்வாம்பல். இது அரக்காம்பல் எனவுங் கூறப்படும். வெள்ளாம்பற்பூவில் உள்ள புறவிதழின் உட்பாகம் வெண்மையாகவும், செவ்வாம்பலில் சிவப்பாகவும் இருக்கும். ஆம்பலில் பொதுவாகப் புறவிதழும், அகவிதழும் இணைந்து, ஒன்றாக இருக்குமாயின் இவ்விதழ்த் தொகுதியைத் தாவர நூலில் அல்லி (Perianth) என்பர்.

‘அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்’ (கலி. 91:1) என்ற அடிக்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘அழகிய நீரில் அலர்ந்த அல்லியை உடைய நீலப்பூ, அனிச்சம்பூ’ என்று உரை கூறுகின்றார். இதனை ஒட்டியே,

“அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்”-(பரிபா. 12 : 78)

என்ற அடிக்கு ‘அல்லி’யை உடைய கழுநீர், அரவிந்தம், ‘ஆம்பல்’ எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அல்லாவழி அல்லி வேறு, ஆம்பல் வேறு போலும் என மயங்க நேரும். மேலும், கழுநீர் முதலாகிய மூன்று மலர்களுக்கும் சாம்பல் நிறமான அல்லி (Perianth) எனும் புறவிதழ் உண்டு. அன்றியும், ஆம்பற் காயக்கும் ‘அல்லி’ என்ற பெயருண்டு. ஆம்பற்பூவின் காயாகிய அல்லியில் வெள்ளிய, சிறு கடுகு போன்ற விதைகள் உண்டாகும். இதனை ‘அல்லியரிசி’ என்பர்.

“ஆம்பல் அல்லியும் உணங்கும்”[6]

என்புழி ‘ஆம்பல் அல்லி’ இருபெயரொட்டு எனவும், அல்லி என்பதற்கு ‘அல்லி அரிசி’ எனவும் உரை கூறுவர் இந்த ‘ஆம்பல் அரிசி’யைக் கணவனையிழந்த கழிகல மகளிர் உண்ணும் ஒரு வழக்கம் உண்டு.

“சிறு வெள்ளாம்பம் அல்லி உண்ணும்
 கழிகல மகளிர் போல”
-புறநா. 280 : 13-14

வீரத் தலைவர்கள் போரில் பட்டு இறந்தால், அவர் தம் நகரம் பொலிவிழந்திருப்பதைத் தாயங் கண்ணியார் பாடுகின்றார்:

“கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
 அல்லி உணவின் மனைவியோ டினியே
 புல்லென் றனையால் வளங்கெழு திருநகர்”
-புறநா. 250 : 4-6

வள்ளல் பாரியின் பறம்பு நாடு மூவேந்தரால் முற்றுகையிடப்பட்டது உள்ளே அகப்பட்ட மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு நேர்ந்தது. கபிலர் வெளியிலிருந்து கிளிகளின் வாயிலாக நெற்கதிரைக் கொண்டு வரச் செய்து, அதன் அரிசியுடன் ஆம்பல் மலரை அளித்து உணவூட்டினார் என்பர் நக்கீரனார்:

“செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு
 தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி”
-அகநா. 78 : 17-18

ஆம்பற் கொடியின் வேர்த் தொகுதியில் கிழங்கு இருக்கும். இக்கிழங்கு உணவாகப் பயன்படும். ஆம்பற் கிழங்கொடு புலால் நாற்றமுள்ள ஆமையின் முட்டையுடன் பரிசிலர் பெறுவர் என்ப:

“யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
 தேனாறு ஆம்பற் கிழங்கொடு பெறூஉம்”

-புறநா. 176 : 4-5

ஆம்பலின் இலைகளைக் கொய்து தழையணி கூட்டுவர் மகளிர்.

‘நீரில் வளர்ந்த வெள்ளாம்பலினது அழகிய மாறுபடக் கூடிய நெறியுடைய தழையுடையானது தேமலை உடைய துடையின் கண்ணே மாறி மாறி அசைய, சேயிழையுடைய பரத்தை அவ்விடத்தே வருமே’ என்று அஞ்சுகிறாள் ஒரு தலைவி :

“அய வெள்ளாம்பல் அம்பகை நெறித்தழை
 தித்திக் குறங்கின் ஊழ்மாறு அலைப்ப
 வருமே சேயிழை அந்தில்”

-குறுந். 293 : 5-7

“ஆம்பல் அணித்தழை ஆரத் துயல்வரும்
 தீம்புன லூரன் மகள்[7]

“அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
 இளைய மாகத் தழையா வினவே
 இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
 இன்னா வைகல் உண்ணும்
 அல்லிப் படூஉம் புல்லா யினவே”

(புல்லாயின-புல்லரிசியாய் உதவின.)
- புறநா. 248

ஆம்பல் மலர் ஆடவர் சூடவும், அணியவும் பயன்பட்டது.

“வன்கை வினைஞர் அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்”

- பதிற். 62 : 16-17

நீலம், அல்லி, அனிச்சம், முல்லை முதலியவற்றைக் கண்ணியாகப் புனைந்து சூட்டிக் கொள்வர். (கலி. 91 : 1)

ஆம்பல் மலரை மகளிர் வாய்க்கு உவமிப்பர்.

“முகம் தாமரை, முறுவல் ஆம்பல், கண்நீலம்”[8]

“வாவிதொறும் வண்கமலம் முகங்காட்ட
 செங்குமுதம் வாய்கள் காட்ட”
[9]

பசந்த கண்ணிற்கு ஆம்பல் உவமிக்கப்படும்.

“பொய்கை பூத்த புழைக்கால் ஆம்பல்
 தாதேர் வண்ணங் கொண்டன
 எதிலார்க்குப் பசந்த என் கண்ணே”
-ஐங். 34

வெள்ளாம்பல் திங்களைக் கண்டு மலருமென்ப.

“மதிநோக்கி அலர்வீத்த ஆம்பல் வான்மலர்”-கலி, 72:6


“ஆம்பல் ஆயிதழ் கூம்பு விட வளமனைப்
 பூங்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
 அந்தி அந்தணர் அயர”
-குறிஞ். 223-225

இன்னும் ஆம்பற்கொடி, கொட்டி, நெய்தல் முதலிய நீர்வாழ் தாவாங்களுடன் வளரும் என்பதை ‘அற்ற குளத்தில் அருநீர்ப் பறவை போல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் அக்குளத்தில் கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் போலவே ஒட்டியுறுவார் உறவு’ என்ற பாடலிற் காணலாம். மேலும், நீர்த்துறையில் தாமரையுடன் ஆம்பல் வாழும் என்பதைப் புலப்படுத்துகின்றார் பரணர். ‘தொடியணிந்த அரசர் மகள் சினங்கொண்டவுடன்’ அவளது தோழியர் குழாம் இறைஞ்சி நிற்பது போல, பெருங்காற்று மோதும் போது ஆம்பல் குவிந்து தாமரை மலரிடத்தில் வந்து சாய்ந்து வணங்குமென்கிறார்:

“சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர்
 மடத்தகை ஆயம் கைதொழு தாங்கு
 உறுகால் ஒற்ற ஓங்கி ஆம்பல்
 தாமரைக்கு இறைஞ்சும் தண்துறை ஊரன்”

-நற். 300: 1-4
இதனுள் ஆயத்தார் கைதொழுமாறு போல தாமரையை நோக்கி ஆம்பல் கூம்பும் என்றபடியால் இது காலைப்பொழுதென்றும், அப்போது ஆம்பல் குவிந்து தாமரை மலர்ந்திருக்குமென்றும் அறிதல் கூடும்.

இனி, மதுரை மருதன் இளநாகனார் பாடிய ஒரு பாடலின் ஒரு கூறு சிந்திக்கற்பாலது. தலைவன், பரத்தையிற் பிரிந்து காலங்கழித்து புலந்து நிற்கும் தலைவியிடம் வருகின்றான். காமக்கிழத்தி, பாணர்குலப் பெண் விறலியை நோக்கிச் சொல்லுவாள் போலக் கூறித், தலைவியைப் புலவி தணிக்கின்றாள்:

“முள் போன்று கூரிய பற்களை உடையோய்! ஊரனது வயலில் ஆம்பலின் சூடு தரு புதிய பூ மலர்ந்தது. அதனைக் கன்றை ஈன்ற பசுவானது தின்றது. எஞ்சிய மிச்சிலை உழுது விட்ட, ஓய்ந்து போன பகடு தின்னா நிற்கும். அப்படிப்பட்ட ஊரனுடன் நெடுங்காலம் கூட்டம் நிகழ்த்துதலை நீ விரும்பினையாதலின் என் சொற்களைக் கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க. நீ இளமைச் செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வர்ப் பயந்த பின்னர் உழுது விடுபகடு, எச்சிலை அயின்றாற்போலப் பிறர் அவனை நுகர்ந்தமை, நினக்கு இழுக்கன்று. “அவள் அவனோடு கட்டில் வரை எய்தியிருக்கிறாள்” என்று ஊரார் கூறுகின்ற சொல்லை நீ என்னைப் போல வேறு பட்டுக் கொள்ளாதே. அங்ஙனம் கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாது. அவனை ஊரார் நடுயாமத்து விரியும் பூவில், தேனுண்ணுகின்ற வண்டென்பதன்றி, ஆண்மகன் என்னார். ஆதலின் புலவாதே கொள்” என்று நயந்து கூறியது. (நற். 290)

“வயல் வெள்ளாம்பல் சூடுதரு புதுப்பூக்
 கன்றுடைப் புனிற்றுஆ தின்ற மிச்சில்
 ஓய்விடு நடைப்பகடு ஆரும் ஊரன்”
-நற். 290: 1-3

என்னும் இப்பாடற் பகுதியில் ஒரு பெரிய தாவரவியல் உண்மை பதிந்து உள்ளது போலத் தோன்றுகிறது. அரும்புகள், போது அவிழ்ந்து மலருங்கால் சிறிது சூடு உண்டாகும். இவ்வெப்பத்தால் அரும்புகள் மலரும். அரும்புகள் மலர்வதற்குச் சிறிது சக்தி (Energy) பிறக்க வேண்டும். இச்சக்தி வெப்பமாக வெளிப்படும். அரும்பிலும், போதிலும், சேமித்து வைக்கப்பட்டுள்ள ATP எனும் ஒரு வகை சக்திக் கூடு உடைந்து ஆற்றலாகும். ATP என்பது நுண்ணிய சேமிப்புச் சக்தியின் முடிச்சு அரும்பு மலருங்கால் ஒரு வகையான ஊக்கி (Hormone) அதன் செல்களில் (Cells) சுரக்கும். அப்போது சக்தியின் முடிச்சு அவிழ்ந்து சக்தி வெப்பமாக மாறி வெளிப்படும். இச்சக்தியைக் கொண்டு அரும்பு போதாகி மலரத் தொடங்கும். இதனையே ஒருவேளை ‘சூடுதரு புதுப்பூ’ என்று மருதன் இளநாகனார் கூறினார் போலும்!

எனினும் ‘சூடுதரு புதுப்பூ’ என்பதற்கு ‘வயலில் மள்ளர் அறுக்கும் நெற் கதிரோடு அறுபட்டு அரிசூட்டோடு களத்திற் கொணர்ந்து போடப்பட்ட வெளிய ஆம்பலின் அப்பொழுது மலர்ந்த புதிய பூ’ என்று உரை கூறுவர் பின்னத்தூரார். ஆகவே, ‘சூடு’ என்பது பொதுவாக ‘நெல் அரியை’க் குறிப்பிடும் பெயர்ச் சொல் ஆயினும், ‘சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்’ (மது. கா. 512) என்ற மாங்குடி மருதனாரின் அடிக்கு, நச்சினார்க்கினியர், ‘சுடுதலுற்ற நன்றாகிய பொன்னை விளங்கும் பணிகளாகப் பண்ணும் தட்டாரும்’ என்று உரை கூறியுள்ளார். ஆதலின் ‘சூடுறு’ என்புழி ‘சூடு’ என்ற சொல்லுக்குச் ‘சுடுதல்’ என்ற பொருளும் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றமை பெற்றாம். அதனால் மருதன் இளநாகனாரின் நற்றிணைப் பாடலில் வரும் ‘சூடுதரு புதுப்பூ’ என்பதற்கு ‘வெப்பத்தைத் தரும் பதிய பூ’ என்று பொருள் கோடல் ஒக்கும். அங்ஙனமாயின் அரும்புகள் போதாகி மலருங்கால் சிறிது வெப்பம் உண்டாகும் என்னும் தாவரவியல் உண்மையைச் சங்கச் சான்றோர் அறிந்திருந்தனர் என்பது வலியுறும்.

ஆம்பல் மலர் சுற்றுவட்டமாக அகல விரிந்து மலரும். இதன் முகை கொக்கின் அலகு போன்று கூம்பியது என்றும் இதன் மலர்ச்சி விடிவெள்ளி போன்று ஒளி தருவது என்றும் ஆலங்குடி வங்கனார் கூறுவர்.


“... .... .... .... கொக்கின் கூம்பு முகை
 கணைக்கால் ஆம்பல் அமிழ்து நாறுதண்போது
 குணக்குத் தோன்று வெள்ளியின் இருள்கெடவிரியும்”

-நற். 230:2-4

மேலும் இவ்வெள்ளாம்பல் மதி நோக்கி மலரும் இயல்பிற்று எனப் புலவர் கூறுவர்:

“மதிநோக்கி மலர்வீத்த ஆம்பல் வான்மலர்”-கலி. 72:6

இனி ஆம்பலைப் பல்லாற்றானும் ஒத்த செவ்வல்லியாகிய அரக்காம்பலைப் பற்றிச் சிறிது சிந்திப்பாம்.

 

செவ்வல்லி
நிம்பேயோ ரூப்ரா
(Nymphaea rubra, Roxb.)

செவ்வல்லியும் அல்லியினத்தைச் சேர்ந்தது. இதன் இதழ்கள் எல்லாம் செந்நிறமாக இருக்கும். ‘செவ்வல்லி கொய்யாமோ’ என்பது பிற்கால இலக்கியம். இதனை ‘அரக்காம்பல்’ என்றும் கூறுவர். செந்தீயனைய செந்நிறமுடைமையின் இவ்வாம்பலை அரக்காம்பல் என்றனர். ஒரு பழனத்தில் ஒரே நேரத்தில் எண்ணற்ற இதன் மலர்கள் பூத்தன. பழனத்தில் வாழும் நீர்ப் பறவைகள், ‘பழனம் தீப்பற்றி எரிவதாக எண்ணித் தமது குஞ்சுகளை அணைத்துக் கொண்டன’ என்று கூறும் முத்தொள்ளாயிரம்.[10] இதன் ஏனைய இயல்புகள் அனைத்தும் வெள்ளாம்பலை ஒக்கும்.

மற்று, செவ்வல்லி மலரும் செங்கழுநீர் மலரும் வேறுபட்டவை.

செவ்வல்லியின் மலர் சற்று பெரியது. இதன் புறவிதழ்கள் அகத்தும் புறத்தும் செந்நிறமானவை. வெண்ணிற அல்லி மலரைப் பெரிதும் ஒத்திருத்தலின் தாவரவியலில் இதனை ‘நிம்பேயா’ என்ற பேரினத்தில் அடக்கியும் மலரில் செந்நிறத்தால் வேறுபடுதலின் ‘ரூப்ரா’ என்ற சிற்றினப் பெயர் கொடுத்தும் விளக்கப் பெறுகின்றது.

வெள்ளாம்பலைப் போன்று இவ்வரக்காம்பல் மலரிலும் நறுமணம் கமழும். தாவரவியலுண்மைகள் இவ்விரண்டிற்கும் பொதுவானவை.

(ஆம்பல், அல்லி, குமுதம்) தாவர அறிவியல்

நிம்பேயா பூபசென்ஸ் (Nymphaea pubescens Willd.)

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : நிம்பயேசீ (Nymphaeaceae)
தாவரப் பேரினப் பெயர் : நிம்பேயா (Nymphaea)
தாவரச் சிற்றினப் பெயர் : பூபசென்ஸ் (pubescens, willd.)
தாவர இயல்பு : பல பருவ நீர்த் தாவரம், நீர்வாழ்க் கொடி
தாவர வளரியல்பு : அருவி, ஓடை, பொய்கை முதலியவிடங்களில் நன்னீரில் வாழும் நீர்ச் செடி.
வேர்த் தொகுதி : தரையில் அதிலும் சேற்றில் அடி மட்டத் தண்டு எனப்படும் கிழங்கு இருக்கும். அதிலிருந்து சிறு வேர்கள் உண்டாகும். இதன் மேற்புறத்தில் தோன்றும் இலைக் காம்பின் நுனியில் இலைகள் காணப்படும்.
அடி மட்டத் தண்டு : கிழங்கு எனப்படும் இத்தண்டில் கணு உண்டு. கணுவிலிருந்து இலையுண்டாகும். இலைக்கோணத்தில் அரும்பும், மலரும் உண்டாகும். இதன் மேற்புறத்தில் தோன்றும் இலைக் காம்பின் நுனியில் இலைகள் காணப்படும்.
இலை : தனி இலை; முட்டை அல்லது வட்ட வடிவமானது; பசிய நிறம் உள்ளது. அடியில் அடர்ந்த உரோமமுள்ளது. இலையைத் தாங்கி நிற்கும் இலைக் காம்பு; இலையின் மேற்புறத்தே இலைத் துளைகள் உள. இலை, காம்புடன் இணைக்கப்பட்டவிடத்தில் இலை நீளமாகப் பிளவுபட்டிருக்கும். இலை விளிம்பு நேரானது; இலைக்
காம்பு இலையின் அடியில் ஒட்டியிருக்கும்; இலையின் நடுவினின்றும் பல இலை நரம்புகள் இலை விளிம்பு வரை விரிந்துள்ளன.
இலைக் காம்பு : நீளமானது. தூம்புடையது. இதனைக் கால் எனவும் தாள் எனவும் இலக்கியங்கள் கூறும். இதில் இரு பெரிய துளைகளும்,பல சிறு நுண் துளைகளும் உள்ளன. இவற்றுள் காற்று நிரம்பி இருக்கும்.
மலர் : தனி மலர். நீரில் மிதந்து கொண்டிருக்கும்; சற்று நீர் மட்டத்திற்கு மேல் நீட்டிக் கொண்டிருப்பதுமுண்டு; மலர்க் காம்பு இலைக் காம்பு போன்று நீளமானது; தூம்பு உடையது. ஐந்து பெரிய துளைகள் இருக்கும். மலர் இலைக் கோணத்தில் உண்டாகும்.
அரும்பு : நீளமானது; புறவிதழின் வெளிப்புறம் பசுமையானது.
மலர் : அகன்று விரியும்; இரு சமச்சீரானது; ஒழுங்கானது; இருபாலானது; பல இதழ்கள் அடுக்கடுக்காய் அமைந்துள்ளன.
புல்லி வட்டம் : 4 புல்லிகள்; நீளமானவை. 5-6 செ.மீ. x 2-3 செ.மீ. வெளிப்புறம் பசுமையானவை. உட்புறம் வெண்மையானவை.
அல்லி வட்டம் : எண்ணற்ற இதழ்கள் வெண்மையானவை; அடுக்கடுக்காய் அமைந்துள்ளன; 5-6 x 2-3 செ.மீ. இவை உட்புறத்தில் சிறிது சிறிதாக மகரந்தத் தாள்களாக மாறும் இயல்பின.
மகரந்தத் தாள்கள் : இதழ்கள் போன்ற மகரந்தக் கம்பிகளுடன் (Petaloid filameants) உள்நோக்கி அமைந்த மகரந்தப் பைகளைக் கொண்டிருக்கும்; தாள்கள் பூத்தளத்திலிருந்து எழும்.
சூலக வட்டம் : 5 முதல் 35 வரையிலான சூலிலைகள் சதைப்பற்றானவை; பூத்தளத்தில் புதைந்திருக்கும்; பல அறைகளைக் கொண்ட சூற்பையினை உண்டாக்கி அவற்றின் சூல்முடி பல ஆரங்களில் கதிர்களாகப் பிரிந்திருப்பது போல் அமைந்திருக்கும். அனாட்ரோபஸ் வகையானவை.
கனி : அல்லிக்காய் எனப்படும் பல விதைகள் கொண்ட வழவழப்பான சதைக்கனி அடியிலிருந்து கனியும்; விதைகள் மிகச் சிறியவை; அல்லி அரிசி என்று வழங்கப்படும். ஏரில் (Aril) எனப்படும் விதை சூழ்தசையில் புதைந்திருக்கும்.

அல்லி மலர் பொதுவாக வெண்மையானது. வெள்ளாம்பல் எனப்படுவது; சிவப்பு நிறமான இதழ்களை உடைய செவ்வல்லி தமிழ்நாட்டில் குளங்குட்டைகளில், வெள்ளாம்பலுடன் சேர்ந்தோ தனித்தோ வளரும். அன்றி இவ்வினத்தில் மஞ்சள் அல்லியும், நீல அல்லியும் உண்டு. நீல அல்லி இக்காலத்தில் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறதென்பர். தமிழ்நாட்டில் உள்ள நீலோற்பலத்தை (கருநெய்தல்) நீல அல்லி என்றும், நீலம் என்றும் கூறுவாருமுண்டு. இவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் மிக நுண்ணியவை. எனினும், மலரியல்புகள் எல்லாம் அல்லியை ஒத்தனவே ஆம்பல் இந்திய நாட்டிலிருந்து ஆப்பிரிக்க நாட்டிற்குச் சென்றிருக்கலாம் என்பர் .

பயன் : அல்லிக்காய்களினின்றும் அரிசியை எடுத்து (அல்லி அரிசி) உண்பர்; அல்லி அரிசியைக் கழிகலமகளிர் உணவாகக் கொண்டனர் என்று பண்டைய இலக்கியம் கூறும். பெரிதும் பல வண்ண அல்லிச் செடிகளை அழகுக்காகக் குளங்குட்டைகளில் வளர்க்கின்றனர்.

வெள்ளாம்பலின் (Nymphaea alba, Linn.) குரோமோசோம் எண்ணிக்கை :

2n - 48, 52, 56 என்று டிரே (1947) என்பவரும்.
2n - 84 என்ற லாங்லெட் சோடர்பர்க் (1927) என்பவரும், இதனை வலியுறுத்தி டிஷ்லர் (1934)
2n = 84, 105, 112, 160, என்று உட் (1959) என்பவரும் 84, 112 என்று ஷெல்காப் ஷேரிங்சன் (1955) என்பவருங் கூறுகின்றனர்.


அரக்காம்பல் என்ற நிம்பேயா ரூப்ராவின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 56 என்று சோல்ட்ர்பர்க் (1927) கூறுவர்.

நிம்பேயா பூபெசென்ஸ் என்னும் வெள்ளாம்பலுக்குப் பழைய தாவரப் பெயர் நிம்பேயா ஆல்பா (Nymphaea alba, Linn,) என்பது.

செவ்வல்லி என்றும் அரக்காம்பலென்றும் வழங்கப்படும் செந்நிற அல்லியை நிம்பேயா ரூப்ரா (Nymphaea rubra, Roxb.) என்று கூறுவர். இதன் குரோமோசோம் எண் 2n = 56 என்று சோல்ட்ர்பர்க் கூறியுள்ளார். (1927).

குவளை-செங்கழுநீர்
நிம்பேயா நௌசாலியா
(Nymphaea nouchalia, Burm.f)

‘தண் கயக்குவளை’ என்ற கபிலரின் கூற்றுக்கு (குறிஞ். 63) ‘குளிர்ந்த குளத்தில் பூத்த செங்கழுநீர்ப்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர்.

சங்க இலக்கியப் பெயர் : குவளை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : நீலம், செங்குவளை, காவி
பிற்கால இலக்கியப் பெயர் : செங்கழுநீர், கழுநீர், நீலம், காவி, செங்குவளை, நீலோற்பலம்.
உலக வழக்குப் பெயர் : நீலத்தாமரை, நீலோற்பலம்.நீல அல்லி, செங்கழுநீர்.
தாவரப் பெயர் : நிம்பேயா ஸ்டெல்லேட்டா என்று குறிப்பிடப்பட்டது. இப்போது இதனை நிம்பேயா நௌசாலியா என்று மாற்றியுள்ளதாகக் கூறுவர். ஆகலின் இது Nymphaea nouchalia, Burm.f. எனப்படும்.

குவளை செங்கழுநீர் இலக்கியம்

குவளை என்பது பொதுவாகச் செங்குவளையாகும். இதனை செங்கழுநீர் எனவும் நீலோற்பலம் எனவும் கூறுவர் .

தண்கயக் குவளை-குறிஞ். 63
பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்

-மதுரைக் . 566

என வரும் அடிகளுக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் முறையே, ‘குளிர்ந்த குளத்திற் பூத்த செங்கழுநீர்ப்பூ’ எனவும், ‘பெரிய பலவாகிய செங்கழுநீரில் சுரும்புகளுக்கு அலர்கின்ற பலபூக்கள்’ எனவும் உரை கூறியுள்ளார். இவர் இங்ஙனம் உரை கூறுதற்குக் காரணம் என்ன எனின், கூறுதும்.

‘அரக்கிதழ்க் குவளையொடு’ என்று பெரும்பாணாற்றுப் படை (293) கூறுமாதலின், இதற்கு இவர் ‘சாதிலிங்கம் போன்ற இதழையுடைய குவளையோடு’ என்று உரை கண்டார். இதனால், குவளை என்பதைச் செங்குவளை எனக் கொள்வது போதரும். மேலும், நெய்தல் என்பதைக் கருங்குவளை எனப் பிரித்து இவர் உரை காண்பர். இதற்குக் காரணம் நெய்தலை ‘நீல நிற நெய்தல்’ ‘கரு நெய்தல்’ எனப் புலவர்கள் கூறுவதேயாம். கருங்குவளையை நீலமென்றும் காவியென்றும் கூறுப. இதன் விரிவை நெய்தலிற் காண்க.

“கழிய காவி குற்றும் கடல
 வெண்டலைப் புணரியாடியும்”
-குறுந். 144

“கழியே, சிறுகுரல் நெய்தலொடு காவி கூம்ப
 எறி திரை ஓதம் தரல் ஆனாதே”
-அகநா. 350:1-2

என்பவாதலின் உப்பங்கழியில் வாழும் நெய்தலுடன் ‘காவி’ என்ற மலரும் உண்டென்பதை அறியலாம். இதனைப் பிற்காலத்தில் கருங்குவளை என்றழைத்தனர் என்பர்.[11]

“அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்”-கலி. 91.1

நீலம் என்பது பிற்காலத்தில் கருங்குவளை மலருக்கு உரியதாயிற்று என்பர்.

குவளை என்பதைச் செங்கழுநீர் என்று புறநானூற்று உரைகாரரும் கூறுவர்.

“. . . . . . . . . . . . . . . . . . பெருங்துறை
 நீர்தரு மகளிர் குற்ற குவளையும்”
-புறநா. 42.16

என்பதற்குப் ‘பெரிய துறைக்கண் நீரை முகந்து கொள்ளும் பெண் பறித்த செங்கழுநீரும்’ என்று பொருள் கண்டார். “கழுநீர் என்பது நீண்டு நுனி கூர்மையான நீர்ப்பூ” என்பர். இது ஒக்கும்.

“தீநீர்ப் பெருங் குண்டுசுனை பூத்த குவளைக்
 கூம்பவிழ் முழு நெறிபுரள் வரும் அல்குல்”

-புறநா. 116:1-2

என்பதற்கும் ‘இனிய நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த செங்கழுநீரினது முகையவிழ்ந்த புறவிதழ் ஒடித்த முழுப் பூவால் செய்யப்பட்ட தழையசையும் அல்குலையும்’ என்றார். அன்றி ‘முழுநெறிக் குவளை’[12] என்ற சிலப்பதிகார அடிக்கு ‘இதழ் ஒடிக்கப்படாத குவளை’ என்று பொருள் கூறி மேற்கண்ட புறப்பாட்டை மேற்கோள் காட்டினர் அடியார்க்கு நல்லார். ஆதலின், செங்கழுநீர் முகையின் புறவிதழ்களை மட்டும் நீக்கித் தழை உடை புனைந்தனர் என்று அறியலாம்.

குவளைக்கண் :

நெய்தலாகிய கருங்குவளை மலரையும் செங்குவளையாகிய செங்கழுநீர் மலரையும் மகளிரது கண்களுக்கு உவமிப்பது புலவர் தம் மரபாகும்.

“பசலை யார்ந்த நம் குவளையங் கண்ணே”-குறு. 13 : 5

“கண் போல் பூத்தமை கண்டு நுண்பல்
 சிறுபா சடைய நெய்தல்”

(கருங்குவளை) -நற். 27 : 9-10
மேலும் கருங்குவளை மலர் போன்ற பிராட்டியின் கண்கள் செங்குவளை மலர் போன்று சிவந்து கருணை பூத்தன என்று குமரகுருபரர் கூறுவர்.[13]

செங்கழுநீர்ப்பூ என்பதற்குச் செவ்விய நீண்டு நுனி கூர்மையான நீர்ப்பூ என்பர் (கழு - நீண்டு வளர்ந்த வேல் போன்ற கூர்மை). இதன் அரும்பே சற்றுச் சிவந்த நிறமானது.

“கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு”

-திருமுரு. 29

செங்குவளை மலர் நல்ல கருஞ்சிவப்பு நிறமானது. கருங்குவளை மலர் வெளிர் நீல நிறமானது.

குவளைக்குப் பறியாக் குவளை என்றொரு சிறப்பு உண்டு.

“கடவுள் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த
 பறியாக் குவளை மலரொடு”
-நற். 34 :1-2


முருகன் உறையும் குன்றுகளின் உள்ள சுனையைக் கடவுட்சுனை என்பர். அச்சுனையிற் பூக்கும் பூக்களை மாந்தர் சூடுவதற்குப் பறிக்காது விடுப்பர். அவற்றைச் சூர் அர மகளிர் கொய்து மாலையாக்கி முருகனுக்கு அணிவிப்பர். இக்குவளை மலர் முருகனுக்கு விருப்பமானது. ‘அதனை அறியாது தொட்டால் நடுங்கு துயர் உண்டாகும்’ என்று மலைபடுகடாம் (189-191) உரை கூறுகின்றது. அதனால், இதனைப் பறியாக் குவளை என்பர்.

மேலும், குவளையைப் பூவாக் குவளை என்று கூறுவதையுங் காணலாம். பரிசிலர்க்கு வழங்கப்படும் பரிசில்களில் விருதுடன் வழங்கப்படுவது பொன்னாற் செய்யப்பட்ட பூக்கள். இப்பொன்னுருவில் குவளை மலரும் இடம் பெற்றது. இவ்வாறு குவளை மலரின் உருவிற் செய்யப்படுவது பூவாக் குவளை என்பதாகும்.

“பனிநீர்ப் பூவா மணமிடை குவளை
 வால்நார்த் தொடுத்த கண்ணியுங் கலனும்”

-புறநா. 153: 7–8

மேலும், இக்குவளை மலரின் வடிவம் கட்டடங்களிலும், சிற்பங்களிலும் வடிக்கப்படும். பெரும் வளமனைகளிலும், அரண்மனைகளிலும் இரட்டைக் கதவுகளின் பிடியாக இவ்வடிவம் செய்யப்பட்டதை நெடுநல்வாடை கூறுகின்றது . அதிலும் புதிதாக மலர்ந்த குவளை மலரின் தோற்றத்தில் வடிக்கப்படுமென்பர்.

“நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து
 போதுஅவிழ் குவளைப் பிடியால் அமைத்து”

-நெடுநல்வாடை: 82-83
செங்குவளை மலர் மிக அழகானது. மணமுள்ளது செவ்வல்லி மலரைப் போன்றது. ஆனால், சற்றுக் கருஞ்சிவப்பாக இருக்கும். இதன் அகவிதழ்கள் செவ்வல்லியின் அகவிதழ்களைக் காட்டிலும் நீளத்திற் குறைந்தவை. இதனை மகளிர் சூடிக் கொள்வர்.

குவளை மலரின் மணத்தைத் தலைவியின் கூந்தல் கொண்டிருக்கும்.

“குவளை நாறுங் குவையிருங் கூந்தல்”-குறுந் : 300

“பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்
 திறந்து மோந்தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
 கொண்டல் மலர்ப்புதல் மானப் பூவேய்ந்து”

-மதுரைக் : 566-568

“தொடர்ந்த குவளை தூநெறி அடைச்சி”-பதிற். 27-2

செங்குவளையாகிய செங்கழுநீர் மலரைச் சிவபெருமானுக்குரிய மலராகப் போற்றுவர் மணிவாசகர்.[14]

இம்மலர், இறைவன் சென்னிமிசையிருப்பதைப் பார்த்து இறைக் காதல் கொண்ட ஒருத்தி, அவன் தானேயாகும் தன்மையுன்னி,

“இன்னியல் செங்கழு நீர்மலர் என்தலை
 எய்துவ தாகாதே”
[15] என்கிறாள்.

குவளைச் செடிக்கு அடியில் வேருடன் கூடிய கிழங்கும் உண்டு. இதனை அடிமட்டத்தண்டு என்பர் தாவரவியலார். புலவரும் கிழங்கின் துணை கொண்டு இச்செடி நீர் வற்றிப் போனாலும் அழிவதில்லை என்பர்.

“நீர்கால் யாத்த நிறை இதழ்க் குவளை
 கோடை ஒற்றினும் வாடா தாகும்”
-குறுந். 388

இதனால் இதனைத் ‘தொடர்ந்த குவளை’ என்பர்.
(பதிற். 27)

குவளையின் இலைகளும், மலர்களும் பசிய நீண்ட காம்புடையன. குவளைப் பசுந்தண்டு (காம்பு) கொண்டு மகளிர் கைகளில் காப்புகளாக அணிவர்.

“பவள வளைசெறித்தாட் கண்டுஅணிந்தாள் பச்சைக்
 குவளைப் பசுங்தண்டு கொண்டு;
 கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை
 நில்லிகா என்பாள்போல் நெய்தல் தொடுத்தாளே
 மல்லிகா மாலை வளாய்”
-பரி. 11: 101-105

மேலும் பெண்கள் குவளை மலருடன், நெய்தல்பூ, கல்லகாரப்பூ (நீர்க்குளிரி) மல்லிகைப்பூ முதலியவற்றை விரவிக் கண்ணியாகப் புனைவர் என்கிறார் நல்லந்துவனார்.

செங்குவளை, ஆம்பல், தாமரை முதலிய கொடிகள் சுனையில் வளர்வன. இவற்றின் இலைகள நீர் மட்டத்தின் மேலே காணப்

காவி
(Nymphaea nouchalia)

படும். மலர்கள் இலை மட்டத்திற்குச் சற்று உயர வளர்ந்து பூக்கும் இயல்பின. இவற்றுள் குவளைப்பூ இவ்வாறு மலர்தலை ஒரு நற்றிணைப் பாடல் கூறும்

“கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த
 பறியாக் குவளை மலரொடு”
-நற். 1-2

இங்ஙனம் குவளை மலர் அடையிறந்தெழுந்து மலர்வதைக் கண்டறிந்து எழுதிய புலவர் திறம் போற்றற்குரியது.


குவளை—செங்கழுநீர் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : நிம்பேயசி (Nymphaeaceae)
தாவரப் பேரினப் பெயர் : நிம்பேயா (Nymphaea)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்டெல்லேட்டா (stellata) எனப்பட்டது. இப்போது இதனை நௌசாலியா (nouchalia Burm.f.) என்று தாவரவியலார் குறிப்பிடுகின்றனர்.
தாவர இயல்பு : பல பருவ நீர்த்தாவரம்,நீர்வாழ்செடி.
தாவர வளரியல்பு : குளம் குட்டைகளில் நன்னீரிலும், அருவி ஓடைகளிலும் பல்லாண்டு வாழும் நீர்ச்செடி.
வேர்த் தொகுதி : சேற்றில் அடிமட்டத்தண்டு (கிழங்கு) நீண்டு வளரும். அதிலிருந்து சிறு வேர்கள் உண்டாகும். இதன் மேற்புறத்தில் தோன்றும் இலைக் காம்பின் நுனியில் இலை உண்டாகும்.
அடி மட்டத் தண்டு : இக்கிழங்கிலிருந்து இலைக்கோணத்தின் தனிமலர் உண்டாகும். இலையும், அரும்பும், மலரும் நீர்மட்டத்திற்கு மேல் வளர்ந்து நீரில் மிதந்து காணப்படும்.
இலை : தனி இலை; முட்டை வடிவானது. பசுமையானது. நுண்மயிர் இல்லாதது. அடியில் நீண்ட பிளவுபட்டிருக்கும். இலைக் காம்பு அடியில் ஒட்டியிருக்கும்.
இலைக்காம்பு : நீளமானது.
இலை விளிம்பு : கூரிய சிறு பற்களை உடையது.
மலர் : தனி மலர். ஒழுங்கானது. இருபாலானது. மிக அழகானது. இளஞ் சிவப்பும், கருஞ்சிவப்புமானது. மலர்க் காம்பு இலைக் கோணத்தில் தோன்றும்.
புல்லி வட்டம் : 4 புறவிதழ்கள் புறத்தில் பசுமையாகவும் உட்புறத்தில் இளஞ்சிவப்பாகவும் இருக்கும், திருகு அமைப்பு.
அல்லி வட்டம் : எண்ணற்றவை; 8-12 வளவிய நீண்ட அகவிதழ்களை வெளி அடுக்கில் காணலாம். உள்ளடுக்கில் உள்ள சிறிய பல அல்லிகள் சிறிது சிறிதாக மகரந்தத் தாள்களாக மாறும் நிலையில் காணப்படும்.
மகரந்த வட்டம் : எண்ணற்ற இதழ் போன்ற மகரந்தத் தாள்களுடன் சிறிய உள்நோக்கி அமைந்த மகரந்தப் பைகளை உடையது.
சூலக வட்டம் : 3 சூலிலைகள் இணைந்து பல அறைகள் கொண்ட சூற்பையாக இருக்கும். இவை பல அறைகளைக் கொண்ட சூற்பையினை உண்டாக்கி, அதன் சூல் முடி பல ஆரங்களில் கதிர்களாகப் பிரிந்திருப்பது போல் அமைந்திருக்கும்.
சூல்கனி : அதிகமானவை. அனட்ரோபஸ் வகையிலானவை.
கனி : பல விதைகள் கொண்ட வழவழப்பான சதைக் கனி. அடிப்புறத்திலிருந்து கனியக் கூடியது; விதைகள் மிகச் சிறியவை. சதையினுள்ளேயும் விதை சூழ் தசையினுள்ளும் புதைந்தவை.

இக்கொடி பூசனைக்காகத் தில்லையிலும், அழகுக்காவும் ஆய்வுக்காகவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தாவரத்தோட்டத்தின் சிறு குட்டையிலும் வளர்க்கப்பட்டு வந்தது. இதனுடன் கருங்குவளையாகிய நெய்தலும் சேர்த்தே வளர்க்கப்பட்டது. இம்மலர்களில் நல்லதொரு மணமுண்டு. இவை மிக அழகான மலர்கள்.

கழுநீர்மாலை கடவுளுக்கு அணிவிக்கச் செங்கழுநீர் மலரையும், ‘குவளைக்கண்ணி’யாகிய அம்மைக்கு அணிவிக்கக் கருங்குவளையையும் விரும்பி இக்கொடிகள் தக்க கண்காணிப்புடன் வளர்க்கப்பட்டன.

திருவாரூரில் கோயில் கொண்டருளிய கடவுளர் திருமேனிக்கு நாளும் ஒவ்வொரு செங்கழுநீர்ப் பூச்சூட்டி வழிபாடு நிகழ்கின்றது. அதற்கென்று பண்டைய நாளில் அக்கோயிலின் புறத்தே செங்கழுநீர் ஓடை ஒன்றிருந்ததாம். அது இப்போது இல்லாமையால் அண்மையிலுள்ள செங்கழுநீர்ச் சிற்றோடையிலிருந்து நாள்தோறும் ஒரு செங்கழுநீர்ப் பூவைக் கொணர்ந்து சூட்டுகின்றனர்.

நீலமும் காவியும்

கருங்குவளையாகிய நெய்தலின் வேறு பெயர்களே நீலமும், காவியும் என்ப.

“அரக்கிதழ்க் குவளையொடு நீலம் நீடி”-பெரும்பா. 293

“அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்”-கலி. 91:1

என நீலப்பூவும்,

“கழியகாவி குற்றும் கடல
 வெண்டலைப் புணரி ஆடியும்”
-குறுந். 144

“கழியே சிறுகுரல் நெய்தலொடு காவி கூம்ப”

-அகநா. 350 : 1

“காவியங் கண்ணியாய்”[16]

“காவியங் கண்ணார் கட்டுரை”[17]

“சீர்வளர் காவிகள்”[18]

எனக் காவி மலரும் சுனைப் பூக்களாகக் குறிப்பிடப்படுகின்றன

நெய்தலையும் காவியையும் தனித்தனிப் பேசுவார் சேந்தன் கண்ணனார் (அகநா. 350) காவியின் மலர் மகளிர் கண்களுக்கு உவமிக்கப்படுகின்றது.

“வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்”

-திருமுரு. 73-77

என்புழி நெய்தலாகிய கருங்குவளையே பேசப்படுகின்றது. ஆயினும் பிற்காலத்தில் கருங்குவளையை நீலமென்றும், காவி என்றும் கொண்டனர் போலும்.

 

நெய்தல்-கருங்குவளை
நிம்பேயா வயலேசியா
(Nymphaea violacea, Lehm.)

‘வருணன் மேய பெருமணல் உலகம்’ எனப்படும் நெய்தல் நிலம் கடலும் கடலைச் சார்ந்த இடமும் ஆகும். கடலைச் சார்ந்த உப்பங்கழியிலும் நன்னீர் நிலைகளிலும் வளரும் நெய்தற் கொடி.“காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்” (குறிஞ். 84) எனக் கபிலர் கூறும் நெய்தலுக்குக் கருங்குவளை என்று பொருள் கண்டார் நச்சினார்க்கினியர். நெய்தல் நிலத்துச் சுனை மலராகிய நெய்தலைப் புலவர் பெருமக்கள் வியந்து கூறுவர். நெய்தல் ‘அல்லி’ இனத்தைச் சார்ந்தது.

நெய்தல் நிலத்தின் இயல்புகளை மாங்குடி மருதனார் விளக்கிக் கூறுகின்றார். (மது. கா. 315-326)

சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : கருங்குவளை, கருநெய்தல்
உலக வழக்குப் பெயர் : நெய்தல், குவளை, நீலம். நீலோற்பலம், பானல், காவி. சிந்திவாரம், நீலப்பூ
தாவரப் பெயர் : நிம்பேயா வயலேசியா
(Nymphaea violacea)

நெய்தல்-கருங்குவளை இலக்கியம்

தமிழ் நிலம் மருதம், நெய்தல், முல்லை, குறிஞ்சி என நான்கு வகைப்படும். முல்லையும் குறிஞ்சியும் தம்மியல்பு திரிந்து இயைந்த நிலத்தைப் பாலை என்பர். நெய்தல் நிலமென்பது கடலும், கடலைச் சார்ந்த இடமுமாம். மற்று நெய்தல் ஒழுக்கமாவது இரங்கலும், இரங்கல் நிமித்தமும் பற்றியது. கடலைச் சார்ந்த கழியிலும், நல்ல நீர் நிலைகளிலும் நெய்தற் கொடி வளரும். இதனையுட்கொண்டு போலும் இந்நிலத்தை நெய்தல் என்றனர். இக்கருத்து செந்தமிழில் நிலவியுள்ளது. பண்டைத் தமிழ்ப்புலவர்கள் இந்நெய்தற் கொடி, இதன் பெயரால் அமைந்த நிலம், ஒழுக்கம், பறை முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

சங்க இலக்கியத்துள் நெய்தலைப் பற்றிய பாடல்கள் பல உள. அகநானூற்றில் பத்துப் பத்தான எண்களைக் கொண்ட 40 பாடல்களும், கலித்தொகையில் 33 பாடல்களும், நெய்தற் கலிப் பாக்களும், ஐங்குறு நூற்றில் நெய்தல் பற்றிய 100 பாக்களும் திணை மாலை நூற்றைம்பதில் 31 பாக்களும் உள்ளன. இவையன்றிக் குறுந்தொகை, நற்றிணை, திணைமொழி ஐம்பது முதலியவற்றிலும் நெய்தல் திணையைப் பற்றிய பாக்கள் மலிந்துள்ளன.

அன்றி நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்னும் பேரெண்களைப் பரிபாடல் (2:12-15) கூறும். இவற்றை விளக்குதல் வேண்டப்படுகின்றது. நூறு நூறாயிரம் என்பது ஒரு கோடி ஆகும். கோடி எண் மடங்கு கொண்டது-அதாவது கோடி கோடி சங்கமென்று கூறும் பிங்கலம். சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம்.

கோடி எண் மடங்கு கொண்டது = சங்கம்
சங்கம் எண் மடங்கு கொண்டது = விந்தம்
விந்தம் எண் மடங்கு கொண்டது = ஆம்பல்
ஆம்பல் எண் மடங்கு கொண்டது = கமலம்
கமலம் எண் மடங்கு கொண்டது = குவளை
குவளை எண் மடங்கு கொண்டது = நெய்தல் = 101835008
நெய்தல் எண் மடங்கு கொண்டது = வெள்ளம்

உலகம் தோன்றி மறையுங் காலத்தை ஊழி என்பர். எனவே, ஊழி என்பது பன்னெடுங்காலமாகும். இவற்றைக் கீரந்தையார் கூறுவர்:

“....  ....  ....  .... அவற்றிற்கும்
 உள்ளீடாகிய இருநிலத்து ஊழியும்
 நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
 மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
 செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை”

-பரி. 2 : 12-15

இப்பேரெண்களைக் குறிக்கும் பெயர்களைப் பரிபாடலில் கூறிய வண்ணம் ஒழுங்குபடுத்தித் தமது யாழ்நூலில் ஈழந்தந்த முனிவர் விபுலாநந்த அடிகள் மேற்கண்ட வண்ணம் விளக்கியுள்ளார்கள். மேலும்

“ஐ, அம், பல் எனவரூஉம் இறுதி
 அல்பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்”

-தொல் எழுத்து : 8-98
என்னும் தொல்காப்பிய நூற்பா ஐ என்னும் விகுதியைக் கொண்ட தாமரை (பதுமம்), அம் என்னும் விகுதியைக் கொண்ட சங்கம், விந்தம் வெள்ளம், பல் என்னும் விகுதியைக் கொண்ட ஆம்பல் முதலான எண்ணுப் பெயர்களைக் கூறுகின்றது.

திருமாலின் கைகளின் பெருமையை அதன் எண்ணிக்கைப் பெருக்கில் காட்ட முனையும் கடுவன் இளவெயினனார் ‘பல அடுக்கல் ஆம்பல்’ என்றார்.

“நூறாயிரம் கை ஆறறி கடவுள்
 அனைத்தும் அல்லபல அடுக்கல் ஆம்பல்
 இனைத்துள என எண்வரம்பு அறியா யாக்கையை”

-பரி. 3. 43-45
செல்வக்கடுங்கோ வாழியாதனைப் புலன் அழுக்கற்ற அந்தணாளனாகிய கபிலர் “ஆயிரம் ஆம்பல் ஊழி வாழ்க” என்று வாழ்த்துவாராயினர்.

ஊழியாவது உலகம் தோன்றி மறையுங்காலமென்ப ‘576 ஊழி கொண்டது ஓர் ஆம்பல்’ என்பர் கோவை இளஞ்சேரனார்[19]. ஆம்பல்ஆம்பல் ஒரு கமலம் என்னை? ஆம்பல் எண் மடங்கு கொண்டது ஒரு கமலமாதலின் என்க. ஆம்பல்8

நெய்தல் என்னும் நீர்க்கொடி, தாமரை, ஆம்பல், குவளை, நீலம், கொட்டி முதலியவற்றுடன் சேர்ந்தும் தனித்தும் நன்னீர் நிலைகளிலும் சிற்றருவிகளிலும் உப்பங்கழியிலும் வளரும் இயல்பிற்று. பகைவர்களால் அழிக்கப்பட்ட நெல் வயல்களிலும் நெய்தல் வளர்வதுண்டு. வடித்தெடுத்த வேலின் இலை வடிவான பசிய இலைகளை உடையது. இவ்விலைகள் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சேற்றில் புதைந்திருக்கும். இதற்கு அடிமட்டத் தண்டு என்று பெயர். நீண்ட இலைக் காம்புகளினால் மேல் எழும்பி இலைகள் நீரில் மிதக்கும். விழாக் காலத்து விழவணி மகளிர் இதனுடைய இலைகளைத் தனித்தும் ஆம்பல் இலைகளுடன் சேர்த்தும் தழையணி செய்வர். நெய்தல் மலரை மகளிரின் கண்களுக்கு உவமிப்பர். மலரில் நறுமணமுண்டு. கழியிடத்துப் பூக்கும் நெய்தல் மலரை மகளிர் கொய்து சூடிக் கொள்வர். கரும்பின் பாகை அடுகையினாலே உண்டாகும் புகை பட்டு நெய்தல் மலர் வாடிப் போகும் என்றுரைக்கும் பட்டினப்பாலை, நெய்தல்கொடி தாமரையுடனும், குவளையுடனும் வளரும் என்ப.

“சிறுபாசடைய செப்பு ஊர் நெய்தல்
 தெண்ணீர் மலரின்...............”
-நற். 23 : 7-8

“கொடுங் கழிநிவந்த நெடுங்கால் நெய்தல்
 அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ”
-நற். 96 : 7-8

“ஒள்நுதல் மகளிர் ஓங்கு கழிக்குற்ற
 கண்நேர் ஒப்பின் கமழ்நறு நெய்தல்”
-நற். 283 : 1-2

“கானல் அம்பெருந் துறைக்கவினி மாநீர்ப்
 பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
 விழவணி மகளிர் தழையணிக் கூட்டும்”

-அகநா. 70. 10-12

“கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்
 சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்”

-புறநா. 61. 1-2

“மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்”-பதிற். 64. 16

“அருவி யாணர் அகன்கண் செறுவின்
 அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
 செறுவினை மகளிர் மலிந்த வெக்கை”
-பதிற். 71. 1-3

“வள்ளிதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து
 மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி”
-பதிற். 78. 4-5

“நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
 பூச்சாம்பும் புலத்து ஆங்கண்”
-பட்டின. 11-12

“மாஇதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி”

-பட்டின. 241

“கள் கமழும் நறு நெய்தல்”-மதுரைக். 250

“வாழை வள்ளி நீள்நறு நெய்தல்”-குறிஞ். 79

“...வெண்காற் செறுவில்
 மைஎன விரிந்த நீள் நறுநெய்தல்”
-மலைபடு. 123-124


நெய்தல் மலர் கருநீல நிறமும் நறுமணமும் உள்ளது. அகன்று நீண்ட இதழ்களை உடையது. பூ நீலமணி போன்றதெனவும், கண் போன்றதெனவும் நெடுநேரம் சுனையாடிக் கயம் மூழ்கும் மகளிரின் உள்ளகம் சிவந்த கண்களைப் போன்றதெனவும் கூறுவர்.


“நீள்நறு நெய்தல்”-நற். 382, புறநா. 144

“மணிமருள் நெய்தல்”-மதுரை. 282

“கணைத்த நெய்தல் கண்போல் மாமலர்”-அகநா. 150

“மணிக்கலந் தன்ன மாஇதழ் நெய்தல்”-பதிற். 30

“சிறுகரு நெய்தல் கண்போல் மாமலர்”-அகநா. 220

“பாசடை கிவந்த கணைக்கால் நெய்தல்
 கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்”
-குறுந். 9

நற்றிணையில் ஒரு காட்சி :

திருமணத்தை இடை வைத்துப் பொருள் தேடச் சென்ற தலைவன் குறித்த பருவத்தில் வரவில்லை. அதனால் தலைவி வருந்திக் கொண்டிருக்கிறாள். தலைவன் வரைவொடு வருகின்ற குறிப்பறிந்த தோழி தலைவியை நோக்கி, “நமது கழியின் கண்ணே தலைவன் நிதியுடன் வருகின்ற தேரின் ஒலியைக் கேட்பாயாக” என்று சொல்கின்றாள். இதனை நற்றிணைப் புலவர் நெய்தல் திணையின் ஒரு காட்சியாகச் சித்திரிக்கின்றார். உப்பங்கழியில் (Back water) நீர் தேங்கி நிற்கிறது. நீர் தண்மையாக உள்ளது. அதில் சுறா மீன்கள் மலிந்துள்ளன. உப்பங்கழியின் கரையோரத்திலே புன்னை மரமும் பூத்திருக்கின்றது. புன்னையின் பூக்கள் தமது பொன்னிறமான தாதுக்களை நெய்தல் மலர் மேல் நிலவும் படியாகத் தூவுகின்றன. இக்கானலிடத்தே வீழ் ஊன்றிய அடியை உடைய தாழையின் மலர் மணம் கமழ்கின்றது. இங்ஙனமாக இயற்கையன்னை எழில் குலுங்கும் கானல். இந்த இயற்கையுண்மையைக் கூறுமிடத்து இப்பொருள்பட இதனைக் கூறுகின்றார். கழியில் கோட்சுறா வழங்குமென்பது தலைவியின் களவொழுக்கம் சேரியில் அலராகின்றதையும், அக்கழியினிடத்தே பூத்த நெய்தல் மலர் நிறையும்படியாகப் புன்னை மரம் தனது நுண்ணிய பொன்னிறத் தாதை உகுக்கும் என்பது - ‘சேரியிடத்து நமர் கையேற்ப நிரம்பிய பொற்குவியலைச் சேர்ப்பன் நம்மை வரைதற் பொருட்டுக் கொடாநிற்பன்’ என்பதும், ‘தாழம்பூவின் மணம் கானல் எங்கும் கமழும் என்பது - அவன் வரைவு நாடெங்கும் மாட்சிமைப்படும்’ என்பதும் இறைச்சிப் பொருளாக இப்பாட்டில் காணப்படுகின்றன.

“கோட்சுறா வழங்கும் வான்கேழ் இருங்கழி
 மணிஏர் நெய்தல் மாமலர் நிறையப்
 பொன்னேர் நுண்தாது புன்னை தூஉம்
 வீழ்த்தாள் தாழைப் பூங்கமழ் கானம்”
-நற். 78

நெய்தல் விடியற்காலையில் மலரும் எனவும், அதில் தேன் மிகுந்திருக்குமெனவும், அதில் வண்டினம் மொய்க்குமெனவும், அதனை நாரை உண்பதும், எருமை மேய்வதும் உண்டு எனவும், மாலையில் இம்மலர் கூம்பும் எனவும் புலவர் பெருமக்கள் கூறுப. நீலமான நெய்தற் பூவிதழ்களுடன் அடம்பின் (அடம்பு) செவ்விய பூக்களை விரவித் தொடுத்து மகளிர் கூந்தலில் அணிவர். இதன் நறிய மலர்களைச் செருந்திப் பூக்களுடன் விரவி மாலையாகப் புனைந்து ஆடவரும் அணிவர். நெய்தற் பூவின் புறவிதழ்களை ஒடித்து மாலை கட்டிச் சூடுதலுக்கு ‘நெய்தல் நெறித்தல்’ என்று பெயர்.

“------------------ தண்புலர்
 வைகுறு விடியல் போகிய எருமை
 நெய்தலம் புதுமலர் மாந்தும்”
-அகம். 100 : 15-17

“முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
 கட்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
 கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
 அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்”

-திருமுரு. 73-76

“அடும்பின் ஆய்மலர் விரைஇ நெய்தல்
 நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்”

-குறுந். 401. 1-2

“நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
 கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்”
-ஐங்குறு. 182

“வள்இதழ் நெய்தல் கூம்பப்புள் உடன்
 கமழ்பூம் பொதும்பர்க் கட்சிசேர
 செல்சுடர் மழுங்க.........”
-நற். 117. 3-5

நீல நிறமுள்ள பெரிய நெய்தல் மலர் பல்லாற்றானும் செங்கழுநீர்ப் பூவைப் போன்றது. இதழ் வளவியதாய் அகன்று இருக்கும். நறுமணத்துடன் தேன் சுரக்கும் இயல்பிற்று. புறவிதழ்களின் உட்புறம் நீலமானது. வெளிப்புறம் சற்றுப் பசிய நிறமானது. நெய்தல் முகையில் இவை திருகு அமைப்பில் அகவிதழ்களை மூடிக் கொண்டிருக்கும் இதனை நெய்தல் மூக்கு என்பர் (நற். 372). முகை அவிழ வேண்டுமெனின் புறவிதழின் திருகமைப்பு பிரிதல் வேண்டும். புறவிதழ் விரிந்தால் அகவிதழ்கள் மலரும். இவை விரிந்தால்தான் சுரும்பின் இனம் இவற்றின் அடியில் பிலிற்றும் தேனை நுகர்தல் கூடும். இதன் நறுந்தேனைச் சுரும்பு உண்ணுதற்குப் பெரியதும் தண்ணிதுமான நெய்தல் மலரும் என்பர்.

“சுரும்புண மலர்ந்த பெருந்தண் நெய்தல்”

-அகநா. 290-14
சாகுந்தல நாடகத்தின் தொடக்கத்திலே அதன் ஆசிரியர் பாடினி வாயிலாக இயற்கை எழிலைப் புலப்படுத்துகின்றார். ஆசிரியர் மறைமலை அடிகளார் அச்சுலோகத்தைத் தமிழ்ச் செய்யுளாக மொழி பெயர்க்கின்றார். மலர் முகிழ் விரிதற்கு வரிவண்டு முத்தமிடும் என்கிறார்.

“விரியும் மணம்அவிழ்க்கும் மலர்முகிழ் மேல்எல்லாம்
 கரிய வரிவண்டு முத்தமிடல் காணாய்”

நெய்தல் மலரோ சுரும்பு மது நுகரும் பொருட்டு, விரிந்து மணம் பரப்பும் என்பர் அகநானூற்றுப் புலவர். நெய்தற்பூ, மட்டும் கபிலரால் ‘நீள் நறுநெய்தல்’ எனவும் ‘கட்கமழ் நெய்தல்’ எனவும் குறிஞ்சிப் பாட்டில் சிறப்பாகப் பாடப் பெறும்.

நெய்தல் என்பது எது என்று இந்நாளில் தாவர நூற் புலவர்களும், தமிழ் நூற் புலவர்களும் பெரும்பூசலிடுகின்றனர். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இதனை அன்றைக்கே தெளிவுபடுத்தியுள்ளார். அவர் ‘நீள் நறு நெய்தல்’ என்ற குறிஞ்சிப் பாட்டு அடிக்கு (79) நீண்ட நறிய நெய்தற் பூ என்று கூறினாராயினும், ‘கட்கமழ் நெய்தல்’ என்றவிடத்து (குறிஞ். 84) தேன் நாறுங் கருங்குவளை என்று உரை கூறினார். மேலும் அவரே ‘தண்கயக்குவளை’ (குறிஞ். 63) என்றவிடத்து ‘குளிர்ந்த குளத்திற் பூத்த செங்கழுநீர்ப்பூ’ என்று உரை வகுத்தார். ஆகவே நெய்தல் என்பது கருங்குவளை எனவும், குவளை என்பது செங்கழுநீர் எனவும் எளிதில் அறியலாம். இதனை அறியாத விரிவிலா அறிவினர் வாய்க்கு வந்தவாறு உரை எழுதிக் குழப்பி விட்டனர். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இங்ஙனம் உரை கூறியதற்கு மூலமில்லாமலில்லை. ‘சிறுகரு நெய்தல்’ என்ற பேயனார் கூற்று (அகநா. 230-2) மீள நினைதற்பாலது. கபிலர் நெய்தலையும் குவளையையும் தனித்தனிப் பிரித்துப் பேசுவர். அன்றி நீலப்பூ ஒன்றும் இவற்றுடன் இணைத்துப் பேசப்படுகின்றது.

“கட்கமழும் நறுநெய்தல்
 வள்ளிதழ் அவிழ் நீலம்”
-மதுரைக். 250, 251

என மாங்குடி மருதனார் பாடுதலின் நெய்தல் வேறு, நீலம் வேறு என்பதாயிற்று.

“தண் கயக் குவளை”-குறிஞ். 63

“நீள்நறு நெய்தல்”-குறிஞ். 79 எனக் கபிலரும்,

“மாயிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி”-பட்டின. 241

எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் கூறுதலின் நெய்தல் வேறு, குவளை வேறு என்பதாயிற்று.

“அரக்கிதழ்க் குவளையொடு நீலம் நீடி”

-பெரும்பா. 293
எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுதலின் குவளை வேறு, நீலம் வேறு என்பதாயிற்று.

“பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்”-ஐங்கு. 2

என ஓரம்போகியார் பாடுதலின் நீலம் வேறு, நெய்தல் வேறு என்பதோடன்றி நீலம், கருங்குவளை ஆகாமையும் புலனாகும். ‘அரக்கிதழ்க் குவளையொடு நீலம் நீடி’ என்ற இப் பெரும் பாணாற்றுப்படை அடிக்கு நச்சினார்க்கினியர் “சாதிலிங்கம் போன்ற இதழை உடைய குவளையொடு நீலப்பூவும் வளர்ந்து” எனக் குவளையைச் செங்குவளையாக்கி உரை கூறியதற்குக் காரணம், உருத்திரங்கண்ணனார் அதனை அரக்கிதழ்க்குவளை என்றதேயாம். மேலும் ‘நீலப்பைஞ்சுனை’ (திருமுருகு. 253) என்பதற்கு நச்சினார்க்கினியர், தருப்பை வளர்ந்த பசிய சுனை என்றாராயினும், பத்துப்பாட்டின் பழைய உரையாசிரியர் ‘நீலோற்பல முதலாகவுள்ள’ என்பதும் உணரற்பாற்று. எனினும் ‘வள்ளிதழ் அவிழ் நீலம்’ (மதுரைக். 251) என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பெருமை உடைய இதழ் விரிந்த நீலப்பூ’ என்றே உரை கூறி, ‘மாயிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி’ (பட்டி. 241) என்ற அடியைக் குவளையொடு ‘மாயிதழ் நெய்தலும் மயங்கி’ எனக் கொண்டு கூட்டி, ‘குவளையொடெ பெருமை உடைய இதழ்களை உடைய நெய்தலும்’ என உரை வகுத்துள்ளார். எனவே நச்சினார்க்கினியர் நெய்தலைக் கருங்குவளை எனவும், குவளையைச் செங்குவளை எனவும் கொண்டதோடன்றி நீலமென்பது நீலப்பூ எனக் குறிப்பதுடன் நெய்தற் பூவை, ‘வள்ளிதழ் நெய்தல்’ எனப் பலரும் பாடுமாறு கண்டு பெருமை உடைய இதழ்களை உடையதாகவே கருதுகின்றார் என்பதும் விளங்கும்.

இருப்பினும், பத்துப் பாட்டுப் பதிப்பாசிரியர் (1950) பக். 365 பின்வரும் குறிப்பெழுதுகின்றார்:

“பெருமை உடைய நீலம் நெய்தல் என்னும் இருவகை மலர்களுள், நீலம் சிறப்புடையதாகலின் இவ்வாறு உரை எழுதினார். பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் என்றதற்கு (ஐங்கு. 2-4) அதன் உரையாசிரியர் சிறப்புடைய கருங்குவளையுடனே சிறப்பில்லாத நெய்தல் நிகர்க்கும் ஊரனென்றது” என்று எழுதியிருத்தல் இதனை வலியுறுத்தும். இக்குறிப்பினை உற்று நோக்கினால் ஐங்குறுநூற்று உரையாசிரியர் நீலம் என்பதற்குக் கருங்குவளை எனப் பொருள் கொண்டதோடமையாமல் ‘சிறப்புடைய கருங்குவளையுடன் சிறப்பில்லாத நெய்தல்’ எனவும் சிறப்புரை செய்துள்ளார் என்பது போதரும். ஆதலின் பத்துப் பாட்டுப் பதிப்பாசிரியரும், ஐங்குறுநூற்று உரையாசிரியரும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் இம்மலர்ப் பெயர்களுக்கு எழுதியுள்ள உண்மை உரையினை எங்ஙனம் அறியாராயினர் என்பதுதான் விளங்கவில்லை.

ஆகவே குவளை என்பது செங்குவளை எனவும், நீலோற்பலமெனவும், செங்கழுநீர்ப்பூ எனவும் வழங்கியுள்ளமை அறியலாம். தில்லையம்பதியிலே கோயில் கொண்டுள்ள அம்மை சிவகாம சுந்தரியின் திருக்கரத்தில் சற்று விரிந்த நீலோற்பல மலர் உள்ளது. இதன் அகவிதழ்கள் புறத்தில் நீலமாகவும் அகத்தில் சிவப்பு நிறமாகவும் இருக்கும். புறவிதழ்கள் கருஞ்சிவப்பாக இருக்கும். கருங்குவளை என்பதுதான் நெய்தல் மலர். இதன் அகவிதழ்கள் கருநீல நிறமானவை. இதனுடைய புறவிதழ்களின் உட்புறம் கருநீலமாக இருக்குமாயினும் வெளிப்புறம் பசு நீலமாக இருக்கும். செங்குவளை, கருங்குவளை, ஆம்பல் எனப்படும் பல வண்ண அல்லிப் பூக்கள் அனைத்தும் தாவரவியலில் (Nymphaea) நிம்பேயா என்னும் (Genus) பேரினத்தைச் சேர்ந்தவை. இவற்றின் இனப் பெயர்கள் (species) வேறுபடும்.

தாவரவியல் கருங்குவளையாகிய நெய்தலை (Nymphaea violacea) நிம்பேயா வயலேசியா எனவும், செங்குவளையாகிய நீலோற்பலத்தை (Nymphaea stellata) நிம்பேயா ஸ்டெல்லேட்டா எனவும், நீலம் என்பதனை (Nymphaea blue) நிம்பேயா புளு எனவும் அல்லியாகிய ஆம்பலை (Nymphaea pubescens) (வெள்ளை அல்லி) நிம்பேயா பூபசென்ஸ் எனவும், செந்நிறமான அரக்காம்பலை (Nymphaea rubra) நிம்பேயா ரூப்ரா எனவும், நீல அல்லியை (Nymphaea ampla) நிம்பேயா ஆம்பிளா எனவும் குறிப்பிடுவர். இவையனைத்தும் (Nymphaeaceae) நிம்பயேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை.

மற்று, ஒரு சிலர் நிறத்தை மட்டுங் கொண்டு நீல அல்லியை கருங்குவளை என்றோ நெய்தலென்றோ நீலமென்றோ கருதுவதற்கு இடமுண்டு. ஆனால், இவைகளின் இலை வடிவம் வேறுபடுதலின் அங்ஙனம் கொள்ளுதல் கூடாது. செங்குவளையின் இலை அல்லியின் இலையைப் பெரிதும் ஒத்திருக்கும். அல்லியிலை வட்ட வடிவானது. செங்குவளையின் இலை ஏறக்குறைய முட்டை வடிவானது. கருங்குவளையின் இலை முக்கோணமாக நீள்முட்டை வடிவம் அல்லது அகன்ற வேல்முனை வடிவானது; செங்குவளை, அல்லி இவற்றின் இலைகளைப் போலவே அடியில் பிளவுபட்டிருக்கும்; சற்றுச் சிறியதாக இருக்கும் இலைக்காம்பு இவற்றின் இலையின் அடி ஒட்டியது; இலைகளும் பூக்களும் நீண்ட காம்புகளை உடையன. இலைகள் நீரில் மிதக்கும். இம்மூன்று இனமான நீர்க்கொடிகளையும் இவற்றின் இலை வடிவைக் கொண்டுதான் வேறுபடுத்த முடியும்.

நெய்தல் இலையை வடித்தெடுத்த வேல் இலைக்கு உவமித்துப் பாடுகின்றார் அகநானூற்றுப் புலவர் குடவாயிற் கீரத்தனார். இப்பாட்டு இல்லையெனின் நெய்தலின் தாவரவியற் பெயரைக் கண்டு சொல்ல முடியாது போகும்.

“நெய்தல் உருவின்ஐது இலங்கு அகல்இலை
 தொடையமை பீலி பொலிந்த கடிகை
 மடைஅமை திண் சுரை மாக்காழ்வேலொடு”

-அகநா. 119: 11-13

இதனுள் கூறிய நெய்தல் இலையின் வடிவம் தாவரவியல் நூல் விவரிக்கும் இதன் வடிவத்துடன் ஒத்துள்ளமை மகிழ்தற்குரியது. மலர் நீலநிறமாகவும், மையுண்ட கண் போன்றுமிருக்கும். நறுமணம் உடையது.

“நீல்நிற நெய்தல் நிறையிதழ் பொருந்த”-நற். 382:2
“சிறுகரு நெய்தல் கண்போல் மாமலர்”-அகநா. 230:2
“நீல்நறு நெய்தலின் பொலிந்த உண்கண்”-புற. 244


மேலும் இதன் மலர் விரியும் போது நறுமணம் வெளிப்படும். இதழ்களுக்கு அடியில் உட்புறமாகத் தேன் சுரப்பிகள் உள்ளன. இதன் தேனும் நறுமணமுடையது. ஆதலின் ‘கட்கமழ் நறுநெய்தல்’ எனப் புலவர் பாடுவர். இதன் நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட சுரும்பு நெய்தலின் மதுவையும் மகரந்தத்தையும் உண்டு மகிழும்.

நெய்தல் நிலம்

பாண்டியன் நாடு ஐவகை நிலங்களும் அமையப் பெற்றது. இவற்றை விவரிக்கும் மதுரைக் காஞ்சி நெய்தல் நிலத்தின் பொதுவியல்புகளைக் (314-325) கூறுகின்றது.

பெருநீர் ஓச்சுநர் தமது நாவாயின் கண்ணே கடல் தந்த முத்துக்களையும், விளங்கும் வளையல்களையும், உப்பு, புளி, மீன் உணங்கல் முதலாய பலவாய் வேறுபட்ட பண்டங்களையும் ஏற்றியுள்ளனர். யவனம் முதலிய தேயத்தினின்றும் கொண்டு வந்த குதிரைகளும் அவற்றுள் உள்ளன. இவ்விடத்துண்டாகிய பேரணிகலன்களையும் பிறவற்றையும் ஆண்டுச் செலுத்துதற்கு இப்பரிகள் வேண்டப்படும். இவை நாள் தோறும் நிகழும் நடைமுறை. இவை மிகுகையினாலே நெய்தல் நிலப் பாங்கு வளம் பல பயிலப்பட்டு உள்ளது என்பர் மாங்குடி மருதனார்.

நெய்தல் (கருங்குவளை) தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : நிம்பயேசீ (Nymphaeaceae)
தாவரப் பேரினப் பெயர் : நிம்பேயா (Nymphaea)
தாவரச் சிற்றினப் பெயர் : வயலேசியா (violacea, )
தாவர இயல்பு : நீர் வாழ் செடி, பல பருவ நீர்த் தாவரம்
தாவர வளரியல்பு : நன்னீரிலும், கழிநீரிலும், உப்பங் கழியிலும் பல்லாண்டு வாழும் நீர்ச் செடி

நெய்தல்-கருங்குவளை
(Nymphaea violacea,)

வேர்த் தொகுதி : சேற்றில் புதைந்துள்ள அடிமட்டத் தண்டு (கிழங்கு) நீர் நிரம்பும் போது தளிர் விட்டு வளரும். நீரின் மேலே இலை, அரும்பு, மலர் முதலியவை காணப்படும். நீர் வற்றிய போது இவை அழிந்து போனாலும் கிழங்கு (அடி மட்டத் தண்டு) அழியாது இருக்கும்.
இலை : கிழங்கிலிருந்து உண்டாகும். இலைக் காம்பினால் இணைந்த நீள் முக்கோண வடிவான அகன்ற வேல் இலை போன்ற பசிய இலைகள் நீரில் மிதந்து காணப்படும். இவ்விலை அல்லியின் இலையைப் போலவே அடியில் நீண்ட பிளவுற்றிருக்கும் (அல்லியிலை வட்ட வடிவானது).
இலைக் காம்பு : நீளமானது, நீரளவிற்கும் நீளும் இயல்பிற்று.
இலை விளிம்பு : கூரிய சிறு பற்களை உடையது. பற்கள் இடையீடுபட்டவை.
இலைப் பரப்பு : இருபுறமும் உரோமங்களற்றவை.
மலர் : ஒழுங்கானவை. இருபாலானவை. நீண்ட மலர்க்காம்பின் நுனியில் தனி மலராக வளரும். மலர்க்காம்பு இலைக் கோணத்தில் உண்டாகும். நீலமும் கரு நீலமான மலர்.
புல்லி வட்டம் : 3-4 புல்லி இதழ்கள். புறத்தில் கரும் பசிய நிறமானது. உட்புறம் வெளிர் நீலமானது. திருகு அமைப்பானது.
அல்லி வட்டம் : 8-10 நீண்ட வளவிய அகவிதழ்களை உடையது. நீலமும் கருநீலமுமான நிறமான அகவிதழ்கள். சுற்றடுக்காக அமைந்துள்ளன. உள்ளடுக்குகள் சிறிது சிறிதாக மகரந்தத் தாள்களாக மாறும் நிலையில் உள்ளன.
மகரந்தத் தாள்கள் : எண்ணற்ற இதழ் போன்ற மகரந்தத் தாள்களுடன் சிறிய, உள்நோக்கி அமைந்த மகரந்தப் பைகளைக் கொண்டிருக்கும். 3 சூலிலைகள் இணைந்து பல அறைகள் கொண்ட சூற்பையாக இருக்கும்.
சூல்கள் : அதிகமானவை, அனட்ரோபஸ் வகையிலானவை

இது நீலோற்பலம் என்று கருதப்பட்டுத் தில்லைக் கோயிற் புறத்திலுள்ள குட்டையில் வளர்க்கப்பட்டிருந்தது. நீலோற்பல மலரின் அகவிதழ்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும், புறவிதழ்கள் கருஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். மேலும், இது செங்கழுநீர் எனவும் குவளை எனவும் வழங்கப்படும். இதனைப் பற்றிய விளக்கங்களைக் குவளை என்ற தலைப்பில் காணலாம்.

 

தாமரை
நிலம்பியம்‌ ஸ்பீசியோசம்‌
(Nelumbium speciosum, Willd.)

தாமரை எனவும் கமலம் எனவும் சங்க நூல்கள் கூறும். நன்னீர்க் கொடியில் மலரும் தாமரையில் இருவகை உண்டு. செவ்விய இதழ்களை உடையது செந்தாமரை. தூய வெண்மையான இதழ்களை உடையது வெண்தாமரை. இவையிரண்டும் சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தாமரை மலரைத் ‘தெய்வ மலர்’ என்று கூறுவர் கோவை. இளஞ்சேரனார்.[20] சிறுபாணாற்றுப்படை (73) இதனைத் ‘தெய்வத்தாமரை’ என்று கூறுமாறு கொண்டு.

சங்க இலக்கியப் பெயர் : தாமரை, கமலம்
தாவரப் பெயர் : நிலம்பியம் ஸ்பீசியோசம்
(Nelumbium speciosum)
ஆங்கிலப் பெயர் : சேக்ரட் லோடஸ் (Sacred lotus)


தாமரை இலக்கியம்

சிறுபாணாற்றுப்படை தாமரையைத் ‘தெய்வத்தாமரை’ 73 என்று கூறுகின்றது.

எண்ணில் பெருந் தொகைக்கும் ஈடற்றதென விளங்கும் குறுந்தொகையில், கடவுள் வாழ்த்துப் பாடல் முருகப் பெருமானைப் பற்றியதாகும். பெருமானுடைய விருப்பம் மருவிய செம்மையாகிய திருவடி தாமரை மலரைப் போன்று அழகியது என்று தாமரை மலரை உவமையாகக் கூறுவார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

“தாமரை புரையும் காமர் சேவடிப்
 பவளத் தன்ன மேனித் திகழொளிக்
 குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
 நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
 சேவலங் கொடியோன் காப்ப
 ஏம வைகல் எய்தின்றால் உலகே”
-குறுந். 1

சேவடி என்றமையின் செந்தாமரையைக் குறிக்கும். குறுந்தொகைக்கு முதற் பாடலாக அமைந்த இதனுள் நானிலங்கட்கும் உரிய கருப்பொருள்கள் கூறப்படுகின்றன. அவையெல்லாம் செந்நிறமானவையாகலின், தாமரையும் செந்தாமரையாகுமெனக் கோடலும் ஒன்று.

தாமரை ஒரு கொடி; நன்னீரில் வாழும். தாமரையின் தண்டு அது வளரும் சேற்றில் புதைந்திருக்கும். அதிலிருந்து இலைகளும், மலர்களும் நீண்ட காம்புகளைக் கொண்டு நீர்ப்பரப்பின் மேலே மிதந்து வளரும். இலைக் காம்பிலும் மலர்க் காம்பிலும் முட்கள் மலிந்திருக்கும். புலவர்கள் முள் நிறைந்த தாளையுடைய தாமரை என்று பாடுவர்.

“தாழை தவளம் முட்டாள தாமரை”-குறிஞ். 80
முள் அரைத் தாமரை”-சிறுபா. 144
முட்டாட்டாமரை துஞ்சி”-திருமு. 73

மேலும், இக்காம்புகள் நுண்ணிய துளைகளை உடையவை. இவற்றுள் காற்று நிறைந்திருக்கும். அதனால், இதன் இலைகளும், மலர்களும் நீரில் மிதக்க இயலும். தாமரை மலரிதழ்களின் நிறத்தால் செந்தாமரை. வெண்டாமரை என இருவகை உள்ளன. நீலத்தாமரை வடநாட்டில் வளர்வதாகக் கூறுவர். செந்தாமரையின் அகவிதழ்கள் கருஞ்சிவப்பு நிறமாகக் கூறப்படுகின்றன.

“திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை
 ஆசில் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
 சேயிதழ் பொதிந்த”
-சிறுபா. 73-75

மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
 அல்லிசேர் ஆயிதழ் அரக்குத் தோய்ந்தவை போல்”

-கலி. 13 : 11-13

வெண்டாமரையின் இதழ் நல்ல வெண்மை நிறமானது. இதனை முயற்காதிற்கு ஒப்பிடுவர்.

“முள்ளரைத் தாமரை புல்லிதழ் புரையும்
 நெடுஞ்செவிக் குறுமுயல் . . . . ”
-பெரும்பா. 114-115

(புல்லிதழ்-மெல்லிய இதழ்)

சேற்றில் வளரும் செந்தாமரை, கதிரவனைக் கண்டு மலர்வது. ஐந்து புறவிதழ்களை உடையது. அகவிதழ்கள் ஏறக்குறைய 20-25 ஒரே மாதிரியாக இருக்கும். தாமரையில் நூற்றுக்கணக்கான அகவிதழ்கள் உன்டென்பர் புலவர்.

“சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்
 நூற்றிதழ் அலரின் நிரை கண் டன்ன
 வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து”

-புறநா. 27: 1-3

“நூற்றிதழ்த் தாமரை”-ஐங்: 20

கதிரவன் தாமரையை மலர்த்தித் தனது வெப்பத்தை அதனுள் பெய்தான். மாலையில் பனி பெய்யுங்கால் தாமரை கூம்பியது. கதிரவன் வைத்த சிறு வெப்பம் உள்ளே பொதிந்திருந்தது. இதனை ஒத்தவள் தலைவி என்பது மோசிக்கொற்றன் கூற்று

“ . . . . . . . . . . . . . . . .பனியே
 வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
 அலங்கு வெயிற் பொதித்த தாமரை
 உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே”
-குறுந்., 376 : 4-6

போது மலராகி விரியும் போது மலரின் உட்புறத்தில் சிறிது வெப்பம் உண்டாகுமென்பது தாவர அறிவியலுண்மை. இதனைச் ‘சூடுதரு புதுப்பூ’ என்று புலவர் பாடுவர். இதனை விரிவாகப் பிறிதோரிடத்திற் கூறினாம்.

தாமரைப்பூவின் நடுவே நீண்டு உருண்ட ‘பொகுட்டு’ இருக்கும். இதனைச் சுற்றி மகரந்தத் தாள்கள் மலிந்திருக்கும். இவற்றில் தாதுக்கள் உண்டாகும். இவற்றை உண்ணுதற்கு வண்டுகள் மொய்க்கும். இவ்வுண்மைகளைத் தொகுத்து மதுரை மாநகரின் அமைப்பாகப் பாடுகின்றார் ஒரு புலவர்.

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
 பூவொடு புரையும் சீர் ஊர், பூவின்
 இதழகத் தன்ன தெருவம்; இதழகத்து
 அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்
 தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
 தாதுண்பறவை அனையர் பரிசில் வாழ்நர்”

-பரி.திரட்டு : 8

தாமரைக்குக் கமலம் என்றதொரு சங்கத் தமிழ்ப் பெயரும் உண்டு.

“மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய”-பரிபா. 2 : 14

கமலம் என்ற இச்சொல் ஈண்டு பேரெண்ணைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

“ஐ,அம்பல் என வரூஉம் இறுதி
அல்பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்”

-தொல். எழுத்து: 8:98
என்னும் தொல்காப்பிய நூற்பாவினால் ‘ஐ’ என்னும் எழுத்தை இறுதியாகக் கொண்ட ‘தாமரை’ அல்லது ‘அம்’ என்பதை இறுதியாகக் கொண்ட ‘கமலம்’ என்னும் பெயர் எனத் துணியலாம்.

நூறு நூறாயிரம் என்பது ஒரு கோடி ஆண்டுகள். அதாவது:

100 x 100000 = 107=கோடி 10000000
கோடி எண் மடங்கு கொண்டது 1056 -சங்கம்
சங்கம் எண் மடங்கு கொண்டது 10448 -விந்தம்
விந்தம் எண் மடங்கு கொண்டது 103584 -ஆம்பல்
ஆம்பல் எண் மடங்கு கொண்டது 1028672 -கமலம் அல்லது தாமரை
கமலம் எண் மடங்கு கொண்டது 10229376 -குவளை
குவளை எண் மடங்கு கொண்டது 101835008 -நெய்தல்
நெய்தல் எண் மடங்கு கொண்டது 1014680064 -வெள்ளம்

(இராமனது சேனை 70 வெள்ளமென்றும் இராவணனது சேனை 1000 வெள்ளமென்றும் கம்பர் கூறுவர்.)

இம்முறை வைப்பினைப் பிங்கலத்திலும் பரிபாடலிலும் ஈழ முனிவன் தன் யாழ் நூலிலும் கண்டு கொள்க. ஆகவே, தாமரை என்பது 1028672 என்று ஆகும். அதாவது 10 என்ற எண்ணை 28672 தடவை பெருக்கினால் வரும் எண்ணாகும். இங்ஙனமாகப் பெருகும் ‘கமல’மும் ‘வெள்ள’மும் நுதலிய ஆண்டுகளான பல்லூழிக் காலந்தொட்டு நிலைத்துள்ள “ஆழிமுதல்வ! நின்னை யாவரும் உணரார்! நிற்பேணுதும்"! என்கிறார் கீரந்தையார்

‘தாமரை பயந்த ஊழி’ (திருமு. 164) என ஊழிக்காலப் பேரெண்ணைக் குறிப்பது போலவே, மிகச் சிறு பொழுதிற்கும் தாமரை கொள்ளப்பட்டது. ‘கணம்’ என்னும் சொல் மிகச் சிறு நேரத்தைக் குறிக்கும். பல ஆயிரங் கணம் கொண்டது இமைக்கும் நேரம் என்பர். ‘கணம்’ என்னும் அணுவளவான நேரத்தை, அரபத்த நாவலர் என்னும் பரத நூல் புலவர் அளவிட்டுக் காட்டியுள்ளார்.[21] தாமரை மலரின் இதழ்களில் நூறு இதழ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். கூரிய ஊசி ஒன்றை அவ்வடுக்கின் மேல் வைத்து அழுத்த வேண்டும். நூறு இதழ்களில், முதல் ஓர் இதழில் ஊன்றும் நேரம் ஒரு கணமாம்.

திருமகள், கலைமகள், நான்முகன் முதலிய தெய்வங்கள் தாமரை மலரின் மேல் இடம் பெற்றனர் என்ப. ‘திருவளர் தாமரை’[22] என்ற சொற்றொடருக்குத் ‘திருமகள் தங்கும் தாமரை எனினும் அமையும்’ என்று உரை கூறுவர். மற்று, கருஞ்சிவப்பு நிறமுள்ள கண்ணனின் உடலும், உடல் உறுப்புகளும் தாமரை போன்றிருத்தலின் “கமலக்காடன்ன கண்ணன்” என்று போற்றும் திருவாய்மொழி.[23] புத்தர், அருகதேவர் முதலியோருக்கும் தாமரை முறையே இருப்பிடமாகவும் திருவடிக்கு உவமையாகவும் கூறப்படும்.

கடவுளரது உறுப்புகளையெல்லாம் தாமரையாகக் கொண்டு பாடியவர்கள், மாந்தரின் உறுப்புகளையும் அங்ஙனம் கூறாமல் இல்லை. முகம், கை, கன்னம் முதலிய புற உறுப்புகள், தாமரை மலருக்கு உவமையாக்கப்பட்டுள்ளன. இதயமும் தாமரை மொட்டுக்கு உவமிக்கப்படுகிறது.

தாமரை மருத நிலத்திற் சிறந்த மலராகும். ஆனால், மருத நிலம் மருத மரத்துப் பூவின் பெயரால் மருதம் எனப் பெயர் பெற்றது. ஆயினும், மருதமரப் பூவைக் குறித்தோரைச் சங்க இலக்கியத்தில் காண இயலவில்லை. அதனால், தாமரையை மருத நிலத்து மலராகக் குறிப்பிட்டுள்ளது இறையனார் களவியலுரை.

தாமரை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : தாலமிபுளோரே (Thalamiflorae)
தாவரக் குடும்பம் : நிம்பயேசி (Nymphaeaceae)
தாவரப் பேரினப் பெயர் : நிலம்பியம் (Nelumbium)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்பிசியோசம் (Speciosum, )
சங்க இலக்கியப் பெயர் : தாமரை, கமலம்
உலக வழக்குப் பெயர் : தாமரை, பதுமம், கமலம்
ஆங்கிலப் பெயர் : லோடஸ் (Lotus)
தாவர இயல்பு : நன்னீர்க் கொடி; குளம், குட்டை, பொய்கை முதலிய நன்னீர் நிலைகளில் வளரும். இதில் நிறத்தால் வேறுபட்ட செந்தாமரையும் வெண் தாமரையும் உண்டு.
தண்டு : சேற்றில் அழுந்திய அடிமட்டத் தண்டு கிழங்கு போன்றது. இதன் கணுவிலிருந்து இலைகளும், மலர்களும் உண்டாகும்.
இலை : இலை வட்டவடிவமானது (2-3 அடி) ஒரு வகையான கொழுப்புப் பொருள் இலைப் பரப்பில் உள்ளது. அதனால் நீர்த்துளி அதில் தங்குவதில்லை; ஒட்டுவதுமில்லை.
இலைக் காம்பு : 3-6 அடி நீளமானது. சிறுமுட்கள் அடர்ந்தது: இலையின் அடியில் நடுவில் இணைந்திருக்கும்.
மலர் : அகவிதழ்கள் செந்நிறமாக இருப்பின் செந்தாமரை எனவும், அவை வெண்ணிறமாக இருப்பின் வெண்டாமரை எனவும் கூறப்படும். நீண்ட முள் நிறைந்த மலர்க் காம்புகளில் முகை உண்டாகும். மலர் அகன்றது. வட்ட வடிவாகத் தோன்றும். பூத்த மலர் மிக அழகானது. நறுமணம் உள்ளது.
புல்லி வட்டம் : 4-5 புறவிதழ்கள் பசிய நிறமுள்ளவை. அகன்று நீண்டவை. இவை தாமரை மொட்டை மூடிக் கொண்டிருக்கும்.
அல்லி வட்டம் : பல அகவிதழ்கள் (20-25). நீண்ட அகன்ற மெல்லிய அழகிய இதழ்கள்.
மகரந்த வட்டம் : பல மகரந்தத் தாள்கள் மகரந்தப் பைகளைத் தாங்கி நிற்கும். இப்பைகளை இணைக்கும் மகரந்தத் தாள்; பைகளுக்கும் மேலும் நீண்டிருக்கும். பைகளில் தாது மிகுத்து உண்டாகும். வண்டினம் இத்தாதுக்களைத் தேடி வந்து நுகரும்.
சூலக வட்டம் : பொகுட்டு எனப்படுவது சற்று அகன்ற நீண்ட (3-4 அங்குலம்) ‘டோரஸ்’ எனப்படும் மலரின் நடுவில் இருக்கும். இதனுள் முட்டைவடிவான சூலகங்கள் அமைந்துள்ளன.
சூல் தண்டு : குட்டையானது.
சூல் : 1-2 சூல்கள் சூலக அறையில் காணப்படும்.
விதை : கடலை விதை போன்றது. சூலகத்தை நிறைத்துக் கொண்டு வளரும் விதையின் புறவுறை பஞ்சு போன்றது. இதனுள் சதைப்பற்றான இரு வித்திலைகள் காணப்படும். முளைக் குருத்து மடிந்திருக்கும்.

தாமரை, மலருக்காகக் குளங்களில் வளர்க்கப்படுகிறது. மணிவாசகர் சிவபெருமானது திருஉருவத்தைச் “செந்தாமரைக் காடனைய மேனி” என்றார்.[24]

 

ஐயவி
பிராசிக்கா ஆல்பா‌ (Brassica alba, H. f.& T.)

‘ஐயவி’ என்பது சிறிய வெண்கடுகுச் செடி. ஓராண்டுச் செடி. வெண்கடுகுக்காக இது பயிரிடப்படுகிறது.

சங்க இலக்கியப் பெயர் : ஐயவி
தாவரப் பெயர் : பிராசிக்கா ஆல்பா
(Brassica alba, H. f. & T.)

ஐயவி இலக்கியம்

சிறுவெண்கடுகு எனப்படும் ஐயவி, ஒரு சிறுசெடி இரண்டடி உயரம் வரையில் ஓங்கி வளரும். இது ஐவன வெண்ணெல் விளைந்த கொல்லையில், அதன் கதிர்களோடு பிணங்கி வளருமென்பர் மாங்குடி மருதனார்.

“............நெடுங்கால் ஐயவி
 ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி

-மதுரைக்.287-288

போரில் புண்பட்ட வீரர்களைப் பேய்க் கணம் தீண்டாதிருக்கும் பொருட்டு ‘ஐயவி’யைப் புகைப்பர் என்றும், ஐயவியைச் சிதறுவர் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

“வேம்பு மனை ஒடிப்பவும், காஞ்சிப் பாடவும்
 நெய்யுடைக்கையர் ஐயவி புகைக்கவும்
-புறநா. 296:1-3


“ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
 இசைமணி எறிந்து, காஞ்சிபாடி
 ..........காக்கம் வம்மோ
-புறநா. 281:4-5

ஐயவி ஆரல் மீனின் முட்டை போன்றது என்பர்.

“ஆரல் ஈன்ற ஐயவி முட்டை-புறநா. 342 : 9

ஐயவி மிகச் சிறியது. அதன் நிறை மிகக் குறைவானது. வான்மீகியார் என்ற புலவர், வையகத்தையும் மனிதன் நோற்கும் தவத்தையும் துலாக்கோவில் நிறை போடுகிறார். தவத்திற்கு முன்னே, ஐயவி நிறைக்குக் கூட வையகம் நிறை போகாது என்று கூறுகின்றார்.

“வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
 ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்”
-புறநா. 388:3-4

ஐயவி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே (Thalamiflorae)
பெரெய்டேலீஸ் (Parietales)
தாவரக் குடும்பம் : குரூசிபெரே (Cruciferae)
தாவரப் பேரினப் பெயர் : பிராசிக்கா (Brassica)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆல்பா (alba)
சங்க இலக்கியப் பெயர் : ஜயவி
உலக வழக்குப் பெயர் : வெண்கடுகு
தாவர இயல்பு : 2 அடி உயரம் வரை வளரும் சிறு செடி. அடியில் கிழங்கு இருக்கும். மேல் தண்டு முழுவதும் நுண்ணிய மயிர் நிறைந்திருக்கும். ஓராண்டுச் செடி.
இலை : சிறகன்ன பிளவுள்ள கூட்டு இலை முழுவதும் சிறுமயிர் அடர்ந்திருக்கும். சிற்றிலைகள் முட்டை வடிவானவை.
மஞ்சரி : மஞ்சள் நிற மலர்கள் நுனி வளர்பூங்கொத்தில் உண்டாகும்.
மலர் : மஞ்சள் நிறமானது.
கனி : ‘பாட்’ எனப்படும். இதன் கனியில் உண்டாகும் விதைகள் வெண்ணிறமானவை. சிறு வெண்கடுகு எனப்படுவது இதுவே.

இது கடுகுக்காகப் பயிரிடப்படுகிறது. இது ஒரு நல்ல மருந்துப் பொருள் என்பர். இதில் ‘கடுகு எண்ணெய்’ எடுக்கப்படுகிறது.

 

வேளை
கைனன்டிராப்சிஸ் பென்டாபில்லா

(Gynandropsis pentaphylla, DC)

சங்க இலக்கியங்கள் கூறும் ‘வேளை’ என்னும் சிறு செடி, ஓராண்டுதான் இருக்கும். இதன் பூக்கள் வெள்ளியவை. மாலைப் பொழுதில் பூக்கும். இப்பூ மலர்வதைக் கொண்டு, மழை நாளில் மாலைப் பொழுதை-மாலை வேளையை-அறிய முடியுமாதலின், இது ‘வேளை’ எனப்பட்டது போலும். இச்செடி குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : வேளை
உலக வழக்குப் பெயர் : வேளை, நல்வேளை
தாவரப் பெயர் : கைனன்டிராப்சிஸ் பென்டாபில்லா
(Gynandropsis pentaphylla. DC)


வேளை இலக்கியம்

நாட்டுப் புறத்தில் தெருக்கள் கூடுமிடத்திலுள்ள எருக் குப்பை மேட்டில் வேளைச்செடி தழைத்து வளரும். அதன் போதுகள் கொத்தாகவும் மலர்கள் வெண்மையாகவும் பூக்கும். ஆயர் மகள் இதன் பூக்களைக் கொய்து தயிரில் இட்டுப் பிசைந்து ‘புளி மிதவை’ எனப்படும் ‘புளிக்கூழ்’ ஆக்குவாள் என்பது புற நானூற்றுப் பாட்டு. இதனை:

“ தாதுஎரு மறுகின் போதொடு பொதுளிய
 வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
 ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
-புறநா. 215:2-4

வேளைக் கீரை மிகவும் வறிய மக்களுக்கு உணவாகப் பயன்படுகிறது என்பதை நல்லூர் நத்தத்தனார் சித்திரிக்கிறார். கிணை என்ற பறையடிப்பவனின் மகள், ஒடுங்கிய நுண்ணிய மருங்குலாள். பசியுழந்து தளர்ந்தாள். குப்பை மேட்டில் தழைத்து வளர்ந்துள்ள வேளைச் செடியைப் பார்த்தாள். தனது வளைக்கையின் நகத்தால் அதன் கீரைகளைக் கிள்ளி எடுத்து வந்து வேக வைத்தாள். அதில் கலப்பதற்கு உப்பும் இல்லை. பிற மடந்தையர் காணுதற்கு நாணி வெளிக்கதவை மூடினாள். மக்களை அழைத்து, உப்பின்றி வெந்த கீரையை எல்லோரும் உண்டனர். அழிபசி தீர்ந்தது எனப் பாடுகின்றார்.

“ஓங்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
 வளைக்கை கிணைமகள் உள்உகிர்க் குறைத்த
 குப்பை வேளை உப்பிலி வெந்ததை
 மடவோர் காட்சி நாணிக்கடை அடைத்து
 இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
 அழிபசி வருத்தம் வீட... ”
-சிறுபா. 135-140

வேளைப்பூவை மான் தின்னும் போலும். தனது ஆண் மானைப் புலியிடம் பறி கொடுத்த பெண்மான், தன் குட்டியுடன் சேர்ந்து நடந்து வருகிறது. ஆள் நடமாட்டமில்லாத ஒரு பாழிடத்தில் பூளையும் வேளையும் பூத்துள்ளதைப் பார்த்துப் பசியால் வேளையின் வெள்ளிய பூக்களைக் கடித்துத் தின்னுகிறது, என்று கூறுகிறது ஒரு புறப்பாடல்:

“அருமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டென
 சிறுமறி தழீஇ நெறிநடை மடப்பிணை
 பூளை நீடிய வெருவரு பறந்தலை
 வேளை வெண்பூக் கறிக்கும்
 ஆள்இல் அத்தம் ஆகிய காடே”
-புறநா. 23:18-22

பூளைச் செடியோடல்லாமல், சுரைக் கொடி படர்ந்துள்ள பாழ்பட்டவிடத்திலும் வேளை வளருமென்பதைப் பதிற்றுப் பத்தில் காணலாம்;

“தொல்கவின் அழிந்த கண்அகன் வைப்பில்
 வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்து”

-பதிற். 15:8-9

“வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய”

- பதிற். 90: 19

இச்செடி மான் அலையும் ஆளில்லாத காட்டிலும், ஆயர் தெருக் குப்பை மேட்டிலும் வளர்வதால் இது முல்லை நிலச் செடி என்பதும், கார்காலத்தில் பூக்கும் என்பதும் அறியப்படும்.

வேளை
(Gynandropsis pentaphylla,DC.)

காப்பாரிடேசி என்னும் இத்தாவரக் குடும்பத்தில் 46 பேரினங்களும், 700 சிற்றினங்களும் உள்ளன. பெரும்பாலும் இவை உலகின் இரு வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற்றுள், கப்பாரிஸ் (350), கிளியோம் (200), எனும் 2 மிகப் பெரிய பேரினங்களும், கிரடேவா (20) எனும் பேரினமும், உலக வெப்ப நாடுகளிலும், ஏனையவற்றுள் 15 பேரினங்கள் ஆப்பிரிக்கா நாட்டிலும், 3 பேரினங்கள் புது உலகிலும், 7 பேரினங்கள் யுரேசியாவிலும் காணப்படுகின்றன.

கப்பாரிடேசீ, குருசிபெரே என்னும் இரு தாவரக் குடும்பங்களும் ஒன்றோடொன்று மிகவும் நெருங்கியவை. இவை பழைய பொது மூலத் தாவரத் தொகுப்பிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும், குருசிபெரே குடும்பம் மிகப் பண்டைய கப்பாரிடேசீ குடும்பத் தாவரத் தொகுப்பிலிருந்து தோன்றியிருக்கக் கூடும் என்றும் தாவர மரபுவழி நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள். தாவரக் குடும்பங்களிலும் இரண்டறைச் சூலகமும், விளிம்பு ஒட்டு முறையில் உள்ள சூல்களும் அச்சு ஒட்டு முறைச் சூல்கள் இணைந்த நான்கறைச் சூலகத் தாவரங்களின்றும் தோன்றி இருக்கக் கூடுமென்பர்.

பயன் :

இது ‘நல்வேளை’ எனப்படும். இதன் பூ, கொழுந்துகளில் சாறு எடுத்துத் தாய்ப்பாலுடன் கொடுக்க, குழந்தைகளின் மார்புச் சளி நீங்குமென்பர். பொதுவாக, வேளை ஒரு நல்ல மருந்துச் செடி.

இதனுடைய இலைகளைக் கொய்து தயிரில் பிசைந்து, சுட வைத்துப் ‘புளிக்கூழ்’ ‘புளி மிதவை’ என்னும் உணவு ஆக்குவர் என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகின்றது. இன்னுமொரு பாடல், இதனுடைய இலைகளை வேக வைத்து உப்பின்றியும் ஏழை மக்கள் உணவாகக் கொள்வர் என்று உரைக்கும்.

வேளை தாவர அறிவியல்

தாவரவியல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
பகுதி : பெரைய்டேலீஸ்
தாவரக் குடும்பம் : கப்பாரிடேசீ
பேரினப் பெயர் : கைனன்டிராப்சிஸ் (Gynandropsis)
சிற்றினப் பெயர் : பென்டாபில்லா (Pentaphylla,DC)
இயல்பு : ஓராண்டுச் செடி
வளரியல்பு : மீசோபைட்
உயரம் : 20 செ.மீ. முதல் 95 செ.மீ. வரை
வேர்த் தொகுதி : ஆணிவேர் 8 செ.மீ. 15 செ.மீ. கிளை வேர்களும், சல்லி வேர்களும்.
தண்டுத் தொகுதி : முழுதும் சுரப்பி மயிர்கள் அடர்ந்துள்ளன. சுரப்பிகள் பிசுபிசுப்பான பொருளைக் கக்கும்.
கிளைத்தல் : கணுக் குருத்து தடித்து வளரும். நுனிக் குருத்து மெலிந்து வளரும். 3 அல்லது 4-ஆவது கணுவில் திரும்பவும் கணுக் குருத்து தடித்து வளரும். இது சிம்போடியல் முறையில் கிளைத்தல் எனப்படும்.
இலை : அங்கை வடிவக் கூட்டிலை, தண்டின் மேல் மாற்று இலை அடுக்கத்தில் வளரும்.
இலைக்காம்பு : நீளமானது. காம்பின் நுனியில் 5 சிற்றிலைகள். மென்மையானது. நீள்முட்டை வடிவம்.
சிற்றிலை : 2 செ.மீ. முதல் 4 செ.மீ. வரை நீளம்
1 . . . . . . 4. . . . . . அகலம்
மஞ்சரி : இலைக்கோணத்தில் உண்டாகும் கணுக் குருத்து பெரிதும் இணராகும். இணர்த் தண்டின் அடியில் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகள் காணப்படும். இதன் நடுவில் உள்ள சிற்றிலை 5 மி.மீ-12 மி.மீ.நீளமும், 4.-10 அகலமும் உள்ள நீண்ட முட்டை வடிவம். அடியில் குறுகியிருக்கும். இரு பக்கங்களிலுமுள்ள சிற்றிலைகள் 5-8 மி.மீ. நீளமும், 3-5 மி.மீ. அகலமும் உடையன.
இந்தக் கூட்டிலைகளின் கட்கத்தில் மலர்கள் உண்டாகும். பிசுபிசுப்பான துணர்க் காம்பின் நுனியில், காரிம்ப் என்னும் நுனி வளராப் பூந்துணராகத் தோன்றி ரசிமோஸ் முறையில் நுனி வரை மஞ்சரியாக நீண்டு தனி மலர்கள் உண்டாகின்றன.
மலர் : இருபால் பூ ஒழுங்கானது; நான்கு அடுக்குப்பூ சமச்சீரானது. மலர்க் காம்பில் தோன்றும். வெண்மை நிறமானது. மலர்ச் செதில் உண்டு.
புல்லி வட்டம் : நான்கு மெல்லிய சிறிய பசுமையான இதழ்கள் முகையில் நேர்முறை இணைப்புடையது.
அல்லி வட்டம் : 6 வெண்மையான, சிறிய விரிந்த இதழ்கள்; நீண்ட இதழ்க் காம்பு காணப்படும்.
மகரந்தத் தாள் : 6 மகரந்தத் தாள்கள் நீளமானவை. ஆண் - பெண்ணகக் காம்பின் மேல் ஒட்டியவை. நுனி பரந்தவை. தாதுப் பைகள் இரண்டு.
தாது : மஞ்சள் நிறம்.
சூலகம் : ஒற்றை இரு சூலகம். சூலகக் காம்பும், ஆணகக் காம்பும் நீண்டு இணைந்துள்ளன. சூல் முடி-திரண்டு வட்டமாக உள்ளது. கனியிலும் நிலைத்து இருக்கும்.
கனி : நீளமானது. 4 செ.மீ. முதல் 8 செ.மீ. மலர்க் காம்புடன் 13 செ.மீ. நீளமும் உள்ளது. இருபுறமும் வெடிக்குமாயினும் அடியிலும், நுனியிலும் ஒட்டியிருக்கும்.
விதை : பல குண்டிக்காய் வடிவின. இரு சூலக அறை விளிம்பிலும் ஒட்டியிருந்து சிதறும்.
 

கோங்கம்
காக்ளோஸ்பெர்மம் காசிப்பியம்

(Cochlospermum gossypium, DC.)

சங்க இலக்கியத்தில் கோங்கு எனப் பேசப்படும் இம்மரம், மலைப்பாங்கில் வளரும். இதன் பொன்னிற அழகிய முகையை மகளிர் மார்பிற்கு உவமிக்காத புலவரிலர்.

சங்க இலக்கியப் பெயர் : கோங்கு, கோங்கம்
தாவரப் பெயர் : காக்ளோஸ்பெர்மம் காசிப்பியம்
(Cochlospermum gossypium, DC.)

கோங்கம் இலக்கியம்

கபிலர் இதனை "விரிபூங்கோங்கம்" என்பார் (குறிஞ். 73).

‘விரிபூங்கோங்கம்’ என்பது குறிஞ்சிப் பாட்டுச் சொற்றொடர் (குறிஞ். 73). சங்கப் புலவர்கள் இதனைக் ‘கோங்கு’ எனவுங் ‘கோங்கம்’ எனவும் கூறுவர். கலித்தொகை ஓரிடத்தில் இதனைக் ‘கணிகாரம்’ என்று குறுப்பிடுகின்றது.

“மாவீன்ற தளிர்மேல்
கணிகாரம் கொட்கும் கொல்”
-கலி. 143:4-5

சிலப்பதிகாரத்தில் இது ‘கன்னிகாரம்’ எனப்படுகின்றது. [25] நிகண்டுகள், ‘கன்னிகாரம்’ ‘பிணர்’ ‘குயா’ ‘பவனி’ என்ற பெயர்களைக் கோங்கிற்குச் சேர்க்கின்றன.

கோங்கம் ஒரு மரம் என்றும். இதன் அடிமரம் பிணர் உடையது என்றும், இதன் இளமலர் பொன்னிறமானதென்றும் ஐங்குறுநூறு கூறும்.

“பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ

-ஐங் (367-1)

கோங்கமரம் மலையிடத்து வளரும். கோங்கின் முகை, அடி பரந்து கொம்மை கொண்டது. இது வனப்புள்ள முற்றா இள முலைக்கு உவமிக்கப்படுவது. முகை விரிந்து மலரும் என்று கூறுவர் பரணர்.

“வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
 முகைவனப்பு ஏங்திய முற்றா இளமுலை”

-புறநா. 366 : 9-10

இதனை இங்ஙனமே கூறும் கலித்தொகையும்.

“................ கோங்கின்
 முதிரா இளமுலை ஒப்ப எதிரிய
 தொய்யில் பொறித்த வனமுலையாய்”
-கலி. 177 : 2-4

கோங்கம் விரிந்து மலருங்கால் திருகுப்பூ போன்றிருக்கும். கைத்தொழிலில் வல்ல கம்மியன் அரதனக் கற்களை இட்டு இழைத்த பொன்னாலாகிய சுரிதகம் (திருகுப்பூ) என்னும் அணி போன்ற வடிவினவாகிப் பெரிய கோங்க மரத்தினது குவிந்த முகைகள் மலரும் என்பர் நக்கீரர்.

“கைவல் வினைவன் தையுபு சொரிந்த
 சுரிதக உருவின ஆகிப் பெரிய
 கோங்கம் குவிமுகை அவிழ”
-நற். 86 : 5-7

குவிந்த கோங்கின் முகை விரிந்து மலருங்கால், குடை போன்றிருக்கும். இதழ்கள் மெல்லியவை. புல்லியவை. இப்பூக்கள் தொடர்ந்து பூத்திருக்கும் போது, கார்த்திகைத் திங்களில் ஏற்றப்படும் விளக்கு வரிசை போலக் காட்சி தரும்.

மேலும், வானத்து ஒளிரும் விண்மீன்களின் நினைவை எழுப்பும் என்பர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

“புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ
 வைகுறு மீனின் நினையத் தோன்றி”
-நற். 48 : 3-4}}
“அறுமீன் பயந்த அறம்செய் திங்கள்
 செல்சுடர் நெடுங் கொடிபோல
 பல்பூங்கோங்கம் அணிந்த காடே”
-நற். 202 : 9-11

கோங்க மலரின் உள்ளே நடுவண் அமைந்த பொகுட்டு, எலியின் வளைந்த காது போன்றதென்றார் தாமோதரனார்.

“வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
 குடந்தையஞ் செவிய கோட்டெலி”
-புறநா. 321 : 4-5

கோங்கமலரின் தாது பொன்னிறமானது. மகளிரின் பசலை நிறத்திற்கு உவமையானது. மாந்தளிர் போன்ற நிறங்கொண்ட மங்கையர் உடலில் பொன்னிறமான பசலை, மாந்தளிர் மேல் கோங்கந் தாது கொட்டியது போன்று அழகு செய்தது என்று பாடும் கலித்தொகை.

“மணிபொரு பசும்பொன்கொல் மாஈன்ற தளிரின்மேல்
 கணிகாரம் கொட்கும்கொல் என்றாங்கு
 அணிசெல மேனி மறைத்த பசலையள்”
-கலி. 143 : 4-6

கோங்கம் பூக்குங்காலம் இளவேனிலா அன்றி முதுவேனிலா என்ற ஐயமெழுகின்றது.

‘கோங்கின் பசுவீ மிலைச்சி வேனிற்காலத்தில் தேரொடு வந்தான்’ என ஐங்குறு நூறும்,‘வேனிற்கொங்கு’ என்று புறநானூறும், ‘கோங்கம் குவிமுகை அவிழ . . . . முன்றா வேனில் முன்னி வந்தோரே’ என நற்றிணையும், ‘திணி நிலைக் கோங்கம் பயந்த அணி மிகு கொழுமுகை உடையும் பொழுது’ என இளவேனிற் பத்தில் ஐங்குறுநூறும், ‘சினைப்பூங்கோங்கின் நுண்தாது இளநாள் அமையம் பொன் சொரிந்தன்ன உகுமென்று’ என அகநானூறும் கூறுகின்றமையின். ‘பருவமில் கோங்கம்’ என்ற பரிபாடல் அடிக்குக் ‘காலங்குறியாது பூக்கும் கோங்கு’ என்று பரிமேலழகர் உரை கண்டார் போலும்! கோங்க மலர் சுடர்விட்டுப் பொன்னொளி பரப்புவதாகும். மாலை விலங்கிய சுரத்திலே காற்றடிக்கும் போது கோங்க மலர் காம்பிலிருத்து கழன்று விழுகின்றது. அக்காட்சி ஒருவன் கையில் வைத்திருந்த நெருப்புச் சுடரை விட்டெறிவது போலத் தோன்றும் என்பார் இளங்குட்டுவனார்.

கோங்க மலரிதழ்கள் சற்றுத் தடித்துத் தட்டுப் போன்றவை விரிந்துள்ளன. அதற்கு மேலே மலர்ந்துள்ள குரவ மலரை உழப்பி வண்டினம் முரலும். அதனால், குரவ மலரின் வெள்ளிய இதழ்கள் கோங்க மலரின் பொன்தட்டில் உதிர்கின்றன என்பார் வடமோதங்கிழார். (அகநா. 317 : 8-9)

இதனைப் போன்ற மற்றொரு காட்சியைப் பூதப்பாண்டியனார் விளக்குகின்றார்.

கோங்க மலரின் பொன்னிறத் தாது உதிர்கின்றது. கீழே செக்கச் சிவந்த இலவ மலர் மேனோக்கி விரிந்து பவளக்கிண்ணமாகத் தோன்றுகிறது. இக்கிண்ணத்தில் பொன்துகள் நிறைகின்றன. இதனை விலை கூறி இயலுகின்றார் வேனில் என்னும் விலை கூறுவார்:

“இனச்சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
 சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர்
 பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன”
-அகநா. 25 : 9-11

கோங்க மரம் பூக்கத் தொடங்கு ஞான்று அதன் இலைகள் உதிர்ந்து விடும். இலையற்ற கிளைகளில் கோங்கின் மெல்லிய முகை அரும்பும் என்பதைக் குறுந்தொகை அறிவிக்கின்றது:

“இலையில் அஞ்சினை இனவண் டார்ப்ப
 முகையோர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்
 தலையலர் வந்தன-”
-குறுந். 254 : 1-3

கோங்கம் தாவர அறிவியல்

தாவரவியல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே
தாவரக் குடும்பம் : பிக்சேசி (Віxaceae)
தாவரப் பேரினப் பெயர் : காக்ளோஸ்பர்மம் (Cochlospermum)
தாவரச் சிற்றினம் : காசிப்பியம் (gossypium)
சங்க இலக்கியப் பெயர் : கோங்கம், கோங்கு
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : கணிகாரம்
பிற்கால இலக்கியப் பெயர் : கன்னிகாரம்
உலக வழக்குப் பெயர் : கோங்கிலம், கோங்க மரம், தணக்கு
தாவர இயல்பு : மரம்; உயர்ந்து மலைப் பாங்கில் வளரும்; மரத்தில் மஞ்சள் நிறமான பால் வடிவதுண்டு.
இலை : கூட்டிலை; கையன்ன பிளவுள்ளது. அடியில் நுண்மயிர் காணப்படும்;
மலர் : தனிமலர். பெரியது. காம்புள்ளது; மிக அழகானது.
முகை : பொன்னிறமானது. தென்னங் குரும்பை போன்றது. அடி பரந்து முனை குவிந்து மலர் விரிந்து பளப்பளபாகத் தோன்றும்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் மெல்லிய பட்டு போன்றவை; எளிதில் உதிர்ந்து விடும்.
அல்லி வட்டம் : 5 அகன்று தடித்த அகவிதழ்கள் முகையில் முறுக்கமைப்பில் உள்ளன. முகை விரிந்து மலருங்கால் பொன்னிறமான பளபளப்பான இதழ்கள் விரிந்து தோன்றும்.
மகரந்த வட்டம் : பல மகரந்தத் தாள்கள் வட்டத்தட்டில் உண்டாகும் தாதுப்பையின் மேலே குறுகிய வெடிப்பு தோன்றும். அதன் வழியாகப் பொன்னிறத் தாது உதிரும்:
சூலக வட்டம் : 3-5 செல் உடையது சூலகம். சூலறைகள் பல. சூல்கள் 3-5 விளிம்பு ஒட்டு முறையில் இருக்கும். சூல்தண்டு மெல்லியது.
கனி : 3-5 வால்வுகளை உடையது:

விதை—பல விதைகள் உண்டாகும். விதையுறையில் நீண்ட பஞ்சு இழைகள் காணப்படும்; முளைக்கரு வளைந்திருக்கும்:

இதன் மரம் பயனற்றது. பஞ்சிழைகளைப் பயன் கொள்வதில்லை. இலைகள் தோன்றுமுன்னர் மரம் முகை அரும்பத் தொடங்கும் இயல்பிற்று. இம்மரம் மலைப்பாங்கான வறண்ட மேற்குக் கடற்கரைக் காடுகளில் வளரும். மலர்ந்த இம்மரம் கண்கவரும் வனப்புள்ளது.

 

நறவம்-நறை-நறா-நறவு
பிக்சா ஓரிலானா
(Bixa orellana-Linn.)

கபிலர் கூறும் ‘நந்தி நறவம் நறும் புன்னாகம்’ என்னும் குறிஞ்சிப் பாட்டடியில் (91) வரும், ‘நறவம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘நறைக்கொடி’ என்று உரை கண்டார். இது ஒரு புதர்க்கொடி: நறுமணம் மிகவும் உடையது. இதன் மலர் சிவப்பானது. நீண்ட அகவிதழ்களை உடையது. இதழ்களில் உள்ள வரிகளைக் கூர்ந்து நோக்கி, இவற்றை மகளிரின் செவ்வரி படர்ந்த கண்களுக்குப் புலவர்கள் உவமித்துள்ளனர்.

சங்க இலக்கியப் பெயர் : நறவம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : நறை, நறா, நறவு.
பிற்கால இலக்கியப் பெயர் : நறவங்கொடி
தாவரப் பெயர் : பிக்சா ஓரிலானா
(Bixa orellana,Linn.)

நறவம்-நறை-நறா-நறவு இலக்கியம்

கபிலர் “நந்தி நறவம் நறும் புன்னாகம்” (குறிஞ்சி 91) என்றார். இவ்வடியில் வரும் ‘நறவம்’ என்பதற்கு ‘நறைக்கொடி’ என்று பொருள் எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். குறிஞ்சிப் பாட்டில் வரும் ‘காந்தள் ஆம்பல் அனிச்சம்’ முதலாய எல்லாப் பெயர்கட்கும் அவற்றின் ‘பூ’ என்றே உரை கூறும் நச்சினார்க்கினியர், நறவம் என்பதற்கு ‘நறைக்கொடி’ என்று கூறுவது சிந்திக்கற்பாலது.

“மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியல்அறைப்
 பொங்கல் இளமழை புடைக்கும் நாடே”
-ஐங் 276 : 1-3

இப்பாட்டில் கடுவன் நறைக்கொடியைக் கொண்டு புடைக்கும் என்று கபிலர் கூறுதலின் ‘நறவம்’ என்பது ஒரு கொடி என்பதும் இக்கொடியே நறுமணமுடையதென்பதும் புலனாம். இதனை உட்கொண்டே நச்சினார்க்கினியர் ‘நறவம்’ என்பதற்கு ‘நறைக்கொடி’ என்று உரை கண்டார் போலும் என்று அறிய முடிகின்றது.

இக்கொடியினைச் சங்க நூல்கள் நறவம், நறை, நறா, நறவு என்ற நான்கு பெயர்களால் அழைக்கின்றன. நறா என்பது தேறலையும் குறிக்கும். இதனால் சூடும் நறவமாக மலரும், சூடா நறவமாகத் தேறலும் குறிக்கப்படும். தாவர இயலில் இதனை ஒரு புதர்க்கொடி என்பர். இக்கொடி கொத்தாகப் பூக்கும். தாவர இயலுக்கேற்ப ‘ஊழ் இணர் நறவம்’-பரிபா. 19:78 என்று கூறுவர் நப்பண்ணனார். நறவ மலரில் ஐந்து நீண்ட வெளிர் சிவப்பு நிறமான இதழ்கள் உள்ளன. இம்மலரை மகளிரது கண்ணுக்கும் கைக்கும், இதழ்களை மகளிருடைய கை விரல்களுக்கும் சங்கச் சான்றோர் உவமித்துள்ளனர். மகளிரது கருங்குவளை போன்ற கண்ணில், செவ்வரி படர்வதை இளங்கீரனார் கூறுவர். கருங்கண் சிவந்தது என்றும் கூறலாம்.

“மறவல் ஓம்புமதி, எம்மே-நறவின்
 சேயிதழ் அனைய ஆகிக் குவளை
 மாயிதழ் புரையும் மலர்கொள் ஈர்இமை”
-அகநா. 19 : 9-11
“நயவரு நறவிதழ் மதருண்கண் வாணுதல்”-பரிபா. 8 : 75
“நறவுப் பெயர்த்து அமர்த்த நல்எழில் மழைக்கண்
 மடவரல் மகளிரொடு பகல் விளையாடி”
-பெரும்பா. 386-387
“நறாஇதழ் கண்டன்ன செவ்விரற்கு ஏற்ப”-கலி. 84 : 22

மேலும், நறவம்பூ அலர்ந்தாற் போன்ற, தன்னுடைய மெல்லிய விரலையுடைய கையைத் தாங்கித் தலைவன் தன் அருளை உடைய சிவந்த கண் மறையும்படி வைத்துக் கொண்டதைத் தலைமகள் நினைவுபடுத்துகிறாள்.

“நறாஅ அவிழ்ந் தன்ன என்மெல்விரல் போதுகொண்டு
 செறாஅச் செங்கண் புதைய வைத்து”
-கலி. 54 : 9-10

சூடும் நறவத்தையும் சூடா நறவத்தையும் சேர்த்துக் கூறும் ஒரு பரிபாடல். புனலாட்டயர்ந்த தலைவி, மெய் ஈரந்தீர்ந்து வெய்தாக நுகர்தற்குக் கூடிய நறாவைப் பருகினாள். நெய்தற் பூவை (கருங்குவளை) ஒத்திருந்த அவள் கண், அந்நறவை ஆர்ந்த பொழுது கண்டார்க்கு மிக்க மகிழ் செய்யும் பெரிய நறவம் பூவை ஒத்தன என்கிறார் மையோடக்கோவனார்:

“விரும்பிய ஈரணி மெய்ஈரம் தீர
 சுரும்பு ஆர்க்கும் சூர்நறா ஏந்தினாள், கண் நெய்தல்
 பேர்மகிழச் செய்யும் பெருநறாப் பேணியவே
 கூர்நறா ஆர்ந்தவள் கண்”
-பரிபா. 7 : 61-64

நறவின் சேயிதழ் வரிகளை உடையது. இவை மகளிரது கண்ணின் செவ்வரியைக் குறிக்கும். மேலும் சங்கினுடைய முதுகில் அரக்கைத் தீற்றினாற் போன்ற சிவந்த வரி பொருந்திய இதழையுடைய இம்மலரின் நறுமணம் நெடுந்தூரம் வரையில் நுகரப்படும். இதில் நறுந்தாது ஆடிய தும்பி, பொன்னை உரைக்கும் கட்டளைக் கல் போல நல்ல நிறத்தைப் பெறும் என்பார் பேரிசாத்தனார்.

“அவ்வளை வெரிகின் அரக் கீர்த் தன்ன
 செவ்வரி யிதழ்சேண் நாறு நறவின்
 நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்
 பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம்”
-நற். 25 : 1-4

நறைக்கொடியில் நார் உரித்தல் உண்டு. இந்த நாரைக் கொண்டு வேங்கை மலர்களைத் தொடுப்பர்.

“நறை நார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி”

-புறநா. 169 : 15
இதனால் இது குறிஞ்சி நிலப்பூவாதல் கூடும் என்பர் இளஞ்சேரனார்.

ஆகவே, நறவம் ஒரு நறுமணமுள்ள புதர்க்கொடி எனவும், இதில் மலர்கள் கொத்தாகப் பூக்கும் எனவும், மலர் வெளிர் செம்மையானது எனவும், பெரிய செவ்விய இதழ்களை உடையதெனவும், இதழ்கள் செவ்வரிகளை உடையன எனவும், இம்மலரின் நறுமணம் நெடுந்தூரம் பரவும் எனவும், இம்மலரில் தாது மிகுத்து உகும் எனவும், இதில் வண்டுகள் மொய்க்கும் எனவும், இக்கொடியில் நார் இருக்கும் என புலவர் பெருமக்கள் கூறுவது கொண்டு பார்த்தால் இக்கொடியைப் பிக்சா

நறவம்
(Bixa orellana)

ஓரிலானா என்று கண்டு கொள்ள முடிகிறது. இதன் ஆங்கிலப் பெயர் அர்நோட்டோ, (Ar-notto) என்பதாகும். இதன் தாவரப் பெயரை இங்ஙனம் கண்டு கொள்ளுதற்குக் ‘காம்பிள்’ (பக். 36), ‘லஷிங்டன்’ (ஆங்கிலப் பெயர் வரிசை) ஆகிய இருவருடைய நூல்கள் துணை செய்தன.

பிக்சா ஓரிலானாவின், குரோமோசோம் எண்ணிக்கை 2n=14 என, சானகி அம்மாளும் (டி 1945), கிராஸ் (1965) என்பவரும் 2n = 16 என, சிம்மண்ட்ஸ் (1954) என்பவரும் கண்டுள்ளனர்.

நறவம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே, அகவிதழ் பிரிந்தவை
தாவரக் குடும்பம் : பிக்சேசி (Віxaceae)
தாவரப் பேரினப் பெயர் : பிக்சா (Bixa)
தாவரச் சிற்றினப் பெயர் : ஓரிலானா (orellana)
ஆங்கிலப் பெயர் : தி அர்னோட்டா (The Arnotto)
தாவர இயல்பு : புதர்ச் செடி; கிளைகள் நீண்டு வளர்ந்து கொடி போல் இருக்கும்; என்றும் தழைத்திருக்கும் தாவரம்.
இலை : தனியிலை, அகன்றது. நீள் இதய வடிவானது. நுனி கூரியது. இலைச் செதில்கள் நுண்ணியவை.
மஞ்சரி : கிளை நுனியில் கலப்பு மஞ்சரியாக இருக்கும்.
மலர் : பெரியது; சிவப்பு நிறமுடையது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் விளிம்பு ஒட்டியவை; விரைந்து உதிர்வன.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் அரும்பில் திருகு அமைப்பில் அமைந்துள்ளன.
மகரந்த வட்டம் : பல தாதிழைகள், தாதுப்பையில் உள்ள இரு துளைகளின் வழியே தாது உகும்.
சூலக வட்டம் : ஒரு செல்லால் ஆனது. சூல் தண்டு மெல்லியது, வளைந்தது. பல சூல்கள் இரு வரிசையாகச் சூலகச் சுவரை ஒட்டியிருக்கும்.
கனி : செந்நிறமானது. சிறுமுள் படர்ந்தது. காப்சூல் என்னும் தடுப்பு வெடிகனி.
விதை : பல விதைகள் உண்டாகும். விதையுறை சிவந்தது. விதையில் சதைப் பற்றுடைய ஆல்புமின் காணப்படும்.

இப்புதர்ச்செடி மேற்கு மலைத்தொடரில் தானாக வளர்வதோடு வளர்க்கவும் படும்.

 

நாகம்–புன்னாகம்–சுரபுன்னை
ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

சங்க இலக்கியப் பாக்கள் பலவற்றில் ‘நாகம்’ என்பது குறிப்பிடப்படுகிறது. நச்சினார்க்கினியர் குறிஞ்சிப்பாட்டடியில் வரும் ‘நாகம்’ என்பதற்கு ‘நாகப்பூ’ என்றும், மலைபடு கடாத்தில் வரும் ‘நாகம்’ என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்றும், பிறவிடங்களில் வரும் ‘நாகம்’ என்பதற்குச் ‘சுரபுன்னை’ என்றும் உரை கண்டுள்ளார். சங்கப் பாடல்களில் வரும் ‘வழை’ என்பதற்கும் இவர் ‘சுரபுன்னை’ என்று உரை கூறுவர். ஆகவே, நாகம், வழை என்பவை சுரபுன்னை எனக் கருதப்படுதலின், ‘நாகம்’ என்பதற்கான தாவர விளக்கவுரையினை ‘வழை’ என்ற தலைப்பிற் கண்டு கொள்ளலாம்.

சங்க இலக்கியப் பெயர் : நாகம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : வழை, புன்னாகம்
பிற்கால இலக்கியப் பெயர் : சுரபுன்னை
தாவரப் பெயர் : ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

நாகம்–புன்னாகம்–சுரபுன்னை இலக்கியம்

“நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி”-குறிஞ். 94

என்றார் குறிஞ்சிக் கபிலர்.

“நறுவீ உறைக்கும் நாக நெடுவழி”-சிறுபா. 88
“நளிசினை நறும்போது கஞலிய நாகு முதிர்நாகத்த”
(சிறுபா.108)

“நறுவி நாகமும் அகிலும் ஆரமும்”-சிறுபா. 116

என்றார் நத்தத்தனார்.

“. . . . . . . . . . . . . . . . . . . மீமிசை
நாக நறுமலர் உதிர”-திருமுரு. 301-302

என்றார் நக்கீரர்.

“நீள்நாக நறுந்தண்தார் தயங்கப் பாய்ந்தருளி”-கலி. 39 : 3
நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்”-மலை படு. 520

இவற்றிற்கெல்லாம் உரை எழுதிய நச்சினார்க்கினியர் குறிஞ்சிப் பாட்டடியில் வரும் (94) ‘நாகம்’ என்பதற்கு ‘நாகப்பூ’ என்றும், மலைபடுகடாத்தில் வரும் (520) நாகம் என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்றும், பிறவிடங்களில் வரும் நாகம் என்பதற்குச் ‘சுரபுன்னை’ என்றும் உரை கூறியுள்ளார். இவரே வழை என வரும் சங்கப்பாக்களில் ‘சுரபுன்னை’ என்றாராயினும்,

“மணிமலர் நாகம் சார்ந்து வழையொடு மரவ நீழல்”[26]

என வரும் சீவக சிந்தாமணிப் பாடலில் (1969) நாகமும், வழையும் ஒருங்கே கூறப்படுதலின் ‘வழை’ என்பதற்குச் சுரபுன்னையுமாம் என்று கூறி, ‘நாகம்’ என்பதற்கு ‘நாகம் ஒரு வகை மரம்’ என்று உரை கண்டுள்ளார்.

திருத்தக்கதேவர் இங்ஙனம் நாகத்தையும் வழையையும் தனித்தனியாகக் கூறியது போலவே,

“நல்லிணர் நாகம் நறவம் சுரபுன்னை”-பரிபா. 12 : 80

என்று நல்வழுதியாரும், ‘நாகத்தையும், சுரபுன்னையையும்’ தனித்தனியாகப் பாடியுள்ளார். குறிஞ்சிக் கபிலரும், பெருங்குறிஞ்சியில், ‘நாகத்தையும்’ (94) ‘வழையையும்’ (83) தனித்தனியாகப் பாடியுள்ளார்.

ஆதலின் சங்க நூல்களில் துறைபோகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘நாகம்’ என்பதற்கு 1) சுரபுன்னை 2) நாகப்பூ 3) புன்னைப்பூ என்று மூன்று உரைகளைக் கூறுமாறு யாங்ஙனம்?

நெய்தல் நிலத்திற்குரிய கருப்பொருள்களில் புன்னைமரம் ஓதப்படுதலானும், சங்க இலக்கியப் பாக்களில் புன்னை மலிந்து காணப்படுதலானும்,

“நந்தி நறவம் நறும்புன்னாகம்”-குறிஞ். 91

என்று கபிலர் புன்னாகத்தைக் குறிப்பிட்டுள்ளமையாலும், ‘நாகம்’ என்பதற்குப் புன்னை, வழை. சுரபுன்னை என்று சூடாமணி நிகண்டும்[27] நாகமென்றலின் புன்னாகம் புன்னையாகுமென்று பிங்கல நிகண்டும்[28] விளக்குதலாலும், ‘வழை’ என்பதும் ‘சுரபுன்னை’ என்று நிகண்டுகள் கூறுவதை ஏற்றுக் கொண்டு, ‘புன்னாகம்’ என்பதற்குப் ‘புன்னையின் விசேடம்’ என்றும், நாகம் என்பது சுரபுன்னை, புன்னை, நாகப்பூ என்பன மூன்றும் ஒன்றே என்றும் கொண்டு, உரை கூறினர் போலும் எனக் கோடல் பொருந்தும்.

ஆகவே வழை, சுரபுன்னை, புன்னாகம், நாகம் என்பன புன்னையின் விசேடமாகிய ஒரே மரத்தைக் குறிக்குமெனவும், புன்னை மட்டும் இவற்றின் வேறாயதொரு மரம் எனவும் கொள்ளுதல் கூடும். மேலும் சுரபுன்னைக்கு நாகம் என்ற பெயரும் வழங்கப்பட்டது எனச் சூடாமணி நிகண்டு கூறுவதும், நீளநினைத்தற் குறித்து. தாவரவியல் நூல்கள் புன்னையைக் கலோபில்லம், இனோபில்லம் என்றும், வழை, புன்னாகம் எனப்படும் சுரபுன்னையை ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ் என்றும் குறிப்பிடுகின்றன. இந்நூல்களில் நறுமணமுடைய புன்னையும், புன்னையின் விசேடமாகிய (சுரத்தில் வளரும்) சுரபுன்னையும் தனித்தனியுமாகப் பேசப்படுவதன்றித் தமிழ்நாட்டில் இக்குடும்பத்தைச் சார்ந்த இவ்விரு நறுமண மலருடைய மரங்களே வளர்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் நாகம், வழை எனப்படும் சுரபுன்னை மரம் மலைப்புறக் காடுகளிலும், புன்னை மரம் கடலோரமான நெய்தல் நிலத்திலும் வளர்வதும் உற்று நோக்குதற்குரித்து. இவ்விரு மரங்களையும் சங்கப் புலவர்களைப் போல அவை வளருமிடத்திற் கண்டு களித்த எம் போன்றோர்க்கல்லது, மரங்களிலும் மரப்பெயர்களிலும் உளதாகிய இவ்வேறுபாடு ஏனையோர்க்குப் புலனாதல் அரிதென்பதும் ஒன்று. இவ்வுண்மையைச் சூடாமணி நிகண்டு குறிப்பிடுகின்றது. புன்னாகம் : “புன்னைப் புன்னாகம் நாகம் வழை சுரபுன்னை பேரேப்”.[29] மற்று, நாகமும் புன்னாகமும் பிற்காலத்தில் ஒன்றேயெனக் கருதப்பட்டன போலும்.

“நந்தி நறவம் நறும்புன்னாகம்”-குறிஞ்: 91

என்றார் குறிஞ்சிக் கபிலர். இதில் வரும் புன்னாகம் என்பதற்கு நச்சினார்க்கினியர் புன்னையின் விசேடம் என்று உரை கூறியுள்ளார். ஆதலின், புன்னாகம் என்பது புன்னையின் வேறாகிய சுரபுன்னையாதல் கூடும். மேலும், சூடாமணி நிகண்டு கூறியுள்ள வண்ணம் நாகமாதலுங் கூடும்.

‘நாகம்’ எனப்படும், சுரபுன்னையைப் பற்றிப் புலவர் பெருமக்கள் கூறியுள்ளவற்றை உற்று நோக்கினால், ‘நாகம்’ என்பது ‘சுரபுன்னை’ எனவும், புன்னாகம் எனவும் கூறப்படுமாறு காணலாம்.

புலவர் பெருமக்கள் கூறும் இதன் இயல்புகளாவன:

  1. நெருங்கிய கொம்புகளிடத்தே நறிய பூக்கள் நெருங்கியுள்ளன;
  2. மலையின் உச்சியில் உண்டான சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிரும்;
  3. நாக மரம் நெடிது வளரும்;
  4. சுரபுன்னைப் பூவால் கட்டிய மாலையை ஆடவரும் அணிந்தனர்;
  5. பாலையின் நெடிய வழியிலே சுரபுன்னை மரம் பூக்கும்; மலர்கள் சுரும்பு உண்ணும்படி நறிய தேனைத் துளிக்கும்;
  6. நாகமரம், அகில், சந்தனம் முதலிய மரங்களோடு மலையிடத்துச் சுரத்திலும் வளரும்.
 

புன்னாகம்–சுரபுன்னை
ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)்

‘நந்தி, நறவம், நறும்புன்னாகம்’ என்று கபிலர் கூறிய குறிஞ்சிப் பாட்டு அடியில் (91) வரும் ‘புன்னாகம்’என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘புன்னையின் விசேடம்’ என்று உரை கண்டார்.

சூடாமணி நிகண்டு ‘புன்னைப் புன்னாகம், நாகம், வழை, சுரபுன்னைப் பேரே’ எனக் கூறுதலின் புன்னாகம் என்பது சுரபுன்னை ஆதல் பெறப்படும். ஆகவே, நாகம், புன்னாகம். வழை என்ற பெயர்கள் சுரபுன்னையைக் குறிக்கும் என்று அறியலாம். ‘புன்னாகம்’ என்பது ‘புன்னை’யை ஒத்தது என்றும், நாகம் எனப்படும் ‘சுரபுன்னை’ புன்னாகம் என்றே கருதப்பட்டது போலும் என்றும் கருதுவதற்கு இடந்தருகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : புன்னாகம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : நாகம், வழை
பிற்கால இலக்கியப் பெயர் : சுரபுன்னை
தாவரப் பெயர் : ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)
 

வழை-சுரபுன்னை
ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

“கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை” (குறிஞ்:83) என்று கபிலர் கூற்றில் வரும் ‘வழை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘சுரபுன்னை’ என்று உரை கண்டார். வழை என்பது ஒரு பெரிய மரம். எப்போதும் இலைகள் அடர்ந்து காணப்படும். மலைப் பகுதியில் அடர்ந்த காடுகளில் வளரும். இதன் மலர் வெண்ணிறமானது. நறுமணம் உடையது.

சங்க இலக்கியப் பெயர் : வழை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : நாகம், புன்னாகம்
பிற்கால இலக்கியப் பெயர் : சுரபுன்னை
உலக வழக்குப் பெயர் : சுரபுன்னை
தாவரப் பெயர் : ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

வழை-சுரபுன்னை இலக்கியம்

“கோடல் கைதை கொங்கு முதிர் நறுவழை-குறிஞ் : 83

என்றார் குறிஞ்சிக் கபிலர்

“வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்”

(வாய் தப்பாத)

-புறநா: 132:2

என்றார் ஏணிச்சேரி முடமோசியார். இவ்வரிகளில் கூறப்படும், “வழை” என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியரும், புறநானூற்றுப் பழைய உரையாசிரியரும் ‘சுரபுன்னை’ என்று உரை வகுத்துள்ளார்கள். ‘வழை சுரபுன்னை’ என்று கூறும் நிகண்டுகள்.

“வழை அமல் அடுக்கத்து வலன் ஏற்பு வயிரியர்”

- அகநா. 328:1

“கழைஅமல் சிலம்பின் வழை தலைவாட”-அகநா. 177 : 7

கழைநரல் சிரம்பின் ஆங்கண் வழையொடு
 வாழை ஓங்கிய தாழ்கண்அசும்பில்”
-அகநா. 8 : 8

வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்”-பதிற். 41 : 13

வழைவளர் சாரல் வருடை நன்மான்”-கலி. 50 : 21

வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ்சாரல்”-கலி. 53 : 1

வாழை ஓங்கிய வழைஅமை சிலம்பில்”-நற். 222 : 7

கழைவளர் சிலம்பில் வழையொடு நீடி”-புறநா. 158 : 20

ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்
 அகருவழை ஞெமை ஆரம் இனைய”
-பரி. 12 : 4-5

கரையன சுரபுன்னை”-பரிபா. 11 : 17

இவ்வாறெல்லாம் சங்கவிலக்கியங்கள் கூறுதலின் மலைப் பகுதிக் காடுகளில் இம்மரம் ஓங்கி வளருமெனவும், கான்யாற்றுக் கரையிலும் காணப்படுமெனவும், சுரத்தில் வளரும் புன்னை போன்றதெனவும், நறிய மலரை உடையதெனவும் அறியலாம். மேலும், ஆய் அண்டிரன் என்பான் ‘வழை’ எனப்படும் சுரபுன்னை மலரைத் தனது முடிப்பூவாகச் சூடியிருந்தான் என்றும் தெரிய வரும்.

இம்மரம் மூங்கில், வாழை முதலியவற்றுடன் வளர்வதாகப் பேசப்படுகின்றது. வற்கடம் உறுதலை அறியாத வழை என்று இதனைக் கலித்தொகை குறிப்பிடுமாயினும் மூங்கில் நிறைந்த மலைப்பாதையில் வளரும் இம்மரமும் சற்று வாடிப் போகும் என்று கூறும் அகநானூறு 177 : 7.

கட்டிபெரே’ என்னும், இதனுடைய தாவரக் குடும்பத்தில் 45 பேரினங்களும், 900 சிற்றினங்களும் உலகில் உள்ளன என்றும், இவற்றுள் 6 பேரினங்களே இந்தியாவில் உள்ளன என்றும், தமிழ்நாட்டில் 5 பேரினங்களும், ஆக்ரோகார்ப்பஸ் என்ற இப்பேரினத்தில் ஒரு சிற்றினமாகிய லாஞ்சிபோலியஸ் மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்கிறதென்றும் கூறுவர். சுரபுன்னை

வழை
(Ochrocarpus longifolius)

யின் குரோமோசோம் எண்ணிக்கை இது காறும் கண்டு சொல்லப் படவில்லை.

வழை–சுரபுன்னை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : கட்டிபெரேலீஸ்-அகவிதழ் பிரிந்தவை
தாவரக் குடும்பம் : கட்டிபெரே
தாவரப் பேரினப் பெயர் : ஆக்ரோகார்ப்பஸ் (Ochrocarpus)
தாவரச் சிற்றினப் பெயர் : லாஞ்சிபோலியஸ் (longifolius)
தாவர இயல்பு : மரம்; மலைப்பகுதியில் அடர்ந்த காட்டில் வளரும் பெரிய மரம். எப்போதும் இலையடர்ந்து காணப்படும்.
இலை : தடித்த பசிய நீண்டகன்ற இலைகள்.
மஞ்சரி மலர் : மலர் தனித்தும் கொத்தாகவும் இலைக்கோணத்தில் இலை விழுந்த குழிந்த தழும்பிலிருந்து உண்டாகும். மலர் வெண்ணிறமானது. 0.7 அங். அகலமானது.
அல்லி வட்டம் : புல்லி வட்டம் மலரும் போது 2 பிளவுகளாகிவிடும்.
புல்லி வட்டம் : 4 அகவிதழ்கள் பிரிந்தவை:
மகரந்த வட்டம் : பல நேரான தாதிழைகள். தாதுப் பைகளும் நீண்டகன்று நிமிர்ந்துள்ளன.
சூலக வட்டம் : இரு சூலிலைச் சூலகம். 2 சூல்கள் சூல்தண்டு-சுபுலேட் சூல்முடி மூன்று பிளவுகளாக இருக்கும்.
கனி : பெர்ரி எனப்படும் சதைக்கனி, ஒரு அங்குல நீளமானது. பெரிய ஒரு விதை
மட்டும் உண்டாகும். கருவில் முளை வேர் அகன்றது. இரு வித்திலைகள் சிறியவை.

இதன் மரம் வன்மையானது; செந்நிறமானது; மர வேலைகளுக்குகந்தது. மலபார், கோவை முதலியவிடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் வளர்கிறது. இம்மரத்தை "வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ்சாரல்" என்றதற்கு ஏற்ப இம்மரம் மலைப்பாங்கில் வற்கடம் அறியாது-வஞ்சமில்லாமல் பஞ்சம் தெரியாமல் தழைத்துப் பருத்து வளரும் இயல்பிற்று. எக்காலத்திலும் பசுமையாக இலையடர்ந்து காட்சி தரும். இம்மரம் பூத்தவுடன் மலைப்பாங்கெல்லாம் இம்மலர் மணம் கமழும்.

 

பசும்பிடி
கார்சீனியா ஸ்பைகேட்டா (Garcinia spicata,,HK f.)

குறிஞ்சிப் பாட்டில் காணப்படும் ‘பசும் பிடி’ என்பதற்குப் ‘பச்சிலைப்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். இது ஒரு மரம் எனவும். ‘பெருவாய் மலர்’ உடையது எனவும், இதன் கொழுந்து மணமுள்ளது எனவும்தான் அறிய முடிகிறது. இதனைக் கொண்டு இதனுடைய உண்மையான தாவரப் பெயரைக் கணிக்க இயலவில்லை. ஆயினும், இதனைப் ‘பச்சிலை’ எனக் கொண்டு கலைக் களஞ்சியம் இதற்குக் கார்சீனியா ஸாந்தோகைமஸ் என்னும் தாவரப் பெயரைக் குறிப்பிட்டுள்ளது. அதனால் இதன் இப்போதைய பெயரான கார்சீனியா ஸ்பைகேட்டா என்ற பெயரைச்சூட்டி இதற்கு விளக்கவுரை வரைதும்.

சங்க இலக்கியப் பெயர் : பசும்பிடி
பிற்கால இலக்கியப் பெயர் : பச்சிலைப்பூ
தாவரப் பெயர் : கார்சீனியா ஸ்பைகேட்டா
(Garcinia spicata)

பசும்பிடி இலக்கியம்


“பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா” என்றார் கபிலர் (குறிஞ். 70). இதில் உள்ள ‘பசும் பிடி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பச்சிலைப்பூ’ என்று உரை கூறினார்.

‘பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்’ என்பது பரிபாடல் (19: 75). இதற்குப் பரிமேலழகர் ‘பச்சிலையது இளைய கொழுந்து’ என்று உரை கண்டார்.

“கரும்பார் சோலைப் பெரும்பெயர் கொல்லிப்
 பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து

என்னும் பதிற்றுப்பத்து (81 : 24-25)

“பச்சிலை மரம் தமாலம் பசும்பிடி என்னும் பேரே”

என்று கூறும் சூடாமணி நிகண்டு.[30]

பசும்பிடி என்பதற்குப் பச்சிலை என்றும், பச்சிலை என்பது கார்சீனியா ஸாந்தோகைமஸ் என்றும் கலைக்களஞ்சியம்[31] குறிப்பிடுகின்றது. ஆதலின் இம்மரத்தின் இப்போதைய தாவரப் பெயருடன் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

இவற்றால் அறியக் கூடியவை :

  1. பசும்பிடி என்பது ஓர் மரம்
  2. பசும்பிடி என்பது பச்சிலை எனப்பட்டது.
  3. இதன் கொழுந்து நறுமணம் உள்ளது.
  4. இதன் மிகுமணத்தால் இதன்பூ ‘இலைமறை பூவாயிற்று’ போலும். இதன் முன்னைய தாவரப் பெயர் ஸாந்தோ கைமஸ் ஒவாலிபோலியஸ் (Xanthochymus ovalifolius) என்பது. இப்போது (Garcenia spicata, HK. f.) கார்சீனியா ஸ்பைகேடா என்று மாற்றப்பட்டு உள்ளதென்பர் காம்பிள் (Vol. 1: p. 53).

இதன் தாவரப் பெயரை வலியுறுத்த இயலவில்லை.

பசும்பிடி தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே, அகவிதழ் பிரிந்தவை
தாவரக் குடும்பம் : கட்டிபெரே (Guttiferae)
தாவரப் பேரினப் பெயர் : கார்சீனியா (Garcinia)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்பைகேட்டா (spicata)
உலக வழக்குப் பெயர் : கொக்கோட்டை என்பர் காம்பிள்
தாவர இயல்பு : மரம், பெரும்பாலும் இதில் மஞ்சள் நிறமான கசிவு நீர் காணப்படும்.
இலை : தனியிலை, தோல் போல் தடித்தது.
மஞ்சரி : நுனி வளராப் பூநதுணர் அல்லது கலப்பு மஞ்சரி
மலர் : 2 அங்குலம் முதல் 3 அங்குலம் வரை அகலமானது. வெப்ப நாளில் மலரும்.
புல்லி வட்டம் : 4-5 புறவிதழ்கள்
அல்லி வட்டம் : 4-5 அகவிதழ்கள்
மகரந்த வட்டம் : பல தாதிழைகள்
சூலக வட்டம் : 2-12 செல்களை உடையது. சூல்முடி அகன்றது. வழவழப்பானது.
கனி : பெர்ரி என்ற சதைக்கனி

இம்மரம் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தென்னார்க்காடு, புதுக்கோட்டை முதலிய மாவட்டங்களிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் தென் கன்னடம் முதல் திருவிதாங்கூர் வரையிலுமுள்ள மலைப்பகுதிகளில் வளரும். இதன் அடிமரம் மஞ்சள் கலந்த வெண்ணிறமானது. மிகவும் வன்மை உடையது. கட்டிட வேலைக்குகந்தது.

 

புன்னை
கலோபில்லம் இனோபில்லம்
(Calophyllum inophyllum,Linn.)

குறிஞ்சிப் பாட்டில் ‘புன்னை’ ‘கடியிரும்புன்னை’ (93) எனப்படும். நூற்றுக்கணக்கான பாடல்களில் ‘புன்னை’ குறிப்பிடப் படுகின்றது. இது ஓர் அழகிய சிறுமரம். கடலோரப் பகுதியான நெய்தல் நிலத்தில் மிகுதியாக வளரும். இதன் அரும்புகள் வெள்ளிய முத்தை ஒத்தவை. மலரில் நறுமணம் மிகுதியாக வெளிப்படும். புன்னையைப் பற்றிய செய்திகளும் அங்ஙனமே மலிய வெளிப்பட்டுள்ளன. இப்பழந்தமிழ் மரத்தைத் ‘தமிழ் நாட்டிற்குரிய மரமன்று போலும்’ என்று காம்பிள் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்று உடனடியாக ஆய்தற்குரியது. தாவரவியல் அடிப்படையில் மறுத்தற்குரியதும் ஆகும்.

சங்க இலக்கியப் பெயர் : புன்னை
பிற்கால இலக்கியப் பெயர் : நாகம், புன்னை
உலக வழக்குப் பெயர் : புன்னை
ஆங்கிலப் பெயர் : அலெக்சாண்டிரியன் லாரெல்
தாவரப் பெயர் : கலோபில்லம் இனோபில்லம்
(Calophyllum inophyllum,Linn.)


புன்னை இலக்கியம்


ஐந்திணைக் கருப்பொருளைக் கூற வந்த இறையனார் அகப் பொருள் நூல், நெய்தல் திணைக்கு மரம் புன்னையும், ஞாழலும், கண்டலும் என்று குறிப்பிடுகின்றது. புன்னையைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான பாடல்களில் காணப்படுகின்றன. பத்துப்பாட்டில் ஒரு சில பாக்களில் இடம் பெறும் ‘நாகம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘சுரபுன்னை’ என்று உரை கூறியுள்ளாரெனினும், மலைபடுகடாத்தில் ‘நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்’ (520) என்ற அடியில் வரும் ‘நாகம்’ என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்று உரை எழுதியுள்ளார். இவ்வாறு இவர் நாகத்திற்கு இரு பொருள் கூறியது எதனால்?

பிங்கல நிகண்டு[32] ஒரு சொல்லுக்குப் பல்பொருள் கூற வந்தவிடத்து “நாகமென் கிளவி . . . . புன்னையும் . . ஆகும்” என்று கூறுகின்றது. சூடாமணி நிகண்டு[33], “புன்னை, புன்னாகம், நாகம், வழை, சுரபுன்னைப்பேரே” எனச் சுரபுன்னையை ‘வழை’ எனவும், ‘நாக’மெனவும், ‘புன்னை’ எனவும் குறிப்பிடுகின்றது. ஆகவே, எந்நிலம் மருங்கின் பூவையுங் கூறும் கபிலர், குறிஞ்சிப் பாட்டில் ‘கொங்கு முதிர்நறுவழை’ என்று கூறிப் புன்னையைக் ‘கடியிரும் புன்னை’ எனக் குறிப்பிட்டமையானும், ‘வழை’ என்பதற்குச் சுரபுன்னை எனத் தாம் உரை வகுத்து விட்டமையானும், ‘நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி’ (குறிஞ். 94) என்றவிடத்தில் ‘நாகம்’ என்பது சுரபுன்னையைக் குறித்தலாகாதெனக் கொண்டு ‘நாகப்பூ’ என்று உரை கண்டு விட்டு, இதற்கு விளக்கங் கூறும் முகத்தான் மலைபடுகடாத்தில் வரும் நாகமென்பதற்குப் ‘புன்னை’ என்று உரை கண்டார் போலும்; இருப்பினும் குறிஞ்சிப் பாட்டில் வரும் ‘நாகம்’ என்பதற்கு ‘நாகப்பூ’ என்றும், மலைபடுகடாத்தில் வரும் ‘நாகம்’ என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்றும் உரை கூறுவதால், இவ்விரண்டும் வெவ்வேறு மரங்களோ என ஐயுறுதல் வேண்டாம். மாறாக இதனை வலியுறுத்துமாப் போல, ‘உருகெழு உத்தி உருகெழு நாகம்’ (பரிபா. 12 : 4) என்ற அடியில் வரும் ‘நாகம்’ என்பதற்குப் பரிமேலழகர் ‘நாகமரம்’ என்று உரை கூறுவாராயினர். சங்க இலக்கியத்தில் கூறப்படும் ‘நாவல் மரம்’ ‘நாக மரம்’ அன்று என்பதும், இங்கு உணர்தற்பாற்று. ஆகவே, புன்னை என்பதற்கு நாகமென்ற பெயரும் உண்டெனக் கோடல் அமையும்..

‘புன்னை’ என்பது ஒரு சிறு மரம். நெய்தல் நிலத்து மரமாகப் பெரிதும் பேசப்படுகின்றது. அகநானூற்றில், பத்துப் பத்தான எண்ணிக்கையில் அமைந்த 40 நெய்தல் திணைப்பாக்களில் பெரும்பாலானவற்றிலும், பிறவற்றிலும் ‘புன்னை’ குறிக்கப்பட்டுள்ளது. இது நெய்தல் திணைக்குரிய ‘ஞாழலோடு’ இணைத்துப் பாடப் பெற்றுள்ளது.

“. . . . . . . . . . . . . . . . . . புன்னையொடு
 ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்”
-ஐங். 103 : 1-2

“ஒள்ளிணர் ஞாழல் முனையின் பொதி யவிழ்
 புன்னையம் பூஞ்சினை சேக்கும்”
-ஐங். 169 : 2-3

“பொன்னீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
 கானல் அம்பெருந் துறை”
-அகநா. 70 : 9-10

“நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய்”-குறுந். 318 : 2

மேலும், புன்னை மரம் தாழையொடும் வளரும் என்பர்:

“மன்றப் புன்னை மாச்சினை நறுவீ
 முன்றில் தாழையொடு கமழும்”
-நற். 49 : 8-10

“தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ
 படப்பை நின்ற முடத்தாள் புன்னை”
-அகநா. 180 : 12-14

“தெரியிணர் ஞாழலும் தேங்கமழ் புன்னையும்
 புரிஅவிழ் பூவின கைதையும் செருந்தியும்”
-கலி. 127 : 1-3

நெய்தல் நிலப்பாங்கான கடற்கரை ஓரத்திலும், உப்பங்கழிக் கரையிலும் புன்னை மரம் வளரும். அதன் வேர்கள் கடல் அலைகளால் அரிப்புண்டு புன்னை மரம் நிற்பதையும், அதன் கரிய கிளைகள் வளைந்து நிலத்தில் தோய்ந்து நிற்பதையும், குன்றன்ன பெரிய மணற்பாங்கில் புன்னை வளர்வதையும் புலவர்கள் பாடியுள்ளனர்:

“ . . . . . . . . . . . . . . . . . . . மயங்கு பிசிர்
 மல்கு திரைஉழந்த ஓங்குநிலைப் புன்னை”

-அகநா. 250 : 1-2

“எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ”-அகநா. 20 : 3

“பெருங்கடற் கரையது சிறு வெண்காக்கை
 கருங்கோட்டுப் புன்னை தங்கும்”
-ஐங். 161

“உரவுத் திரைபொருத திணிமணல் அடைகரை
 நனைந்தபுன்னை மார்ச்சினை தொகூஉம்”
-குறு. 175 : 2-3

“குன்றத் தன்ன குலவுமணல் அடைகரை
 நின்ற புன்னை நிலந்தோய் படுசினை”
-குறு. 236 : 3-4

“கரையன புன்னையும்”-பரிபா. 11 : 17

மற்றும் தமிழ்நாட்டின் கீழ்க்கடற்கரையில் புன்னை வளர்ந்து வந்தமையின், கிழக்கில் இருந்து வீசும் கடற்காற்றால் நாள்தோறும் இம்மரம் தாக்கப்படும். இதனால் இதன் கிளைகள் மேற்கு நோக்கி வளைந்து வளரும். இதனை உற்று அறிந்த புலவர்கள் அங்ஙனமே கூறுவர்:

“புன்னை பூத்த இன்நிழல் உயர் கரைப்
 பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
 மேக்குயர் சினையின் மீமிசைக் குடம்பை”
-நற். 91 : 2-6

“விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின் ஆஅய்”-நற். 167 : 2

நெய்தல் நிலத்தில் புன்னை மரங்கள் செறிந்திருப்பதைப் புன்னையங்கானல், புன்னைத்துறை, புன்னையம் பொதும்பு, புன்னைய நறும்பொழில், புன்னைய முன்றில் என்றெல்லாம் கூறுவர்.

இதன்பருத்த அடி மரத்தையும், கிளைகளையும், இதன் நிறத்தையும் பற்றிய குறிப்புகள் சில உள:

“பராஅரைப் புன்னை வாங்குகிளை தோயும்
 கானல் அம்பெருந் துறை”
-அகநா. 270 : 6-7

பராஅரைப் புன்னைச் சேரி”-நற். 145 : 9

படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை” -நற். 278 : 1

கருங் கோட்டுப் புன்னை”-நற். 67 : 5

நீல்நிறப் புன்னை”-நற் 4 : 2 ; 168 : 8

கருந்தாட் புன்னை”-நற். 231 : 7

பனிஅரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை”-நற். 87 : 6

எல்லி அன்ன இருள் நிறப்புன்னை”-நற். 354 : 5

பருத்த புன்னையின் அடி மரம் பற்றிய ஒரு நற்றிணைப் பாடல் நயத்தற்குரித்து. தலைவன் குறித்த குறியிடத்துத் தலைவியும், தோழியும் வந்து காத்திருக்கின்றனர். நெடுநேரங் கழித்துத் தலைவன் வருகிறான். அவனது தேரில் கட்டிய மணியோசை அவன் வரவினை அறிவிக்கின்றது. அதனைக் கேட்ட தோழி, தலைவியிடம் கூறுகின்றாள்: “தலைவன் நினது நலம் பாராட்டக் குறியிடத்து வருகின்றான். எனினும் இதுகாறும் வாராது நம்மை நடுங்க வைத்தான். ஆதலின், நமது மனையருகில் வளைந்த குடமுழாப் போன்ற அடியினையுடைய கரிய புன்னையின் அடி மரத்தின் பின்னே சென்று மறைந்து கொள்வோம். அப்போது நம்மைக் காணானாகி அல்லல்படும் அவனது துன்பத்தையும் சிறிது காண்போம். வருவாயாக!” என்கிறாள்.

“திதலை அல்குல் நலம் பாராட்டிய
 வருமே தோழி வார்மணற் சேர்ப்பன்
 இற்பட வாங்கிய முழவு முதிர்புன்னை
 மாஅரை மறைகம் வம்மதி பானாள்
 பூவிரி கானல் புணர்குறி வந்துநம்
 மெல்லிணர் நறும் பொழிற் காணாதவன்
 அல்லல் அரும்படர் காண்கநாம் சிறிதே”
-நற். 307 : 4-10

மேலும் இதன் அடிமரத்தை. ‘நெடுங்காற்புன்னை’, கொடுங்காற் புன்னை, ‘முடத்தாள் புன்னை’ என்றும் கூறுவர்.

இம்மரத்தையும் இதன் கருங்கிளைகளில் தழைத்த இலைகளையும், முத்தன்ன வெள்ளிய அரும்புகளையும், அழகிய மலர்களையும் புலவர்கள் கண்டு உவந்து சுவைத்துப் பாடியுள்ளனர். இம்மரம் சாதாரண உயரமானது. இதன் அகன்ற தடித்த இலைகள் கரும் பச்சை நிறமாக இருக்கும். அதனால், மரமே நீல நிறமாகக் காணப்படும். இதன் நிழலில் மக்கள் அமர்ந்து இளைப்பாறுதல் உண்டு. இம்மரம் காதலர்கட்கு இரவுக்குறி பகற்குறி இடமாகவும். விளையாட்டயருமிடமாகவும் அமைந்துள்ளது. இம்மரத்திலும் இதன் பொதும்பரிலும் குருகு வந்து தங்கி இறை கொண்டு இருத்தலும் கூறப்படும்.

“நீல்நிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇ”-நற். 4 : 1-2

“நீல்நிறப் புன்னைத் தமிஒண் கைதை”-நற். 163 : 8

“அகல் இலைப்புன்னை புகர் இல் நீழல்
 பகலே எம்மோடு ஆடி”
-அகநா. 370 : 2-7

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வீஉகப்
 புன்னை பூத்த இன்நிழல் உயர்கரை”
-நற் 91 : 1-2

“ஓங்கு இரும்புன்னை வரிநிழல் இருந்து
 தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்தி”
-நற். 388 : 7-8

 

“இரவுஅருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
 வெண்கோட்டு அருஞ்சிறைத் தாஅய் கரைய
 கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே”

-நற். 67 : 3-5

“பொதும்பில் புன்னைச் சினைசேர்பு இருந்த
 வம்ப நாரை இரீஇ ஒருநாள்”
-அகநா. 190 : 6-7

“புன்னைஅம் பொதும்பில் இன்நிழல் கழிப்பி”
-அகநா. 340: 2

“பூவிரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
 கூஉம் கண்ணஃதே தெய்ய”
-அகநா. 310 : 12-13

“புன்னை நறும்பொழில் செய்த நம்குறியே”
-அகநா. 360 : 19

“மின்இலைப் பொலிந்த விளங்குஇணர் அவிழ்பொன்
 தண்நறும் பைந்தாது உறைக்கும்
 புன்னையங் கானல் பகல் வந்தீமே”
-அகநா. 80 : 11-13

மேலும், புன்னையைக் குறியீட்டிடமாகக் குறிக்கும் ஒரு நயம் மிக்கப் பாடலைக் குறிப்பிட வேண்டும்.

நெய்தல் நிலத் தலைமகள் ஓர் அழகிய புன்னை மர நிழலைப் பகற்குறியிடமாகக் கருதி வருகின்றான். அவனை வரைவு கடாவுங் குறிப்பில் தோழி கூறுகின்றாள். “காதல் தலைவ! இன்று ஏன் புதிதாக இந்த இளைய மரத்தின் அடியில் நிற்கின்றாய்? இப்புன்னையைப் பற்றிய வரலாற்றை நீ அறியாய்! இஃது ஒரு தனிச் சிறப்புடையது; எங்களால் வளர்க்கப்பட்டது. தலைவியும், யானும் தோழிகளுடன் இளமையில் இங்கு விளையாடினோம். அப்போது ஒரு புன்னைக் கொட்டையை விளையாட்டாக மணலுக்குள் அழுத்திப் புதைத்தோம். ஒரு நாள் அது முளைத்து விட்டது. அதன்பால் எங்களுக்கு ஒரு பரிவுண்டாயிற்று. அதனால் எங்களுக்கு ஊட்ட வந்த நெய்யையும், பாலையும் அதற்கு ஊற்றி, ஊட்டி வளர்த்தோம். எங்களுடைய அன்னை ஒரு நாள் இப்பக்கம் வந்தனள். இவ்வளர்ப்புப் புன்னையைப் பார்த்து மகிழ்ந்தாள். எங்களிடம் அன்னை ‘உங்களால் வளர்க்கப்பட்டபடியால் இப்புன்னை எனக்கு உங்களைக் காட்டிலும் சிறந்ததாகப் படுகின்றது. உங்களால் வளர்க்கப்பட்ட இவள் உங்களுக்குத் தங்கையாவாள்’ என்று கூறிப் புன்னையின் சிறப்பைப் பாராட்டினாள். அதனால், இப்புன்னை எங்கள் தங்கை ஆவாள். தங்கை இருக்க அம்மாவோ! நாணுதும்! இப்புன்னையடியிலா தலைவியுடன் குலவுதல் கூடும்? நினைக்கவே எனக்கு நாணமாக உள்ளது. நீ நல்குவையாயின், வேறு தழைத்த மரத்து நிழல் இல்லையோ?” என்று நயம்படவுரைத்துப் பகற்குறி மறுக்கின்றாள்.

விளையாடு ஆயமோடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று
அன்னை கூறினள், புன்னையது நலனே
அம்ம! காணுதும் நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்கு நீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே
-நற். 172

விளர்-மெல்லிய, நரலும்-ஒலிக்கும்.

இப்புன்னை மரத் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சி ஒன்று அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.


திதியன் என்னும் குறுநில மன்னன் குறுக்கை என்ற நகரில் இருந்து ஆண்டு வந்தான். அவனுடைய காவல் மரம் புன்னை. திதியனோடு, அன்னி என்னும் குறுநில மன்னன் பகை கொண்டான். திதியனுடைய காவல் மரமாம் புன்னையை வெட்டி வீழ்த்தி, அவனை அவலப்படுத்த எண்ணினான். இதனையறிந்த அன்னியின் அரிய நண்பன் என்னி என்பான், அன்னியைத் தடுத்தான். அன்னி, என்னியின் நல்லுரையைக் கேளாது குறுக்கை நகரைத் தாக்கினான். திதியனது காவல் மரமாகிய புன்னையை வெட்டி வீழ்த்தினான். அதனைக் கண்ட அன்னியைச் சேர்ந்த பாணர் இசை முழக்கி, ஆரவாரம் செய்தனர். (அகநா: 45 : 9-12) தனது காவல் மரம் வெட்டப்பட்டதைப் பொறாத திதியன் வெகுண்டு போரிட்டு, அன்னியை வீழ்த்தினான். ஆயினும், அவனுடைய புன்னை மரம் அன்னியால் வீழ்த்தப்பட்டு அவலம் எய்தியது. இங்ஙனம் துன்பியல் நிகழ்ச்சிக்கு ஆளாகிய புன்னை மரம் புறத்திணையியல் வரலாற்றைப் பெற்றது. இந்நிகழ்ச்சியை அகத்திணையியலுக்கு ஏற்றிய கயமனாரின் திறன் போற்றுதற்குரியது.

அன்னியால் அவலப்பட்ட இப்புன்னைத் தொடர்புடைய இன்னொரு பாடலையுங் காண்போம்:

களவியற் செவ்விக்கு ஆட்பட்ட ஒரு தலைமகளின் களவொழுக்கம் செவிலித் தாய்க்குப் புலனாயிற்று போலும். அவளது ஐம்பாலாம் கவினுற்ற கூந்தலைப் பற்றிக் கொண்டு எறிகோல் சிதையுந்துணையும் அவளுடைய சிறுபுறத்தில் புடைத்தாள். அதற்குச் சிறிதும் தளராது நின்ற தலைவி, ஒரு நாள் காதலனுடன் போய் விட்டாள். மகட் போக்கிய செவிலி, மனம் புழுங்கிச் சொல்கின்றாள்:

“சிறிதும் அருளின்றி அன்று எனது அமர்க்கண்ணுடைய அருமந்த மகளை அடித்த எனது கை, அன்னியால் வீழ்த்தப்பட்டு அவலமெய்திய புன்னையைப் போலக் கடுந்துயர் உழப்பதாக” என்று,

ஆள்இல் அத்தத்து அளியள் அவனொடு
... ... ... ... ...
அருஞ்சுரம் இறந்தனள் என்ப பெருஞ்சீர்
அன்னி குறுக்கைப் பறந்தலை திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்லிணர்ப் புன்னைபோல
நடுநவைப் படீஇயர் மாதோ-களிமயில்
... ... ... ... ... ... ... . . . . . . . .. . . . . . . . .. . .ஐம்பால்
சிறுபல் கூந்தல் போதுபிடித்து அருளாது
எறிகோல் சிதைய நூறவும் சிறுபுறம்
‘எனக்குரித்து’ என்னாள் நின்ற என்
அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே

(நூற-புடைக்க, அஞ்ஞை-மகள்)
-அகநா. 145 : 6-10 : 22


புன்னைக்கு அவலமிழைத்த அன்னியும், திதியனால் அவலமெய்தினான். இச்செய்தியை நக்கீரரும், அல்ல குறிப்பட்ட தலைவன் கூற்றாக அகத்திணையியலுக்கு ஏற்றிப் பாடியுள்ளார்.

“பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ நீயே!
... ... ... ... ... ... ...
மின் நேர் மருங்குல் குறுமகள்
பின்னிலை விடாஅ மடம்கெழு நெஞ்சே”

-அகநா. 126 : 15-21, 22


இங்ஙனம் வரலாறு படைத்த புன்னையைப் பாடிய பல்லோருள்ளும் உலோச்சனார் நனி சிறந்தவர். இவர் புன்னை மரத்தைத் தாவரவியற் புலவரே போல், புன்னையின் ஓவியந் தருகின்றார். புன்னையின் கரிய கிளைகள் இரும்பை ஒத்த வலிவுடையன. கரும்பச்சை இலைகள், நீல நிறத்தன. வெள்ளி போன்ற பூங்கொத்தின் உள்ளே விளைந்த பொன் போன்ற நறிய தாது, உதிரா நிற்கும். அதில் புலியினது புள்ளியைக் கொண்ட அழகிய வரிவண்டுகள் ஊதி மொய்க்கும்:

இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர்நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிர
புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல்
வரிவண்டு ஊதலின் ............. . . . . . .. . .

-நற். 249 : 1-6


புன்னையின் இலை தடிப்பானது; கரும்பச்சை நிறமானது; நீள்வட்ட வடிவமானது; மேற்புறம் வழவழப்பும் பளபளப்பும் உடையது; கதிரொளியில் மின்னல் போலப் பளிச்சிடும்; அரும்புகள் வெண்ணிறமானவை; உருண்டை வடிவானவை; நிறத்தாலும், வடிவாலும் முத்தை ஒத்தவை என்பர் புலவர்கள்:

“மின் இலைப் பொலிந்த”-அகநா. 80 : 11

“மின் இலைப் புன்னை”-குறுந். 5 : 2

“முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை”[34]

“நெடுங்கால் புன்னை நித்திலம் பூப்பவும்”-சிறுபா. 149

புன்னையரும்பு முத்துப் போன்ற நல்ல வெண்ணிறமுடையதன்று. சற்று மங்கிய வெண்மையாக இருக்கும். இதனையுட் கொண்ட நெடுஞ்சேரலாதனும், இளந்திரையனாரும், கழுவித் தூய்மை செய்யாத முத்தை ஒத்தது புன்னையரும்பு என்பாராயினர்:

“மண்ணா முத்தம் அரும்பிய புன்னை”-அகநா. 30 : 13

 

“மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக் குவியிணர்
 புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன்”
-நற். 94 : 5-6

புன்னை மலரில் தாது நிறையத் தோன்றுவதால், மலரின் நிறமே பொன்னாகத் தோன்றும். தாது நறுமணமுடையது; நுண்ணியது; பொன்னிறமானது.

“புன்னை நறுவீ பொன்னிறம் கொளாஅ”
-அகநா. 260 : 9

“.... .... .... .... .... .... போதவிழ்
 பொன்னிணர் மரீஇய புள்இமிழ்ப் பொங்கர்ப்
 புன்னையஞ்சேரி”
-குறுந். 320 : 5-7

“.... .... .... .... .... .... முடத்தாட்புன்னை
 பொன்நேர் நுண்தாது நோக்கி”
-அகநா. 180 : 13-14

“புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு”
-அகநா. 230 : 7


புன்னை மலர் மிக அழகானது; நறுமணமுள்ளது; வெண்ணிற அகவிதழ்களை உடையது; மலர்ந்த புன்னையில் பொன்னிறத் தாது மிளிரும். அகவிதழ்களுக்கடியில் தேன் சொரியும். இதன் அழகை நுகர்ந்த புலவர்கள் அங்ஙனமே கூறுவர். இதில் தேன் நுகர்ந்த வண்டுகள் ஒலித்து நிற்கும். உதிர்ந்த மகரந்தம் இளமணலை மணங்கொள்ளும்.

“கடிமலர்ப் புன்னை”

“ஆய்மலர்ப் புன்னை”

“திகழ்மலர்ப் புன்னை”-கலி. 135 : 6, 8, 12

“தேனிமிர் நறு மலர்ப்புன்னை”-அகநா. 170 : 2

“மல்குதிரை உழந்த ஓங்குசினைப் புன்னை
 வண்டு இமிர் நுண்தாது பரிப்ப
 மணங்கொள் இளமணல் எக்கர்”
-அகநா. 250 : 2-4

“கருங்கோட்டுப் புன்னை மலர்த்தாது அருந்தி
 இருங்களிப் பிரசம் ஊத”
-நற். 311 : 9-10

“கடியிரும் புன்னை”-குறிஞ். 93”

இப்புன்னை மரம் தன் கிளைகளை மணலில் படியும் அளவிற்குத் தாழப் பரப்புவதால், மகளிர் கூட்டம் இதன் பூக்களை எளிதில் கொள்ளும் என்பர்:

“நின்ற புன்னை நிலந்தோய் படுகிளை”யின்
“தாதுசேர் நிகர்மலர் கொய்யும் ஆயம்”, ஆடவரும்
“இதன் மெல்லிணர்க் கண்ணி மிலைந்தனர்.”

மேலும், இம்மலர் புலாலின் கெடு நாற்றத்தைப் போக்கவும் செய்யும். சேரியை மணங்கமழச் செய்யும். ஆடவரும், மகளிரும் கொய்து கொண்டு எஞ்சிய மலர்கள், பசிய காயாகிக் காய்த்துத் தொங்கும் என்பர் உலோச்சனார்:

“படுகாழ் நாறிய பரா அரைப்புன்னை
 அடுமரம் மொக்கிளின் அரும்பு வாய் அவிழ
 பொன்னின் அன்ன தாது படுபல் மலர்
 சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
 நெய்கனி பசுங்காய் தூங்கும் துறைவனை”

-நற். 278: 1-5


மேலும், புன்னைக் கொட்டையில் எண்ணெய் உண்டாகுமென்பதையும் அறிவிக்கின்றார் இப்புலவர்.

கட்டிபெரே’ என்னும் புன்னையின் துணைக் குடும்பத்தில் ஐந்து பேரினங்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்பர் ‘காம்பிள்’. ‘கலோபில்லம்’ என்ற இதன் பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் தமிழ்நாட்டில் வளர்கின்றன. புன்னை மரம் தமிழ் நாட்டின் மேற்கு, கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வளர்கின்றது.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை: 2n = 32 என, டிக்கியர் (1953) கணக்கிட்டார்.

புன்னை மரம் உண்மையில் இந்திய நாட்டைச் சேர்ந்ததன்று போலும் என்கிறார் ‘காம்பிள்’. இக்கூற்று ஆய்தற்குரியது. பண்டைய சங்கச் சான்றோர், இதனைப் பலபடப் பாடியுள்ளனர். இது நெய்தல் நிலத்திற்குரிய மரம் ஆகும். இறையனார் களவியலுரையில் இம்மரம் நெய்தலின் கருப்பொருளான மரமென்று கூறுகிறது.

இந்த அழகிய மரம், தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. பெரிதும் கடற்கரைப்பகுதியில் தானே வளரும் இயல்பிற்று.

புன்னை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : கட்டிபெரேலீஸ்
தாவரத் துணைக் குடும்பம் : கட்டிபெரே
தாவரப் பேரினப் பெயர் : கலோபில்லம் (Calophyllum)
தாவரச் சிற்றினப் பெயர் : இனோபில்லம் (inophyllum)
தாவர இயல்பு : சிறுமரம், அழகானது. இலை உதிராதது. என்றும் பசுமையாக இருக்கும். நன்கு கிளைத்துப் பரவி வளரும்.
இலை : நீள்முட்டை வடிவானது. 4-52-3 அங்குல நீளமானது. தடிப்பானது; தோல் போன்றது. மேற்புறம் பளபளப்பானது.
நரம்பு : நடு நரம்பு எடுப்பானது. இதில் 90° கோணத்தில் இரு பக்கமும் பல கிளை நரம்புகள் காணப்படும்.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி. கொத்தாகப் பூக்கும். இலைக்கோணத்திலும் கிளை நுனியிலும் உண்டாகும்.
மலர் : மொட்டு - முத்துப் போன்றது. அழகானது. சிறிது மங்கிய வெண்ணிறமானது. மலர் வெண்மையானது.
புல்லி வட்டம் : 4 புறவிதழ்கள் ஒன்றோடொன்று தழுவிய அமைப்பானது.
அல்லி வட்டம் : 4 புல்லி இதழ்களைப் போன்ற அமைப்புடையது. தூய வெண்ணிறமானது.
மகரந்த வட்டம் : பல தாதிழைகள் அடியில் குவிந்திருக்கும். தாதுப்பை நேரானது. நீட்டு வாக்கில் வெடித்துத் தாதுக்களை வெளிப்படுத்தும். தாது மஞ்சள் நிறமானது.
 

புன்னை
(Calophyllum inophyllum)

சூலக வட்டம் : ஓரறைச் குலகம்; சூல் தண்டு மெல்லியது. சூல்முடி வட்டமானது. அடியில் இணைந்தது. ஒரு சூல் முதிரும்.
கனி : காய் உருண்டை வடிவானது. பசுமையானது. கனியை ட்ரூப் என்பர். சதைக்கனி; கனி உறை சதைப்பற்றானது.
விதை : ஓர் அங்குல உருண்டையானது; வலியது.

இதன் அடிமரம் வலியது. செம்பழுப்பு நிறமானது. பெரிதும் மரவேலைக்குப் பயன்படும். விதையிலிருந்து ஒரு வித எண்ணெய் எடுக்கப்படுகிறது. எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது.

 

பயினி
வட்டேரியா இண்டிகா (Vateria indica,Linn.)

குறிஞ்சிப் பாட்டில் கபிலர், “பயினி வானி பல் இணர்க் குரவம்” (69) என்றார். ‘பயினி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பயினிப்பூ’ என்று உரை கூறினார். சங்க இலக்கியத்தில் வேறு யாங்கணும் ‘பயினி’ என்பது கூறப்படவில்லை. பிற்கால இலக்கியமாகிய பெருங்கதையில் ‘பயில் பூம் பயினி’ என வரும் சொற்றொடரைக் கொண்டு பார்த்தால் ‘பயினி’ மரத்தில் பூக்கள் அடர்ந்திருக்கும் என்று அறியலாம். வட்டேரியா இன்டிகா என்னும் தாவரப்பெயர் உள்ள மரத்தைப் ‘பயின்’ என்று மலையாள மொழியில் அழைப்பர் என்று காம்பிள் கூறியுள்ளார். இம்மரத்தின் பூக்கள் கொத்தாக உள்ளன. ஆதலின் ‘பயினி’ என்பது வட்டேரியா இன்டிகா என்ற மரமாக இருக்கலாம் என்று எண்ணி இதன் தாவர இயல்புகள் கீழே தரப்படுகின்றன. எனினும், இம்மரம் கபிலர் கூறும் ‘பயினி’ ஆகுமா என்னும் ஐயப்பாடு உள்ளது.

சங்க இலக்கியப் பெயர் : பயினி
பிற்கால இலக்கியப் பெயர் : பயினி
உலக வழக்குப் பெயர் : பயின், வெள்ளைப் பயின், வெள்ளக் குன்றிகம், அடக்கப் பயின் (மலையாள மொழியில்)
தாவரப் பெயர் : வட்டேரியா இண்டிகா
(Vateria indica,Linn.)

பயினி இலக்கியம்

“பயினி வானி பல் இணர்க்குரவம்”- குறிஞ். 69

என்றார் கபிலர். சங்க இலக்கியங்களில் குறிஞ்சிப் பாட்டிலன்றி வேறெங்கும் இச்சொல் பயிலப்படவில்லை. இதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘பயினிப்பூ’ என்றார். இதற்கு மேல் இப்பூவைப் பற்றி யாதும் அறியுமாறில்லை. பெருங்கதையில் மர வரிசையில் இப்பயினி பேசப்படுகின்றது.

“பயில் பூம்பயினி”[35]

இது கொண்டு இதன் பூக்கள் பலவாகச் செறிந்திருக்கும் போலும் என்று மட்டும் அறிய முடிகிறது.

லஷிங்டன், பயினி என்றது வாட்டிகா ராக்ஸ்பர்கியானா (Vatica roxburghiana) என்பர். இது வாட்டிகா சைனென்சிஸ் என்று இப்போது வழங்கப்படும். இதற்கு மலையாளத்தில் ‘வெள்ளைப் பயின்’ என்றும், ‘அடக்கப்பயின்’ என்றும் பெயர்கள் உள்ளன. இது Diptero carpaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

இதுவன்றி காம்பிள் ‘பயினி’ என்னும் மலையாளப் பெயருடைய ஒரு மரத்தைக் குறிப்பிடுகின்றார். இது தாவரவியலில் Pajanelia rheadi எனப்படும் அது பிக்னோனியேசி என்னும் தாவரக் குடும்பத்தின் பாற்படும். இதனைத் தமிழில் ‘அரந்தல்’ என்று அழைப்பர் என்றும் கூறுவர். இவ்விரு தாவரப் பெயர்களும் கபிலர் கூறும் பயினியாகுமா என்று துணிதற்கில்லை.

இவையன்றி மலையாளத்தில் ‘பயின்’ என்றழைக்கப்படும் ஒரு மரத்தைத் தாவரவியலில் (Vateria indica) வட்டேரியா இன்டிகா என்று அழைப்பர் என்பர் காம்பிள். இது Dipterocarpaceae என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்ததே. ஆயினும் இதுவும் கபிலரது ‘பயினியா’ என்று கூறுவதிற்கில்லை. ஏனெனில், இதனைத் தமிழில் ‘வெள்ளைக் குன்றிகம்’ என்று சொல்வர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார் ஆதலின் என்க. எனினும் வட்டேரியா இண்டிகா என்னும் தாவரத்தின் இயல்புகளைக் காண்போம்.

xபயினி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமி புளோரேயில் கட்டிபெரேலீஸ்
Gutriferales
தாவரக் குடும்பம் : டிப்டிரோ கார்ப்பேசி (Dipterocarpaceae)
தாவரப் பேரினப் பெயர் : வட்டேரியா (vateria)
 

பயினி
(Vetaria indica)

தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
தாவர இயல்பு : பெரிய மரம். இதில் ஒரு வகையான பசை உண்டாகிறபடியால், இதனைப் பினேவார்னிஷ் மரமென்றும், இந்தியக் கோபால் வார்னிஷ் என்றும் கூறுவர்.
இலை : தோல் போன்று தடித்து அகன்ற இலை, முட்டை வடிவானது. 14 இணை இலை நரம்புகள் காணப்படும்.
மஞ்சரி : கிளை நுனியிலும், பக்கவாட்டிலும் இலைக்கட்கத்தில் உண்டாகும் கலப்பு மஞ்சரி.
மலர் : வெண்மை நிறமானது. 8.அங்குல அகலமானது. மணமுள்ளது.
புல்லி வட்டம் : மிகச் சிறிய பல புல்லிகள் அடியில் இணைந்துள்ளன.
மகரந்த வட்டம் : 15 முதல் 50 வரை மகரந்தத் தாள்கள் உள்ளன. தாதுப்பை நீளமானது. தாதுப் பையிணைப்பு மூடிகஸ் எனப்படும்.
சூலக வட்டம் : 3-2 சூலிலைச் சூலகம். சூல் தண்டு சுபுலேட் எனப்படும்.
சூல் முடி : குறுகிய பிளவுள்ளது.
கனி : ஒரு வித்துள்ள (காப்சூல்) வெடிகனி, முட்டை அல்லது வட்ட வடிவானது. மங்கலான பழுப்பு நிறமானது.
விதை இலை : அகன்று சதைப்பற்றானது. சமமில்லாதது. முளை வேரையுட்கொண்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தென் கன்னடத்திலிருந்து திருநெல்வேலி வரையிலுள்ள 2500 அடி உயரமுள்ள மலைப்பாங்கில் வளரும். மரம் கருநீலப் பழுப்பு நிறம். ரெசீன் (Resin) என்னும் பசைப்பொருள் உள்ளது, விதையில் ஒருவித எண்ணெயுண்டாகிறது.

 

பாரம்-பருத்தி
காசிப்பியம் ஹெர்பேசியம் (Gossypium herbaceum,Linn.)

‘பாரம் பீரம் பைங்குருக்கத்தி’ என்று கபிலர் கூறும் குறிஞ்சிப் பாட்டடியில் (92) காணப்படும் ‘பாரம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பருத்திப்பூ’ என்று உரை கண்டார்.

பருத்தி ஒரு சிறு செடி. இதன் மலர் செந்நிறமானது. இதன் விதைகளில் உட்புறத்தோலில் வளரும் மெல்லிய இழைகளே பருத்திப் பஞ்சு ஆகும். இதனைக் கொண்டுதான் பருத்தி ஆடைகள் நெய்யப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : பாரம்
உலக வழக்குப் பெயர் : பருத்தி
தாவரப் பெயர் : காசிப்பியம் ஹெர்பேசியம்
(Gossypium herbaceum.,Linn.)

பாரம்-பருத்தி இலக்கியம்

‘பாரம் பீரம் பைங்குருக்கத்தி’ என்பது கபிலர் வாய் மொழி (குறிஞ். 92). பாரம் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பருத்திப் பூ’ என்று உரை கூறியுள்ளார். பருத்தியின் பஞ்சு மூடைகள் பற்றிப் புறநானூறு கூறும் :

“கோடைப் பருத்தி வீடுநிறை பெயத்
 மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன

-புறநா. 393: 12-13


(பருத்தி வீடு = பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு)

பாரம் என்னும் பருத்திப் பெயரில் ஓர் ஊர். மிஞிலி என்பவனுக்குரியது என்பர் கபிலர். ‘மிஞிலி காக்கும் பாரத் தன்ன’ (நற். 265:4-5). பருத்தியூர் எனவும் இக்காலத்தில் ஊர்ப்பெயர் உள்ளது. பருத்திப் பஞ்சின் நூலை நூற்கும் பெண்டிரைப் பற்றிப் பேரிசாத்தன். பேசுகின்றார் :

“பருத்திப் பெண்டின் பனுவ லன்ன
 நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை”

-புறநா. 125 : 1-2


இதற்குப் ‘பருத்தி நூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சு போன்ற’ என்று உரை கூறுவர். நீறு பூத்த நிணத்திற்குப் பருத்திப் பஞ்சு உவமை கூறப்படுகின்றமை நோக்குதற்குரித்து (புறநா. 393).



பாரம்–பருத்தி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே; மால்வேலீஸ் அகவிதழ் இணையாதவை.
தாவரக் குடும்பம் : மால்வேசி (Malvaceae)
தாவரப் பேரினப் பெயர் : காசிபியம் (Gossypium)
தாவரச் சிற்றினப் பெயர் : ஹெர்பேசியம் (herbaceum)
தாவர இயல்பு : செடி கிளைத்துத் தழைத்து வளரும்; கரிய நிற மண்ணில் நன்கு வளரும்; 2-3 அடி உயரம்; பெரிதும் பயிரிடப்படுகிறது.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : அகன்ற தனியிலை; கையன்ன நரம்புகள்; இலை விளிம்பு பல. அகன்ற ஆழமான மெல்லிய இலையடிச் சிறு செதில்கள் பெரியவை; இலைக் கோணத்தில் பெரிய ஐந்தடுக்கான மஞ்சள் நிற மலர் கவர்ச்சியாகக் காணப்படும்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள். பசியவை அடியில் இணைந்திருக்கும்.

பாரம்
(Gossypium herbaceum)

அல்லி வட்டம் : (கல்வலூட்) நேருக்கு நேரான அடுக்கில் 5 அகன்ற மெல்லிய இதழ்கள் எடுப்பானவை.
மகரந்த வட்டம் : பல குட்டையான தாதிழைகள். ஒரு குழல் வடிவான தாதுக் காம்பில் சுற்றிலும் ஒட்டியிருக்கும்; தாதுப்பை ஒன்றுதான்; சிறுநீரக வடிவானது.
மகரந்தம் : பல தாதுக்கள் உண்டாகும் தாதுப்பையின் வெளிப்புறமாக வெடித்து வெளிப்படும். தாதுவின் வெளியுறையில் (எக்சைன்) நுண்ணிய முட்கள் உள்ளன.
சூலக வட்டம் : 2 சூலிலைச் சூலகம்; பல சூல்கள்; சூல் தண்டு மகரந்தக் குழலின் உள்ளேயிருக்கும்; சூல்முடி குல்லாய் போன்றது.
வித்திலை : இரண்டும் மடிந்திருக்கும்; விதைக் கரு வளைந்தது.

காசிபியம் பார்படேன்ஸ் (Gossypium barbedense) என்பதை சீ அயலண்டு பருத்தி (sea island cotton) எனவும், காசிபியம் பெருவியானம் (Gossypium peruvianum) தென்அமெரிக்கப் பருத்தி எனவும், காசிபியம் ஹிர்சூட்டம் என்பதை (Gossypium hirsutum) ஷார்ட் ஸடேபிள் பருத்தி (short staple cotton) எனவும் கூறுவர். இவை அனைத்தும் அமெரிக்க நாட்டினது என்பர். காசிபியம் ஹெர்பேசியம் (Gossypium herbaceum) கருங்கண்ணிப் பருத்தி என்றும், இது கிழக்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்தது என்றும் கூறுவர். காசிபியம் ஆர்போரிட்டம் (Gossypium arboretum) என்ற மரப் பருத்தி (Tree cotton) ஆப்பிரிக்காவில் வெப்பப் பகுதியைச் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். பருத்திப் பஞ்சு மிகவும் துல்லியமான செல்லுலோஸ் ஆகும். பருத்திச் செடி வெப்ப நாடுகளில் பெரிதும் பயிரிடப்படுகிறது. பருத்திப் பஞ்சு ஆடைகள் நெய்வதற்குப் பயன்படுதலின் பெரிதும் பயிரிடப்படுகின்றது. இக்காலத்தில் இந்தியப் பருத்தியை அமெரிக்கப் பருத்திச் செடிகளில் செயற்கை முறையில் இணைத்துப் புதுப் புதுப் பருத்திப் பரம்பரைகளை உருவாக்கியுள்ளனர்.

பருத்திச் செடி தொன்று தொட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனைப் பற்றிய செய்திகள் புறநானூற்றில் காணப்படுகின்றன. வேளாண்மைத் துறையினர் பருத்திச் செடியில் மிகப்பெரிய, அரிய ஆய்வுகள் பல செய்து மிகவும் பயன் தரும் புதுப் புதுச் செடிகளை உருவாக்கி வருகின்றனர். பருத்தித் துணி இழைகள், மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டனவாதலின், பருத்தி சிந்து சமவெளி நாகரிகத் தொடர்புடையதென்று கே. ஏ. செளத்திரி கூறுவார். மேலும், பழைய உலகப் பருத்தியில் ஆய்வு செய்த ‘எட்சின்சன்’, ‘சைலோ’, ‘ஸ்டீபன்ஸ்’ முதலியோரும் இதனை (1947) வலியுறுத்துவர். எனினும், பருத்தி முதன் முதலில் எந்த நாட்டில் தோன்றிற்று என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆதலின், தண்டமிழ் நாட்டில் தொன்று தொட்டு வளர்க்கப்பட்டு வரும் பருத்தியின் தோற்றத்தையும், இதனுடைய அனாதி முறையான பழமையினையும் அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து கண்டு சொல்வதற்குத் தமிழ் மகன் உடனடியாகத் துடித்தெழ வேண்டும்.

 

இலவம்

பாம்பாக்ஸ் மலபாரிக்கம் (Bombax malabaricum,D.C.)

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் இலவமரம் செந்நிறமான பூக்களை உடையது. நெடிது உயர்ந்து வளர்ந்த கிளைகளை உடையது: மரத்தில் குவிந்த முட்டு முட்டான தடித்த முட்கள் இருக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : இலவு, இலவம்.
உலக வழக்குப் பெயர் : முள்ளிலவு இலவம், பஞ்சுமரம்.
தாவரப் பெயர் : பாம்பாக்ஸ் மலபாரிக்கம்
(Bombax malabaricum,D.C.)
ஆங்கிலப் பெயர் : ரெட் சில்க் காட்டன் மரம் (Red Silk Cotton tree)

இலவம் இலக்கியம்

இதில் உண்டாகும் பஞ்சைக் காட்டிலும் மென்மையும் பளபளப்பும் குளிர்ச்சியும் உடைய பஞ்சு தரும் இலவ மரமொன்று உண்டு. அதற்கு ஆஙகிலத்தில் (White Silk Cotton tree) வொயிட் சில்க் காட்டன் மரம் என்று பெயர். இம்மரமும் ஓங்கி வளரும் இயல்புடையது. மேற்புறத்துக் கணுக்களில் நான்கு புறமும் கவிந்த கிளைகளை விடுவது. வெளிர் மஞ்சள் நிறமான பூக்களை அவிழ்ப்பது. முதிராத இதன் அடிமரத்தில் தடித்த குவிந்த முட்கள் இருக்கும். இதற்குத் தாவரவியலில் எரியோடெண்ட்ரான் பென்டான்ட்ரம் (Eriodentron pentandrum, Kurz) என்று பெயர்.

சங்க இலக்கியங்கள் கூறும் ‘இலவம்’ என்பது நெருப்பு போலும் சிவந்த நிறமுள்ள மலர்களையுடைய பெரிய மரம். இக்காலத்தில் இதனை ‘முள்ளிலவு’ என்று கூறுவர். இம்மரத்தின் பூ குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றுள்ளது. இதன் அடிமரம் நீளமானது. பருத்து வளர்வது: பட்ரெஸ் (Butress) என்ற அகன்ற பட்டையான முட்டு வேர்களைக் கொண்டது. அடிமரத்திலும், கிளைகளிலும் முட்டு முட்டான கூம்பிய முட்கள் இருக்கும். களிறு தன்னுடைய தினவைப் போக்கிக் கொள்ளுதற்கு இம்முள்ளமைந்த அடி மரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்ளும். இம்மரம் மலைப் பகுதியான பாலை நிலத்தில் வளரும். இவ்வுண்மைகளைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன.

“ஈங்கை இலவம் தூங்குஇணர்க் கொன்றை”-குறிஞ். 86

“நீள்அரை இலவத்து அலங்கு கிளை”-பெரும் . 83

“நீள்அரை இலவத்து ஊழ்கழிபன்மலர்”-அகநா. 17 : 17

“ஓங்கு சினை இலவம்”-ஐங். 338 : 2

“முள்ளரை இலவத்து ஒள்ளிணர் வான்பூ”-ஐங். 320

“முளிகொடி வலந்த முள்ளுடை இலவம்”-நற். 105 : 1

“களிறுபுலம் உரிஞ்சிய கருங்கால் இலவம்”-அகநா. 309 : 7

இந்த இலவ மரத்தின் பூ மலையுறு தீயை ஒத்த செந்நிறமானது. இலைகள் எல்லாம் உதிர்ந்த பின்னர், மலர்களைப் பரப்புவது. இம்மரத்தில் பெருங்காற்று மோதுவதால், இம்மலர்கள் கீழே விழுவது இடியுடன் கூடிய நெருப்பு வானத்திலிருந்து தரையில் வீழ்வதை ஒக்கும். பெருவிழா எடுத்த பழம் பெருமை சான்ற மூதூரில் ஏற்றப்பட்டுள்ள நெய் விளக்குகளிலிருந்து விழும் சுடரை ஒக்கும். வீழ்ந்தவை போக எஞ்சியுள்ள மலர்கள், விடியற்காலையில் வானத்தில் தோன்றும் விண் மீன்களை ஒத்துக் காட்சி தரும். இலைகளே இல்லாமல் அனைத்து மொட்டுகளும் மலர்ந்து நிற்கும் இக்காட்சி, கார்த்திகை நாளில் மகளிர் ஏற்றிய சுடர் விளக்கின் அழகுடன் தோன்றும்.

“இலைஇல மலர்ந்த ஓங்குநிலை இலவம்
 மலையுறு தீயின் சுரமுதல் தோன்றும்”
-ஐங். 338 : 2-3

“முள்ளரை இலவத்து ஒள்ளிணர் வான்பூ
 முழங்கழல் அசைவளி எடுப்ப வானத்து
 உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்”
-ஐங். 320 : 1-3

“அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்
 நீள்அரை இலவத்து ஊழ்கழி பல்மலர்
 விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்
 நெய்யுமிழ் சுடரின் கால்பொரச் சில்கி
 வைகுறு மீனின் தோன்றும்”
-அகநா. 17 : 17-21

இலவ மலரின் செம்மை நிறத்தைப் பரணர், சான்றோரின் நாவிற்குவமிக்கிறார். சான்றோர் பாடியதைக் குறிக்கின்றவர், அச்சான்றோரது நாவின் நிறத்தையும், நேர்மையையும் அம் செந்நா என்று கூறுகின்றார். இச்சொற்றொடரில் உள்ள செம்மை நேர்மையுடன், நாவின் நிறத்தையும் குறிக்குமாறு கண்டு மகிழலாம்.

“இலமலர் அன்ன அஞ்செந் நாவில்
 புலமிக் கூறும் புரையோர்”
-அகநா. 142 : 1-2

முள்ளிலவின் பசிய காய் மஞ்சள் நிறமாக முதிரும். முதிர்ந்து வெடித்து வெள்ளிய பஞ்சினை வெளிப்படுத்தும். இலவம் பஞ்சிற்குப் ‘பூளை’ என்றும் பெயர்.[36] இதன் காய் வெடிக்கும் போது அதன் முதுகுப்புறத்தில் தோன்றும் கோடு அணிலின் புறத்தில் தோன்றும் கோடுகளை ஒத்திருக்குமென்பர்.

“பூளையம் பசுங்காய் புடைவிரித் தன்ன
 வரிப்புற அணில்”
-பெரும். 84-85

இலவ மரத்திற்கு ஆங்கிலத்தில் சில்க் காட்டன் மரம் (Silk cotton tree) என்று பெயர். முள்ளிலவிற்கு (Red cotton tree) ரெட் காட்டன் மரம் என்றும், வெளிர் மஞ்சள் நிறமான பூக்களையுடைய இலவம் பஞ்சு மரத்திற்கு (White cotton tree) வொயிட் காட்டன் மரம் என்றும் பெயர்.

“நெருப்பெனச் சிவந்த உருப்புஅவிர் அங்காட்டு
 இலைஇல மலர்ந்த முகையில் இலவம்
 கலிகொள் ஆயம் மலிவுதொகுபு எடுத்த
 அம்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”

-அகநா. 11 : 2-5

“வேனில் அத்தத்து ஆங்கண் வான்உலந்து
 அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்
 பெருவிழா விளக்கம் போல பலவுடன்
 இலையில மலர்ந்த இலவமொடு
 நிலைஉயர் பிறங்கல் மலையிறந் தோரே”

-அகநா. 185 : 9-13


இம்மலரில் ஐந்து செவ்விய அகவிதழ்கள் இருக்கும். இதழின் தடிப்பாலும், மென்மையாலும், செம்மையாலும் மகளிரது வாயிதழுக்கு இதன் இதழ் உவமிக்கப்படுகிறது.

“இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்”-பெரும். 27

தீக்காடாக மலர்ந்திருக்கும் இலவ மரத்தின் மேல் ஒரு மயில் ஏறியமர்ந்தது. இக்காட்சி நெருப்பில் இறங்கிய மகளிரை ஒத்தது என்பர்.

“. . . . . . . . . . . . . . . . முள்ளுடை
 இலவம் ஏறிய கலவ மஞ்ஞை
 எரிபுகு மகளிர் எய்க்கும்”
-ஐங். மிகை : 3

இவ்வாறு கூறப்படுதலை எண்ணின், அக்காலத்தில் கணவரை இழந்த மகளிர் எரிபுகுவர் என்று அறியக் கிடக்கிறது.

புலமையில் மேம்பட்டுப் பிற்காலத்தில் வாழ்ந்த, ஆத்திசூடி பாடிய அவ்வையார் கூறும் இலவ[37] மரத்தில் பஞ்சு மிக மென்மையுடன், பளபளப்பும் உடையது. இதனையே மெத்தைகளுக்கும் தலையணைகட்கும் பயன்படுத்துவர்.

இந்த இலவ மரமும் நெடிதுயர்ந்து வளர்வது; மேற்பகுதியில் கிளைகள் நாற்புறமும் பரந்து உண்டாகும். முதிராத இதன் அடி மரத்தில் முட்கள் இருக்கும். பின்னர் இம்முட்கள் உதிர்ந்து விடும். இதன் மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. காய்கள் பசுமையானவை. முதிர்ந்த இக்காய்கள் மங்கலான மஞ்சள் நிறமாய் இருக்கும். இதுவும் மலைப்பாங்கில் வளருமியல்பிற்று. கோயில்களின் புறத்தே பந்தல் போடுவதற்கு இவை வரிசையாக வளர்க்கப்படும். இதனைத் தாவரவியலார் ‘எரியோடென்ட்ரான் பென்டான்ரம்’ (Eriodendron pentrandrum, Kurz.) என்று கூறுவர்.

இலவம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே – மால்வேலீஸ் – அகவிதழ் பிரிந்தவை.
தாவரக் குடும்பம் : பாம்பகேசி Bombacaceae இதில் 22 பேரினங்கள் உள்ளன.
தாவரப் பேரினப் பெயர் : பாம்பாக்ஸ் (Bombax)
தாவரச் சிற்றினப் பெயர் : மலபாரிக்கம் (malabaricum) இதில் 50 சிற்றினங்கள் உள்ளன. இது அமெரிக்க நாட்டைச் சேர்ந்ததென்பர்.
சங்க இலக்கியப் பெயர் : இலவம், இலவு
உலக வழக்குப் பெயர் : முள்ளிலவு. பஞ்சு மரம், இலவ மரம்
ஆங்கிலப் பெயர் : ரெட் சில்க் காட்டன் மரம்
(Red silk cotton tree)
தாவர இயல்பு : பெரிய மரம். உயர்ந்து, கிளைத்து வறண்ட மலைப் பாங்கில் வளரும். மரத்தின் புறத்தே முட்டு முட்டான குவிந்த தடித்த முட்கள் இருக்கும். அடிமரத்தில் பட்ரெசஸ் (Buttressus) என்ற அகன்று தடித்த பட்டையின் முட்டு வேர்கள் இருக்கும்.
இலை : கூட்டிலை. குத்துவாள் போன்ற சிற்றிலைகள் ஓர் அங்குல நீளமானவை. இலைகள் உதிர்ந்து முளைக்கு முன் மலரத் தொடங்கும்.
மலர் : செந்நிறமானது. 3 அங்குல நீளமானது. கிளை நுனியில் கொத்தாகத் தோன்றும். இலையில்லாமல் செவ்விய மலர்களே பூத்து நிற்கும்.
புல்லி வட்டம் : தோல் போன்று தடித்த கிண்ண வடிவானது; மேற்புறத்தில் பிளவுற்றது.
அல்லி வட்டம் : 5 செந்நிறமான அகவிதழ்கள் அகன்று நீண்டவை.
மகரந்த வட்டம் : பலப் பல மகரந்தத் தாள்கள் பெரிதும் அடியில் ஒட்டியிருக்கும்.
சூலக வட்டம் : 5 செல் உடையது. ஒவ்வொன்றிலும் சூல்கள் மலிந்துள்ளன. சூல் தண்டு மேலே 5 கிளைகளாகத் தோன்றும்.
கனி : உலர் கனி. “காப்சூல்” என்ற வெடிகனி 5 பகுதிகளாக வெடிக்கும்.
விதை : உருண்டையானது; வழவழப்பானது; வெள்ளிய நீண்ட பஞ்சிழைகளை நெருக்கமாக உடையது. வித்திலைகள் மூடப்பட்டது போன்றிருக்கும்.

இதன் அடிமரம் மென்மையானது. எளிதில் உளுத்து விடுவது. ஆனால், உவர் நீரில் வலுவுடன் கூடிப் பல்லாண்டுகட்கு உழைக்கும். அதனால், இதன் அடிமரம் கடல் கலன்கட்கும் கட்டு மரத்திற்கும் பயன்படுத்தப்படும். இதில் ஒரு பிசின் உண்டாகும். இதனை மருந்துக்குப் பயன்படுத்துவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 72 எனச் சானகி அம்மையார் (டி-1945) கணித்துள்ளனர்.

 

குருக்கத்தி-குருகு-மாதவி
ஹிப்டேஜ்-மாடபுளோட்டா (Hiptage madabłota,Gaertn.)

‘குருக்கத்தி’ எனவும் ‘குருகு’ எனவும் சங்க இலக்கியங்கள் கூறும், இக்கொடியினை, ‘மாதவி’ எனவும், ‘கத்திகை’ எனவும் பிற்கால இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ‘குருக்கத்தி’யை ஒரு வலிய கொடி என்ற கூறலாம். தடித்து நீண்டு வளருமாயினும், கொழுகொம்பின்றித் தானாக வளராது. இதன் மலர் வெண்ணிறமானது. இதன் ஓர் அகவிதழ் மஞ்சள் நிறமாக இருக்கும். இதனால் மலர் கண் கவரும் வனப்புடையது.

சங்க இலக்கியப் பெயர் : குருக்கத்தி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : குருகு
பிற்கால இலக்கியப் பெயர் : மாதவி, கத்திகை
உலக வழக்குப் பெயர் : மாதவிக் கொடி, குருக்கத்தி
தாவரப் பெயர் : ஹிப்டேஜ்-மாடபுளோட்டா
(Hiptage madabłota,Gaertn.)

குருக்கத்தி-குருகு-கத்திகை-மாதவி இலக்கியம்

இதனைக் குறிஞ்சிப் பாட்டில், கபிலர் ‘பாரம் பீரம் பைங் குருக்கத்தி’ (93) என்றார். மாறன் வழுதியும். இதனைப் ‘பைங் குருக்கத்தி’ (நற். 97:5) என்றார். இவற்றுக்கு உரை கூறிய நச்சினார்க்கினியரும் பின்னத்தூராரும் ‘பசிய குருக்கத்திப்பூ’ என்றனர். கடியலூர் உருத்திரங்கண்ணனார். இதனைக் ‘குருகு’ என்பர் (பெரும்பா: 377). இதற்கு நச்சினார்க்கினியர் ‘குருக்கத்தி’ என்று உரை கண்டார்.

திருத்தக்கதேவர் ‘மாதவி’, ‘கத்திகை’ என்ற இரு பெயர்களைச் சூட்டுவர்:

“பயிலுமாதவிப் பந்தரொன்று எய்தினான்”[38]
“கோதை வீழ்ந்ததுவென முல்லை கத்திகைப்
 போது வேய்ந்தின மலர் பொழிந்து”
[39]

ஆசிரியர் நச்சினார்க்கினியர் கத்திகை என்பதற்குக் ‘குருக்கத்தி’ என்று உரை கூறுவர்.

ஆகவே குருக்கத்தி எனவும் குருகு எனவும் சங்க இலக்கியங்கள் கூறும் இக்கொடியினைப் பிற்கால இலக்கியங்கள் ‘மாதவி’ எனவும், ‘கத்திகை’ எனவும் குறிப்பிடுகின்றன. தாவர இயலில் இதற்கு ஹிப்டேஜ் மாடபிளோட்டா (Hiptage madablota) என்று பெயர். இது மால்பிகியேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை ஒரு வன்மையான கொடி எனக் கூறலாம். நெடிது நீண்டு வளரும் இயல்பிற்றாயிலும், பற்றுக் கொம்பின்றித் தானே ஓங்கி வளராது. இவ்வியல்பினால் இதனை வேறு கோல் கொண்டு பந்தரிட்டு, அதன் மேலே படர விட்டால், நல்ல பந்தராக அமைந்து வளரும். இதன் இலைகள் நான்கு அங்குலம் முதல் ஒன்பதங்குலம் வரை நீளமும், ஒன்றரை முதல் இரண்டங்குலம் வரை அகலமும், நல்ல பச்சை நிறமும் உடையன. இதன் இலை சற்றேறக் குறைய நுணா இலை போன்றிருக்கும். இதன் பூங்கொத்து காண்பதற்கு அழகாக இருக்கும். இணர், கணுக் குருத்தாகவும் நுனிக் குருத்தாகவும் வளரும். அரையங்குலம் முதல் முக்கால் அங்குலம் வரை நீளமான இதன் பூ வெண்மையானது. புறவிதழ்கள் ஐந்தும் பசுமையானவை. அரும்புகள் புறவிதழ்களால் மூடப் பெற்றிருத்தலின் பசிய நிறம் தோன்றுமாகலின், இதனைப் பைங்குருக்கத்தி என்றனர் போலும். அகவிதழ்கள் ஐந்தும் அடியில் குறுகியும், நுனியில் அகன்று நொய்தான விளிம்புகளுடனும் இருக்கும். ‘இதனைத் துய்த்தலை இதழ பைங்குருக் கத்தி’ (நற். 97 : 6) என்று புலவர் கூறுவர். இவற்றுள் ஓர் இதழ் மட்டும் மஞ்சள் நிறம் விரவப் பெற்றதாதலின், மலர் கண்கவர் வனப்புடையது. பத்து கேசரங்கள் பொன்னிறத் தாதுகுத்து நிற்கும். கருப்பை மூன்று பிரிவுகளை உடையது. இம்மலர் வட்ட வடிவாகத் தோன்றும்; பூவில் நறுமணமுண்டு. அதனால் இம்மலரைச் சூடிக் கொள்வதுண்டு. இம்மலரைப் பித்திகை மலருடன் விரவித் தொடுத்து உழவர் மடமகள் தெருவில் விற்பதைக் கூறுவர் மாறன் வழுதியார் :

“துய்த்தலை இதழபைங் குருக்கத் தியொடு
 பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
 வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
 தண்தலை உழவர் தனி மடமகள்”

 (வட்டி-கடகப்பெட்டி)-நற். 97 : 5-8

இப்பூ அமைந்த ஒரு சுவையான விளக்கத்தைப் பெரும் பாணாற்றுப் படையில் காணலாம்.

சிற்றுணவில் இடியப்பம் என்பதொன்றுண்டு. அரிசியை மாவாக இடித்து, நூல் இழை போலாக்கி அவிப்பதுதான் இடியப்பம். இதனை வெல்லப்பாகில் இட்டும் உண்பர். பாலில் இட்டும் உண்பர். இதனைக் கூவி விற்போர் ‘கூவியர்’ எனப்படுவர். புற்கென்ற புறத்தையும். வரிகளையுமுடைய குருக்கத்திப் பூவை இடியப்பமாகக் காட்டுகிறார் புலவர்.

காஞ்சி மரத்தைச் சுற்றிப் படர்ந்து குருக்கத்திக் கொடி மிகுதியாகப் பூத்துள்ளது. அப்பூ புன்புறத்தையுடையது. அகவிதழ்களின் விளிம்புகள் இழை போன்றுள்ளன. காஞ்சியின் கரிய அடி மரத்தில் குருக்கத்தி மலர்கள் வெண்ணூலாகப் பூத்திருப்பது, வெல்லப்பாகோடு இடியப்பம் கிடப்பது போன்று காட்சியளிக்கின்றது என்கிறார். மற்று, இன்னொரு காட்சியும் இங்கே தரப்படுகின்றது. மாதவிப் பூங்கொத்திற்கு அடியில் மணற்குழி ஒன்று உளது. அதில் நீர் நிறைந்திருக்கும். பூங்கொத்திலிருந்து மலர்க் குழி நீரில் விழுந்து கிடக்கும் இம்மலர்கள், ‘இடியப்பம் பாலில் வீழ்ந்து கிடப்பது போன்று உள்ளது’ என்கிறார். இக்காட்சியைச் ‘சட்டியிலே கிடந்த அப்பம் பின்பு பாலிலே கிடந்தவை போல’ என்பார் நச்சினார்க்கினியர்.

“குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
 பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
 கார்அகல் கூவியர் பாகொடு பிடித்த
 விழைசூழ் வட்டம் பால் கலந்தவை போல்
 நிழல்தாழ்வார் மணல் நீர்முகத் துறைப்ப”

-பெரும்பா. 375-379


மேலும் குருக்கத்திப் பூந்துணர், நுனி வளரும் இயல்பிற்றாதலின் கோதை போலக் காட்சி தரும். சிலப்பதிகாரத்தில்[40] காப்பியத் தலைவியின் பெயருக்கேற்ப இம்மலர் ‘மாதவி’ எனப்பட்டது. இளங்கோவடிகள் ‘கோதை மாதவி’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு அடியார்க்கு நல்லார், ‘மாலை போல பூக்கும் குருக்கத்தி’ என்று உரை கண்டார்.

மாதவிக் கொடி, நவம்பர்-திசம்பர் மாதங்களில் இளவேனிற் காலத்தில் பூக்கும். உழவர் மடமகளால் இம்மலர் விற்கப்படுவதால், இதனை மருத நிலப்பூ என்பர். இம்மலரை முருகன் சூடியதாக நச்சினார்க்கினியர் கூறுவர். பெரியாழ்வார்,

“குடந்தைக் கிடந்த எங்கோவே
 குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்”

எனக் கண்ணனுக்காகப் பாடினார். “முல்லைக் கத்திகைப் போது வேய்ந்தனர்” என்பர் திருத்தக்கதேவர்.[41]

ஆசியாவில், வெம்மை மிக்க நாடுகளில் வாழும் மால்பிசியேசி என்னும் இதன் தாவரக் குடும்பத்தில், 3 பேரினங்கள் இந்தியாவில் உள என்பர். இவற்றுள், ஹிப்டேஜ் பேரினத்தில் 5 இனங்கள் இந்தியாவில் வளர்வதாக ‘ஹூக்கரும்’, தமிழ்நாட்டில் இரண்டு இனங்கள் மட்டும் காணப்படுவதாகக் ‘காம்பிளும்’ சொல்வர். மாதவிக் கொடி இந்தியாவில் வெம்மையானவிடங்களிலும், பர்மா, மலாக்கா, சீலங்கா, சீனா, சாவா முதலியவிடங்களிலும், காணப்படுகிறது. தமிழ் நாட்டில், மாதவியை ஒத்த மற்றொரு வகைக் கொடியும் வளரும். இதனை ஹிப்டேஜ் பார்விபுளோரா (Hiptage parviflora) என்றழைப்பர். இதன் இலைகள், மாதவி இலைகளைக் காட்டிலும் குறுகி நீண்டும், மலர்கள் சிறியனவாகவும் இருக்கும். மாதவிக் கொடி கன்னட மொழியிலும் ‘மாதவி’ எனவே வழங்கப்படுகிறது. உரியா மொழியில் இதனை, ‘மாதவி’ என்றும், ‘மாதபிளோதா’ என்றும் அழைக்கின்றனர். இதனைக் கொண்டுதான், தாவர நூலில் இதற்கு மாடபிளோட்டா என்ற சிற்றினப் பெயர் சூட்டப் பெற்றுள்ளது.

மாதவிக் கொடி பூத்த சில நாள்களில் மலர்கள் உதிர்ந்து, பூவிணர் பொலிவிழந்து காணப்படும். இந்நிலையில் நின்ற, குருக்கத்திச் செடியைக் கண்ணுற்ற கோவலன், தனது பிரிவினால் நலனிழந்து வாடும் தனது காதற்கணிகை “மாதவியை ஒத்த மாதவியாயினை” என்று தன் உள்ளத்துயரைப் புலப்படுத்துவானாயினன். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=42, 56 என ராய ஆர். பி., மிஸ்ரா என்.பி. (1962) என்போரும், 2n=58 எனப் பால். எம். (1964) என்பவரும் கூறுவர்.

குருக்கத்தி–குருகு–கத்திகை–மாதவி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ் பிரிந்தது; டிஸ்கிபுளோரே
தாவரக் குடும்பம் : மால்பிகியேசி (Malpighiaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஹிப்டேஜ் (Hiptage)
தாவரச் சிற்றினப் பெயர் : மாடபுளோட்டா (madablota)
தாவர இயல்பு : வன்கொடி (Woody climber). பற்றுக்கோடு கொண்டுதான் முதலில் வளரும். மரங்களின் மேல் சுற்றிப் படர்ந்து வளரும். மிக நீளமானது.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : தனியிலை; எதிரடுக்கில் பசுமையானது. தோல் போன்றது. இலைச் செதில் அற்றது. 10 செ.மீ-22செ.மீ. 3 செ. மீ.-5 செ. மீ. அகன்று நீண்டது.
மஞ்சரி : நுனி வளர் பூந்துணர். கணுக்குருத்தாகவும் நுனிக்குருத்தாகவும் வளரும் இயல்பிற்று. பல மலர்கள் பூத்த நிலையில் இணரே மாலை போன்று காட்சியளிக்கும். இதனைப் புலவர் கூறுவர்.
மலர் : வெண்மை நிறமானது. 5 அகவிதழ்களை உடையது. 15 மி. மீ. முதல் 20 மி. மீ. நீளமானது.
புல்லி வட்டம் : 5 பசிய புறவிதழ்களை உடையது. அடியில் இணைந்திருக்கும் அரும்பில் இவை அகவிதழ்களை நன்கு மூடிக் கொண்டிருத்தலின், பசிய நிறமானதாகத் தோன்றும்.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் பளபளப்பானவை. அடியில் குறுகியும், நுனியில் அகன்றும் நொய்தான விளிம்புகளுடன் இருக்கும். இவற்றுள் ஓரிதழில் மட்டும் மஞ்சள் நிறம் உட்புறத்தில் விரவியிருக்கும். இதழ்கள் ஒரே மாதிரியன்று. மலர் கண்கவர் வனப்புடையது. நறுமணமுடையது.
மகரந்த வட்டம் : 10 தாதுக்கால்கள் தாதுப் பைகளை ஏந்தி நிற்கும். இவை பொன்னிறமான தாதுக்களை உகுக்கும். இவற்றுள் ஒன்று ஏனையவற்றிலும் மிக நீளமானது.
சூலக வட்டம் : 3 பகுதியானது. சூல்தண்டு முதலில் சுருண்டு இருக்கும். சூல் முடி உருண்டையானது.
கனி : 3 சிறகமைப்பையுடைய சமாரா எனப்படும். விதைகள் உருண்டையானவை. வித்திலைகள் இரண்டும் வேறான நீளமுள்ளவை.

பற்றுக்கொம்பு கொண்டு பந்தரிட்டு வளர்ப்பதுண்டு. இதனைக் கம்பர் ‘மாதவிப் பொதும்பர்’ என்பர்.

 

நெருஞ்சி
ட்ரிபுலஸ் டெரஸ்டிரிஸ் (Tribulus terrestris,Linn.)

சங்க இலக்கியங்கள் கூறும் ‘நெருஞ்சி’ச் செடி குறிஞ்சிப் பாட்டில் இடம் பெறவில்லை. நெருஞ்சியின் மலர், அழகிய மஞ்சள் நிறமானது. இம்மலர் கதிரவனைப் பார்த்துக் கொண்டு திரும்பும் இயல்புடையது. இதனைக் கதிர்நோக்கி இயங்குதல் என்றும் “ஹீலியோடிராபிசிம்” (Heliotropism) என்றும் கூறலாம். இதன் இவ்வியல்பை எவரும் ஆய்வு செய்து அறுதியிடவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : நெருஞ்சி
பிற்கால இலக்கியப் பெயர் : சிறுநெருஞ்சி
உலக வழக்குப் பெயர் : நெருஞ்சி
தாவரப் பெயர் : ட்ரிபுலஸ் டெரஸ்டிரிஸ்
(Tribulus terrestris,Linn.)

நெருஞ்சி இலக்கியம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறுபஞ்சமூலம் என்ற நூலும் ஒன்று. ‘சிறு பஞ்ச மூலம்’ என்றால், ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள். அவை;

பயன் : சிறிய வழுதுணைவேர் சின்னெருஞ்சி மூலம்
சிறுமலி கண்டங்கத்தரி வேர் - நறிய
பெருமலி ஓர்
ஐந்தும் பேசுபல் நோய்தீர்க்கும்
அரிய சிறு பஞ்ச மூலம்[42]
(சிறுமலி-சிறுமல்லி, பெருமலி-பெருமல்லி)

என்று பதார்த்த குண சிந்தாமணி பகர்தலின், ‘சிறுபஞ்ச மூலத்தில்’ ஒன்றாகிய இந்த நெருஞ்சியின் வேர், பல் நோய்க்கு மருந்தாகும் என்று அறியப்படுகிறது. ‘நெருஞ்சி’யைப் பற்றிச் சங்க இலக்கியம் பேசுகின்றது.

நெருஞ்சிச் செடி, பசிய சிறு இலைகளை உடையது. பொன் போன்ற நல்ல மஞ்சள் நிறப் பூக்களுடன், கண்களுக்கு இனிய காட்சி தருவது. மலர்கள் முதிர்ந்து காயாகிப் பழுக்கும். நெருஞ்சிப் பழந்தான், ‘நெருஞ்சி முள்’ எனப்படும். வள்ளுவர் இதனை ‘மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்’ என்பார். கூடியிருந்த காலத்து இன்பம் தந்த காதலன், பிரிந்து துன்பம் தந்தான். இதனை எண்ணி நெஞ்சம் நொந்த காதலி, நெருஞ்சியின் மலரையும் முள்ளையும் உவமையாக்கிக் கூறுகின்றாள்:

நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோமென் நெஞ்சே
-குறுந். 202

இச்செய்யுளைப் பாடியவர் அள்ளுர் நன்முல்லையார், ‘வாயில் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது’ என்பது இப்பாடலின் துறையாகும்.

கண்ணுக்கு இனிமை செய்த புதுமலர், வீயாகி வாடிப் போய் உலர்ந்து விடுவது போலக் காதலர் சின்னாள் தந்த இன்பம் விரைந்து கெட்டதுமன்றி, அம்மலரே முள்ளாயினவாறு போல, இனிய காதலரே, தன்னைப் பிரிந்ததோடன்றித் தொடர்ந்து இன்னா செய்தற்கு என் நெஞ்சு நோகும் என்றவாறு. தைத்த நெருஞ்சி முள்ளைப் பிடுங்கிய பின்னும் வலியிருக்குமாப் போல, வாயில் வேண்டிய தலைவன் செயலை எண்ணி, மும்முறை நோமெனக் கூறி வாயில் மறுத்தாள் தலைவி.

மிக அழகிய மஞ்சள் நிறமுள்ள நெருஞ்சி மலருக்கு ஒரு சிறப்பான இயல்பு உண்டு. இதனைச் ‘சுடரொடு திரிதரும் நெருஞ்சி’ என்றார் அகநானூற்றுப் புலவர் பாவைக் கொட்டிலார். இக் கருத்தைப் புறநானூறு, ஐங்குறுநூறு, சீவக சிந்தாமணி முதலிய பண்டைய இலக்கியங்களிலும் காணலாம். நெருஞ்சிமலர் காலையில் கதிரவனை நோக்கிக் கிழக்குப் புறமாகப் பூத்து நிற்கும். மாலைப் பொழுதில் கதிரவனைக் கண்ட வண்ணம் மேற்குப் புறமாகத் திரும்பி நிற்கும்.

நெருஞ்சி மலரின் இவ்வியல்பு, ஒரு தாவரவியல் உண்மையாகும். இதனை கதிரோனுடைய கதிக்கு ஏற்பத் திரும்பும் இவ்வியல்பு, பூக்குந் தாவரங்களில் சூரியகாந்தி ‘ஹீலியாந்தஸ் ஆனுவஸ்’ மலருக்கு உண்டு. சூரிய காந்திச் செடி அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது என்பர். இதன் இவ்வியல்பு ஆய்வு செய்யப் பட்டுள்ளது. (Bot Gaz : 29:197) இதற்குக் கதிர்நோக்கி இயங்குதல் (Heliotropism) என்று பெயர். இவ்வியல்பு வேறு மலர்களுக்கு இல்லை. நெருஞ்சி மலரில் உள்ள இவ்வரிய இயல்பைப் பற்றி இதுகாறும் யாரும் ஆய்வு செய்ததாக யாம் அறிந்த மட்டில் இல்லை.

கதிர் நோக்கி இயங்கும் இவ்வியல்பினைப் போலவே, ஒளியை நோக்கி இயங்கும் இயல்பு ஒன்றுண்டு. இதனை விதை முளைத்து வரும் போது முளைகளில் காணலாம். இதற்கு ஒளி நோக்கி இயங்குதல் என்று பெயர் (Phototropism). இவ்விரு வகையான இயக்கங்களும் ஒன்றல்ல.

நெருஞ்சி மலர் சுடரொடு திரிதருவதைக் குறிக்கும் அகநானூற்றுப் பாடலில் இவ்வியல்பை உவமையாக்கிப் பாடிய அகப்பொருள் கருத்து சுவைக்கத் தக்கது. நயப்புப் பரத்தை இற் பரத்தை என்ற இரு பரத்தைமார்கள், மருதத் திணைத் தலைவவனாகிய ஊரனுக்கு உண்டு. நயப்புப் பரத்தை, இற்பரத்தையின் பாங்காயினார் கேட்கும்படியாகப் பின் வருமாறு பேசுகிறாள்: “துணங்கைக் கூத்து விழாவிற்று ஊரனுடைய தேர்தர வந்த இற் பரத்தை என் எழிலை ஏசிப் பேசினாள் என்பர். அதற்கு யான் அங்கு வராததே காரணம். நான் வந்திருந்தால், கதிரவனை நோக்கியவாறே அதனுடன் திரிதரும் நெருஞ்சி மலரைப் போல, எனது அழகைக் கண்டு ஊரனை என்னோடு திரியச் செய்திருப்பேன். . . . ” என்று. இதனை,

“தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன்
 தேர்தர வந்த நேர்இழை மகளிர்
 ஏசுப என்பஎன் நலனே, அதுவே
.... .... .... .... .... ....
 முழவுஇமிழ் துணங்கை தூங்கும் விழவின்
 யான்அவண் வாராமாறே, வரினே வானிடைச்

 சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
 என்னொடு திரியான் ஆயின் .... ....”

- அகம் : 336 : 10-19


என்ற வரிகளில் காணலாம். இப்பாடல், கதிரவனால் நெருஞ்சிப் பூ. எவ்வாறு கவரப்படுகிறது என்பதைப் புலப்படுத்தும். இக்கவர்ச்சியால், இப்பூ கதிரவனுக்கே உரிமையுடையது எனக் கூறுவது போன்று ஒரு தலைவி கூறுகிறாள்.

“கேட்டாயோ தோழி! ஓங்கு மலைநடான் ஞாயிறு அனையன், என்னுடைய பெரிய தோள்கள் நெருஞ்சி மலரை ஒத்தன” என்று கூறுகின்றாள்.

“.... .... .... ஓங்குமலை நாடன்
 ஞாயிறு அனையன் தோழி!
 நெருஞ்சி அனைய என்பெரும் பனைத்தோளே”

-குறுந். 315 : 2-4


நெருஞ்சிப் பூ கதிரவனை எதிர் கொண்டழைப்பதாக மோசி கீரனார் பாடுகின்றார்:

“பாழுர் நெருஞ்சிப் பசலை வான்பூ
 ஏர்தரு சுடரின் எதிர் கொண்டாங்கு”

-புறம்: 155 : 5-6


இங்ஙனம், எதிர் கொண்டழைக்கும் நெருஞ்சி மலர், கதிரவன் நெறியில் தொடரும் என்றார் திருத்தக்கதேவர்.

“நீள்சுடர் நெறியை நோக்கும்
 நிறையிதழ் நெருஞ்சிப்பூ”
[43]

இச்சிறப்பியல்பு பெற்ற நெருஞ்சிச் செடி பாழ்பட்ட வெற்றிடங்களில் வளரும்; பல கிளைகளை விடும். கிளைகள் மண் மேல் ஊர்ந்து நீண்டும், பரவியும் வளரும். இவ்வுண்மைகளைப் பதிற்றுப் பத்தில் காணலாம்.

இதனைக் குமட்டூர் கண்ணனார் என்னும் புலவர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய வெற்றிச் சிறப்பைப் பாடுங்கால், அவனது படைகள் பகைவனுடைய நாட்டை நெருஞ்சிச் செடி பரந்து வளரும் பாழிடமாக அழித்து விட்டன என்று கூறுகின்றார்!

“ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலை
 தாது எருமறுத்த கலிஅழி மன்றத்து”

-பதிற். 13 : 16-17


இதில் நெருஞ்சிச் செடியின் கிளைகள், தரையின் மேல் ஊர்ந்து படர்ந்து வளருமென்னும் உண்மை கூறப்படுகிறது.

இங்ஙனமே பல்யானைச் செல்கெழு குட்டுவனுடைய வெற்றிச் சிறப்பைப் பாடுமிடத்து, அவனது பகைவர் நிலம் நெருஞ்சிக் காடுறு கடுநெறியாகி விட்டது என்று பாலைக்கௌதமனார் கூறுவர்.

“பீர் இவர்வேலிப் பாழ்மனை நெருஞ்சிக்
 காடுறுகடு நெறியாக மன்னிய”
-பதிற். 26 : 10-11

மேலும், பெருவிழா மன்றம் பாழ்பட்ட பின், அவ்விடங்களில் அறுகம்புல்லுடன் நெருஞ்சியின் சிறிய பூக்கள் மலர்ந்து நிற்குமென்று கடியலூர் உருத்திரங்கண்ணனார், கரிகாற் பெருவளத்தானது வெற்றிச் சிறப்பைக் கூறுவர்:

“பெருவிழாக் கழிந்த பேஎம்முதிர் மன்றத்து
 சிறு பூ நெருஞ்சி யொடுஅறுகை பம்பி”

-பட்டின. 255-256


இவற்றால், பாழ்படுத்தப்பட்ட வெற்றிடங்களில் எல்லாம் நெருஞ்சிச் செடி அறுகம்புல்லுடன் வளருமென்பதும், சிற்றிலைகளை உடையதென்பதும், கண்ணுக்கினிய பொன்னிறச் சிறு பூக்களையுடையதென்பதும், இம்மலர்கள் சுடரொடு திரிதரும் இயல்புடையன என்பதும், காட்சிக்கினிய பூக்கள் காய்த்து நெருஞ்சி முள் எனப்படும் நெருஞ்சிப் பழமாகும் என்பதும் கூறப்படுமாறு காணலாம்.

நெருஞ்சி தாவர அறிவியல்

தாவரவியல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரக் குடும்பப் பெயர் : சைகோபிஸ்லேசீ
பேரினப் பெயர் : ட்ரிபுலஸ் (Tribulus)
சிற்றினப் பெயர் : டெரஸ்டிரிஸ் (terrestris, Linn.)
இயல்பு : தரையில் படர்ந்து நீண்டு வளரும் செடி
வளரியல்பு : வெப்ப நாடுகளில் நல்ல நிலத்தில் காணப்படும் மீசோபைட்

நெருஞ்சி
(Tribulus terrestris)

வேர்த் தொகுதி : 10 செ.மீ. முதல் 20 செ.மீ. நீளமான, மஞ்சள் நிற ஆணி வேர்
தண்டுத் தொகுதி : 6 முதல் 25 கிளைகள் நில மட்டத்திலேயே உண்டாகி, 40 செ. மீ. முதல் 125 செ. மீ. வரை நீண்டு தரையில் படர்ந்து வளர்வது.
இலை : இறகு வடிவக் கூட்டிலை எதிர் அடுக்கு முறையில் தண்டில் இணைந்துள்ளன. இரு இலைச் செதில்கள் உண்டு. ஒவ்வொரு கணுவிலும் உள்ள இலைகளில் ஒன்று பெரியது. மற்றொன்று சிறியது. இவை அடுத்த கணுவில் மாறி இணைந்திருக்கும். இவ்வாறு மாறி மாறி இணைந்திருப்பதைக் கிளையின் நுனி வரையில் காணலாம்.
பெரிய கூட்டிலை : இலைகளுக்கு 2 இணைச் செதில்கள் உள்ளன. 35-40 மி. மீ. நீளம். கூட்டிலையில் 10 சிற்றிலைகள்.
சிற்றிலைகள் : இறகு வடிவமைப்பில் ஒவ்வொன்றும் நீள் முட்டை வடிவானது. 10 செ. மீ. முதல் 15 செ. மீ. நீளம். 3 - 5 அகலம். இப்பெரிய கூட்டிலையின் கோணத்தில் கணுக்குருத்து இல்லை.
இலை : சிறிய கூட்டிலை. 2 இலைச் செதில்கள் 12 மி.மீ. நீளம். இதன் சிற்றிலைகள் 12-20 மி.மீ.நீளம்; 4-6 சிற்றிலைகளே உள்ளன. சிற்றிலைகள் 5-8 மி. மீ. நீளம். 3-4 மி.மீ. அகலம். இச்சிறிய கூட்டிலையின் கோணத்தில் கணுக் குருத்து தனி மலராகின்றது.
மலர்க் காம்பு : 15-22 மி.மீ நீளம்.
மலர் : 5 அடுக்கானது; ஒழுங்கானது; இரு பாலானது; சமச்சீரானது; மஞ்சள் நிறமானது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் தனித்தவை; ஈட்டி வடிவானவை; பச்சை நிறம்; இதழ்கள்
தழுவு ஒட்டு முறையில் அடியில் இணைந்துள்ளன.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் விரிந்தவை. தனித்தவை; தழுவு ஒட்டு முறை அமைப்பில் புல்லியிதழ்களுக்கு இடையில் அமைந்துள்ளன.
மகரந்தத்தாள் வட்டம் : 10 மகரந்தத்தாள்கள்; தாள்கள் அடியில் செதில் இருக்கும். ஒவ்வொன்றிலும் 2 மகரந்தப் பைகள் சற்று நீளமானவை. மஞ்சள் நிறத்தாது. பொதுவாக 5 சூலறைச் சூலகம். ஒவ்வொரு சூலறையிலும் 1 முதல் 5 சூல்கள் அடி ஒட்டு முறையில் உள்ளன.
சூல் முடி : 5 பிளவு வரையில்
கனி : 5 கோணம், 5 காய்கள்; காயின் மேல் 4 கூரிய முட்கள் உண்டு. கனியுறை கூரிய முள்ளாக நீளும். இக்கனிதான் நெருஞ்சிப் பழம் எனப்படும்.
கரு : கருவில், ஆல்புமின் இல்லை. முளை சூழ்தசை உண்டு.
மகரந்தச் சேர்க்கை : வண்டினத்தால், கனியிலுள்ள கூரிய முட்கள், விலங்குகளின் காலில் ஒட்டிக் கொள்வதால், கனி பரவுவதற்குப் பயன்படும். அதனால் இச்செடி, எளிதாக வேறிடங்களில் பரவும்.

சைகோபில்லேசீ (Zygophyllaceae) என்ற இத்தாவரக் குடும்பத்தின் பெயரைப் பலர் நிட்ராரியேசி (Nitrariaceae) போன்ற வெவ்வேறு பெயரிட்டு அழைத்தார்கள். எனினும், சைகோபில்லேசீ என்ற முதற்பெயரே நெடுங்காலமாக நிலைத்துள்ளது.

பெரும்பாலான மரபு வழி நிபுணர்கள், இத்தாவரக் குடும்பத்தை ஜெரானியேலீஸ் வகுப்பில் சேர்த்துள்ளனர். ஹட்சின்சன் மட்டும் இதனை மால்பிகியேலீஸ் வகுப்பில் இணைத்துள்ளார்.

பயன் : இதன் கனி - ‘முள்’ - மருந்துக்குப் பயன்படுமென்பர்.

இத்தாவரக் குடும்பத்தில், ஏறக்குறைய 25 பேரினங்களும், 200 சிற்றினங்களும் உள்ளன. உலகில் வெம்மையான சற்று உப்பு மிகுந்துள்ள மாவட்டங்களில் இவை காணப்படுகின்றன. பெரிதும் சிறு புதர்ச் செடிகளாகவும், சிறு மரங்களாகவும் உள்ள இத்தாவரங்கள் தங்களுக்கென ஓர் அமைப்பைக் கொண்டுள்ளன என்பர். ஓராண்டுச் செடியும் அருகித் தோன்றும். இவற்றுள் ‘டிரிபுலஸ்’ என்ற பேரினத்தைச் சேர்ந்தது நெருஞ்சி.

‘நெருஞ்சி’, ஐரோப்பா முதல் மத்திய ஆசியா வரையிலும், தென் ஆப்பிரிக்காவின் வெப்பமான பகுதிகளிலும் வளர்கிறது. இந்தியாவில் டெக்கான் எனப்படும் தென்னாட்டில் வெப்ப மிக்கவிடங்களில் வளர்கிறது.

 

புளிமா
அவெர்கோயா பிலிம்பி (Averrhoe bilimbi,Linn.)

“கரந்தை குளவி கடிகமழ் கலிமா” (குறிஞ் : 76) என்பது கபிலர் வாக்கு. கலிமா என்பது புளிமாவாகும். ‘கலிமா’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘தழைத்த மாம்பூ’ என்று உரை கண்டார். இவ்வுரை தேமா மரத்தைக் குறிப்பது போன்று ‘மாம்பூ’ எனப்படுதலின் பெரும்பாலோர். இது தேமா மரத்தையே குறிக்குமென்பார். இது பொருந்தாது. என்னை? கபிலர் கூறியது கூறார் ஆகலின். மேலும் ‘கலித்த மாம்பூ’ என்ற இவ்வுரை புளிமாம்பூவிற்கும் பொருந்தும் என்பதைக் கூர்ந்து நோக்கி அறிதல் கூடும்.

இவ்விடத்திலன்றி ‘புளிமா’வைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. எனினும் பிற்கால நூல்களில் அதிலும் யாப்பிலக்கணத்தில் ஈரசைச் சீர் முதல் நான்கசைச் சீர் வரையில் ‘புளிமா’ இணைத்துக் கூறப்படுகின்றது.

புளிமாமரம் தேமா மரத்தினின்றும் வேறுபட்டது. ‘புளிமா’ ஒரு சிறு மரம். தழை மிகுந்து தழைத்து வளரும். காய் மிகப் புளிப்பானது. கனியாக முதிர்வதில்லை. இம்மரம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : கலிமா
பிற்கால இலக்கியப் பெயர் : புளிமா
உலக வழக்குப் பெயர் : புளிச்சா, புளி மாங்காய், புளிச்சக்காய் மரம்,
தாவரப் பெயர் : அவெர்கோயா பிலிம்பி
(Averrhoe bilimbi,Linn.)

புளிமா தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப் பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஆக்சாலிடேசீ (Oxalidaceae)
தாவரப் பேரினப் பெயர் : அவெர்கோயா (Averrhoa)
தாவரச் சிற்றினப் பெயர் : பிலிம்பி (bilimbi, Linn.)
தாவர இயல்பு : சிறு மரம் 10 மீ. முதல் 15 மீட்டர் உயரமாகவும், கிளைத்துத் தழைத்தும் வளரும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : கூட்டிலை, இறகு வடிவானது. சிற்றிலைகள் 5-17 இணைகள். அடிப்புறம் நுண்மயிர் காணப்படும். 4-5 செ.மீ. 2.5-3 செ.மீ. நீள் முட்டை வடிவானது.
மஞ்சரி : நுனி வளர் பூந்துணர் அடிமரத்திலும், கிளைகளின் தண்டிலும் நேரடியாக உண்டாகும்.
மலர் : ஒழுங்கானது, ஐந்தடுக்கானது.
புல்லி வட்டம் : சிறு இலை போன்ற 5 புல்லிகள் திருகு இதழமைப்பில்.
அல்லி வட்டம் : 5 இதழ்கள் திருகிதழமைவு, இதழ்களின் அடியில் உட்புறத்தில் செம்மை நிறத் திட்டு இருக்கும்.
வட்டத்தட்டு : 5 சுரப்பிகளாக உடைந்திருக்கும்.
மகரந்த வட்டம் : 10 மகரந்தத் தாள்கள். இவற்றில் 5 மலட்டு மகரந்தத் தாள்களாகக் குன்றியிருக்கும்.

புளிமா
(Averrhoa bilimbi)

கனி : 5 பட்டையாக நீண்ட சதைக் கனி, பழுக்காது மிகுந்த புளிப்புள்ளது.

தமிழ் நாட்டில் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. காய்கள் உணவுக்குப் பயன்படும். இதனை ஒத்த மற்றொரு இனம் அவர்கோயா காரம்போலா என்பது (Averrhoa carambola). தமிழ்நாட்டுத் தாவரங்களில் வளர்க்கப்படுகிறது. இவையிரண்டும் எந்த நாட்டிற்கு உரியன எனத் தெரியவில்லை.

புளிமாங்காய்
(Averrhoa bilimbi)

 

விளா-வெள்ளில்
பெரோனியா எலிஃபாண்ட்டம் (Feronia elephantum,Corrn.)

விளா மரம் குறிஞ்சிப் பாட்டில் இடம் பெறவில்லையாயினும் பெரும்பாணாற்றுப்படை, நற்றிணை முதலிய சங்க இலக்கியங்களில் பேசப்படுகிறது.

யாப்பிலக்கணத்தில் ஈரசை முதலாக நான்கசைச் சீர்களின் வாய்பாட்டில் முறையே ‘கருவிளம்’, ‘கருவிளந்தண் பூ’ பயிலப்படும். இதற்கு ‘வெள்ளில்’ என்ற பெயரும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

சங்க இலக்கியப் பெயர் : விளா
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : வெள்ளில்
ஆங்கிலப் பெயர் : உட்ஆப்பில்
தாவரப் பெயர் : பெரோனியா எலிஃபாண்ட்டம்
(Feronia elephantum,Corrn.)


விளா-வெள்ளில் இலக்கியம்

விளாமரம் பிற்காலத்தில் கருவிளா எனப்பட்டது. இதனைத் தாவரவியலில் ஃபெரோனியா எலிஃபாண்டம் (Feronia elephantum, Corrn) என்பர். வில்வம் எனப்படும் கூவிளத்தைத் தாவரவியலில் ஈகிள் மார்மிலோஸ் (Eagle marmelos, Corrn.) என்பர். இவை இரண்டும் ரூட்டெசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

யாப்பிலக்கணத்தில் தேமா, புளிமா என்பன சீர்களைக் குறிக்கப் பயன்படுவன போலவே கருவிளம், கூவிளம் என்பனவும் குறிக்கப் பெறும்.

கருவிளம் : நிரை நிரை
கூவிளம் : நேர் நிரை
கருவிளங்காய் : நிரை நிரை நேர்
கூவிளங்காய் : நேர் நிரை நேர்
கருவிளங்கனி : நிரை நிரை நிரை
கூவிளங்கனி : நேர் நிரை நிரை
கருவிளந்தண் பூ : நிரை நிரை நேர் நேர்
கூவிளந்தண் பூ : நேர் நிரை நேர் நேர்

கருவிளம்

சங்க இலக்கியத்தில் விளாமரமும், விளங்கனியும் பேசப்படுகின்றன. அன்றி, விளாமரம் வெள்ளில் என்றும் கூறப்படுகின்றது.

“பார்வை யாத்த பறைதாள் விளவின்
 நீழல் முன்றில் நிலவுரல் பெய்து”
-பெரும்பா. 95-96

இவ்வடிகட்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர், ‘பார்வை மான் கட்டி நின்று தேய்ந்த தாளினையுடைய விளவினது நிழலையுடைய முற்றத்திடத்துத் தோன்றிய நிலஉரலிலே அப்புல்லரிசியைச் சொரிந்து’ என்று உரை கூறுவார்.

“விளம்பழங் கமழும் கமஞ்சூழ் குழீஇ”-நற். 12 : 1

என்ற இதனால் தயிர்த் தாழியில் நறுமணம் கமழுதற்கு அதனுள் விளாம்பழத்தை வைத்து மணமேற்றுவர் என்று தெரிகிறது.

“வெள்ளில் குறுமுறிகிள்ளுபு தெறியா”-திருமு. 37

என்ற இதனால் விளவினது சிறிய தளிரைக் கிள்ளி அழகு பெற, ஒருவர் மேல் ஒருவர் தெறித்து மகிழ்வர் என்று அறியலாம்.

இவையன்றிக் கபிலர்குறிஞ்சிப் பாட்டில் விளவினது மலரைக் கூறவில்லை.

“மணிப்பூங் கருவிளை” (குறிஞ். 68) என்றவிடத்து நச்சினார்க்கினியர் ‘நீலமணிபோலும் பூக்களை உடைய கருவிளம்பூ’ என்று உரை கண்டார். ஈண்டு கருங்காக்கணம் எனப்படும் கருவிளையினது மலரே குறிப்பிடப்படுகின்றதல்லது கருவிளாவின் பூவன்று.

கருவிளம்
(Feronia elephantum)

அவர் கருவிளம்பூ என்றது சந்தி நோக்கிப் போலும். மேலும், விளவினது பூ மிகச் சிறியது. அது நீலமணி போன்றதும், கரிய கண்ணை ஒத்ததுமன்று. அன்றியும், நான்கு சீர் அசைக்குக் கருவிளந்தண் பூ, கூவிளந்தண் பூ எனக் கூறப்படுவதல்லால், கருவிளம்பூ, கூவிளம்பூ என்னும் மூவகைச் சீரைக் கூறுவதில்லை.

விளா எனவும், வெள்ளில் எனவும் வழங்கப்பட்ட விளா மரத்தைப் பிற்காலத்தில் விளா என்றும், கருவிளா என்றும், கருவிளம் என்றும் வழங்கினர்.

“செண்பகம் கருவிளம் செங்கூதாளம்” என்று கூறுவர் இளங்கோவடிகள் .[44]

விளவின் குறுஞ்செடியில் முட்கள் நிறைந்திருக்கும். இதனுடைய கட்டை மஞ்சள் கலந்த வெண்மையான நிறத்தில் உறுதியாக இருக்கும். தமிழ் நாடெங்கும் வளர்கிறது. இதன் கனி சுவையுடையது, மணமுள்ளது.

விளா—வெள்ளில் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : டிஸ்சிஃபுளோரே (Disciflorae)
தாவரக் குடும்பம் : ரூட்டேஸி (Rutaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஃபெரோனியா (Feronia)
தாவரச் சிற்றினப் பெயர் : எலிஃபேண்டம் (elephantum)
தாவர இயல்பு : மரம் 15 மீ - 20 மீ. உயரமாகக் கிளைத்து வளரும் வலிய மரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட். ஆற்றுப் படுகையிலும், நீரற்ற வறண்ட நிலத்திலும் வளரும்.
இலை : மாற்றடுக்கில் சிறகுக் கூட்டிலை, 5-7 சிற்றிலைகள் காம்பற்று எதிரடுக்கில் அமைந்திருக்கும்.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி, நுனி வளர் பூந்துணராகத் தோன்றும்.
மலர் : பல பாலானவை. கருஞ்சிவப்பு நிறம்.
புல்லி வட்டம் : 5 சிறு பற்கள் போன்ற புல்லிகள் தட்டையானவை. முதிர்ந்தவுடன உதிர்ந்து விடும்.
அல்லி வட்டம் : 5 திருகு இதழமைப்பில் விரிந்திருக்கும் மிகச் சிறிய இதழ்கள். 4-6 வரையில் இருப்பதுமுண்டு.
வட்டத் தண்டு : வட்டத் தண்டு குட்டையானது
மகரந்த வட்டம் : 10-12 மகரந்தத் தாள்கள் சிலவற்றில் நிறைவின்றியுமிருக்கும்; வட்டத் தண்டினைச் சுற்றிச் செருகப்பட்டிருக்கும்.
மகரந்தத் தாள் : மகரந்தத் தாள்களின் அடிப்புறம் விரிவடைந்து இருக்கும். விளிம்பிலும் முகப்பகுதியிலும் விரல்கள் போலிருக்கும். மேற்புறம் மென்மையானவை.
மகரந்தப் பை : மெலிந்து நீள் சதுரமாயிருக்கும்
சூலக வட்டம் : சூற்பை நீள் சதுரமானது, 5-6 அறைகளை உடையது. நீளத்தில் ஓர் அறையுடன் இருக்கும் சூல்தண்டு இல்லை. சூல்முடி நீள் சதுரமானது.
சூல் : எண்ணற்றவை. பல அடுக்குகளில் உட்சுவரில் ஒட்டிய சூல் ஒட்டு முறையில் திரண்டிருககும்.
கனி : பெரிய உருண்டை வடிவான (அ) முட்டை வடிவான சதைக்கனி, ஒவ்வோர் அறையும் பல விதைகளுடன் இருக்கும்; ஓடு வழவழப்பாயும், மரக் கட்டை போலும் இருக்கும்.
விதைகள் : எண்ணற்றவை. மணமுள்ள சதைப் பற்றில் காணப்படும். நீள் சதுரமானவை. அமுங்கியிருக்கும்: முளை சூழ் தசையில்லை.
வித்திலை : தடிப்பாகவும், சதைப்பாங்குடனும் இருக்கும்.

விளா மரமும் வில்வ மரமும் (கருவிளம்-கூவிளம்) தொன்று தொட்டு வளர்வன; இந்திய நாட்டைச் சேர்ந்தன என்பர். இவ்விரு மரங்களும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதோடு, கீழ்க்கண்ட பொதுவியல்புகளும் உள்ளன.

  1. உயர்ந்து வளருதல்
  2. முட்களை உடையதாதல்
  3. தோட்டங்களிலும், பிறவிடங்களிலும் ஒழுங்கற்று வளர்தல்
  4. வளமற்ற, வறண்ட நிலத்திலும் வளர்தல்
  5. விதைகளைக் கொண்டே வளர்தல்
  6. ஐந்தாண்டுகளில் கனி தருதல்
  7. வலிமையான கனியுறை உடைமை முதலியன.

விளவின் கனி நறுமணமும் சுவையும் உடையது. சுவைத்து உண்ணப்படுவது. இதில் 2-3 விழுக்காடு ஆஸ்கார்பிக் அமிலமும் 7.25 விழுக்காடு சர்க்கரையும் உள்ளது.

கூவிளங்கனி, குருதி கலந்த வயிற்றுப்போக்கு நோய்க்கு நல்ல மருந்து. இதன் குரோமோசோம் எண் 2n = 18 என பானாஜிபால் (1957), இராகவன் (1957), நந்தா (1982) என்போரும்.2n = 36 என, சானகி அம்மாளும் (1945) கூறியுள்ளனர்.

 

கூவிளம்-வில்வம்
ஈகிள் மார்மிலோஸ் (Aegle marmelos,Corrn.)

‘கூவிளம்’ என்று கபிலர் (குறிஞ் 65) கூறிய சொல்லுக்கு நச்சினார்க்கினியர் ‘வில்வப்பூ’ என்று உரை கண்டார். இதுவே ‘வில்வம்’ என்று வழங்கப்படுகிறது. “யாவர்க்குமாம் இறைவர்க் கொரு பச்சிலை” என்பதற்கியைய சிவபெருமானுக்கு அருச்சனை புரிதற்கு இதன் இலைகளைச் சூட்டுவர்.

மேலும் யாப்பிலக்கணத்தில் ‘கூவிளம்’, ‘கூவிளந்தண் பூ’ என்பன ஈரசை, நான்கசைச் சீர்களுக்கு முறையே வாய்பாடாகும்.

சங்க இலக்கியப் பெயர் : கூவிளம்
பிற்கால இலக்கியப் பெயர் : வில்வம்
உலக வழக்குப் பெயர் : வில்வம்
ஆங்கிலப் பெயர் : பீல்மரம்
தாவரப் பெயர் : ஈகிள் மார்மிலோஸ்
(Aegle marmelos,Corrn.)

கூவிளம்-வில்வம் இலக்கியம்

வில்வ மரம் என வழங்கப்படும் மரத்தைச் சங்க இலக்கியம் கூவிளம் என்று கூறும்.

“உரிதுநாறு அவிழ் கொத்து உந்தூழ் கூவிளம்-குறிஞ்: 65

என்ற அடியில் உள்ள கூவிளம் என்பதற்கு நச்சினார்க்கினியர் வில்வப் பூ என்று உரை கூறியுள்ளார். நற்றிணைப் பாட்டில் (12) காணப்படும் ‘விளாம்பழம் கமழும் என்றது விளாம்பழத்தைக் குறிக்கும். அந்த ‘விளம்’ என்ற சொல்லுடன் ‘கூ’ என்ற எழுத்தைக் கூட்டிக் ‘கூவிளம்’ என்ற சொல் வில்வ மரத்தைக் குறிக்கிறது. விளமும் கூவிளமும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

சிவ பரம்பொருளுக்கு ஒரு பச்சிலை என்று கூவிளத்தின் இலைகளைக் கொண்டு வழிபடுவர். தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் வில்வத்தின் இலைகளைத் தொடுத்த கண்ணியைப் பொன்னால் செய்து அணுக்கத் திருவறையில் அருவுருவாகிய ஆண்டவனுக்குச் சூட்டியுள்ளனர்.

சுந்தரர் இதனைச் சிவபிரான் சூடும் மலராகப் பாடியுள்ளார்.[45] எழு பெரும் வள்ளல்களில் ஒருவரான ‘எழினி’ என்பான், குதிரை மலைக்குத் தலைவன். அவன் தன் அடையாளப் பூவாக இதனைச் சூடினான் என்பர்.

“ஊரனது ஏந்திய குதிரைக் கூர்வேல்
 கூவிளங்கண்ணிக் கொடும் பூண் எழினி”

-புறநா: 158 : 8-9


மேலும், ஒரு தலைமகன் காட்டு மல்லிகை மலருடன் சேர்த்துத் தொடுத்த கண்ணியைச் சூடி வருகுவன் என்பார் பெருங்குன்றூர்க் கிழார்.

“பெருவரை கீழல் வருகுவன் குளவியொடு
 கூவிளந் ததைந்த கண்ணியன் யாவதும்
 முயங்கல் பெருகுவன் அல்லன்”
-நற்: 119 : 8-10

அன்றியும், பகைவரது தலைகளாகிய அடுப்பில், கூவிள மரத்தின் விறகைக் கொண்டு எரிப்பர் என்று புறநானூறு கூறுகின்றது.

“பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பில்
 கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்”

-புறநா: 372 : 5-6


கூவிளம்—வில்வம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : டிஸ்கிபுளோரே
தாவரக் குடும்பம் : ரூட்டேசி

கூவிளம்
(Aegle marmelos)

தாவரப் பேரினப் பெயர் : ஈகிள்
தாவரச் சிற்றினப் பெயர் : மார்மிலோஸ்
தாவர இயல்பு : சிறிய முட்களுடன் கூடிய மரம். 10-20 மீ. வரை உயர்ந்து வளரும் வலிய மரம்
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : மாற்றடுக்குக் கூட்டிலை. 3 சிற்றிலைகள் சவ்வு போன்றிருக்கும். சற்றே அரவட்ட பற்களுடனும், உரோமம் அடர்ந்தும் அல்லது இல்லாமலும் இருக்கும்
மஞ்சரி : கலப்புப் பூந்துணர், இலைக் கோணங்களில் உண்டாகும்
மலர்கள் : இரு பாலானவை, வெண்மை நிறமானவை
புல்லி வட்டம் : 4-5 சிறிய மடல்கள், முதிர்ந்தவுடன் உதிர்வன
அல்லி வட்டம் : 4-5 அல்லியிதழ்கள் பிரிந்தவை. நீள் சதுரமானவை. விரிந்திருக்கும் திருகு இதழமைப்பு உடையது
வட்டத் தண்டு : தெளிவற்றது
மகரந்த வட்டம் : எண்ணற்ற 30-60 மகரந்தத் தாள்கள் வட்டத் தண்டினைச் சுற்றிச் செருகப்பட்டிருக்கும்
மகரந்தத் தாள்கள் : மெல்லியவை. சீரானவை. மகரந்தப் பைகள் நேராகவும், நீண்டும் காணப்படும்
சூலக வட்டம் : சூற்பை முட்டை வடிவமானது. 8-20 அறைகளுடனும் தடித்த வட்ட அச்சினைச் சுற்றியுமிருக்கும்.
சூல் தண்டு : குட்டையானது; சூல்முடி நீள் சதுரமானது சுருட்டு வடிவமானது; முதிர்ந்தவுடன் உதிர்ந்து விடும்
சூல் : எண்ணற்றவை; இரண்டு அடுக்குகளில் காணப்படும்
கனி : காய் முதிர்ந்து கனியாகும். உருண்டை வடிவானது. ஒற்றை அறையையுடைய சதைக்கனி; புறத்தோலாகிய ஓடு சுரசுரப்பானது; மரக்கட்டை போன்றது
விதை : நீள் சதுரமானவை; சதையில் அமுங்கியிருக்கும் முளை சூழ் தசையில்லை. வித்திலைகள் தடிப்பாயும், சதைப்பற்றுடனும் காணப்படும்.

இதன் கனி மருந்துக்குப் பயன்படும்

 

குரவம்–குரா, குரவு, குருந்து
அடலான்ஷியா மிசியோனிஸ் (Atelantia missionis,Oliv.)

“பயினி வானி பல்லிணர்க்குரவம்” என்றார் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் (குறிஞ்: 69). குரவ மரம் தனித்தும், கோங்கு, மராஅம், மரவம், புன்கு முதலிய மரங்களுடன் புனத்திலும், சுரத்திலும், பொழில்களிலும் வளரும். இளவேனிற் காலத்தில், அரவின் பற்களையொத்த அரும்பீன்று மலரும். மலர் நறுமணமுடையது. இது குருந்த மரம் என்றும் கூறப்படும். இதன் நீழலில் இறைவன் குரு வடிவாக அமர்ந்திருந்து தமக்குக் காட்சி கொடுத்தருளினான் என்பர் மாணிக்கவாசகர்.

சங்க இலக்கியப் பெயர் : குரவம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : குருந்து, குரா, குரவு
பிற்கால இலக்கியப் பெயர் : குருந்தம்
தாவரப் பெயர் : அடலான்ஷியா மிசியோனிஸ்
(Atelantia missionis,Oliv.)

குரவம்–குரா, குரவு, குருந்து இலக்கியம்

‘குரவம்’ ஒரு சிறு மரம். இதனைக் குரா, குரவு, குருந்தம், குருந்து என்றெல்லாம் கூறுவர். நிகண்டுகள் இதற்குப் புன எலுமிச்சை, கோட்டம், குடிலம், கோபிதாரம் என்ற பெயர்களைக் கூட்டுகின்றன.

இம்மரம் கோவலரின் கொல்லைக் குறும்புனத்தில் வளருமென்றும், இதன் அடிமரம் குட்டையானதென்றும், குவிந்த இணரையுடைய தென்றும், வெள்ளிய பூக்களை உடையதென்றும் இளந்தச்சனார் கூறுவர்.

“கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
 குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ”
-நற்: 266 : 1-2

இருப்பினும் இதன் கிளைகள் ஓங்கி நீண்டு வளரும் எனவும், இதன் நீழலில் தனது குட்டியுடன் பெண்மான் இரலையுடன் வந்து தங்கும் என்றும், இதன் கிளைகளில் வதியும் குயிலினம் அங்கிருந்து கூவுமென்றும் கூறுமாறு காணலாம்.

“அரவ வண்டினம் ஊது தொறும் குரவத்து
 ஓங்குசினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப”

-அகநா. 317 : 10-11

“சிறுமறி தழீஇய நெறிநடை மடப் பிணை
 வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
 அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய”

-அகநா: 304 : 8-10

“நின்நோக்கம் கொண்ட மான் தண் குரவ நீழல் காண்”[46]
“.... .... .... .... .... .... .... அலரே
 குரவ நீள் சினை உறையும்
 பருவ மாக்குயில் கௌவையின் பெரிதே”
-ஐங்: 369 : 3-5

இம்மரம் கோங்கு, மராஅம், மரவம், புன்கு முதலிய மரங்களுடன் புனத்திலும், சுரத்திலும், பொழில்களிலும் வளர்ந்து இளவேனிற் காலத்தில் அரவின் பற்களை ஒத்த அரும்பீன்று மலரும் என்பர்.

“ஓங்கு குருந்தொடு அரும் பீன்று பாங்கர் 
 மரா மலர்ந்தன”
[47]
“.... .... .... .... .... .... .... குரவு மலர்ந்தது
 அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்”
-அகநா: 97 : 16-17
“அரவு எயிற்றன்ன அரும்பு முதிர் குரவின்
 தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ
  குயில் குரல் கற்றவேனிலும் துயில் துறந்து”

-அகநா: 237  : 3- 5

“குரவம் மலர மரவம் பூப்ப
 சுரன் அணி கொண்டகானம்”
-ஐங்: 257 : 1-2

“பல்வீ படரிய பசுநனைக் குரவம்
 பொரிப்பூம் புன்கொடு பொழில் அணிகொளாஅ”

-குறுந்: 341 : 1-2


குருந்த மரம் குவிந்த இணரை உடையது. இதனுடைய போது செழுமையானது. வெண்மை நிறமான இதன் மலரில் நறுமணம் வீசும். பூக்காம்பு குட்டையானது. குறுமலர்கள் பல ஒருங்கே பூக்கும். இம்மலரைத் தெய்வ மலராகத் திருவாசகமும் திருவாய் மொழியும் கூறுகின்றன. இடையர் மகன் சூடிய குறிப்பும் நற்றிணையில் காணப்படும்:

“குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ”-நற்: 266 : 2

“குரவு வார் குழல் மடவாள்”[48]

“குரா நற்செழும்போது கொண்டு வராகத்
 தனி உருவன் பாதம் பணியுமலர்”
[49]

“பல்வீ படரிய பசுநனைக் குரவம்”-குறுந்: 341

“குரவத்து ஓங்கு சினை நறுவீ”-அகநா: 317 : 11

“ஆடுடை இடைமகன் சூட”-நற்: 266 : 2

குரவ மரத்தின் காய் சற்றுப் பருத்து நீண்டு சாம்பல் நிறமாகத் தொங்கும். இதனைப் பாவையாகக் கொண்டு மகளிர் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி விளையாடுவர். இதற்குக் ‘குரவம் பாவை’ என்று பெயர். இதனைச் ‘செய்யாப் பாவை’ என்பதும் உண்டு. இளவேனிற் காலத்தில் இதன் காயைக் கொய்து விளையாடுவர் என்பர்:

“அவரோ வாரார் தான் வந்தன்றே
 நறும்பூங் குரவம் பயந்த
 செய்யாப் பாவை கொய்யும் பொழுதே”

-ஐங் : (இளவேனிற்பத்து) 344


இக்குருந்த மரத்தின் நீழலின் இறைவன் குருவடிவாக எழுந்தருளித் தம்மை ஆட்கொண்டான் என்று மாணிக்க வாசகர் நெஞ்சுருகப் பாடுவார்.

குரவம்
(Atalantia missionis)

“செடிகொள் வான் பொழில் சூழ்
 திருப்பெருந்துறையில்
 செழுமலர்க் குருந்தம் மேவிய
 அடிகளே அடியேன் ஆதரித்தழைத்தால்
 அதெந்துவே என்றருளாயே.”
[50]

குரவம்—குரா, குரவு, குருந்து தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ்கள் இணைந்தது. இன்பெரே
தாவரக் குடும்பம் : ரூட்டேசி
தாவரப் பேரினப் பெயர் : அடலான்ஷியா
தாவரச் சிற்றினப் பெயர் : மிசியோனிஸ்
தாவர இயல்பு : சிறுமரம், முள் அடர்ந்தது
தாவர வளரியல்பு : மீசோபைட். வறண்ட நிலத்திலும், காடுகளிலும் வளரும். என்றும் தழைத்து வளரும்.
இலை : 3 சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை யெனினும் ஒரே ஒரு நுனியில் உள்ள சிற்றிலை மட்டும் சற்று மங்கிய பச்சை நிறமானது. பக்கத்திலிருக்க வேண்டிய சிற்றிலைகள் இரண்டும் அருகி விட்டன. எனினும் இலைக் குருத்துகள் செதில்களாகக் காணப்படும். இலைச் சருகு மங்கிய கறுப்பு நிறமாக மாறும்.
இலை நரம்பு : சிற்றிலையில் 8-10 இணையான நரம்புகள் வெளிப்படையாகத் தோன்றும்.
மலர் : வெண்மை நிறமானது. பல்லிணர்க் குரவம் (குறிஞ். 69) என்புழி பல இதழ்களை உடைய குரவம்பூ என்று நச்சினார்க்கினியர் உரை கண்டுள்ளார். மலர்க்காம்பு சிறியது. நறுமணம் உடையது.
புல்லி வட்டம் : 5 நுண் பற்களை உடையது. பசிய புறவிதழ்கள் இணைந்தது.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் ஐந்தும் அடியில் குழல் போல் இணைந்தது. மேற்புறத்தில் மடல் விரிந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : 6-8 மகரந்தக் கால்கள் அடியில் மட்டும் பருத்திருக்கும். தாதுப் பைகள் நீண்டும், சற்று அகன்றும் தோன்றும்.
சூலக வட்டம் : 2-4 சூலிலைகளை உடையது. சூல் தண்டு தடித்தது. சூல்முடி குல்லாய் போன்றது.
கனி : பெரிய நீள் உருண்டை வடிவான சதைக்கனி. கனியுறை வலியது. விதை முட்டை வடிவானது. விதையுறை மெல்லியது. விதையிலைகள் சதைப் பற்றுடையவை.

இதன் அடிமரம் சற்று மஞ்சள் கலந்த வெண்மை நிறமானது. வலிமை உள்ளது. நீலகிரி, ஆனைமலை, திருவிதாங்கூர் முதலியவிடங்களில் காணப்படுமென்பர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை கணிக்கப்படவில்லை.

 

குருகிலை
அடலான்ஷியா மிசியோனிஸ் (Atelantia missionis,Oliv.)

“குருகிலை மருதம் விரிபூங்கோங்கம்” என்றார். கபிலர் (குறிஞ்: 73). ‘குருகிலை’ என்பதற்கு ‘முருக்கிலை’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். சங்க நூல்களில் வேறுயாண்டும் இதனைப் பற்றிய செய்தி இல்லை. எனினும் குருகிலை, திணை மொழி ஐம்பது, கார் நாற்பது என்ற கீழ்க்கணக்கு நூல்களில்தான் பேசப்படுகிறது.

“அஞ்சனம் காயா மலர குருகிலை
 ஒண்தொடி நல்லார் முறுவல் கவின்கொள்
[51]

“அருவி அதிர குருகிலை பூப்ப
 தெரிஆ இன நிரைதீம்பால் பிலிற்ற
[52]

“முருகியம்போல் வானம் முழங்கி இரங்க
 குருகிலை பூத்தன கானம்.... ....
[53]

இவற்றால் இதனைப் பற்றி அறியக் கூடியவை :

  1. குருகிலை என்பது ஒரு மரத்தின் இலை போலும்
  2. இது முல்லை நிலத்தது .
  3. இது கார் காலத்தில் பூப்பது
  4. இவ்விலை மகளிர் முறுவல் போன்று வெண்ணிறமானது.
இதன் தாவரப் பெயர் அடலான்ஷியா மிசியோனிஸ் (Atalantia missionis) என்று கலைக்களஞ்சியம் குறிக்கிறது. இதன் தமிழ்ப் பெயர் ‘குருந்து’ என்று கூறுகின்றார் காம்பிள் (Vol: l: p. 114}. இவற்றைக் கொண்டு இதன் தாவரப் பெயரை வலியுறுத்த இயலவில்லை.
 

நரந்தம்–பூ
சிட்ரஸ் மெடிகா (Citrus medica,Linn.)

“நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி” என்று கபிலர் கூறும் குறிஞ்சிப் பாட்டில் (94) உள்ள ‘நரந்தம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘நாரத்தம்பூ’ என்றும், கலித்தொகையில் காணப்படும் ‘நரந்தம்’ என்ற சொல்லுக்கு (54:5) நரந்தம்பூ என்றும் உரை கண்டார்.

நாரத்தை’ என வழங்கும் இச்சிறுமரத்தில் வெள்ளிய பூக்கள் கொத்தாக மலரும். இதன் கனிக்காக இது வளர்க்கப்படும். இதில் இந்நாளில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்றினங்கள். கன்னட நாட்டில் உள்ள சிக்மகளூருக்கருகில் உள்ள மைய அரசின் ஆய்வுப் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : நரந்தம்
பிற்கால இலக்கியப் பெயர் : நாரத்து, நாரத்தை
உலக வழக்குப் பெயர் : நாரத்தை
தாவரப் பெயர் : சிட்ரஸ் மெடிகா
(Citrus medica,Linn.)

நரந்தம்–பூ இலக்கியம்

“நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி” என்பது கபிலர் வாக்கு (குறிஞ்:94) இவ்வடியில் உள்ள ‘நரந்தம்’ என்பதற்கு ‘நாரத்தம்பூ’ என்று உரை கண்டார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இவரே கலித்தொகையில் வரும் இச்சொல்லுக்கு “நாரத்தம்பூ” என்பார். நாரத்தையின் இலக்கியச் சொல் ‘நரந்தம்’ என்பது மருவி நாரத்தை என்றாயிற்று போலும். சிலப்பதிகாரத்தில்[54] அடியார்க்கு நல்லார் ‘நாரத்தைப்பூ’ என்றார். அருஞ்சொல் உரையாசிரியர் ‘நாரத்து’ என்றார். மலையாளத்தார் இதனை நாரங்கம் என்பர்.

‘நரந்தை’ என்னும் பெயரில் ஒரு வகைப் புல்லும் உண்டு. அது நறுமணம் உள்ளது. அது நரந்தம் என்றும் கூறப்படும்.

“நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி”-புறநா: 132 : 4

இப்புல்லைக் கவரிமான் விரும்பித் தின்னும். இதன் மணத்திலும், சுவையிலும் மனம் வைத்த மான், கனவிலும் அப்புல்லைக் கண்டு மகிழுமாம்.

“கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
 பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்”

-பதிற்: 11 : 21-22


இப்புல்லிலிருந்து வடித்தெடுக்கப்படும் பனிநீரை மலர் மாலைகளில் தெளித்து மணமேற்றுவர்.

“நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்”

இங்கு நரந்தம் என்பதற்கு ‘நரந்தம்புல்’ என்று உரை கூறுவர். ஆங்கிலத்தில் இப்புல்லை ‘லெமன் கிராஸ்’ (Lemon grass) என்றழைப்பர். ஆகவே நரந்தம் என்ற சொல்லுக்கு, இடத்திற்கேற்ப உரையாசிரியர்கள் இப்புல்லைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ‘நரந்தம்’ என்பதற்குக் ‘கத்தூரி’ என்ற பொருளும் உண்டு. (மதுரைக் : 553 நச் : உரை). மற்று, நரந்தம் ஒரு சிறு மரம். சோலைகளில் இம்மரம் வளர்கிறது. பெரிதும் இம்மரம் வேங்கை மரத்தின் பக்கத்தில் வளர்வதாகக் குறிப்பிடப்படுகிறது. செறிந்த மரங்களைக் கொண்ட காவில், வேங்கை மரத்து மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அவற்றுடன் நரந்தம்பூவும் உதிர்ந்து பரவிக் கிடக்கும்.

“புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை
 நரந்த நறும்பூ நாள்மலர் உதிர”
-அகநா. 141 : 25-26

“நனிஇரும் சோலை நரந்தம் தாஅய்
 ஒளிர்சினை வேங்கை விரிந்தஇணர் உதிரலொடு”

-பரிபா: 7 : 11-12


“தான் காதலிப்பார்க்கு மாலை சூட்டுதலான், நரந்தம்பூ நாறும் கைகளை உடையவன்” அதியமான் நெடுமான் அஞ்சி. (புறநா : 285 பழைய உரை) இக்கையால் தன் தலையை நீவி, அன்பு காட்டியதை ஔவையார் :

“நரந்தம் நாறும் தன் கையால்
 புலவுநாறும் என்தலை தைவரு மன்னே”
-புறநா: 235 : 8-9

நரந்தம்பூவை மகளிர் தம் கூந்தலிற் சூடுவர். “நரந்தம் நாறும் குவை இருங்கூந்தல்” என்னும் தொடரைப் பரணரும், பனம்பாரனாரும் ஓர் எழுத்தும் மாறாமல் ஆளுகின்றனர்.

“நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்
 இளந்துணை மகளிரொடு”
-அகநா: 266 : 4-5

“நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்
 நிறத்து இலங்கு வெண்பல் மடந்தை”
-குறுந்: 52 : 3-4

ஒரு தலைமகன். தன் காதலியுடன் குலவிய போது, அவளது கூந்தலில் இருந்து நரந்தங்கோதையை விரலால் சுற்றி, மணம் பெற்ற விரலை மோந்து மகிழ்ந்தான் என்பர் :

“நரந்தம் நாறும் கூந்தல் எஞ்சாதுபற்றி
 பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
 நலம்பெறச் சுற்றிய குரல்அமை ஓர்காழ்
 விரல்முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்”

-கலி: 54 : 5-8
 (நுங்கிய - செய்த; சிகழிகை - தலைக்கோலம்)

மேலும், அந்நாளில் யாழிற்கும் நரந்த மாலை சூட்டப்பட்டதென்றும் கூறுவர்.

“நரத்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
 ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்”

-புறநா: 302 : 4-5


நரந்த மலர் வெண்மையானது; நறுமணம் உடையது; மணம் நெடுநாள் வரை நீடிக்கும். வேங்கை மலருங்கால் இதுவும் மலரும்.

நரந்தம் என்ற புல் ஒன்று உண்டு; இதற்கும் நறுமணம் உண்டு. இதனைக் கவரிமான் விரும்பி மேயும். தாவரவியலில் இப்புல்லுக்கு சிம்போபோகன் சிட்ரேட்டஸ் (Cymbopogan citratus) என்று பெயர். ஆங்கிலத்தில், இதனை லெமன் கிராஸ் (Lemon grass) என்றழைப்பர். இதன் விளக்கவுரையை, ‘நரந்தம்புல்’ என்ற தலைப்பில் காணலாம்.

நரந்தம்—பூ தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் வகை : டிஸ்கிபுளோரே (Disciflorae) அகவிதழ்கள் பிரிந்தவை.
தாவரக் குடும்பம் : ரூட்டேசி (Rutaceae)
தாவரப் பேரினப் பெயர் : சிட்ரஸ் (Citrus)
தாவரச் சிற்றினப் பெயர் : மெடிகா (medica)
தாவர இயல்பு : சிறுமரம்
இலை : மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை; எனினும், பக்கத்துச் சிற்றிலைகள் பெரிதும் அருகி ஒழிந்தன. ஒரு சிற்றிலை மட்டுமே காணப்படும். எனினும், இன்றும் சிக்மகளுர் ஆய்வுச் சோலையில் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட நாரத்தை வளர்கிறது. சிற்றிலை முட்டை வடிவானது; சுரப்பிகளைக் கொண்டது.
மஞ்சரி : கலப்பு அல்லது நுனி வளராப் பூந்துணர் இலைக் கோணத்தில் உண்டாகும்.
மலர் : சிறியது; வெண்மையானது. நறுமணம் உள்ளது.
புல்லி வட்டம் : கிண்ணம் போன்று குவிந்தது.
அல்லி வட்டம் : 4-8 அகவிதழ்கள்; வெண்மையானவை. சற்று நீண்ட இதழ்கள்; தழுவிய அடுக்கு முறை; அல்லிக்கு அடியில் (டிஸ்க்) வட்டத்தண்டு இருக்கும்.
மகரந்த வட்டம் : 20-60 வரையிலான தாதிழைகள் வட்டத் தண்டிலிருந்து உண்டாகும் மகரந்தப் பைகள் மஞ்சள் நிறமாக இருக்கும்.

நரந்தம்
(Citrus medica)

சூலக வட்டம் : பல சூல்கள் நிறைந்தது; சூல்தண்டு தடித்தது; உதிரும் சூல்முடி குல்லாய் போன்றது.
கனி : பெர்ரி எனப்படும் சதைக்கனி; சூலறைச் சுவர்களில் உண்டாகும் மயிரிழைகளில் சாறு நிறைந்து இருக்கும். கனி உறை தடித்தது; இதிலும் சுரப்பிகள் பல உள; விதைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.

நாரத்தையின் பேரினத்தில் நூற்றுக்கணக்கான சிற்றினங்களும், வகைகளும் உள்ளன. எனினும் நாரத்தை முதலானது. இது சிட்ரான் எனப்படும். எலுமிச்சையை, ‘லைம்’, ‘லெமன்’ எனவும் கூறுவர். ‘லிமோனம்’ என்பது இதன் தாவரச் சிற்றினப் பெயர். ‘ஆசிடா’ என்பது புளிப்பு நாரத்தை; குடகு ஆரஞ்சு ‘ஆரண்ஷியம்’ எனப்படும். குளஞ்சி நாரத்தை இனிப்புள்ளது: இதற்கு, ‘லைமெட்டா’ என்று பெயர். இவை அனைத்தும் பெரிதும் கனிக்காகப் பயிரிடப்படுகின்றன. மருந்துக்கும் உதவும்.

 

செருந்தி
ஆக்னா ஸ்குவரோசா (Ochna squarrosa,Linn.)

சங்க இலக்கியங்களில் செருந்தியின் அரும்பும், போதும், மலரும், இணரும் பேசப்படுகின்றன. மேலும், வேறு பல மரங்களுடன் இது வளர்வதாகக் கலித்தொகை கூறும். குறிஞ்சிப் பாட்டில் இம்மலர் இடம் பெற்றுள்ளது. ‘செருந்தி’ என்ற பெயர் ஒருவகையான புல்லையும் குறிப்பிடுவதாகச் சங்க இலக்கியத்தில் மதுரைக் காஞ்சியும் ஐங்குறுநூறும் குறிப்பிடுகின்றன. ஆனால், இவை செருந்தியின் மலரைக் கூறவில்லை. ஆகவே, செருந்தி என்பது ஒரு சிறு மரமெனக் கொண்டு, இவ்விளக்கம் தரப்படுகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : செருந்தி
தாவரப் பெயர் : ஆக்னா ஸ்குவரோசா
(Ochna squarrosa,Linn.)

செருந்தி இலக்கியம்

“களிறுமாய் செருந்தி“-மது. கா: 172

என்ற இச்சொற்றொடருக்கு நச்சினார்க்கினியர் ‘யானை நின்றால் மறையும் வாட்கோரை’ என்றும், செருந்தி-நெட்டிக் கோரையுமாம் என்றும் உரை கண்டுள்ளார்.

“இருஞ்சாய் அன்ன செருந்தியோடு வேழம்
 கரும்பின் அலமரும் கழனி ஊரன்“
-ஐங்: 13 : 1-2

என்று ஓரம்போகியார் கூறுவர். ‘சாய்’ என்பது பஞ்சாய்க் கோரையைக் குறிக்கும். ‘சாய்’ அன்ன செருந்தியொடு வேழம் அலமரும் என்கிறார். இவற்றைக் கொண்டு பார்த்தால் ‘செருந்தி’ என்பது ஒருவகையான கோரை என்று எண்ண இடமுண்டு.

“செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்“-குறிஞ்: 75

என்ற இக்குறிஞ்சிப் பாட்டின் அடியில் கூறப்படும் ‘செருந்தி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘செருந்திப்பூ’ என்று உரை கண்டார்.

சங்க இலக்கியங்களில் செருந்தியின் அரும்பு, போது, மலர், இணர் இவை யாவும் குறிப்பிடப்படுகின்றன. மேலும், கலித் தொகையில் ‘செருந்தி’ வேறு பல மரங்களுடன் பேசப்படுகிறது. கோரைப்புல்லில் அரும்பு, போது, முதலியன இல்லையாதலின். செருந்தி என்பது ஒரு மரம் என்றும், ‘செருந்தி’ என்ற சொல் ஒரு வகைக் கோரையையும் குறித்தது என்றும் அறிதற்கு இடமுண்டு. ஆதலால், செருந்தி என்பதை ஒரு சிறு மரமெனக் கொண்டு விளக்குதும். செருந்தி நெய்தல் நிலத்தைச் சார்ந்தது என்பதும். நெய்தலைச் சார்ந்த மருதத்திலும் காட்சி தரும் என்பதும், ஆண்டின் ஆறு பருவங்களில் முதல் பருவமான இளவேனிற் பருவத்தில் மலரும் என்பதும், செருந்திப்பூவின் காம்பு நீளமானதென்பதும், இது வண்டுபட நன்கு விரிந்து மலரும் என்பதும், இதன் மலர் நறுமணம் உள்ளதென்பதும், தன்னைக் கண்டாரைப் பொன்னென்று மருளச் செய்யுமாறு பொன் தகடு போன்றுள்ள இது பளபளப்பாகப் பூக்கும் என்பதும், இதனை மகளிர் சூடிக் கொள்வர் என்பதும் சங்கப் பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

“செருந்திதாய இருங்கழிச் சேர்ப்பன்”-ஐங்: 18 : 1

“நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ”-அகநா: 150 : 9

“பருதி அம் செல்வன் போல்
 நனைஊழ்த்த செருந்தியும்”
-கலி : 26 : 2

“போதவிழ் மரத்தொடு பொரு கரைகவின்”-கலி: 26 : 7

“.... .... .... .... .... .... .... வண்டுபட
 விரிந்த செருந்தி வெண்மணல்”
-அகநா: 240 : 12-13

“பொன் அடர்ந்தன்ன ஒள்ளிசைச் செருந்திப்
 பல்மலர் வேய்ந்த கலம்பெறு கோதையள்”

-அகநா: 280 : 1-2
“அரும்பலர் செருந்தி நெடுங்கால் மலர்கமழ்”
-புறநா: 390 : 3
“தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்”-சிறுபா : 147

செருந்தி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : டிஸ்கிபுளோரே (Disciflorae)
தாவரக் குடும்பம் : ஆக்னேசி (Ochnaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஆக்னா (Ochna)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்குவரோசா (squarrosa)
சங்க இலக்கியப் பெயர் : செருந்தி
உலக வழக்குப் பெயர் : சிலந்தி என்பர் காம்பிள்
தாவர இயல்பு : சிறு மரம்; பழுப்பு நிறமானப் பட்டையும், செம்பழுப்பு நிறமான மரத்தையும் உடையது.
இலை : தனி இலை; மெல்லியது; பசியது; தலை கீழான முட்டை வடிவினது; இலைக் காம்பு குட்டையானது; இலை நுனி கூரியது.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர் பொன் மஞ்சள் நிறமான எடுப்பான தோற்றமுள்ள பூங்கொத்து.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் உதிராது ஒட்டிக் கொண்டிருக்கும். மஞ்சள் நிறமானது.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள்; பொன்னிறமானவை. மடல் விரிந்து அழகாகத் தோன்றும்; அடியில் வட்டத்தட்டு இருக்கும்.
மகரந்த வட்டம் : பல எண்ணற்ற தாதிழைகள் அகவிதழ்களுக்குள் அடங்கியிருக்கும். தாதிழைகள் உதிர மாட்டா; தாதுப் பைகள் நீளமானவை.
சூலக வட்டம் : மூன்று முதல் பத்து வரை ஆழ்ந்த பிளவான சூலகம்; ஒவ்வொரு பிளவும் ஒரு செல்லுடையது; சூல் தண்டு அடியொட்டி இருக்கும்; சூல்முடி நுண்ணியது.
கனி : 3-10 ‘ட்ருப்’ எனப்படும் சதைக் கனி. நீண்ட விதைகள் நேராக அமைந்திருக்கும்; வித்திலைகள் தடித்தவை.
 

வேம்பு
அசாடிராக்டா இன்டிகா (Azadirachta indica,A.Juss.)

வேம்பு எனச் சங்க இலக்கியங்கள் கூறும் வேப்ப மரத்தின் பூ பாண்டிய முடி மன்னர்களின் குடிப் பூவாகும் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. (தொல் : பொ : 60 : 2-5)

சங்க இலக்கியப் பெயர் : வேம்பு
தாவரவியற் பெயர் : அசாடிராக்டா இன்டிகா
(Azadirachta indica,A.Juss.)
தாவரக் குடும்பம் : மீலியேசி

தென் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வளரும் இம்மரம், பல்லாண்டுகட்கு வாழும் இயல்பிற்று. மரம் கட்டிட வேலைக்குப் பயன்படும். விதையிலிருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெய் மருந்துக்குப் பயன்படும். இதன் இலைகள் அம்மை நோயினைத் தடுக்கும் ஆற்றலுள்ளவை.

வேம்பு இலக்கியம்

தென் தமிழ் நாட்டினை முறை செய்து காத்த முடி மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர் ஆவர். இவர்கட்குரிய குடிப்பூக்கள் மூன்று.

சேரனுக்குப் பனம்பூ,
சோழனுக்கு ஆர்ப்பூ (ஆத்திப்பூ),
பாண்டியனுக்கு வேப்பம்பூ

மன்னர்கள் மட்டுமன்றி வீரர்களும் இப்பூக்களைச் சூடிக் கொள்வர். இவ்வீரர் இன்ன அரசனைச் சார்ந்தவர் என்று வேறுபாடு தெரிந்து கொள்ள வேண்டிப் போரின் போது அவரவர் பூக்களைச் சூடிக் கொண்டு ஆர்ப்பர். இதனைத் தொல்காப்பியம் விளக்கும்.

“வேந்திடை தெரிதல் வேண்டி, ஏந்துபுகழ்
 போந்தை, ஆரே, வேம்பென வருஉம்
 மாபெருந் தானை மலைந்த பூவும்”

-தொல். பொருள்: 60 : 2-5

மேலும், ‘மூவேந்தர்கள் தமது குடிப் பூக்களைச் சூடிக் கொண்டு வரினும்’ என்று புறநானூறு குறிப்பிடுகின்றது.

“................ கருஞ்சினை
 வேம்பும், ஆரும், போங்தையும் மூன்றும்
 மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்”
-புறநா: 338 : 5-7

வேம்பு ஒரு பெரிய மரம். இதில், கருவேம்பு, நில வேம்பு, மலை வேம்பு, சருக்கரை வேம்பு எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக, வேம்பு என்பது கருவேம்பைக் குறிக்கும் என்பதைப் பின் வரும் அடிகளிற் காணலாம்.

“கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்”-குறுந்: 24 : 1

“கருஞ்சினை விறல் வேம்பு”-பதிற்: 49 : 16

வேப்பம்பூ வெண்ணிறமானது. கொத்தாகப் பூக்கும் இயல்பிற்று. இது ‘கவரி போல் பூ பூக்கும்’ என்பது வழக்கு. இதனைப் பாலை நிலப் பூவென்பர். இளவேனிற் காலத்தில் பூக்கும். நல்லதொரு மணம் உள்ளது. புத்தாண்டில் இதனைச் சூடியும், வேப்பம்பூச் சாறு கூட்டியுண்டும் மகிழ்வர்.

புறப்பணிக்குப் பிரிந்த தலைவன் வந்து சேரவில்லை. தலைவி இளவேனிற் காலம் வந்ததையுன்னி உள்ளம் வெதும்புகின்றாள். வீட்டு முன்றிலில் வேம்பு பூத்துக் குலுங்கி ஆண்டின் புதிய வருவாயினை அறிவிக்கின்றது. அதனைக் கொய்து சூடாமலும், வேம்பின் பூக்கொண்டு சாறு வைக்காமலும், பூக்கள் வறிதே கழிகின்றதை அவளால் தாங்க முடியவில்லை.

“கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
 என்ஐ இன்றியும் கழிவது கொல்லோ”
-குறுந்: 24 : 1-2

என்று கூறிக் கவல்கின்றாள். மேலும் இம்மலர்கள் உதிர்ந்து கொட்டுகின்றன. இளவேனில் முடியும் அறிகுறியாகக் காணும் தலைமகள், “அவன் வரவில்லையே” என்று கூறி ஏங்குகின்றாள் என்பது இளவேனிற்பத்து.

“அவரோ வாரார் தான்வந் தன்றே
 வேம்பின் ஒண்பூ உறைப்பத்
 தேம்படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே”
-ஐங்: 350

வேம்பின் பூவைத் தாராக்கி மார்பிலும், கண்ணியாக்கித் தலையிலும், பாண்டிய குலத்தவர் சூடினர். அதனால் பாண்டிய மன்னர், “கருஞ்சினை வேம்பின் தெரியலோன்” (புறநா : 45 : 2) எனப்பட்டான்.

பாண்டிய மன்னர் இப்பூவைக் காட்டிலும் இதன் இளந் தளிரை (குழை)யே மிகுதியும் சூடினர்; அணிந்தனர்; பயன் கொண்டனர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கன்னிப் போருக்குப் புறப்பட்டான். மதுரை மூதூரின் வாயிலில் அமைந்த குளத்தில் நீராடினான். பொது மன்றத்து வேம்பின் குழையைச் சூடினான். வெற்றி மடந்தையை நாடிப் புறப்பட்டான் என்கிறார் இடைக்குன்றூர் கிழார்.

“மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி
 மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
 தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
 வெம்போர்ச் செழியனும் வந்தனன்”
-புறநா : 79 : 1-4

“.... .... .... .... .... .... .... .... .... திரள் அரை
 மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
 நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
 செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
 ஒலியல் மாலையொடு பொலியச் சூடி”
-புறநா : 76 : 3-7

பாண்டியன் நெடுஞ்செழியன் போர் முடிந்த நாள் இரவில் புண்பட்டுப் பாசறையில் உள்ள வீரர்களைக் கண்டு ஆறுதல் சொல்லச் செல்கின்றான். ஒவ்வொருவரையும் காட்டுதற்குப் படைத் தலைவன் மன்னனை அழைத்துச் செல்கின்றான். அவன் கையில் வேல் ஒன்றுள்ளது. அதன் தலையுச்சியில் வேப்பிலை செருகப்பட்டுள்ளது என்று கூறும் நெடுநல்வாடை.

“வேம்புதழை யாத்த நோன்காழ் எஃகமொடு
 முன்னோன் முறைமுறைகாட்ட”
-நெடுந: 176-177
(முன்னோன் - படைத்தலைவன்)

அகத்துறையில் வெறியாட்டு அயரும் வேலன் வேப்பிலை சூடிக் கொள்வான் என்று குறிப்பிடுகிறது அகநானூறு.

“வேம்பின், வெறிகொள் பாசிலை நீலமொடுகுடி”
-அகநா 138 : 4-5


“வீட்டின் முகப்பிலும் வேப்பிலை செருகப்படுவதை இலக்கியங்கள் கூறு”மென்பர்.[55]

மேலும் வேப்பிலை குழந்தைகட்கு கடிப்பகையாகச் சூட்டப்படும் என்று கூறும் பெரும்பாணாற்றுப்படை.

“கோட்டினர் வேம்பின் ஓடுஇலை மிடைந்த
 படலைக் கண்ணி”
-பெரும் : 59-60

வேப்பமரம் பழையன்மாறன் என்ற பாண்டியர்க்குக் காவல் மரமாக அமைந்தது. இதனை வெட்டி வீழ்த்திக் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் வென்றதைப் பரணர் பாடுகின்றார்.

“பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
 முழ்ஆரை முழுமுதல் துமியப் பண்ணி”

-பதிற். பதிகம் : 5 : 14-15


வேப்பமரம் ஊர் மன்றத்தில் வளர்க்கப்பட்டு வருவதை முன்னர்க் கூறினாம். ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் வரையிலும் வேப்ப மரம் முதிர்ந்து வளரும். மிக முதிர்ந்த இதன் அடி மரத்தில் பால் சுரக்கும். இப்பால் மிகவும் சுவையானது. நோய் அணுகாமல் உடலுக்கு உறுதி தருவது. இதனைப் பல ஆண்டுகட்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வடக்கே ஐந்து கல் தொலைவில் கடலில் உள்ள மணி பல்லவத் தீவில் (நயினார்த் தீவு) யாம் அருந்தியதுண்டு.

வேப்பிலை பொதுவாக அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. முதிர்ந்த வேப்ப மரம் கட்டிடவேலைக்குப் பயன்படும். இம்மரத்தைக் கரையான் (Termites) உண்பதில்லை. வேப்பிலையை இந்நாளில் மாரியம்மன் பச்சிலை என வழங்குவர்.

வேம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : டிஸ்கிபுளோரே(Disciflorae)
தாவரக் குடும்பம் : மீலியேசி (Meliaceae)
தாவரப் பேரினப் பெயர் : அசாடிராக்டா (Azadirachta)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
சங்க இலக்கியப் பெயர் : வேம்பு
தாவர இயல்பு : மரம், உயர்ந்தும், கிளைத்துப் பரவி அகன்றும், நெடு நாளைக்கு வாழும் பெருமரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட் (Mesophyte)
இலை : கூட்டிலை. 9 முதல் 15 வரையிலான சிற்றிலைகள் இறகமைப்பில் இருக்கும்.
சிற்றிலை : நீண்ட குத்துவாள் வடிவினது. பல் விளிம்புடையது. சற்று வளைந்துமிருக்கும். நடு நரம்பு தெளிவாகத் தோன்றும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் நீண்டு கிளைத்த கலப்புப் பூந்துணர்.
மலர் : சிறு மலர்களை உடையது. வெள்ளிய நிறம். மணமுள்ளது.
புல்லி வட்டம் : ஐந்து பிளவானது.
அல்லி வட்டம் : ஐந்து, மெல்லிய வெளிய சிறு இதழ்கள் புல்லிக்கு மேல் விரிந்து காணப்படும்.
மகரந்த வட்டம் : அல்லிகளை விடக் குட்டையான மகரந்தக் குழல் நீண்டிருக்கும். மேற்புறத்தில் குழல் 9-10 விளிம்புகளை உடையது. குழலுக்குள் 9-10 மகரந்தப் பைகள் ஒட்டியிருக்கும்.
சூலக வட்டம் : சூற்பை 3 செல்களை உடையது. சூல்தண்டு மெல்லியது, நீளமானது.
சூல் முடி : குறுகிய தண்டு போன்றது. மூன்று பிளவானது. ஒவ்வொரு சூலக அறையிலும் 2 சூல்கள்.
கனி : ஒரு விதைவுள்ள (பெர்ரி) சதைக்கனி, 2 வித்திலைகள் தடித்தவை. சூல்முளை மேலானது.


வேப்ப மரம் மிகச் சிறந்த வலிமை வாய்ந்த மரம். கட்டிட வேலைக்குப் பயன்படும். பட்டை, இலை, மலர், விதை முதலியவற்றில் வேப்ப எண்ணெய் உள்ளது. எண்ணெய், உணவுக்கும், விளக்கெரிக்கவும், மருந்துக்கும் பயன்படுகிறது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n= 30 என மேன்ஜெனட், எஸ் , மேன்ஜெனட், ஜி, 1958, 1962 என்போர் அறுதியிட்டனர்.
 

உழிஞை
கார்டியோஸ்பர்மம் ஹெலிகாகேபம்
Cardiospermum halicacabum,Linn.)

அரணை முற்றுகையிடும் அறிகுறியாக உழிஞைப்பூவைச் சூடிக் கொள்வராதலின், இது ஒரு போர் மலர்.

‘உழிஞை’ என்பது எங்கும் வேலிகளில் ஏறிப் படரும் நீண்ட கொடி. இதனை முடக்கத்தான் (முடக்கற்றான்) என வழங்குவர்.

சங்க இலக்கியப் பெயர் : உழிஞை
தாவரப் பெயர் : கார்டியோஸ்பர்மம் ஹெலிகாகேபம்
(Cardiospermum halicacabum,Linn.)

இக்கொடியை முடக்கறுத்தான் என்று அழைப்பர். முடக்கு வாதத்திற்கும் மருந்தாகப் பயன்படுத்துவர்.

உழிஞை இலக்கியம்

உழிஞைப்பூவால் பெயர் பெற்றது உழிஞைத் திணை. அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இதன் பூவைச் சூடுவர். ‘உழிஞை’ என்பது ஒரு கொடி என்பதை ‘நுண்கொடி உழிஞை’ (பதிற். ப: 44:10) எனவும், ‘நெடுங்கொடி உழிஞை’ (புறநா 76:5) எனவும் புலவர்கள் கூறுவர். இக்கொடியும், தளிரும், மலரும் பொன் போன்ற இள மஞ்சள் நிறமானவை என்று கூறுப.

“பொலங்கொடி உழிஞையன்-பதிற். ப. 56:5
“பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டி
-புறநா 50:4


மலையாளத்தில் இதனைக் ‘கொற்றான’ என வழங்குவர். கொற்றான் என்பது ‘கருங்கொற்றான்’ ‘நூழிற்கொற்றான்’, ‘முடக்கொற்றான்’ எனப் பல வகைப்படும். உழிஞை உலக வழக்கில்

உழிஞை
(Cardiospermum halicacabum)

‘முடக்கொற்றான்’ எனப்படும். இது முடக்கத்தான் என மருவி வழங்கப்படுகிறது. மருத்துவ நூலார் இதனை ‘முடக்குத் தீர்த்தான்’ என்று கூறி, இதனை முடக்கு வாதத்தைத் தடுத்தற்குரிய மூலிகை என்பர். முடக்கு வாதத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

இக்கொடியில் கூட்டிலைகள் இருக்கும். இதன் சிற்றிலைகள் மிகச் சிறியவை. கூட்டிலையின் கோணத்தில் இதன் மஞ்சரி தோன்றும். மலர்கள் சிறியவை. இவற்றைத் தனியாகச் சூடுதல் இயலாது. ஆகவே, இக்கொடியைத் துண்டாக்கி, இதன் இலையையும் மஞ்சரியையும் (மலர்) சேர்த்துக் கண்ணியாகத் தொடுத்துச் சூடிக் கொள்வார் என்பர் இடைக்குன்றூர்க் கிழார்.

“நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
 செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி”
-புறநா:76:5-6}}

கார்நாற்பதில் (31) கண்ணங்கூத்தனார் கண்ட காட்சியை அடியில் வருமாறு, கோவை.இளஞ்சேரனார் குறிப்பிடுகின்றார்.[56]

“ஒரு கடா எருமை அழகானது; மழைநீர் ததும்பும் குளத்தில் நீராடிக் கரை ஏறியது. திடீரென்று வீர நடை போட்டது. காரணம் என்ன? கரையில் களைந்த கொடி ஒன்றை யாரோ வீசி எறிந்துள்ளனர். பூவோடு கூடிய அக்கொடி இவ்வெருமையின் தலையில் வீழ்ந்தது; கொம்பில் சிக்கிக் கொண்டது. இக்கொடிப் பூ, தலையில் எறியப்பட்ட உடனேயே இதற்கு வீரம் தலைக்கேறி விட்டதாம். போருக்குச் செல்லும் வீரனது வீர உணர்வு கொப்பளித்துச் செம்மாந்து விட்டதாம்.

உழிஞை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : ஜெரானியேலிஸ்
தாவரக் குடும்பம் : சாப்பிண்டேசி
தாவரப் பேரினப் பெயர் : கார்டியோஸ்பர்மம் (Cardiospermum)
தாவரச் சிற்றினப்பெயர் : ஹெலிகாகேபம் (helicacabum)
சங்க இலக்கியப் பெயர் : உழிஞை
உலக வழக்குப் பெயர் : முடக்கத்தான், முடக்கற்றான்.
தாவர இயல்பு : எங்கும் வேலியில் ஏறிப் படரும் கொடி. இணர் நுனியில் சிறு பற்றுக் கம்பி இருக்கும். இதனைக் கொண்டு இக்கொடி, கொம்பு பற்றி ஏறிப் படர்ந்து வளரும்.
இலை : கூட்டிலை. சிற்றிலைகள் பளபளப்பானவை. இவற்றின் நுனி கூர்மையானவையாக இருக்கும்.
மஞ்சரி : இலைக் கோணத்தில் கலப்பு மஞ்சரியாகத் தோன்றும்.
மலர் : மஞ்சரிக் காம்பின் அடியில் உள்ள இரு மலர்க் காம்புகள் பற்றுக் கம்பிகளாக மாறியிருக்கும். சிறியது. பொன்னிற இளமஞ்சள் நிறமானது.
புல்லி : 4 புறவிதழ்கள் உட்குழிந்து இருக்கும். வெளிப்புறத்து இருவிதழ்கள் சிறியவை. உட்புறத்து இரு இதழ்களும் சற்றுப் பெரியவை.
அல்லி : 4 அகவிதழ்கள். மலரின் மேற்புறத்தில் உள்ள தாதிழைகளை ஒட்டிய இரு அகவிதழ்களின் அடியில் செதில் ஒன்று இருக்கும். பூவின் அடிப்புறத்தில் உள்ள இரு அகவிதழ்கள் உட்புறமாக மடிந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : 8 தாதிழைகள் பூவின் நடுவில் இராமல் சற்று ஒதுங்கி அமைந்திருக்கும். தாதிழைகள் ஒரே உயரமில்லாதன.
சூலக வட்டம் : சூலகம் மூன்று செல் உடையது. சூல் தண்டு குட்டையானது. சூல்முடி. மூன்று பிளவானது. சூலறை ஒவ்வொன்றிலும் ஒரு சூல்.
கனி : மெல்லிய, காற்றடைத்த முக்கோண வடிவான (காப்சூல்) உலர்கனி. மூன்று வால்வுகளை உடையது.
விதை : உருண்டை வடிவானது. அடியில் விதை மூக்கு தெளிவாகப் புலப்படும். வித்திலைகள் இரண்டும் அகலமானவை. குறுக்கே மடிந்திருக்கும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என, சுகியூரா (1931), போடென் (1945பி), காட்ரி (1951), க்யூர்வின்(1961ஏ) என்போர் கணக்கிட்டுள்ளனர்.

 

தேமா
மாஞ்சிபெரா இன்டிகா (Mangifera indica,Linn.)

கபிலர் மாமரத்தைத் ‘தேமா’ என்று குறிப்பிடுகின்றார் (குறிஞ். 64). தேமாங்கனி வாழை, பலா, மா முதலிய முக்கனிகளுள் ஒன்றாகும். தேமா மரம் ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளாக இந்திய நாட்டில் பயிரிடப்படுகிறது என்கிறார் ஆல்பர்ட் எப். ஹில் (Albert F. Hill) என்பார்.

சங்க இலக்கியப் பெயர் : தேமா, மா
பிற்கால இலக்கியப் பெயர் : மா
உலக வழக்குப் பெயர் : மாமரம்
தாவரப் பெயர் : மாஞ்சிபெரா இன்டிகா
(Mangifera indica,Linn.)

தேமா இலக்கியம்

சங்கத் தமிழிலக்கியத்தில் தலை சிறந்ததெனக் கருதப்படும் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் தேமா, கலிமா என்று இரு மாமலர்களைக் கூறுகின்றார்.

“செங்கொடுவேரி தேமா மணிச்சிகை”-குறிஞ். 64
“கரந்தை குளவி கடிகமழ் கலிமா”-குறிஞ். 76

இவ்வடிகளிலுள்ள ‘மா’விற்கு நச்சினார்க்கினியர் முறையே ‘தேமாம்பூ’ என்றும், விரைகமழத் தழைத்த மாம்பூ என்றும் உரைகண்டார். இவையிரண்டும் தேமாம்பூவினையே குறிக்கும் எனல் பொருந்தாது. என்னை? கபிலர் கூறியது கூறார் ஆகலின் என்க. ஆகவே, ‘தேமா’ என்பது இனிய மாவினையும், கலிமா என்பது புளிமாவினையும் குறித்தல் கூடும். எனினும் இது சிந்திக்கற்பாலது. சங்கத் தமிழில் தேமாவைப் போல, புளிமாவைப் பற்றிய குறிப்புகள் காணுதற்கில்லை.

தேமாவும் புளிமாவும் வெவ்வேறு தாவரக் குடும்பங்களைச் சார்ந்த மரங்களாகும். தேமாவை ‘மாஞ்சிபெரா இன்டிகா’ (Mangifera indica, Linn.) என்றும், புளிமாவை ‘அவெர்கோயா பிலிம்பி’ (Averrhoa bilimbia, Linn.) என்றும் கூறுப. தேமா மரம் ‘அனகார்டியேசீ’ (Anacardiaceae) என்ற தாவரக் குடும்பத்தையும், புளிமா மரம் ‘ஆக்சாலிடேசீ’ (Oxalidaceae) என்ற தாவரக் குடும்பத்தையும் சார்ந்தவை. தேமா மரத்தைத்தான் நாம் மாமரமென்று அழைக்கின்றோம். புளிமா மரத்தைப் புளிச்சக்காய் மரமென்று இந்நாளில் வழங்குவர். புளிமா மரம் சிறு மரம். இது தேமா மரம் போல அத்துணைப் பருத்து வளர்வதில்லை. தேமாங்காய் மாமரக் கிளைகளில் நுனியில் கணுக் குருத்தினின்றும் தோன்றி முதிர்வது. புளிமாங்காய் பலா மரத்தின் காய் போல அடி மரத்தில் தோன்றிக் காய்க்கும். தேமாங்காய் முதிர்ந்தால் பழுக்கும். புளிமாங்காய் பழுப்பதில்லை. தேமா பொதுவாகப் புளிப்புடன் இனிப்புடையது. புளி மாங்காய் புளிப்புடையது.

பழந் தமிழிலக்கித்தில் தேமாவைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புளிமாவைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. எனினும், பிற்கால யாப்பிலக்கணத்தில் இவ்விரண்டும் சேர்ந்தே பயிலப்படும். யாப்பிலக்கணத்தில் சீர் என்பது செய்யுள் உறுப்பு ஆகும். அசையால் ஆக்கப்படும் அச்சீர் நான்கு வகைப்படும். இவை ஒரசை, ஈரசை, மூவசை, நான்கசை என்பன. குறிலாவது நெடிலாவது தனித்து வரினும் ஒற்றடுத்து வரினும், அவை நேரசையாகும். இரு குறில் தனித்தும், ஒற்றடுத்தும், குறில் நெடில் தனித்தும், குறில் நெடில் ஒற்றடுத்தும் வருவது நிரையசை ஆகும். இவற்றிற்குரிய வாய்பாடுகள் வருமாறு.

நேர் நேர் தேமா
நிரை நேர் புளிமா

ஈரசைச் சீராகிய இவை, மாச்சீர் எனவும் இயற்சீர் எனவும் அகவற்சீர் எனவும் கூறப் பெறும்.

நேர் நேர் நேர் தேமாங்காய்
நிரை நேர் நேர் புளிமாங்காய்

மூவசைச் சீராகிய இவை காய்ச் சீர் எனவும், வெண் சீர் எனவும் வெண்பா உரிச் சீர் எனவும் படும்.

நேர் நேர் நிரை தேமாங் கனி
நிரை நேர் நிரை புளிமாங் கனி

மூவசைச் சீரில் இவை கனிச் சீர் எனவும், வஞ்சிச் சீர் எனவும் கூறப்படும்.

நேர் நேர் நேர் நேர் தேமாந் தண் பூ
நிரை நேர் நேர் நேர் புளிமாந் தண் பூ
நேர் நேர் நிரை நேர் தேமா நறும்பூ
நிரை நேர் நிரை நேர் புளிமா நறும்பூ
நேர் நேர் நேர் நிரை தேமாந் தண்ணிழல்
நிரை நேர் நேர் நிரை புளிமாந் தண்ணிழல்
நேர் நேர் நிரை நிரை தேமா நறுநிழல்
நிரை நேர் நிரை நிரை புளிமா நறுநிழல்

இவை நான்கசைச் சீர்க்குரிய வாய்பாடுகளாகும். இங்ஙனமாகத் தேமாவும், புளிமாவும் பயிலப்படுகின்றன.

இவற்றுள் புளிமாவாகிய ‘அவர்கோயா பிலிம்பி’ இந்தியாவிலும், மலேசியா, பர்மா, இந்தோசைனா, இலங்கை முதலியவிடங்களிலும் வளர்கின்றது. ‘அவர்கோயா’ என்ற இப்பேரினத்தில் இரண்டு இனங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. புளிமா மரம் சற்றேறக் குறைய இருபது முதல் நாற்பது அடி உயரம் வரையில் ஓங்கி வளரும். இது அரிநெல்லி மரத்தைப் போன்றது. இலைகளும் அப்படியே இருக்கும். இதன் இலைகள் 5 முதல் 17 வரை சிற்றிலைகளை உடைய கூட்டிலைகளாகும். இக்கூட்டிலைகள் கலித்தும், மிகுத்தும் காணப்படும். காய்கள் நான்கு பட்டை உடையன. 5-6 செ. மீ. நீளமும், 3.5 முதல் 5 செ.மீ. அகலமும் இருக்கும். இக்காயில் உள்ள ஒரு வகையான அமிலம் (acid) மிகுந்த புளிப்பாக இருக்கும். இப்புளிமாங்காய்க்கெனவே இம்மரம் பல்வேறிடங்களில் பயிரிடப்படுகின்றது. உணவுக்குச் சாறு கூட்டும் போது புளிக்குப் பதிலாக இக்காய் பயன்படுகிறது. புளியாரை எனப்படும் செடிக்கு ஆக்சாலிஸ் கார்னிகுலேட்டா என்று பெயர். இதுவும் புளிமாவின் குடும்பத்தைச் சேர்ந்தது.

இச்சிறு மரத்தின் இலைகள் செழுமையுடன் மிகுந்தும், மலிந்தும் காணப்படுதலின், இதனைக் கலிமா என்றழைத்தனரோ என்று எண்ண இடந்தருகின்றது. ‘கடிகமழ் கலிமா’ என்று இதனைக் கபிலர் குறிப்பிடுவதும் ஈண்டு நோக்கற்பாலது. தேமா மரம் பூத்த பொழுதில் அதில் உண்டாகும் நறுமணத்தைப் போலவே புளிமா மரத்தின் பூவும் நறுமணமுடையதாகும்.

இச்சிறு மரத்தின் இலைகள் 2-5 இணையுடைய சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். நுனி வளரும் பூந்துனர்கள் அடி மரத்தில் உண்டாகும். மலர்கள் ஐந்தடுக்கானவை. இதன் காய்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. 4-6 செ. மீ. நீளமும், 2.5-4 செ. மீ. பருமனும் உள்ள சதைப்பற்றானவை. 4-5 பட்டையாக இருக்கும். நல்ல புளிப்புள்ளவை. தமிழ் நாட்டில் தோட்டங்களிலும் பயிரிடப்படுகின்றது. இதைப் போன்று மற்றொரு சிற்றின மரமும் தமிழ் நாட்டில் வளர்கிறது. அதற்கு அவர்கோயா காரம்போலா (Averrhoa carambola) என்று பெயர்.

இவ்விரு சிறு மரங்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்று தெரியவில்லை என்பர் தாவரவியலார். புளிமாவின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என மாத்தியூ (1958) என்பாரும், காரம்போலாவிற்கு 2n=24 என, கிருஷ்ணசாமி, இராமன் (1949) என்பாரும் கணிப்பர்.

மாம்பூ கொத்துக் கொத்தாகக் கணுக் குருத்தாகவும், நுனிக் குருத்தாகவும் அரும்பிப் பூக்கும். மிகச் சிறிய இப்பூவில் நான்கு அல்லது ஐந்து புறவிதழ்களும், நான்கு அல்லது ஐந்து அகவிதழ்களும் உள்ளன. ஒன்று முதல் ஐந்து தாதிழைகள் உண்டெனினும், ஒன்று அல்லது இரண்டில் மட்டும் தாது விளைந்து நிற்கும். தாதுப் பையை ஒட்டி நான்கு அல்லது ஐந்து தேன் சுரப்பிகள் இருத்தலின், மலர்களில் வண்டினம் சூழ்ந்து முரலும். இதனை,

“காமர் மாஅத்துத் தாதலர் பூவின்
 வண்டு வீழ்பு அயருங் கானல்”
-குறுந். 306 : 4-5

என்று கூறுவர். பூவின் கரு ஓர் சூலறையினது. பெரிதும் பிற மகரந்தச் சேர்க்கையினால்தான் கருமுதிர்ந்து காயாகும். மாமரத்தில் ஒரு வகையான பால் (Latex) உண்டாகும். மாவடுவில் இப்பால் மிகுதியாகப் பிலிற்றும். இரும்பினாலாய அரிவாள் கொண்டு மாவடுவை நேராகப் பிளந்து, சிறிது நேரங்கழித்துப் பார்த்தால், மாவடுவின் விதைப் பகுதி முழுவதும் கறுத்தும், சதைப்பகுதி வெண்ணிறமாகவும், கண் விழியை ஒத்து மிக அழகாகவும் காணப்படும். இதனை வண்ணமும், வடிவுங்கருதி மகளிர் கண்ணுக்கு உவமிப்பர்.

தேமா
(Mangifera indica)

“இளமாங்காய்ப் போழ்ந்தன்ன கண்ணினால் என்னெஞ்சம்
 களமாக்கொண்டு ஆண்டாய் ஓர்கள்வியை அல்லையோ”

-கலித். 108 : 28-29

“மாவடு வகிரன்ன கண்ணி பங்கா”[57]

என வருவன காண்க.

இரும்புக் கருவிகளைக் கொண்டு மாவடுவை அரியும் போது வடுவில் உள்ள பாலில் காணப்படும் காலிக் அமிலம் ( Gallic acid), ‘ஸ்டீரிக் அமிலம்’ (Stearic acid) என்ற அமிலங்கள் இரும்பில் பட்டவுடன் ஒருவகை ‘மைப்’ பொருளாகி விடும். இதனைப் பிரான்சு நாட்டு வேதி நூலறிஞர் கண்டு, பல சோதனைகளைச் செய்துள்ளார். மாவடுவின் தோலிலும் இதே பால் இருத்தலின், அப்பகுதியும் கறுப்பாகி. கண்ணுக்கு எழுதிய அஞ்சனம் போலத் தோன்றும்.

ஆல்பர்ட் ஹில் (Albert F. Hill) என்பார், தேமாவைப் பின் வருமாறு கூறுகின்றார். “வெப்பம் மிக்க நாடுகளில் தொன்று தொட்டுப் பயிரிடப் படுகின்ற பழந்தரு மரங்களில் மாமரம் தலையாயது. ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளாக இம்மரம் பயிர் செய்யப்படுகின்றது. இது இந்திய நாட்டின் புனிதமான மரமாகும்.” தென்னாசியக் கண்டத்தில் தோன்றிய இம்மரம் இப்பொழுது மலேசியா, பர்மா, பாலினேசியா, ஆப்பிரிக்கா, (வெம்மை மிகுந்த) அமெரிக்கா முதலிய நாடுகளில் ஏறக்குறைய ஐந்நூறு சிற்றின வகைகளாகப் பல்கிப் பயிராகின்றது. ஓர் ஆண்டிற்கு நூறாயிரம் டன் எடைக்கு மேலான மாம்பழம் உலகில் விளைகின்றது.

தேமா தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)
தாவரக் குடும்பம் : அனகார்டியேசீ (Anacardiaceae)
தாவரப் பேரினப் பெயர் : மாஞ்சிபேரா ((Mangifera)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
தாவர இயல்பு : பெரிய மரம். கிளைத்து, உயர்ந்து, பல்லாண்டு வளரும். 20மீ உயரமான பசிய மரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : நீண்ட தனியிலைகள். மாற்றடுக்கில் இலைக் காம்புடன் இருக்கும்; தோல் போன்று தடித்தது. இலையடிச் சிதல் இல்லை.
மஞ்சரி : கலப்புப் பூந்துணர்; நுனிக்குருத்து மாந்தளிராகவோ, பூந்துணராகவோ வளரும்.
மலர்கள் : சிறியவை. பல பாலானவை. பூக்காம்பு இணைந்திருக்கும். பூவடிச் சிதல்கள் முதிர்ந்தவுடன் உதிரும்.
புல்லி வட்டம் : 4-5 பிரிவானது.திருகு அமைப்பானது.
அல்லி வட்டம் : 4-5 பிரிந்தும், வட்டத் தட்டோடு ஒட்டியும் இருக்கும்.
வட்டத் தண்டு : சதைப்பாங்கானது; 4- 5 மடலாயிருக்கும்.
மகரந்த வட்டம் : 1-8 வட்டத் தட்டின் உட்புறமாகச் செருகப்பட்டிருக்கும். ஒரு மகரந்தத் தாள்தான் வளமானது. ஏனையவை வளமற்றவை. மகரந்தப் பை ஒரு சுரப்பி கொண்ட முனையுடன் இருக்கும்.
சூலக வட்டம் : சூற்பை காம்பற்று ஒரு சூலறை கொண்டு சாய்வாக அமைந்திருக்கும்.
சூல் தண்டு : குட்டையானது. சூல்முடி எளிமையானது
சூல் : அடித்தளத்தில் ஊசல் போல அமைந்தது.
கனி : இளமாங்காய் வடுவெனப்படும். கனி பெரிய சதையுடன் கூடிய பிசின் கொண்ட தசைக் கனி.
விதை : விதை பெரியது. முட்டை அல்லது நீள்சதுர வடிவமானது. புறவுறை மெல்லியது. முளைசூழ் தசையில்லை.
வித்திலைகள் : ஒரு பக்கம் தட்டையாகவும், குவிந்தும் இருக்கும். சற்று வளைந்த முளை வேர் உடையது.

இம்மரம் தமிழ் நாட்டில் பலவிடங்களில் பயிரிடப்படுகிறது. பல்வேறு வகைகள் ஒட்டு முறையால் வளர்க்கப்படுகின்றன. ஏறக்குறைய 4000 அடி உயரமுள்ள மலைப்பாங்கிலும் இம்மரம் வளரும். கனி மிக்க சுவையுள்ளது. மாமரத்தின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 40 என, சானகி அம்மாள் (1945), முக்கர்ஜி (1950, 1954), அகார்கர், ராய் (1954) சிம்மெண்ட்ஸ் (1954) முதலியோர் கூறியுள்ளனர்.

தேமா மரம் அனகார்டியேசீ என்ற தாவரக் குடும்பத்தின் பாற்படும். இதில் 73 பேரினங்களும், ஏறக்குறைய 600 இனங்களும் உள்ளன. தேமா மரத்தை உள்ளிட்ட மாஞ்சிபேரா (Mangifera) பேரினங்களில், 30 சிற்றினங்கள் இந்தியாவிலும், மலேசியாவிலும் வளர்கின்றன.

 

முருங்கை
மொரிங்கா டெரிகோஸ்பர்மா
(Moringa pterygosperma,Geartn.)

அகநானூற்றில் மூன்று பாக்களில் முருங்கை மரம் பேசப்படுகிறது. இம்மரத்தை ‘நாரில் முருங்கை’ என்று இதனுடைய தாவரவியலுண்மையைச் சங்க இலக்கியம் வெளியிடுகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : முருங்கை
உலக வழக்குப் பெயர் : முருங்கை
தாவரப் பெயர் : மொரிங்கா டெரிகோஸ்பர்மா
(Moringa pterygosperma,Geartn.)

‘முருங்கை’யை ‘மொரிங்கா’ என்று தாவரவியலார் தமிழ்ச் சொல்லையே கையாண்டுள்ளதைக் காண்மின்!

முருங்கை இலக்கியம்

இம்மலரின் புல்லி வட்டம் 5 புறவிதழ்களைக் கொண்டதென்றும், இவை ஐந்தும் ஒரு குழல் போன்று இணைந்துள்ளன என்றும் பல அறிஞர்கள் கூறுமாப் போல, இவை அமைந்துள்ளன. இதன் பூத்தளம் கிண்ணம் போன்றுள்ளது. கிண்ணத்தின் மேல் விளிம்பில் புல்லி, அல்லி, மகரந்தக் கால்கள் எல்லாம் ஒட்டியுள்ளன. இவற்றைக் கொண்டு புல்லி வட்டத்தில் குழல் போன்ற இவ்வமைப்பு பூத்தளத்தின் குழிந்த பகுதி என்றும், புல்லி, அல்லி, மகரந்தக் கால்கள் எல்லாம் இணைந்துள்ள கிண்ணத்தின் மேற்பகுதி உள்வளைந்ததோர் தொங்கும் பகுதி என்றும், கிண்ணம் போன்ற இவ்வமைப்பை ஹைபந்தியம் (Hypanthium) என்றும் பூரி (1942) என்பவர் கருதுகின்றார். சூலகத்தைப் பற்றிய இவரது கருத்து, ஓரறையுள்ள மூவிலைச் சூலகம் மூன்று சூல்தட்டு திசுக்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு சூல் ஒட்டுத் திசுவிலும் பல சூல்கள் இரண்டு வரிசைகளாக இணைந்துள்ளன-என்று கண்டோம். இரு வரிசையாக உள்ள சூல்கள் ஒவ்வொரு சூலக இலையின் இரு விளிம்புகளில் காணப்படுகின்றன என்றும், இந்த மூவிலைச் சூலகத்தில் உள்ள மூன்று சூல் ஒட்டுத் திசுக்களும் மூவிலைச் சூலகங்களின் விளிம்புகள் உள் மடிந்து இணைந்த பகுதிகளே என்றும், அதனால் இதன் சூல் ஒட்டுத் திசுக்கள் சூலகத்திற்கு வேறுபட்டவை என்றும், உட்பட்டவையன்று என்றும், சூலகத்தின் அடியில் உள்ள இக்கிண்ணம் போன்ற பகுதி சூலக அறையாகுமென்றும், இவ்வகை அமைப்பு தாவர வகைப்பாட்டியலுக்குப் பெரிதும் துணை புரிதலின் வெறும் புறவியல் அமைப்பு எனக் கோடல் கூடாது என்றும் கூறுவர்.

பெஸ்சி (Bessy) என்பவர் இக்குடும்பத்தை ரோடியேலீஸ் பகுதியில் சேர்த்தார். வெட்ஸ் டீன் (Wettstein) சிறிது ஐயப்பாட்டுடன் ரெசிடேசீ குடும்பத்திற்குப் பக்கத்தில் வைத்தார். ஹட்சின்சன் (Hutchinson) இதனைக் கப்பாரிடேசீ குடும்பத்தில் சேர்த்தார். முருங்கை மலரின் சூலக அறையின் அமைப்பை அறியாத டட்டாவும், மித்ராவும் (1947) இக்குடும்பம் வயோலேசீ குடும்பத்துடன் நெருங்கிய ஒற்றுமை உடையதென்றனர்.

பயன் : இதன் இலையும், காயும் உணவாகப் பயன்படும். இதன் வேர்களிலிருந்து எடுக்கப்படும் ‘பென்’ என்ற ஓர் எண் ணெய் உணவில் சேர்க்கப்படும். இந்த எண்ணெய் உலர்வதில்லை. மரத்தின் பட்டை, வேர் முதலியவை மருந்துக்குப் பயன்படுமென்பர்.

இனி, சங்க நூல்கள் ‘முருங்கை’ மரத்தைப் பற்றிக் கூறுவதைக் காண்போம்.

முருங்கை மரத்தின் வெள்ளிய பூக்கள், கடுங்காற்றில் அடிபட்டுக் கடல் அலையின் நீர்த் துளிகள் சிதறுவன போன்று உதிர்வதைக் குறிப்பிடுகின்றார் அகநானூற்று முதற்பாடலில் மாமூலனார். இவரே மற்றொரு பாடலில் இதன் பூக்கள் ஆலங்கட்டி மழைத் துளி போல் உதிரும் என்பார். நீரில்லாது வறண்டு போன நிலத்தில், உயர்ந்த முருங்கை மரம் வெள்ளிய பூக்களோடு நிற்குமென்பார் சீத்தலைச் சாத்தனார். இம்மூன்றும் அகநானூற்றில் பாலைத் திணையைக் குறிக்கும் பாடல்கள். ஆதலால், முருங்கை மரம் பாலை நிலத்திற்குரியது என்றாயிற்று.

“சுரம் புல்லென்ற ஆற்ற அலங்குசினை
 நாரில் முருங்கை, நவிரல் வான்பூச்
 சூரல்அம் கடுவனி எடுப்ப ஆருற்று
 உடை திரைப் பிதிர்வின் பொங்கி”
-அகம். 1 : 15-18

“நெடுங்கால் முருங்கை வெண் பூத்தாஅய்
 நீர்அற வறந்த நிரம்பா நீள்இடை”
-அகம். 53 : 4-5

மேலும் இம்மரம் பல கிளைகளை விட்டு வளருமென்றும், இதன் கிளைகள் புல்லியன (வலியற்றன) என்றும், நீளமானவை என்றும் கூறப்படுகின்றது. இம்மரம் வலியற்றதென்பதை வலியுறுத்துவது போன்று இதனை ‘நாரில் முருங்கை’ என்றனர். மரங்களில் பொதுவாக நார்த்திசு (Fibres) இருக்கும். அதனால் மரம் வலுப் பெறும். மரம் முதிருங்கால், ‘நார்த்திசு’ வலுப் பெற்று மரத்தில் வைரம் பாயும். முருங்கை மரத்தில் நார்த்திசு இல்லையென்பது தாவரவியல் உண்மை. இதனை மாமூலனார் ‘நாரில் முருங்கை’ என்று குறிப்பிடுகின்றார். கணிமேதாவியாரும் ‘நார் இல் பூநீள் முருங்கை’ என்று கூறுவார். மரத்திலும், கிளைகளிலும் நார்த்திசு இல்லாதபடியால், முருங்கையின் கிளைகள் மிக எளிதாக முறிந்து விடும்.

தலைவியைப் பிரிந்து பாலை வழிச் செல்லத் தலைப்பட்டான் தலைமகன். இவனுடைய செலவுக்கு உடன் படாத தலைமகள், தோழியிடம் சொல்லுகிறாள்:

“கள்ளிசார் கார்ஓமை, நார்இல்பூநீள் முருங்கை
 நள்ளியவேய் வாழ்பவர் நண்ணுபவோ புள்ளிப்
 பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்து ஆண்டு
 இருந்து உறங்கி வீயும் இடம்?[58]

முருங்கை மரம் முறிந்து விழும் இயல்பை மனத்திற் கொண்டு, பாலை நிலத்தில் செல்வோர் நிழல் வேண்டி இதனடியில் ஒதுங்கவும் மாட்டார் என்பது இதனால் அறியப்படும்.

முறியும் இயல்பினால் இம்மரம் முருங்கை எனப் பெயர் பெற்றதென்றும், முருங்குதல் என்பது ‘முறிதல்’, ‘ஒடிதல்’ என்னும் பொருளில் வழங்கப்படுமென்பதற்குச் சங்க இலக்கிய மேற்கோள்களைக் காட்டியும், முருங்கை என்பது தமிழ்ச் சொல்லேயாமென்பதை, வடமொழி, சிங்களம் போன்ற வேற்று மொழிச் சொல்லன்று என எதிர்மறையால் வலியுறுத்தியும் கவிஞர் கோவை இளஞ்சேரனார் அழகுற விளக்கியுள்ளார்.[59]

ஆகவே, முருங்கை மரம் நீரற்று, வறண்டு போன பாலை நிலத்தில் வளருமென்பதும், வெள்ளிய பூக்களை உடையதென்பதும், புல்லிய நீண்ட கிளைகளை உடையதென்பதும், மரத்தில் நார்த் திசு இல்லை என்று தாவர இயல் உண்மையைக் கூறுவதும், சங்க இலக்கியத்தில் தாவர அறிவியற் கூற்றுகள் எனலாம்.

முருங்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிஃபுளோரே (Tnalamiflorae)
தாவரக் குடும்பம் : மொரிங்கேசி (Moringaceae)
தாவரப் பேரினப் பெயர் : மொரிங்கா (Moringa) (ஒரே ஒரு பேரினத்தை மட்டும் உடைய குடும்பம் )
தாவரச் சிற்றினப் பெயர் : டெரிகோஸ்பர்மா (pterygosperma)
சங்க இலக்கியப் பெயர் : முருங்கை
தாவர இயல்பு : மரம்
மண் இயல்பு : மீசோபைட் (Mesophyte)
வளருமியல்பு : 20 முதல் 30 அடி வரை உயர்ந்து, நன்கு கிளைத்துப் பரவி வளரும். இலையுதிர் மரம். வெப்பம் மிக்க பழைய உலகைச் சேர்ந்தது. புதிய உலகின் வெப்பம் மிக்க பலவிடங்களில் வளர்கிறது. கலிபோர்னியா, பிளாரிடா நாடுகளின் தென் பகுதியில் வளர்க்கப்படுகிறது. வட இந்தியாவில் தானே மிகுந்து வளர்கிறது. தென்னிந்தியா முழுவதிலும் வளர்க்கப்படுகிறது.

முருங்கை
(Moringa pterygosperma)

வேர்த் தொகுதி : பக்க வேர்கள் தடித்து வளர்கின்றன.
தண்டுத் தொகுதி : பல கிளைகளைப் பரப்பி வளரும். தண்டும் (மரம்), கிளைகளும் வலுவற்றன. எளிதில் முறிந்து விடும் இயல்புடையன. எவ்வளவு முதிர்ந்தாலும், மரத்தில் வைரம் பாய்வதில்லை. மென்மையான மரம்.
இலை : 25 முதல் 45 செ. மீ. நீளமும், 20 முதல் 30 வரை அகலமும், 2-3 முறை இறகு வடிவில் பகிர்ந்த கூட்டிலை மாற்றடுக்கு முறையில் தண்டில் உண்டாகும்.
சிற்றிலை : சிற்றிலைக் காம்புகள் 6-12 வரை எதிர் அடுக்கு முறையில் இலைக் காம்பில் 2-ஆவது 3 சிறு சிற்றிலைகளுடன் காணப்படும். சிற்றிலைகள் முட்டை அல்லது நீளமுட்டை வடிவானவை; நுனி வட்டமானவை. 10 முதல் 12 மி. மீ. நீளமும், 5 முதல் 8 மி.மீ. அகலமும் இலைச் செதில்களும், இலைச் சிறு செதில்களும் சுரப்பிகளாக மாறியிருத்தலுண்டு.
மஞ்சரி : பாணிக்கிள் (Panicle) கலப்பு மஞ்சரி இலைக் கோணத்தில் உண்டாகும்.
மலர் : பெரியது; இருபாலானது; சமச் சீரற்றது; ஐந்தடுக்குள்ளது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் அடியில் குவளை வடிவில் இணைந்துள்ளன.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் 5. சமமில்லாதவை. மேலிரண்டும் சிறியவை. கீழே உள்ளது மிகப் பெரியது. பக்கத்திலுள்ளவை புல்லி வட்டத்தைத் தழுவிக் கொண்டு வட்டத் தட்டு காணப்படும்.
மகரந்த வட்டம் : 5 மகரந்தத் தாள்கள் 5 மலட்டு மகரந்தத் தாள்களுடன் மாறி மாறி அமைந்திருக்கும். மகரந்தக் கம்பிகள் பிரிந்திருக்கும். மகரந்தப் பை ஓர் அறை உடையது; முதுகு ஒட்டியது.
சூலக வட்டம் : ஓரறை மூவிலைச் சூலகம் - சூல் பை காம்புடன் கூடியது. சூல் தண்டு குழாய் போன்றது. சூல்முடி துளைகளுடன் காணப்படும். பல சூல்கள் உள்ளன. இவை சுவரொட்டு முறையில் 3 வரிசையில் இரு பக்கமும் ஒட்டியுள்ளன.
காய் : 30 முதல் 50 செ.மீ நீளமுள்ளது. சதைப் பற்றுள்ளது. முப்பட்டையாக இணைந்து, உருண்டது.
கனி : முதிர்ந்த காய் ஒரு தக்கை போன்ற லாகுலிசைடல் காப்சூல் ஆகும். ஓர் அறை உடையது; 3 வால்வுகள்.
விதை : விதைகள் பல. விதையின் வெளியுறை தக்கை போன்றது. மூன்று மெல்லிய சிறகுடன் காணப்படும். இவை விதை பரவப் பயன்படும். இதில் முளை சூழ் தசை இல்லை. இதன் வித்திலை ஒரு புறம் தட்டையாகவும், மறுபுறம் குவிந்தும் இருக்கும். முளைக் குருத்து மிகவும் குட்டையானது. இலைக் குருத்தில் பல இலை அமைப்புகள் உள.
 

கவிர்–முள்முருக்கு–கலியாண முருங்கை
எரித்ரைனா இன்டிகா (Erythrina indica, Lam.)

சங்க இலக்கியங்கள் கூறும் ‘கவிர்’ என்பதற்கு உரையாசிரியர்கள் ‘முள்முருக்கு’ என்று கூறுவர். இது ஒரு மரம். இதன் புறத்தில் ‘முள்’ முதிர்ந்து இருக்கும். இதன் மலர் செந்நிறமானது. சண்டையிடும் சேவலின் பிடர் சிலிர்த்தது போன்ற இணரை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : கவிர்
பிற்கால இலக்கியத்தில் வேறு பெயர் : புழகு
பிற்கால இலக்கியப் பெயர் : முள்முருக்கு, மலை எருக்கு
உலக வழக்குப் பெயர் : கலியாண முருங்கை
தாவரப் பெயர் : எரித்ரைனா இன்டிகா
(Erythrina indica, Lam.)

கவிர்–முள்முருக்கு–கலியாண முருங்கை இலக்கியம்

கவிர் என்பது, இற்றை நாளில் கலியாண முருங்கை என வழங்கப்படுகிறது. இது முருக்கு இனத்தைச் சேர்ந்தது. மரத்தாலும், மலரின் நிறத்தாலும் இரண்டும் ஒத்தவை. பிங்கலம்[60] இதனை முள்முருக்கு என்றது. பிற்கால இலக்கியங்களிலும் இது முள்முருக்கு எனப்படுகின்றது. உரையாசிரியர்கள் ‘கவிர்’ என்பது முள்முருக்கு என்றனர். இலக்கியங்களை உற்று நோக்கினால் “செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கு” (அகநா. 99 : 2) என்றாங்கு. ‘கவரில்’ முள் இருப்பதாகக் குறிக்கப்படவில்லை. ஆயினும், முருக்காகிய பலாசத்திலும் (அகநா. 99) கலியாண முருங்கையாகிய கவிரிலும் நுண்ணிய முள் காணப் படுகின்றது. பூக்கள் இரண்டிலும் நல்ல செந்நிறமாயினும், மலர் அமைப்பில், முருக்கும், முள்முருக்கும் வேறுபட்டவை. தாவரவியலில், இரண்டும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவையாயினும், இவை இரு பேரினங்களைச் சேர்ந்தவை. முருக்கு மலரைப் புலவர்கள் சண்டைச் சேவலின் பிடரி சிலிர்த்தது போன்றதென்பர். கவிரின் பூ, சேவலின் நெற்றியென்னும், கொண்டையை ஒத்தது என்பர்.

“தளிர்புரை கொடிற்றின் செறிமயிர் எருத்தின்
 கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ வன்ன
 நெற்றிச் சேவல் .... .... .... ....”
-அகம் . 367 : 10-12

“கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் .... .... ...”-புறநா 325 : 6

பிற்கால இலக்கியங்களில் முருக்கின் இதழ், மகளிர் வாய்க்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பினும், பண்டைய இலக்கியத்தில் செவ்வாய் என வாய் நிறத்தளவிற்கு மட்டும் இதன் இதழ் கூறப்பட்டுள்ளது. கவிரின் இதழ், மகளிர் செவ்வாய் இதழிற்கு உவமையாகக் காட்டப்படுகின்றது.

“கவிர் இதழ் அன்ன காண்புஇன் செவ்வாய்”-அகநா. 3 : 15

“கார்அணி கூந்தல், கயல்கண், கவிர்இதழ்”-பரிபா. 22 : 28

“கரைநின் றுதிர்ந்த கவிர்இதழ்ச் செவ்வாய்”[61]

குமட்டூர்க் கண்ணனார், ‘கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி’ (பதிற். 11 : 21) என இம்முள்முருக்கு மலைப்பகுதியில் வளர்வதைக் கூறுகின்றார். இதனால் இதனைக் குறிஞ்சி நிலப்பூவென்பர். ஆகவே, இதுவும் முருக்கு போல வேனிற்காலத்தில் பூக்கும் இயல்பிற்று. சூடப்படாதது. இம்மலர் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறவில்லை.

கவிரை உள்ளிட்ட இத்தாவரப் பேரினத்தில், 9 இனங்கள் இந்தியாவில் உள்ளதாக ஹூக்கரும், 4 இனங்கள் தமிழ் நாட்டில் உள்ளதாகக் காம்பிளும் கூறுவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=42 என, ராவ்.ஆர்.எஸ் (1945), அட்சிசன் (1974 சி), நந்தா (1962) முதலியோர் கூறுவர்.

கவிர்—முள்முருக்கு—கலியாணமுருங்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : காலிசிபுளோரே-அகவிதழ் பிரிந்தவை
தாவரப் பேரினப் பெயர் : எரித்ரைனா ((Erithrina)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
தாவர இயல்பு : மரம் உயர்ந்து வளரும். வலியற்றது. தண்டில் சிறிய முட்கள் காணப்படும்.
தாவர வளரியல்பு : அகன்ற பெரிய மூன்று திட்டு வடிவச் சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை. காம்பு 10-15 செ. மீ. நீளமானது. இலையடிச் செதில்கள் உள்ளன. இலையடிச் சிறு செதில்கள் சுரப்பி போன்றிருக்கும்.
இலை : மீசோபைட்
மஞ்சரி : 12-15 செ.மீ. நீளமுள்ள நுனி வளர் பூந்துணர் இலைக் கோணத்தில் அல்லது கிளை நுனியில் உண்டாகும்.
மலர் : பெரியது. நல்ல சிவப்பு நிறமானது. இணரில் நெருக்கமாக இருக்கும். மலரடிச் செதில்கள் உள்ளன.
புல்லி வட்டம் : 5 பசிய இதழ்கள்
அல்லி வட்டம் : 5 செவ்விய இதழ்கள். பதாகை இதழ் 5-7 செ. மீ. நீளமானது. சிறகிதழ்கள் இருபுறமும் சிறியவை. கீல் இதழ்கள் இரண்டும் நீண்டிருக்கும்.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள்
சூலக வட்டம் : இரு சூலிலை ஓரறைச் சூலகம். பல சூல்கள். சூல்தண்டு நுனியில் வளைவானது. சூல்முடி தடித்தது.
கனி : ஒரு புற வெடி கனி. 15-30 செ. மீ நீளமானது. விதை முட்டை வடிவானது. ஹைலம் பக்கவாட்டிலிருக்கும்


இதன் அடிமரம் மென்மையானது. வெண்ணிறமானது. கிளைகளை வேலிக்கு நட்டு வளர்ப்பர். தமிழ் நாட்டில் காணப்

கவிர்
(Erythrina indica)

படும். மலைப்பாங்கில் சிறு புறவில் வளரும். இம்மரம் பூத்த நிலையில், மிக அழகாகத் தோன்றும். மலரில் மணமில்லை.

கபிலர் குறிஞ்சிப் பாட்டில் பல்வேறு பூக்களையெல்லாம் கூறி, இறுதியாகப் ‘புழகுடன்’ என்கின்றார்.

“அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்”-குறிஞ். 96

இவ்வடிக்கு நச்சினார்க்கினியர் ‘அச்சாரலிடத்துத் தம்மில் மயக்கமுடைய வாய்ச் சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற’ பிற பூக்களையும் பருத்த அழகினையுமுடைய ‘மலை எருக்கம் பூவுடனே’ என்று உரை கண்டார். இப்புழகினைப் பற்றிச் சங்க நூல்களில் இன்னொரு குறிப்பும் கிடைக்கிறது.

“அழுந்துபட்டு அலமரம் புழகுஅமல் சாரல்”-மலைபடு. 219

இவ்வடிக்கு நச்சினார்க்கினியர், கிழங்கு தாழ வீழ்ந்து அசையும் ‘மலைஎருக்கு’ நெருங்கின பக்கமலையில் என்று உரை கூறுவர்.

மேலும் பெருங்கதையில், ‘அகன்றலைப் புழகும்’[62] என வரும் அடியொடும் உற்று நோக்கினால், ‘புழகு’ என்பது ‘மலைஎருக்கு’ எனப்பட்டது என்றும், இம்மரத்தின் மேற்பகுதி அகன்றிருக்கும் என்றும், இதன் அடியில் இதற்குக் கிழங்கு இருக்குமென்றும், இது மலைப்புறத்தே வளரும் என்றும், இதனுடைய பூக்கள் செவ்விய நிறமுடையன என்றும், இம்மலர்கள் உதிர்ந்து கிடப்பது சாதிலிங்கப் பூவை பரப்பினாற் போன்று காட்சி தருமென்றும், இதன் அழகிய அடிமரம் பருத்திருக்கும் என்றும் அறிய முடிகின்றது.

இக்குறிப்புகளைக் கொண்டு இதனுடைய தாவரவியல் பெயரை அறுதியிட முடியவில்லை. இதனைப் புனமுருங்கையுமாம் என்பர் என்பது கொண்டு, ஒரு வேளை இது கலியாண முருங்கையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதன் பூக்கள் இதன் மரத்தடியில் அரக்கு விரித்தன்ன காட்சி தரும். அங்ஙனமாயின், இதனைத் தாவர இயலில், எரித்ரைனா இன்டிகா (Erythrina indica) என்று குறிப்பிடலாம். இதற்குக் ‘கலியாண முருங்கை’ என்று பெயர்.

அங்ஙனமாயின், இதனைக் ‘கவிர்’ எனப்படும் கலியாண முருங்கையில் விரிவாகக் கூறியுள்ள தாவரவியல் விளக்கத்தைக் கண்டு கொள்ளலாம். எனவே, புழகு என்பது கவிர், புனமுருங்கை, கலியாண முருங்கை, மலைஎருக்கு என்றெல்லாம் கூறப்படும் என்பதாயிற்று.

 

கண்ணி–குன்றி
ஏப்ரஸ் பிரிகடோரியஸ் (Abrus precatorius, Linn.)

கபிலர், ‘குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி’ என்றார் (குறிஞ்: 72) இவ்வடியில் வரும் ‘கண்ணி’ என்பதற்குக் ‘குன்றிப்பூ’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர். இக்காலத்தில் இது குன்றி மணி என வழங்கப்படுகின்றது. குன்றி மணி பெரிதும் செந்நிறமானது. இதுவன்றி, சற்று மங்கிய வெண்ணிறமான குன்றி மணியும், தூய வெண்ணிறமான குன்றி மணியும், நன்கு கறுத்த கருநிறமான குன்றி மணியும் உண்டு. இவையனைத்தும் தாவரவியலில் ஒன்றாகவே கருதப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : கண்ணி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : குன்றி
உலக வழக்குப் பெயர் : குன்றி, குன்றிமணி
தாவரப் பெயர் : ஏப்ரஸ் பிரிகடோரியஸ்
(Abrus precatorius, Linn.)

கண்ணி–குன்றி இலக்கியம்

குறிஞ்சிக் கபிலர் ‘குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி’ (குறிஞ்: 72) என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். நச்சினார்க்கினியர் இதற்குக் ‘குன்றிப்பூ’ என்று உரை கூறினார். பாரதம் பாடிய பெருந்தேவனார், ‘குன்றி ஏய்க்கும் உடுக்கை’ (குறுந். 1 : 3) என்றும் குன்றிக்கொடியில் விளையும் விதையைக் கூறினார். முருகப் பெருமானது சிவந்த ஆடைக்குக் குன்றிமணி உவமையாகக் கூறப்பட்டது. திருவள்ளுவர் குன்றியின் சிவந்த விதையைக் ‘குன்றி’ என்று கூறுவர்.

குன்றி
(Abrus precatorius)

“புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி
 மூக்கிற் கரியார் உடைத்து”
-திருக்குறள். 28 : 7

குன்றிமணியின் பெரும்பகுதி நல்ல செந்நிறமும், ஒரு புறத்தில் சிறிது கறுப்பு நிறமும் உடையதாக இருப்பதை உவமித்துரைக்கிறார். குன்றிமணியின் செந்நிறம் போன்ற செம்மை நலத்தைத் தோற்றத்தில் பெற்றாரும், அதன் மூக்கில் கருமை இருப்பது போல அகங்கருத்திருப்பர் என்று எச்சரித்துள்ளார். சங்கவிலக்கியத்தில், குன்றிக்கொடி, ‘கண்ணி’ என்றும் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1959-60ஆம் ஆண்டுகளில் எம்.எஸ்ஸி பட்டத்திற்கு, குன்றியில் யாம் ஓர் ஆய்வு மேற்கொண்டோம். அந்த ஆய்வுரை முழுவதும் வெளியிடப்படவில்லை. குன்றிமணிக் கொடி, அவரை இனத்தைச் சேர்ந்தது. மங்கலமான செந்நிறமுள்ள மலர்கள் நுனிவளர் பூந்துணரில் உண்டாகும். மலர்கள் கருவுற்று, நீண்ட பசிய தட்டையான காய்களைத் தரும். காய்கள் கொத்தாக இருக்கும். இக்காய்களில் விளைந்த விதைகள் வெண்ணிறமாக இருக்கும். முதிர்ந்த இதன் விதையில் காணப்படும் கறுப்புப் பகுதி மட்டும், இதன் காயில் சிவப்பாக இருக்கும். இதன் பெரும் பகுதி வெண்மை நிறமாக இருக்கும். விதை முதிருங்கால், இதில் உள்ள வெண்மை நிறம் சிவப்பாக மாறும். இது சிவப்புக் குன்றியின் இயல்பு.

இதுவன்றி, வெள்ளை நிறமான விதைகளையுடைய வெண்குன்றிக் கொடியும் ஒன்று உண்டு. இதில், வெண்ணிறமான குன்றிமணிகள் விளையும். இவ்விதையின் ஒரு புறத்தில் மங்கிய மஞ்சள் நிறம் சிறிது காணப்படும். இவ்விரு கொடிகளும் பெரிதும் தனித் தனியாக நமது நாட்டின் பல்வேறு சிறு காடுகளில் நன்கு வளர்கின்றன. இவ்வெள்ளைக் குன்றியைக் காட்டிலும் பளபளப்பான மாசற்ற மிக வெள்ளிய குன்றிமணியை உடைய செடியும், கறுப்பு நிறமான விதைகளையுடைய கருங்குன்றிச் செடியும் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள சிறு புறவுகளில் வளர்கின்றன. இவையனைத்தும் தாவரவியலில் ஏப்ரஸ் பிரிகடோரியஸ் என்றே தொன்று தொட்டு வழங்கப்படுகின்றன.

எமது ஆய்வுக்குச் செங்குன்றியும், வெண்குன்றியும் தனித் தனியாகவே வளர்க்கப்பட்டன. இவை இரண்டும் பல்லாற்றானும் வேறுபட்டிருந்தமையின், இவற்றுள் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆய்ந்து கணிக்க நேர்ந்தது. அவையாவன:

குன்றி
(Abrus precatorius)


எண்.
(1)
இயல்புகள்
(2)
செங்குன்றி
(3)
வெண்குன்றி
(4)

 1. கொடி 10-12 அடி நீளம் 10-18 அடி நீளம்
 2. இலை 10-16 சிற்றிலைகள் கூட்டிலை கூட்டிலை, 10-30 சிற்றிலைகள்
 3. மஞ்சரி நுனிவளர் பூந்துணர் நுனி வளர் பூந்துணர்
 4. மலர் மங்கிய செந்நிற மலர்கள் வெண்மை நிறமான மலர்கள்
 5. காய் பசிய கொத்தில் 4-8 காய்கள் பசிய கொத்தில் 4-12 காய்கள்
 6. காயிலுள்ள விதைகள் வெண்ணிறமும் செந்நிற மூக்கும் வெண்ணிறம்
 7. கனி செந்நிறமும் கருநிற மூக்கும் வெண்ணிறமும் மஞ்சள் நிற மூக்கும்
 8. விதை எளிதில் ஊறாது, அதனால் முளைக்காது. விதையுறை மிக வலியது. எளிதில் ஊறு முளைக்கும். விதையுறை மென்மையானது.
 9. குரோமோசோம் எண்ணிக்கை 2 என் - 22 2 என் = 22
10. தண்டின் உட்பகுதி இரு வித்திலைக் கொடிகட்குரிய இயல்பானது. நார் அணுக்கள் மிகுதியாக உள்ளன. அதனால் கொடி வலியது.
11. குரோமசோம் அளவு சிறியது சற்றுப் பெரியது
12. குரோமோசோம் 2.1 மைக்ரான்கள் 2.8 மைக்ரான்கள்
காம்பிளிமென்ட் 0.8 மைக்ரான் 1 மைக்ரான்
13. அடிப்படைக் குரோமோசோம் எண்ணிக்கை 5 — —
14. அதன் அமைப்பு A A A
B B
C C
D D
E E
காணவில்லை.
15. செல்லியல் பெயர் அல்லோபாலிபிளாயிட் (Allopolyploid) — —
16. இலைகள் இரவில் மூடுமியல்பு 21.00 மணி 19-00 மணி
17. இலைகள் காலையில் விரியுமியல்பு 08.00 மணி 05-00 மணி
18. இரவில் நீலநிற ஒளியில் (200) மைக்ரான் விரியாது விரியும்
19. இரவில் செந்நிற ஒளியில் (25) விரியும் விரியாது


இங்ஙனம் பல்லாற்றானும் வேறுபாடுடைய வெண்குன்றிக் கொடியைச் செங்குன்றிக் (Abrus precatorius) கொடியினின்று வேறுபடுத்திச் சிற்றினப் புதுப் பெயர் சூட்டப் பெற்றது. அதனால் வெண்குன்றிக் கொடிக்கு ஏப்ரஸ் லுகோஸ்பர்மஸ் (Abrus leucospermus, Srin. sp. nov.) எனப் பெயரிடலாம் என்று எழுதப் பட்டது. (1961).

இவ்விரு கொடிகளையும் செயற்கை முறையில் புணர்த்தி, புதுச்செடி பிறப்பித்தற்குச் செய்த முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போயின. அதனால் இவ்விரு கொடிகளையும் ஒருங்கே நட்டு, ஒன்றோடொன்று பின்னிப் பிணைத்து இவை வளர்க்கப் பட்டன. உரிய காலத்தில், இவ்விரு கொடிகளும் ஒரு வாரம் முன்பின்னாக மலர்ந்தன. எப்படியோ, இவையிரண்டும் இயற்கையாகவே ஓரிணரில் இணைந்தன போலும். அதன் பயனாகச் செங்குன்றிக் கொடியில் ஒரு கொத்து மட்டும் செம்மை கலந்த ஊதா நிறமான (Pink) குன்றிமணிகளைக் கொண்டிருந்தன. அவற்றைத் தனித்து முளைக்க வைத்து வளர்த்துப் பார்த்த போது, இக்கொடியில் செம்மை கலந்த ஊதா நிறமான விதைகள் விளைந்தன என்ற உண்மையைத் தெரிவிக்க எமதுள்ளம் விழைகின்றது.

கண்ணி—குன்றி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே-அகவிதழ்கள் பிரிந்தவை
தாவரவியல் துணைக் குடும்பம் : பாப்பிலியோனாய்டியே
தாவரப் பேரினப் பெயர் : ஏப்ரஸ் (Abrus)
தாவரச் சிற்றினப் பெயர் : பிரிகடோரியஸ் (precatorius)
தாவர இயல்பு : பசிய மெல்லிய கம்பி போன்ற நீண்ட கொடி.
இலை : பல சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகள் சுற்றடுக்கில் உண்டாகும்.

மணிச்சிகை–குன்றி
(Abrus precatorius)

மஞ்சரி : நுனிவளர் பூந்துணர்
மலர் : மங்கிய செந்நிறம். அவரைப் பூப் போன்றது.
புல்லி வட்டம் : 5 பசிய, மெல்லிய சிறு புல்லிகள் பிரிந்து சிறு பற்கள் போன்றிருக்கும்.
அல்லி வட்டம் : 5 இதழ்கள், பதாகையிதழ் மேற்புறத்தும், 2 பக்கவிதழ்கள் இருபுறத்தும் அடியில் தோணி வடிவான இருவிதழ்களும் நீண்டு வளைந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : 9 தாதிழைகள் ஒரு தொகுதியாக உள்ளன. தனித்த மற்றொரு தாதிழை இல்லை.
சூலக வட்டம் : ஒரு சூலக ஓரறைச் சூலகம். பல சூல்கள் சூல்தண்டு குட்டையானது.
காய் : பசிய கொத்தில் பல காய்கள் (4-8)
கனி : வெடியாத உலர்கனி ‘பாட்’ எனப்படும்
விதை : மிகச் சிறந்த செந்நிறமானது. வலிய மூக்கில் கறுப்பு நிறமுள்ளது.புற உறை உடையது. எளிதில் முளைக்காது. அதனால் ஆஸ்மிக் அமிலத்தை (Osmic Acid) 5% கரைசலில் கண்களை நன்கு மூடிக் கொண்டு ஊற வைத்தால், 24 மணி நேரத்தில் விதையுறையில் நுண்ணிய வெடிப்புகள் உண்டாகும். அப்போது முளைக்க வைத்தால், முளை பழுதின்றி வெளி வரும்.

குன்றியின் விதை குன்றிமணியாகும். இதனைப் பொற்கொல்லர் தங்கம் நிறுப்பதற்குப் பயன்படுத்துவர். இதன் நிறத்தைக் கண்டு மயங்கி உண்ணுங் கனியென்று புள்ளினம் பற்றிச் சென்று வேறிடங்களில் வீசி விடுவதால், விதை பரவுதல் நிகழும். இதன் பருப்பு, துவரையின் பருப்புப் போன்றது. ஆனால், இதில் ஏப்ரலின் (Abralin) என்ற நச்சுப் பொருள் (Alkaloid) உள்ளபடியால் உணவாகப் பயன்படாது.

செங்குன்றிமணிகளை விளைவிக்கும் செங்குன்றிச் செடியைப் போன்றது. வெண்குன்றி மணிகளைத் தரும் வெண்குன்றிச் செடி. இதன் மலர்கள் வெண்ணிறமானவை. இவையன்றி, கருங்குன்றி விளையும் குன்றிச் செடி ஒன்றுண்டு. பச்சை நிறமுடைய குன்றியுமுண்டு. இதன் மலர் செந்நிறமானது. இவையனைத்தும் ஏப்ரஸ் பிரிகடோரியஸ் என்றே பயிலப்படும்.

மணிச்சிகை

“செங்கொடு வேரி தேமா மணிச்சிகை”-குறிஞ். 64

என்றார் குறிஞ்சிக் கபிலர். ‘மணிச்சிகை’ என்பதற்குப் பொருள் கூறிய நச்சினார்க்கினியர், ‘செம்மணிப்பூ’ என்றார். சங்கச் செய்யுள்களில் இப்பெயர் வேறெங்கும் காணப்படவில்லை. பிற்கால அகரமுதலி [63] ஒன்று மட்டும் இதனைக் குன்றிமணி என்று கூறுகின்றது. குன்றிக்கொடியின் முதிர்ந்த பூங்கொத்தைப் போன்று, மலர்க் கொத்தின் மேல் உச்சியில் செம்மணியைப் பெற்றுள்ள மலரை உடைய தாவரம் எனக் கொள்வதல்லது வேறு விளக்கம் பெறுமாறில்லை. இப்போதைக்கு இதனைக் குன்றி என்றே கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இதனையும் ஏப்ரஸ் பிரிகடோரியஸ் (Abrus precatorius) என்று குறிப்பிடலாம்.

 

கருவிளை–செருவிளை
கிளைடோரியா டர்னாட்டியா (Clitoria turnatea, Linn.)

“எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை” (குறிஞ். 68) என்பது கபிலர் வாக்கு.

கருவிளை என்பது கருங்காக்கணம்;
செருவிளை என்பது வெண்காக்கணம்.

இவையிரண்டும் வெவ்வேறு கொடிகள். கருநீலப்பூக்களை உடைமையின் ‘கருவிளை’ எனவும், வெண்ணிறப் பூக்களை உடைமையின் (அதற்கு எதிரான) ‘செருவிளை’ எனவும் வழங்கப்பட்டன. இவற்றுள் கருவிளையின் மலரைக் காதலர் பிரிந்த மகளிரின் நீர் வாரும் கண்களுக்கு உவமை கூறினார் கீரன் எயிற்றியனார். ‘கடிதடங்காக்கணமே’ என்று கருவிளை மலரைப் பெண் குறிக்குப் பிற்காலப் புலவர்கள் கூறுவது போலத் தாவரவியலிலும் இம்மலர் இக்குறியின் உள்ளுறுப்பை ஒத்தது என்னும் பொருள் தோன்ற, இதற்குக் ‘கிளைடோரியா என்ற பேரினப்பெயர் வகுத்தனர்!

கருவிளையும், செருவிளையும் தாவரவியலில் ஒரே சிற்றினப் பெயரால் குறிப்பிடப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் :
  1. கருவிளை
  2. செருவிளை
பிற்கால இலக்கியப் பெயர் :
  1. கருங்காக்கணம்
  2. வெண்காக்கணம்
உலக வழக்குப் பெயர் :
  1. நீலக்காக்கட்டான், கருங் காக்கட்டான், காக்கரட்டான், கண்ணி, காக்கணம்பூ
  2. வெள்ளைக் காக்கட்டான், வெண்காக்கணம், சங்கு புட்பம்.
தாவரப் பெயர் : கிளைடோரியா டர்னாட்டியா
(Clitoria turnatea, Linn.)

கருவிளை
(Clitoria ternatea)

கருவிளை–செருவிளை இலக்கியம்

கபிலர் தமது குறிஞ்சிப்பாட்டில் அமைத்த பூப்பந்தலில்,

“எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை”-குறிஞ் 68

என்று இவ்விரு மலர்களையுங் குறிப்பிடுகின்றார். இவற்றுள் ‘செருவிளை’ என்பது வெண்காக்கணம்; ‘கருவிளை’ என்பது கருங்காக்கணம். இரண்டும் சிறு கொடிகள். சங்க இலக்கியங்களில் கருவிளை மலர் மிகுத்துப் பேசப்படுகின்றது. செருவிளை மலரைக் குறிஞ்சிப் பாட்டில் மட்டும் காண முடிகின்றது. செருவிளை என்பதற்கு ‘வெண்காக் கணம் பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். இவர் மணிப் பூங்கருவிளை என்பதற்கு ‘நீலமணி போலும் பூக்களை உடைய கருவிளம்பூ’ என்பர். இப்பூ மிக அழகானது.

“மணிகண் டன்ன மாநிறக் கருவிளை
 ஒண்பூந் தோன்றியொடு தண்புதல் அணிய”
-நற். 221 : 1-2

“தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர்
 ஆடுமயில் பீலியின் வாடையொடு துயல்வர”
-நற். 262 : 1-2

என்ற விடங்களில் பின்னத்தூரார் கருவிளை என்பதற்குக் கருங் காக்கணம் என்று உரை கூறுவர். ‘செருவிளை’ என்பதை வெண் காக்கணம்.என்ற நச்சினார்க்கினியர் ‘கருவிளை’ என்பதைக் கருங் காக்கணம் என்று கூறாமல் ‘கருவிளம் பூ’ என்று குறிப்பிட்டது சற்று மயக்கந் தருவதாக உள்ளது. பொதுவாக, யாப்பிலக்கணத்தில் கருவிளம் என்பது இரண்டு நிரையசைச் சீரைக் குறிப்பதாகக் கொள்ளுவதோடு, கருவிளாவாகிய விளாவையுங் குறிக்கும் என்பர். ‘விளம்பழங்கமழும்’ (நற். 12 : 1) என்பது கருவிளங்கனியாமாறுங் காண்க.

கருவிளை என்னுங்கொடி, தண்ணிய புதல்தொறும் மலர்ந்து அழகு செய்யுமென்பதையும், கண் போன்ற கரிய மலர்களை உடைய கருங்காக்கணக் கொடி வாடைக் காற்று வீசுதலின் கூத்தாடுகின்ற மயிலின் பீலி போன்று ஆடா நிற்கும் என்பதையும் முன்னர்க் கண்டோம். மேலும், கருவிளாவின் மலர் கண் போன்றதன்று. ‘கருவிளா’ என்பது மரம்; கருவிளங்கனி, கூவிளங்கனி போன்றது. (இதன் விரிவைக் ‘கூவிளம்–கருவிளம்’ என்ற தலைப்பில் காணலாம்) அன்றியும்,

“காதலர் பிரிந்த கையறு மகளிர்
 நீர்வார் கண்ணின் கருவிளை மலர”
-அகநா. 294 : 4-5

செருவிளை
(Clitoria ternatea)

என்னுமாறு, கருங்காக்கணம்பூ பெரிதும் நீர்ப்பசை உடையதாகவும் காதலனைப் பிரிந்த மகளிரின் கண் போன்று நீரைச் சொரிந்து கொண்டு இருக்கும் என மிக நன்றாக உவமித்தார் கீரன் எயிற்றியனார். மேலும்,

“கண்ணெனக் கருவிளை மலர”-ஐங். 464
“கருவிளை கண்போன் மாமலர்”-நற். 262
“கருவிளை கண்போற் பூத்தன”[64]

என்பன காண்க.

கருவிளைக்கு மாறுபட்ட நிறங்கொண்ட வெண்மைப் பூ வெண்காக்கணம் எனப்பட்டது. ‘செரு’ என்றால் ‘மாறுபாடு’ என்று பொருள். கருமைக்கு மாறுபட்ட வெண்மை நிறமான ‘காக்கணம்’ செருவிளை எனப்பட்டது. புட்பவிதி நூலார் இவற்றை

“கருமுகைக் கருங்காக் கொன்றை
 முருகாரும் வெண்காக் கொன்றை”
[65]

என்றனர். ஆண்டாள் கருவிளையைக் கார்க்கோடப்பூ என்று அழைக்கின்றாள்.

தாவரவியலில் இக்கொடிகள் பாப்பிலியோனேட்டே (Papilionatae) என்ற தாவரத் துணைக் குடும்பத்தைச் சார்ந்தவை ஆகும். இத்துணைக் குடும்பத்தில் பத்துப் பிரிவுகள் (டிரைப்-Tribe) உள்ளன இவற்றுள் எட்டாவது பிரிவில் 5 துணைப்பிரிவுகள் காணப்படும். நான்காம் துணைப் பிரிவு யூபேசியோலியே (Eபphaeseoleae) எனப் படும். இதில் 6 பேரினங்கள் பேசப்படும். இவற்றுள் முதலாவது கிளைடோரியா (Clitoria) என்பது. இப்பேரினத்தில் 27 சிற்றினங்கள் உள்ளன என்பர். இவற்றுள் ஒன்று கருவிளை. இதனைக் கிளைடோரியா டர்னாட்டியா (Clitoria turnatea, L.) என்றழைப்பர். இம்மலரின் நிறம் கருநீலம்.

கருவிளை—செருவிளை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : பாப்லியோனேட்டே (Papilionatae)
தாவரப் பேரினப் பெயர் : கிளைட்டோரியா (Clitoria)
தாவரச் சிற்றினப் பெயர் : டர்னாட்டியா (turnatea)
சங்க இலக்கியப் பெயர் : கருவிளை, செருவிளை
ஆங்கிலப் பெயர் : மஸ்ஸெல் ஷெல் கிரீப்பர் (Musael-shell creeper)
தாவர இயல்பு : கொடி. மெல்லிய கம்பி போன்ற சுற்றுக் கொடி 100 செ.மீ. முதல் 150 செ. மீ. நீளமாகவும், சுற்றிப் படர்ந்தும் வளரும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : 5-9 சிற்றிலை கொண்ட கூட்டிலை. இலைக் காம்பு 5 செ.மீ. முதல் 7 செ.மீ. நீளமானது. இலையடிச் செதிலுண்டு. நிலையானவை.
சிற்றிலை : 3 செ. மீ. முதல் 5 செ. மீ. X 2-2.5 வரை. நுனிச் சிற்றிலை 4 முதல் 5 செ.மீ. வரை. சிற்றிலைக் காம்பு 2 மி. மீ நீளமானது.
மலர் : கரு நீல நிறமானது; மிக அழகானது. இலைக் கக்கத்தில் தோன்றுவது 3-3.5 செ. மீ. வரை நீளமானது. பூவடிச் செதில்களும், பூவடிச் சிறு செதில்களும் நிலைத்து உள்ளன.
புல்லி வட்டம் : குழல் வடிவானது; மேற்புறத்து இரு புல்லி பற்கள் கூம்பு போன்றவை. அடிப் புறத்தில் மூன்று பற்கள் உள. பசுமையானவை.
அல்லி வட்டம் : 5 இதழ்களால் ஆனது. பதாகை இதழ். நேராகவும், அகன்றுமிருக்கும். அடியில் ஆரஞ்சு நிறமாயிருக்கும். பக்கத்து இரு சிறகு இதழ்கள் (falcate oblong) அடியில் இணைந்திருக்கும். அடியிதழ்கள் இணைந்து உள் வளைந்திருக்கும். கரு நீல மலர் கருவிளை, வெண்மையான
மலர் உடையது செருவிளை. இதன் பதாகையிதழ் 4 செ.மீ. X 4 செ. மீ. இதன் குறுகிய அடியில் உட்புறத்தில் மஞ்சள் நிறமானது. இதில் கையன்ன நரம்புகள் மேல் நோக்கி எழும். இதன் இரு சிறகிதழ்கள் 2 செ.மீ. X 1 செ.மீ. ஒட்டினாற் போலிருக்கும் . இவற்றினுள் கீழிதழ்கள் இரண்டும் இணைந்து மகரந்த வட்டத்தை மூடியிருக்கும்.
மகரந்த வட்டம் : இரு தொகுதியாக இருக்கும்
சூலக வட்டம் : ஓரறைச் சூலகம். பல சூல்கள். சூல் தண்டு உள்வளைந்திருக்கும். நுனியில் நுண் மயிரிழைகள் காணப்படும்.
கனி : நீண்ட தட்டையான வெடிகனி. பல விதைகளை உடையது.

நீல மலர்களை உடையவை கருவிளை ஆகும். வெண்ணிற அல்லி இதழ்களை உடைய மலர்களைத் தரும் கொடி செருவிளை எனப்படும். இவையிரண்டையும், தாவரவியலில் ஒரே டர்னாட்டியா இனத்தில் அடக்குவர். எனினும், வெண்ணிறப் பூக்களையுடைய செருவிளை, கருவிளையினின்றும் வேறுபட்ட ஒரு வகை (variety) என்று கருதப்படுகிறது.

வெண்காக்கணமாகிய செருவிளைக்கும் தாவரவியலில் இப்பெயரே வழங்கும். செருவிளையும் புதர்களில் ஏறிப் படரும் கொடியே. எனினும், இதில் உண்டாகும் மலரின் நிறம் வெண்மையானது. சங்க இலக்கியங்களில் ‘செருவிளை’ என்ற பெயர், குறிஞ்சிப் பாட்டில் மட்டும் காணப்படுகிறது. இக்கொடி கருவிளையுடன் சேர்ந்தும், தனித்தும், வேலிகளிலும், புதர்களிலும் ஏறிப் படரும் சுற்றுக் கொடி. மேலும், கருவிளையைப் போன்று இது மிகுந்து காணப்படுவதில்லை.

பொதுவாக கிளைடோரியா என்ற இப்பேரினம் வெப்ப நாடுகளில் வளர்கிறது என்றும், அதிலும் மேலை நாடுகளில் மிகுத்துக் காணப்படும் என்றும் கூறுப. கருவிளையின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 16 என்று ஹீசாப், கப்ரமேனோ (1932), ஜகாப் (1940), ஃபிராம் லெவிவெல்டு (1953), சரோஜா (1961), ஹிபாட்டா (1962, 1983) முதலியோர் கூறுவர்.

இது காறும், செருவிளையைத் தனித்துப் பிரித்து ஆய்ந்தார் எவருமிலர் என்று தெரிகிறது.

 

பலாசம்–புழகு–புரசு
பூட்டியா பிராண்டோசா (Butea frondosa,Koen.)

கபிலர், “பகன்றை பலாசம் பல்பூம்பிண்டி” (குறி. 88) என்று புரசு எனப்படும் பலாசம் பூவினையும், “அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்” (குறிஞ். 96) என்று புனமுருங்கையாகிய புழகின் பூவையும், தனித்தனியே குறிப்பிட்டுப் பாடுகின்றார். பிற்கால இலக்கியங்கள், பலாசம் என்பதைப் புரசு, முருக்கு, புன முருக்கு, புழகு, புனமுருங்கை, மலை எருக்கு என்ற பெயர்களால் குறிப்பிடுகின்றன.பலாசம் வலியற்ற ஒரு சிறுமரம். இதன் மலர்கள் செக்கச் சிவந்தவை.

சங்க இலக்கியப் பெயர் : பலாசம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : புழகு, முருக்கு
பிற்கால இலக்கியப் பெயர் : புரசு, புரசை, புனமுருக்கு, புனமுருங்கை, மலை எருக்கு.
உலக வழக்குப் பெயர் : புரசு, பொரசு, புனமுருங்கை, முருக்கமரம், செம்பூ மரம்.
ஆங்கிலப் பெயர் : காட்டுத்தீ மரம், பிளேம் ஆப் தி பாரஸ்டு—(Flame of the Forest)
தாவரப் பெயர் : பூட்டியா பிராண்டோசா
(Butea frondosa,Koen.)

பலாசம்-புழகு-புரசு இலக்கியம்

“பகன்றை பலாசம் பல்பூம்பிண்டி”-குறிஞ். 88

என்றார் கபிலர். இவ்வடியில் குறிப்பிடப்படும் ‘பலாசம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பலாசம்பூ’ என்றார். ஆயினும், “துன்னிணர் பலாசிற் செய்த துடும்பின்” என்ற சீவகசிந்தாமணிப் பாடலில்[66] ‘பலாசின்’ என்பதற்குப் ‘புரசமர’மெனப் பொருள் கூறியுள்ளார். பிங்கல நிகண்டு[67], இதனைப் ‘புரசு’ எனவும் ‘புனமுருக்கு’ எனவும் கூறும். சூடாமணி நிகண்டு[68] ‘பலாசம்’ என்பது புனமுருக்கு என்று கூறும்.

மேலும், கபிலர் குறிஞ்சிப் பாட்டில், (‘பரேரம் புழகுடன்‘)-குறிஞ். 96

‘புழகு’ என்ற பூவினைக் கூறுகின்றார். இதற்கு நச்சினார்க்கினியர் ‘பருத்த அழகினை உடைய மலை எருக்கம் பூவுடனே’ என்று கூறியதோடமையாமல், ‘செம்பூவுமாம்’ என்றும், ‘புனமுருங்கையுமாம்’ என்றும் உரை கூறியுள்ளார்.

இவையன்றி, ‘பொங்கழல் முருக்’கென மிகச் சிவந்த முருக்கு மலர் சங்கவிலக்கியங்களில், அதிலும் அகநானூற்றில் மிகுத்துப் பேசப்படுகிறது. இதுவே, பிற்காலத்தில் புனமுருக்கு, புனமுருங்கை, புரசு, பலாசம் எனப்பட்டது.

இங்ஙனமெல்லாம் பேசப்படும் சங்க இலக்கிய மலர்ப் பெயர்களையும், அவற்றின் இயல்புகளையும் சங்கச் சான்றோர் உவமிக்கு முகத்தான் அறிவுறுக்கும் குறிப்புகளையும், மலர்ப் பெயர்களுக்கு உரையாசிரியர்கள் கூறும் விளக்கவுரைகளையும், நிகண்டுகளின் விளக்கத்தையும், கலைக்களஞ்சிய உரைகளையும், ஆழச் சிந்தித்துப் பார்த்தால், பலாசம் என்பது புரசு, புரசை, புனமுருக்கு, முருக்கு, புனமுருங்கை, புழகு என்ற பலவேறு சங்க இலக்கிய மரப் பெயர்களால் குறிக்கப்படும் என்று உணரலாம். ‘புரசு’ ஆகிய பலாசம் என்பதைத் தாவரவியலில், பூட்டியா பிராண்டோசா என்று கூறுவர். ஆங்கிலத்தில் இதனை (பிளேம் ஆப் தி பாரஸ்டு) (Flame of the forest) ‘காட்டுத்தீ மரம்’ என்பர். மருத்துவ நூல்கள் புரச மரத்தையே பலாசமெனக் கொள்ளும். ‘புரசு’ என்பது ஆற்றுப் பூவரசன்று. ஆற்றுப் பூவரசின் மலர் மஞ்சள் நிறமானது புரச மலர் எரி ஒத்த நிறமுடையது.

இக்காலத்தில் உலக வழக்கில் கூறப்படும் புரச மலர் எரியழல் போன்றது. பலாசமும் இதுவே. இதற்குப் பிங்கலமும், சூளாமணி நிகண்டும் கூறும் வேறு பெயர் ‘புனமுருக்கு’ என்பதாகும். இப்

பலாசம்–புரசு
(Butea frondosa)

புனமுருக்குத்தான் அகநானூற்றிலும், பிற சங்க இலக்கியங்களிலும் பயிலப்படும் ‘முருக்கு’ எனக் கோடல் பொருந்தும். இதனைச் ‘செம்பூமுருக்கு’ என்றார், நெடுங்கண்ணனார் (குறுந். 156). இதிலுள்ள முருக்கு என்றது புரச மரத்தை; இது பலாசமென்றும் கூறப்படும் என்று உ. வே. சா. உரை கூறுவர். ஆகவே பலாசம் என்பது புரசு எனவும் முருக்கு எனவும் கூறப்படுமாறு கண்டு கொள்ளலாம்.

இனி, புழகு என்பது மலை எருக்கு எனவும், செம்பூவுமாம், புனமுருங்கையுமாம் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். கலைக் களஞ்சியமும்[69] புழகு என்பது புனமுருங்கை என்றும் கூறும். ஆகவே புழகு என்பது புனமுருக்காதல் வலியுறும். பலாசத்திற்கு நிகண்டுகள் கூறும் பிறபெயரான புனமுருக்கு நெடுங்கண்ணனார் கூறும் செம்பூ முருக்கு ஆதலும், புழகு என்பது நச்சினார்க்கினியர் கூறியாங்கு, புனமுருங்கையாதலும் கூடும். ஆகவே, பலாசம் என்பதற்குச் சங்க இலக்கியம் கூறும் வேறு பெயர்கள் முருக்கு , புழகு எனவும், பிற்கால இலக்கியப் பெயர்கள் புரசு, புனமுருக்கு, புனமுருங்கை, புரசை எனவும், உலக வழக்குப் பெயர் புரசு எனவும் ஒருவாறு கூர்ந்து கண்டறியலாம்.

பலாசம் ஓர் அழகிய மரம். அடிமரம் பருத்திருக்குமாயினும், வலிய மரமன்று. ‘நாரில முருங்கை’யை ஒத்தது. இதனால், இதனைப் புனமுருக்கு, புனமுருங்கை, புழகு என்று கூறுவது பொருந்தும். இம்மரம் ஏறக்குறைய 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை உயர்ந்து வளரும். சேலம் மாவட்டத்தில் மாதேவ மலைக்குச் செல்லும் வழியிலுள்ள சிறுபுறவில் 1000 மீட்டர் உயரமுள்ள மலைப்பாங்கில் பலாசம் மிகுத்து வளர்கிறது. இம்மரம் மூன்று அகன்ற பெரிய சிற்றிலைகள் கொண்ட கூட்டிலைகளை உடையது. இம்மரம் பூக்கும் போது இதன் இலைகள் உதிர்ந்து விடுகின்றன. அதனால், இதனை மிக அழகிய செந்நிற, முருக்கென்று கூறுவது ஒக்கும்.

பலாசம் ஆகிய முருக்கில் அரும்பு-கரும்பச்சை நிறமான புறவிதழ்களை உடையது. கிளைகளில் பூக்கும் இதன் மலர்கள் ‘செந்தீயை மருளச் செய்யும்’ என்றார் குன்றியனார்.

“கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
 எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப”
-அகநா. 41 : 1-3

நனை முற்றிய அரும்பின் புறவிதழ், பசிய நிறமாகும். இது முகையாம் போது அகவிதழில் செம்மை தோன்றும்.

“பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கினை”-அகநா. 229 : 16

இதன் அரும்பினைப் புலியின் நகத்திற்கு உவமை கூறுவர். “முருக்கு அரும்பன்ன வள்ளுகிர் வயப்பிணவு”-அகநா. 362 : 5

மேலும், குருதிக் கறை படிந்த புலி நகத்தை இதன் அரும்பிற்கு உவமையாக்குவதோடு, இம்மரம் இளவேனிற் காலத்தில் பூக்கும் என்பர் ஒரு புலவர்.

“உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்
 எதிரி முருக்கு அரும்ப .... .... ....
 இன்பம் பயந்த இளவேனில்”

மேலும். இதன் குவிமுகையைச் செவ்வண்ணம் ஊட்டிய மகளிரின் கை நகத்திற்கு உவமித்தார் மற்றொரு புலவர்.

“குவிமுகை முருக்கின் கூர்நுனை வைஎயிற்று
 நகை முகமகளிர் ஊட்டுஉகிர் கடுக்கும்”

-அகநா 317 : 4-5


இதனுடைய முகை அவிழ்ந்தால், அகவிதழ்களின் செம்மை நிறம் விளங்கும். இதன் மலரைச் ‘செம்பூ முருக்கு’ என்றார் நெடுங்கண்ணனார் (குறுந். 156 : 2) என முன்னரே கூறினோம்.

செக்கச் சிவந்த இம்மலரின் செம்மையை, எரியின் செம்மையாகக் கூறுவர். விரிந்த அகவிதழ்கள் தீயின் நாக்குகளாகவும், சிற்றிதழ்கள் தீப்பிழம்புகளாகவும், மகரந்தங்கள் சிதறும் தீப்பொறிகளாகவும் கூறப்படும்.

“பொங்கழல் முருக்கின் ஒண்குரல்”[70]

 “எரிசிதறி விட்டன்ன ஈர்முருக்கு”[71]

முருக்க மரக் கிளையில் இதன் செவ்விய பூந்துணர் காணப்படும். இதனை ‘எரிமருள் பூஞ்சினை’ (அகநா. 41 : 3) என்பர் குன்றியனார். அழல் ஒத்துப் பூத்த முருக்க மரங்களைக் கொண்ட நீர்த்துறைக் கரை என்றார் கௌதமனார்:

“மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
 முருக்குதாழ்பு எழிலிய நெருப்புஉறழ் அடைகரை”

-பதிற். 23 : 19-20


பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு வியத்தகு செய்தி கூறுகின்றார். யானையைப் போன்றதொரு துறுகல் கிடந்தது. அதன் மேல் சிவந்த மலர் விரிந்த முருக்க மரக் கிளைகள் படிந்திருந்தன. கடுங்காற்று வீசியதால் செம்மலர்கள் அசைந்தாடின. அக்கல் அழல்பொழி யானையின், ‘ஐ’ என்னும்படி வியப்பைத் தந்தது.

“நனைமுதிர் முருக்கின் சினைசேர் பொங்கர்
 காய்சினக் கடுவளி எடுத்தலின் வெங்காட்டு
 அழல்பொழி யானையின் ‘ஐ’எனத் தோன்றும்”

-அகநா. 223 : 5-7


மிக உயர்ந்த மரக் கிளையில் உண்டான இம்மலரின் செம்மைக்கு நெருப்பை அன்றி, அரக்கையும் உவமையாக்குவர்:

“சிதர்நனை முருக்கின் சேண்ஓங்கு நெடுஞ்சினை
 ததர்பிணி அவிழ்ந்த தோற்றம் போல
 உள்அரக்கு எரிந்த உருக்குறு போர்வை”

(சிதர்-சிந்தல், ததர்-கொத்து)-சிறுபா. 254-256

“அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்”-குறிஞ். 96

இம்மலரின் செவ்விய இதழ்களுக்குப் பவளத்தை உவமை கூறுவாரும் உளர். குளத்து நீரில் இதன் சிவந்த இதழ் உதிர்ந்தது. இதனை ‘மணி போன்ற கண்ணாடிக்குள்ளே பவளத்தை எறிந்ததைப் போன்ற’தென்பர், கணிமேதாவியார்.

“மணிபுரை வயங்கலுள் துப்புஎறிந்தவை போல
 பிணிவிடு முருக்கிதழ் அணியகத்து உதிர்ந்துஉக”

-கலி. 33 : 3-4


முருக்க மலரின் பசிய புறவிதழ் முதிர்ந்து மஞ்சள் நிறமாகி, அதன் உள்ளுறையும் செவ்விய அகவிதழை மூடிக் கொண்டு இருப்பதைக் கணிமேதாவியார்,

“பொன்னுள் உறு பவளம் போன்ற புணர் முருக்கம்”[72]

என்பர். மேலும், இதன் பவள இதழை மகளிரது செவ்வாய்க்கு உவமிப்பர். அதிலும் தம்பலந்தின்று சிவப்பேறிய செவ்வாய்க்கு உவமையாக்குவர் திருத்தக்கதேவர்.

“முருக்கிதழ்க் குவிகமூட்டி வைத்தன முறுவற் செவ்வாய்”[73]

இத்துணைச் சிறப்பிற்றாய இச்செம்மலரில் மணமில்லை. இதனை மக்கள் சூடிக் கொண்டதாக அறிகிலம். எனினும், ‘நாறாப் பூவும் தேவருக்காம்’ என்ற வண்ணம், எம்மலரையும் தம்மலராகக் கொள்ளும் சிவன் முடியில் இம்மலரைச் சேர்த்த ஞானசம்பந்தர்,

“எருக்கொடு முருக்கு சடைமேல் அணிந்த எம்அடிகள்”[74]

என்றார்.

பலாச மரம் உறுதியற்றது; பருத்த அடி மரத்தை உடையது; அகன்ற இலைகளை உடையது. வேல் வீசியும், அம்பெய்தும் பயிற்சி பெறுபவர், இம்மரத்தைக் குறிபொருளாகக் கொண்டனர். கோசர் இவ்வாறு பயின்றதைக் காரிக்கண்ணனார்:

“. . . . . . . . . . . . . . . . வெல்வேல்
 இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
 இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
 பெருமரக் கம்பம் போல”
-புறநா. 169 : 8-11

இதன் மரத்தால் செய்த கைத்தண்டைக் கமண்டலத்துடன் பிடித்த படிவ உண்டிப் பார்ப்பன மகனைப் பற்றிக் குறுந்தொகை (156) கூறும். தன்கருமஞ் செய்யும் தவ யோகியரின் கைத்தண்டு புரசமரத்திற் செய்யப்படுவது உலக வழக்காதலின், பலாச மரத்தைப் புரசு எனக் கூறுவது பொருந்தும்.

‘பலாசம்’ தாவரவியலில் பாப்பிலியோனேட்டே என்ற துணைக் குடும்பத்தையும், பூட்டியா என்ற பேரினத்தையும் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 59 பேரினங்கள் தமிழ் நாட்டில் வளர்வதாகக் ‘காம்பிள்’ கூறுவர். பூட்டியா என்ற பேரினத்தில், 2 சிற்றினங்களே உள்ளன. பூட்டியா பிராண்டோசா என்ற இவ்விலையுதிர் பலாச மரம் (புரசு) தமிழ் நாட்டின் எல்லா வறண்ட மாநிலங்களிலும், காடுகளிலும் வளர்வதைக் காணலாம். கரிய மண்ணிலும், ஓரளவு உப்பளரான நிலத்திலும் வளர்கிறது.

இம்மரம், மலருங்கால் இலைகளெல்லாம் உதிர்ந்து விடும். இதனை எரியழல் மரமென்பதற்கேற்ப, இது ஆங்கிலத்தில் (பிளேம் ஆப் தி பாரஸ்டு) ‘காட்டுத் தீ மர’மெனப்படும்,

குரோமோசோம் எண்ணிக்கை பூட்டியா மானோஸ்பெர்மா என்பதற்கு, 2n=18 என இராகவன் (1958) முதலியோரால் கண்டு சொல்லப்பட்டதன்றி, பூட்டியா பிராண்டோசாவுக்குக் கணிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

பலாசம்–புழகு–புரசு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : அல்லியிதழ்கள் இணையாதவை-பை கார்ப்பலேட்டே
தாவரக் குடும்பம் : வெகுமினோசி
தாவரத் துணைக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilionatae)
தாவரப் பேரினப் பெயர் : பூட்டியா (Butea)
தாவரச் சிற்றினப் பெயர் : பிராண்டோசா (frondosa)
தாவர இயல்பு : மரம் 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை உயர்ந்து வளரும் இலையுதிர் பெருமரம். பெரிதும் காடுகளில் காணப்படும்.
தாவர வளரியல்பு : மீசோபைட், 600 மீட்டர் உயரமான மலைப்பாங்கில் கருமண் காடுகளில் வளரும்.
இலை : இலையடிச் செதில்கள் சிறியன. விரைவில் உதிரும். அகன்று பெரிய மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை. சிற்றிலை 10-14 செ.மீ. 8-12 செ.மீ. ஏறக் குறைய நாற்சதுரமானது.

பலாசம்–புரசு
(Butea frondosa)

மஞ்சரி : இலைக் கோணத்திலும் கிளை, நுனியிலும் நுனி வளரும் பூந்துணர்.
மலர் : மலரடிச் செதிலும், சிறு செதில்களும் உள. மலர் பெரியது. நெருப்பை ஒத்த செந்நிறமானது. அழகானது. இருபாலானது. குடும்பப் பெயருக்கேற்றது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் இணைந்த அகன்ற குவளை வடிவானது. கரும் பச்சை நிறமானது. அரும்பில் அகவிதழ்களை மூடியிருக்கும். மேற்புற இரு புல்லியிதழ்கள் சற்று நீளமானவை. கூம்பு போன்றது. அடிப்புறப் புல்லியிதழ் மிகச் சிறியது.
அல்லி வட்டம் : பதாகை இதழ் அகன்ற நீளமான கூரிய கத்தி போன்றது. சிறகிதழ்கள் இரண்டும் பக்கவாட்டில் இருக்கும்; இணைந்த அடியிதழ்களை ஒட்டியிருக்கும்.
மகரந்த வட்டம் : இரு தொகுதியானவை (9 + 1) மகரந்தப் பைகள் ஒரே மாதிரியானவை.
சூலக வட்டம் : ஒரு சூலக ஓரறைச் சூல். சூல் தண்டு நீளமானது. உள் வளைவானது. சூல் முடி மிகச் சிறியது.
கனி : ஒரு புற வெடிகனி. 3-4 செ.மீ. நீளம் அடியில் பட்டையானது. மேலே சிறகு போன்றது. நுனியில் வட்டமான துளை வழியாக ஒரு விதை வெளிப்படும்.
விதை : சற்று அமுங்கிய முட்டை வடிவானது.
 

புன்கு
பொங்காமியா கிளாப்ரா (pongamia glabra,Vent.)

சங்க நூல்கள் குறிப்பிடும் ‘புன்கு’ என்னும் சிறுமரம் மிக அழகானது. என்றும் தழைத்து இருப்பது. செந்நெல்லின் பொரி போன்ற செந்நிறங் கலந்த வெள்ளிய பூக்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : புன்கு
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : புன்கம்
உலக வழக்குப் பெயர் : புங்க மரம், புன்கம்
தாவரப் பெயர் : பொங்காமியா கிளாப்ரா
(pongamia glabra,Vent.)

புன்கு இலக்கியம்

புன்கு’ மரத்தின் பூக்கள் செந்நிறப் பொரியை ஒத்தவை. மிகச் சிறியவை. தலைவியின் ஊரிலுள்ள நீர்த் துறையில் புன்கு பூத்து, மலர்கள் மணல் மேல் சிதறிக் கிடக்கின்றன. இவ்விடம் வேலன் வெறியாட்டு அயரும் பொரி சிந்திய வியன்களம் போன்றுள்ளது. தலைவியை அவ்விடத்திற் கண்ட தலைவன் அவளது முன் கையைப் பற்றிக் கொண்டு தெய்வ மகளிரைச் சுட்டிக் காட்டி, அவளை மணந்து கொள்வதாகச் சூள் உரைக்கின்றான். நெடு நாளாகியும் அவன் வரைந்து கொள்ளவில்லையே என்று தலைவி வருந்துகின்றாள். இதனை அறிந்த தோழி, தலைவனை நோக்கி “நீ கூறிய சூளுரைகள் எம்மைத் துன்புறுத்துவதாயின” என்று கூறுகின்றாள்:

“எம் அணங்கினவே மகிழ்ந முன்றில்
 நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
 வேலன் புனைந்த வெறி அயர்களந் தொறும்

 செந்நெல் வான் பொரி சிதறியன்ன
 எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
 நேரிறை முன்கை பற்றிச்
 சூர்அர மகளிரொடு உற்ற சூளே”
-குறுந். 53

பூத்த ‘புன்கு’ மலர்கள் சிதறிக் கிடப்பதைப் புலவர்கள் நெற் பொரிக்கு உவமிக்கும் பல சங்கப் பாடல்கள் உள்ளன.

“. . . . . . . . . . . . . . . . . . . . பொரி எனப்
 புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய”
-அகநா. 116 : 5-6

“பொரிஉரு உறழப் புன்கு பூஉதிர”-கலி. 33 : 11

“பொரி சிதறி விட்டன்ன புன்கு”[75]

“புன்குபொரி மலரும் பூந்தண் பொழிலெல்லாம்
 செங்கண் குயில் அகவும்”
[76]

எனினும், புன்கம்பூ முழுவதும் வெண்ணிறங் கொண்டதன்று. இப்பூவின் தலைப் பகுதியில் சிறிய செந்நிறம் காணப்படும். பிற நெல்லின் பொரி போலாது செந்நெற் பொரியில்தான் இச்செந்நிறம் கூறப்படுகின்றது. இதனை மேற்குறித்த குறுந்தொகைப் பாடல் கூறுகிறது. இதற்கு விளக்கம் தருகின்றார் திருத்தக்கதேவர்.

“செந்தலையை வெண்களைய புன்கம் பொரியணிந்தவே”[77]

புன்கு பூத்த போது இச்சிறு மரம் மிக அழகாகத் தோன்றும். இதில் செங்கண் குயில் கூடி அகவும்; இதன் தளிர்கள் பளபளப்பானவை, மஞ்சள் கலந்த செந்நிறமானவை; அழலை ஒத்தவை. இவ்விளந் தளிர்களை மகளிர் தமது மார்பகத்தில் அப்பிக் கொள்வர். தமிழ் இலக்கியம் இதனைத் ‘திமிர்தல்’ என்று கூறும்.

“எழில்தகை இளமுலை பொலியப்
 பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே”
-ஐங்: 347 : 2-3

“பொரிப்பூம் புன்கின் அழற்றகை ஒண்முறி
 சுணங்கு அணிஇளமுலை அணங்கு கொளத்திமிரி”

-நற். 9 : 5-8


புன்கு தாவர அறிவியல்

|
தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே-அகவிதழ் பிரிந்தவை
தாவரத் துணைக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilionatae)
தாவரப் பேரினப் பெயர் : பொங்காமியா (Pongamia)
தாவரச் சிற்றினப் பெயர் : கிளாப்ரா (glabra)
சங்க இலக்கியப் பெயர் : புன்கு
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : புன்கம்
உலக வழக்குப் பெயர் : புங்க மரம், புன்கம்
தாவர இயல்பு : சிறு மரம், 7-10 மீ. உயரமானது. நன்கு கிளைத்துத் தழைத்து வளர்வது. என்றும் பசிய இலைகளையுடையது.
இலை : சிற்றிலைகளை உடைய கூட்டிலை. எதிரடுக்கானது. இலைச் செதில்கள் சிறியவை. சிற்றிலைகள் நீள் முட்டை வடிவானது.
மஞ்சரி : நுனி வளர் பூந்துணர் இலைக் கோணத்தில் உண்டாகும். கொத்தாகக் காணப்படும்.
மலர் : அவரைப்பூப் போன்றது. மலரடிச் செதில்கள் நுண்ணியவை. விரைவில் உதிர்ந்து விடும்.
புல்லி வட்டம் : 5 பசிய புறவிதழ்கள் இணைந்து புனல் வடிவாக இருக்கும்.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் 5, பதாகை இதழ் சற்று முட்டை வடிவானது. மேலே மடிந்து வளைந்திருக்கும். சிறகிதழ்கள் இரண்டும் இரு பக்கத்திலும் உள்ளன. ஒரு புறமாக நீண்டிருக்கும். அடியில்
படகிதழ்கள் ஒட்டியிருக்கும். படகிதழ்கள் இரண்டும் நுனியில் ஒட்டியிருக்கும்.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள் ஒன்றாய் ஒரு கட்டாக அடியில் இணைந்து இருக்கும். ‘வெக் சிலரி’ தாதிழை அடியிலும் மேலும் பிரிந்திருக்கும், தாதுப் பைகள் சீரானவை.
சூலக வட்டம் : சூல்தண்டு உள்வளைவானது. சூல்முடி குல்லாய் போன்றது. ஒரு சூலிலைச் சூலகம். இரு சூல்கள் உள.
கனி : வெடியாத உலர்கனி, ‘பாட்’ எனப்படும். தட்டையானது. அடியிலும், நுனியிலும் குறுகி இருக்கும். 5-6×2-3 செ.மீ. ஒரு விதை. சிறு நீரக வடிவானது. தடித்தது.

இதன் மரம் வலியது; வெண்ணிறமானது. வண்டிச் சக்கரங்கள் செய்வதற்கும் பயன்படும். இதன் விதையில் ஒரு வித எண்ணெய் உளது. இது விளக்கெரிக்கவும், மருந்தாகவும் பயன்படும். இம்மரப்பட்டை தடித்தது; கரிய பழுப்பு நிறமானது. இதனை மருந்துப் பொருள் என்பர்.

பொங்காமியா’ என்ற இப்பேரினத்தில் ‘கிளாப்ரா’ என்ற சிற்றினம் மட்டும் ஆற்றோரங்களிலும், வெற்றிடங்களிலும் தமிழ் நாட்டில் பரவலாக வளர்கிறது. 3000 அடி உயரம் வரையிலான மலைப் பாங்கிலும் காணப்படுகிறது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை : 2n = 22 என பட்டேல், ஜே. எஸ். நாராயணா (1937) முதலியோர் கணக்கிட்டுள்ளனர்.

 

அவரை
டாலிக்கஸ் லாப்லாப் (Dolichus lablab,Linn.)

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் அவரை மலரையுங் குறிப்பிடுகின்றார் (குறிஞ். 87)

அவரை நீளமாக வளரும் சுற்றுக்கொடி. இதன் பூக்கள் ஊதா (செம்மை), வெளிர் நீலம், வெண்மை ஆகிய நிறங்களை உடையன.

சங்க இலக்கியப் பெயர் : அவரை
தாவரப் பெயர் : டாலிக்கஸ் லாப்லாப் (Dolichus lablab,Linn.)

இந்நாளில் அவரையில் பல வேறுபட்ட வகைகள் கலப்பு முறையில் உண்டாக்கப்பட்டுள்ளன. இவையனைத்திலும் உண்டாகும் அவரைக்காய்கள் கறிக்கு அமையும்.

அவரை இலக்கியம்

குறிஞ்சிப்பாட்டில் கபிலர்,

“அடும்பர் ஆத்தி நெடுங்கொடி அவரை”.

- குறிஞ். 87
என்று ‘அவரை’யைக் குறிப்பிடுகின்றார். ‘அவரை’ நீண்டு வளரும் ஒரு கொடி. தினையரிந்த புனத்தில் மறுவிளைவிற்காக ‘அவரை’ விதைக்கப்படும் போலும். தினைத்தாளில் அவரைக் கொடி படர்ந்து பனி பெய்யும் முன் பனிக் காலத்தில் பூக்கும் என்று கடுவன் மள்ளன் கூறுவர்.

“பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
 கொழுங்கொடி அவரை பூக்கும்
 அரும்பனி அற் சிரம்
-குறுந். 82:4-6

‘அற்சிர அரை நாளில்’ அவரை பூக்குமெனக் கீரன் எயிற்றியனார் காட்டினார். இதன் மலர் பவளம் போன்ற செம்மை நிறமானதென்றும், இதன் வடிவமைப்பு கிளியின் மூக்குப் போன்று வளைவானது என்றும், இக்கொடி புதரில் ஏறிப் படரும் என்றும் புலவர்கள் கூறுவர்.

“அவரைப் பைம்பூப் பயில அகல்வயல்
 .... .... .... .... .... .... .....
 இதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள்”

-அகநா. 294 : 9-11

“பைந்நனை அவரை பவழங் கோப்பவும்”-சிறுபா. 164

“பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரை
 கிளிவாய் ஒப்பின ஒளிவிடு பன்மலர்”
-குறுந். 240

இதனைக் கொண்டு அவரையைக் ‘கிளிமூக்கு மலர்’ என்பார் கோவை இளஞ்சேரனார்.[78] அவரையில் வெளிர் நீலமான நீலமணி போன்ற பூவுடைய கொடியுமொன்றுண்டு என்பர் மாங்குடி மருதனார்.

“மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்
 ஆமா கடியும் கானவர் பூசல்”
-மதுரை. 292-293

அவரை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே-ரோசேலீஸ். அகவிதழ் இணையாதவை.
தாவரக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilionatae)
தாவரப் பேரினப் பெயர் : டாலிகஸ் (Dolichus)
தாவரச் சிற்றினப் பெயர் : லாப்லாப் (lablab)
சங்க இலக்கியப் பெயர் : அவரை
உலக வழக்குப் பெயர் : அவரை
தாவர இயல்பு : நீண்டு வளரும் சுற்றுக் கொடி.
இலை : மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை. சிற்றிலைகள் அகன்ற ‘டெல்டாயிட்’ வடிவானவை. இலைச் செதில்கள் அடி ஒட்டியவை.
மஞ்சரி : நீளமான நுனி வளர் பூந்துணர் இலைக் கோணத்திலும், கொடி நுனியிலும் உண்டாகும்.
மலர் : இணரில் 7-8 மலர்கள் இருக்கும். செந்நிற, வெளிர் நீல நிற, வெண்ணிற மலர்களை உடையது. மலர்களின் வடிவம் இத்தாவரக் குடும்பத்திற்கேற்ப அமைந்திருக்கும்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் அடியில் இணைந்து, குழாய் வடிவானது. மேலேயுள்ள 2 புறவிதழ்களின் நுனி, கூம்பு போன்றவை.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இருபக்க இதழ்கள் ஒரே மாதிரியானவை. இவை சிறகிதழ்கள் எனப்படும். மேற்புறத்தில் உள்ள பெரிய, அகன்ற இதழ் பதாகை எனப்படும். அடியில் உள்ள இரு இதழ்கள் அடியில் ஒட்டிக் கொண்டு படகு போன்றிருக்கும். இவ்விரு இதழ்களும் நுனியில் இணைந்து, உள்வளைவாகக் கிளி மூக்குப் போன்றிருக்கும்.
மகரந்த வட்டம் : இரு தொகுதியான (9 - 1) ஒரு படித்தான 10 மகரந்தத் தாள்கள். தாதிழைகள் மெல்லியவை.
சூலக வட்டம் : ஒரு செல் உள்ளது. பல சூல்கள் உண்டாகும். சூல்தண்டு மேற்பகுதியில் தடித்திருக்கும். நுண்மயிர் அடர்ந்திருக்கும். சூல்முடி உருண்டையானது.
கனி : அவரைக்காய் முதிர்ந்து பாட் (Pod) என்ற உலர் கனியாகும்.
விதை : தடித்த, சற்றுத் தட்டையான, நீள் முட்டை வடிவான விதைகள் கனியுறையில் ஒட்டியிருக்கும்.

அவரையில் சற்று நீண்ட காயுடைய, தட்டையான அவரைக்கு (typicus) டிபிகஸ் என்றும், சற்றுக் குட்டையான காயுடைய, தட்டையான அவரைக்கு (lignosus) லிக்னோசஸ் என்றும், வகைப் பெயர்களை (varietal names) பிரெயின் (Prain) என்பவர் குறிப்பிடுகின்றார்.

அவரைக்காய் உணவாகப் பயன்படும். அதனால், தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. இந்நாளில் அவரையில் பலவேறுபட்ட அவரை வகைகள் கலப்பு முறையில் உண்டாக்கப் பெற்று உள்ளன. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=20 என வாசில் (1962) என்பாரும், பிரிச்சர்டு (1964) என்பாரும், 2n=22 என காவாகாமசென் (1928), சென்; என். கே. மாரிமுத்து (1960), பிர்சித்து (1966) முதலியோரும் கணக்கிட்டனர்.

 

கொள்
டாலிகஸ் பைபுளோரஸ் (Dolichos biflorus,Linn.)

கொள் இலக்கியம்
மாங்குடி கிழார் என்னும் புறநானூற்றுப் புலவர், உணவுப் பொருள்களில் வரகு, தினை, கொள், அவரை என்ற இந்நான்கு அல்லதில்லை என்று பாடியுள்ளார்.

“கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
 சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு
 இந்நான் கல்லது உணாவும் இல்லை
-புறநா. 335 : 1- 3

வரகு விதைப்பதற்காகக் கரம்பையாகக் கிடந்த நிலத்தை உழுகிறார்கள். அங்கே கொள்ளுக் கொடி முளைத்திருக்கிறது என்றும், கொள்ளொடு பயறும், பாலும் சேர்த்துப் பாற்சோறு அட்டு உண்பர் என்றும் சங்க நூல்களில் அறிய முடிகிறது.

“வெள்வரகு உழுத கொள்ளுக் கரம்பை-பதிற். 75 : 11

“கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளிக்
 கோல் வரைந்தன்ன வால்அவிழ் மிதவை

(மிதவை-பாற்சோறு)

-அகநா 37:12-13

கொள்ளுக் கொடி முதலில் செடியாக நேரே வளரும். பின்னர் கொடியாகிப் படரும். குதிரைக்குக் ‘கொள்’ நல்லுணவுப் பொருள். அதற்காகவே கொள் பயிரிடப்படுகிறது.

கொள் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
ரோசேலீஸ் (Rosales)
தாவரக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilionatae)
தாவரப் பேரினப் பெயர் : டாலிகஸ் (Dolichos)
தாவரச் சிற்றினப் பெயர் : பைபுளோரஸ் (biflorus)
சங்க இலக்கியப் பெயர் : கொள்
உலக வழக்குப் பெயர் : கொள்ளுச் செடி
ஆங்கிலப் பெயர் : (Horse gram)
தாவர இயல்பு : சிறு செடியாக வளர்ந்து பின்னர், வயல்களில் படர்ந்து வளரும் ஓராண்டுக் கொடி.
இலை : 2-3 சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை.
மஞ்சரி : இலைக்கோணத்தில் 1-3 மஞ்சள் நிற மலர்களைக் காணலாம்.
மலர் : மஞ்சள் நிறமானது. அவரைப்பூப் போன்றது.
புல்லி வட்டம் : மெல்லிய மயிரிழைகள் மலிந்த பசிய குழல் வடிவானது. 5 புறவிதழ்களில் மேற்புறமுள்ள இரண்டும் சற்றுக் கூம்பு போன்றவை.
அல்லி வட்டம் : பளபளப்பான பதாகை இதழ். இரு பக்கங்களிலுமுள்ள சிறகிதழ்கள் குறுகியவை.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள் (1-1-9) என்ற முறையில் இருக்கும்.
சூலக வட்டம் : 1 செல்; பல சூல்கள்.
கனி : நீளமானது. 1.5-2 அங்குல நீளமும், 0.25 அங்குல அகலமும் உள்ள பசிய காய் 5-6 விதைகளை உடையது.
விதை : சற்றுத் தட்டையானது. இதன் விதைகளுக்காக இச்செடி பயிரிடப்படுகிறது. இச்செடி ஆடு மாடுகளுக்கு நல்ல உணவுச் செடி.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=20 என சென், என். கே. வித்யாபூஷன் (1959), பிரிட்சார்டு, ஏ. ஜே. கௌல்டு (1964) என்போர் கணக்கிட்டுள்ளனர்.

 

வேங்கை
டீரோகார்ப்பஸ் மார்சூப்பியம்
(Pterocarpus marsupium,Roxb.)

சங்க இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறும் மிக உயரமாக வளரும் பெரும் மரம் வேங்கை. மஞ்சள் நிறமான பூக்கள் எரிகொப்பு விட்டாற் போன்ற செம்மையும் மஞ்சளும் கலந்த பொன்னிறமாகத் தோன்றும். இம்மரம் பூத்த பொழுதில் வேங்கை வரிப் புலியை ஒத்துத் தோற்றம் அளிப்பதால் மகளிர் இதனைப் ‘புலி, புலி’ என்று ஆரவாரம் செய்து கூச்சலிடுவர்.

இம்மரம் மகளிர் போடும் ‘ஏமப்பூசலை’க் கேட்டு வளைந்து கொடுக்கும் என்ற கருத்து உண்டு. இதில் ஏதோ ஓர் உண்மை புதைந்துள்ளது.

சங்க இலக்கியப் பெயர் : வேங்கை
தாவரப் பெயர் : டீரோகார்ப்பஸ் மார்சூப்பியம்
(Pterocarpus marsupium,Roxb.)

வேங்கை இலக்கியம்

சங்க இலக்கியங்களில் வேங்கை மரத்தைப் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. ‘ஓங்குநிலை வேங்கை’ எனவும், ‘பெருவரை வேங்கை’ எனவும், ‘கருங்கால் வேங்கை’ எனவும் பேசப்படும் இம்மரம், மலைப்பாங்கில் பரவிக் கிளைத்துத் தழைத்து வளரும். நல்ல நிழல் தரும். இதன் நிழலில் மகளிர் விளையாடுவர். குறவர் குரவைக் கூத்தாடுவர். மகளிர் மூங்கிற் குழாயிற் புளித்த தேறலைப் பருகிக் குரவை அயர்வர் என்பர் புலவர் பெருமக்கள்.

“வாங்கமைப் பழுகிய தேறல் மகிழ்ந்து
 வேங்கை முன்றிற் குரவை அயரும்
-புறநா. 129 : 2-3

“. . . . . . . . . . . . . . . . . . . . பெருமலை
 வாங்கமைப் பழுகிய நறவு உண்டு
 வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே”
-நற்: 279 : 8-10

கணவனை இழந்த கண்ணகி அணு அணுவாகப் பிரியும் உயிருடன் தவித்து நிற்கிறாள். அவளுக்கு நறுஞ்சினை வேங்கை நலங்கிளர் கொழுநிழல் தந்தது என்பர் இளங்கோவடிகள்.[79]

கரிய அடி மரத்தை உடைய வேங்கை மரம் இணரூழத்து மலரும். இணரில் உள்ள அரும்புகள் நன்கு விரிந்து மலரும். மூன்று புலவர்கள், ஓரெழுத்தும் மாற்றமின்றி ஒரே தொடராகக் கூறுகின்றனர். இதன் அரும்புகள் ஒரு சேரப் பூத்தலின்,

“அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை”
1. கபிலர்: புறநா. 202 : 18
2. பெருங்குன்றூர்க்கிழார்: நற். 112 : 2
3. கொல்லன் அழிசி: குறுந். 26 : 1

இதன் இணரை, இதனுடைய அழகை, புலப்படுத்திப் புலவர் பலவாறு கூறுவர்.

“மெல்லிணர் வேங்கை”-பதிற். 14 : 11
“வேங்கை ஒள்ளிணர்”-புறநா. 265 : 2
“விரிஇணர் வேங்கை”-அகநா. 38 : 1
“பொன்னிணர் வேங்கை”-நற். 151 : 9

வேங்கையின் மலர் சற்றுச் செம்மை கலந்த மஞ்சள் நிறமானது. எனினும், புலவர்கள் இதனைச் செந்நிற மலர் என்று கூறுவர்.

“கருங்கால் வேங்கைச் செவ்வீ”-நற். 222 : 1
“கருங்கால் வேங்கைச் செம்பூ”-அகநா. 345 : 8
“செவ்வீ வேங்கைப்பூவின் அன்ன”-மலைபடு. 434

எனினும் கீரந்தையார் இதனை எரி கப்புவிட்டாற் போன்ற நிறமுடைய தென்பர்.

“எரிஅகைந் தன்ன வீததை இணர
 வேங்கையம் படுசினை”
-நற். 379 : 2-3

வேங்கை மலரின் செம்மை கலந்த மஞ்சள் நிறத்தைப் பொன்னிறமென்று புலவர்கள் பாடுவர்.

“புலவரை வேங்கைப் பொன்மருள் நறுவீ”-ஐங். 217 : 1

“அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப்
 பொன்மருள் நறுவீ”
நற். 257 : 5-6

மலரின் அகவிதழ்களே இந்நிறமுடையன. இதன் புறவிதழ்கள் ‘தகடு’ எனப்படும். இவை சற்றுக் கரிய நிறமானவை என்பர் புலவர்.

“கருங்கால் வேங்கை மாதகட்டு ஒள்வீ”-ஐங். 219 : 1

“அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
 மாதகட்டு ஒள்வீ”
-புறநா. 202 : 18-19

“கார்அரும்பு அவிந்த கணிவாய் வேங்கை”-நற். 373 : 6

புறநானூற்றுப் பழைய உரைகாரரும் மேற்கண்ட அடிகட்கு, ‘வேங்கையினது கரிய புறவிதழையுடைய ஒள்ளிய பூ’ என்றார். இதன் இணரில் முழுதும் அலராது உள்ள முகைகள் செந்நெல் போன்று காட்சி தருமென்பர் அவ்வையார்.

“அகடுநனை வேங்கைவீ கண்டன்ன
 பகடுதரு செங்நெல்”/b>-புறநா. 390: 21-22

இளமங்கையர்க்கு இன்பப் பூரிப்பால் மார்பிடங்களில் படரும் அழகுத் தேமையைப் புலவர்கள் ‘சுணங்கு’ என்பர். இச்சுணங்கிற்கு வேங்கைப்பூ உவமையாகவும், பெருவழக்காகவும் அமைந்தது.

“பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
 நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலை”

-அகநா. 319  : 8-9


வேங்கை நன்னாள் கூறி மலரும் பருவம் கார்ப் பருவமாகும்; அதிலும், முழு நிலவுக் காலத்தில் பூக்கும் என்பர் கபிலர்.

“நல்நாள் வேங்கைவீ நற்களம் வரிப்பக
 கார்தலை மணந்த”
-அகநா. 133 : 4-5

“பைம்புதல் வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன
 நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே”
-அகநா. 2:15-17

பின்வரும் அகநானூற்றுப் பாடலில் ஒரு சுவையான சொற்றொடர் வேங்கை மலரும் காலத்தைக் குறிக்கும் தொடர்பில் உள்ளது. கார்காலம் தொடங்கு முன் வருவேன் எனறு சொல்லிச் சென்றவன், ‘கார் காலத்தை அறிவிக்க வேங்கை மலர்வதை எண்ணி நின்னை வரைந்து கொள்ள வருவான்’ என்று தோழி தலைவியிடம் கூறுகின்றாள்.

“வருமே தோழி நன்மலைநாடன்
 வேங்கை விரிவிடம் நோக்கி
 வீங்கிறை பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே”

-அகநா 232 : 6-7


இப்பாடலில் வரும் ‘வேங்கை விரிவிடம்’ என்ற சொற்றொடர் தொல்காப்பிய உரையாசிரியர்களைக் கவாந்துள்ளது. வேங்கை விரி இடம் என்பதில் இடம் என்பது வினை நிகழ் இடமன்று. சேனாவரையர் இதற்குக் ‘காலமாகிய இடம்’ என்றார் (தொல். சொல். 81-உரை). நச்சினார்க்கினியரும் ‘வேங்கை அலர்கின்ற காலத்தைப் பார்த்து’ என்று உரை கூறினார். இதனை இடமாகக் கொண்டால், இங்கு வதுவை மணம் நிகழும் என்று கொள்ள நேரும். வதுவை மணம் இல்லத்தே நிகழ்வதாகலின், இது பொருந்தாது. இதில் வரும் ‘வரைந்தனன் கொளற்கு’ என்றது. ‘வரைநது எனது தோளைத் தழுவிக் கொள்வதற்கு’ என்ற பொருளாகும். எனவே, வேங்கை மலரும் நாள், காலத் தொடக்கமாகி, அது திருமணத்திற்கு நாளை அறிவிக்கும் அறிவிப்பாகும் என்று கூறுவர் கோவை இளஞ்சேரனார்![80]

வேங்கை மரத்தின் கரிய நிறமுள்ள கிளைகளில் மஞ்சளும், மங்கிய செம்மையுமான நிறமுள்ள மலர்கள் கொத்தாகப் பூக்கும். பூக்கள் வரிப் புலியைப் போலத் தோன்றும். இதன் பூக்களைக் குறவர் மகளிர் கொய்து கூந்தலிற் சூடிக் கொள்வர். ‘வேங்கை மரம் மிக உயரமானது. அதன் மேல் ஏறிப் பூக்கொய்தல் அத்துணை எளிதன்று. ‘வேங்கை மரக்காட்டில் யானைகள் பொருகின்றன. பக்கத்தில் இருந்த வேங்கை மரம் சாய்கின்றது. அதில் பூத்திருந்த பூக்களை, அதன் மேலேறாமலே, குறவர் மகளிர் நிலத்திலிருந்து கொய்து சூட்டிக் கொள்வார்’ என்பதுபட ஒரு குறுந் தொகையுண்டு.

வரைவிடை வைத்துத் தலைமகன் பொருள் வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, ‘நீ ஆற்றல் வேண்டும்’ என்ற தோழிக்கு, அவள் ‘யான் தலைவர் கருத்தை உணர்ந்தேன்; ஆயினும், நொதுமலர் வரையப் புகுவரேல் என் செய்வதென்று ஆற்றேனாயினேன்’ என்றது இப்பாடல்.

“ஒன்றே னல்லேன் ஒன்றுவன் குன்றத்துப்
 பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
 குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
 நின்றுகொய மலரும் நாடனொடு
 ஒன்றேன் தோழி ஒன்றனானே”
-குறுந். 208

இப்பாடலுக்கு இளம்பூரணர் இறைச்சிப் பொருள் கூறுகின்றார். (தொல். பொ. 34) “வரை வெதிர் கொள்ளாது தமர் மறுத்தவழித் தலைமகனோடு ஒன்றுமாறு என்னெனக் கவன்ற தோழிக்கு, உடன் போதற் குறிப்பினளாய்த் தலைமகள் கூறியது. ஆதலின் இதனுள், பொருகளிறு என்றமையால் தலைமகள் தமர், வரைவிற்கு உடன்படுவாரும் மறுப்பாருமாகி மாறுபட்டனர் என்பது தோன்றுகிறது. பொருகளிறு மிதித்த வேங்கை, என்றதனால் பொருகின்ற இரண்டு களிற்றினும் மிதிப்பது ஒன்றாகலின் வரைவுடன்படாதார் தலைமகனை அவமதித்தவாறு காட்டிற்று. வேங்கை நின்று கொய்ய மலருமென்றதனால், முன்பு ஏறிப் பறித்தல் வேண்டுவது இப்பொழுது நின்று பறிக்கலாயிற்று என்னும் பொருள்பட்டது. இதனால், பண்டு நமக்கு அரியனான தலைமகன் தன்னை அவமதிக்கவும் நமக்கு எளியனாகி அருள் செய்கிறானெனப் பொருள் கிடந்தவாறு காண்க. மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறையுயிரோடு மலர்ந்தாற் போல யானும் உளனாயினேன் என்றமையின் மெய்யுவமை போலியாயிற்று”.

நக்கினார்க்கினியர் இப்பாடலில் வரும் உவமையை உள்ளுறை உவமமாக்கிப் பொருள் கூறுகின்றார் (தொல்: அகத். 47)

‘இக்குறுந்தொகை பிறிதொன்றன் பொருட்டுப் பொருகின்ற யானையால், மிதிப்புண்ட வேங்கை நசையற வுணங்காது மலர் கொய்வார்க்கு எளிதாகி நின்று பூக்கும் நாடன் என்றதனானே, தலைவன் நுகருங் காரணத்தானன்றி வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான் எம்மை இறந்து பாடு செய்வியாது ஆற்றுவித்துப் போயினான் எனவும், அதனானே நாமும் உயிர் தாங்கியிருந்து பலரானும் அலைப்புண்ணா நின்றனம் வேங்கை மரம் போல எனவும், உள்ளத்தான் உவமங்கொள்ள வைத்தவாறு காண்க’.

ஆதலின் ஒரே குறுந்தொகைக்கு இரு பெரும் உரையாசிரியர்கள் இறைச்சிப் பொருளும், உள்ளுறை உவமப் பொருளும் கூறியுள்ளமை நுண்ணிதின் உணர்ந்து மகிழ்தற்பாலது. ஓங்கி வளர்ந்த வேங்கை மரத்தின் மேலேறிப் பூக்கொய்தல் உண்டெனினும், பூத்த வேங்கையின் அடியிலே நின்று கொண்டு மகளிர், “புலி, புலி” என்று பூசலிடுவதைப் புலவர் பெருமக்கள் கூறுவாறாயினர்.

“கருங்கால் வேங்கை இறுஞ்சினைப் பொங்கர்
 நறும்பூக் கொய்யும் பூசல்”
-மது. 296

“மன்ற வேங்கை மலர்பதம் நோக்கி
 ஏறாது இட்ட ஏமப்பூசல்”
-குறுந் 241 : 4-5

பூத்த வேங்கையைப் பார்த்துப் “புலி, புலி” என்று கூச்சலிடுகின்றாள் ஒருத்தி. ஊர் மனைகளில் இவ்வோலம் எட்டிற்று. ஆக்களை அடித்துச் செல்லப் புலி வந்ததென ஆடவர், வில்லும் கையுமாக ஓடோடி வந்தனர். புலியைக் காணவில்லை. கிலி கொண்ட குறமகளைக் கண்டு, “புலி எங்கே” என்று உசாவினர். அவள் “வேங்கைப்பூ வேண்டும்” என்றனள்.

“கிளர்ந்த வேங்கைச் சேண்நெடும் பொங்கர்ப்
 பொன்நேர்ப் புதுமலர் வேண்டிய குறமகள்
 இன்னா இசைய பூசல் பயிற்றலின்
 ஏகல் அடுக்கத்து இருள்அளைச் சிலம்பின்
 ஆகொள் வயப்புலி ஆகும் அஃதுஎனத்
 தம்மலை கெழுசீறூர் புலம்ப கல்லெனச்
 சிலையுடை இடத்தர் போதரும் நாடன்”
-அகநா 52: 2-8

மேலும் இப்பூசலைத் தங்கால் முடக்கொற்றனாரும், பெருங் கௌசிகனாரும் கூறுவதையுங் காண்போம்.

“ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி
 புலிபுலி என்னும் பூசல் தோன்ற”
-அகநா. 48 : 6-7



“தலைநாள் பூத்த பொன்னிணர் வேங்கை
 மலைமார் இடூஉம் ஏமப்பூசல்”
-மலைப. 305-306

மலைபடுகடாத்தின் இச்சீரடிகட்கு உரை வகுத்த ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘முதல் நாளிலே பூத்த பொன் போலும் கொத்தினை உடைய வேங்கைப் பூவைச் சூடுதற்கு மகளிர் “புலி புலி” என்று கூப்பிடும் ஏமத்தை உடைய ஆரவாரமும் எனவும், ‘வேங்கை வளைந்து பூவைக் கொடுத்தலின் அச்சந்தீர்த்த பூசல்’ என்றார்’ எனவும் உரை கூறியுள்ளார்.

மகளிர், பூத்த வேங்கையினடியில் நின்று “புலி புலி” என்று பூசலிடும் போது அவர்கள் பூக்கொய்தற்கு வேங்கை மரம் தாழ்ந்து கொடுக்கும் என்ற பழங் கருத்தைச் சங்க நூல்களில் வரும் ‘ஏமப் பூசல்’ என்பதற்குப் பொருள் கூறும் வாயிலாக நச்சினார்க்கினியர் முதன் முதலாகக் கூறியுள்ளமை வியந்து போற்றுதற்குரித்து.

‘வேங்கை’ என்ற சொல் வேங்கை மரத்திற்கே உரியதென்பதையும், வேங்கை பூத்திருப்பதை வேங்கை மரம் புலியைப் பெற்றெடுத்ததாகவே கூறுவதையும் செங்கண்ணார் பாடலிற் காணலாம்.

“வேங்கையும் புலி ஈன்றன”-நற். 389 : 1

வேங்கை மலர்கள் குறவர் சிறு குடிலில் வரிவரியாக உதிர்ந்து படிந்திருக்கின்றன. அதனைப் பார்த்த ஒரு யானை, புலி என்று அஞ்சியதாம். (அகநா. 12 : 9-11)

வேங்கை மரத்தடியில் சற்று நீண்ட கரும்பாறைகள் கிடக்கின்றன. அவற்றின் மேல் வேங்கை இணர்கள் விழுந்து கிடக்கின்றன. இக்காட்சியைக் கபிலர் பாடுகிறார்.

“அரும்பு அற மலாந்த கருங்கால் வேங்கை
 மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
 இரும்புலி வரிப்புறங் கடுக்கும்”
-புறநா. 202 : 18-20

யானை வேங்கையின் தழையையும், பூவையும் உணவாகக் கொள்ளும். தான் உண்பதோடு நில்லாமல், தன் கன்றோடு பெண் யானையையும் தழுவி அழைத்துச் சென்று, வேங்கையின் பெரிய கிளையை முறித்து, அதில் பூத்த பொன் போன்ற பூங்கொத்துக்களைக் கவனமாக ஊட்டும் என்பர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. (நற். 202 : 3-6)

வேங்கைப் பூவை வண்டுணா மலர் என்று கூறும் பிங்கலம். எனினும், வண்டுபடு வேங்கையின் மலரைக் கண்ணியாகச் சூடி வருகிறான் தலைவன் என்று கூறும் அகநானூறு.

“விரியினர் வேங்கை வண்டுபடு கண்ணியன்”
-அகநா. 38 : 1


கருங்களிறு ஒன்று வேங்கை மரத்தடியில் புலியுடன் பொருது வென்றது. தனது எய்ப்பு நீங்கத் தன் துதிக்கையைத் தூக்கிப் பெருமூச்சு விட்டது. இம்மூச்சுக் காற்றால் வேங்கைப் பூக்கள் சிதறிப் பாய்ந்தன. இக்காட்சி, கொல்லன் ஊது உலையில் பிதிர்ந்து எழும் நெருப்புப் பொறி பாய்வது போன்று இருந்தது. பாய்ந்த பொறிகள் பக்கத்திலிருந்த கரும்புதரில் படிந்த காட்சியோ, மின்மினிப் பூச்சிகள் தாவிப் பறந்ததை ஒத்திருந்தது என்று சித்திரம் செய்கின்றார் அகநானூற்றில் கண்ணனார் எனும் புலவர்:

“புலிப்பகை வென்ற புன்கூர் யானை
 கல்லகச் சிலம்பில் கையெடுத் துயிர்ப்பின்
 நல்லிணர் வேங்கை நறுவீ, கொல்லன்
 குருகு ஊதுமிதி உலைப்பிதிர்விற் பொங்கிச்
 சிறுபல் மின்மினிப் போலப் பலவுடன்
 மணிநிற இரும்புதல் தாவும் நாட”
-அகநா. 202 : 3-8

இங்ஙனமாகப் புலவர்கள் வேங்கை மரத்தைப் பற்றிக் கூறுவன எல்லாம் தாவரவியலுண்மைகளுக்கு ஒத்துள்ளன.

வேங்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilitionatae)
தாவரப் பேரினப் பெயர் : டீரோகார்ப்பஸ் (Pterocarpus)
தாவரச் சிற்றினப் பெயர் : மார்சூப்பியம் (marsupium)
சங்க இலக்கியப் பெயர் : வேங்கை
பிற்கால இலக்கியப் பெயர் : திமிசு, திமில், கணி
உலக வழக்குப் பெயர் : வேங்கை
தாவர இயல்பு : ஓங்கித் தழைத்து வளரும் வலிய மரம். இலையுதிர் காடுகளில் வளரும்.
இலை : கூட்டிலை; 5-7 சிற்றிலைகள். அகன்றவை; தடித்தவை. நடுவில் அகன்றும், இது மேலும், கீழும் குறுகியுமிருக்கும்.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர். கலப்பு மஞ்சரி போன்று .தோன்றும். இலைக் கோணத்தில் வளரும்.
மலர் : மஞ்சள் நிறமானது.
புல்லி வட்டம் : வளைந்த புனல் வடிவானது. 2-4-2 புறவிதழ்கள் மேலுங் கீழுமாக அமைந்திருக்கும்.
அல்லி வட்டம் : நீண்ட 5 தனித்த அகவிதழ்கள். பதாகை இதழ் அகன்று பளபளப்பாகவும், மஞ்சள் நிறமாகவும் காணப்படும் நீள் சதுரப் பிளவுபட்டிருக்கும்.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள்; இரு தொகுதியாக இருக்கும். தாதுப் பைகள் ஒரே மாதிரி மாதிரியானவை.
சூலக வட்டம் : ஒரு செல் உடையது. சூல்தண்டு உள் வளைவானது; சூல்முடி குல்லாப் போன்றது. 2-6 சூல்கள்.
கனி : உலர் கனி. பாட் (Pod) எனப்படும். தட்டையானது. இரு பக்கத்திலும் சிறகு போன்ற அமைப்பானது. ஒரு விதையே உள்ளது.

இம்மரம் 4,500 அடி உயரமான மலைப்பாங்கில் இலையுதிர் காடுகளில் தழைத்துக் கிளைத்து ஓங்கி வளரும். இதன் தண்டு அடிமரம் மிக வலிமையானது. கட்டிட வேலைக்குப் பயன்படுவது. பழுப்பு மஞ்சள் நிறமானது. இம்மரத்தில் நீண்டு, அழகிய கோடுகள் காணப்படும். இதில் செந்நிறப் பிசின் (Red-Gum) உண்டாகும். இது மருந்துக்கு உதவும். இம்மரம் பூத்திருக்கும் போது இதன் தோற்றப் பொலிவு மிக அழகானது. இதன் காய்களை முள்ளம் பன்றிகள் தின்று விடுவதால் இம்மரம் இயற்கையில் அருகி வருகிறது.

 

பிண்டி–செயலை–அசோகு
சராக்கா இன்டிகா (Saraca indica, Linn.)

சங்கப் புலவர்களால், பிண்டி எனவும், ‘செயலை’ எனவும் கூறப்படும் அசோகு என்பது ஓர் அழகிய மரம்; என்றும் தழைத்திருப்பது; செவ்விய தளிர்களை உடையது; செக்கச் சிவந்த மலர்களை உடையது. கொத்துக் கொத்தாகப் பூப்பது; தென்னிந்தியாவில் பங்களூர் ‘லால்பாக்’ தாவரத் தோட்டத்தில் அருமையாக வளர்க்கப்படுகிறது.

சங்க இலக்கியப் பெயர் : பிண்டி
பிற்கால இலக்கியத்தில் வேறு பெயர் : செயலை
பிற்கால இலக்கியப் பெயர் : அசோகு
உலக வழக்குப் பெயர் : அசோகமரம்
தாவரப் பெயர் : சராக்கா இன்டிகா
(Saraca indica, Linn.)

பிண்டி–செயலை–அசோகு இலக்கியம்
சங்க இலக்கியங்களில் கூறப்படும் பிண்டி, செயலை என்பன அசோகு என்ற அழகிய மரத்தைக் குறிப்பனவாகும். ‘அசோகு’ என்ற சொல் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. கபிலர் குறிஞ்சிப் பாட்டில் பிண்டி, செயலை என்ற இரு சொற்களையும் ஆளுகின்றார்.

“பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி”-குறிஞ். பா. 88
“எரிஅவிர் உருவின் அம்குழைச் செயலைத்
 தாதுபடு தண்ணிழல் இருந்தன மாக”
-குறிஞ். 104-105

(குழை-தளிர்)

திருமுருகாற்றுப் படையில் நக்கீரரும் இவ்விரு பெயர்களையும் குறிப்பிடுகின்றார்.

“வண்காது நிறைத்த பிண்டி ஒண்தளிர்
 நுண்பூண் ஆகம் திளைப்ப ”
-திருமுரு. 31-32

“. . . . . . . . . . . . . . . . . . . . . . . . வெவ்வரைச்
 செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்”

-திருமுரு. 206-207


மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார், பிண்டியைக் குறிப்பிடுகின்றார்.

“சினைதலை மணத்த சுரும்புபடு செந்தீ
 ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவில்”

-மதுரைக். 700-701


இவற்றிற்கெல்லாம் உரை கூறிய நச்சினார்க்கினியர், திருமுரு காற்றுப்படையில் வரும் ‘பிண்டி’ என்ற ஓரிடத்தில் மட்டும் ‘பிண்டியினது’ என்றாராயினும், ஏனைய விடங்களிலெல்லாம் ‘பிண்டி’, ‘செயலை’ என்ற சொற்களுக்கு, ‘அசோகு’ என்றே உரை கூறியுள்ளார். இதனுடைய ஆங்கிலப் பெயர் அசோகா மரம் (Asoka Tree) என்பதாகும். இவற்றையறியாத இற்றை நாளைய விரிவிலா அறிவினர் எல்லாம் போலியால்தியா லாஞ்சிபோலியா என்ற நெட்டிலிங்க மரத்தை அசோகு என்று தவறாகக் கூறிப் பரப்பி வருவதோடன்றி, களஞ்சியங்களிலும் எழுதியுள்ளனர்.

‘பிண்டி’ எனப்படும் இவ்வசோக மரம் மலைப்பாங்கில் அழகு பொருந்த உயர்ந்து வளருமென்பர் கூற்றங்குமரனாரும், கபிலரும்.

“மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த
 செயலை அந்தளிர் அன்ன . . . . . .”
-நற். 244 : 6-10

“சிலம்பின் தலையது செயலை”-ஐங். 211

மேலும், புலவர் பெருமக்கள் இதன் அடிமரம் சிவப்பு நிறமுள்ளதெனவும், பல கிளைகளையுடையதெனவும், கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடுவர் எனவும், கிளைகள் செவ்விய அழகிய இளந்தளிர்களையும் செவ்விய இணர்களையும் உடையன எனவும் கூறுவர்.

“செவ்வரைச் செயலை”-திருமுரு. 206

“ஊட்டி யன்ன ஒண்டளிர்ச் செயலை
 ஓங்குசினைத் தொடுத்த ஊசல் பாம்புஎன”
-அகநா. 68 : 5-6

“. . . . . . . . . . . . . . . . . . . . அந்தளிச் செயலைத்
 தாழ்வில் ஓங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று
 ஊசல்மாறிய மருங்கும்”
-அகநா. 38 : 6-8

இம்மரம் இப்போது பங்களூர் ‘லால்பாக்’ தாவரப் பூங்காவில் அருமையாக வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் அடிமரம் செம்மை கலந்த பழுப்பு நிறமானது. இதன் இலை, பல்லலகுடை கூட்டிலையாகும். சிற்றிலைகள், ஆறு முதல் பன்னிரண்டு வரையில் காணப்படுகின்றன. ஒவ்வொரு பசிய சிற்றிலையும், குத்துவாள் வடிவினதாய் 7-18 செ. மீ. நீளமானது. தோல் போல் சற்றுத் தடித்துமிருக்கும்.

இதன் தளிர் அழகிய சிவப்பு நிறமானது. இதனைச் செந்நிறம் ஊட்டப்பட்ட ஒளி வீசும் தளிர் எனவும், பவளச் சிவப்பானது எனவும், இத்தளிரை ஆடவரும், மகளிரும் காதில் செருகிக் கொள்வர் எனவும், இதனை மந்தி உணவாகக் கொள்ளும் எனவும் கூறுவர்.

“ஊட்டியன்ன ஒண்தளிர்ச் செயலை”-அகநா. 68:5

“வண்காது நிறைத்த பிண்டி ஒண்தளிர்
 நுண்பூண் ஆகம் திளைப்ப”
-திருமுரு. 31-32

“அழல் ஏர் செயலை ஆம்தழை”- அகநா. 188 : 11

“சாய்குழை பிண்டித் தளிர்காதில் தையினாள்”
-பரிபா. 11 : 95

“அத்தச் செயலைத் துப்புஉறழ் தண்தளிர்
 புன்தலை மந்தி வன்பறழ் ஆரும்”
-ஐங். 273 : 1-2

(அத்தம்-சிவந்த)

பிண்டியின் மலர்கள் மிகச் சிவந்த நிறமுடையவை. இவை மரக்கிளைகளில் எல்லாம் கொத்துக் கொத்தாகப் பூக்கும். இவ்வுண்மையைப் புலவர்கள் அங்ஙனமே கூறியுள்ளனர். இதன் இணரிலுள்ள மலர்களில் சுரும்பு மொய்க்கும் என்றும் கூறுவர்.

“சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ
 ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவில்”

-மதுரைக். 700-701

“சினையெலாம் செயலை மலர
-பரிபா. 15 : 31

“எரிநிற நீள் பிண்டி இணர் எல்லாம்
 வரிநிற நீள் வண்டர் பாட”
[81]

மேலும் திருமங்கையாழ்வார், ஒரு கற்பனை செய்கின்றார். ‘நெருப்பை ஒத்து மலர்ந்த இம்மலர்களைப் பார்த்த வண்டினம் மரம் எரிவதாக எண்ணி அஞ்சும்’ என்கிறார்.

“தாதுமல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற
 தழல் புரை எழில் நோக்கி
 பேதை வண்டுகள் எரிவன வெருவரும்”
[82]

செக்கச் சிவந்த இதன் மலர்களையும், செவ்விய இதன் தளிர்களுடன் காதில் செருகி அணிவர் என்பர் புலவர்கள்:

“. . . . . . . . . . . . . . . . . . . ஞாலச் சிவந்த
 கடிமலர்ப் பிண்டி தன்காதில் செரீஇ”

-பரிபா. 12:87-88

“. . . . . . . . . . . . . . . . . . . . . . . செந்தீ
 ஒண்பூம் பிண்டி ஒருகாது செரீஇ ”

-குறிஞ். 104-105


மக்களுக்கன்றி தெய்வத்திற்கும் இம்மலர் உகந்தது போலும். திருமுருகாற்றுப் படையில் முருகப் பெருமான், “செயலைத் தண்தளிர் துயல்வரு காதினன்” (206) என்பர் நக்கீரர். மற்று, மகளிரது உடல் நிறத்திற்கு இத்தளிர் உவமையாகக் கூறப்படுகின்றது.

“செயலை அந்தளிர் அன்ன என்
 மதனில் மா மெய் ”
-நற். 244 :10-11

இம்மரத்தின் தழையை மகளிர் தழையுடையாக்கி அணிந்து மகிழ்வர். தலைவன், இதன் தழையுடையைத் தலைவிக்கு வழங்குவதுமுண்டு. இங்ங்னம், இதன் தளிரும், தழையும் கொய்யப் பட்டதால் மரமே மொட்டையாகி விட்டதென்றார் ஒரு புலவர்.

அசோகு
(Saraca indica)

“திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
 செயலை முழுமுதல் ஒழிய ”
-குறுந் 214 : 4-5

இனி. இம்மரம் இளவேனிற் காலத்தில் பூக்கும் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது.

“மைந்தார் அசோகம் மட லவிழ் கொந்தார்
 இளவேனில் வந்தது”
[83]

இப்பிண்டியின் மலரைச் சுனையில் வளரும் நீலத்துடன் சேர்த்துப் பாடும் இரு பரிபாடல்கள் உள (15 : 30-31, 11 : 95-96). பிண்டியின் மலரைப் போன்று, இதன் தளிரும் நீல மலருடன் பிணைக்கப்படும் என்பர். ‘வையை ஆற்றில் மகளிர் நீராடினர். நீரோட்டத்தில் ஒப்பனைப் போட்டியும் நேர்ந்தது. ஒருத்தி நீல மலரைக் காதில் செருகிக் கொண்டு, மற்றொருத்தியின் முன்னே காட்சி தந்தாள். இவள், உடனே செயலையின் சிவந்த தளிரைத் தன் காதில் செருகி, எழில் காட்டினாள். செயலைத் தளிரின் செம்மை நிறம், நீல மலரில் எதிரொளித்து, அதன் நீல நிறத்தையும் பகலவன் நிறம் போலச் சிவப்பாக்கி விட்டதாம்’.

“சாய்குழைப் பிண்டித்தளிர் காதில் தையினாள்
 பாய்குழை நீலம் பகலாகத் தையினாள்”

-பரிபா. 11 : 95-96


சமண சமயத்தில் அருக தேவனை, பூமலி அசோகின் புனை நிழலில் அமர்ந்தவன் என்பர். மேலும், காமதேவன் கொண்ட ஐம்மலர்க் கணைகளில் அசோக மலரும் ஒன்றாம். காமனால் எய்யப்பட்டால், கவர்ச்சி ஊட்டும் அசோகு துயர் செய்யும் என்றும், மகளிர் உதைத்தால் அசோகு மரம் மலரும் என்றும் கூறுவர்.

வேனிற்காலத்தில் மலர்ந்த இம்மர நிழலில், மலர்கள் உகுத்த தாதுப் பாயலில் பூக்கொய்யச் சென்ற மகளிர் தங்கியிருத்தலைக் கபிலர்,

“தாதுபடு தண்ணிழல் இருந்தனமாக”-குறிஞ். 106

என்று மிக அழகொழுகக் கூறுகின்றார். இம்மலரின் மணத்தாலும்,

அசோகு
(Saraca indica)

செந்நிற அழகாலும் ஈர்க்கப்பட்ட வண்டினம் பிற மகரந்தச் சேர்க்கைக்குத் துணை செய்யும் என்பர்.

இத்துணைச் சிறப்பிற்றாகிய அசோக மரத்தைச் சராக்கா இன்டிகா (Saraca indica, L.) என்பர் தாவர நூலில். இந்திய நாட்டில் பெரிதும் காணப்படும் சிறப்புப் பற்றியே இதன் சிற்றினப் பெயர் இன்டிகா (indica) எனப்பட்டது. இது புளி, கொன்றை, ஆவாரை முதலியவற்றைக் கொண்ட சிசால்பினாய்டியே (Caesalpinoideae) என்ற தாவரத் துணைக் குடும்பத்தைச் சார்ந்தது. சராக்கா (Saraca) என்ற இப்பேரினம், ஆறு சிறு இனங்களை உடையதாய், இந்திய நாட்டில் நடுவிலிருந்து கிழக்கு இமயம் முதலாகத் தென் தமிழ் நாடு வரையிலும், ஜாவா, சுமத்திரா முதலிய கிழக்கிந்தியத் தீவுகளிலும், சீலங்கா, மலேயா, பர்மா முதலிய நாடுகளிலும் செழித்து வளர்கிறதென்பர். தமிழ் நாட்டில் சராக்கா என்ற பேரினத்தில் ஒரு சிற்றினமான இன்டிகா எனப்படும் ‘பிண்டி’ மட்டும் வளர்கின்றதென்பர் ‘காம்பிள்’.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை: 2n=24 எனக் கண்டு அட்கின்சன் (1951) கூறுவர். இம்மரம் 2000 அடி உயரமுள்ள மலைப்பாங்கில் கிளைத்து வளருமென்பர். இதன் அடி மரம் செவ்விய பழுப்பு நிறமானது. மலர் அழகுக்காக இம்மரம், தாவரத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது.

பிண்டி–செயலை–அசோகு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே-அகவிதழ்கள் பிரிந்தவை.
தாவரக் குடும்பம் (துணைக்குடும்பம்) : சிசால்பினாய்டியே (Caesalpinoideae)
தாவரப் பேரினப் பெயர் : சராக்கா (Saraca)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
ஆங்கிலப் பெயர் : அசோகா மரம் (Asoka Tree)
தாவர இயல்பு : மரம். தழைத்துக் கிளைத்துப் பரவி உயர்ந்து வளரும்.
தாவர வளரியல்பு : 2000 அடி உயரமான மலைப் பாங்கிலும் வளர்வது. மீசோபைட்.
இலை : 6-12 சிற்றிலை கொண்ட கூட்டிலை.
சிற்றிலை : பசியது. குத்துவாள் வடிவினது 7-18 செ.மீ. நீளமானது. தோல் போல் தடித்திருக்கும்.
தளிர் : மிக அழகிய செந்நிறமான தளிர்கள். கூம்பு போன்ற இலைச் செதில்கள் உள.
மஞ்சரி : பகட்டானது. காரிம் என்ற நுனி வளராப் பூந்துணர்.
மலர் : அழல் நிறச் செம்மையானது. கிளையெல்லாம் கொத்துக் கொத்தாகப் பூக்கும். மலர்ச் செதில்கள் விரைவில் உதிர்வன. சிவந்த மலரடிச் சிறு செதில்கள் சிறிது காலம் ஒட்டியிருக்கும்.
புல்லி வட்டம் : அல்லியைப் போன்று சிவந்த 4 இதழ்கள். அடியில் இணைந்த நீண்ட குழல் வடிவாக இருக்கும். குழலுக்குள் பிளவு பட்ட வட்டத் தட்டுள்ளது. மேலே இதழ்கள் சற்று நீண்டு அடியிதழ் தழுவியிருக்கும்.
அல்லி வட்டம் : அல்லியிதழ்கள் இல்லை.
மகரந்த வட்டம் : 7 மென்மையான தாதிழைகள் நீளமானவை. தாதுப் பைகள் சுழலும் அமைப்புடையன. நீள வாக்கில் பிளவுபட்டுத் தாது வெளியாகும்.
சூலக வட்டம் : வட்டத் தண்டில் ஒட்டியது. பல சூல்கள். சூல் தண்டு நீண்ட இழை போன்றது. சூல்முடி சிறிய குல்லாய் போன்றது.
கனி : வெடியாக் கனி. தட்டையானது. தோல் போல் தடித்த வலிய உறையுடையது.
விதை : அடி குறுகிய முட்டை வடிவானது. தட்டையாக அழுந்தியது. ஆல்புமின் இல்லாதது.

இம்மரம் செவ்விய தளிர் விட்ட போதும், மலர்ந்த போதும் மிக அழகாகவும், எடுப்பாகவும் காணப்படும். அடி மரம் சிவந்த பழுப்பு நிறமானது. மிருதுவான, மிக வலிய, என்றும் தழைத்துள்ள மரம். தென் கன்னடம், மைசூர், திருவாங்கூர் மலைப் பகுதிகளில் வளர்கிறது என்பர். இளவேனிற் காலத்தில் பூத்து, நல்ல நிழல் தரும். இம்மரங்களைக் கொண்ட அசோக வனத்தில், இம்மரத்தினடியில்தான் இராவணன் கவர்ந்து சென்ற இராமனது மனைவியாகிய சீதையைச் சிறை வைத்தான் என்று கூறும் இராம காதை.

 

ஆத்தி-ஆர்
பாகினியா ரசிமோசா (Bauhinia racemosa, Lam.)

குறிஞ்சிப் பாட்டில் (67) “அடும்பமர் ஆத்திநெடுங் கொடி அவரை” என்ற அடியில் இடம் பெற்ற ‘ஆத்தி’ என்பது ஒரு சிறு மரம். இதன் மலர் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : ஆத்தி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : ஆர்
பிற்கால இலக்கியப் பெயர் : காட்டாத்தி, திருவாத்தி, ஆத்தி
உலக வழக்குப் பெயர் : ஆத்தி, மந்தாரை, காட்டாத்தி
தாவரப் பெயர் : பாகினியா ரசிமோசா
(Bauhinia racemosa, Lam.)

ஆத்தி-ஆர் இலக்கியம்
முடிமன்னர் குடிகளில் முன்தோன்றி மூத்த குடியில் முதற்குடி சோழர் பெருங்குடி. சோழமன்னர் தம் குடிப்பூ ‘ஆத்தி’. இதனைக் குறிஞ்சிப் பாட்டில் மட்டும் காணலாம்.

“அடும்பமர் ஆத்தி நெடுங்கொடி அவரை-குறிஞ். 67

பிற சங்கவிலக்கியங்களில் அதிலும் புறநானூற்றில் ஆத்தி மலர் ‘ஆர்’ என்று குறிப்பிடப்படுகின்றது. இதில் மூவேந்தர்களின் குடி மலர்களும் கூறப்படுகின்றன.

“வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
 மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
 கொற்ற வேந்தர் வரினும்
-புறநா. 338:6-8

(போந்தை-பனை)

மூவேந்தரும் தத்தம் குடிப் பூவை உரிமை மலராக மிக மதித்தனர்; போற்றினர்; குடிப்பெருமை கொண்டனர். இவ்வுரிமை தனி உரிமையாகாமல் குடிக்குரிய பொது உரிமையாகவே இருந்தது. ஒரு குடியைச் சேர்ந்த மன்னர் பிரிந்தாலும், பகைத்தாலும் குடிப் பூவை விட்டாரிலர்; மாற்றிக் கொண்டாரிலர். சோழன் நலங்கிள்ளியும், சோழன் நெடுங்கிள்ளியும் பிரிந்தனர். பகைத்தனர்; அந்நிலையிலும், இரு பெருஞ்சோழ மன்னர்களும் தமக்குரிய ஆத்தி மலரைச் சூடிக் கொண்டு போருக்கு எழுந்தனர். சோழன் நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டான். சோழன் நெடுங்கிள்ளி அடைபட்டிருந்தான். இவ்விரு சோழவேந்தர்களையும் சந்து செய்விக்கத் துணிந்தார் புலவர் கோமான், கோவூர் கிழார். உறையூர் முற்றியிருந்த நலங்கிள்ளியை நோக்கிக் கூறுகிறார்.

“சோழவேந்தே! நின்னொடு பொருபவன் கண்ணியில் பனையினது வெளிய தோடில்லையாதலின் அவன் சேரனும் அல்லன்; கரிய கோட்டினை உடைய வேம்பின் தாரணியாமையின் அவன் பாண்டியனும் அல்லன். நின்னுடைய கண்ணியும் ஆத்திப் பூவாற் கட்டப்பட்டது. நின்னுடன் பொர எழுந்தவன் கண்ணியும், ஆத்தி மலரால் செறிக்கப்பட்டுள்ளது. இருவரும் வெல்லுதல் என்பதும் இயலாது. ஒருவர் தோற்பினும், தோற்பது ஆத்தி சூடிய நுங்குடியன்றோ? அச்செயல் நுங்குடிக்குத் தக்கதன்று. ஆகவே, நீவிர் போரிடுதல் தகாது” என்று கூறி இருவரையும் போரிடாமல் சந்து செய்தார்.

“இரும்பனை வெண்தோடு மலைந் தோனல்லன்
 கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
 நின்னகண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
 பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே
 ஒருவீர் தோற்பினும் தோற்ப துங்குடியே
 இருவீர் வேறல் இயற்கையுமன்றே அதனால்
 குடிப்பொருள் அன்றுநும் செய்தி, கொடித்தேர்
 நும்மோ ரன்ன வேந்தர்க்கு
 மெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகலே”
-புறநா. 45

காலப்போக்கில், ‘ஆர்’ ஆட்சி அருகி, ‘ஆத்தி’ ஆட்சி பெருகிற்று. உலக வழக்கில் இரண்டும் உலவின. ஆத்திச் சிறு மரம், காட்டாத்தி எனவும் திருவாத்தி எனவும் கூறப்படும்.

சேக்கிழார் இதனைத் திருவாத்தி என்பர். திருச்செங்காட்டாங்குடித் திருக்கோயிலின் திருமரம் காட்டாத்தி எனப்

ஆர்—ஆத்தி
(Bauhinia tomentosa)

படும். அவ்வையார் ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை’ என்றார். ‘ஆர்புனை சடையோன்’ என்று கூறும் புட்பவிதி (54 : 1). ஆத்திப் பூ, கண்ணியாகவும் சூடப்படும். மாலையாகவும் புனையப்பட்டு அணியப்படும்; ஆத்தி மரத்தில் அம்பு கொண்டு, நார் உரித்துப் பயன்படுத்தினர் என்றும் அறியப்படுகிறது.

“ஆர்நார்ச் செறியத் தொடுத்த கண்ணி ”-புறநா. 81 : 3-4

“அம்பு கொண்டறுத்த ஆர்நார் உரிவையின்
 செம்பூங்கரந்தை புனைந்த கண்ணி”
-அகநா. 269 : 10-11

ஆத்தி மரக்காடு நிறைந்திருந்தமையின் ஆர்க்காடு மாவட்டங்கள் தோன்றலாயின. ஆர்க்காட்டைத் தலைநகரமாகக் கொண்டு, முற்காலத்தில் சோழர் குலக் குறுநில மன்னர் ஆண்டனர் என்ப.

“படுமணி யானைப் பசும்பூண் சோழர்
 கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்”

-நற். 227 : 5-6

ஆர்க்காட்டில் வாழ்ந்த சோழர் குல வீர மன்னன், வீர இளைஞரிடம் செல்வாக்குப் பெற்றவனாக விளங்கினான். அவன் பெயர் அழிசி. அவனது மகன் பெயர் சேந்தன். இருவருடைய காலத்திலும், ஆர்க்காடு வளம் பெற்று, எழிலோடு விளங்கியது. வனப்பு வாய்ந்த நங்கையின் எழில் நலத்திற்கு, வளமான ஊரை உவமை கூறும் மரபில் இவ்வூரும் உவமையாக்கப்பட்டது:

“ஒள்வாள் இளையர் பெருமகன்
 அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
 பழிதீர் மாண் நலம் தொலைவன கண்டே”

-குறுந். 258 : 6 - 8

ஆர் என்னும் பெயரால் பெற்ற மற்றோர் ஊர்: ஆர் + ஊர்: ஆருர். இவ்வூர் தெய்வத் தொடர்பினால் திருவாரூர் ஆயிற்று. இதனை, மனுச் சோழன் காலத்தில் சோழர் தலைநகர் என்ப.

ஆத்திமரத்தைத் தாவரவியலார் பாகீனியா ரசிமோகா (Bauhinia racemosa) என்றழைப்பர். இது சீசல்பினாய்டியே (Ceasalpinoideae) என்னும் துணைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இத்துணைக் குடும்பத்தில் பல பிரிவுகள் உள்ளன (tribe). அவற்றுள் ஒன்று பாகினியே (Bauhineae) என்பது. இதில் 37 பேரினங்கள் உள்ளதாக ‘ஹூக்கர்’ அறிவித்துள்ளார். ‘காம்பிள்’ என்பவர் 10 பேரினங்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகக் குறிப்பிடுவர். இவற்

ஆர்—ஆத்தி
(Bauhinia tomentosa)

றுள், ‘ஆத்தி’ என்னும் பெயரில் குறிப்பிடத்தக்க மூன்று சிறு மரங்கள் தமிழ் நாட்டில் வளர்கின்றன. இவை மூன்றும் ஒரே மாதிரியானவை. கபிலர் கூறும் ஆத்தி அல்லது கோவூர் கிழார் கூறும் ‘ஆர்’ என்பதைத் தாவரவியலில் பாகினியா பர்பூரியா (Bauhinia purpurea) என்று கருத இடமுண்டு. ‘மந்தாரத்தில் தாரம் பயின்று’ என்பது இதுவே என்பர். இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. இதனை ‘மந்தாரை’ என்றும் கூறுவர்.

இதனைக் கொக்கு மந்தாரை என்றும், வெள்ளை மந்தாரை என்றும், கலைக் களஞ்சியம் (Vol. II : P 1124) குறிப்பிடுகிறது. இதனைப் பாகீனியா பர்பூரியா (Bauhinia purpurea) என்றழைப்பர். ஞானசம்பந்தப் பெருமான் ‘கொக்கின் இறகினொடு வன்னி புக்கசடையார்’ என்று கூறும் கொக்கு மந்தாரை என்பது இதுவே என்பர். இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. இது ‘மந்தாரம்’ எனவும், ‘திருவாத்தி’ எனவும், ‘திருவாட்சி’ எனவும் வழங்கப்படும்.

இதைப் போலவே, அகவிதழ்களின் அடிப்பாகம் மஞ்சள் நிறமாகவும் மேற்பாகத்தில் சிறிய செம்மை நிறப் பகுதியும் கொண்ட இன்னுமொரு ஆத்தி காணப்படுகின்றது. இதற்குத் தாவரவியலில் பாகீனியா டொமேன்டோசா (Bauhinia tomentosa) என்று பெயர் இதனை ஒரு சிலர் ‘காட்டாத்தி’ என்பர். இது ஆங்கிலத்தில், ஹோலி மௌன்டன்-எபனி (Holy mountain-ebony) எனப்படும். இன்னொரு ஆத்தி மரம் திருக்கோயில்களில் வளர்க்கப்படுகின்றது. இதன் பூக்கள் கருஞ்சிவப்பு நிறமானவை. இதனைப் பாகினியா ரசிமோசா (Bauhinia racemosa) என்றழைப்பர். இதற்குப் ‘பர்பிள் பாகீனியா’ என்ற பெயரும் உண்டு.

ஆத்தி—ஆர் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்பெல்லேட்டா
தாவரக் குடும்பம் : சீசல்பினாய்டியே (Caesalpinoideae)
தாவரப் பேரினப் பெயர் : பாகீனியா (Bauhinia)
தாவரச் சிற்றினப் பெயர் : ரெசிமோசா (гaсеmosа)
தாவர இயல்பு : சிறு மரம். கோணல் மாணலாக வளரும்
தாவர வளரியல்பு : மீசோபைட்

ஆர்—ஆத்தி
(Bauhinia tomentosa)

இலை : இரண்டு சிற்றிலைகள் கொண்ட கூட்டிலை. இரண்டும் அடியில் ஒட்டியிருக்கும்.
இலைக்காம்பு : 15 மி.மீ. முதல் 22 மி.மீ.நீளமானது.
சிற்றிலை : 6 செ. மீ. முதல் 8 செ. மீ. நீளம். 4.5 முதல் 6 செ.மீ. அகலம்.
இலை நரம்பு : கையன்ன விரி நரம்புகள் இலை நுனி வரையில்.
இலையடிச் செதில் : 2 சிறியவை, முதிரு முன்னர் உதிர்ந்து விடும்.
மஞ்சரி : நுனி வளர்ந்த பூந்துணர் உச்சியில் கலப்பு மஞ்சரியாக இருக்கும்.
மலர் : வெளிர் மஞ்சள் நிறமானது. ஐந்தடுக்கானது. இருபக்கச் சமச் சீரானது. பூவடிச் செதில்களும் பூவடிச் சிறு செதில்களும் உண்டு.
புல்லி வட்டம் : ஐந்து பசிய மடல்கள் பற்கள் போன்றிருக்கும்.
அல்லி வட்டம் : 5 மடல்கள், சற்றுச் சமமில்லாமலிருக்கும். நேராகக் காணப்படும். திருகு இதழமைப்பு.
மகரந்த வட்டம் : 5 மகரந்தத் தாள்கள், மகரந்தப் பைகள் சுழல் அமைப்புடையன. நீளவாக்கில் வெடிக்கும்.
சூலக வட்டம் : சூற்பை காம்புடனிருக்கும். பல சூல்களை உடையது. சூல்தண்டு குட்டையானது. இழை போன்றது.
கனி : தட்டையானது: உட்புறம் தடுப்புகள் உடையது.
விதை : முட்டை வடிவானது; முளை சூழ்தசை கொண்டது.

இம்மரம். இந்தியாவில் பஞ்சாப் முதல் இலங்கை வரையில் வளர்கிறது.சீனா, மலேயா நாடுகளிலும் காணப்படுகிறது.

 

ஆர்—மந்தாரம்
பாகினியா பர்பூரியா (Bauhinia purpurea, Linn.)

சங்க இலக்கியங்கள் கூறும் ‘ஆர்’ என்பது ‘ஆத்தி’ மரமாகும். இதில் ‘திருவாத்தி’ எனவும், ‘காட்டாத்தி’ எனவும் இருவகையுண்டு. திருவாத்தியைப் பிற்கால இலக்கியங்கள் ‘மந்தாரம்’ என்றும் ‘திருவாட்சி’ என்றும் கூறுகின்றன. இது ஒரு சிறு மரம்; வெளிர் மஞ்சள் நிறமான மணமுள்ள பூக்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : ஆர், ஆத்தி
பிற்கால இலக்கியப் பெயர் : மந்தாரம்
உலக வழக்குப் பெயர் : திருவாத்தி, திருவாட்சி, கொக்கு மந்தாரை, வெள்ளை மந்தாரை, மந்தாரை.
தாவரப் பெயர் : பாகினியா பர்பூரியா
(Bauhinia purpurea, Linn.)

ஆர்—மந்தாரம் இலக்கியம்
மந்தாரம், கற்பகம். சந்தானம், அரிசந்தானம், பாரிசாதம் எனும் ஐந்தும் தேவருலகத்திலிருந்து பெறப்பட்டவை என்று புராணங்கூறும். கற்பகத்தை, உத்தரகுருவிலிருந்து கொணர்ந்தார் என்று உரைக் குறிப்பெழுதுகின்றார்.ஆசிரியர் நச்சினார்க்கினியர் [84]. கண்ணகிக்குக் கோயில் கட்ட வேண்டிக் கல்லெடுக்க வஞ்சினம் கூறும் செங்குட்டுவன் ‘கல் தாரான் எனில் அவன் மந்தாரமொடு, விறல் மாலை சூடுவதைப் பார்க்கிறேன்’ என்கிறான்.

“அலர் மந்தாரமோடு ஆங்குஅயல் மலர்ந்த
 வேங்கையொடு தொடுத்த ஓங்குவிறல் மாலை”
[85]

ஆர்—மந்தாரம்
(Bauhinia purpurea)

முடிமன்னர்கள் தமக்குரிய பூக்களைச் சூடுவர் எனினும், நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் தனக்குரிய வேப்பம் பூவையன்றி, மந்தார மலர்த் தாரைச் சூடும் விருப்பினன் என்பர்:

“மண்டா னிறைந்த பெரும்புகழ் மாறன்
 மந்தா ரமெனும் தண்டாரன்”
[86]

கரிகாற்சோழன், கண்ணுக்கு அழகு நிறைந்த ஆத்தி மாலையைச் சூடியவன் என்பர் முடத்தாமக் கண்ணியார்.

“கண்ணார் கண்ணி கரிகால் வளவன்”-பெரும். 148

‘மந்தாரம்’, இந்திரனுக்கு மாலையாகுமென்றும், காட்டு மந்தாரை எனப்படும் ‘காட்டு ஆத்தி’ இறைவனுக்குரியதென்றும் கூறுவர்.

“ஆத்திசூடி அமர்ந்த தேவனை”

‘கொக்கு மந்தாரை’ (கொக்கிறகு) என்பது வெள்ளை மந்தாரம் ஆகும்.

‘வெள்ளை மந்தாரம், முல்லை’ என்றார் பிறரும்.[87] இம்மலர் மாலையில் வண்டு ‘காந்தாரம்’ எனும் இசையை முரலும் என்பர் திருத்தக்க தேவர்.[88]

மணிவாசகர், “விரையார் நறவம் ததும்பும் மந்தாரத்தில்
தாரம் பயின்று மந்தம் முரல்வண்டு”

என்றிசைப்பர். [89]

இங்ஙனமெல்லாம் சிறப்பிக்கப்படும் மந்தாரம் ஒரு சிறு மரம் ஆகும். அந்தி மந்தாரை எனப்படும் அந்தி மல்லிகைச் சிறு செடியாதலின் மந்தாரமாதற்கில்லை. ஆகவே ‘காட்டு ஆத்தி’, ‘திருவாத்தி’ என்று கூறப்படும். ‘ஆர்’ என்னும் ஆத்தி மரத்தைக் காடாகக் கொண்ட தென்னார்க்காட்டிலே, இத்திருவாத்தியை, ‘மந்தாரை’ என்று கூறுகின்றனர். இம்மலர், வெளிர் மஞ்சள் நிறமானது. இம்மரம், தாவரவியலார் கூறும் பாகினியா பர்பூரியாவாக இருக்கக் கூடும் என்று துணிய முடிகிறது. இதனை வலியுறுத்துமாப் போல், காம்பிள் என்பவர் பாகினியா பர்பூரியா (Bauhinia purpurea, Linn.)என்னும் இச்சிறு மரத்தை ‘மந்தாரை’ எனத் தமிழில் வழங்குவர் என்று கூறுகின்றார்.

ஆர்—மந்தாரம்
(Bauhinia purpurea)

ஆர்—மந்தாரம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம். அல்லி விரிந்தது.
தாவரத் தொகுதி : காலிசிபுளோரேயில் ரோசேலீஸ் (Rosales)
தாவரக் குடும்பம் : சீசல் பினியே (Caesalpinieae)
தாவரப் பேரினப் பெயர் : பாகினியா (Bauhinia)
தாவரச் சிற்றினப் பெயர் : பர்பூரியா (purpurea)
தாவர இயல்பு : மீசோபைட்
இலை : மிக அகன்றது; இரு நீண்ட சிற்றிலைகளும் அடி ஒட்டி இருக்கும்.
மஞ்சரி : தனி மலர் அல்லது கலப்பு மஞ்சரியாகக் கிளை துனியில் உண்டாகும்.
மலர் : வெளிர் மஞ்சள் நிறமானது, நறுமணமுள்ள, சற்று நீளமானது. ஐந்தடுக்கானது..அகவிதழ்கள் ஒரே அளவுள்ளவை. இருபக்கச் சமச்சீரானது.
புல்லி வட்டம் : 5 சிறு விளிம்புகள் பசுமையானவை.
அல்லி வட்டம் : 5 நீளமான ஒரே மாதிரியானவை. மேல் இதழ் உட்புறமானது.
மகரந்த வட்டம் : பொதுவாக 10 இருக்கும். இவை அருகிப் போய் ஒன்று மட்டும் காணப்படும்.
சூலக வட்டம் : ஒரு சூலிலைச் சூலகம். பல சூல்கள்.
சூல் தண்டு : மெல்லியது: குறுகியது சூல்முடி.
கனி : வெடியாத உலர்கனி, பட்டையானது.
விதை : முட்டை வடிவானது. ஆல்புமின் உள்ளது.

இச்சிறு மரம் மலருக்காகக் கோயில்களிலும், அழகுக்காகப் பூந்தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதனைத் திருவாத்தி என்றும், வெள்ளை மந்தாரை என்றும் கூறுவர்.

 

ஆவிரை
காசியா ஆரிகுலேட்டா (Cassia auriculata, Linn.)

கபிலர் ‘விரிமலர் ஆவிரை வேரல் சூரல்’ (குறிஞ். 71) என்று ஆவிரையைக் குறிப்பிடுவர். ‘ஆவிரை’ என்பதற்கு, நச்சினார்க்கினியர் ‘ஆவிரம்பூ’ என்று பொருள் கண்டார். இதனை ‘ஆவிரம்’ எனவும், ‘ஆவாரை’ எனவும் கூறுவர். இது ஒரு புதர்ச் செடி. ஓரிரு ஆண்டுகள் வாழும். மலர்கள் மஞ்சள் நிறமானவை. புலவர்கள் இம்மலர் பொன்னை ஒத்த மஞசள் நிறமானது என்பர்.

சங்க இலக்கியப் பெயர் : ஆவிரை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : ஆவிரம்
பிற்கால இலக்கியப் பெயர் : ஆவாரை
உலக வழக்குப் பெயர் : ஆவாரை, ஆவாரம்பூ,, ஆவாரம்
தாவரப் பெயர் : காசியா ஆரிகுலேட்டா
(Cassia auriculata, Linn.)

ஆவிரை இலக்கியம்
கபிலர் “விரிமலர் ஆவிரை வேரல் சூரல்” (குறிஞ், 71) என்று கூறிய பகுதியில் உள்ள ஆவிரை என்பதற்கு ஆவிரம்பூ என்று நச்சினார்க்கினியர் பொருள் கண்டார். தொல்காப்பியத்தில் ‘ஆவிரை’ என்னும் சொல் குறிக்கப்பட்டு, புணர்ச்சி விதி பெற்து உள்ளது. ஆவிரை பூ என்புழி, வல்லின முதல் மொழியோடு புணரும் போது ஆவிரையின் இறுதி ஐ கெட்டு ‘அம்’ சாரியை பெற்று ஆவிரம்பூ என்றாகும். இது கலித்தொகையில் ஆவிரம் என்றும், பிற்காலத்தில் ஆவாரை என்றும் பேசப்படும். பிங்கலம் [90] இதற்குப் பகரி என்றதொரு பெயரைப் பகரும்.

ஆவாரை ஒரு குற்றுச்செடி. இதன் மலர் மஞ்சள் நிறமானது. ‘விரிமலர்’ ‘ஆவிரை’ என்பதற்கேற்ப இப்பூவில் உள்ள ஐந்து (அல்லியிதழ்கள்) அகவிதழ்களை நன்கு விரித்து, இது மலரும். மலர் பொன்னையொத்த மஞ்சள் நிறமானது என்பர் புலவர்.

“பொன்னேர் ஆவிரப் புதுமலர்”-குறுந். 173 : 1

“அடர்பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங்கண்ணி”
-கலி. 140 : 7


இதனைக் ‘களரிஆவிரை’[91] என்றதனால், சங்க நூல்கள் கூறும் ‘கள்ளிபோகிய களரியம் பறந்தலை’ என்ற வண்ணம் களர் நிலத்திலும் இது வளரும் என்ற உண்மை கூறப்படுகிறது.

இம்மலர் அகத்துறையில், மடல் ஏறுவான் சூட்டும் பூவெனக் குறிப்பிடப்படுகின்றது. ஆதலின், இப்பூவின் தொடர்புடைய இந்நிகழ்ச்சியைச் சங்கத் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு விளக்குவாம்.

காமம் மிக்க தலைவன் மடல் ஏறியாவது இவளை மணப்பேன் என்று சூளுரைப்பதுண்டு. பனை மடலால் குதிரையைப் போல ஓர் உருவத்தைச் சமைத்து, அதன் கழுத்தில், “அணிப்பூளை, ஆவிரை, எருக்கொடு” (கலி. 138 : 8) பிணித்த மாலையும், மணியும் அணிவித்துத் தலைவியின் உருவத்தை ஒரு படத்தில் எழுதிக் கையில் ஏந்தி, அதன் மேல் யாவரும் அறிய நாணை ஒழித்து, அழிபடர் உள்ளமொடு மல்லர் ஊர் மறுகின்கண் இவர்ந்து ‘எல்லீரும் கேண்மின்’ என்று கூறிக் கொண்டு வருதலை மடல் ஏறுதல் என்பர். அங்ங்னம் அவன் மடலேறி வருவதைக் கண்ட ஊரினர் ‘இவன் மடல் ஏறும்படி செய்தவள் இத்தலைவி’ என்று அவளை அவனுக்கு மணம் முடித்து வைப்பர். இவ்வுண்மையை உணர்ந்த ஒரு தலைவன், பாங்கியற் கூட்டத்தை விழைந்தான். பாங்கியோ அவன் குறையிரத்தலை மறுத்தாள். அவளை நோக்கி ‘தலைவியை அடைவதற்கு மடலேறுதல் என்றதொரு பரிகாரம் உண்மையின், நீ மறுத்தமையாற் கவலாது மடலேறத் துணிகின்றேன்’ என்று கூறுவானாயினன் (கலி. 139). இவ்வாறு கூறியவன் மேற்கொண்ட செயலைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று கூறும். ‘பொன்னைப் போன்ற இதழ்களையுடைய ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக் கட்டிய பல நூல்களையுடைய மாலைகளை அணிந்த பனங்கருக்கு மட்டைகளால் உண்டாக்கப்பட்ட மனச்செருக்கையுடைய குதிரையை, அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து, நாணத்தைத் தொலைத்து, மிகுந்த நினைவை உடைய உள்ளத்துள்ள காமநோய் மேன்மேலும் பெருக, இன்னவளால் உண்டாயிற்று இக்காம நோய் என்று யான் கூற, அக்கோலத்தைக் கண்ட இவ்வூரில் உள்ளார் எல்லோர்க்கும் முன்னே நின்று தலைவியினது பழியைக் கூறுவர். இவ்வுண்மையை உணர்ந்தவனாகலின் இவ்விடத்தினின்று போகின்றேன்’ என்று கூறிப் போகின்றான் என்பார் மதுரைக்காஞ்சிப் புலவர்.

“பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
 பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
 பூண்மணி கறங்க ஏறிநாண் அட்டு
 பழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
 இன்னவள் செய்தது இதுஎன முன்நின்று
 அவள் பழி நுவலும் இவ்வூர்
 ஆங்குணர்ந்தமையின் இங்கு ஏகுமாறு உள்ளே”

-குறுந். 173


இஃதன்றி இதனை ஆடவர் கண்ணியாகவும், மகளிர் இதனைக் கோதையாகவும் அணிந்து விளங்கியதைக் காணலாம்.

“அடர்பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங்கண்ணி ”
-கலி. 140 : 7
“களரி ஆவிரைக் கிளர்பூங் கோதை
 வண்ண மார்பின் வனமுலைத் துயல்வர”

-அகநா. 301 : 14-15


ஆவிரை என்ற செடி தாவரவியலின் சிசால்பினியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. காசியா என்ற பேரினத்தைச் சார்ந்தது. இதனை உள்ளிட்ட இப்பேரினத்தில், பல சிற்றினங்கள் இந்தியாவில் வளர்கின்றன என்று ‘ஹூக்கர்’ என்பாரும், 20 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் உள்ளதாகக் ‘காம்பிள்’ என்பாரும் கூறுவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=14, 16 என ஜாக்கப் (1940) என்பவரும், 2n=14, 16, 28 என இர்வின், டர்னர் (1960) என்போரும் கூறுவர்.

இது ஒரு நல்ல மருந்துச் செடி என்பர் சித்த மருத்துவ நூலார்.

ஆவிரை
(Cassia auriculata)

ஆவிரை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ் பிரிந்தவை-காலிசிபுளோரே
தாவரக் குடும்பம் : சிசால்பினியே (Caesalpineae)
தாவரப் பேரினப் பெயர் : காசியா (Cassia)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆரிகுலேட்டா (auriculate)
தாவர இயல்பு : ஓரிராண்டுகள் வாழும் புதர்ச் செடி.
தாவர வளரியல்பு : மீசோபைட். மற்றும் அளர் நிலத்திலும் வளரும்.
இலை : அடியிலும், முடியிலும் குறுகிய 8-12 சிற்றிலைகளைக் கொண்ட பசிய கூட்டிலை.
இலையடிச் செதில் : சிறப்பானது. இலையடிக் காம்பின் இரு புறத்திலும் அகன்ற இதய வடிவான (காது வடிவான) பசிய இலையடிச் செதில்கள் காணப்படும்.
மஞ்சரி : கிளை நுனியில் ஆனால் இலைக் கோணத்தில் நுனி வளராப் பூந்துணர் கொத்தாகத் தோன்றும். ‘காரிம் போஸ்’ எனப்படும்.
மலர் : பளிச்சென்ற மஞ்சள் நிறமானது. பெரியது. 2-3 செ.மீ. நீள, அகலமுடையது. ‘விரிமலர் ஆவிரை’ என்பது பொருந்தும் அளவுக்கு அகவிதழ்கள் விரிந்து மலரும்.
புல்லி வட்டம் : 5 சிறிய பசிய புறவிதழ்கள் அடியில் இணைந்து மேலே பிரிந்து இருக்கும்.
அல்லி வட்டம் : சிறந்த மஞ்சள் நிறமான அகன்ற 5 அகவிதழ்கள் அடி தழுவிய அமைப்பில் ஏறக் குறைய ஒரு மாதிரியாகவே இருக்கும். இதழ்கள் நன்கு பிரிந்து, பளபளப்பாகவே தோன்றும்.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள் பல வேறு உயரத்தில் உண்டு. அடியில் உள்ள மூன்று தாதிழைகள் சற்று நீளமானவை.
சூலக வட்டம் : இரு சூலக ஓரறைச் சூலகம். பல சூல்கள்.
கனி : பாட் (Pod) எனப்படும் உலர்கனி. காம்புடையது. 10-15 செ. மீ. நீளமானது.

இந்தியாவில் மத்திய மாநிலங்களிலும், கருநாடகத்திலும், சீலங்காவிலும் சாதாரணமாகத் தானே வளர்கிறது. தமிழ் நாட்டில் பலவிடங்களிலும், மலைப்புறத்திலும் பரவலாகக் காணப்படும். இது ஓர் அழகான புதர்ச் செடி. இதன் பட்டையில் ‘டானின’என்ற வேதிப்பொருள் உள்ளது என்பர்.

கொன்றை–கடுக்கை
காசியா பிஸ்டுலா (Cassia fistula, Linn.)

‘கொன்றை’யைத் ‘தூங்கிணர்க் கொன்றை’ என்றார் கபிலர் (குறிஞ். 86). தொங்குகின்ற இயல்பை உடைய இதன் நீண்ட பூங்கொத்தை மேல் நோக்கி வளைத்துக் கட்டி வைத்தாலும் இதன் இணர் திரும்பத் திரும்ப கீழ் நோக்கியே வளரும். இதன் இயல்பைப் பல சோதனைகள் செய்து கண்டு கொண்டோம். இதற்குச் ‘சரக்கொன்றை’ என்ற பெயரும் உண்டு. கொன்றை மரம் சிறியது. மலர்களில் பொன் நிறமான மஞ்சள் இதழ்கள் உள்ளன. பூத்த நிலையில் இம்மரம் மிக அழகாக இருக்கும். இது கார் காலத்தில் பூக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : கொன்றை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : கடுக்கை
பிற்கால இலக்கியப் பெயர் : இதழி, தாமம், மதலை, ஆர்க்குவதம்
உலக வழக்குப் பெயர் : சரக்கொன்றை, கொன்றை
தாவரப் பெயர் : காசியா பிஸ்டுலா
(Cassia fistula, Linn.)

கொன்றை–கடுக்கை இலக்கியம்

கொன்றை இலை பல்லலகுடைய கூட்டிலை; இதில் எட்டு முதல் பதினாறு வரையிலான சிற்றிலைகள் காணப்படும். சிற்றிலைகள், சற்று நீண்ட முட்டை வடிவானவை. இம்மரம் முல்லை நிலத்தைச் சார்ந்தது. கார்காலத்தில் பூக்கும். தலைவியைப் பிரியும் கலைவன், இம்மரம் பூப்பதற்கு முன் வருவதாகக் கூறிச் செல்லுதலும், வருந்துணையும் தலைவி ஆற்றியிருத்தலும், அவன் வாராவழி ஆற்றொணாது அவலம் உறுதலும், ஒரோவழி அவன் கூறிய பருவத்திற்குள் வந்து அவளுடன் கூடியுறைதலும் ஆகிய இவை பற்றிய பண்டைத் தமிழ்ப் பாக்களில் கொன்றை பல படியாகப் பயிலப்படுகின்றது. இந்நாளில் வைகாசி, ஆனி மாதங்களிலேயே கொன்றை பூத்து விடுகின்றது. பூக்கள் நல்ல மஞ்சள் நிறமானவை; நீண்ட கொத்தாகப் பூக்கும் இயல்பு உடையவை. பூங்கொத்து மரத்தில் கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். இதனைத் ‘தூங்கினர்க் கொன்றை’ (குறிஞ். 86) என்று கபிலர் கூறுவர்.

“நீடுசுரி இணர சுடர்வீக் கொன்றை”-நற். 302

“வயங்கிணர்க் கொன்றை”-கலி. 102

“மெல்லிணர்க் கொன்றை”-கலி. 103

“முறியிணர்க் கொன்றை ”-முல்லைப். 94

“நள்ளிணர்க் கொன்றை”-அகநா. 197

“நீடிணர்க் கொன்றை”-அகநா. 384

என்றெல்லாம் வருவனவற்றைக் காண்க. மேலும் கொன்றை மரம் மலையிடத்தே பூத்திருப்பதைப் பார்க்கிறார் இளவேட்டனார் :

“பொன்தொடர்ந் தன்னதகைய நன்மலர்க் கொன்றை
 ஒள்ளிணர் கோடுதோறும் தூங்க”
-நற். 221 : 3-4

“பொற்காசினைத் தொங்க விட்டாற் போன்ற அழகினை உடைய நல்ல மலர்களுடன் கூடிய சரக்கொன்றையின் ஒள்ளிய பூங்கொத்துக்கள் அதன் கிளைகள் தோறும் தொங்குகின்றன” என்கின்றார்.

சங்கத் தமிழில் கொன்றை மலரைப் பொன் மலராகப் பேசும் மரபு மிகுந்து காணப்படுகின்றது. ‘கொன்றை நன்பொன்கால’ (முல்லைப் : 94) என்று கொன்றைப் பூ பொன்னின் ஒளியை வீசுவதாகக் கூறுவர். அதிலும் பொன்னின் மாற்றுப் பார்த்தவர் போல், ‘நன்பொன்’ என்றார். மேலும்,

“பொன் கொன்றை”- பொருந: 201

“கொன்றைப் பொன்னேர் புதுமலர்”-அகநா. 242 : 1

“பொன்னெனக் கொன்றை மலர”-நற்: 242 : 1

“பொன்வீக் கொன்றை”-ஐங். 246 : 8

“பொன்னென மலர்ந்த கொன்றை”-ஐங். 420 : 1

“சுடுபொன் அன்ன கொன்றை சூடி”-ஐங். 432 : 2-3

“நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன”
-பரிபா. 14 : 10


என்றெல்லாம் புலவர் பெருமக்கள் புகழ்ந்துரைப்பர். அதற்குக் காரணம். கொன்றை மலரின் இதழ்கள் பொற்காசு போன்று வண்ணமும், வடிவமும் உடைமையின் எனலாம். மேலும், பேயனார் பொன் நிறைத்து வைத்த பேழை ஒன்றைக் காண்கின்றார். “கவலைக் கிழங்கு தோண்டி எடுத்ததால், ஓர் அகன்ற குழி உண்டாகிறது. அதில் கொன்றையின் பூக்கள் விழுந்து நிறைந்திருக்கின்றன. இத்தோற்றம் பொன்னைப் பெய்து வைத்த பேழையைத் திறந்து வைத்தது போலத் தோன்றுகிறது” என்கிறார்.

“கவலைக் கெண்டிய கல்வாய்ச் சிறுகுழி
 கொன்றை ஒள்வீ தாஅய், செல்வர்
 பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன”
-குறுந். 233 : 1-3

(மூய்-மூடி)

கொன்றை மலரின் பொன்னிறப் பொலிவும், புதுமலர் மெருகும், கொய்து சூடிக் கொள்ள அழைக்கும். முல்லை நிலத்துக் கோவலர் இதனைச் சூடி அணிந்து மகிழ்வர். இடைக்குலத்து மகளிர் குழலில் சூடிக் கொள்வர் இப்பொன் நேர் புது மலர் நறு நாற்றமும் உடைத்தாகலின், இதனை,

“பொன்செய் புனை இழை கட்டிய மகளிர்
 கதுப்பில் தோன்றும் பூதுப்பூங் கொன்றை ”

-குறு. 21 : 2-3


என்றார் ஓதலாந்தையார்.

ஏறுதழுவலின் போது கொன்றைப் பூச்சூடிய ஆயர் மகள் அடையாளங் கூறப்படுகிறாள்.

“வென்றி மழவிடை ஊர்ந்தார்க் குரியள்இக்
 கொன்றையம் பூங்குழலாள்”
[92]

உழவர் முதலில் பொன் ஏர் பூட்டு ஞான்று கொன்றை மலரைச் குடிக் கொள்வர் எனப் பதிற்றுப்பத்து கூறும் .

“கடி ஏர்பூட்டுநர் கடுக்கை மலைய”-பதிற். 43 : 16

(கடுக்கை-கொன்றை)

போர்க்களத்து வீரரும் பனங்குருத்தைப் பிளந்த மடலுடன் கொன்றையைச் சூடினர்.

“நாறு இணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர் ”
-பதிற். 67 : 13


கொன்றை மலர் சிவபெருமானுக்கு உரியதாக்கப்பட்டது. சிவ பரம் பொருளுக்குரிய பூக்களில் கொன்றையே முதலிடம் பெற்றது. சங்க இலக்கியங்களில் சிவபெருமானை வாழ்த்தும் பாடல்களில் எல்லாம் சிவன் கொன்றை மலரைக் கண்ணியாகவும், தாராகவும், மாலையாகவும் சூடியிருப்பதாகக் கூறப்படுகின்றது. சிவனைக் கொன்றை வேய்ந்தான் என்பர்.

“கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
 தாரன், மாலையன், மலைந்த கண்ணியன்”

-அகநா. 1 : 1-2

“எரி எள்ளுஅன்ன நிறத்தின் விரிஇணர்க்
 கொன்றையம் பைந்தார் அகலத்தன்”
-பதிற். 1 : 1-2

“கொலை உழுவைத் தோல் அசைஇ
 கொன்றைத்தார் சுவல் புரள ”
-கலித். 1 : 11
(சுவல்-தோள்)

“கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
 வண்ண மார்பிற் தாருங் கொன்றை ”
-புறநா. 1 : 1-2

“கொன்றை வேய்ந்த செல்வன் இணையடி”
-தொல். பொருள். செய். 149 : பேரா. உரை


பாரதக் கதையில், எதிரிகளால் சூழப்பட்டு நிற்கும் அபிமன்யுவிற்காக வீமன் புகுந்தான். அவனைத் தடுக்க நினைத்த சயத்திரதன் சிவனிடத்துப் பெற்ற கொன்றையை வீமன் எதிரே ஏவினான். வீமன் அம்மாலையைக் கண்ட அளவில், கை தொழுது வீழ்ந்தான். இது கண்ட திட்டத்துய்மன் வீமனைப் பழித்தான். அதற்கு வீமன் அம்மாலையின் பெருமையைப் பேசுகின்றான் :

“எங்கள் குடிப்பிறந்தார் எல்லாம் இறந்தாலும்,
 சங்கரன் நன்மாலைதனைக் கடவோம்”
[93]

சிவனுக்கு எந்த அடியார் கொன்றையைச் சூட்டி, அவருக்கு அதனை உரியதாக்கினாரோ அறியோம். ஆனால், ஆத்தி மலரைச் சூட்டியவர் விசாரசருமர் என்பர் சேக்கிழார். தம் வழிபாட்டிற்குத் தடை செய்த தந்தையைத் தடிந்தவர் விசாரசருமர். அதனைப் பாராட்டிச் சிவபெருமான் இவரைச் சிவனடியார் அனைவருக்கும் தலைவராக்கினார்; தமக்கு ஒப்பாக அதிகாரம் கொடுத்தார். தாம் உண்ட கலன், உடுப்பவை, சூடுபவை யாவற்றையும் விசாரசருமருக்கு வழங்கி, சண்டேசுவரப் பதவியையும் அளித்தாராம். அப்பதவி வழங்கப்பட்டதன் சான்றிதழ் போன்று,

“. . . . . . . . . . . . . . . . . . அவர் முடிக்கு
 துண்டமதி சேர்சடைக் கொன்றை
 மாலை வாங்கிச் சூடினார்
[94] என்பர்

இது கொண்டு, கொன்றை ஒரு சான்றுப் பொருள் ஆகுமளவில், சிவபெருமான் முடி ஏறியதாயிற்று. விசாரசருமரும், ஆத்தியைச் சூட்டிக் கொன்றையைப் பெற்றுக் கொண்டார்.

இத்துணைச் சிறப்பிற்றாகிய கொன்றை ‘சரக்கொன்றை’ எனப்படும். இதனைப் பிங்கல நிகண்டு.[95] இதழ், கடுக்கை, தாமம், கொன்றை என்று சொல்லும். ‘மதலை, ஆர்க்குவதம் என்றாகும்’ என மேலும் இரண்டு பெயர்களைக் குறித்தது. எனினும், ‘கொன்றை’, ‘கடுக்கை’ என்ற பெயர்களே சங்க இலக்கியங்களில் காணப்படும் பெயர்களாகும்.

குறிஞ்சிக் கபிலர் குறிஞ்சிப் பாட்டினுள் “தூங்கிணர்க் கொன்றை” (86) என்று ‘பூங்கொத்துக்கள் தொங்கிக் கொண்டிருக்கும்’ இதன் இயல்பினைக் குறிப்பிடுகின்றார். இதன் உண்மையை நன்கறிதற் பொருட்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தாவரப் பூங்காவில் 1956-ஆம் ஆண்டில் ஒரு சிறு சோதனை செய்யப்பட்டது. கீழ் நோக்கித் தொங்குகின்ற இதன் பூங்கொத்து மேல் நோக்கித் தூக்கி வைத்துக் கட்டப்பட்டது. இங்ஙனம் மேனோக்கிக் கட்டப்பட்ட இவ்விணரின் நுனிப் பாகம் இரண்டு நாள்களில் திரும்பவும் கீழ் நோக்கி வளரத் தொடங்கிற்று. சற்று வளர்ந்த பின்னர், இவ்விணரின் நுனிப் பாகம், இரண்டு நாள்களில் திரும்பவும் கீழ் நோக்கி வளரத் தொடங்கிற்று. மறுபடியும், இவ்விணரின் நுனியைத் தூக்கி மேல் நோக்கிக் கட்டி வைத்துப் பார்த்ததில் திரும்பவும் இதன் நுனி இணர், கீழ் நோக்கியே வளர்ந்தது. அரும்புதலும், வளர்தலும் சிறிதும் குன்றவில்லை. இவ்வரும்புகளும், அதே மரத்தில் தொங்கிய ஒப்பிணர் அரும்புகளும் போதாகி, ஒரே நாளில் மலர்ந்தன. இச்சோதனையை, வேறு வேறு கொன்றை மரங்களில், வெவ்வேறினங்களில் பன்முறை செய்த பார்த்த போதிலும், இதன் பூங்கொத்து தன்னியல்பு மாறாது கீழ்நோக்கியே வளர்ந்தது. கொன்றையின் இவ்வரிய இயல்பினைத் தமிழிலக்கியம் ‘தூங்கிணர்க் கொன்றை’ என அங்ஙனமே கூறுவதை எண்ணுங்கால் உளம் பூரிக்கின்றது.

பூக்களில் பச்சை நிறமுள்ள ஐந்து புறவிதழ்களும், பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான ஐந்து அகவிதழ்களும் உள்ளன. அகவிதழ்களும் மகரந்தக் கால்களும் வடிவில் வேறுபாடு உடைமையின், ஒருபுறச் சமச்சீர் (Unilateral Symmetry) உடையதாக இருக்கும். மொட்டின் அடிப்பாகத்து அகவிதழ் சற்றுப் பெரியதாகவும், மேற்பாகத்து அகவிதழ்களை மூடிக் கொண்டுமிருத்தலின், இம்முகை அவிழுங்கால், தவளையின் வாய் போலத் தோன்றும் என்பார் இளங்கீரந்தையார்.

“செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
 தவளை வாஅய பொலஞ் செய்கிண்கிணிக்
 காசின் அன்ன போதீன் கொன்றை
 குறுந்தொடு அலம்வரும் பெருந்தண் காலையும்
 கார் அன்று என்றியாயின்
 கனவோ மற்றுஇது வினவுவன் யானே ”
-குறுந். 148

கொன்றை மரம் பொதுவாக மே, சூன் மாதங்களில் பூக்குமெனத் தாவரவியலார் கூறுப. கொன்றை மலர்தலைக் கார் காலத் தொடக்கத்தின் அறிகுறியாகக் கருதினர் தமிழ் மக்கள். இவ்வுண்மையை மேற்குறித்த குறுந்தொகைப் பாடலிலுங் காணலாம்.

“நாண் மலர்க்கொன்றையும் பொலந்தார் போன்றன
. . . .. . . .. . . .. . . .
 கார்மலிந்தன்று நின்குன்று”
-பரிபா. 14

என்பர் கேசவனார்.

தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், குறித்த பருவத்தில் திரும்புதல் உண்டு. எனினும், ஒரோவழி காலந் தாழ்ப்பானாயின் தலைவி துன்புறுதலும் அவன் வருந்துணையும் ஆற்றியிருக்குமாறு தோழி கூறுதலும் தமிழ் மரபு. தலைவியை ஆற்றப்புகும் தோழி அவள் ஏற்கும் வண்ணம் தக்க சான்று கூறித் தேற்றுதல் வேண்டும். பருவம் வருமளவும் ஆற்றுவித்த தோழி, அவன் குறித்த பருவ வரவின் கண், இனி ஆற்றுவிக்குமாறு எங்ஙனம் எனக் கவன்று ஒரு சிறு சூழ்ச்சி செய்கின்றாள். பருவங்கண்டழிந்த தலைவியை நோக்கி, ‘இது, அவன் குறித்த பருவமன்று’ எனக் கூறி ஆற்றுதல் வேண்டுமென வற்புறுத்தும் வகையில் எழுந்த பாட்டொன்றுளது. உண்மையில் மிகச் சிறந்த இக்குறுந்தொகைப் பாடலைக் கோவர்த்தனர் நன்கு பாடியுள்ளார்.

“மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
 கல்பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய
 பருவம் வாரா வளவை தெரிதரக்
 கொம்பு சேர்க் கொடியிணர் ஊழ்த்த
 வம்ப மாரியைக் காரென மதித்தே”
-குறுந். 66

‘பிரிந்து சென்ற தலைவன், தான் திரும்புதற்குக் குறித்த காலம் இன்னும் வரவில்லை. காலமில்லாக் காலத்தில் பெய்த மழையைக் காரென மதித்து, இக்கொன்றை பூத்து விட்டது. முதுமையில் தட்டுத் தடுமாறி, வழி நடப்போர் போலக் கீழ் நோக்கி வளரும் பூங்கொத்துக்களை உடைய இக்கொன்றை மரம் மிக்க அறியாமை உடையது. ஆதலின் வருந்தற்க’ என்று தோழி கூறுவதாக அமைந்துள்ளது. இச்செய்யுளில் இயற்கை உண்மையை மறைக்க முனைகின்றது புலவர் உள்ளம். இதனால், பாட்டின் சுவை நலம் சிறிதும் குன்றாது சிறக்கின்றது. இக்கருத்தில் எழுந்த மேலுஞ் சில பாக்களும் உள:

“மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை
 பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
 கார்என் றயர்ந்த உள்ளமொடு தேர்வில்
 பிடவமும் கொன்றையும் கோடலும்
 மடவ வாகலின் மலர்ந்தன பலவே”
-நற். 99 : 6-10

“ஏதில பெய்ம்மழை கார்என மயங்கிய
 பேதையங் கொன்றைக் கோதைநிலை நோக்கி
 எவன்இனி மடந்தை நின் கலிழ்வே”
-ஐங். 462 : 1-3

இதற்கடுத்த நிலையில் எழுந்த இளங்கீரந்தையார் செய்யுள் பின்வருமாறு.

“காசின் அன்ன போதீன் கொன்றை
 குருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும்
 காரன்று என்றி யாயின்
 கனவோ மற்றிது வினவுவல் யானே ”
-குறுந் . 148 : 3-6

பருவம் அன்று எனக் கூறிய தோழியிடம் தலைவி வினவுகின்றாள்: “கிண்கிணிக் காசினை ஒத்த முகையீன்று கொன்றை மலர்ந்துள்ளது. கொன்றை குருந்த மரத்துடன் காற்றினால் சுழல்வதாயிற்று. மிக்க தண்மையுடன் கார்ப்பருவம் தொடங்கி விட்டது. இப்பருவத்தைக் காரன்று என்றியாயின், இங்ஙனமெல்லாந் தோன்றுவது கனவோ? நானேதான் கேட்கின்றேன் தோழி” என்று.

இதற்கும் மேலாக, நெஞ்சையள்ளும் குறுந்தொகைப் பாடலும் ஒன்றுண்டு. உண்மையில் கார்காலம் தொடங்கி விட்டது. தலைவன் வரவில்லை.

தோழிக்குக் கவற்சி பெரிதாயிற்று. இதனை ஓர்ந்து உணர்கின்றாள் தலைவி. தனது தமிழ்ப் பண்பு புலப்படக் கூறுவாளாயினள்.

“தோழி! இது காண்! அவர் பொய் கூற மாட்டார். ஆகலின், புதுப் பூங்கொன்றைக் கானம் காரெனக் கூறுமாயினும், யானோ தேறேன். இது பருவமன்று” என்றுரைப்பதாக ஓதலாந்தையார் மிகத் திறம்படப் பாடுகின்றார்.

“பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர்
 கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்
 கானம் காரெனக் கூறினும்
 யானோ தேறேன் அவர்பொய் வழங்கலரே”

-குறுந் , 21:2-5


இச்செய்யுளைப் பருவங் கண்டுழியும் அவர் பொய் கூறாரென்று தலைவி ஆற்றியிருந்ததற்கு மேற்கோளாகக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். அகத்: 14). மற்று, குறித்த பருவத்தில் தலைவன் வருவான் என்ற தோழி, தலைவிக்கு அறிவிப்பதுமுண்டு.

“வருவர் வாழி தோழி, புறவின்
 பொன்வீக் கொன்றையோடு பிடவுத் தலையவிழ
 இன்னிசை வானம் இரங்கும், அவர்
 வருதும் என்ற பருவமோ இதுவே”
-நற். 246 : 7- 10

தாவரவியலில் கொன்றை மரம், ‘சீசல்பினியே’ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் 133 பேரினங்கள் உள்ளன. கொன்றை உள்ளிட்ட காசியா என்ற பேரினத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்றினங்கள் உலகில் உள்ளன. இவற்றுள், தமிழ் நாட்டில் 20 சிற்றினங்கள் உள்ளன என்பர் ‘காம்பிள்’ (Gamble). காசியா பிஸ்டுலா எனப்படும் சரக்கொன்றையின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என டிஷ்லரும் (1922), இர்வின், டர்னர் என்போர் (1960) 2n=24, 28 எனவும், நந்தா (1962) 2n=24 எனவும், பந்துலு (1962) 2n= 28 எனவும் கூறுப.

கொன்றையின் காய் முற்றியவுடன் ஓரடி முதல் ஒன்றரையடி வரை நீண்டு, கருநிற முடையதாகவிருக்கும். விதைகள் தனித்தனி அறைகளில் முற்றுதற்கு ஏற்ப, காய் உள்ளீடு உடையதாக இருக்கும். இக்காயைப் பாணர் பறை அடித்தற்குப் பயன்படுத்தும் கோல் போன்றதென்பர்.

“புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியினர்
 ஏகல்மிசை மேதக மலரும்”
-நற். 296 : 4-5

“. . . . . . . . . . . . . . . . பாணர்
 அயிர்ப்பு கொண்டன்ன கொன்றை அம்தீங்கனி
 பறைஅறை கடிப்பின் அறைஅறையாத் துயல்வர”

-நற்.46:5ー7

கொன்றை—கடுக்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : சிசால்பினே (Caesalpineae)
தாவரப் பேரினப் பெயர் : காசியா (Cassia)
தாவரச் சிற்றினப் பெயர் : பிஸ்டுலா (fistula)
தாவர இயல்பு : சிறு மரம்
தாவர வளரியல்பு : மீசோபைட்

கொன்றை
(Cassia fistula)

இலை : 20 முதல் 30 செ. மீ. நீளமுள்ள கூட்டிலை.
சிற்றிலைகள் : 4 முதல் 8 இணையான இலைகள் இறகு அமைப்பில் உள்ளன.
சிற்றிலை : 5 முதல் 15 செ.மீ. நீளமானது. நீள் முட்டை வடிவானது.
மஞ்சரி : 30 முதல் 35 செ.மீ. நீளமான நுனி வளர் பூந்துணர். தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். இலைக் கோணத்தில் வளரும்.
மலர் : மஞ்சள் நிறமானது. 2 முதல் 3 செ.மீ. நீளமானது. மலர்க் காம்புடையது. 5 அடுக்கானது. சமச்சீரில்லாதது. பசுமையாக இருக்கும். மலர் பொன்னிற மஞ்சள் நிறமானது. நறுமணமுள்ளது. பொலிவானது.
புல்லி வட்டம் : 5 பசிய எளிதில் உதிரும் இயல்புடைய இதழ்கள்.
அல்லி வட்டம் : 5 அழகிய பொற்காசு போன்ற இதழ்கள் அடியிதழ் சற்றுப் பெரியது. திருகு இதழமைப்பு ஆனது.
மகரந்தத் தாள் : இயற்கையில் 10. சமமில்லாதன. 3 கீழ் மகரந்தத் தாள்கள் நீளமானவை . இரண்டு மிகவும் சிறியன. மலட்டு மகரந்தப்பையுடையன. 5 தாள்கள் அருகியிருக்கும்.
மகரந்தப் பை : நீண்ட தாள்களில் இரு பைகள் உச்சியில் உள்ள துளை வழியாக வெடிக்கும் இயல்பின.
சூலக வட்டம் : சூற்பை-காம்புடன் காணப்படும். பல சூல்களை உடையது. சூல்தண்டு உள் வளைந்தது. சூல்முடி நுண்ணிய மயிர் இழைகளை உடையது.
கனி : 30 செ.மீ. முதல் 50 செ.மீ. நீளமான வெடியாக் கனி. விதைகளுக்கு இடையே தடுப்புக்களைக் கொண்டது. விதைகள் குறுக்கே அமைந்துள்ளன. விதையில் முளை சூழ்தசை உள்ளது.

காசியா பேரினத்திலுள்ள 340 இனங்களுக்குப் ‘பென்தம்’ என்பவர் தனி நூல் எழுதியுள்ளார். காசியா என்னும் இத்தாவரப் பேரினம், இமயம் முதல் கன்னியாகுமரி வரையிலும், மலேயா, பிலிப்பைன்ஸ் தீவுகளிலும், இலங்கையிலும், சீனாவிலும் வளர்கின்றது. இப்பேரினத்தில் 340 சிற்றினங்கள் உள்ளன என்பர் ஹூக்கர்.

சரக்கொன்றை இயல்பாக வளர்வதன்றி, அழகுக்காகப் பல தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றது. இதன் பூ, சிவனுக்குரியதாகலின், இதனைத் தெய்வ மலரென்பர்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என டிஷ்லர் (1924) நந்தா (1962) என்போரும், 2n=26 என, பிரிசித்து (1966), 2n=28 என, பந்துலு (1946, 1960) என்போரும் 2n=24, 28 என இர்வின், டர்னர் (1960) என்போரும் கூறுவர்.

 

ஞாழல்
காசியா சொபீரா (Cassia sophera, Linn.)?

சங்க இலக்கியங்கள் ஞாழலை ஒரு சிறு மரம் போலச் சித்தரிக்கின்றன. இதன் தாவரப் பெயரைக் கலைக்களஞ்சியம் காசியா சொபீரா என்று குறிப்பிடுகின்றது. இதற்கு உலக வழக்குப் பெயர் ‘பொன்னாவாரை’ என்பது. ஆகவே ‘ஞாழல்’ என்பது பொன்னாவாரைதானா என்பது சிந்திக்கப்பாற்பாலது. இதன் பூ மிகச் சிறியது. மஞ்சள் நிறமானது. நறுமணமுள்ளது. காமனின் இளவல் சாமவேள் நிறத்தை ஒத்தது என்கிறார் கலித் தொகையில் நல்லந்துவனார்.

சங்க இலக்கியப் பெயர் : ஞாழல்
தாவரப் பெயர் : காசியா சொபீரா
(Cassia sophera, Linn.)

ஞாழல் இலக்கியம்

‘ஞாழல்’ ஒரு பெரிய புதர்ச் செடி போலும்! சங்க நூல்களில் இது சிறு மரம் போலப் பேசப்படுகிறது. இதன் தழைகள் பசுமையானவை. இவற்றை இளமகளிர் தழையாடையாக உடுப்பர். இளந்தழைகளைக் கொய்த பின்னர், திரும்பவும் தழைக்கும். இத்தழை மேலும் அழகுடையது. அதனால் இதனைக் ‘குமரி ஞாழல்’ என்றார் சேந்தங் கண்ணனார். கணணஞ் சேந்தனார் என்னும் புலவர் ‘கன்னி இளஞாழல்’ [96] என்று குறிப்பிடுகின்றார். இளங்கோவடிகள் இதனைக் ‘கன்னிநறுஞாழல்’ [97] என்று கூறுகின்றார். இறையனார் அகப்பொருளுரைகாரர். இதனைப் ‘பாவைஞாழல்’ என்றுரைக்கின்றார்.

“கானல் ஞாழல் கவின் பெறுதழையன்”-ஐங். 191: 8

“. . .. . .. . .. . . . தழையோர்
 கொய்குழை அரும்பிய குமரிஞாழல்”
-நற். 54 : 9-10

“பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு”
இறை. அகப். நூற்பா உரை.


ஞாழல், நெய்தல் நிலத்துக் கடற்கரையில் மணற்பாங்கில் நீர் ஓடுகின்ற காவிடத்தே நிழல் பரப்பித் தழைத்து வளரும் என்றும், இதன் முதிர்ந்த பூங்கொத்தைத் தலை முடியில் கமழ முடிப்பர் என்றும் புலவர்கள் கூறுவர்.

“கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
 தெண்திரை மணிப்புறம்தை வரும்”
-நற். 54 : 10-11

“எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ”-ஐங். 141

“ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்
 கொழுநிழல் முதிர் இணர் கொண்டு
 கழும முடித்து. . . . . . . . . . . . . . . . ”
-கலி, 56 : 1-3

‘ஞாழல் ஓங்கிய’ , ‘கருங்கால் ஞாழல்’ ‘சிறியிலைப் பெருஞ்சினை’ , ‘கருங்கோட்டு இருஞ்சினை’, ‘கொழுநிழல் ஞாழல்’ என்றெல்லாம் கூறப்படுதலின் ‘ஞாழல்’ ஒரு சிறுமரம் எனக் கொள்ள இடமுண்டு.

மேலும், நல்லந்துவனார் இளவேனிற் காலம் வந்த அழகைப் புலப்படுத்துவதற்கு இணர் ஊழ்த்த பல மரங்களைக் கூறுகின்றார். அவற்றுள் ஒன்று, சாமனைப் போல மஞ்சளும், செம்மையுமான நிறம் விளங்கிய ஞாழல் மலர்ந்துள்ளது என்று கூறுகின்றார். இவர் இங்கே குறிப்பிடும் மலர்கள் அனைத்தும் சங்க இலக்கிய மரங்களின் மலர்கள் ஆகும்.

“ஒருகுழை ஒருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்
 பருதியம் செல்வன்போல் நனைஊழ்த்த செருந்தியும்
 மீன்ஏற்றுக் கொடியோன்போல் மிஞிறுஆர்க்கும் காஞ்சியும்
 ஏனோன்போல் நிறம்கிளர்பு கஞலிய ஞாழலும்
 ஆன்ஏற்றுக் கொடியோன்போல் எதிரிய இலவமும் ஆங்குத்
 தீதுசீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோல
 போதுஅவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற
 நோதக வந்தன்றால் இளவேனில் மேதக”
-கலித். 26 : 1-6

ஞாழல் பூ செவ்விய நிறமுள்ளது; ஐயவியன்ன மிகச் சிறிய பூ; பொன்னிறங் காட்டுவது; நறுமணம் உள்ளது; தினையரிசியைப் போன்றது. ஆரல் மீனின் முட்டைகளை ஒத்தது. அம்முட்டைகள் தொகுப்பாக உள்ளபோல ஞாழல் மலர்க் கொத்துமிருக்கும் என்கின்றனர் புலவர்கள்.

“நறுவீ ஞாழல்”-குறுந். 318 : 2

“பொன்வீ ஞாழல்”-அகநா. 70 : :9

“செவ்வீ ஞாழல்”-அகநா. 240 : 1

“சிறுவீ ஞாழல்”-நற். 315 : 6

„ „-குறுந். 328 : 1

“ஐளவின்ன சிறுபூ ஞாழல்”-குறுந். 50 : 1

“நனைமுதிர் ஞாழல் தினை மருள் திரள்வீ”-குறுந். 397 : 1

கடற்கரையின் மணல் மேட்டில் வளர்ந்த ஞாழல் மரத்தின் மலர்கள் உதிர்ந்துள்ளன. நண்டுக் கூட்டம் அவற்றின் மேல் ஓடுகின்றன. அது நண்டுகளின் கால்களால் கோலமிட்டது போன்றுளது. இதனை உவமிக்கிறார் ஒரு புலவர். காய வைத்துள்ள தினையை அழகிய மகளிர் கையால் துழாவுவது போன்றுள்ளது எனறு.

“எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொகுதி
 இலங்கு எயிற்று ஏஎர்இன் நகைமகளிர்
 உணங்குதிணை துழவும் கைபோல் ஞாழல்
 மணங்கமழ் நறுவீ வரிக்கும் துறைவன்”
-நற். 267 : 2-5

இத்துணைச் சிறப்பிற்றாகிய ஞாழல் பூ, புலி நகத்தை ஒத்தது என்று கூறும் கல்லாடம்[98]. இதனை வைத்துக் கொண்டு புலிநகக்கொன்றை என்றார் உ. வே. சா. சேந்தன் திவாகரம் இதற்கு ‘நறவம்’, ‘கள்ளி’ என்ற பெயர்களைக் கூறுகின்றது [99].இவையன்றி, கோவை. இளஞ்சேரனாரும் இது பொன்னாவாரை அன்று என்று குறித்துள்ளார். ஆனால், அந்நூலின் பிற்சேர்க்கையில் ஆங்கிலப் பெயராகக் ‘காசியா சொபீரா’ என்று காட்டப்பட்டுள்ளது. இப்பெயரையே கலைக்களஞ்சியமும் கூறுகிறது.

ஆனால் ‘ஞாழல்’ பொன்னாவாரையாக இருக்க முடியுமா என்பது சிந்திக்கற்பாலது. பொன்னாவாரை மரமன்று; ஒரு புதர்ச்செடி எனினும், இப்போதைக்கு இதனை இப்பெயர் கொண்டே தாவரவியல் குறிப்புகள் தரப்பட்டுள்ளன, கேள்விக் குறியிட்டு.

ஞாழல் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflora)
ரோசேலீஸ் (Rosales)
தாவரக் குடும்பம் : சிசால்பினாய்டியே (Caesalpinoideae)
தாவரப் பேரினப் பெயர் : காசியா (Cassia)
தாவரச் சிற்றினப் பெயர் : சொபீரா (sophera)
சங்க இலக்கியப் பெயர் : ஞாழல்
தாவர இயல்பு : புதர்ச்செடி. மிக அழகானது.
இலை : சிறகன்ன கூட்டிலை; இரண்டிரண்டாக 5-10 அடுக்கான சிற்றிலைகள்.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி
மலர் : மஞ்சள் நிறமானது. பொதுவாக மலர்கள் பெரியவை.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள்
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள்
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள், இவற்றுள் 3-5 மலட்டு இழைகளாகி விடும்.
சூலக வட்டம் : ஒரு செல், பல சூல்கள்.
கனி : ‘பாட்’ என்ற வெடியாக்கனி, தட்டையானது.
விதை : கனியின் குறுக்கே அமைந்துள்ளன.
 

ஈங்கை
மைமோசா ரூபிகாலிஸ் (Mimosa rubicaulis, Lamk.)

ஈங்கை இலக்கியம்
சங்க இலக்கியங்கள் இப்புதர்க் கொடியைப்

“புதல் இவர் ஈங்கை-அகநா. 294 : 6.

“ஈங்கைப் பைம்புதல்-ஐங். 456 : 3

என்று சிறப்பித்துக் கூறுகின்றன.

குளக்கரையில் பிரம்புடன் செறிந்து வளரும். இதன் தண்டில் முட்கள் இருக்கும். இதன் இலைக் கோணத்தினின்றும் இதன் பூங்கொத்து உண்டாகும். மலர் ‘துய்’தலையையுடையது என்ற தாவரவியல் உண்மைகளைப் புலவர்கள் கூறியுள்ளனர்.

“பரந்த பொய்கைப்பிரம்பொடு நீடிய
 முட்கொம்பு ஈங்கைத் துய்தலைப் புதுவீ
-அகநா. 306 : 2-3

“துண்முள் ஈங்கைச் செவ்வரும்பு-குறுந். 110 : 5

இதன் செவ்விய அரும்பு மலரும் போது நுனியில் துளை ஒன்று தோன்றும் என்பதையும் நெய்தல் தத்தனார் கூறுவர்.

“வாங்கு துளைத்துகிரின் ஈங்கை பூப்ப-அகநா. 343:2

(துகிர்-பவளம்)

இதன் அகவிதழ்கள் வெண்ணிறமானவை. மகரந்தங்கள் ‘துய்’ என்னும் பஞ்சு போன்ற தலையை நீட்டிக் கொண்டிருக்கும். இதனால் இதன் மலரை ஆலங்கட்டிக்கு உவமிப்பர் பரணர்.

“......அரும்ப முதிர் ஈங்கை
 ஆலியன்ன வால்வீதா அய்
-அகநா. 125

இக்கொடியின் தளிர் இதன் பூவைக் காட்டிலும் அழகியது. அதிலும் மாரிக் காலத்தில் எழிலுடன் தோன்றும் என்னும் அகப் பாட்டு.

“மாரிஈங்கை மாத்தளிர் அன்ன”-அகநா. 75:1:7

“ஈங்கை” என்பதற்கு, ‘இண்டு, இண்டை’ என்று உரை கூறுவர்.

“ஈங்கை இலவம் தூங்கிணர்க் கொன்றை”-குறிஞ். 86

என்ற அடியில் உள்ள ஈங்கை என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘இண்டம்பூ’ என்று உரை கண்டுள்ளார்.

ஈங்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளேரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : மைமோசாய்டியே
தாவரப் பேரினப் பெயர் : மைமோசா (Mimosa)
தாவரச் சிற்றினப் பெயர் : ரூபிகாலிஸ் (rubicaulis)
சங்க இலக்கியப் பெயர் : ஈங்கை
உலக வழக்குப் பெயர் : இண்டு, இண்டை, இண்டங்கொடி
தாவர இயல்பு : புதர்க் கொடி. நீண்டு வளரும், இக்கொடியில் வளைந்த முட்கள் செறிந்திருக்கும்.
இலை : கூட்டிலை, 10-15 இறகன்ன பிரிவுடையது. சிற்றிலைகள் சிறியவை 0. 5.-0.7 அங்குலம் நீளமானவை. இலைக் காம்பில் முட்கள் இருக்கும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் தனிக் கொத்தாக உண்டாகும். எனினும் நுனியில் நுனி வளர் பூந்துணரா கிடும்.
புல்லி வட்டம் : புனல் வடிவானது. 4 புறவிதழ்கள் இணைந்தவை.
அல்லி வட்டம் : 4 அகவிதழ்கள் மேலே தனித்தனி பிரிந்து காணப்படும் .அடியில் இணைந்திருக்கும்.
மகரந்த வட்டம் : 8 தாதிழைகள். நீண்டு, அல்லிக்கு மேலே தோன்றும். தாது மிகச் சிறியது.
சூலக வட்டம் : பல சூல்களை உடையது. சூல்தண்டு மெல்லியது. சூல்முடி மிக நுண்ணியது.
கனி : பாட் (Pod) என்னும் உலர் கனி. தட்டையானது.
விதை : பல விதைகள் உண்டாகும். முட்டை வடிவானது. ஆல்புமின் உள்ளது

கடப்பை, மைசூர் மற்றும் கோவையிலுள்ள காடுகளில் இக்கொடி வளர்கிறது.

 

உடை
அக்கேசியா பிளானிபிரான்ஸ்
(Acacia planifrons, W.&A.)

புறநானூற்றுப் பாடல்களில் காணப்படும் ‘உடை’ என்னும் இச்சிறுமரத்தைக் குடை மரமென்பர் [100]. வேலமரத்தின் இனத்தைச் சார்ந்தது. மிக மிகச் சிறிய சிற்றிலைகளைக் கொண்டது. கிளைகளில் நீண்ட வலிய முட்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : உடை
தாவரப் பெயர் : அக்கேசியா பிளானிபிரான்ஸ்
(Acacia planifrons, W.&A.)

உடை இலக்கியம்

உடை என்பது ஒரு சிறு மரம். கிளைகளில் உள்ள இலைக் கணுவில் எல்லாம் நீண்ட இரு முட்கள் இருக்கும். இதன் இலை மிகச் சிறியது; இதன் முள்ளைச் ‘சுரையுடை வால்முள்’ என்று கூறுவர். இந்த முள்ளை ஊகம்புல்லின் நுனியில் கோத்து அம்பு ஆக்கி அதனை வில்லில் பூட்டிக் குறவர் குடிச் சிறுவர் எலியை எய்வர் என்று கூறுவர் ஆலத்தூர் கிழார்.

“சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
 ஊக நுண்கோல் செறித்த அம்பின்
-புறநா. 324:4-5

‘இருங்கடல் உடுத்த இப்பெரிய மாநிலத்தின் நடுவே, உடையினது சிறிய இலை கூடப் பிறர்க்கு உரித்தாதல் இன்றித் தாமே ஆண்ட மன்னர்கள் இடு திரை மணலினும் பலர்’ என்று சிறுவெண்தேரையார் பாடுகின்றார்.

“இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
 உடையிலை நடுவணது இடைபிறர்க்கு இன்றி

“தாமே ஆண்ட ஏமங் காவலர்
 இடுதிரை மணலினும் பலரே”
-புறநா. 363 : 1-4

இதன் இலை கூட்டிலை ஆகும். சிற்றிலைகள் மிகச் சிறியவை. இது ஒரு வகை வேலமரமாகும் என்று பிங்கல நிகண்டு கூறும்; இம் மரம் சிறு குடைபோலப் பரவிக் கிளைத்துத் தழைத்திருக்கும். ஆதலின், இதனைக் குடை வேல மரமென்றனர் போலும்.

உடை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : லெகுமினோசி (Leguminosae)
தாவரத் துணைக் குடும்பம் : மைமோசாய்டியே (Mimosoideae)
தாவரப் பேரினப் பெயர் : அக்கேசியா (Acacia)
தாவரச் சிற்றினப் பெயர் : பிளானிபிரான்ஸ் (Plaifrons)
சங்க இலக்கியப் பெயர் : உடை
உலக வழக்குப் பெயர் : ‘ஓடை’ என்பார் காம்பிள்
பிற்கால இலக்கியப் பெயர் : குடைவேலம்
ஆங்கிலப் பெயர் : பாபுல் (Babul)(Umbrella-thornbabul)
தாவர இயல்பு : சிறு மரம்; குடை போலக் கவிழ்ந்து கிளை பரப்பித் தழைத்த முடியுடையது;
இலை : கூட்டிலை, 1 அங்குலத்திற்கும் குறைவான நீளமுடையது; சிற்றிலைகள் 3-4 இணைகள் சிறகு வடிவில்–சிற்றிலைகள் (.06×.01) அங்குலம்–மிகச் சிறியவை. இலைச் செதில்கள் இரண்டும் இரு நீளமான வலிய முட்களாக மாறியிருக்கும்.
மஞ்சரி : இணர்க் காம்பு மெல்லியது. நுனியில் 2 அங்குல நீளமும், 2.5 அங்குல அகலமும் உள்ள கொத்தாக இருக்கும்.
மலர் : வெண்ணிறமான சிறு மலர்கள்.
புல்லி வட்டம் : புனல் வடிவானது; குட்டையானது; பிளவுள்ளது.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்தது போலக் காணப்படும். மடல் விரிந்திருக்கும்.
மகரந்த வட்டம் : அளவற்ற தாதிழைகள்
சூலக வட்டம் : 2 முதல் பல சூல்கள். சூல்தண்டு மிக மெல்லிய இழையானது.
கனி : ‘பாட்’ (‘Pod’)எனப்படும் உலர்கனி; உருண்டையானது.

இதன் மரம் அடியில் வெளிர் மஞ்சளானது; வலியது; கனமானது; உழவியல் கருவிகட்குக் காம்பு போடப் பயன்படும்.

 

திலகம்
அடினாந்தீரா பவோனினா (Adenanthera pavonina, Linn.)

கபிலர் ‘போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி’ (குறிஞ். 74) என்று திலகத்தைக் குறிப்பிடுகின்றார். ‘திலகம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘மஞ்சாடி மரத்தின் பூ’ என்று உரை கண்டார். திலகம் எனப்படும் மஞ்சாடி மரத்தின் பூ செந்நிறமானது. இதன் விதையும் செந்நிறமானது.

சங்க இலக்கியப் பெயர் : திலகம்
உலக வழக்குப் பெயர் : மஞ்சாடி மரம், மஞ்சாடி; யானைக் குண்டுமணி
தாவரப் பெயர் : அடினாந்தீரா பவோனினா
(Adenanthera pavonina, Linn.)

திலகம் இலக்கியம்

மலைபடுகடாத்தில் நன்னன் சேய் நன்னனது அரண்மனை வாயிலில் காணப்படும் சந்தனம் முதலிய பொருள் வளத்தில் திலகப்பூவும் குறிப்பிடப்படுகின்றது.

“நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்”-மலைபடு. 520

இவ்வடியில் உள்ள ‘திலகம்’ என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘திலகப்பூ’ என்றாராயினும், ‘போங்கம் திலகம் தேங்கமழ் பாதிரி’ (குறிஞ். 74) என்புழி இதற்கு ‘மஞ்சாடி மரத்தின் பூ’ என்று உரை கூறியுள்ளார்.

சேர முனிவன் செய்தளித்த சிலம்பினை[101] அணிந்த சீரடிகளிலும் பெருங்கௌசிகனாரின் மலைபடுகடாத்துள்ளும் இவ்வடி அங்ஙனமே காணப்படுகின்றது. இதனுள் வரும் திலகத்திற்கு அரும்பத உரைகாரரும், அடியார்க்கு நல்லாரும் ‘மஞ்சாடி’ என்றே பொருள் கொண்டனர். நிகண்டுகளும்[102] ‘திலகம் மஞ்சாடி’ என ஒரே தொடரில் மஞ்சாடி மரமாகக் குறிப்பிடுகின்றன.

நிறுத்தல் அளவைப் பெயர்களுள், பொன்னை நிறுக்கும் அளவைகளுள் ‘மஞ்சாடி’ என்பதும் ஒன்று. இது மஞ்சாடி மரத்தின் விதை; செந்நிறமானது. இதனை, ‘ஆனைக் குன்றிமணி’ என்றும் வழங்குவர். இது இரண்டு குன்றிமணி எடை கொண்டது. 32 குன்றிமணி எடையை ஒரு வராகனெடை என்பர் (ஒரு கிராம்). மாணிக்கக் கல் வகைகளில் ‘குருவிந்தன்’ என்பது ஒன்று. இதன் நிறத்திற்குத் திலக மலரின் நிறத்துடன், எட்டுப் பொருள்களின் நிறத்தைக் கூறியுள்ளனர். இதனை விளக்கும் பாடல் சிலப்பதிகார உரை[103] மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திலகம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே
தாவரத் துணைக் குடும்பம் : மைமோசாய்டியே (Mimosoideae)
தாவரப் பேரினப் பெயர் : அடினாந்தீரா (Adenanthera)
தாவரச் சிற்றினப் பெயர் : பவோனினா (pavonina, Linn.)
தாவர இயல்பு : மரம், வளமாக வளரும் இலையுதிர் மரம்.
இலை : இரட்டைப் பிரிவுள்ள சிறகன்ன கூட்டிலை.
சிற்றிலை : ஓர் அங். நீள்முட்டை வடிவானது. பல சிற்றிலைகள் உள. இலையடிச் செதில் நுண்ணியது. விரைவில் உதிரும்.
மஞ்சரி : நுனி வளர் பூந்துணர். இலைக்கட்கத்திலும் கிளை நுனியிலும் கலப்பு மஞ்சரி போன்றது.
மலர் : வெளிர் மஞ்சள் நிறமானது. அகவிதழ்கள் பிரிந்தவை.
புல்லி வட்டம் : 5 பிளவுள்ள குறுகிய புனல் போன்ற புறவிதழ்கள்.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள். அடியில் கூம்பு போன்றது.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள்; அகவிதழ்களில் அடங்கியிருக்கும். ஒன்று, மூன்று, ஐந்து முதலிய அடுத்தடுத்த தாதிழைகள் நீளமானவை. தாதுப்பை சற்று நீளமானது. நுனியில் சிறு சுரப்பியுடன் இருக்கும்.
சூலக வட்டம் : ஓரறைச் சூலகம். பல சூல்களை உடையது.
கனி : பாட் (Pod) எனப்படும் உலர் கனி. விதைகள் சற்றுத் தட்டையானவை. சிவப்பு நிறமானவை. அணிகலன்களுக்கும் பொன்னை நிறுத்தற்கும் பயன்படும். சிவந்த விதையுறை வலியது.

மரம் வலியது. கட்டிட வேலைக்கும் மரப் பொருள்கள் செய்யவும் பயன்படும். தோட்டங்களில் வளர்க்கப்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை கணிக்கப்படவில்லை.

 

போங்கம்
அடினாந்தீராவின் சிற்றினம்
(Adenanthera pavonina, SP.)

போங்கம் என்ற சொல் குறிஞ்சிப் பாட்டில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“போங்கம் திலகம் தேங்கமழ் பாதிரி-குறிஞ். 74

இதற்கு நச்சினார்க்கினியர் ‘மஞ்சாடிப்பூ’ என்றும், அடுத்து வரும் திலகம் என்பதற்கு மஞ்சாடி மரப்பூ என்றும் உரை கூறுவர். இதனால் போங்கம் என்பது மஞ்சாடி மர வகை என்று கருத இடமுண்டு. தாவரவியலில் திலகத்தை அடினாந்தீரா பவோனினா என்றுரைப்பர். இப்பேரினத்தில் பைகலர் (Adenanthera bicolor) என்ற மற்றொரு சிற்றினம் இலங்கை, மலாக்கா முதலிய நாடுகளில் வளர்வதாக ஹுக்கர் கூறுவர். இதன் மலர்கள் திலகத்தின் பூக்களைக் காட்டிலும் சிறியவை என்றும், இதன் விதைகள் ஒரு புறம் நல்ல சிவப்பு நிறமும், மற்றொரு புறம் கறுப்பு நிறமும் உடையவை என்றும் காம்பிள் கூறுவர். இது ஒரு வேளை போங்கமாக இருக்கலாமோ என்று எண்ண வேண்டியுள்ளது.

மற்று பரிபாடல் திரட்டுப் பாடலில் வேங்கை, மராஅம், மகிழம், பிண்டி முதலிய மலர்களுடன் ‘போங்கி’ என்றொரு மலர் குறிப்பிடப்படுகின்றது.

“ஒருசார் அணிமலர் வேங்கை, மராஅ, மகிழம்
 பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர்பு ஓங்கி
 மணி நிறம் கொண்ட மலை
-பரி. 1 : 8-10

இம்மரம் ‘சிசால்பினாய்டியே’ என்னும் (Caesalpinoideae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு ‘மஞ்சாடி’ என்று பெயர் எனக் ‘காம்பிள்’ கூறுவர்.

 

வாகை
அல்பீசியா லெபக் (Albizzia lebbeck, Benth.)

போரில் வெற்றி பெற்றோர் சூடுவது வாகை மலர்க்கொத்து. இது இலையுதிர் பெருமரம். எங்கும் வளர்கிறது. மலர் மங்கிய வெண்ணிறமானது. நெற்று நீண்டு பட்டையானது.

சங்க இலக்கியப் பெயர் : வாகை
தாவரப் பெயர் : அல்பீசியா லெபக்
(Albizzia lebbeck, Benth.)

வாகை இலக்கியம்
போரில் வெற்றி பெற்றவன் ‘வாகை சூடினான்’ என்பதே பெருவழக்காகும். வாகைப்பூவை ‘வெற்றிப்பூ’ என்று கூறும் சேந்தன் திவாகரம்.[104] போர்க்களத்தில் பேரரசர்களின் பெரும் படைகள் மோதிக் கொண்டு போர் புரிவதன்றி வேறு பல போர்களும் உண்டு. அவை ‘சொல்லானும், பாட்டானும், கூத்தானும் மல்லானும், சூதானும் பிறவற்றானும் வேறலாம்’ என்பர் நச்சினார்க்கினியர். இவ்வகையான போர்களில் வெற்றி எய்தினார் ‘வாகை’ சூடினாராவர். வாகைமலர் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றுள்ளது.

“வடவனம் வாகை வான்பூங் குடசம்-குறிஞ். 67

‘வாகை’ ஒரு பெரிய மரம். உயர்ந்து பரவிக் கிளைத்து வளரும். மலர் சற்று மங்கிய வெண்ணிறமானது. பளப்பளப்பானது. நறுமணமுடையது. மயிலினது குடுமி போன்ற துய்யினை உடையது. மலர்கள் கொத்தாகப் பூக்கும். கிளை நுனியில் இலைகளுடன் இப்பூவிணர் உண்டாகும். இதன் இலையைச் கவட்டிலை என்றும், இலையின் மேற்புறம் பசுமையாகவும், அடிப்புறம் புல்லென்று சற்று வெள்ளியதாகவும் இருக்குமென்றுங் கூறுவர் சங்கப் புலவர். இதன் காய், பட்டையானது; முதிர்ந்த இதன் நெற்று வெண்ணிறமானது; காற்றடிக்கும் போது, இதன் முற்றிய நெற்றிலுள்ள விதைகள் கலகலவென்று சிலம்பின் அரி போல ஒலி செய்யும் எனவும், ஆரியக் கூத்தர் கழையிற் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையைப் போல, காற்றடிக்குங்கால், வாகை நெற்று ஒலிக்கும் எனவும் கூறுவர். வாகைப்பூ கொற்றவைக்குரியதாகலின் ‘கடவுள் வாகை’ எனப்படும்.

“மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை ”-அகநா. 136 : 10

“மல்குசுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல்
 குமரி வாகைக் கோலுடை நறுவீ
 மடமாந் தோகைக் குடுமியின் தோன்றும்
 கான நீளிடை”
-குறு. 347 : 1-4

“போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
 கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்ப
 பூத்த முல்லை புதல்சூழ் பறவை”
-பதிற்.ப. 66 : 14-16

“கூகைக் கோழி வாகைப் பறந்தலை”-குறுந். 303 : 3

“வாகை வெண்பூப் புரையும் உச்சிய
 தோகை”
-பரிபா. 14 : 7-8

“அத்தவாகை அமலைவால் நெற்று
 அரிஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக்
 கோடை தூக்கும் கானம் ”
குறுந். 369 : 13

“கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
 வாகை வெண்ணெற்று ஒலிக்கும்
 வேய்பயில் அழுவம் முன்னியோரே”
-குறுந். 7 : 3-6

சிற்றரசன் நன்னனது கொங்கண நாட்டில் வாகை மரம் மிகுதி. அவன் வாகை மரத்தைக் காவல் மரமாகக் கொண்டான். அதனைக் கழங்காய்ச் சென்னி நார் முடிச் சேரல் என்பான் வெட்டி வீழ்த்தினான் என்றுரைப்பார் மூதெயினனார்.

“பொன்படு கொண்கான நன்னன் நன்னாடு ”-நற். 391 : 6

“பொன்அம் கண்ணி பொலந்தேர் நன்னன்
 சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த
 தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்”
-பதிற்.ப. 40 : 14-16

பாலை நிலப் பாதையில் வாகை மரம் நிழல் பரப்பி வளருமாகலின், இதன் நிழலில் வழிப் போகுநர் தங்குவர். மேலும், இவ்வாகை மரம் எங்கணும் வளர்கின்றதாகலின், இதன் நிழலில் ஊர் மன்றம் கூடும்.

வாகையைப் போன்று மிகப் பெரிய மரம் ஒன்றையும் இந்நாளில் எங்கும் வளரக் காண்கிறோம். இதுவும் வாகையின் தாவரக் குடும்பத்தைச் சார்ந்ததே. இது வாகை மரத்தைப் பல்லாற்றானும் ஒத்தது. இது கருவாகை எனப்படும்.

வாகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : லெகுமினேசி (Leguminosae)
தாவரத் துணைக் குடும்பம் : மைமோசாய்டியே (Mimosoideae)
தாவரப் பேரினப் பெயர் : அல்பீசியா (Albizzia)
தாவரச் சிற்றினப் பெயர் : லெபக் (lebbeck)
சங்க இலக்கியப் பெயர் : வாகை
உலக வழக்குப் பெயர் : வாகை (மரம்)
தாவர இயல்பு : மிக உயர்ந்து கிளைத்துப் பரவிச் செழித்து வளரும் இலையுதிர் பெரு மரம். வறண்ட நிலத்தில் காடுகளிலும் வளரும். எல்லா மாநிலங்களிலும் வளர்கிறது.
இலை : கூட்டிலை, சிற்றிலைகள் அகன்று நீண்டிருக்கும் (1-2" X .5-.75") விளிம்பு மேற்புறமாக வளைந்திருக்கும். இலைக் காம்பின் நடுநரம்பிற்கு அடியிலுள்ளது மிகப் பெரியது. அடிப்புறத்தில் மென்மையான வெள்ளிய நுண் மயிர்கள் உள்ளன. அதனால் வெண்ணிறம் போலத் தோன்றும்.
மஞ்சரி : கிளை நுனியில் இலைக்கோணத்தில் கொத்தாகப் பூக்கும். இதன் இணரை ‘ஹெட்’ என்பர். மஞ்சரிக் காம்பு உள்ளது.
மலர் : பளபளப்பானது. மங்கிய வெண்ணிறமானது. மலரடிச் செதில்கள் 2 உள்ளன.
புல்லி வட்டம் : புனல் வடிவானது. மேற்புறத்தில் 5 பிளவுகளை உடையது.
அல்லி வட்டம் : புனல் வடிவானது. 5 அகவிதழ்கள் பிரிந்தவை.
மகரந்த வட்டம் : எண்ணற்ற மிக நீண்ட பசுமையான தாதிழைகள் அடியில் ஒரு கொத்தாக இணைந்திருக்கும். பூத்த மலரில் இவை அகலமாக விரிந்து பட்டிழைகள் போன்று அழகாகக் காணப்படும். நுனியில் சிறிய மகரந்தப் பைகளை உடையன. மெல்லிய நறுமணம் வீசும்.
சூலக வட்டம் : ஓரறைச் சூலக அறையில் பல சூல்கள் உண்டாகும்.
கனி : இதன் காய் நீளமானது. பட்டையானது. பசுமையானது. முற்றிய நெற்று வெள்ளிய வைக்கோல் நிறமானது. இலைகள் உலர்நத பின் நெற்றுகள் மட்டும் இருக்கும்.

இதன் பட்டையும், மரமும் கரும் பழுப்பு நிறமானவை. மரம் வலியது. பலகை கட்டடங்களுக்குப் பயன்படும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=26 என பட்டீல் ஆர்.பி (1958) கணித்துள்ளார்.

 

கருவாகை
என்டெரலோபியம் சமான் (Enterolobium saman,Prain.)

கருவாகை இலக்கியம்

புலவர்கள் வாகைக்குக் கூறும் ‘அத்தவாகை’, ‘கடவுள் வாகை’ என்பனவும், மலருக்குக் கூறும் ‘கோலுடை நறுவீ’, ‘வாகை வெண்பூ’,‘சுடர்வீ வாகை’, ‘துய்வீ வாகை’, ‘மென்பூ வாகை’ என்ற சிறப்புகளும் கருவாகைக்கும் பொருந்தும். இதன் மலர் பளபளக்கும் செந்நீல நிறமானது. இதனை இந்நாளில் ‘தூங்கு மூஞ்சி மரம்’ என்றழைப்பர். இதன் இலைகள் வாகை இலைகளைக் காட்டிலும் நீண்டு வேறுபட்டவை. இதன் கூட்டு இலைகளில் உள்ள பல சிற்றிலைகள் இரவில் அடிப்புறமாகக் கவிழ்ந்து ஒன்றையொன்று மூடிக் கொள்ளும். இவ்வியல்பினைத் தன் புகழ் கேட்ட மானமிக்க பெரியவர்கள் தலை குனிந்து மருளும் நிலைக்கு உவமிக்கின்றார்.

“தம்புகழ்க் கேட்டார் போல் தலைசாய்த்து
 மரம் துஞ்ச
-கலி. 119:6

என்று குறிப்பிட்டது இம்மரத்தின் இலைகளைப் போலும்!

கருவாகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே
தாவரக் குடும்பம் : லெகுமினோசி
தாவரத் துணைக் குடும்பம் : மைமோசாய்டியே
தாவரப் பேரினப் பெயர் : என்டெரலோபியம் (Enterolobium)
தாவரச் சிற்றினப் பெயர் : சமான் (saman)
உலக வழக்குப் பெயர் : கருவாகை
தாவர இயல்பு : மிக உயர்ந்து, மிகவும் பரவிக் கிளைத்துச் செழித்து எங்கும் வளரும் பெரிய மரம்.
இலை : கூட்டிலை நீளமானது. பல சிற்றிலைகள் காம்பில் இறகன்ன அமைந்து உள்ளன.
மஞ்சரி : கிளை நுனியில் இலைக்கோணத்தில் கொத்தாக உண்டாகும் பூந்துணர்.
மலர் : செந்நீல நிறமானது. வாகையைப் பெரிதும் ஒத்தது. தாதிழைகள் பல மிக நீளமானவை. பளபளப்பானவை. செந்நீல நிறமானவை.
கனி : மிக நீளமானது பாட் (pod)எனப்படும். பெரு முழவடிக்கும் கோல் போன்றது. கருமையானது. கால்நடைகளால் விரும்பி உண்ணப்படுவது.

இதன் பட்டை கரிய நிறமானது. இதனால் இப்பெயர் பெற்றது . அடிமரம் மிகப் பெரியதாயினும் வலியற்றது. விறகுக்குத் தான் பயன்படும். இம்மரம் தென்னமெரிக்க நாட்டிலிருந்து நமது நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது என்று கூறுவர் காம்பிள். இம்மரம் நல்ல நிழல் தருவதாகலின், சோலைகளிலும், சாலைகளிலும் வளர்க்கப்படுகிறது. இரவில் இதன் சிற்றிலைகள் அடிப்புறமாக மடிந்து கூம்பியிருக்கும்! இவ்வியல்பை ‘நாக்டர்னல் மூவ்மென்ட்’ (Nocturnal movement) என்பர். இதனால் இது ‘தூங்கு மூஞ்சி மரம்’ எனப்படும்.

 

மருதம்
டெர்மினாலியா அர்ச்சுனா (Terminalia arjuna,W.A.)

தமிழ் இலக்கியம் கண்ட ஐம்புலத்துள் மருதமும் ஒன்று. இது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகும். இப்புலத்தில் வளரும் மருத மரத்தை வைத்தே இந்நிலம் இப்பெயர் பெற்றது போலும். மருதமரம் உயர்ந்து பருத்து வளரும். இதன் அடிமரம் மிகவும் பருத்திருக்கும். இம்மரம் காவிரி, வையை முதலிய ஆறுகளின் கரைகளில் வளர்வதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : மருதம்
உலக வழக்குப் பெயர் : வெள்ளை மருது, கரு மருது, பில்ல மருது.
தாவரப் பெயர் : டெர்மினாலியா அர்ச்சுனா
(Terminalia arjuna,W.A.)

மருதம் இலக்கியம்

தொல்காப்பியம் மருத நிலத்தை “வேந்தன் மேய தீம்புனல் உலகம்” (தொல். பொருள். அகத். 5) என்று கூறும். வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். ஊடலும் ஊடல் நிமித்தமும் உரிப்பொருளாக உடைய மருத நிலத்தை ‘மருதஞ் சான்ற மருதத் தண்பணை’ என்பர் (சிறுபா.186). இதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘ஊடியும் கூடியும் போகம் நுகரும் தன்மை அமைந்த மருத நிலத்தில் குளிர்ந்த வயலிடத்து’ என்பார். மேலும் இப்பொருளைத் தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா (5) உரையிலுங் கூறுவர். சங்க இலக்கியத்தில் மருதத் திணையில் அமைந்துள்ள பாக்கள்:

1. அகநானூறு - ஆறாம் எண்ணுள்ள ..
40 பாக்கள்
2. கலித்தொகை - மருதக்கலி ..
30 பாக்கள்
3. ஐங்குறுநூறு - மருதம் ..
100 பாக்கள்

இவையன்றி நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல் முதலிய தொகை நூல்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் மருதத் திணைப் பாக்கள் பல உள.

இவற்றுள் எல்லாம் வயலும், வயலைச் சார்ந்த நிலம் பற்றியும், இந்நிலத்தில் வாழும் மக்களைப் பற்றியும், இவர்தம் மருதத் திணையொழுக்கம் பற்றியும் புலவர்கள் பாடியுள்ளனர். மருதம் என்ற மரம் இப்புலத்தில் வளரும் அழகிய பெரு மரமாகும். காவிரி, வையையாறுகளின் கரைகளிலும், துறைகளிலும், வயல்களின் மருங்கிலும் தழைத்து வளரும் என்பர் புலவர் பெருமக்கள்.

“மருதம் சான்ற மலர்தலை விளைவயல்”-பதிற். 73 : 8

இம்மரத்தின் நிழல் சூழ்ந்த பெரிய துறைகளில் ஆடவரும், மகளிரும் நீராடுவர். நீர்நிலைக்கு அணித்தாய் இதன் கிளைகளின் மேலேறி அங்கிருந்து கரையில் உள்ளவர்கள் மருளும்படியாகத் qதுடுமெனw இருபாலாரும் நீரில் பாய்ந்து, குதித்து விளையாட்டயர்வர். இவ்வொலி உருமின் இடியோசை போன்றது என்பர்.

“மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம்
 பெருந்துறை பெண்டிரொடு ஆடும் என்ப”
-ஐங். 33 : 2-3

“விசும்புஇழி தோகைச் சீர் போன்றிசினே
 பசும்பொன் அவிர் இழைபைய நிழற்ற
 கரை சேர் மருதம் ஏறிப்
 பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே”
-ஐங். 74

“தொல்நிலை மருதத்துப் பெருந் துறை
 நின்னோடு ஆடினன் தண்புன லதுவே”
-ஐங். 75 : 2-4

“. . . . . . . . . . . . . . . . ஆயமொடு
 உயர்சினை மருதத் துறைஉறத் தாழ்ந்து
 நீர்நணிப் படிகோடு ஏறி சீர்முக,
 கரையவர் மருள திரையகம் பிதிர
 நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து”

-புறநா . 243 : 5-9


ஓங்கி வளரும் மருத மர நிழலில் செந்நெல் அடித்துப் போர் போடும் களம் அமைப்பர் எனவும், ஆண்டுறையுந் தெய்வங்கள் அக்களத்தில் பலி பெறுமெனவும், பழைய மரமாதலின் அதில் பாம்பு உறையும் எனவும் கூறுப.

“பைது அறவிளைந்த பெருஞ்செந் நெல்லின்
 தூம்பிடைத் திரள்தாள் துமித்த வினைஞர்
 பாம்புறை மருதின் ஓங்கு சினைநிழல்
பலிபெறு வியன்கள மலிய வேற்றி”
-பெரும்பா. 230-233

மேலும் காவிரியாற்றில் ஒரு பெருந்துறை; அதில் பலரும் நீராடுவர். அங்கு ஒரு பெரிய மருத மரம் உள்ளது. அதில் சேந்தன் தந்தையின் யானை பிணிக்கப்பட்டுள்ளது என்பர் பரணர்.

“. . . . . . . . . . . . . . . . காவிரிப்
 பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
 ஏந்து கோட்டு யானைச் சேந்தன்தந்தை”
-குறுந். 258 : 2-3

வையையாற்றின் திருமருத முன் துறையில் தலைமகனும், தலைமகளும் புனற்கண் நீரணி இன்பந் துய்த்த செய்தியை மையோடக் கோவனாரும் (பரிபா. 7) திருமருத நீர்ப்பூந்துறையின் தைந் நீராடும் செய்தியை நல்லந்துவனாரும் (பரிபா. 11) விரித்துரைப்பர்.

“உரும்இடி சேர்ந்த முழக்கம் புரையும்
 திருமருத முன்துறை சேர்புனற்கண் துய்ப்பர்”

பரிபா. 7 : 83-84


மேலும், வையை யாற்றின் வார்மணல் கூடிய அகன்ற துறையில் ஓங்கி வளர்ந்த மருத மரக்காவில் வதுவை அயர்தலும் கூறப்படுகின்றது.

“வருபுனல் வையை வார்மணல் அகன்துறை
 திருமரு தோங்கிய விரி காவில்
 நறும்பல் கூந்தல் குறுந்தொடி மடந்தையொடு
 வதுவை அயர்ந்தனை என்ப . . . . .”
-அகநா. 36 : 9-12

மருதம் ஓங்கிய இம்மலர்க் காவில் காஞ்சி மரமும், மாமரமும் வளர்ந்திருக்குமென்றும் பதிற்றுப்பத்து கூறும்.

“மருதுஇமிழ்ந்து ஓங்கிய நறுஇரும் பரப்பின்
 மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு”

-பதிற். 23:18-19


மருதம்
(Terminalia arjuna)

“அறல்அவிர் வார்மணல் அகல்யாற்று அடைகரை
 துறையணி மருதமொடு இகல்கொள ஓங்கி
 கலிதளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து”
-அகநா. 97 : 18-20

இனி, மருதமரத்தின் இருவேறு வகையான செம்மருதும், வெண்மருதும் கூறப்பட்டுள்ளமை காண்க.

“முடக் காஞ்சிச் செம்மருதின்”-பொருந. 189

“நெடு வெண்மருதொடு வஞ்சி சாஅய”-அகநா. 226 : 9

மேலும் மருத மரத்தின் மலர் செந்நிறமானது என்றும், துய்யினை உடையதென்றும், மலர்கள் தொங்குகின்ற துணரில் விரியுமென்றும், அத்துணர் புள்ளினம் இரிய உதிருமென்றும் கூறுவர்.

“வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
 பழனப் பலபுள் இரியக் கழனி
 வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்”
-நற். 350 : 1-3

“உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு இருக்கும்”-ஐங். 7
(உளைப்பூ-விரிந்த பூ)

“ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்
 செவ்வீ மருதின் செம்மலோடு தா அய்த்
 துறையணிந்தன்று. . . .. . . .. . . . ”
-குறுந். 50 : 1-3
(செம்மல் -பழம்பூ)

மருதின் பூவில் புறவிதழ் கரிய நிறமானதென்றும், மேலே துய்யினை உடையதென்றும், இதன் பூங்கொத்துக்களைக் கொண்டையிலே அணிவர் என்றும், துய்யினை உடைய மருத மலரை மார்பில் அப்பிக் கொண்டால், அது சந்தனக் குழம்பைப் பூசுவதை ஒத்திருக்குமென்றும் நக்கீரர் கூறுவர்.

“துவா முடித்த துகளறு முச்சிப்
 பெருந்தண் சண்பகஞ் செறீஇக் கருந்தகட்டு
 உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
 . . . . . . . . . . . . . . . .
 நறுங்குறடு உறிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
 தேங்கமழ் மருதிணர் கடுப்ப”
-திருமுரு. 27-34

மருதம்
(Terminalia arjuna)

மருதம் தமிழிசையில் ஒரு வகையான பண் எனவும் படும். தாள அறுதியை இனிதாகக் கொண்டு, யாழ்க்கருவியின் நரம்பைத் தெரிந்து யாழோர் மருதப் பண்ணை இசைப்பர் என்று மதுரைக் காஞ்சி கூறுகின்றது.

“சீர்இனிது கொண்டு நரம்பினிது இயக்கி
 யாழோர் மருதம் பண்ண”
-மதுரைக்கா. 657-658

மருதம் காலைப்பண் என்று பரணர் கூறுவர். (புறநா. 149) இவ்வுண்மையைச் சீவக சிந்தாமணிப் பாடலும் [105] வலியுறுத்தும்.

‘வைகறை விடியல்-மருதம்’ என்று மருதத்திற்குப் பொழுது கூறிற்று தொல்காப்பியம். (அகத்: 9)

மருதம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : காலிசிபுளோரே (Calyciflorae),
மிர்டேலீஸ் (Myrtales)
தாவரக் குடும்பம் : காம்பிரிடேசீ (Combretaceae)
தாவரப் பேரினப் பெயர் : டெர்மினாலியா (Terminalia)
தாவரச் சிற்றினப் பெயர் : அர்ச்சுனா (arjune, W. A.)
தாவர இயல்பு : மரம். உயரமான, அகன்ற, பொலிவுள்ள இலையுதிர் மரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட். 15 முதல் 20 மீட்டர் உயரமாகவும், மேலே 10 மீட்டர் அகன்றும், தழைத்து வளரும்.
கிளைத்தல் : அடி மரம். 4 முதல் 8 மீட்டர் சுற்றளவுடையது. 3-4 மீட்டர் உயரத்திற்கு மேல் பெரிய கிளைகளை பரப்பி வளரும்.
அடிமரம் : சுற்றிலும் சப்பையான 1-2 மீட்டர் உயரமும், 1 முதல் 1·5 மீட்டர் அகலமும் உள்ள தாங்கு வேர் எனப்படும் (Buttresses). அடிமரப் பட்டைகள் காணப்படும்.
பட்டை : கருநீல நிறமானது (pinkish grey). வழவழப்பானது.
அடிமரத் தண்டு : பழுப்பு நிறமுள்ளது. வலியது.
இலை : தனியிலை. குறுகிய, நீண்ட இலைகள். 8 முதல் 10 செ.மீ. நீளம். 3 முதல் 3.5 செ. மீ. அகலம். அடியில் குறுகியும், நுனி முட்டை வடிவாகவும் உள்ளது. இலை நுனி அகன்ற கோணமுள்ளது.
இலைக் காம்பு : 8 முதல் 10 மி. மீ. நீளமானது.
இலை நரம்பு : நடு நரம்பு பருத்துத் தோன்றும்.
விளிம்பு : நேரானது.
மஞ்சரி : கலப்புப் பூந்துணர், ‘ஸ்பைக்’ போன்றது.
மலர் : இருபாலானது, 4 முதல் 5 அடுக்கானது மலரடிச் சிறு செதில்கள். இரண்டும் நீளமானவை.
புல்லி வட்டம் : 4-5 விளிம்புகள். மலரும் போது உதிர்ந்து விடும். கரும் பச்சை நிறமானது.
அல்லி வட்டம் : 4-5 அகவிதழ்கள் கருஞ்சிவப்பானவை.
மகரந்த வட்டம் : இரு அடுக்கு வட்டங்களில் 8-10 மகரந்தத் தாள்கள்.
சூலக வட்டம் : கீழானது. ஓரறைச் சூலகம்.
சூல் : 2-3 தொங்கு சூல்கள்.
சூல் முடி : எளிதானது, சிறியது.
கனி : 4 செ.மீ. நீளமும் 1.5 செ.மீ.அகலமுமுள்ள 4
பட்டையான உலர்கனி. 4 நீண்ட சிறகு போன்று கனியுறை அகன்று தடித்துள்ளது.
விதை : ஒற்றை விதை, முளை சூழ்தசையில்லாதது. வித்திலைகள் (கான்வலூட்) வளைந்தவை.
பயன் : மரம் மிக வன்மையானது. பழுப்பு நிறமான அடிமரம் கட்டிட வேலைக்கு உதவும். பலகையில் கருங்கோடுகள் அழகுடன் காணப்படும். பெரிதும் வயலும், வயலைச் சார்ந்த மருத நிலத்தில் வளரும்.
 

நாவல்
சைசீஜியம் ஜாம்பொலானம்
(Syzygium jambolanum,DC.)

கடலோரத்திலிருந்து ஆறாயிரம் அடி உயரமான மலைப் பாங்கு வரையில் வளரும் பசிய தழைத்த கிளைத்த வலிய பெருமரம் நாவல் மரம். கருமையான இனிய பழங்களை உதிர்க்கும்.

சங்க இலக்கியப் பெயர் : நாவல்
தாவரப் பெயர் : சைசீஜியம் ஜாம்பொலானம்
(Syzygium jambolanum,DC.)

நாவல் இலக்கியம்

“நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடை-பரிபா. 5:8
நாவலம் தண்பொழில் வீவுஇன்று விளங்க-பெரும். 465
பொங்கு திரைபொருத வார்மணல் அடைகரைப்
 புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
 கிளைசெத்து மொய்த்த தும்பி
-நற். 35:1-3

என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் கூறப்படும் நாவல் மரம் வலியது. தழைத்து, கிளைத்துப் பரவி வளரும் இப்பெரிய மரம், தமிழ் நாட்டில் எங்கும் காணப்படுகிறது. மேலே காட்டிய பெரும் பாணாற்றுப்படையின் அடிக்கு, ‘நாவலில் பெயர் பெற்ற அழகினை உலகமெல்லாம் கேடின்றாக விளங்கும்படி’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகின்றார். இம்மரம் கடலோரப் பகுதிகளிலும் வளர்வதைப் புலவர் கூறுகின்றார். இதில் விளையும் நாவற்பழம் கருமை நிறமானது. இனிமையானது. இக்கனிகள் காற்றில் உதிர்வதைப் புலவர் கூறுவர்.

“காலின் உதிர்ந்த கருங்கனி நாவல்-மலைப. 135

நாவல் பழத்தின் சாறு ஊதா நிறமானது. பொன்னால் செய்த அணிகலன்களை இச்சாற்றில் ஊற வைத்தால், கலன்களின் நிறம் வேறுபட்டு ஊதா நிறமாக விளங்கும்.

இவ்வணிகலன்களை மகளிர் சூடிக் கொள்வர்.

“நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை”
-திருமுரு. 18


இதற்கு ‘நாவற்பழச்சாறு பட்டுப் பேதமான பொன்னால்’ என்பது பழைய உரை. ஆனால் ‘சம்பூந்தமென்று நாவலோடடுத்துப் பெயர் பெற்ற பொன்னால் நிருமித்து விளங்குகின்ற பூணினையும்’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவார்.

இதன் உண்மையை ஆய்தற் பொருட்டு, நாவற்பழச் சாற்றிலே பொன் மோதிரத்தை இருபத்து நான்கு மணி நேரம் ஊற வைத்துப் பார்த்தோம். மோதிரம் ஊதா நிறமாகி விட்டது. நீரில் கழுவிப் பார்த்தும் நிறம் குலையவில்லை. ஆனால், பதினைந்து நாள்களுக்குப் பின்னர் மோதிரத்தின் ஊதா நிறம் கரைந்து பொன்னிறமாகி விட்டது.

கடற்கரை மணலில் உதிர்ந்த நாவற்பழத்தைக் கரிய தன் இணையெனக் கருதி மொய்த்ததாம் ஒரு தும்பி. இதனை அம்மூவனார் என்ற புலவர் கூறுகின்றார்.

“பொங்குதிரை பொரு வார்மணல் அடைகரைப்
 புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
 கிளை செத்து மொய்த்த தும்பி”
-நற். 35 : 1-3

நாவல் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
மிர்ட்டேலீஸ் (Myrtales)
தாவரக் குடும்பம் : மிர்ட்டேசி (Myriaceae)
தாவரப் பேரினப் பெயர் : சைசீஜியம் (Syzygium)
தாவரச் சிற்றினப் பெயர் : ஜாம்பொலானம் (jambolanum)
சங்க இலக்கியப் பெயர் : நாவல்
உலக வழக்குப் பெயர் : நாவல்
தாவர இயல்பு : உயர்ந்து, கிளைத்துப் பரவி வளரும் பெருமரம். எப்பொழுதும் பசிய இலையுடையது.
இலை : 3-6 அங்குல நீளமும், 1 அங்குல அகலமும் உள்ள தனியிலை; பசுமையானது. இலை நரம்புகள் நுனியில் இணைந்து இலை விளிம்புக்குள் காணப்படும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் அல்லது பக்கத்தில் உண்டாகும் நுனி வளராப் பூந்துணர். கொத்தாக இருக்கும்.
மலர் : வெண்ணிறமான மலர்.
புல்லி வட்டம் : 4 புறவிதழ்கள் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். குழல் விளிம்பு 0.2 அங்குல அகலமானது.
அல்லி வட்டம் : 4 அகவிதழ்கள் வெண்மையானவை; உள்வளைவானவை. முட்டை வடிவானவை.
மகரந்த வட்டம் : மிகப் பல தனித்த மகரந்தத் தாள்களை உடையது. முகையில் இவை உட்புறமாக வளைந்திருக்கும்.
சூலக வட்டம் : இரு செல் உடையது. ஒவ்வொன்றிலும் பல சூல்கள். ஒரு சூல்தண்டு.
கனி : உருண்டையான சதைக்கனி. கருநீல நிறமானது. இனிப்பானது. கனிச் சாறு ஊதா நிறமானது. வித்திலைகள் சதைப்பற்றானவை. இவற்றுள் கருமுளை மறைந்திருக்கும்.

இம்மரம் 6000 அடி உயரம் வரையிலான மலையிடத்தும், கடலோரப் பகுதிகளிலும் வளர்கிறது. இதன் கனிக்காகத் தோப்புகளில் வளர்க்கப்படுவதுமுண்டு. இதன் மரம் வன்மையானது; செம்பழுப்பு நிறமானது; கட்டிட வேலைக்கும், வேளாண்மைக் கருவிகட்கும் பயன்படுகிறது.

இதன் முன்னைய பெயர் யூஜினியா ஜாம்பொலானா (Eugenia jambolana, Lam.) பின்னர் இது சைசீஜியம் ஜாம்பொலானம் எனப் பெயரிடப்பட்டது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=33, 35 என்று ராய் ஆர். ப. ஜா. .(1962) என்போரும், 2n=44, 46 எனப் பாதுரி, இஸ்லாம் (1949) மொசெல் (1965) என்போரும் கணக்கிட்டுள்ளனர்.

 

கடு
டெர்மினாலியா சிபுலா (Terminalia chebula , Retz.)

கடு இலக்கியம்

“கடுகலித்து எழுந்த கண் அகழ் சிலம்பில்-மலைபடு : 14

என்ற இந்த மலைபடுகடாத்தின் அடிக்கு, “கடுமரம் மிக்குவளர்ந்த இடமகன்ற பக்க மலையில்” என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகின்றார். இது கடுக்காய் விளையும் மரமாக இருக்கலாம் என்று கருத இடமுண்டு.

சங்க இலக்கியப் பெயர் : கடு
உலக வழக்குப் பெயர் : கடுக்காய் மரம்

கடு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
மிர்ட்டேலீஸ் (Myrtales)
தாவரக் குடும்பம் : மிர்ட்டேசி (Myrtaceae)
தாவரப் பேரினப் பெயர் : டெர்மினாலியா (Terminalia)
தாவரச்சிற்றினப்பெயர் : சிபுலா (chebula)
சங்க இலக்கியப் பெயர் : கடு
உலக வழக்குப் பெயர் : கடுக்காய் மரம்
தாவர இயல்பு : 3000 அடி உயரம் வரையில் உள்ள மலையிலும் காடுகளிலும் வறண்ட நிலத்திலும் வளரும் மரம்.
 

கடுக்காய்
(Terminalia chebula)

இலை : இலைக் காம்பு 0.5 அங்குல நீளமானது. நீள் முட்டை வடிவானது. அடியும், நுனியும் குறுகி இருக்கும். 7 அங்குல நீளமும், 3-3.5 அங்குல அகலமும் உள்ளது. இலைக் காம்பில், இலையின் அடியில் இரு சுரப்பிகள் உள்ளன. இலை முழுதும் அடியில் மங்கலான வெள்ளிய நுண்மயிர்களால் மூடப்பட்டிருக்கும். :
மஞ்சரி : “ஸ்பைக்ஸ்” என்ற பூந்துணர் கிளை நுனியில் உண்டாகும். மலரடிச் செதில் உண்டு. கலப்பு மஞ்சரியாகவும் இருக்கும்.
மலர் : இருபாலானது.
புல்லி வட்டம் : 4-5 புறவிதழ்கள் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். மேலே 4-5 பிளவுகள் காணப்படும்.
அல்லி வட்டம் : 4-5 அகவிதழ்கள்.
மகரந்த வட்டம் : 8-10 தாதிழைகள்.
சூலக வட்டம் : ஒரு செல் உள்ளது. சூலகம் மேற்புறத்தில் பிளவுடன் இருக்கும். 2-3 சூல்கள் உண்டாகும்.
கனி : பளபளப்பானது. முட்டை வடிவானது புறத்தில் 5 விளிம்புகளை உடையது. 1.5 X 1 அங். உயர, அகலமானது.


இதில் மிக உயர்வான ‘டானின்’ உண்டாகிறது. ஒரு வகை மஞ்சள் நிறப் பொருள் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மரம் கரிய பழுப்பு நிறமானது. மிக வலியுடையது. கட்டிடங்களுக்குப் பயன்படும். கடுக்காய் மிகச் சிறந்த சித்த மருத்துவப் பொருள். பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகின்றது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 14 என நந்தா (1962)வும், 2n = 24,48 என சானகி அம்மாளும் (1962), சோப்தி (1962 ஏ) 2n = 26 என சென். எஸ் (1955 பி) என்பாரும் கணித்துள்ளனர்.

 

மராஅம்–செங்கடம்பு
பாரிங்டோனியா அக்யுடாங்குலா
(Barringtonia acutangula, Gaertn.)

சங்க இலக்கியங்களில் பயிலப்படும் ‘மராஅம்’ என்ற சொல் பொதுவாக வெண்கடம்பு, செங்கடம்பு என்ற இரு வகை மரங்களையும் குறிப்பிடும். எனினும், ‘கடம்பு’ என்ற சொல் ‘செங்கடம்ப’ மரத்தையே குறிப்பிடும்.

சங்க இலக்கியப் பெயர் : மராஅம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : கடம்பு
உலக வழக்குப் பெயர் : செங்கடம்பு, அடம்பு, அடப்ப மரம், கடம்பு மரம்.
தாவரப் பெயர் : பாரிங்டோனியா அக்யுடாங்குலா
(Barringtonia acutangula, Gaertn.)

மராஅம்–செங்கடம்பு இலக்கியம்

மராஅம் என்ற சொல் செங்கடம்பையுங் குறிக்கும். செங்கடம்பின் மலர் செந்நிறமானது. இதன் பூக்கள் தீயை ஒப்பன என்பர்.

“எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்து-மலைபடு. 498

வெண்கடம்பைப் போல வலிமிக்கது. ஆயினும், மலரியல்பால் செங்கடம்பு வேறுபட்டது. செங்கடம்பைக் குறிப்பதற்குக் கடம்பு என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இதன் இலைகள் நன்கு தழைத்து வளரும். மரத்தைச் சுற்றிலும் பரவித் தாழ்ந்து கவிழ்ந்து வளர்வதால் அடிமரப்பகுதி இருண்டிருக்கும் என்பர்.

‘இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து’ என்றார் நக்கீரர் (திருமு. 10) ‘திணிநிலைக் கடம்பு’ என்றார் கபிலர். இம்மரம் பொய்கைக் கரையில் வளரும்.

“நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
 துறுநீர்க் கடம்பின் துணையார் கோதை”
-சிறுபா. 69-70

கடம்பின் பூங்கொத்து நீளமானது. மரக் கிளைகளிலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கும். தூங்கிணர்க் கொன்றையைப் போன்றது. பூங்கொத்தில் இளஞ்சிவப்பு மலர்கள் உண்டாகும். மலர், தேர்ச்சக்கரம் போன்றது. மலரின் நடுவில் வெண்மையான துளையுண்டு. பூங்கொத்து தொங்கிக் கொண்டிருப்பதால், முதிய மலர்கள் இணரின் மேற்பகுதியிலும், மொட்டுகள் அடிப்பகுதியிலும் காணப்படும். பூத்து முதிர்ந்த மலர்கள் பூங்கொத்திலிருந்து கழன்று உதிரும். இப்பூங்கொத்து மலர்ந்த நிலையில், பூக்களைக் கட்டிய மாலை போன்று தோன்றும். இதனையே கடம்பின் ‘துணையார் கோதை’ என்றார். இதற்கு உரை கண்ட நச்சினார்க்கினியர் ‘கோதை போலப் பூத்தலின் கோதை யென்றார்’ என்பர். இந்தச் சிறுபாணாற்று அடியினைச் சீவக சிந்தாமணிப் பாடலுரையில் மேற்கோளாகக் காட்டியுள்ளார். அப்பாடல்,

“கடம்பு சூடிய கன்னி மாலைபோல்
 தொடர்ந்து கைவிடாத் தோழிமா ரோடும்
[106]

(கடம்பு-ஒரு வகை மரம். சூடிய-பூத்த, கன்னி மாலை-புதுமையை உடைய பூ மாலை, கைவிடா-நீங்காத)

கடம்பு பூத்த புதுமையை உடைய பூ மாலை போல் தொடர்பு நீங்காத தோழியர் என்றார். மேலும், தலைவன் தம்மை நோக்கி நெருங்கி வருவதைக் கண்ட தலைவியும், தோழியும் ஒருவரை ஒருவர் கை கோத்து நின்ற நிலையைக் ‘கடம்பின் திரண்ட முதலை நெருங்கச் சூழ்ந்த மகளிர் ஒழுங்கிற்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலை போல’ என்னும் கபிலரின் வாக்கினை, ‘திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய துணையமை மாலையின் கைபிணி விடோம்’ (குறிஞ்.176-177) மேற்கோளாகக் காட்டினர் நச்சினார்க்கினியர். இதற்கு அவர்,

‘திண்ணிய நிலையினை உடைய கடம்பினது திரண்ட முதலை நெருங்கச் சூழ்ந்த மகளிர் ஒழுங்கிற்கு ஒப்புச் சாற்றுதல் உடைய மாலை போலக் கை கோத்தலை விடேமாய்’, என்றெழுதுவாராயினர்.

மேலே குறிப்பிட்ட சிறுபாணாற்றுப்படை அடிகட்கு ‘நெருங்குகின்ற தன்மை உடைய கடம்பினது இணைதல் நிறைந்த மாலை’ என்று உரை கண்டுள்ளார்.

இத்துணையும் நோக்குழி கடம்பினது பூங்கொத்து, மலர்களாற் கட்டிய கோதையைப் போலப் பூத்திருக்கும் என்பது தெளிவாகின்றது.

மேலும், இக்கடம்பினது மலரைப் பற்றிப் புலவர் பெருமக்கள் குறிப்பிடுவதையும் காண்பாம்.

“இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து
 உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்”
-திருமுரு. 11

“உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே ”-பரி. 5 : 81

“உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை”
-பதிற். பதிகம். 4 : 7


இவற்றுள் ‘உருள் பூந்தண்தார் புரளும் மார்பினன்’ என்ற அடிக்கு உரை கூறிய நச்சினார்க்கினியர், ‘செங்கடம்பினது தேருருள் போலும் பூவாற் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினை உடையவன்’ என்றார். ஆகவே, செங்கடம்பினது மலர், தேர்ச் சக்கரத்தை ஒத்து மிக அழகாகத் தோன்றும். வட்ட வடிவம்; நடுவில் சிறுதுளை; துளை மருங்கில் வெண்ணிறம்; அதற்கு வெளிப்புறம் இளஞ்சிவப்பு நிறம். மலரின் வட்டத்தை ஒட்டிய மிகச் சிவந்த பிசிர் போன்ற நூற்றுக் கணக்கான தாதிழைகள் நுனியில் தாதுப் பைகள்; அவைகளில் இருந்து வெளிப்படும் குங்கும நிறமான மகரந்தம். இப்பூக்கள் நீண்ட பூவிணரில் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கியது போல மலரும். ஆதலின், இதன் இணர், கோதை போன்றது . இப்பூக்கள் பொய்கையில் மிதக்கும் காட்சியே காட்சி! புலவர்கள் கூறும் இவ்வுண்மைகளையும், நச்சினார்க்கினியர் கண்ட உரைகளையும் கொண்டு, இது செங்கடம்பு என்றும், இதன் தாவரப் பெயர் பாரிங்டோனியா அக்யுடாங்குலா என்றும் அறிய முடிந்தது. இதனுடைய தமிழ்ப் பெயர் ‘அடம்பா’ என்று குறிப்பிடுவார் காம்பிள். கடம்பு என்பது சிதைந்து, அடம்பு எனப்பட்டது போலும். இன்றும் தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் கடம்ப மரத்தை அடம்பு, அடப்ப மரம் என்று கூறுவர். இதுவே தாவரவியலில் இப்பெயரை உடையதாகும்.

இதன் தாதுக்கள் நல்ல செம்மை நிறம் கொண்டவை. இத்துகள் உதிர்ந்து பரவிக் கிடப்பது அழகிய காட்சியாகும். இதனைக் கோபம் எனப்படும் இந்திர கோப வண்டின் நிறம் போன்றது என்றும், பரந்து கிடப்பது, சித்திரத்தைப் போன்று அழகியது என்றும் நத்தத்தனார் பாடினார்:

“ஓவத் தன்ன ஒண்துறை மருங்கில்
 கோவத்தன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்”

-சிறுபா. 70-71


செங்கடம்பு மலர் முருகனுக்குரிய மலராகக் கொள்ளப்பட்டது.

‘உருள்பூம் தண்தார் புரளும் மார்பினன்’ எனத் திருமுருகாற்றுப்படை குறிப்பது போன்று, பிற நூல்களும் முருகனது மார்பில் அணியப்பட்ட மாலையாக அமைந்ததைப் புலப்படுத்துகின்றன. மேலும், இது தலையிலும் சூடப்பட்டது,

“கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி”-நற். 34 : 8

முருகன் என்ற சொல்லுக்கு அழகன் என்று ஒரு பொருள். அழகனாகிய இவன் இக்கடம்பைச் சூடுவதால், மேலும் அழகு பெற்றனன் என்பார் மாங்குடி மருதனார்.

“கடம்பின் சீர்மிகு நெடுவேள் .... பேணி”
-மதுரைக் காஞ்சி. 613-614


இதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘கடம்பு சூடுதலால் அழகு மிகுகின்ற முருகனை வழிபடுகையினாலே’ என்றார். இம்மலரைச் சூடுவதினாலே முருகனுக்குக் ‘கடம்பன்’ என்றொரு பெயர் அமைந்தது. இதனைப் ‘பூக்கும் கடம்பா’ என்ற தொடரால் அறியலாம். பூவைச் சூடுவதோடு கடம்ப மரத்தில் முருகன் இடம் பெறுவதாகக் கருதினார்.

“கடம்பமர் நெடுவேளன்ன”
-பெரும்பா. 75


இங்கு அமர்தல் என்பது விரும்புவதையும், இடம்பெறுவதையும் குறிக்குமென்பர்.

இங்ஙனமே இக்கடம்பு, திருமால் இடங்கொள்ளும் செய்தியைப் பரிபாடல் பகரும்.

“ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
 . . . . . . . . . . . . . . . .
 அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்”

பரி. 4 : 67-69


இக்கடம்ப மாலை முருகனுக்கு உரியதாகையால், முருகனை முன்னிட்டு வெறியாடும் வேலன், இம்மாலையை அணிந்தும், மலரைச் சூடியும் ஆடுவான்.

“கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
 வேலன் கொண்ட வெறிமனை வந்தோய் ”
-நற். 34 : 8-9

இம்மலரைப் பனந்தோட்டுடன் சேர்த்துக் கட்டியும், வேலன் வெறியாடுவான் என்பர் காமக்கண்ணியார்.

“வெண்போழ்க் கடம்புடன் சூடி
 . . . . . . . . . . . . வேலன்
 வெறியயர் வியன் களம்”
-அகநா. 98 : 16-18

மேலைக் கடற்கரைப் பகுதியில் கூலகத்தீவு என்று ஒன்றுண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு ‘கடம்பர்’ என்றொரு இனத்தவர் வாழ்ந்தனர். அப்பகுதியில் ‘கடம்பத்தீவு’ என்பதும் ஒன்று. இக்கடம்பர்களது மன்னன் தனக்குக் காவல் மரமாகக் கடம்ப மரத்தைக் கொண்டிருந்தான். இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் இத்தீவின் மேல் படை எடுத்துச் சென்றான். அங்கிருந்த காவல் மரமாகிய கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி வென்றான். இதனால் அவன் ‘கடற்கடம்பெறிந்த காவலன்’ எனப்பட்டான்.[107]

இவ்வரலாற்றுச் செய்தியைக் குமட்டூர் கண்ணனார் பதிற்றுப்பத்தில் ஈரிடங்களிலும் (பதிற்: 11, 20), மாமூலனார் அகநானூற்றிலும் (127) பாடியுள்ளனர் என்பார் இளஞ்சேரனார். [108]

கடம்பினால் ஒரு நிலம் பெயர் பெற்றது. ஓர் இனத்தவர் பெயர் பெற்றனர். இம்மரம் முருகனும், திருமாலும் தங்குமிடமாகச் சிறந்தது. மதுரைக்குக் கடம்ப வனம் என்று ஒரு பெயரைத் தந்தது. இத்தகைய கடம்பு மிக அழகிய கடப்பம் பூவைப் பூத்தது மட்டுமல்லாமல், புகழும் பூத்தது.

“புலவரை அறியாத புகழ் பூத்த கடம்பு”-பரி. 19 : 2

 

செங்கடம்பு
(Barringtonia acutangula)

மராஅம்—செங்கடம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : லெசித்திடேசி (Lecythidaceae)
தாவரப் பேரினப் பெயர் : பாரிங்டோனியா (Barringtonia)
தாவரச் சிற்றினப் பெயர் : அக்யுடாங்குலா (acutangula)
தாவர இயல்பு : மரம் பசியது. கிளைத்தது. நீர் நிலை ஓரமாகவும், நீரிலும் வளர்ந்திருக்கும். வேடந்தாங்கல் ஏரியின் கரையிலும், ஏரியிலும் வளர்கிறது. சாதாரண உயரம் உள்ளது.
இலை : மெல்லிய அகன்ற தனியிலை. சுற்றடுக்கில் இருக்கும். பல நரம்புகளை உடையது.
மஞ்சரி : நீண்ட நுனி வளரும் பூந்துணர் கீழே தொங்கிக் கொண்டு இருக்கும். தேர்ச் சக்கரம் போன்ற செவ்விய வட்ட வடிவான மலர்களை ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தது போன்று மலர் விடும்.
மலர் : அழகிய இளஞ்சிவப்பு நிறமானது. வட்ட வடிவானது. நடுவில் துளை உள்ளது. மலர்ந்த பின், இணர்க் காம்பிலிருந்து கழன்று கீழே விழும். மலர்த்துளையின் விளிம்பு வெண்ணிறமானது. வெளிப்புறம் செந்நிறமான, நூற்றுக்கணக்கான தாதிழைகளால் ஆனது. தாதிழைகள் நுனியில் வட்டமான வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. வளையத்திற்கு வெளிப்புறத்தில் தாதுப் பைகள் காணப்படும். அவற்றில் செந்நிறத் தாது உகும்.
புல்லி வட்டம் : 4 புறவிதழ் விளிம்புகள் நேர் ஒட்டு முறையில் இணைந்துள்ளன. நடுவில் துளை இருக்கும்.
அல்லி வட்டம் : 4 அகவிதழ்கள் தாதிழைக் குழலுடன் இணைந்துள்ளன.
மகரந்த வட்டம் : பல தாதிழைகள் மெல்லியவை. நீண்டவை. அடுக்கடுக்கானவை. அடியில் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். இவை தேர் உருளையின் ஆரக்கால்கள் போன்றவை. தாதிழைகளில் தாதுப்பைகள் உள்ளன. மகரந்தம் செந்நிறமானது.
சூலக வட்டம் : 2-4 செல்களை உடையது. ஒவ்வொன் றிலும் 2-8 தொங்கு சூல்களை உடையது. சூல்தண்டு நீளமானது. மெல்லியது. சூல்முடி சிறியது.
கனி : பெர்ரி எனப்படும் சதைக்கனி. நீள் உருண்டை வடிவானது. நான்கு பட்டையானது. கனியின் துனியில் புல்லிவட்டம் ஒட்டிக் கொண்டிருககும்.
விதை : ஒவ்வொரு கனியிலும் ஒரு விதை உண்டாகும். விதை அடியிலும், நுனியிலும், சிறுத்தும், நடுவில் பருத்தும் இருக்கும். கரு பெரியது. வித்திலைகள் அருகிப் போயிருக்கும்.

இம்மரம் வலியது. ஆயினும் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. பட்டை கரும்பழுப்பு நிறமானது. மரம் வெண்மையானது. மென்மையானது. அழகிய வெள்ளிய ஆரங்களை (கோடுகளை) உடையது.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 26 என்று சப்தி சிங் (1961) என்பாரும், ராய் ஆர். பி. ஜா (1965 பி) என்பாரும் கூறுவர்.

 

காயா–பூவை
மிமிசைலான் எடுயூல் (Memecylon edule, Roxb.)

காயா என்னும் புதர்ச்செடியைக் ‘காயா’ எனக் கபிலரும் (குறிஞ். 70) ‘பூவை’ எனச் சீத்தலைச் சாத்தனாரும் (அகநா. 134), ‘பறவாப் பூவை’ எனக் கடுவன் இளவெயினனாரும் அழைப்பர்.

காயா பூத்திருக்கும் நிலையில் மயிற்கழுத்து போன்று பளபளப்பான நீலநிறமாக இருக்கும். இதன் மலரின் அகவிதழ்களுக்கடியில் செந்நிறம் காணப்படும். பெயல் பெய்து கழிந்த வைகறைப் பொழுதில் முன்னாள் பூத்த இதன் மலர்கள் உதிர்ந்து கிடக்கும். மழையின் தண்மை கண்டு வெளிப்படும் ‘தம்பலப் பூச்சி’ எனப்படும் செந்நிறமான மூதாய்ப்பூச்சி, குறுகுறுவென அங்குமிங்கும் ஓடித் திரியும். இக்காட்சி, மணிமிடை பவளம் போல அணி மிக இருந்தது என்கிறார் புலவர். அகநானூற்றில் ‘மணிமிடை பவளம்’ என்ற சொற்றொடர் ‘நித்திலக்கோவை’ப் பகுதியில் (அகநா: 304) அமைந்துள்ளவாறு நோக்குதற்குரியது.

சங்க இலக்கியப் பெயர் : காயா
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : பூவை
பிற்கால இலக்கியப் பெயர் : காயாம்பூ
உலக வழக்குப் பெயர் : காசாம்பூ
தாவரப் பெயர் : மிமிசைலான் எடுயூல்
(Memecylon edule, Roxb.)

காயா–பூவை இலக்கியம்

‘பசும்பிடி வகுளம் பல்லிணர்க்காயா’ என்றார் குறிஞ்சிக் கபிலர் (குறிஞ். 70) ‘பல்லிணர்க்காயா’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பல கொத்துக்களை உடைய காயாம்பூ’ என்று உரை கூறினார். காயாம்பூச் செடியைச் சிறு புதர் எனலாம். இது கொத்துக் கொத்தாகப் பூக்கும். பூக்கள் மிக அழகிய பளபளப்பான நீல நிறமுள்ளவை. மலரின் அகவிதழ்களுக்கடியில் செந்நிறம் இருக்கும். இச்செடி பூத்திருக்கும் காட்சியை இடைக்காடனார் இரண்டு அகநானூற்றுப் பாடல்களில் சித்திரிக்கின்றார். முல்லை நிலத்தில் நல்ல மழை தொடங்கியுள்ளது. பெயல் பெய்து கழிந்த வைகறைப் பொழுதில் முன்னாள் பூத்த நீலக் காயா மலர்கள் விழுந்துள்ளன. மழையைக் கண்டு, மண்ணிலிருந்து வெளிப்படும் தம்பலப் பூச்சி எனப்படும் மூதாய்ப் பூச்சிகள், அவற்றினிடையே குறுகுறு என ஊர்ந்து செல்கின்றன. நீல மலர்களிடையே சிவந்த மூதாய்ப் பூச்சிகள் தோன்றும் காட்சி. ‘மணிமிடை பவளம் போல அணிமிக’ இருந்ததென்கிறார் புலவர். இங்கே ‘மணிமிடை பவளம்’ என்ற சொற்றொடரை விளக்குதல் வேண்டும்.

அகநானூற்றைத் தொகுத்தவர் அதனை மூன்று பிரிவுகளாக வகுத்தார். முதல் நூற்றிருபது பாக்களுக்கும் ‘களிற்றியானை நிரை’ என்று பெயர். நூற்றிருபத்து ஒன்று முதல் முன்னூறு வரையிலான பாக்களுக்கு ‘மணிமிடை பவளம்’ என்று பெயர். முன்னூற்று ஒன்று முதல் நானூறு வரையிலான பாக்களுக்கு ‘நித்திலக் கோவை’ என்று பெயர். இவற்றுள் ‘மணிமிடை பவளம்’ என்ற சொற்றொடர் நித்திலக் கோவை என்ற பகுதியில் காணப்படுகிறது. இச்சொற்றொடரை உருவாக்கிய இடைக்காடனார், நீலமணி போன்ற காயம்பூக்களிடையே பவளம் போன்ற மூதாய்ப்பூச்சி ஊர்ந்து செல்வதைக் கூறுகின்றார்.

“பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறை
 செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
 குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
 மணிமண்டு பவளம் போல காயா
 அணிமிகு செம்மல் ஒளிப்பன மறைய
 கார்கவின் கொண்ட காமர் காலை”

-அகநா. 374 : 10 - 15
“மணிமிடை பவளம்போல அணி மிகக்
 காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
 ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப
 புலன்அணி கொண்ட கார் எதிர்காலை”

-அக. 304 : 13-16


காயாம்பூ இற்றை நாளில் காசாம்பூ என வழங்கப்படுகிறது. இதன் கருநீல நிறம் கண்ணுக்கிடும் அஞ்சனம் போன்றது. இதற்கு அஞ்சனி, காசை, வச்சி என்ற பெயர்களை நிகண்டுகள் சூட்டுகின்றன. சங்க இலக்கியத்தில் இதன் மற்றொரு பெயர் ‘பூவை’ என்பதாகும். பூவை என்னும் சொல், நாகணவாய்ப் புள்ளையும், காயாவையும் குறிக்கும். பறக்கும் இப்புள்ளினத்தினின்றும் பிரித்துக் காட்டுதற்கு இதனைப் ‘பறவாப் பூவை’ என்றார் கடுவன் இளவெயினனார்:

“பறவாப் பூவைப் பூவினாயே”-பரி. 3:73

இப்பூ முல்லை நிலத்தது; செந்நில வழியிற் பூக்கும். சிறுபான்மை குறிஞ்சியிலும் பூக்கும்; கார் காலப்பூ; காலையில் பூத்து, இரவில் உதிரும்; குற்றுச் செடியில் கொத்துக் கொத்தாகப் பூக்கும்; இதன் முனை அரும்பு கருமையானது. மலர்ந்தால், இப்பூ மயிற் கழுத்து போன்று பளபளக்கும் நீல நிறத்தது. வீழ்ந்து வாடினால், கருமையாக இருக்கும். மலர் மெல்லியது; மணமுள்ளது; காண்போர் உள்ளங் கவர்வது என்றெல்லாம் புலவர் பெருமக்கள் விதந்து கூறுவர்.

“அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழி
 காயாஞ் செம்மல் தாஅய்.”
-அகநா. 14 : 1-2

“காயாங் குன்றத்துக் கொன்றை போல”-நற். 371 : 1

“கமஞ்சூல்மா மழைக்கார் பயந்து இறுத்தென
 மணிமருள் பூவை அணிமலர் இடைஇடை
 செம்புற மூதாய் பரத்தலின்”
-அகநா.134 : 3-5

“புல்லென் காயப் பூக்கெழு பெருஞ்சினை
 மென்மயில் எருத்தின் தோன்றும்”
-குறுந். 183 : 5-6

“கொல்லை இதைய குறும்பொறை மருங்கில்
 கரிபரந்தன்ன காயாஞ் செம்மலொடு”
-அகநா. 133 : 7-8

“மெல்லிணர்க் கொன்றையும்
மென்மலர் காயாவும்”
-கலி. 103 : 1

“இது என்பூவைக்கு இனிய சொற்பூவை”-ஐங். 375 : 3

காயாம்பூ நீலநிறமானது. நீல மணி போன்றது. இது மணி என்னும் அடைமொழியுடன் கூறப்படுகின்றது.

“மணிபுரை உருவின் காயாவும்”-கலி. 101 : 5

“மணிமருள் பூவை அணிமலர்”-அகநா. 134 : 3

“பொன்கொன்றை மணிக்காயா”-பொருந. 201

பூவை எனப்படும் இக்காயா மலர் கருநீல மணிக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இந்நிறத்தையே திருமாலின் நிறத்திற்கு உவமித்தனர்.

“கார், மலர்ப்பூவை, கடலை,இருள் மணி
 அவைஐந்தும் உறமும் அணிகிளர் மேனியை”
-பரி. 13 : 42-43

“பறவாப் பூவைப் பூவினாயே”-பரி. 3 : 73

“எரிமலர் சினைஇய கண்ணை பூவை
 விரிமலர் புரையும் மேனியை மேனித்
 திருஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை”
-பரி. 1 : 6-8

“நின்நாற்றமும் ஒண்மையும் பூவைஉள”-பரி. 4 : 29

“பூவைப் புதுமலர் ஒக்கும் நிறம்”[109]

“பூவைப் பூவண்ணன் அடி”[110]

பூவைப் பூவண்ணனின் தொடர்பாகத் தொல்காப்பியத்தில் பூவை நிலை என்ற ஓர் இலக்கணத் தொடர் அமைந்துள்ளது.

“தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்”
-தொல், பொருள். 63 : 10


இதற்கு உரை கூறிய இளம்பூரணர், ‘பூவை மலர்ச்சியாகக் கண்டு மாயோன் நிறத்தை ஒத்ததெனப் புகழ்தல்; நாடெல்லை காடாதலின் அக்காட்டிடைச் செல்வோர் அப்பூவைக் கண்டு கூறுதல்; உன்னங் கண்டு (நிமித்தம்) கூறினாற் போல இதுவும் ஒரு வழக்கு’ என்று இதனை ஒரு வழக்காகக் குறிப்பிட்டுள்ளார். பூத்த காயாம்பூச் செடியின் மேலேறிச் செங்காந்தள் மலர்ந்திருந்தது. அக்காட்சி திருமாலின் திருமார்பில் திருமகள் தங்கியது போன்றிருந்தது. இதனைத் திருமைலாடிச் சிறுபுறவில் யாம் கண்டு தற்குறிப்பேற்றி மகிழ்ந்ததுண்டு. காயாம்பூச் செடியில் செங்காந்தள் ஏறிப் படர்ந்து “காயா மென்சினை தோய நீடிப் பல்துடுப்பெடுத்த அலங்கு குலைக் காந்தள்

அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி”அகநா.





|தாவர இயல் வகை||: ||பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |-style="vertical-align:text-top;" |தாவரத் தொகுதி||: ||காலிசிபுளோரே, மிர்ட்டேலீஸ்
(Myrtales) அகவிதழ்கள் பிரிந்தவை. |-style="vertical-align:text-top;" |தாவரக் குடும்பம்||: ||மெலஸ்டோமேசி (Melastomaceae) |-style="vertical-align:text-top;" |தாவரப் பேரினப் பெயர்||: ||மிமிசைலான் (Memecylon) |-style="vertical-align:text-top;" |தாவரச் சிற்றினப் பெயர்||: ||எடுயூல் (edule) |-style="vertical-align:text-top;" |தாவர இயல்பு||: ||குற்றுச்செடி, புதராகவும் வளரும். |-style="vertical-align:text-top;" |தாவர வளரியல்பு||: ||மீசோபைட் |-style="vertical-align:text-top;" |இலை||: ||தனி இலை, பளபளப்பானது. தோல் போன்றது. தடித்தது. இலைக் காம்பு மிகச் சிறியது. இலை விளிம்பின் ஓரமாக இலை நரம்பு சுற்றியிருக்கும். |-style="vertical-align:text-top;" |மஞ்சரி||: ||இலைக் கட்கத்தில் கலப்பு மஞ்சரியாக வளரும். கொத்துக் கொத்தாகக் காட்சி தரும்.

|மலர்||: ||பளபளப்பான கருநீல நிறமானது. அகவிதழ்களின் உட்புறத்தி

ல் அடியில் செந்நிறமாக இருக்கும். இலையடிச் செதில்கள் உள்ளன.

|-style="vertical-align:text-top;" |புல்லி வட்டம்||: ||4. புறவிதழ்கள் இணைந்து, புனல் போன்று அடியில் குழல் போன்றது. |- |}



காயா
(Memecylon Edule)

அல்லி வட்டம் : 4 அகவிதழ்கள்-கருநீல நிறமானவை. அடியில் உட்புறமாகச் சிவந்திருக்கும். இதழ்கள் இரவில் உதிர்ந்து கருகி விடும்.
மகரந்த வட்டம் : 8 தாதிழைகள் நீளமானவை. தாதுப் பைகள் சிறியவை. தாதுப் பைகளின் இணைப்பு அடிப்புறத்தில் தடித்துக் கறுப்பாக இருக்கும்.
சூலக வட்டம் : ஒரு சூலிலைச் சூலகம். 12 முதல் 16 சூல்கள் வரை சூலறையின் நடுவே காணப்படும். சூல்தண்டு மெல்லியது.
கனி : பெர்ரி எனப்படும் சதைக்கனி; ஒரு விதை உள்ளது. எளியோர் இதனை உண்பதுமுண்டு.
விதை : பெரியது. வித்திலைகள் மடிந்து இருக்கும்.

இதன் தண்டு வலியது. விறகாகப் பயன்படும். வறண்ட பசிய இலைக் காடுகளில் வளர்கிறது. 4500 அடி உயரம் வரையிலான மலைப் பாங்கிலும் வளரும்.

மிமிசைலான் என்ற இப்பேரினத்தில் 18 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் வளர்கின்றன.

 

அனிச்சம்
லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே
(Lagerstroemia flos-reginae, Retz.)

‘ஒண்செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்’ (குறிஞ். 62) என்று வரும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டடியில் உள்ள, ‘அனிச்சம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் அனிச்சம்பூ என்று உரை கூறினார். கலித்தொகையும் அனிச்சத்தைக் குறிப்பிட்டுள்ளது (கலி. 911)

‘மோப்பக் குழையும் அனிச்சம்’ என்பது வள்ளுவர் வாக்கு (திருக்கு. 90). இவ்வியல்புடைய ‘அனிச்சம்’ செடியா? கொடியா? மரமா? எங்குள்ளது? என்ற வினாக்களுக்குத் தக்க விடையிறுக்க இயலவில்லை.

எனினும் அனிச்சம் என்ற பெயரில் சீலங்காவில், ‘பாரடேனியா’ தாவரத் தோட்டத்திலும், மலேசியாவில் ‘கோலாலம்பூர்’ தாவரத் தோட்டத்திலும் வளர்க்கப்படும் சிறு மரத்திற்கு லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே என்ற தாவரப் பெயர் சூட்டப் பெற்றுள்ளது. இச்சிறுமரம் புதர்ச் செடி போன்று காணப்படுகிறது. பங்களூர் ‘லால்பாக்’ தாவரத் தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. இதற்கு ‘பிரைட் ஆப் இந்தியா’ (Pride of India) இந்தியப் பெருமித மலர் என்று பெயர். இதன் பூ மிக அழகானது. மென்மையானது. இளஞ்சிவப்பு நிறமான ஆறு அகவிதழ்களை உடையது. மகரந்த வட்டத்தில் பல மகரந்தங்கள் திரண்டு பூவின் நடுவில் மஞ்சள் நிறமாக இருக்கும். ஆனால், இப்பூவை மோந்தால் குழையும் இயல்பு இல்லை. இதுதான் ‘அனிச்சம்’ என்று துணிதற்கில்லையாயினும் இப்போதைக்கு இதனை அனிச்சம் எனக் கருதி இதன் தாவரவியல்புகளைப் பற்றிச் சிறிது கூறுவாம்.

சங்க இலக்கியப் பெயர் : அனிச்சம்
பிற்கால இலக்கியப் பெயர் : அனிச்சம்
உலக வழக்குப் பெயர் : தடலி
தாவரப் பெயர் : லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே
(Lagerstroemia flos-reginae, Retz.)

அனிச்சம் இலக்கியம்

‘ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்’ (குறிஞ். 62) என்று குறிஞ்சிக் கபிலர் காந்தள் மலருக்கு அடுத்தபடியாக அனிச்ச மலரைக் கூறுகின்றார். ‘அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்’ (கலி. 91 : 1) என்பது கலித்தொகை. இவ்விரு வரிகளும் முறையே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுள் காணப்படுகின்றன. அனிச்சம் என்ற பூவின் பெயரையன்றி, வேறு குறிப்புகளை இவ்வரிகளில் காணவியலவில்லை.

இவையன்றி அனிச்ச மலரைப் பற்றிய செய்திகளை மிகுத்துக் கூறுவது திருக்குறள். இந்நூல் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாயினும், அனிச்சத்தின் சிறப்பியல்பு கருதி இங்ஙனம் விரித்துரைத்தாம்.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
 நோக்கக் குழையும் விருந்து”
-திருக்கு. 90

“நல்நீரை வாழி அனிச்சமே நின்னினும்
 மென்னிரள் யாம் வீழ்பவள்”
-திருக்கு. 1111

“அனிச்சம்பூக் கால்களையாப் பெய்தாள் நுசுப்பிற்கு
 நல்ல படாஅ பறை”
-திருக்கு. 1115

“அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
 அடிக்கு நெருஞ்சிப் பழம்”
-திருக்கு. 1120

அனிச்சமலர் மோந்து பார்க்கும் அளவானே குழையும் தன்மையது என்று அதன் மென்மையைக் கூறுகின்றார். இதனால், மலரின் உயிர்த் தன்மையைக் காட்டுகின்றார் (90). இத்துணை மென்மையுடைய அனிச்ச மலரைக் காட்டிலும், மென்மையுடையவள் எம்மால் விரும்பப்பட்ட தலைமகள் என்று தலைவியின் மென்மையைப் புலப்படுத்துகின்றார் (1111). அனிச்ச மலருக்குக் காம்பு உண்டு என்பது அறியப்படும். அக்காம்பினை அகற்றாமல், தோழி இப்பூவினைத் தலைவியின் தலையிற் சூட்டினாள். இதனை இங்ஙனம் பெய்ததினால், அவளது இடை இதன் பளுவைத் தாங்க முடியாது இற்று விடும் என்று கூறி, மலரைக் காட்டிலும் காம்பு கனமுள்ளது என்பதையும், அனிச்ச மலர் மென்மையுடன் இலேசானது என்பதையும் புலப்படுத்துகின்றார் (1115). மேலும், அனிச்ச மலர் மாதரடிக்கு நெருஞ்சியின் முள் போன்றது என்று அனிச்ச மலரின் மென்மையினும் மாதரடியின் மென்மையை விதந்து கூறுகின்றார். (1120)

இத்துணை மென்மை வாய்ந்த அனிச்ச மலர் என்பது யாது? எங்குளது? என்ன நிறம்? எப்பொழுது பூக்கும்? அனிச்சம், மரமா? செடியா? கொடியா? இவ்வினாக்களுக்குச் சங்க இலக்கியத்தில் விளக்கமில்லை.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர் அ. நமச்சிவாய முதலியார் அவர்கள், லஷிங்டன் என்ற தாவரவியல் அறிஞர்க்குத் தமிழ் நாட்டு மரஞ்செடிகொடிகளின் தமிழ்ப் பெயர்களை அறிவுறுத்தினார் என்பர். லஷிங்டன் அவரது உதவியைக் கொண்டு, அன்றைய சென்னை மாநிலத்தில் வளரும் மரம், செடி, கொடிகளின் தமிழ்ப் பெயர்ப் பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் அப்பட்டியலில் ‘அனிச்சம்’ என்பது ‘லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே’ எனற தாவரப் பெயர் உடையதென்று குறிப்பிட்டுள்ளார்.

உலகில் உள்ள மிகப் பெரிய தாவரப் பூங்காக்களில் தாவரங்களுக்குத் தாவரப் பெயரை எழுதி விளக்குவது வழக்கம். இவற்றின் தாவரப் பெயருடன் தமிழ்ப் பெயரைச் சேர்த்து எழுதும் இரு பூங்காக்கள் உள்ளன. ஒன்று பாரடேனியா தாவரத் தோட்டம். இது சீலங்காவில் உள்ளது. மற்றொன்று கோலாலம்பூர் தாவரத் தோட்டம். இது மலேசியாவில் உள்ளது. இவ்விரு தோட்டங்களிலும் லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே என்ற சிறு மரத்திற்குத்தான் அனிச்சம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் உலர் படிவம் ஒன்றையும் யாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து வேண்டிப் பெற்றனம். இது மிக அழகான செவ்விய பூக்களையுடையது. இச்சிறு மரத்தை ஆங்கிலத்தில் (Pride of India) இந்தியாவின் பெருமிதம் என்று அழைப்பர்.

இப்போது இச்சிறுமரம் பங்களூரில் உள்ள லால்பாக் தாவரப் பூங்காவில் வளர்க்கப்படுகிறது.

இம்மலர் மிகவும் மெல்லியது. ஆயினும் மோப்பக் குழையும் இயல்பு இதில் இல்லை. இதனால் இது அனிச்சமன்று என்று கூறுவாறுமுளர். இதுவன்றி, வேறு சில புதர்ச் செடிகளை அனிச்சம் என்று கூறுவாரும் இந்நாளில் உண்டு. அனிச்சம் தமிழ் நாட்டில் இப்போது இல்லை. அஃது அழிந்து விட்டது என்பாரும் உளர். இதனை வலியுறுத்தும் செய்தி ஒன்றுண்டு. 1975 ஆம் ஆண்டு தொட்டு மேற்கு ஜெர்மனி நாட்டிலிருந்து ‘தாவர ஆய்வும் வளர்ச்சியும்’, (Plant Research and Development) என்ற பெயரில் ஓர் ஆய்விதழ் வெளியாகி வருகின்றது. இதில் ரோஸ்வித்தா ஷிமிட் (Roswittha schmid) என்ற பேராசிரியர், இன்றைய உலகில் அழிவை நோக்கும் தாவரங்கள் என்ற கட்டுரையில், ஏறத்தாழ 20,000 தாவர இனங்கள் அழிந்தும், அழிவை நோக்கியும் உள்ளன என்று IUCN குழுவினர் கணக்கிட்டுள்ளதாகக் கூறுகின்றார் (தொகுதி: 1 : பக்: 1.04). இதில் அனிச்சமும் ஒன்றாக இருக்கலாமென்ற எண்ணம் எழுகிறது.

இருப்பினும், சீலங்கா தமிழ் மக்களும், மலேசியா தமிழ் மக்களும் அனிச்சமெனக் கருதும் லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே என்ற சிறுமரத்தைப் பற்றி எமது ‘பூ மரங்கள்’ என்ற தமிழாக்கப் புத்தகத்தில் (பக். 163) விரிவாகக் காணலாம்.

அனிச்சம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே, அகவிதழ்கள் இணையாதவை
தாவரக் குடும்பம் : லித்ரேசி (Lythraceae)
தாவரப் பேரினப் பெயர் : லாகர்ஸ்ரோமியா (Lagerstroemia)
தாவரச் சிற்றினப் பெயர் : பிளாஸ்ரீஜினே (flos-reginae)
தாவர இயல்பு : புதர்ச்செடியாகத் தோன்றும், சிறு மரம். ஏறக்குறைய 20 அடி உயரம் வளரும்.
இலை : தனி இலை அகன்றது. பசுமையானது. பெரியது. தண்டின் அடியில் எதிரடுக்கிலும், நுனியில் மாற்றடுக்கிலும் உண்டாகும். இலையின் அடிப்புறம் வெளிர் பச்சை நிறமானது.
 


அனிச்சம்
(Lagerstroemia flos-reginae)

மஞ்சரி : இலைக்கோணத்தில் 1 முதல் 2 அடி நீளமான நுனி வளர் பூந்துணர். எனினும், கலப்பு மஞ்சரியாக வளர்ந்து விடும்.
மலர் : செந்நிறமானது. கவர்ச்சியானது. அழகானது. இளஞ்சிவப்பு நிறமானது. பூக்கள் உதிரும் போது, வெளுத்து விடும். இது இந்தியப் பூக்களில் சிறந்தது என்பர். இதற்கு இரு மலர்ச் செதில்கள் உள்ளன.
புல்லி வட்டம் : 6 புறவிதழ்கள் இணைந்து, புனல் வடிவானது.
அல்லி வட்டம் : 6 அகவிதழ்கள் உடையது. அகவிதழ்களுக்குச் சிறு காம்பு காணப்படும். இலையில் உள்ளது போன்று, நடு நரம்புப் பக்கத்தில் கிளை நரம்புகளும் உள்ளன. அகவிதழ் சற்று மடிந்து சுருங்கியிருக்கும். இதனால் இதனை மடிப்புப் பூவென்பது முண்டு. ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை பூக்கும்.
மகரந்த வட்டம் : பலப்பல மகரந்த இழைகள் திரண்டு, மலரின் நடுவில் மஞ்சள் நிறமாகத் தோன்றும். நீண்ட இழைகள், புல்லி வட்டத்தின் அடியிலிருந்து தோன்றும்.
சூலக வட்டம் : 3 முதல் 6 செல்களை உடையது. பல சூல்கள் அச்சு ஒட்டு முறையில் இணைந்துள்ளன. சூல்தண்டு நீண்டு வளைந்தது. சூல்முடி உருண்டை வடிவானது.
கனி : கனி முற்றியவுடன் 6 பகுதிகளாக வெடிக்கும். புறவிதழ் கனியின் அடியில் சுருங்கி ஒட்டிக் கொண்டிருக்கும்.
விதை : விதைகள் பழுப்பு நிறமானவை. சிறகு போன்று விரிந்திருக்கும். மெல்லிய வித்திலைகள், மடிந்து வட்டமாகத் தோன்றும்.
 

பீரம்-பீர்க்கு
லஃபா ஈஜிப்டிகா (Luffa aegyptica, Mill.)

‘பாரம், பீரம் பைங்குருக் கத்தி’ என வரும் குறிஞ்சிப் பாட்டடியில் உள்ள ‘பீரம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பீர்க்கம்பூ’ என்று உரை கூறினார்.

‘பீர்க்கு’ ஒரு கொடி. மஞ்சள் நிறமான பூக்களை உடையது. பசலையூர்ந்த மகளிரின் நிறம், இதன் நிறத்திற்கு உவமிக்கப்படும்.

சங்க இலக்கியப் பெயர் : பீரம்
உலக வழக்குப் பெயர் : பீர்க்கு
தாவரப் பெயர் : லஃபா ஈஜிப்டிகா
(Luffa aegyptica, Mill.)

பீரம்-பீர்க்கு இலக்கியம்

‘பாரம் பீரம் பைங்குருக்கத்தி’ என்றார் கபிலர் (குறிஞ். 92). இதில் வரும் ‘பீரம்’ என்ற சொல் பீர் + அம் → பீரம் என்றாயிற்று.

‘பீர் என்கிளவி அம்மொடு சிவனும்’ எனக் கூறும் தொல்காப்பியம் (எழு. 366). பீரம் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பீர்க்கம்பூ’ என்று உரை கூறினார்.

“இவர்கொடிப் பீரம் இரும்பிதல் மலரும்-ஐங். 464 : 2

என்னும்படி இம்மலர் ஒரு கொடிப் பூவாகும். பீர்க்கங்கொடி தழைத்துப் புதர் போலப் படரும். இது கார்காலத்திற் பூக்கும் என்பதை அழகுறக் குறிப்பிடும் திணை மாலை நூற்றைம்பது.

“கார்தோன்ற காதலர்தேர் தோன்றா தாகவே,
 பீர்தோன்றி நீர்தோன்றும் கண்
[111]

பீர்க்கம்பூ சிறியது; அழகானது; பொன் போன்ற மஞ்சள் நிறமானது. காதலனைப் பிரிந்த தலைவிக்கு உண்டாகும் நிற வேறுபாடு, ‘பசலை’ எனப்படும். ‘பசப்பு’ என்பதும் இதுவே. ‘பசலை’ பாய்ந்த மகளின் நிறம் பீர்க்கம் பூவை ஒத்து, மஞ்சள் நிறத் தேமலாகத் தோன்றும். இதனை நெற்றியில் காணலாம் என்பர்.

“பசுநிலா விரிந்த பல்கதிர் மதியின்
 பெருநல் ஆய்கவின் ஒரீஇ சிறுபீர்
 வீ ஏர் வண்ணம் கொண்டன்று
 . . . . . . . . . . . . சிறுநுதலே”
-அகநா. 57 : 11-13

“பொன்போல் பீரமொடு புதல்புதல் மலர”நெடுநல். 14

“பொன்என இவர் கொடிப் பீர்”-ஐங். 464

“தோளேதொடி நெகிழ்ந் தனவே நுதலே
 பீர்இவர் மலரில் பசப்பூர்ந் தனவே”
-நற். 197 : 1-2

நெற்றியிற் காணப்படும் பசலையைக் கண்ட ஊரார் அலர் உரைப்பர். அலர் உரைத்தலாலும், பசலை உண்டாகும்; நறுநுதல் வனப்பிழக்கும்; உடல் மெலியும்.

“ஊர்அலர் தூற்றலின் ஒளிஓடி நறுதுதல்
 பீர்அலர் அணிகொண்டு பிறை வனப்பு
 இழவாக்கால்”
-கலி. 53 : 14-15

பசலை படர்ந்த தலைவியின் உரையாடலை நற்றிணைப் பாடல் ஒன்று கூறுகின்றது.

பீர்க்கம்பூ பொன் நிறமானது. எனினும், மணமில்லாதது. மணத்தில் நாடி பார்க்கும் வல்லமை கொண்டது தும்பி என்பர். இதனைக் கடிந்து கொள்ளுகின்றாள் காதலனைப் பிரிந்த ஒருத்தி.

‘தும்பியே! நீ கொடியை! முள் வேலியிற் படர்ந்த பீர்க்கம் பூவை ஊதித் தேனைப் பருகினாய். எனினும் முகம் சுளித்தாய். அப்பூவில் மணமில்லாமையின் முகம் வேறுபட்டாய் போலும்! நீ ஒன்று செய்திருக்கலாம். என் உடம்பில் படர்ந்துள்ள பசலையை ஊதியிருக்கலாம். மணமாவது பெற்றிருப்பாய்! இருப்பினும் வாழி!’ என்று கூறுகிறாள்.

 


பீரம்
(Luffa aegiptica)

“கொடியை வாழி தும்பி இந்நோய்
 நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய
 தாதுபடு பீரம் ஊதி வேறுபட
 நாற்ற மின்மையின் பசலை ஊதாய்”
-நற். 277 : 1-6-8

‘கொங்குதேர் வாழ்க்கைத் தும்பியை’ இங்ஙனம் ‘கொடியை’ என விளித்துப் பாடிய புலவரின் பெயர் தும்பிசேர் கீரனார்.

படப்பையில், வேலியில், புதரில், பீரம் படரலாம். ஆனால் இல்லின் மேல், மனையில், மன்றத்தில் படரக் கூடாது. மனையில் பீரம் முளைத்தால், அது பாழ்மனை என்று பொருள்.

“முனை கவர்ந்து கொண்டெனக் கலங்கிப்பீர்
 மனைபாழ் பட்ட மரைசேர் மன்றத்தில்”

-அகநா. 373 : 1-2


என்று ஏனாதி நெடுங்கண்ணனாரும்.

“பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
 பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்”
-புறநா. 116 : 5-6

என்று கபிலரும்,

“கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ
 ஊர்எழுந்து உலறியபீர் எழுமுது பாழ்”
-அகநா. 167 : 10

எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும், இவ்விளைவைப் பாடியுள்ளனர்.

இதன் காய் உணவுக்கு உதவும். இதன் முற்றிய கனி உடம்பு தேய்த்துக் குளிக்கப் பயன்படும். இதனைப் பிளெஷ்பிரஷ் (Flesh brush) என்பர்.

பீரம்—பீர்க்கு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே; பாசிபுளோரேலீஸ்;

அகவிதழ் இணையாதது என்பர் . எனினும், இதன் குடும்பத்தில் அகவிதழ்கள் இணைந்திருக்கும்.

தாவரக் குடும்பம் : குக்கர்பிட்டேசி(Cucurbitaceae)
தாவரப் பேரினப் பெயர் : லஃபா (Luffa)
 

பீர்க்கு
(Luffa acutangula)

தாவரச் சிற்றினப் பெயர் : ஈஜிப்டிகா (aegyptica)
தாவர இயல்பு : கிளைத்துப் படரும் ஏறுகொடி; நீளமானது, ஓராண்டுக் கொடி.
இலை : தனியிலை; அகலமானது; 5-7 பிளவுகளை உடையது.
மஞ்சரியும் மலரும் : பால் வேறுபாடுள்ள தனித் தனி மலர்கள் மஞ்சள் நிறமானவை; ஆண் மலர் நுனிவளர் பூந்துணரில் பூக்கும்; பெண்மலர் தனியாக இலைக் கோணத்தில் உண்டாகும்.
புல்லி வட்டம் : ஐந்து புல்லிகள் ஆண்மலரில் இணைந்து, புனல் வடிவமாக இருக்கும். பெண் மலரில் நீண்ட குழல் வடிவாக இருக்கும்; சூலகத்தை முற்றிலும் மூடியிருக்கும்.
அல்லி வட்டம் : இருபாலான மலர்களும் மஞ்சள் நிறமானவை; அகவிதழ்கள் அடியில் இணைந்திருக்கும். மேலே இவை 5 மடல்களாகப் பிளவுபட்டு இருக்கும்.
மகரந்த வட்டம் : ஆண் பூவில் 3-5 தாதிழைகள் புல்லியின் அடியில் இணைந்துள்ளன. தாதுப்பைகள் தனித்து நன்கு வெளிப்பட்டிருக்கும். தாதுப்பை இணைப்பு அகன்றது; பெண் பூவில் 3 மலட்டுத் தாதிழைகள் காணப்படும்.
சூலக வட்டம் : மூன்று சூலிலைகளை உடைய ஓரறைச் சூலகம். பல சூல்கள் உண்டாகும்.
சூல் தண்டு : பெண் பூவில் மட்டும் உண்டு. கம்பி போன்றது. சூல்முடி 3 பிளவானது.
கனி : நீளமான, தடித்த, பசிய காய். புறத்தில் 10 நீண்ட விளிம்புகளைச் சுற்றிலும் உடையது
விதை : பல கரிய பட்டையான விதைகள்.


இதன் காய் உணவுக்குப் பயன்படும். இதனால் இது தமிழ்நாட்டில் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. வீட்டுக் கூரைகளிலும், வேலிகளிலும் படர்ந்து வளரும்.

 

வானி–ஓமம்
கேரம் காப்டிகம் (Carum copticum,Benth.)

வானி-ஓமம் இலக்கியம்

‘பயினி வானி பல்லிணர்க் குரவம்’ என்றார் கபிலர் (குறிஞ். 68). நச்சினார்க்கினியர் ‘வானி’ என்பதற்கு ‘வானிப்பூ’ என்று உரை கூறினார். வடமொழியில் ஒருவகையான ஓமத்தை, ‘பாசிகாயவானி’ என்பர். அகரமுதலிகள் ‘ஓமம் என்னும் பூண்டு’ என்பதைக் கொண்டால் வானிப்பூவை ஓமம் என்று கொள்ளலாம். இதன் பூ வெண்மையானது. இதன் கனி ஓமம் எனப்படும். இதிலிருந்து ஓம நீர் வடித்தெடுக்கப்படுகிறது. உணவைச் சீரணிக்கச் செய்யும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு.

சங்க இலக்கியத்தில் வானி என்ற சொல் வேறு யாண்டும் காணப்படவில்லை.

வானி–ஓமம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
அம்பலேலீஸ் (umbellales)
அகவிதழ்கள் இணையாதது
தாவரக் குடும்பம் : அம்பெலிபெரே (Umbelliferae)
தாவரப் பேரினப் பெயர் : கேரம் (Carum)
தாவரச்சிற்றினப்பெயர் : காப்டிகம் ( copticum, Benth)
சங்க இலக்கியப் பெயர் : வானி
உலக வழக்குப் பெயர் : ஓமம்
தாவர இயல்பு : செடி; நுண்மயிர் இலைகளிலும், தண்டிலும் அடர்ந்திருக்கும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்; குளிர்ந்த நிலப்பாங்கில் பயரிடப்படுகிறது. செடி 1-3 அடி உயரமானது; தழைத்து நேராக வளரும்.
இலை : 2-3 முறை சிறகன்ன பிளவுபட்டது. சிற்றிலை நீளமானது. இலையடிச் செதிலிருக்கும்.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர் ‘அம்பெல்’ எனப்படும். ஆயினும் 6-16 கிளைகள் ஒரே மட்டமாகத் தட்டு போலப் பரவியிருக்கும்.
கனி : ஏறத்தாழ முட்டை வடிவானது. புற விளிம்புகளும் ‘விட்டே’யும் காணப்படும்.

இந்திய நாட்டில் பஞ்சாப் முதல் வங்காளம் வரையிலும், தெற்கே டெக்கான் வரையிலும் பெரிதும் பயிரிடப்படுகிறது.

மேற்கு ஆசியா, தெற்கு யூரோப், வடக்கு, கிழக்கு ஆப்பிரிக்கா முதலிய நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.

சிறந்த மருந்துச் செடி. இதன் கனியே ஓமம் எனப்படும்.

 

“சே”–அழிஞ்சில்
அலாஞ்சியம் சால்விபோலியம்
(Alangium salvifolium, Wang.)

தொல்காப்பியத்தில் ‘சே’ என்னும் பெயர் பெற்றது இம்மரம். சிலப்பதிகாரமும், பிங்கலமும் இதனை ‘அழிஞ்சில்’ என்று குறிப்பிடுகின்றன. மற்று. இதனைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. எனினும், இது உயரமாக வளரும் ஒரு வலிய மரம்.

தொல்காப்பியப் பெயர் : ‘சே’
பிற்கால இலக்கியப் பெயர் : அழிஞ்சில்
தாவரப் பெயர் : அலாஞ்சியம் சால்விபோலியம்
(Alangium salvifolium, Wang.)

“சே”–அழிஞ்சில் இலக்கியம்

‘சே’ என்ற இம்மரம் தொல்காப்பியத்தில் இலக்கணம் பெற்றுள்ளது: ‘சே என மரப்பெயர் ஒடுமர இயற்றே’ (தொல். 1:7:76). ‘சேம்பூ’ என்ற விதி பெற்றது. ‘அழிஞ்சில், சேமரம் அங்கோலமாகும்’ என்ற வண்ணம் இது ‘அழிஞ்சில்’ எனப் பெயர் பெற்றது எனக் கூறும் பிங்கலம் [112]. சிலம்பில் [113] ‘சே’ எனறதற்கு அரும்பத உரையாசிரியர் ‘உழிஞ்சிலுமாம், அழிஞ்சிலுமாம்’ என்றனர் ஆயினும் இதற்கு, ‘அழிஞ்சில்’ என்ற பெயர் பொருந்துமென்றனர். இம்மரம் நிறைந்த காடு அழிஞ்சிக்காடு எனப்படும். பாலைக்காடு என்பர் இளஞ்சேரனார். இதன் மலர் மஞ்சள் கலந்த வெண்ணிறம் உடையது.

 

அழிஞ்சில்
(Alangium salvifolium)

திருத்தக்க தேவர், நீரில் தோய்த்த வெண்துகில் போன்றது இதன்பூ என்பர்.

“மாசில் வெண்துகிலை நீர் தோய்த்து மேற்போர்த்த வண்ணமே போல்
 காசின் மாட்டொழுகப் பூத்த அழிஞ்சில் கண்ணார் கவின் கொண்டன ”
[114]

இம்மரம் தாவரவியற் சிறப்புடையது.

“சே”–அழிஞ்சில் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorace)
தாவரக் குடும்பம் : அலாஞ்சியேசி
தாவரப் பேரினப் பெயர் : அலாஞ்சியம் (Alangium)
தாவரச் சிற்றினப் பெயர் : சால்விபோலியம் (salvifolium)
சங்க இலக்கியப் பெயர் : அழிஞ்சில்–தொல்காப்பியத்துள் காணப்படுகிறது.
உலக வழக்குப் பெயர் : அழிஞ்சி மரம், அலஞ்சி
தாவர இயல்பு : மரம், இலையுதிர் சிறுமரமென்ப.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : அரை அங்குல நீளமான தனி இலை. 3-5 நரம்புகள் உள்ளன.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர். கொத்தாகத் தோன்றும்.
மலர் : மஞ்சள் கலந்த வெண்ணிறமானது. அழகானது. மணமுள்ளது. மலர்க் காம்புடன் சூலகம் இணைந்திருக்கும்.
 

அழிஞ்சில்
(Alangium salvifolium)

புல்லி வட்டம் : அல்லிக்குழல் அடி ஒட்டியது. மேலே 4-10 பற்கள் போன்றது. பிரிவு உடையது.
அல்லி வட்டம் : 4-10 நீண்ட அகவிதழ்கள் தடித்தவை மலரில் பின்புறமாக மடிந்திருக்கும்.
மகரந்த வட்டம் : அகவிதழ்களில் 2–4 மடங்கு எண்ணிக்கையான தாதிழைகளை உடையது. அகவிதழ்களை ஒட்டியிருக்கும். தாதிழைகள் மேலே பிரிந்துள்ளன. தாதுப்பை நீளமானது.
சூலக வட்டம் : மலர் வட்டங்களுக்குக் கீழானது. இரு சூலகம். சூல்தண்டு நீளமானது. சூல்முடி அகன்ற குல்லாய் போன்றது. சூலறையில் சூல்கள் தனித்திருக்கும்.
கனி : 2 விதைகளை உடைய பெர்ரி என்ற சதைக் கனி புல்லி வட்டத்தால் மூடப் பெற்றிருக்கும்.
விதை : விதையுறை அழுத்தமானது. ஆல்புமின் சதைப்பற்றானது. சூலிலைகள் இலை போன்றவை. பட்டையானவை. சூல்முளை நீளமானது.

இத்தாவரக் குடும்பத்தில் அலஞ்சியம் என்ற ஒரு பேரினமே தமிழ் நாட்டில் வளர்கிறது. இதில் 2 சிற்றினங்கள் உள்ளன. இதன் மரம் மஞ்சள் நிறமானது மர வேலைப்பாடுகளுக்கேற்றது.

 

மராஅம்–வெண்கடம்பு
ஆன்தோசெபாலஸ் இன்டிகஸ்
(Anthocephalus indicus, Rich.)

கபிலர் குறிஞ்சிப்பாட்டில் (85) ‘பாங்கர் மராஅம் பல்பூந் தணக்கம்’ என்றார். ‘மராஅம்’ என்ற இச்சொல், சங்க இலக்கியங்களில் எல்லாம் அளபெடை பெற்றே வருவது இதன் சிறப்பியல்பு போலும்! மராஅம் என்பது பொதுவாக வெண்கடம்பு, செங்கடம்பு ஆகிய இரண்டையும் குறிக்குமாயினும் சிறப்பாக வெண்கடம்ப மரத்தையே குறிக்கின்றது. இது ‘மரவம்’ என்றும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் ‘சுள்ளி’ என்று கபிலர் குறிப்பிடும் மரத்திற்கு ‘மராமரம்’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். ஆகவே ‘மராஅம்’ என்பது பொதுவாக வெண்கடம்பு என்றும், இதற்குச் ‘சுள்ளி’, ‘மராமரம்’ என்ற பெயர்களும் உண்டென்றும் அறியலாம்.

சங்க இலக்கியப் பெயர் : மராஅம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : மரவம், மரா, சுள்ளி, கடம்பு
பிற்கால இலக்கியப் பெயர் : கடம்பை, மராமரம்
உலக வழக்குப் பெயர் : வெண்கடம்பு, வெள்ளைக்கடம்பு
தாவரப் பெயர் : ஆன்தோசெபாலஸ் இன்டிகஸ்
(Anthocephalus indicus, Rich.)
முன்னைய தாவரப் பெயர் : ஆன்தோசெபாலஸ் கடம்பா
(Anthocephalus cadamba, Mig.)

மராஅம்–வெண்கடம்பு இலக்கியம்

‘பாங்கர் மராஅம் பல் பூந் தணக்கம்’ என்பது கபிலர் கூற்று (குறிஞ். 85). பத்துப் பாட்டிலும் கலித்தொகையிலும் பத்திடங்களில் ‘மராஅம்’ பேசப்படுகிறது. இவற்றிற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘மராமர’மென்றும், ‘மரவம்’ என்றும், ‘வெண் கடம்பு’ என்றும், ‘செங்கடம்பு’ என்றும் உரை கூறுவர். மராஅம் என்பதை வெண்கடம்பிற்கும், செங்கடம்பிற்கும் பொதுப் பெயராகச் சங்க நூல்கள் கூறுகின்றன. இடத்திற்கேற்றவாறு உரையாசிரியர் பொருள் கொள்வர். திருமுருகாற்றுப்படையில் ‘மராஅம்’ என்பதற்குச் செங்கடம்பு என்றும் (10-11) வெண் கடம்பு என்றும் (202), உரை வகுத்த நச்சினார்க்கினியர், மலைபடுகடாத்தில் மராஅம் என்பதற்கு ‘மரவம்’ என்று (498) பொருள் கண்டுள்ளார். மரவம் என்ற சொல் ஐங்குறுநூற்றில் (400) காணப்படுகிறது. பெரும்பாணாற்றுப்படையில் ‘வண்ணக் கடம்பின் நறுமலர்’ (203) என்பதற்கு ‘வெள்ளிய நிறத்தையுடைய கடம்பினது’ என்று உரை கூறுவர். ‘கார் நறுங்கடம்பின் கண்ணிசூடி’ என்ற நற்றிணை அடிக்கு (34 : 8) ‘செங்கடம்பினது கண்ணியைச் சூடி’ என்று கூறுவர் பின்னத்தூரார்.

‘மரா மலர்த்தார்’ என்ற பரிபாடல் அடிக்கு (15 : 20) வெண் கடம்பு என்று உரை காண்பார் பரிமேலழகர்.

‘மரா வெண்கடம்பின் பெயராகும்மே’ என்று சேந்தன் திவாகரம் கூறுமாயினும், மராஅம் என்பது வெண்கடம்பையும், செங்கடம்பையும் குறிக்கும் என்பதும், மராஅம் என்பது மரா மரம், மரவம் என்ற பெயர்களையும் குறிக்கும் என்பதும் அறியப்படும். இங்ஙனமே கடம்பு என்ற சொல்லும், வெண்கடம்பையும், செங்கடம்பையும் குறிக்கும்.

மேலும் ‘எரியுறழ் எறுழம் சுள்ளி கூவிரம்’ என்ற குறிஞ்சிப் பாட்டு அடியில் (66) வரும் ‘சுள்ளி’ என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘மராமரப்பூ’ என்று உரை கூறுவர். பிற்கால இலக்கியங்களில் வரும் சுள்ளி மரத்தை நோக்குமிடத்து இஃது ஒரு பெரிய மரமெனப் புலனாதலின், சுள்ளி என்பது வெண்கடம்பாக இருத்தலும் கூடும்.

ஆகவே வெண்கடம்பு, செங்கடம்பு, சுள்ளி முதலியவற்றைத் தனித்தனியாக விளக்க முற்படுவோம்.

‘மராஅம்’ என்பது உறுதி மிக்க பெரிய மரம். ஆலமரத்துடன் சேர்த்துப் பேசப்படுகிறது. அடிமரம் நன்கு திரண்டது. கரிய நிறமுடையது. பட்டை பொரிந்தது. கிளைகள் செந்நிறமானவை.

“ஆலமும் தொல்வலி மராஅமும்”-கலி. 101 : 13

“மள்ளர் அன்ன மரவம்”-ஐங். 400 : 1

“இருள்படப் பொதுளிய. பராரை மராஅத்து”-திருமு. 11

“கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து ”
-அகநா. 83 : 5

“சொரிபுறம் உரிஞிய நெறிஅயல் மராஅத்து”
-அகநா. 121 : 8

“வாங்குசினை மலிந்த திரள்அரை மராஅத்து”
-அகநா. 221 : 7


இதன் பூ வெண்ணிறமானது. கொத்தாகப் பூப்பது. கண்ணாம்பு போன்ற வெண்ணிறமானது. இதன் வெண்மை ஒளியைக் கதிரவன் ஒளியோடு பொருத்தினர் கல்லாடனார். நீர் வேட்கை கொண்ட யானை, மலைப் பகுதியில் மராமரத்து மலர் உதிர்வதை, வெள்ளிய மழைத்துளி விழுவதாக எண்ணி அங்குமிங்கும் ஓடி அலைந்தது என்பர்.

“செங்கால் மராஅத்த வால்இணர் இடையிடுபு”
-திருமு. 202

“வெயில்அவிர் புரையும் வீததை மராஅத்து”
-அகநா. 317 : 5

“கேளாய் எல்ல தோழி வாலிய
 சுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம்”
-அகநா. 211 : 1-2

“கரைபாய் வெண்திரை கடுப்ப பலவுடன்
 நிரைகால் ஒற்றலின் கல்சேர்பு உதிரும்
 வரைசேர் மராஅத்து ஊழ்மலர் பெயல்செத்து
 உயங்கல் யானை நீர்நசைக்கு அலமர”
-அகநா. 199 : 1-4

தெய்வங்களின் நிறத்தோடு மலர்களை அறிமுகம் செய்யும் கலித்தொகை, ஒரு காதணி கொண்டவனும், வெள்ளை நிறத்தவனும், வலிய நாஞ்சில் படையைக் கொண்டவனுமாகிய பலராமன், பசிய துளசி மாலையை அணிந்திருப்பது போன்று, மராமரத்தின் அகன்ற உயர்ந்த கிளைகளில் பசிய மயில்கள் சூழ்ந்திருக்கும் என்று கூறும்.

“ஒருகுழை ஒருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்”
-கலி. 26 : 1


“கொடுமிடல் நாஞ்சிலான் தார்போல் மராஅத்து
 நெடுமிசைச் சூழும் மயில்ஆலும் சீர”
-கலி. 36 : 1-2

பலராமன் மார்பில் அணிந்துள்ள வெண்மையான மராமலர்த் தார் அருவி போன்றிருந்தது என்று கூறுவர் இளம்பெருவழுதியார்:

“அராஅணர் கயந்தலை தம்முன் மார்பின்
 மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி
 அலங்கும் அருவிஆர்த்து இமிழ்பு இழிய”

பரி. 15 : 19-20


வெண்கடம்பின் வெள்ளிய மலர்கள் பூங்கொத்தில் வலமாக முறுக்கிய புரி அமைப்புடையன. இவ்வுண்மையைப் புலவர்கள் பாடியுள்ளனர்.

“சிலம்பு அணிகொண்ட வலஞ்சுரி மராஅத்து”
-குறுந். 22 : 3

“வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீ”-அகநா. 83 : 1

உடன் போக்கில் தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன், வழியில் பூத்துள்ள மராமரக் கிளையை வளைத்துக் கொடுக்க, அவள் அதன் மலர்களைக் கொய்து, தானும் சூடிக் கொண்டு, தனது பொம்மைக்கும் சூட்டினாள். இதனைக் கண்ட தலைவன் மகிழ்ந்தான் என்று கூறும் ஐங்குறுநூறு:

“கோட்சுரும்பு அரற்றும் நாட்சுரத்து அமன்ற
 நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி
 வலம்சுரி வால்இணர் கொய்தற்கு நின்ற
 மள்ளன் உள்ளம் மகிழ்கூர்ந் தன்றே
 பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
 அம்சாய் கூந்தல் ஆய்வது கண்டே”
-ஐங். 383

வெண்கடம்பின் பூவைத் தனியாகச் சூடுவதோடு, பிற பூக்களோடும் மாந்தளிரொடும் மரல் நாரில் தொடுத்துக் கண்ணியாகச் சூடினர் என்று கூறும் மலைபடுகடாம்.

“தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும்
 உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்
 தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
 திரங்கு மரல்நாரில் பொலியச் சூடி”

(தேம்பட-தேன் உண்டாக). -மலைபடு. 428-431


இம்மரம் மலைப்பகுதியிலும், சுரத்திலும் வளரும். இது பூத்துக் குலுங்கும் போது மலையே அழகு பெற்று விளங்கும்.

“சிலம்பணி கொண்ட வலம்சுரி மராஅத்து
 வேனில் அம்கிளை கமழும்”
-குறுந். 22 : 3-4

ஒருத்தி இம்மலரைச் சூடிக் கொண்டு, அவளது கூந்தல் முழுவதும் மணங்கமழத் துவள விட்டு, மருங்கில் நடந்து சென்றாளாம்.

“. . . .. . . .. . . . அவிழ்இணர்த்
 தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல்
 துளங்கு இயல் அசைவர”
-நற். 20 : 2-4

இம்மரம் பாலை நிலத்து நெறியிலும், நெறியயலிலும் வளரும். உடன் போக்கு மேற்கொண்டவர் இதன் இலை உதிர்ந்த நிழலில் தங்குவர். இலை இல்லாத மராமரத்தின் நிழல், அம்மரத்தின் மேலே வலையைக் கட்டி வைத்தாலொத்து இருக்கும். வழி நடப்போர் அந்த நிழலில் தங்கிக் கானத்து எவ்வம் போக இளைப்பாறிச் செல்வர்.

“பாலை நின்ற பாலை நெடுவழிச்
 சுரன்முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ”
-சிறுபா. 11-12

“புல்இலை மராஅத்த அகன்சேண் அத்தம்”
-அகநா. 3 : 11

“களிறு வழங்குஅதர கானத்து அல்கி
 இலை இல் மராஅத்த எவ்வம் தாங்கி
 வலைவலந் தன்ன மென்னிழல் மருங்கில்”

-பொருந. 49-51


ஒரு யானை வேனிற் காலத்தில், சுரத்திடையே வளர்ந்திருந்த மராமரத்தின் பட்டையைப் பிளந்து, தன் பெண் யானைக்கு ஊட்டும் என்பர் மதுரைத் தத்தங்கண்ணனார்.

“. . . . . . . . . . . . . . . .யானைதன்
 கொல்மருப்பு ஒடியக் குத்திச் சினம்சிறந்து
 இன்னா வேனில் இன்துணை ஆர
 முனிசினை மராஅத்துப் பொளிபிளந்து ஊட்ட
 புலம்பு வீற்றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்”
-அகநா. 335
(பொளி-பட்டை)

இம்மரம் அரும்பற மலரும். தேன் சொரியப் பூக்கும். மணங்கமழப் பூக்கும். மலரில் சுரும்பினம் மொய்க்கும். மகளிர் மலரைக் கூந்தலிற் பெய்வர் என முன்னரும் கூறினோம்.

“அரும்புஅற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச்
 சுரும்புசூழ் அலரி தைஇ வேய்ந்தநின்
 தேம்பாய் கூந்தல்”
-அகநா. 257 : 6-8

“. . . .. . . . வலம்சுரி மரா அத்து
 வேனில் அஞ்சினை கமழும்”
-குறுந். 22 : 3-4

தீய்ந்த இம்மரத்தில் சுரத்திடை வேனிற்காலத்தில் பூக்கும் மலர்களில் தேனில்லாது போவதும் உண்டு என்றும், இதன் தேன் கருதி இம்மலரை ஊதிய தும்பி தேனின்றி ஏமாந்து பெயரும் என்றும் கூறுவர் காவல் முல்லைப்பூதனார்.

“தீய்ந்த மராஅத்து ஒங்கல் வெஞ்சினை
 வேனில் ஓர்இணர் தேனொடு ஊதி
 ஆராது பெயரும் தும்பி”
-குறுந். 211 : 4-6

வெண்கடம்ப மரத்தடியிலும் பலர் கூடும் மன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் அடியிடத்தில் போரில் புறங்கொடாது மாய்ந்த வீரரது நடுகல் நாட்டப்படும். இம்மரத்தில் சிறுதெய்வம் இடம் பெறுவதாகவும், இத்தெய்வம் கொடியோரைத் தெறுமென்றும் நம்பினர்.

“மன்ற மராஅத்த கூகை குழறினும்”-அகநா. 158 : 13

“செல்லும் தேயத்துப் பெயர்மருங்கு அறிமார்
 கல்எறிந்து எழுதிய eகல்அரை மராஅத்த
 கடவுள் ஓங்கிய காடுஏசு கவலை”

-மலைபடு. 394-396

“மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
 கொடியோர்த் தெறு உம் என்ப”
-குறுந். 87 : 1-2

மராமரத்திற்கு இன்னும் ஒரு சிறப்பு காணப்படுகின்றது. இதனைச் சங்க இலக்கியங்கள், மராஅ. மராஅம். மராஅத்து என அளபெடையுடன் பெரிதும் குறிப்பிடுகின்றன. இஃது மராமரத்திற்கு ஒரு தனிச் சிறப்பு போலும்.

மராஅம்–வெண்கடம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : இன்பெரே (Inferae) அகவிதழ்கள் இணைந்தவை.
தாவரக் குடும்பம் : ரூபியேசி (Rubiaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஆன்தோசெபாலஸ் (Anthocephalus)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகஸ் (indicus,Rich.)
இதன் முன்னைய தாவரப் பெயர் : ஆன்தோசெபாலஸ் கடம்பா
தாவர இயல்பு : பருத்துக் கிளைத்து உயரமாக வளரும் பெரிய மரம். வறண்ட நிலத்திலும், 1500 அடி உயரமான மலைப் பாங்கிலும் உயர்ந்து வளரும். எடுப்பான தோற்றம் உள்ளது
இலை : முட்டை வடிவான 6 அங்குலம் அகன்ற தனி இலை, ஓர் அடி நீளமானது. இலைச் செதில்கள் ஈட்டி போன்றன. எளிதில் உதிர்வன.
மஞ்சரி : கொத்தாகப் பூக்கும். இணர்க்காம்பு உள்ளது. கிளை நுனியில் வெள்ளிய பூங்கொத்து திரண்டு தோன்றும். இவ்விணர் ‘ஹெட்’ எனப்படும்.
மலர் : மங்கிய வெள்ளை நிறமானது. ஐந்தடுக்கானது. நறுமணம் உள்ளது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் அடியில் இணைந்து குழல் போன்றிருக்கும். மேலே 5 பிரிவுகளை உடையது.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இணைந்து அடியில் நீண்ட குழலுடன் புனல் வடிவானது. மேலே 5 மடல்கள் தழுவிய ஒட்டு முறையில் காணப்படும். பளபளப்பானவை.
மகரந்த வட்டம் : 5 குட்டையான தாதிழைகள் அகவிதழ்க் குழலின் தொண்டைப் பகுதியில் ஒட்டியிருக்கும். மகரந்தப் பைகள் நீள்முட்டை வடிவில் ஈட்டி போன்றிருக்கும்.
சூலக வட்டம் : 4 செல்களை உடையது. அடியில் இரு செல்களாக இணைந்து விடும். பல சூல்கள் படுக்கையானவை. இரு பிளவான சூலகக் காம்பில் இணைந்துள்ளன.
சூல் தண்டு : மெல்லியது. மலரின் வெளியே காணப்படும்.
சூல் முடி : வெண்ணிறமானது. இதுவே மலரின் வெண்மை நிறத்திற்குக் காரணம்.
கனி : மஞ்சள் நிறமான அடித்தளத்தில் வெடிகனியாகப் புதைந்திருக்கும். மேற்புறத்தில் 4 குல்லாய் போன்றும் அடிப்புறத்தில் மெலிந்தும் எளிதில் உடையக் கூடியதாகவும் இருக்கும்,
விதை : பல விதைகள், கோணங்களை உடையவை. விதை உறை ‘மூரிகுலேட்’ எனப்படும். கரு மிக நுண்ணியது வட்டவடிவான விதையிலைகளை உடையது. முளைவேர் தடித்திருக்கும்.

இம்மரம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 1500 அடி உயரமான மலைப் பாங்கிலும், மேற்குக் கடற்கரையிலும் வளர்கிறது. இலையுதிர் காடுகளிலும் காணலாம். இதன் அடிமரம் நேரானது. மரவேலைக்குப் பெரிதும் பயன்படுகிறது. இதனால் இது வளர்க்கப்படுகிறது. வெண்கடம்ப மரம் கட்டிட வேலைக்குப் பெரிதும் பயன்படுகிறது. மரம் வெளிர் மஞ்சள் நிறமானது.

 

சுள்ளி
ஆன்தோசெபாலஸ் இன்டிகஸ்
(Anthocephalus indicus, Rich.)

“எரிபுரை எறுழம் சுள்ளி கூவிரம்

என்றார் கபிலர் (குறிஞ். 66). இவ்வடியில் உள்ள சுள்ளி என்பதற்கு ‘மராமரப்பூ’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர்.

சுள்ளி’ என்ற சொல்லைக் குறிஞ்சிப் பாட்டிலன்றி, சங்க நூல்களில் யாண்டும் காண்கிலம்.

மராமரம்’ என்பது ‘மராஅம்’ எனவும், இது கடம்ப மரத்தைக் குறிக்கும் எனவும் நச்சினார்க்கினியர் கருதுகின்றார்.

‘மராமலர்த்தார்’ (பரி. 15 : 20) என்பதற்குப் பரிமேலழகர் ‘வெண்கடம்பு’ மலர்த்தார் என்று உரை கூறுவர்.

நிகண்டுகள்[115]சுள்ளி’ என்பதற்கு மராம் என்ற பெயரையும் கூறுகின்றன. சேந்தன் திவாகரம்[116] ‘மராவெண்கடம்பின் பெயராகும்மே’ என்றமையின் இப்பொருள் வலியுறும்.

ஆகவே சுள்ளி, மராமரம், மராஅம் ஆகிய இவையனைத்தும் ஒன்றே என்று கருத இடமுண்டு. இதன் விரிவை ‘மராஅம்’ என்ற தலைப்பில் காணலாம்.
 

தணக்கம்–நுணா
மொரிண்டா கோரியா (Morinda coreia, Ham.)

‘தணக்கம்’ என்ற சொல் குறிஞ்சிப் பாட்டில் (85) மட்டும் ‘பாங்கர் மராஅம், பல்பூந்தணக்கம்,’ எனக் காணப்படுகிறது. இதற்கு நச்சினார்க்கினியர், ‘தணக்கம் பூ’ என்று உரை கண்டாராயினும், நிகண்டுகள் இதனை ‘நுணா’ என்று கூறுகின்றன. நுணா என்பது ஒரு மரம். மலையிடத்துக் காடுகளில் வளர்கின்றது. பல பூக்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : தணக்கம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : நுணா, நுணவு, நுணவம்
பிற்கால இலக்கியப் பெயர் : நுணா
உலக வழக்குப் பெயர் : நுணா, மஞ்சள்நாறி, மஞ்சலாட்டி
தாவரப் பெயர் : மொரிண்டா கோரியா
(Morinda coreia, Ham.)

தணக்கம்–நுணா இலக்கியம்

‘தணக்கம்’ என்னுஞ்சொல் குறிஞ்சிப்பாட்டில் மட்டும் வந்துள்ளது.

“பாங்கர் மராஅம் பல்பூங் தணக்கம்-குறிஞ். 85

நச்சினார்க்கினியர் பல்பூந் தணக்கம் என்பதற்குப் ‘பல பூக்களை உடைய தணக்கம்பூ’ என்று உரை எழுதினார். பிற்கால இலக்கியத்தில் - பெருங்கதையில்[117] ‘தண்பூத்தணக்கம்’ என்று கூறப்படுகிறது.

நிகண்டுகள் ‘தணக்கு நுணாவே’ என்றும், ‘நுணவு தணக்கே’ என்றும் கூறுவது கொண்டு தணக்கம் என்பது நுணா மரத்தைக் குறிக்கும் என்று கொள்ள வேண்டியுள்ளது.

சங்க இலக்கியங்களில் நுணா, நுணவு, நுணவம் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

“சுரும்பு களித்து ஆலும் இருஞ்சினைக்
 கருங்கால் நுணவம் கமழும் பொழுதே”
-ஐங். 352

என்பது கொண்டு, இதனைக் கரிய அடிமர்த்தையுடைய நுணா மரம் என்று கொள்ளலாம். இம்மரம் புறத்தே கருமையாகத் தோன்றினும், அகமரம் மஞ்சள் நிறமானது. மஞ்சள் நாறும் இதனை மர வணிகர் ‘தனக்கம்’ என்றும், ‘மஞ்சவட்டி’ என்றும், ‘மஞ்சநதி’ என்றும் கூறுவர். இம்மரத்தை மலையாளத்தில் மஞ்சணாத்தி, மஞ்சணாற்றி என்பர். ஆதலின், தணக்கம் என்பது நுணாவாக இருத்தல் கூடும்.

தலைவியை உடன்போக்கில் கொண்டு செல்லவிருக்கும் தலைமகன், அவளிடம் பாலை நிலப் பாதையை அறிவிக்கும் போது, செல்லும் வழியில் வெண்கடம்பு மரமும், நுணா மரமும் அலரவும், வண்டினம் பாலைப் பண்ணிசைப்பவும் கேட்கலாம் [118] என்கிறான்.

“கருங்கால் மராஅம் நுணாவோ டலர
 இருஞ்சிறை வண்டினம் பாலை முரல”
[119]

இதனால், தணக்கம் என்பது பாலை நில மரமெனவும், இளவேனிற் பருவத்தில் பூக்கும் எனவும் அறியலாம்.

“நறவுவாய் உறைக்கும் நாகுமுதிர் நுணவத்து”
-சிறுபா. 51


என்றமையின் இதன் பூவில் தேன் சிந்துவதும் ‘கருங்கால் நுணவம் கமழும் பொழுது’ என்றபடியால், இதில் நறுமணம் கமழும் என்பதும் அறியப்படும்.

இம்மரம், சிற்றருவியின் நீர்த்துளிகளால் மலருமெனவும், வெண்மையான பூக்களை உடையது எனவும் குடவாயிற் கீரத்தனார் கூறுவர்.

“சிறு வெள்ளருவித் துவலையின் மலர்ந்த
 கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூ”

-அகநா. 345 : 15-16


தாவர இயலில் தணக்கம் ரூபியேசி என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு மொரிண்டா கோரியா (Morinda coreia) என்பது தாவர இரட்டைப் பெயர். இதற்கு மொரிண்டா சிட்ரிபோலியா (M. citrifolia) என்று ‘பெடோம்’ என்பவரும், மொரிண்டா டிங்டோரியா (M. tinctoria) என்று, ராக்ஸ்பெர்க் என்பவரும் பெயரிட்டனர். எனினும், இக்காலத்தில் இதன் தாவரப் பெயரை மொரிண்டா கோரியா என்பர். இதன், குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என இராகவன் டி. எஸ். அரங்கசாமி (1941) என்போர் கூறுவர்.

மொரிண்டா என்னும் இப்பேரினத்தில், 5 சிற்றினங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன,

மொரிண்டா எனும் இப்பேரினம் கருநாடகம் முதல் திருவனந்தபுரம் வரையில், வறண்ட காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் வளர்கின்றது என்றும் ‘காம்பிள்’ கூறுவர்.

தணக்கம்—நுணா தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ்கள் இணைந்தவை; இன்பெரே
தாவரக் குடும்பம் : ரூபியேசி (Rubiaceae)
தாவரப் பேரினப் பெயர் : மொரிண்டா (Morinda)
தாவரச் சிற்றினப் பெயர் : கோரியா (coreia)
தாவர இயல்பு : சிறு மரம், 10-15 மீட்டர் உயரமாகக் கிளைத்து வளரும். அடி மரம் மிக வன்மையான நாட்டு வண்டியின் நுகத்தடியாகப் (நுகம்) பயன்படும். மஞ்சள் நிறமானது. மஞ்சள் நாறி என்று இதனைக் கூறுவதும் இதனால் போலும்.
இலை : அகன்று நீண்ட தனி இலை. 3 செ.மீ. அகலமும், 10-12 செ.மீ. நீளமுமான பசிய இலை. சுற்றடுக்கில் 3 அல்லது 4 இலைகள் காணப்படும். இலைச் செதில்கள் உண்டு.
மஞ்சரி : கிளை நுனியில் அல்லது இலைக்கோணத்தில் அம்பல் என்னும் நுனி வளராப் பூந்துணராகக் காணப்படும்.
மலர் : வெண்மை நிறமானது. பூவடிச் செதில் இல்லை.
புல்லி வட்டம் : புல்லிக் குழல் பம்பர வடிவமாகவோ, அரைக்கோளமாகவோ காணப்படும். கால்கள் குறுகியவை.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்தது. அல்லிக் குழல் ஏறக்குறைய புனல் வடிவமானது. நீளமாகக் காணப்படும். மடல்கள் 4 மொட்டில் தொடு இதழமைப்பானது.
மகரந்த வட்டம் : 4 தாதுக்கால்கள்; இவை அல்லியிதழ்களின் தொண்டையில் பொருத்தப்பட்டிருக்கும். மகரந்தக் கால்கள் குட்டையானவை. தாதுப்பைகள் நீள் சதுரமாகக் காணப்படும்.
சூலக வட்டம் : சூற்பை 2-4 அறைகளை உடையது. தடுப்புச் சுவர் அடித்தளத்தில் இருக்கும். சூல்தண்டு மென்மையானது. சூல்முடி இருபிளவாக இருக்கும்.
கனி : இணைந்த சூலிலைகளால் ஆன ‘அக்ரி கேட்’ சதைக் கனி; 4 பைரீன்கள் கொண்டது.
விதை : நீள் சதுரமானது. புறவுரை சவ்வு போன்றது. முளை சூழ்தசை சதைப் பற்றாக இருக்கும். வித்திலைகள் சிறியவை. முளை வேர் நீளமாகவும், கீழ் மட்டமானதாயும் இருக்கும்.

நுணா மரம் மஞ்சள் நிறமான தண்டுள்ளது; வலியது; நுகத்தடிக்கும் மர வேலைக்கும் பயன்படும். தமிழ் நாட்டில் பெரும்பாலும் பரவலாக வளர்கிறது.

 

பிடவம்
ரண்டியா மலபாரிகா (Randia malabarica, Lam.)

‘பிடவம்’ என்பது ஒரு வலிய புதர்ச்செடி. இதன் புறத்தில் முட்கள் நிறைந்திருக்கும்: கார்காலத்தில் இதன் மலர்கள் கொத்தாகப் பூக்கும். பூங்கொத்து நிலவைப் போன்று வட்டமாகத் தோன்றும். மலரின் நறுமணம், கானமெல்லாம் கமழும்.

சங்க இலக்கியப் பெயர் : பிடவம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : பிடா, பிடவு
உலக வழக்குப் பெயர் : புதவு, புடன்
தாவரப் பெயர் : ரண்டியா மலபாரிகா
(Randia malabarica, Lam.)

பிடவம் இலக்கியம்

கபிலர் குறிஞ்சிப் பாட்டில் ‘குல்லைபிடவம் சிறுமாரோடம்’ (குறிஞ். 78) என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது பிடா, பிடவு எனவும் பெயர் பெறும். தொல்காப்பியர் உயிர் மயங்கு இயலில் இதனைப் ‘பிடா’ என்று குறிப்பிடுகின்றார்.

“யாமரக்கிளவியும் பிடாவும் தளாவும்
 ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே

-தொல். எழுத்து. 7 : 27

சங்க இலக்கியங்கள் இதனைப் ‘பிடவம்’ என்று கூறுகின்றன. இது ஒரு புதர்ச்செடி.இதனைக் ‘குறும்புதல்’ எனவும் ‘முடக்கால் பிடவு’ எனவும் கூறுவர்.

“குறும்புதற் பிடவின் நெடுக்கால் அலரி-அகநா. 154 : 5

இதன் அடிமரம் கதிரவன் வெம்மையில் உலர்ந்து போய் இருந்தது என்றும், கார்காலத்தில் மழை பெய்யத் தொடங்கியதும் தளிர் விட்டு அரும்பீன்றது என்றும், இப்புதர்ச் செடியின் புறத்தில் முட்கள் நிறைந்திருக்கும் என்றும் கலித்தொகை கூறுகிறது.

“தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பீன்று
 முளிமுதற் பொதுளிய முப்புறப் பிடவமும்”
-கலி. 101 : 1-2

தொல்காப்பியத்தில் பிடவம், யாமரத்தோடும், தளவங் கொடியுடனும் இணைத்துப் பேசப்படுகின்றது. பிடவின் குறும் புதரின் படர்ந்த தளவின் கொடியுடன், இது கார்காலத்தில் பூக்கும் வண்டு வாயவிழ்க்க மாலையில் பூக்கும்.

இதன் வெண்ணிற மலர்கள் கொத்தாகப் பூக்கும். இப்பூங்கொத்து நிலவைப் போல, வட்ட வடிவாகத் தோன்றும். தொடுத்த கண்ணி போலவும் காணப்படும். மலர் நறுமணம் உடையது.

இதனுடைய மணம், கானம் எல்லாம் கமழும். இதன் அரும்பு கூரியது. மகளிரின் பற்களைப் போன்றது.

“பிடவம் மலரத் தளவம் நனையக்
 கார்கவின் கொண்ட கானம் ”
-ஐங். 499 : 1-2

“வண்டு வாய்திறப்ப விண்ட பிடவம்
 மாலை அந்திமால் அதர் நண்ணிய”
-நற். 238 : 3-4

“வான்பிசிர்க் கருவியின் பிடவு முகைதகைய
 கான்பிசிர் கற்ப கார் தொடங்கின்றே”
-ஐங். 461

“கண்ணகன் இருவிசும்பில் கதழ்பெயல் கலந்துஏற்ற
 தண்ணறும் பிடவமும் தவழ்கொடித் தளவமும்”

கலி. 102 : 1-2
“. . . . . . . . . . . . மாலைக்
 குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி
 வண்டு வாய்திறக்கும் தண்டா நாற்றம்”

அகநா. 183 : 10-12
“. . . . . . . . . . . . நிலவு எனத்
 தொகுமுகை விரிந்த முடக்காற் பிடவின்
 வைஏர்வால் எயிற்று ஒண்ணுதல் மகளிர்”
-அகநா. 344 : 2-4

“கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்
 சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி”

(எருக்கி-வெட்டி) -முல்லைப்பா. 24-25



“சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
 கண்ணியின் மலரும் தண்நறும் புறவில்”
-அகநா. 34 : 1 -2

“வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்”-அகநா. 184: 7

“புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை
 நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்கு பிணிஅவிழ
 காடே கம்மென்றன்றே”
-அகநா. 23 : 3-5

“போதவிழ் தளவமொடு பிடவுஅலர்ந்த கவினிப்
 பூவணி கொண்டன்றால் புறவே”
ーஐங். 412 : 3-4

“கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்”
-பதிற். 66 : 17


முல்லை நிலப் பூக்களான முல்லை. காயா, கொன்றை, பிடவம், தளவம் எல்லாம் நெய்தலொடும், பூவணி செய்து கவின் கொளப் பூத்த கானம் கம்மென்று நறுமணம் கமழ்ந்தது என்பர்.

“காயா, கொன்றை நெய்தல் , முல்லை
 போதவிழ் தளவமொடு பிடவுஅலர்ந்து கவினிப்
 பூவணி கொண் டன்றால் புறவே”
-ஐங். 412 : 1-3

“நன்றே காதலர் சென்ற ஆறே
 நிலன் அணி நெய்தல் மலர
 பொலன்அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே”

-ஐங். 435


தலைவன் கூறிச் சென்ற கார்காலம் வந்த பொழுது, தலைவி வருந்த, தோழி ‘இது கார்காலமன்று; பட்டது வம்பு’ என்று கூறியதாக அமைந்தது பின் வரும் பாடல்.

“மடவ வாழி மஞ்ஞை மாயினம்
 கால மாரி பெய்தென அதனெதிர்
 ஆலலும் ஆலின பிடவும் பூக்தன.
 காரன்று இருளை தீர்க நின்படரே
 கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்
 புதுநீர் கொளீஇய உகுத்தரும்
 நொதுமல் வானத்து முழங்கு குரல்கேட்டே”
-குறுந். 251

இம்மலரின் பெயரால் ஓர் ஊர் உளது. அதற்குப் பிடவூர் என்று பெயர். சோழ நாட்டில், உறையூருக்குக் கிழக்கே உள்ளது . அவ்வூர்த் தலைவன் நெடுங்கை வேண்மான். அவனால் இவ்வூர் காக்கப்பட்டு வந்தது. இச்செய்தியை நக்கீரர் கூறுகின்றார்.

“. . . .. . . .. . . . உறந்தைக் குணாஅது
 நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்”

-புறநா. 395 : 19-20


நறுமணமுள்ள இதன் மலர்க் கொத்தை மகளிர் அணிந்து கொள்வர்.

பிடஉ தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : இன்பெரே (Infarae) அகவிதழ் இணைந்தது.
தாவரக் குடும்பம் : ரூபியேசி (Rubiaceae)
தாவரப் பேரினப் பெயர் : ரண்டியா (Randia)
தாவரச் சிற்றினப் பெயர் : மலபாரிகா (malabarica, Lam.)
தாவர வளரியல்பு : வறண்ட நிலத் தாவரம்.
தாவர இயல்பு : புதர்ச்செடி. அடர்ந்தும், பரந்தும், கிளைத்தும், உயர்ந்தும் வளரும். வலிய தண்டுடையது. சிறு மரம் போலத் தோன்றும். அடி முதல் நுனி வரை இலைக் கோணத்தில் முட்கள் உடையது.
இலை : 1-3 அங்குல நீண்ட இலைகள் எதிரடுக்கில் உள்ளன. பளபளப்பானது. தோல் போன்றது. கணுவிலுள்ள இரு இலைகளில் ஒன்று பெரிதும் வளர்வதில்லை. இலைக்கோணத்தில் இரு சிறு முட்கள் வளரும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் ‘காரிம்ப்’ வகையான ‘அம்பல்’ எனப்படும் நுனி
 

பிடவம்
(Randia malabarica)

வளராப் பூந்துணர் அடர்ந்த கொத்தாக உண்டாகும். பூங்கொத்து பெரும்பாலும் வட்டமாகத் தோன்றும்.
மலர் : வெண்ணிறமானது. நறுமணம் உடையது. மலர்ச்செதில்கள் உள்ளன.
புல்லி வட்டம் : 5 பிரிவுள்ள புறவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாக இருக்கும்.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இணைந்து குழல் வடிவாக உள்ளது. உள்ளே நுண்மயிர்கள் உள. நுனியில் 5 பிரிவானது. இடப்புறமாகச் சுற்றிய அடுக்கானது. மேலே: மடல்கள் விரிந்துள்ளன.
மகரந்த வட்டம் : 5 தாதுக்கால்கள். இழை போன்றவை

தாதுப்பைகள் நீளமானவை.

சூலக வட்டம் : இரு சூலிலைச் சூலகம். பல சூல்கள் தடுப்புச் சுவரில் ஒட்டியிருக்கும். சூல் தண்டு மெல்லியது. சூல்முடி இரு பிளவானது.
கனி : சிவந்த ‘பெர்ரி’ எனப்படும் சதைக்கனி.
விதைகள் : ஆரஞ்சு நிறமானவை சொர சொரப்பானவை. ஆல்புமின் உள்ளவை.

மலைப்புறக் காடுகளிலும் குன்றுகளிலும் வளரும் அடித்தண்டு கருமை சார்ந்த வெளிர் நிறமானது. வலிமையுள்ளது. பெரிதும் வேலிகட்குப் பயன்படுகிறது .

இதன் குரோமோசோம் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை. இப்பேரினத்தில் உள்ள பிற சிற்றினங்களின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 ஆகும்.

 

வெட்சி
இக்சோரா காக்சினியா (Ixora coccinea, Linn.)

புறத்திணை இலக்கணம் கூற வந்த ஆசிரியர் தொல்காப்பியனார், அகத்திணைகட்குரிய புறத்திணைகளை ‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’ (தொல். புறத். 2:1) எனத் தொடங்கி ஏழு புறத்தினைகளை வகுத்துரைத்தார். பிற்காலத்தில் இவை பன்னிரண்டாயின. எனினும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஒதுக்கியவை போக புறத்திணை ஒழுக்கங்களும் அவற்றிற்குரிய பூக்களும் எட்டாகக் கூறப்படுகின்றன. இவற்றைப் பட்டியலிட்டுக் காண்போம்.

எண். அகத்திணை புறத்திணை புறத்திணை ஒழுக்கம் சூடும் பூ
  1. குறிஞ்சி வெட்சி ஆநிரை கவர்தல் வெட்சி
  2. கரந்தை ஆநிரைகளை மீட்டல் கரந்தை
  3. முல்லை வஞ்சி போருக்கு முனைந்து எழுதல் வஞ்சி
  4. பெருந்திணை காஞ்சி தாக்கியோரை எதிர்த்தல் காஞ்சி
  5. மருதம் உழிஞை முற்றுகையிடல் உழிஞை
  6. நொச்சி முற்றுகையைத் தகர்த்தல் நொச்சி
  7. நெய்தல் தும்பை கைகலந்து போரிடல் தும்பை
  8. பாலை வாகை வெற்றி வாகை

தும்பைப் பூவைப் போர் நிலைக்கேற்ப வெட்சிப்புறத்துத் தும்பை, வஞ்சிப்புறத்துத் தும்பை, உழிஞைப் புறத்துத் தும்பை என்று பிரித்து உரை கூறுகின்றார் நச்சினார்க்கினியர்.

இனி, புறத்திணை மலர்களைத் தரும் தாவரங்களை முறைப்படி ஒவ்வொன்றாகக் காணலாம்.

‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’ என்று கூறும் தொல்காப்பியம் (புறத். 2:1) பகை அரசரது ஆநிரையைக் கவரும் படையினர், வெட்சி மலரைச் சூடிச் செல்வர். ஆதலின், இது போர் மலர் எனப்படும். இது ஒரு புதர்ச்செடி; இதன் மலர் செக்கச் சிவந்த நிறமானது. கொத்துக் கொத்தாகப் பூக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : வெட்சி
தாவரப் பெயர் : இக்சோரா காக்சினியா
(Ixora coccinea, Linn.)

இது அழகுச் செடியாகப் பூங்காவிலும், தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.

வெட்சி இலக்கியம்

வெட்சிப் பூவால் பெயர் பெற்றது வெட்சித் திணை. பகை நாட்டவரது ஆநிரைகளைக் கவரப் போகும் போது, அதன் அடையாளமாக வெட்சிப் பூவைச் சூடுவர்.

வெட்சி ஒரு புதர்ச் செடியாகும். இது தழைத்துக் கிளைத்துக் கானம் போலக் காட்டில் வளரும் எனவும், இதன் கிளைகள் வளைந்திருக்குமெனவும், பல அரும்புகளை உடையன எனவும், முகையவிழுங்கால், மணங்கமழும் எனவும், இம்மலர்களை மகளிர் தலையில் சூடிக் கொள்வர் எனவும் சங்கப் புலவர்கள் கூறுகின்றனர்.

“வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட”
புறநா. 202 : 1
“கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சித்
 தளைஅவிழ் பல்போது கமழும்
 மையிருங் கூந்தல் மடந்தை நட்பே”
-குறுந் 209 : 5-7

இக்குறுந்தொகைப் பாடலில் வரும் ‘முடச்சினை’ என்பது ‘முட்ச்சினை’ என்ற பாட பேதம் உடையது. இப்பாடத்திற்கு ‘முள்ளைப் போன்ற அரும்பினை உடைய’ என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இப்பாடம் பொருத்தமாக உள்ளது. ஏனெனில் ‘இதல் முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி’ (அகநா. 133 : 14) என்று தாமோதரனார் கூறுவர் ஆகலின், உண்மையில் வெட்சியின் அரும்பு, முள்ளை ஒத்துக் கூரியதாக இருக்கும். வெட்சி மலர் நல்ல செந்நிறமானது. வெட்சிப் பூக்களைச் சூடிக் கொண்டு ஆநிரைகளைக் கவரச் செல்லும் வீரர்களது தோற்றம் செவ்வானம் செல்வது போன்று இருக்குமாம்.[120]

வெட்சிப் பூக்களைப் பிற பூக்களுடன் இடையிடையே தொடுத்துக் கட்டி, தலையில் அணிவர் என்றும், விடு பூவாகத் தூவுவர் என்றும், வெட்சி மலர்க்கால் செவ்வியது என்றும் கூறப் படுகின்றது.

“செங்கால் வெட்சித் சீறிதழ் இடையிடுபு”-திருமுரு. 21

“வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇ”
-புறநா. 100 : 5
“ஈர்அமை வெட்சி இதழ்புனை கோதையர்
 தார்ஆர் முடியர் தகை கெழுமார்பினர்”

-பரி. 22 : 22-23


வெட்சி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : இன்பெரே (Inferae) அகவிதழ் இணைந்தவை. சூலகம் பூவுறுப்புக்களுக்கு அடியில் இருக்கும்.
தாவரக் குடும்பம் : ரூபியேசி (Rubiaceae)
தாவரப் பேரினப் பெயர் : இக்சோரா (1xora)
தாவரச் சிற்றினப் பெயர் : காக்சினியா (coccinea)
சங்க இலக்கியப் பெயர் : வெட்சி
உலக வழக்குப் பெயர் : வெட்சி: தொட்டி எனவும் வழங்கப்படுமென்பர் காம்பிள்.
தாவர இயல்பு : பெரிய புதர்ச் செடி, நன்கு தழைத்து வளரும்.
இலை : தனி இலை, எதிரடுக்கில் அமைந்திருக்கும் தடித்த, பசிய, அகன்று நீண்ட இலைகளுக்கு இடையில் இலையடிச் செதில்கள் உள்ளன.
மஞ்சரி : மும்முறை கிளைத்த நுனி வளராப் பூந்துணர் கொத்துக் கொத்தாகக் கிளை நுனியில் இருக்கும். இதனைக் ‘காரிம் போஸ் சைம்’ என்பர். பூவடிச் செதில் தடித்து, இலை போன்றது. மலரடிச் சிறு செதில்கள் 2.
மலர் : செக்கச் சிவந்த நிறம். முகை முள் போன்றது. கூரியது. நீளமானது.
புல்லி வட்டம் : புறவிதழ்கள் இணைந்த முட்டை வடிவமான குழல் போன்றிருக்கும். விளிம்பு 4 பிளப்புகளை உடையது.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்து, அடியில் நீண்ட குழல் வடிவாக இருக்கும். மலர் நுனியில் 4 மடல்கள் விரிந்திருக்கும். இவை முகையில் முறுக்கி விட்டது போன்றிருக்கும். மலர்ந்த இம்மலர்க் கொத்து மிக அழகாகத் தோன்றும்.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகள் வாயவிழ்ந்த மலரின் வாயில் காணப்படும். தாதிழை மிகக் குட்டையானது. தாதுப்பைகள் மெல்லியவை. அடியில் இரு பிளவாகவும், நுனி கூரியதாகவும் இருக்கும்.
சூலக வட்டம் : இரு செல்லுடையது. ஒரு தொங்கு சூல் சூலக அறையில் காணப்படும். சூல்தண்டு தடித்தது. சூல்முடி இரு பிளவானது. சதைக்கனி நீண்ட ‘பெர்ரி’ எனப்படும்.
விதை : முட்டை வடிவானது. சூலறையில் தொங்கிக் கொண்டிருக்கும். விதையுறை மிக மெல்லியது. வித்திலைகள் சிறியவை. இலை போன்றிருக்கும்.

வெட்சி ஓர் அழகுச் செடியாகத் தோட்டங்களிலும், பூங்காக்களிலும் வளர்க்கப்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என டி. எஸ். இராகவன், அரங்கசாமி (1941) கணக்கிட்டனர்.

 

கரந்தை
ஸ்பெராந்தஸ் இன்டிகஸ் (Sphaeranthus indicus, Linn.)

சங்க நூல்களில் காணப்படும் இப்போர் மலருக்குக் ‘கரந்தை’ என்று பெயர். ஆநிரைகளைக் கவர்ந்தவர்களிடம் அவற்றை மீட்க முனைந்தெழும் போர் வீரர்கள், இதனைச் சூடிக் கொண்டு போருக்கு எழுவர். இது ஒரு சிறு செடி. செந்நீலம், சிவப்பு, நீலம், இளஞ் சிவப்பான சிறு முட்டை வடிவான மஞ்சரித் தொகுப்பான மலர்களைச் செடியின் முடியில் கொண்ட சிறு செடியாகும்.

சங்க இலக்கியப் பெயர் : கரந்தை
உலக வழக்குப் பெயர் : சிவகரந்தை, விஷ்ணு கரந்தை, கொட்டைக்கரந்தை
தாவரப் பெயர் : ஸ்பெராந்தஸ் இன்டிகஸ்
(Sphaeranthus indicus, Linn.)

கரந்தை இலக்கியம்

கரந்தையும் ஒரு போர் மலராகும். ஆநிரைகளைப் பறி கொடுத்தோர் அவற்றை மீட்பதற்குப் போர் தொடுப்பர். அதற்கு அடையாளமாகக் கரந்தை மலரைப் போர் மரபு அறிந்தவர் வீரரது தலையிற் சூட்டுவர் என்று புறநானூறு கூறும்.

“நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை
 விரகறி யாளர் மரபிற் சூட்ட
-புறநா. 261 : 13-14

கரந்தையைச் சூடுதல் ஆநிரைகளை மீட்பதற்கு மட்டுமன்றி. யானை முதலியன கவரப்படின் அவற்றை மீட்கவும் கரந்தையைக் கண்ணியாகவும் மாலையாகவும் சூடிக் கொள்வதுண்டு.

கரந்தைச் செடி நெல் அறுத்த வயல்களில் முளைத்து நிறைந்து வளரும்.

“கரந்தைஅம் செறுவின் பெயர்க்கும்”-புறநா. 340 : 8

“கரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஒப்பும்”
-அகநா. 226 : 6


இதன் மலர்கள் சிறு முட்டை வடிவினவாகவும், செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு நிறங்களை உடையனவாகவும் இருக்கும்.

சிறிய பால்மடிக் காம்பு போன்ற இதன் இணர்மலரில் நறுமணம் உடையதாக இருக்கும். இளஞ்சிவப்பு நிறமுடைய கரந்தையைச் ‘சிவகரந்தை’ என்பர். இதில் நறுமணம் மிகுத்து உண்டாகும். நச்சினார்க்கினியர், ‘நாறுகரந்தை’ என்றது இதுவே போலும். இதனைக் கொண்டு சிவனைப் பரவுதலைப் பட்டினத்தடிகள் கூறுவர். [121]

இதனைக் கண்ட திருமாலியத்தார் நீலங்கலந்த கரந்தையைத் திருமாலுக்குரியதாக்கி ‘விட்டுணுக் கரந்தை’ என்பர். ஏனைய கரந்தையைக் ‘கொட்டைக்கரந்தை’ என்பர்.

இக்கரந்தையில் மலரெனக் கூறப்படுவது தனி மலரன்று. இதனைக் கரந்தையிணர் என்பது பொருந்தும். சற்று நீண்ட சிறு முட்டை வடிவான கரந்தையின் இவ்விணரில் நூற்றுக்கணக்கான மலர்கள் இணைந்து கொட்டை போல இருக்கும்.

கரந்தை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : இன்பெரே (Inferae)
ஆஸ்ட்ரேலீஸ் (Asterales)
அல்லியிணைந்தவை.
தாவரக் குடும்பம் : கம்பாசிட்டே (Compositae)
தாவரப் பேரினப் பெயர் : ஸ்பெராந்தஸ் (Sphaeranthus)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகஸ் (indicus)
சங்க இலக்கியப் பெயர் : கரந்தை
தாவர இயல்பு : ஒன்று முதல் ஒன்றரை அடி உயரம் வரை வளரும். ஓராண்டுச் செடி. செடி முழுவதும் ஒரு விதப் பசைப் பொருளைச் சுரக்கும் சுரப்பிகளைக் கொண்ட நுண்மயிர் அடர்ந்திருக்கும்.
இலை : சிறிய, பசிய, நீண்ட தனி இலை. மாற்றடுக்கில் தண்டில் அமைந்திருக்கும.
மஞ்சரி : சற்று நீண்ட முட்டை அல்லது உருண்டை வடிவான மஞ்சரி. இதனை மஞ்சரித் தொகுப்பு என்று கூற வேண்டும். இதற்கு (compound head) என்று பெயர். “.5 - .6” அங்குல அகலமுள்ள இம்மஞ்சரித் தொகுப்பு கிளை நுனியில் உண்டாகும். ஒவ்வொரு மஞ்சரியிலும் பல மலர்கள் அடர்ந்திருக்கும். இம்மஞ்சரித் தொகுப்பில், புறத்தில் பெண் பூக்களும், உட்புறத்தில் இருபாலான பூக்களும் இருக்கும். இவற்றிற்கிடையே செதில்களும் உள்ளன. பல மஞ்சரித் தொகுப்பான, இதன் நடுத்தண்டு சற்றுச் சதைப்பற்றானது. இதனைச் சுற்றியே அடுக்கடுக்காகப் பல மஞ்சரிகள் நிறைந்திருக்கும்.
பெண் மலர் : இதில் அல்லிவட்டம் குழல் வடிவானது; 2-3 நுண்ணிய விளிம்புகளை உடையது.
இருபால் மலர் : இதில் அல்லிவட்டம் புனல் வடிவமானது. புனலின் அடிக்குழல் சற்றுத் தடித்தது. மேல்மடல் 4-5 பிளவானது.
மகரந்த வட்டம் : மகரந்தப்பை அடியில் முக்கோண வடிவானது.
சூலக வட்டம் : ஒரு செல் உள்ளது. இதில் ‘அகீன்’ என்ற கனி உண்டாகும். இதுவே விதையுமாகும்.

எறுழம்
ரோடோடென்ட்ரான் நீலகிரிகம்
(Rhododendron nilagirícum, Zenk.)

இதனைக் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் (66) ‘எரிபுரை எறுழம்’ என்று குறிப்பிடுகின்றார். ‘எரிபுரை’ என்றதனால் இதன் மலர் நெருப்பை ஒத்தது என்பதாகும். ஐங்குறுநூற்றில் (308) ‘விரியினர்க்கால் எறுழ் ஒள்வீதாஅய்’ என இது குறிப்பிடப்படுகின்றது. இவ்வடியில் ‘ஒள்வீ’ என்பதற்கு ‘ஒளி பொருந்திய மலர்’ என்று பொருள் கோடல் பொருந்தும். இதனைப் பற்றிய வேறு குறிப்புகள் வேறு யாண்டும் காணப்படவில்லை. எனினும், இதன் மலர் நெருப்பை ஒத்தது; மலர்க் காம்புடையது; மலர்கள் கொத்தாகப் பூக்கும்; விரிந்த இதன் மலர் ஒளி வீசுவது என்ற குறிப்புகளைக் கொண்டு பார்த்தால் நீலகிரி மலையின் உச்சியில் கொத்துக் கொத்தாகப் பூக்கும் நெருப்பை ஒத்த விரிந்த மலர்களை உடைய ரோடோடென்ட்ரான் நீலகிரிகம் எனப்படும் ஒரு சிறு மரம் இந்த எறுழமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால், இதுதான் எறுழம் என வலியுறுத்துமாறில்லை.

சங்க இலக்கியப் பெயர் : எறுழம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : எறுழ்
தாவரப் பெயர் : ரோடோடென்ட்ரான் நீலகிரிகம்
(Rhododendron nilagirícum, Zenk.)

எறுழம் இலக்கியம்

இதனைக் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் ‘எரிபுரை எறுழம் சுள்ளிகூவிரம்’ (66) என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ‘நெருப்பை ஒத்த எறுழம்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கண்டார்.

எறுழம்
(Rhododendron nilagiricum)

ஐங்குறுநூற்றில் (308)

“விரியிணர்க் கால்எறுழ் ஒள்வீதாஅய”

என்று ஓதலாந்தையர் இதனைக் கூறுவர். இதனால் எறுழம்பூ காம்புடையதென்றும், கொத்தாகப் பூக்குமென்றும், விரிந்த இதன் மலர் ஒள்ளியதென்றும் அறியலாம்.

இவையன்றி. சைலியா டோலாரிமிபார்மிஸ் (Xylia dolarimiformis) என்னும் இலையுதிர் மரத்தை ‘எருள்’ (Erul) என்று லஷிங்டனும், இருள் (Irul) என்று காம்பிளும் கூறுப. இதன் பூக்கள் வெண்மை நிறத்தவை. ஆதலின். இது எறுழமன்று. உயரமான பெரிய மலைப் புறத்தே நெருப்பை ஒத்த செந்நிறப் பூக்களைக் கொத்துக் கொத்தாக உமிழும் ஓர் அழகிய மரமுண்டு. நீலகிரி மலையில் தொட்டபெட்டா என்னும் மலையுச்சிக்குப் போகும் பாதையில் ரோடோடென்ட்ரான் என்று ஒரு சிறு மரம் காணப்படுகிறது. இதனை ரோடோடென்ட்ரான் நீலகிரிகம் (Rhododendron nilagiricum)என்பர் காம்பிள் (Gamble) . இதனை அழிஞ்சில் என வழங்குவர் என்று தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார். அழிஞ்சில் மரம் இதனினும் முற்றிலும் மாறுபட்டது.

சங்க இலக்கியக் குறிப்புக்களைக் கொண்டு பார்த்தால், எறுழம் என்பது ரோடோடென்ட்ரான் நீலகிரிகம் என்னும் மரமாக இருக்கலாம் என்று தமிழறிஞரும் தாவர விற்பன்னரும் கூறுவர். இதற்குக் காரணம், கபிலர் இதனை ‘நெருப்பை ஒத்த எறுழம்’ என்று குறிப்பிடுதலின் என்க.

எறுழம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஹெடீரோமீரி (Heteromerae)
தாவரக் குடும்பம் : எரிகேசி (Ericaceae)
தாவரப் பேரினப் பெயர் : ரோடோடென்ட்ரான் (Rhododendron)
தாவரச் சிற்றினப் பெயர் : நீலகிரிகம் (nilagiricum)
தாவர இயல்பு : சிறு மரம் 4 முதல் 5 மீட்டர் உயரமாக வளரும்.

எறுழம்
(Rhododendron nilagiricum)

தாவர வளரியல்பு : மீசோபைட் (mesophyte) இரண்டாயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் உதகையின் பெருமலைப் பாங்கில் குளிர்ந்தவிடத்தில் மட்டும் வளரும்.
இலை : தனியிலை. தோல் போன்றது. தடிப்பானது. மாற்றடுக்கில் பெரிதும் கிளை நுனியில் காணப்படும்.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி. இலைக்கோணத்தில் கொத்தாக வளரும்.
மலர் : பெரிய, விரிந்த மலர்கள். குருதிச் செந்நிறமானவை மடல் மேலே விரிந்தவை. சிவந்த பூவடிச் செதில்கள் உள்ளன.
புல்லி வட்டம் : 5 சிறு, பசிய புறவிதழ்கள்.
அல்லி வட்டம் : 5-10 இதழ்கள், புனல் வடிவம்.
மகரந்த வட்டம் : 5-10 வரை மகரந்தத் தாள்கள் உள்ளன. மகரந்தத் தாள்கள் இழை போன்றவை; தாதுப்பை சற்று நீளமானது. நுனியில் உள்ள துளை வழியாகத் தாது உகும்.
சூலக வட்டம் : 5-20 சூலறைகளும், ஒவ்வொன்றிலும் எண்ணற்ற சூல்களும் உள்ளன. சூல் தண்டு மென்மையானது. சூல்முடி குல்லாய் வடிவானது.
கனி : 5-20 அறைகளுடைய வலிய காப்சூல். சுவர் வழி வெடிக்கும் கனி
விதை : பல முளை சூழ் தசையுள்ள விதைகள். விதையின் வெளியுறை வால் போல் நீண்டிருக்கும். இச்சிறு மரங்கள் ஒரு சேரப் பூத்த நிலையில் நெருப்பு அகைந்தன்ன அழகுடன் காட்சி தரும்.
 

செங்கொடுவேரி
பிளம்பாகோ ரோசியா (Plumbago rosea, Linn.)

கபிலர் கூறிய ‘செங்கொடுவேரி’ என்பதற்கு (குறிஞ். 64) ‘செங்கொடுவேரிப்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். பிற்கால இலக்கியங்கள் இதனைக் ‘கொடி’யென்றும் ‘மர’மென்றும் குறிப்பிடுகின்றன. இது இக்காலத்தில் ‘கொடிவேலி’ என வழங்கும் ஒரு சிறு செடியே ஆகும்.

சங்க இலக்கியப் பெயர் : செங்கொடுவேரி
பிற்கால இலக்கியப் பெயர் : செங்கொடுவேலி
உலக வழக்குப் பெயர் : கொடிவேலி
தாவரப் பெயர் : பிளம்பாகோ ரோசியா
(Plumbago rosea, Linn.)

செங்கொடுவேரி இலக்கியம்

‘செங்கொடுவேரி தேமா மணிச்சிகை’ என்பது கபிலர் வாக்கு (குறிஞ். 64). செங்கொடுவேரி என்பதற்குச் ‘செங்கொடுவேரிப்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறினார். கார்ப்பருவ ஒப்பனைப் பூக்களைக் கூறும் இளங்கோவடிகள்,

“செங்கொடு வேரிச் செழும் பூம்பிணையல்[122]

என்றார். கொங்குவேளிர்[123] இதனை முல்லை நிலத்து ஆற்றங்கரை மரங்களின் வரிசையில் வைத்துள்ளார்.

இவற்றைக் கொண்டு இதனைக் ‘கோட்டுப் பூ; முல்லை நிலத்தில் கார் காலப் பூவாகச் செம்மை நிறத்தில் விளங்குவது;

செங்கொடுவேரி
(Plumbago rosea)

இதனை ‘மாலையாகக் கட்டி மகளிர் சூடிக் கொள்வர்‘ என்று மட்டும் அறிய முடிகிறதன்றி, வேறு எக்குறிப்பும் காணப்படவில்லை.

எனினும், இது செங்கொடி வேலி என்றிருக்குமாயின், இக்காலத்தில் வழங்கப்படும் செந்நிற மலருள்ள ‘கொடி வேலி’ மலரைக் குறிக்கும். கொடி வேலியில் வெண்ணிற மலருள்ள செடியும் உண்டு. நீல நிறமுள்ள மலருள்ள செடியும் உண்டு. சென்னை-கலைக்களஞ்சியம் இதனைச் செங்கொடி வேரி என்றே குறிப்பிடுகின்றது (Vol. III பக்கம் 1581). மேலும், இதனைப் பிளம்பாகோ ரோசியா (Plumbago rosea) ‘ரோஜா நிறப்பூ உள்ள கொடி வகை’ என்று கூறும். இது கொடியன்று; மரமன்று; செடிதான். வெற்றிடத்தும், வேலிகளிலும் தானே வளரும் செடியாகும். இது பிளம்பாஜினேசி (Plumbaginaceae) என்ற தாவரக் குடும்பத்தின் பாற்படும்.

இச்செடி மருந்துக்குப் பயன்படும்.

செங்கொடுவேரி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : எரிகேலீஸ், அகவிதழ் இணைந்தவை
தாவரக் குடும்பம் : பிளம்பாஜினேசி (Plumbaginaceae)
தாவரப் பேரினப் பெயர் : பிளம்பாகோ (Plumbago)
தாவரச் சிற்றினப் பெயர் : ரோசியா (rosea)
தாவர இயல்பு : செடி
தாவர வளரியல்பு : மீசோபைட், சற்று வறண்ட வெற்றிடத்தும், வேலிகளிலும் வளர்கிறது. 2 முதல் 4 அடி வரையில் வளரும்.
இலை : சற்று அகன்ற தனியிலை, மாற்று அடுக்கில் இருக்கும். மெல்லியது. முட்டை வடிவானது. இலைக்காம்பின் அடி அகன்றிருக்கும்.

செங்கொடுவேரி
(Plumbago rosea)

மஞ்சரி : தனி மலர். காம்பின்றி இணைந்தது.
மலர் : அழகிய இளஞ்சிவப்பு நிறமானது.
புல்லி வட்டம் : குழல் வடிவானது. நீண்ட மயிர்ச் சுரப்பிகள் நிறைந்து இருக்கும். 5 பிளவானது.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் 5 அடியில் இணைந்து, நீண்ட குழல் போன்றது. மடல்கள் விரிந்திருக்கும்.
மகரந்த வட்டம் : 5 தனியான தாதிழைகள் தாதுப் பைகள் நுனி ஒட்டியவை. சற்று அகன்று நீண்டவை.
சூலக வட்டம் : சூலகம் நுனியில் குறுகியிருக்கும். சூல் தண்டு நுனியின் இரு கிளைகளாகி இருக்கும்.
கனி : காப்சூல், வெடிகனி.
விதை : தனித்துள்ளது. வித்திலைகள் அடியில் குறுகி, நுனியில் அகன்றிருக்கும்.

‘செங்கொடுவேரி’ எனப்படும் கொடிவேலியின் வேர் மருந்துக்குப் பயன்படும். பொதுவாகக் கொடிவேலி எனப்படும். இச்செடியில் வெள்ளை நிறப்பூ உடையதும், நீல நிறப்பூவுடையதுமான செடிகள் உண்டு. இவையனைத்தும் மருந்துச் செடிகளே.

 

வகுளம்–மகிழம்
மிமுசாப்ஸ் இலெஞ்சி (Mimusops elengi, Linn.)

‘பசும்பிடி வகுளம்’ (குறிஞ். 70) என்றார் கபிலர். ‘வகுளம்’ என்பதற்கு ‘மகிழம்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். இதற்கு ‘இலஞ்சி’ என்ற பெயரையும் சூட்டுகின்றது சேந்தன் திவாகரம்.

மகிழ் ஒரு சிறு மரம்; என்றும் தழைத்திருக்கும். மலர், தேர் உருளையின் வடிவானது. மலரின் நடுவில் சிறு துளையிருக்கும். இம்மலர் சிறியதாயினும் நறுமணம் உடையது. வெளிர் மஞ்சள் நிறமானது.

தாவரவியலில் இதற்கு ‘மிமுசாப்ஸ் இலஞ்சி’ என்று பெயர். சேந்தன் திவாகரம் குறிப்பிடும் ‘இலஞ்சி’ என்ற வேறு பெயர் தாவரவியலில் இதற்கமைந்த சிற்றினப் பெயராகுதல் காண்க.

சங்க இலக்கியப் பெயர் : வகுளம்
பிற்கால இலக்கியப் பெயர் : மகிழ், இலஞ்சி
உலக வழக்குப் பெயர் : மகிழம்பூ, மகிழ மரம்
தாவரப் பெயர் : மிமுசாப்ஸ் இலெஞ்சி
(Mimusops elengi, Linn.)

வகுளம்-மகிழம் இலக்கியம்

மணங்கமழும் மலர்களில் மகிழம்பூவின் மணம் மகிழ்ச்சி தரும். சங்க இலக்கியத்தில் மகிழம் பூவை ‘வகுளம்’ என்பர்.

“பசும்பிடி வகுளம் பல்இணர்க் காயா-குறிஞ். 70.

என்றார் கபிலர். வகுளம் என்பதற்கு மகிழம்பூ என்று உரை வகுத்துள்ளார் நச்சினார்க்கினியர். இங்ஙனமே பரிபாடலிலும், திணைமாலை நூற்றைம்பதிலும் ஒவ்வோரிடத்தில் மட்டும் வகுளம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி ”-பரி. 12 : 79

“நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை ”[124]

சேந்தன் திவாகரம் [125] ‘வகுளம் இலஞ்சி மகிழ் மரமென்று’ என்று வகுளத்திற்கு, இலஞ்சி, மகிழ் என்ற இரு பெயர்களைச் சூட்டுகிறது. தாவர இயலில் இதற்கு மிமுசாப்ஸ் இலெஞ்சி என்று பெயர். இதில் தாவரச் சிற்றினப் பெயராகிய ‘இலெஞ்சி’ என்பது திவாகரம் கூறும் இலஞ்சியாகத்தான் இருக்க வேண்டும்.

தினை விதைப்பதற்கு வெறும் புதரை வெட்டுவது போன்று, வகுளத்தை வெட்டி எறிவதைக் கணிமேதாவியார் கூறுதலின் இது குறிஞ்சி நிலப்பூ என்பதறியலாம்.

மகிழ மரம், மிக அழகிய சிறுமரம். என்றும் பசுமையானது. இதன் பூ மிகச் சிறியது. அழகிய அமைப்புடையது. மங்கிய மஞ்சள் நிறமானது. இனிய நறுமணமுடையது. இம்மலரின் வடிவமைப்பைத் திருத்தக்கதேவர் தேர்க்காலின் வடிவமைப்பிற்கு ஒப்பிட்டுள்ளார்.

கம்பர், இராமனது கொப்பூழ்க்கு இப்பூவை உவமையாக்கினார். இராமனது ஒவத்து எழுத ஒண்ணாத உருவத்தைச் சொல்லின் செல்வன் சொற்களாற் காட்டுகின்றார்[126]. கவி மரபில் வகுளம் மகளிர் எச்சில் உமிழ மலரும் என்பர்.

இம்மலர் வடிவில் சிறியதாயினும், மணத்தாற் பெரியது. ‘மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம்[127]’ என்பதுங் காண்க. இப்பூவில் மையத்துளை இருத்தலின், இணரிலிருந்து கழன்று விழும். அதனால், இம்மலர்களை நாரால் கோத்துக் கண்ணியாக்கிப் புனையலாம்.

வகுளம், சிவனுக்குரிய மலர்களுள் ஒன்றென்பர். இப்பூ நம்மாழ்வாருக்குரிய சின்னப்பூ என்பது போல, அவரே ‘வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்’[128]என்று பாடுகின்றார்.

வகுளம்—மகிழம் தாவர அறிவியல்

தாவரவியலில் இச்சிறுமரம் சபோட்டேசி என்ற குடும்பத்தின் பாற்படும். இக்குடும்பத்தில் 40 பேரினங்களும், ஏறக்குறைய 600 சிற்றினங்களும் உள என்பர். இவற்றுள் 8 பேரினங்கள் இந்தியாவில் உள்ளதாக ஹூக்கரும், தமிழ்நாட்டில் ஆறு பேரினங்கள் வளர்வதாகக் காம்பிளும் கூறுவர். வகுளம் இவற்றுள் மிமுசாப்ஸ் என்ற பேரினத்தைச் சார்ந்தது. இப்பேரினத்தில் இந்தியாவில் உள்ள 5 சிற்றினங்களில் 3 மட்டும், தமிழ் நாட்டில் வாழ்கின்றன. வகுளத்திற்கு இலஞ்சி என்ற ஒரு பெயரும் உண்டெனக் கண்டோம். இப்பெயரையே தாவரவியவில் இதன் சிற்றினப் பெயராக ‘இலெஞ்சி’ எனப் பெயர் அமைத்துள்ளார் லின்னேயஸ்.

இதன் இதழ்கள் இணைந்துள்ளமையின், இது ஹெட்டிரோமீரி என்னும் தாவரத் தொகுதியுள் வைக்கப்பட்டுள்ளது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என, சென் எஸ்; சென் என்.கே (1954), சாப்திசிங் (1961) முதலியோர் அறுதியிட்டனர்.

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஹெட்டிரோமீரி (அல்லி இணைந்தது)
தாவரக் குடும்பம் : சப்போட்டேசி (Sapotaceae)
 

வகுளம்
(Mimusops elengi)

தாவரப் பேரினப் பெயர் : மிமுசாப்ஸ் (Mimusops)
தாவரச் சிற்றினப் பெயர் : இலெஞ்சி (ilengi)
தாவர இயல்பு : சிறுமரம், 4 முதல் 5 மீ. உயரமானது. எப்பொழுதும் பசுமையாக இருக்கும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : பசிய தனி இலை. பளபளப்பானது. 8-10 செ. மீ நீளமும் 2-3 செ. மீ. அகலமும் உள்ளது. நீர் நிலைக்கு அருகில் உள்ள மரத்தின் இலைகள் சற்றுப் பெரியனவாக இருக்கும்.
மஞ்சரி : தனிமலர். காம்புடன் இலைக் கோணத்தில் உண்டாகும்.
மலர் : மழுங்கிய வெண்மை நிறமானது. மலர்ந்ததும், காம்பிலிருந்து கழன்று விழும்.
புல்லி வட்டம் : 8 புறவிதழ் விளிம்புகள் உள்ளன.
அல்லி வட்டம் : 8 அகவிதழ்கள் இணைந்து இருக்கும் அல்லிக்குழல் 3 மி.மீ. நீளமானது.
மகரந்த வட்டம் : 8 மகரந்தத் தாள்களும், அகன்ற பல கூரிய போலி மகரந்தத் தாள்களும் உள்ளன. அல்லி ஒட்டியவை. மலர்ந்தவுடன், இப்பூ காம்பிலிருந்து கழன்று விழும். மையத்தில் சிறு துளை இருக்கும். நறுமணம் உள்ளது. மலர் வாடிய போதும் மணமிருக்கும்.
சூலக வட்டம் : 6-8 சூலறைச் சூலகம். சூல்முடி சுபுலேட்.
கனி : பெர்ரி என்னும் முட்டை வடிவமான மஞ்சள் நிறமுள்ள சதைக்கனி. 2.5-3 செ.மீ. நீளமானது. விதையில் நறுமண எண்ணெய் உண்டு.

இதன் மலருக்காக இச்சிறுமரம் தோட்டங்களில் வளர்க்கப் படுகிறது. கருஞ் சிவப்பு நிறமான இதன் அடிமரம் மிக வன்மையானது. வண்டிச் சக்கரங்களுக்கும், வேளாண்மைக் கருவிகளுக்குக் காம்பு செய்வதற்கும் பயன்படும். தமிழ் நாட்டில் இம் மரம் பரவலாக வளர்கிறது.

 

சிறுமாரோடம்-செங்கருங்காலி
டையோஸ்பைரஸ் எபெனம் (Diospyros ebenum,Koen.)

கபிலர் கூறும் ‘சிறுமாரோடம்’ (குறிஞ். 78) என்பதற்குச் ‘செங்கருங்காலிப்பூ’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர். ‘மாரோடம்’ என்பது இதன் பெயர். இது தழைத்திருப்பதைக் குறிக்கப் ‘பசுமாரோடம்’ எனவும், இதன் மலர் மணத்தைக் குறிக்க ‘நறுமாரோடம்’ எனவும், மலரின் அளவைக் குறிக்கச், ‘சிறுமாரோடம்’ எனவும் புலவர் இதனை விதந்து பாடியுள்ளனர். இது ஒரு பெரிய மரம். உயரமாக வளரும். இதன் மலர் மஞ்சள் நிறமானது. சிறந்த நறுமணம் உடையது.

சங்க இலக்கியப் பெயர் : சிறுமாரோடம், மோரோடம்
உலக வழக்குப் பெயர் : கருங்காலி, ஆச்சா மரம், மாரோடம்
ஆங்கிலப் பெயர் : ரோஸ்உட் (Rosewood)
எபெனி (Ebeny)
தாவரப் பெயர் : டையோஸ்பைரஸ் எபெனம்
(Diospyros ebenum,Koen.)

சிறுமாரோடம்-செங்கருங்காலி இலக்கியம்

‘குல்லை பிடவம் சிறுமாரோடம்’ என்றார் கபிலர் (குறிஞ். 78) இதில் வரும் ‘சிறுமாரோடம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘செங்கருங்காலிப்பூ’ என்று உரை கூறியுள்ளார். பாலை பாடிய பெருங்கடுங்கோ, ‘நறுமோரோடமோடு’ என்பர் (நற்றி. 337:5). இதற்கு ‘நறிய செங்கருங்காலி மலர்’ என்றார் அதன் உரைகாரர். ‘பசுமோரோடமொடு ஆம்பல் ஒல்லா’ என்பது, ஐங்குறு நூறு (93:2) ‘மாரோடம்’ என்பது இதன் பெயர் போலும். தழைத்திருப்பதைக் குறிக்கப் ‘பசுமோரோடம்’ எனவும், நறுமணத்தைக் குறிக்க ‘நறுமோரோடம்’ எனவும், மலரின் அளவைக் குறிக்கச் ‘சிறுமாரோடம்’ எனவும் பாடினர் என்பது ஒக்கும். இம்மலர் நறுமணம் உடையது. இதனை மகளிர் கூந்தலில் அணிவர். இதன் நறுமணத்தை விவரிக்கும் அழகிய பாடல் ஒன்று நற்றிணையில் காணப்படுகின்றது: தலைவன் பொருள் வயிற் பிரிதலுற்றான். அவன் குறிப்பறிந்த தோழி,

‘உலகம் படைத்த காலம் முதலாகப் பொருளீட்டி வாழ விரும்புவோர், தம்மை அடைக்கலம் புகுந்தாரைக் (தலைவி) காத்து உடனுறைந்து, அவளது கூந்தலின் பெரும்பயன் கொள்ளாது மறந்தனர் போலும். அவளது கதுப்பில் நறுமணம் வீசுகின்றது. வேனிற் காலத்துப் பூத்த மோசி மல்லிகை மலரையும், பாதிரியின் சிறந்த மலரையும், மாரோடத்தின் நறிய மலரையும், கொய்து ஒருங்கே அடைத்து வைத்திருந்த பூஞ்செப்பைத் திறந்து வைத்தாற் போலும், நறிய மணம் வீசும் அவளது கூந்தலில் முகம் புதைத்து நுகர்ந்து மகிழும் பெரும்பயனைத் துறக்க எண்ணினர் போலும்’ என்கிறாள்.

“உலகம் படைத்த காலை தலைவ!
 மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே
 முதிரா வேனில் எதிரிய அதிரல்
 பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்
 நறுமோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
 செப்பிடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்
 அணிநிறங் கொண்ட மணிமருள் ஐம்பால்
 தாழ் நறுங்கதுப்பில் பையென முழங்கும்
 அரும்பெறற் பெரும் பயம் கொள்ளாது
 பிரிந்துறை மரபின் பொருள் படைத்தோரே”
-நற். 337

இச்செங்கருங்காலி மரம் மிக வலிமையானது. வேலைப்பாடுகள் கூடிய மர வேலைக்குப் பெரிதும் பயன்படுவது. இதன் மலர் பசிய மஞ்சள் நிறமானது. சிறந்த நறுமணம் உடையது.

சிறுமாரோடம்—செங்கருங்காலி தாவர அறிவியல்

|-style="vertical-align:text-top;"

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஹெட்டிரோமீரி, எபனேலீஸ் அகவிதழ் இணைந்தவை.
தாவரக் குடும்பம் : எபனேசி (Ebenaceae)
தாவரப் பேரினப் பெயர் : டையோஸ்பைரஸ் (Diospyros)
தாவரச் சிற்றினப் பெயர் : எபெனம் (ebenum)
தாவர இயல்பு : பெரிய, உயரமான மரம். பசிய காடுகளில் வளர்கிறது.
தாவர வளரியல்பு : மீசோபைட். பசிய இலையுள்ளது. வறண்ட நிலத்தில் வளரும்,
இலை : தனி இலை, சுற்றடுக்கில் வளரும்.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர் முதிய கிளை நுனியில் காணப்படும்.
மலர் : பசிய மஞ்சள் நிறமான மலர்கள். இரு பாலானவை. பெண் பூக்கள், ஆண் பூக்களைக் காட்டிலும் பெரியவை. 4-5 அடுக்கு மலர்கள்.
புல்லி வட்டம் : சிறியது. பிளவுபட்டது.
அல்லி வட்டம் : 4-5 இதழ்கள், புனல் வடிவானவை. முதிராப் போதுகளில் இதழ்கள் வலமாக முறுக்கியிருக்கும்.
மகரந்த வட்டம் : ஆண்மலரில் 4 மகரந்தத் தாள்கள் உள்ளன. அல்லது 16 வரையிலும் காணப்படும்.
தாதுப்பை : நீளமானது. குத்துவாள் போன்றது.
சூலக வட்டம் : பெண் பூக்களில் 4-5 சூலிலைகளை உடையது. பெரும்பாலும் ஒரே ஒரு சூல் காணப்படுகிறது.
சூல் தண்டு : சூல்தண்டும், சூல்முடியும் 1-4 பிளவுள்ளவை. ஆண் பூவில் அருகியுள்ளது.
கனி : உருண்டை அல்லது முட்டை வடிவானது. பெரிதும் புல்லி முதிர்ந்து, மரம் போல் சூழ்ந்திருக்கும். உள்ளே சதைப் பற்று குழகுழப்பானது.
விதை : நீண்டு அடியில் குறுகியிருக்கும். தட்டையானது. வித்திலைகள் மெல்லியவை. பட்டையாக இருக்கும்.

இதன் மரம் மர வேலைக்கு உகந்தது. மிக வலிமையானது. மரத்தின் நடுவில் வைரம் பாய்ந்த பகுதி கறுப்பாக இருக்கும். ‘ரோஸ் உட்’ என்றும் ‘இந்திய எபெனி மரம்’ என்றும் பெயர்படும்

டையோஸ்பைரஸ் என்னும் இப்பேரினத்தில் 24 சிற்றினங்கள் தமிழ்நாட்டில் வளர்கின்றன. பெரும்பாலும் இவை வறண்ட மலைப் பகுதிகளில் பசுமைக் காடுகளிலும் வளரும் மரங்களும், பெரும்புதர்களும் ஆகும். பல சிற்றினங்களின் மரங்கள் மர வேலைக்குப் பயன்படுகின்றன.

 

முல்லை
ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்
(Jasminum auriculatum,Vahl.)

சங்க இலக்கியங்களில் மிகுதியாகப் பேசப்படுவது முல்லை ஆகும். காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை நிலம் எனப்படும். பொருள் தேடவும், அரச ஆணையை ஏற்றும் தலைமகன் தனது தலைவியைப் பிரிவான். அவன் திரும்பி வருந்துணையும் தலைமகள் அவனது பிரிவை ஆற்றியிருப்பதைத்தான் முல்லை ஒழுக்கம் என்பர். முல்லை என்றாலே கற்பு எனப்படுதலின் கற்புமுல்லை என்ற பாகுபாடும் காணலாம். முல்லையின் பெயரால் ‘பண்’ ஒன்றுண்டு. ‘முல்லையத் தீங்குழல்’ என்றும், ‘முல்லை நல் யாழ்ப்பாண’ என்றும் ‘முல்லை’யானது குழலொடும் யாழொடும் பேசப்படும். தமிழ்க்குடிமகளின் அகவாழ்விலும், புறவாழ்விலும் இணைந்துள்ளது முல்லையாகும்.

சங்க இலக்கியப் பெயர் : முல்லை
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர்கள் : கொகுடி, தளவம்
பிற்கால இலக்கியப் பெயர் : முல்லை, தளவம்
உலக வழக்குப் பெயர் : முல்லை, கொகுடி
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்
(Jasminum auriculatum,Vahl.)

முல்லை இலக்கியம்

இனி, முல்லையைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவனவற்றைக் காண்போம்.

செந்தமிழ் இலக்கியச் சிறப்பெல்லாம் கற்பு, வீரம், கொடை என்னும் சீரிய செம்பொருள்களை விரித்து உரைப்பதில் அடங்கும். கற்பு எனப்படுவது மலரிலும் மெல்லிய காமத்திலிருந்து விரியும். இதனைத் தொல்காப்பியம் ‘காமஞ் சான்ற’ எனத் தொடங்கும் நூற்பாவில் உணர்த்துகிறது. இத்தகைய கற்புக்கு அடையாள மலர் முல்லை. முல்லை என்றாலே அது கற்பைக் குறிக்கும். அதனால் ‘மௌவலும் தளவமும் கற்பும் முல்லை’ என்றது சேந்தன் திவாகரம் [129]. தமிழ் மக்களின் வாழ்வு முல்லையில் அரும்பும். முல்லையில் வளர்ந்து போதாகும். முல்லையில் முகிழ்த்து மலரும். ஆகவே, வாழ்வெல்லாம் முல்லையில் மணக்கும். ஆதலின், முல்லை முதலிடம் பெறுகின்றது.

தமிழ் நிலத்தைப் பாகுபாடு செய்யும் தொல்காப்பியனார்,

“முல்லை , குறிஞ்சி, மருதம், நெய்தல்
-தொல், பொருள். 104


என்று முல்லையை முதற்கண் அமைத்தார்.

இதற்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர் ‘கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல்லிலிருந்து நல்லறஞ் செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது.’ என்றார்.

அங்ஙனமே இளங்கோவடிகள்[130], தொல்காப்பியத்தைப் பின் பற்றி முல்லைக்கு முதலிடம் தந்துள்ளார்.

முல்லையின் பெயரால் சங்க இலக்கியங்களில் உள்ள பாக்கள் பல: சிறப்பாக,

பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு
கலித்தொகையில் முல்லைக்கலி
ஐங்குறுநூற்றில் ஐந்தாவது பகுதி-முல்லை
அகநானூற்றில் நான்கு எண்ணுள்ள பாக்கள்
(நாலு தனி முல்லை)

முல்லை என்னும் பெயர் தமிழ் நாட்டில் காடு–காடு சார்ந்த புலத்தைக் குறிப்பதோடு, முல்லைத் திணையையும் குறிக்கும். முல்லைத் திணை ஒழுக்கமாவது ஆற்றியிருத்தல். அதாவது அரசு ஆணையாலும், பொருள் ஈட்டுதல் குறித்தும் தலைமகன், தலைமகளைப் பிரிந்து செல்வான். அவன் திரும்பி வருந்துணையும் தலைமகள் ஆற்றியிருக்கும் ஒழுக்கத்தை, முல்லை ஒழுக்கம் என்பர்.

போரில் வெற்றியைக் குறிப்பது வாகைத் திணை. இதன் உட்பிரிவான துறைகள் பல. அவற்றுள் முல்லையால் பெயர் பெற்ற 12 துறைகள் குறிப்பிடப்படுகின்றன. வாகைத் திணையின் வெற்றியை, உறழ்ச்சியால் பெற்ற வாகை எனவும், இயல்பால் பெற்ற வாகை எனவும் இருவகையாகப் பேசுவர்.

இயல்பால் வெற்றி பெற்ற வாகைத் திணையில் முல்லைப் பெயர் பெற்ற துறைகள் பன்னிரண்டாவன:

 1. அரச முல்லை அரசனது வெற்றி மேம்பாடு கூறுவது.
 2. பார்ப்பன முல்லை பார்ப்பனரது நடுவு நிலைச் சிறப்பைக் கூறுவது.
 3. கணியன் முல்லை கணித்துக் கூறும் சோதிடன் புகழ் கூறுவது.
 4. மூதின் முல்லை பழங்குடி வீரத்தாயின் மன வலிமை.
 5. அவைய முல்லை அவையோர் நடுவு நிலைப் பெருமையைக் குறிப்பது.
 6. ஏறாண் முல்லை ஏறு போன்றவனால் பெற்ற குடிப் பெருமை கூறுவது.
 7. வல்லாண் முல்லை ஊர், குடி கூறி வீரனது நல்லாண்மை குறிப்பது.
 8. காவல் முல்லை அரசனது காவற் சிறப்பைக் குறிப்பது.
 9. பேராண் முல்லை அரசன் போர்க்களத்தில் காட்டிய பேராண்மையைக் குறிப்பது.
10. மற முல்லை படைவீரனது போர்த்துடிப்பைக் கூறுவது.
11. குடை முல்லை மன்னனது கொற்றக்குடையின் சிறப்புக கூறுவது.
12. சால்பு முல்லை அறிவிற் சிறந்த சான்றோரது சிறப்புப் பற்றியது.

அன்றியும் பருவக் காலத்தைக் குறிக்கும் முல்லையைக் கார் முல்லை என்பர்.

‘காரும் மாலையும் ‘முல்லை’ என்பது நூற்பா (தொல். பொருள். 6) ஆதலின், கார் காலத்தையும், மாலைப் பொழுதையும் குறிப்பது முல்லை மலர். இதனைப் பின்வரும் அடிகளில் காணலாம்.

“கார் நயந்து எய்தும் முல்லை ”-ஐங். 454

“எல்லை பைபயக் கழிப்பி முல்லை
 அரும்புவாய்அவிழும் பெரும்புன் மாலை”

-நற். 369 : 3-4


கற்பு முல்லை :-

மேலும், மகளிரின் கற்பு ஒழுக்கத்திற்கு அறிகுறி முல்லையாகும். கன்னியாக இருந்த ஒரு பெண் முல்லை மலரைத் தேடிய அளவாலே, அவள் கற்பு ஒழுக்கத்திற்கு உரியவள் ஆகின்றாள். அன்றி ‘கற்பின் மிகுதி தோன்ற முல்லை சூடுதல் இயல்பு’ என்பர் நச்சினார்க்கினியர். அதனால், கற்பின் சின்னம் முல்லை என்று அறிதல் கூடும். இவ்வுண்மையைச் சங்கச் சான்றோர் விதந்து கூறுப.

“முல்லை சான்ற கற்பின் மெல்லியல் ”
-நத்தத்தனார்-சிறுபாண். 30

“முல்லை சான்ற கற்பின்
 மெல்இயல் குறுமகள் உறைவின் ஊரே”

-இடைக்காடனார்-நற். 142 : 10-11

“முல்லை சான்ற கற்பின்
 மெல்இயல் குறுமகள் உறைவின் ஊரே”

-இடைக்காடனார்-அகநா. 274 : 13-14


‘முல்லை சான்ற கற்பின்’ என்ற சொற்றொடருக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர், ‘முல்லை சூடுதற்கு அமைந்த கற்பு’ என்று உரை கூறுதலின், இவ்வுண்மை வலியுறுத்தப்படும். இதனால், முல்லை என்ற சொல்லுக்கே கற்பு என்ற பொருளும் தோன்றியது போலும். இதனை,

‘மௌவலும் தளவமும் கற்பும் முல்லை’ என்று சேந்தன் திவாகரம்[131]கூறுவதாயிற்று. ஆகவே கற்பு என்ற மற்றொரு பெயரும் முல்லைக்குரியதாயிற்று.

இனி, காதல் ஒழுக்கத்திலிருந்து கற்பு ஒழுக்கத்திற்கு நடை போடும் நாடகம் ஒன்றைக் கலித்தொகையிலிருந்து காண்போம் (முல்லைக்கலி. 115).. ஓர் ஆயர் மனைக்குப் பின்புறமுள்ள அரிய கானத்தில் தலைமகன் வரவு அறிந்த தோழி தலைமகளைத் தனியே விட்டு மறைந்து நிற்கிறாள்.

களவொழுக்கத்தில் தலைப்பட்ட ஆயர் மகன் முல்லை மலரால் ஆன தொடையும் கண்ணியுஞ் சூடிக் கொண்டு, தலைவியை நாடி வருகிறான். தலைவியைக் கண்ட தலைமகன், தான் சூடியிருந்த, முல்லை மாலையிலிருந்து ஒரு பகுதியைத் துணித்து அவளிடம் கொடுக்கிறான். அவளும் அகம் மிக மகிழ்ந்து, அதனைத் தன் கூந்தலிலிட்டு மிகவும் நன்கு முடித்துக் கொண்டு, மனைக்குத் திரும்புகிறாள். அன்று மாலையில் மனையில் தலைவியின் நற்றாயும், தந்தையும் வீற்றிருக்கின்றனர். செவிலித் தாய், தலைவியின் கூந்தலை வெண்ணெய் நீவி முடிப்பதற்கு அவளது முடித்த கூந்தலை அவிழ்க்கின்றாள். முல்லை மலர்த் தொடை கீழே விழுகின்றது. அதனை எல்லோரும் காண்கின்றனர். நெருப்பைக் கையாலே தீண்டியவள் போலச் செவிலி, கையைப் பிதிர்த்துத் துடித்துப் புறம் பெயர்ந்து போகிறாள். அப்பூ வந்தவாறு எங்ஙனம் என்று வினவலும் செய்யாள்; சினத்தலும் செய்யாள்; தந்தை மருண்டார். நற்றாய் நாணுற்றுக் கவன்றாள். தலைவியோ அச்சுற்று, சந்தனம் பூசி உலர்த்தின கூந்தலை முடித்துக் கொண்டாள். நிலத்தே தாழ்ந்து கிடந்த தனது பூத்தொழில் மிக்க நீல ஆடையைக் கையாலே சிறிதேறத் தழுவிக் கொண்டாள். தளர்ந்து நடந்து பக்கத்தில் இருந்த கானகத்துள் சென்று ஒளித்துக் கொண்டாள்.

இரவெல்லாம் தமரும், ஊரவரும் கூடிப் பேசுகின்றனர். அவளை, அவனுக்கே அடை சூழத் துணிகின்றனர். இவற்றை அறிந்து கொண்ட தோழி, தலைவியைத் தேடி வருகின்றாள். தோழியிடம் தலைவி சொல்கின்றாள். ‘பிறர் காணாமல் உண்ட கள்ளின் களிப்பு, பிறர் கண்டு நடுங்கும்படியாகத் தாம் கள்ளுண்ட படியைக் காட்டிக்கொடுக்குமல்லவா? அதுபோல, யாம் மறைந்து ஒழுகிய களவொழுக்கத்தால் கையும் களவுமாகப் பிடித்துக் கொள்ளப்பட்டேன் தோழி!’ என்று கூறி நடுங்கி நின்றாள்.

அவளின் நடுக்கத்தைக் கண்ட தோழி அதற்குக் காரணம் கேட்கிறாள். தலைவி நடந்ததெல்லாம் கூறிப் புழுங்கி நிற்பவும், தோழி சொல்கிறாள். “அஞ்சற்க ஆயர் மகன் சூடிய முல்லைக் கண்ணியை நீ உன் கூந்தலில் முடித்துக் கொண்டாயாதலின், நீ அவனுக்கு உரியவளாகி விட்டாய் ஆகவே, நம் தமர் எல்லாம் கூடி, உன்னை அவனுக்கே மணம் செய்விக்க முடிவு செய்து, மண விழாவுக்கு ஆயத்தம் செய்கின்றனர். மனை முற்றத்தில் மணலைப் பரப்பித் திரையிடுகின்றனர். மணக்கோலம் புனைக!” என்று கூறி, அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றாள். இதனை.

தோழி நாம் காணாமை உண்ட கடுங்கள்ளை மெய்கூர
 நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக்
 கரங்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய்நம்
 புல்லினத்து ஆயர்மகன் சூடி வந்ததோர்
 முல்லைஒரு காழுங்கண்ணியும் மெல்லியால்
 கூந்தலுட் பெய்து முடித்தேன்மன் தோழியாய்
 வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
 அன்னையும் அத்தனும் இல்லராயாய் நாண
 அன்னை முன் வீழ்ந்தன்று அப்பூ:
 அதனை வினவலுஞ் செய்யாள் சினவலுஞ் செய்யாள்
 நெருப்புக் கை தொட்டவர் போல விதீர்த்திட்டு
 நீங்கிப் புறங்கடைப் போயினள் யானுமென்
 சாந்துளர் கூழை முடியா நிலந்தாழ்ந்த
 பூங்கரை நீலந்தழீஇத் தளர்பு ஒல்கிப்
 பாங்கரும் கானத்து ஒளித்தேன் அதற்கெல்லா
 ஈங்கெவன் அஞ்சுவது
 அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்நாய் ஆயின் நமரும்
 அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன்கண்
 வரைப்பின் மணல் தாழப்பெய்து திரைப்பில்
 வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே யாம்
 அல்கலும் சூழ்ந்த வினை.”
-கலி. 115

கற்பு முல்லையை விளக்கும் மற்றொரு கலித்தொகைப் பாடலும் உண்டு. ஏறுதழுவும் நிகழ்ச்சிக்கு ஓர் இளைஞன் வருகின்றான். அது காண ஓர் அழகிய ஆயர் மகளும் வருகிறாள். இளைஞன் தன்னை நோக்கி வெறித்து வந்த காளையை அடக்கப் பாய்ந்தான். அவன் அணிந்திருந்த முல்லை மாலை, காளையின் கொம்பில் சிக்கிக் கொண்டது. அது துள்ளி ஓடிய அலைப்பால், மாலை பிய்த்துக் கொண்டு பூக்கள் சிதறின. முல்லைப் பூங்கண்ணி அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆயர் மகளின் கூந்தலைச் சென்று அடைந்தது. அவனிடம் உள்ளத்தைப் பறி கொடுத்த அவளும், தொலைத்த அப்பொருளைப் பெற்றது போலத் தலையில் அதனை முடித்துக் கொண்டாள். எனினும், அவளுக்கு அச்சம் பிறந்தது. தன் தலையில் முல்லைப் பூவைத் தாய் பார்த்தால், பூ முடிக்கத் தெரியாத உன் தலையில் ஏதிலான் கண்ணி முடித்தது யாங்ஙனம்?” என்று வினவினால், என் செய்வது என்று நடுங்கினாள். அது கண்ட தோழி, ‘அவன் கண்ணிப் பூ சூடினாய்; ஆதலின் நின் களவொழுக்கத்தைப் பிறர் அறியாதிருக்கும் பொருட்டு, உனக்குத் தெய்வமால் கொண்டது என்று கூறி, அவனுக்கே உன்னை அடை சூழ்ந்தார் எல்லாருமே’ என்று கூறி மகிழ்விக்கின்றாள்.

எனவே, களவுக்குப் பின் கற்பு ஆகலின், கற்பின் அறிகுறி முல்லையாயிற்று. இதனை, ‘முல்லை சான்ற கற்பின் மெல்லியல்’ (சிறுபாண். 30) என்றார்.

கற்பின் மிகுதி தோன்ற முல்லை மலர் சூடுதல் இயல்பாகி விட்டமையால், முல்லை என்ற சொல்லுக்கே கற்பு என்ற பொருளும் வழங்குவதாயிற்று. இதனைத் திருத்தக்க தேவர் கூறுவர்[132]. நச்சினார்க்கினியர் உரை கூறி விளக்குவர்.

முல்லைப்பூ வாழ்த்து மலருமாகும். முல்லை மலர்களை நாழி எனப்படும் மரத்தாலான படியில் நெல்லோடு கலந்து வைத்துக் கைதொழுது சான்றோரும், மங்கல மடந்தையரும் எடுத்துத் தூவி வாழ்த்துப என்று கூறும் முல்லைப்பாட்டு.

“யாழிசை இன வண்டார்ப்ப நெல்லோடு
 நாழி கொண்ட நறுவீ முல்லை
 அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
-முல்லைப். 7-9

மேலும், நாள் தோறும் அந்தி மாலையில் இல்லத்தை மங்கலமாக்குவதற்கும், இங்ஙனம் முல்லை மலர்களையும், நெல்லையுங் கலந்து தூவி, விளக்கெடுக்கும் வழக்கம் இருந்தது என்பதைச் சிலப்பதிகாரமுங் கூறும்[133].

‘முல்லை நல் யாழ்ப்பாண்’ (ஐங். 478) என வருதலின், முல்லையை இசைக் கருவிகளாகிய குழலொடும்[134], யாழொடும் கொண்டு முல்லை இசையோடும் பொருந்தி, முல்லைப் பண்ணாகவும் வழங்கப்பட்டமை அறியலாம்.

இத்துணைச் சிறப்பிற்றாகிய முல்லை ஒரு படர் கொடியாகும். முல்லைக் கொடி கார் காலத்தில் வளமாக ஓங்கி வளர்ந்து, தேரூரும் நெடுஞ்சாலையில் ஓரமாகத் தாவி நிற்கிறது. அவ்வழியில், கடை ஏழு வள்ளல்களில் ஒருவராகிய பாரி வள்ளல் தேர் ஊர்ந்து வருகிறார். முல்லைக் கொடி கொழு கொம்பின்றி அவர் இவர்ந்து வந்த தேரின் மேல் உராய்ந்தது. அது கண்ட பாரி தமது தேரை நிறுத்தி, முல்லைக் கொடியைக் கூர்ந்து நோக்கினார். பற்றுக் கோடின்றித் தளர்ந்து தாவி நின்ற முல்லைக் கொடியின் பால் இரக்கம் கொண்டார். முல்லைக் கொடி தேரின் மேலேறிப் படரும் பொருட்டுத் தேரை, அவ்விடத்தே நிறுத்தி விட்டு நடந்து சென்றார். ஓரறிவுயிராகிய முல்லைக் கொடியினிடத்தே காட்டிய பாரியின் பரிவு புலவர் உள்ளத்தைத் தொட்டது.

“. . . . . . . . . . . . சுரும்பு உண
 நறுவீ உறைக்கும் நாகநெடு வழிச்
 சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
 பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
 பறம்பின் கோமான் பாரியும். . . . ”
-சிறுபா. 87-91

என்று நத்தத்தனாரும்,

“ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன்
 முல்லைக்கு ஈத்த செல்லா நல்இசை
 படுமணி யானைப் பறம்பின் கோமான்
 நெடுமாப் பாரி. . . . . . . .”
-புறநா. 201 : 2-5

என்று கபிலரும் பாடுவாராயினர்.

இனி, ‘புனைகொடி முல்லை’ (புறநா. 200 : 9) எனவும். ‘பைங்கொடி முல்லை’ (அகநா. 74) எனவும், ‘நெடுங்கொடி முல்லை’ (ஐங். 422) எனவும் கூறப்படுதலின், முல்லை ஒரு பசிய நீண்ட கொடி எனவும், ‘பாசிலை முல்லை’ (குறுந். 108) (புறநா. 117 : 9) எனப்படுதலின், முல்லைக் கொடி பசுமையானதென்னும் இதன் தாவர இயல்பு கூறப்படுதல் காண்க.

இது பற்றுக் கொம்பில்லாதவிடத்துக் குன்றில் கருங்கல்லின் மேலேறிப் படரும் இதன் இயல்பைக் ‘கல்லிவர் முல்லை’ (குறிஞ். 77) ‘முல்லை ஊர்ந்த கல் இவர்பு ஏறி’ (குறுந். 275) என வரும் அடிகளில் காணலாம்.

‘செலவிடை அழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்த நவிற்சி யாகும்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கிணங்க (தொல்-கற்பியல். 14) வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமென்பது கொண்டு, முல்லைப் பெயரால் முல்லைப்பாட்டு என்ற நூல் எழுதினார் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இதற்கு உரை கூறும் நச்சினார்க்கினியர்,

‘தொல்காப்பியனார் கருத்திற்கேற்ப நப்பூதனார் செய்யுள் செய்தார் என்றுணர்க. இவ்வாறின்றி ஏனையோர் கூறும் பொருள்கள் இலக்கணத்தோடு பொருந்தாமை உணர்க’ என்றார்.

முல்லைப் பெயர் கொண்ட அள்ளூர் நன்முல்லையார், காவல் முல்லைப் பூதனார் என ஆண்பால் புலவர் பெயர் கொண்டார்.

முல்லை நகை வடிவாள் என்பது திருமகேந்திரப் பள்ளி அன்னைக் கடவுளர்க்கு அமைந்த பெயர். அங்குச் சிவபெருமான் முல்லை வன நாதர் எனப்படுவர்.

திருமுல்லைவாயில், முல்லையூர், முல்லைக்காடு, முல்லைப்பாடி எனப் பல ஊர்ப் பெயர்களில் முல்லை இடம் பெற்றது.

ஊரைச் சுற்றிலுமே முல்லை மலரும் இக்கொடி வேலியாகப் படர விடப்பட்டது என்று சங்க நூல்கள் கூறும்.

“முல்லைவேலி நல்லூரானே”-புறநா. 144 : 14

“வேலி சுற்றிய வால்வீ முல்லை”-அகநா. 314 : 19

முல்லைக்கொடி, தோன்றிக் கொடியோடு படர்ந்து, வளர்ந்து கார் காலத்தில் இவ்விரண்டும் பூக்கும் என்று நாகன்தேவனார் கூறுவர்.

“காடு கவின்எதிரக் கனைப்பெயல் பொழிதலின்
 பொறிவரிஇன வண்டு ஆர்ப்பப் பலவுடன்
 நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற”

-அகநா. 164 : 4-6


இவற்றுள் முல்லை மலர் வெண்மை நிறமானது. தோன்றி மலர் குருதிச் சிவப்பு நிறமானது. இவை இரண்டும் சேர்ந்து மலரும் போது, கண் களிகூரக் கவின் தரும். இவ்விருமலர்களையும் விரவிக் கட்டிய கண்ணியை முல்லை நில மாந்தர் சூடி மகிழ்வர் என்ப.

“தண்கமழ் முல்லை தோன்றி யொடு
 வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்”

-அகநா. 94 : 6-7


மேலும், மஞ்சள் நிறமுள்ள ஞாழல் மலரையும், செந்நிறமான செங்குவளை மலரையும், வெண்மையான முல்லை மலருடன் புனைந்த கண்ணி பற்றிய செய்தியையும் அகநானூற்றில் காணலாம்.

“கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்
 கழனி உழவர் குற்ற குவளையும்
 கடிமிளைப் புறவின் பூத்த முல்லையோடு
 பல்லிளங் கோசர் கண்ணி அயரும்”
-அகநா. 216 : 8-11

முல்லை முகை, “மகளிரின் முத்தன்ன வெண் நகை” (பல்) யை ஒக்கும் எனப் புலவர் பெருமக்கள் பாடுவர்.

(பரி. பா. 8 : 6;: நெடுநல். 130; குறுந். 186;: புறநா. 117 : 8-9; கலி. 103 : 6; 108:15)

குளிர்ந்த கார் காலம் முல்லை முகைகளையொத்த தனது பற்களைக் காட்டி நகை செய்வதாகத் தலைவி கூறும் ஒரு குறுந் தொகைப் பாட்டு.

“இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
 இவனும் வாரார் எவணரோ என
 பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
 தொகுமுகை இலங்கு எயிறாக
 நகுமே தோழி நறுந்தண் காரே”
-குறுந். 126

(புறந்தந்த-பாதுகாக்கப்பட்ட, எயிறு-பல்)

முல்லைக் கொடி தனது சிறு வெள்ளிய அரும்பையொத்த பற்களைக் காட்டி நகுவது போல முறுவல் கொண்டது என வினை முற்றி மீளும் தலைவன் கூறுவதாக உள்ள குறுந்தொகைப் பாடல்.

“கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்
 பல்ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
 முல்லை வாழியோ முல்லை நீநின்
 சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
 நகுவை போலக் காட்டல்
 தகுமோ மற்றுஇது தமியோர் மாட்டே”
-குறுந் . 162

தலைவி கூற்றாகவும், தலைவன் கூற்றாகவும் அமைந்த இவ்விருபாக்களிலும் முல்லையின் முகை, வெள்ளிய பற்களாக உருவகஞ் செய்யப்படுகின்றது. கார் காலத்தில் பெய்த மழையினால் முல்லைக் கொடி பாதுகாக்கப்பட்டு, மலரத் தொடங்கும் என்பதும் இவ்விரு பாடல்களுக்கும் பொது. கார் காலத்தில் திரும்பி வருவதாகத் தன் தலைவியிடம் கூறி விட்டுப் பொருள் வேட்கையில், இளமையையும் பாராது, அவளைப் பிரிந்து சென்ற தலைவன் பருவம் வந்துழியும் திரும்பவில்லை. அதுவரை ஆற்றியிருந்த தலைவி, கார் காலம் தனது தனிமையைக் கண்டு “நகுமே தோழி” என்று நொந்துரைப்பதையும், பிரிந்து வந்த தலைவன் கார் காலத்தில் பூத்த முல்லைக்கொடி தன்னுடைய தனிமையைக் கண்டு சிரிப்பதாக வருந்தி “இது தகுமோ” என்று வினவி, “வாழியோ முல்லை” என்று முல்லைக்கு வாழ்த்துரைப்பதையும் காணலாம்.

மற்று, முல்லை முகையினைப் பல்வரிசைக்கு ஒப்பிட்டுக் கூறுமிடத்து, இளமை நிலையாமையைக் குறிப்பிடும் கலித் தொகைப் பாடலும் ஒன்றுண்டு.

தலைவியின் இளமை எழில் நோக்காது, பொருள் தேடும் வேட்கை மிகுதியால் அவளைப் பிரிந்து போக எண்ணுகிறான் தலைமகன். பிரிவுணர்த்தப்பட்ட தோழி அவனிடம் நெருங்கிக் களவுக் காலத்தில் அவன் தலைவியின் நலம் பாராட்டிக் கூறிய மொழிகளை நினைவுறுத்துகிறாள். “ஐய! நறிய முல்லையானது தன்னில் ஒத்த முகையை ஒக்கும்படி நிரைத்துச் செறிந்த எம் பல்லினுடைய முறையினையுடைய நுகர்ச்சிக்குரிய இளமைப் பருவத்தைப் பாராட்டினாய்! அன்றி, எம் பல்லின் பறிமுறையைப் பாராட்டினையோ? அதாவது எம் பல்லின் செறிமுறையைப் பாராட்டினாய், அன்றி அவற்றின் பறிமுறையை இளமை போகப் போக எம் பற்கள் முல்லை மலர்களைப் போல முதுமையடைந்து விழுந்து விடுமென்பதைக் (முதுமையை) கருதவில்லையே” என்கிறாள்.

“நறுமுல்லை நேர்முகை ஒப்ப நிரைத்த
 செறிமுறை பாராட்டினாய் மற்றெம்பல்லின்
 பறிமுறை பாராட்டினையோ ஐய<”
-கலி. 22 : 9-11

முல்லையின் முகை காட்டுப் பூனைக்குட்டியின் பற்களுக்கு ஒப்பாய் (புறம். 017), கூரியதாய் இருக்கும். இதன் அரும்பு மாலையின் மலரும் என்பதை “முல்லை அரும்பு வாய் அவிழும் பெரும் புன்மாலை” (நற். 369) என்பர் நல்வெள்ளையார். அரும்பு கட்டவிழ்ந்து போதாகும். வண்டு போதவிழ்க்கும் (அகம் 74). முல்லைப் போது அலர்ந்து மலருங்கால், அச்சிறு பூவின் பெருமணம் கானெல்லாம் கமழும் என்பதைச் “சிறுவீ முல்லைப்பெரிது கமழ் அலரி” (நற். 361) எனவும், “பைங்கொடி முல்லை வீ கமழ் நெடுவழி” (அகம், 124 : 12) எனவும் கூறுவர்.

“அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப
 மென்புல முல்லை மலரும் மாலை”
-ஐங். 489

மாலையில் நகைவாய் முல்லையின் முகை வாய் திறப்ப அஞ்சிறை வண்டினம் முல்லை மலரின் தாதினை நயந்து ஊதும் என்பதும், முல்லை மலரில் தேன் பிலிற்றும் என்பதும் காணலாம்.

“அம்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி
 முல்லை நறுமலர்த் தாது நயந்துஊத
 எல்லை போகிய புல்லென் மாலை”
-அகநா. 234 : 12-14

“தேம்பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி”
-அகநா. 391 : 5


இங்ஙனம் வண்டு வாய் திறக்கத் தாதுகுத்துத் தேன் பிலிற்றி, மணம் பரப்பும் முல்லை மலரை விழையாதார் யார்? முல்லைப் பூவைத் தனியாகவும், வண்ண வண்ணத்த பிற மலர்களை விரவிக் கண்ணியாகவும், தாராகவும், மாலையாகவும் தொடுத்து, மகளிரும் ஆடவரும் அணிவர் (பதிற். 21 : 70; கலி. 118 : 25). களவு நிலை கடந்த மகளிர் கடிமணங் கொள்ளுங்கால், சூடுவது முல்லை மலர். தொடர்ந்து கற்பு நிலையில் ஒழுகும் போது, முல்லை மலரைத் தவறாது சூட்டிக்கொள்வர் (ஐங். 408).

களவொழுக்கத்தில் மணம் புரிந்த ஒருவன் அணிந்திருந்த முல்லைக் கண்ணியின் நறுமணத்தை அவளும் பெற்றாள். பெற்ற அம்மணத்தின் தன்மையை அவள் விவரிக்கும் குறுந்தொகைப் பாட்டைப் பாடியவர் அரிசில் கிழார்.

“. . . . . . . . . . . .பகுவாய்த் தேரை
 தட்டைப் பறையிற் கறங்கும் நாடன்
 தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின்
 மணந் தனன்மன் என் தோளே
 இன்றும் முல்லை முகை நாறும்மே”
-குறுந். 193 : 2-6

மணம் புரிந்து கொண்ட அவ்விருவரும் நகர்ப்புறத்தில் இல்லறம் நடத்துகின்றனர். அவளுடைய மனைக்குச் சென்ற தோழி “நீ வரையும் நாள் வரையில் நின் நலம் கெடாமல் நன்கு ஆற்றினை” என்றாள். அது கேட்ட தலைவி “அஃது என் வலியன்று, சென்ற திங்களில் நெடிய வெண்ணிலாவின் கண் அவன் என் தோள்களைத் தழுவி மணந்தான். அவன் அணிந்திருந்த முல்லை மலரின் மணம், இன்று வரை என் மேனியில் மணந்து கொண்டே இருக்கிறது” என்று கூறி மகிழ்கின்றாள்.

இத்துணைச் சிறப்புக்கும் உரியதாகிய முல்லை மலர் சூடப் படாத காலமும் உண்டு. கணவனைப் பிரிந்த மகளிர் முல்லையைச் சூடுவதில்லை. துக்க காலத்திலும் முல்லை சூடுவதில்லை.

பெருஞ்சாத்தன் என்னும் குறுநில மன்னன் ஒல்லையூரில் வாழ்ந்து வந்தான். அவன் போரில் இறந்து போனான். அவன் மாய்ந்த பின்னர், அவனது நாட்டில் முல்லை மலர் பூத்தது வழக்கம் போல். யாரும் இதனைப் பார்க்கவில்லை. அதனைப் பயன்படுத்தவுமில்லை. அப்போது அம்மன்னனிடம் பெருங் கிழமை கொண்ட புலவர் குடவாயில் கீரத்தனார் அங்கு வருகிறார். பூத்த முல்லையைப் பார்க்கின்றார். தாம் அடைந்த அவல நிலையில் “முல்லையே! அருமையானவன் இறந்தான் என நினையாமல், நீயும் பூத்துள்ளாயே, அவனை இழந்து நான் உயிரோடு இருப்பது போல் நீயும் பூத்தியோ” என்று ஓலமிடுகின்றார்.

“இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
 நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
 பாணன் சூடான்; பாடினி அணியாள்
 ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
 வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
 முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே”
-புறநா. 242

என்பதே அப்பாடல்

ஆகவே, பண்டைத் தமிழில் ஐம்புல மக்களின் வாழ்வியல் மலராகக் கருதப்பட்டது முல்லை மலர். களவியலிலும், கற்பியலிலும், மறவாழ்விலும், புறவாழ்விலும் ஏறத்தாழ பதினேழு வகையாகப் பாடப்பட்டுள்ள தனி மலர் முல்லை. சங்க இலக்கியங்களில் மிகுதியாகப் பாடப்பட்ட மலர் முல்லை. அகத்துறையில் இதனைப் பாடிய புலவர் பெருமக்கள் முல்லை மலரைக் கொண்டே இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகிய பேருண்மைகளை இயைய வைத்துத் தாவர இயல் உண்மைகளைத் தாம் கண்டவாறே பேசுந் திறம் வியந்து போற்றற்பாலது. மேலும், வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளல் பாரிக்கு, ஓரறிவுயிராகிய முல்லைக் கொடியிடத்துப் பிறந்த கருணையைக் காட்டி, தமிழ் மக்களின் அருள் வெள்ளத்தை அழகுறத் தீட்டி, உலகமெல்லாம் உணர வைத்த புலவர் புகழ் ஓங்குக.

முல்லை தாவர அறிவியல்

தாவரவியலார் முல்லைக் கொடியை ஓலியேசி என்ற தாவரக் குடும்பத்தில் சேர்த்துள்ளனர். இக்குடும்பம் ஓலியாய்டியே, ஜாஸ்மினாய்டியே என்ற இரு துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜாஸ்மினாய்டியே என்ற துணைக் குடும்பம், ஜாஸ்மினம் முதலான மூன்று பேரினங்களையுடையது. இப்பேரினத்தில் முல்லையும், முல்லை வகைகளும், மல்லிகையும், மல்லிகை வகைகளும் அடங்கும். பொதுவாக, முல்லைக் கொடியிலும், முல்லை வகைச் செடி, கொடிகளிலும் இலைகள் கூட்டிலையாக இருக்கும். மல்லிகைக் கொடி, மல்லிகை வகைச் செடி, கொடிகளில் இலைகள் தனி இலையாக இருக்கும். முல்லைக் கொடி முல்லை நிலத்தில் வளர்தலின், முல்லைப் புலத்தைச் சார்ந்ததாயினும், பிற புலங்களிலும் காணப்படுகின்றது.

தொல்காப்பியம் கூறும் ஐம்புலங்களில் ஒன்றாகிய முல்லை நிலத்தில் வளரும் பசிய கொடி முல்லை ஆகும். தாவர இயலார் இதனை ‘ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்’ என்பர். ஜாஸ்மினம் என்னும் இப்பேரினம் ஓலியேசி (Oleaceae) எனும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் ஏறக்குறைய 200 சிற்றினங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று ‘ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்’ எனப்படும் முல்லை ஆகும். சங்க இலக்கியத்தில் முல்லை நூற்றுக்கணக்கான இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லையுடன் தளவம், கொகுடி, செம்மல் என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவற்றுள் ‘தளவம்’, ‘செம்முலலை’ எனவும், ‘கொகுடி’ ஒரு வகை முல்லை எனவும், ‘செம்மல்’ சாதிப்பூ

முல்லை
(Jasminum auriculatum)

எனவும் (நச்) சாதிமுல்லை எனவும் கூறப்படுகின்றன. பிற்கால இலக்கியத்தில் காணப்படும் ‘தவளம்’ என்பதை வெண்ணிற முல்லை என்பர். மேலும் கொடி முல்லை. ஊசி முல்லை என்பன வழக்கில் உள்ளன.

முல்லையைச் சேர்ந்த மல்லிகைச் செடியும், ஜாஸ்மினம் என்ற பேரினத்தையே சேர்ந்ததாகும். சங்கவிலக்கியத்தில் பரிபாடலில் மட்டும் மல்லிகை மலர் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் இறுதி வெண்பாவில் மல்லிகை கூறப்படுகிறது. அன்றி, குறிஞ்சிப் பாட்டிலும், பிற சங்கப் பாடல்களிலும் குளவி என்ற மலர்ப்பெயர் காணப்படுகின்றது. இதனை நச்சினார்க்கினியர் ‘காட்டு மல்லிகை’ என்று கூறுவர். இதற்குத் தாளிப்பூ என்று பரிபாடல் பழைய உரை கூறும். ஐந்து முதல் எட்டு அடுக்கு அகவிதழ்களைக் கொண்ட மிக மணமுள்ள அடுக்கு மல்லிகைச் செடியும் இதில் உண்டு. குறிஞ்சிப் பாட்டில் காணப்படும் அதிரல் என்பதற்குப் ‘புனலிப்பூ’ என நச்சினார்க்கினியரும், ‘காட்டு மல்லிகை’யெனச் சிலப்பதிகார அரும்பத உரை ஆசிரியரும் கூறுப.

மற்று, ஓலியேசி என்ற இத்தாவரக் குடும்பத்தில் நிக்டாந்தெஸ் (Nyctanthes) என்ற பேரினமும் உண்டு. இப்பேரினத்தைச் சார்ந்த பவழமல்லிகையை நிக்டாங்தெஸ் ஆர்பார்டிரிஸ்டிஸ் என்பர். இது பவழக்கால் மல்லிகை எனவும் பாரிசாதம் எனவும் வழங்கும். சங்க இலக்கியத்தில் இது ‘சேடல்’ என்று பேசப்படுகின்றது. மேலும், இக்குடும்பத்தில் மிராபிலிஸ் என்ற மற்றொரு பேரினமும் உண்டு. மாலையில் மலரும் பல்வேறு வண்ண மலர்களுடைய அந்தி மல்லிகை, மிராபிலிஸ் ஜலாபா எனப்படும்.

மரமல்லிகை எனப்படும் நறிய மலர் குலுங்கும் மரம், மில்லிங் டோனியா ஹார்டென்சிஸ் எனப்படும். இது பிக்னோனியேசி என்ற தாவரவியல் குடும்பத்தைச் சார்ந்தது. ‘நாகமல்லிகை’ என்ற குறுஞ்செடி வெள்ளிய நறிய மலர்களையுடையது. இதற்கு ரைனகாந்தஸ் கம்யூனிஸ் மான்டானா (Rhinacanthus ccommunis var. montana) என்று பெயர். இதன் மலரியல்புக்கு ஏற்ப இது அக்காந்தேசி (Acanthaceae) என்ற குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆகவே முல்லை, மல்லிகைகளைப் பட்டியலிட்டுக் காண்போம்.

முல்லை

முல்லையும், மல்லிகையும் கொண்ட ஓலியேசி என்ற தாவரவியல் குடும்பம் :

முல்லை Jasminum auriculatum (Oleaceae)
தளவம்-வெண்ணிறமுல்லை Jasminum auriculatum . . . .
செம்மல்-சாதிமுல்லை Jasminum officinale . . . .
தளவம் (செம்முல்லை) Jasminum grandiflorum . . . .
கொகுடி (காட்டு முல்லை) Jasminum sambac . . . .
ஊசி முல்லை Jasminum cuspidatum . . . .
கொடி முல்லை Jasminum sambac Var. heyneanum
மயிலை Jasminum sambac var. florae-manoraepleno
மல்லிகை Jasminum pubescens (Oleaceae)
அடுக்கு மல்லிகை Jasminum arborescens . . . .
குளவி (காட்டு மல்லிகை, மலை மல்லிகை) Jasminum griffithii . . . .
அதிரல் (காட்டுமல்லிகை, மோசி மல்லிகை) Jasminum angustifolium . . . .
மனை மல்லிகை Jasminum sessiflorum . . . .
சேடல்-பவள மல்லிகை Nyctanthes arbor-tristis . . . .
அந்தி மல்லிகை Mirabilis jalapa . . . .
மர மல்லிகை Millingtonia hortensis (Bignoniaceae)
நாக மல்லிகை Rhinacanthus communis var montana
அந்தி மல்லிகை Mirabilis jalapa (Nyctaginaceae)

இக்குடும்பத்தை ஆலிவ் (Olive) குடும்பமென்பர். இக்குடும்பத்தில் 22 பேரினங்களும், ஏறக்குறைய 400 சிற்றினங்களும் உள்ளன. இவை ஆசியாவிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும், குளிர்ச்சியான அல்லது மித வெப்பமான இடங்களிலும் காணப்படுகின்றன.

ஜாஸ்மினாய்டியே என்னும் சிறு குடும்பத்தில் ஜாஸ்மினம், மெனடோரா, நிக்டாந்தெஸ் என்ற மூன்று பேரினங்களே உள்ளன எனினும், ஜாஸ்மினத்தில் மட்டும் ஏறக்குறைய 200 சிற்றினங்கள் உள்ளன.

1945-ஆம் ஆண்டில் டெய்லர் என்பவர் செல்லியல் அடிப்படையில் இக்குடும்பத்திலுள்ள பேரினங்களை மாற்றிப் பாகுபாடு செய்தார். எனினும், இக்குடும்பத்தை வேறு குடும்பங்களுடன் இணைத்துக் காட்ட முயலவில்லை. ஹாலியர் இக்குடும்பம் (ஓலியேசி) ஸ்கிராபுலேரியேசி என்னும் குடும்பத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கூறி, இக்குடும்பத்தைத் தமது டூபிபுளோரே (Tubiflorae) என்னும் தாவரக் குடும்பத் தொகுதியுள் சேர்த்துள்ளார்.

ஜாஸ்மினம் எனும் பேரினத்தின் பண்புகள் :

நேரான அல்லது ஏறுகொடியாக உள்ள குறுஞ்செடிகள். இவற்றின் இலைகள் எதிர்அடுக்கில் அமைந்தவை. மாற்றடுக்கிலும் காணப்படும். தனி இலையாகவோ, மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகளாகவோ காணப்படும். பெரிதும் நுனி வளராப் பூந்துணர் காணப்படும். தனி மலரைக் காண்பது அரிது. மலர்கள் அழகானவை; நறுமணம் உள்ளவை; தண்டின் உச்சியிலோ, இலைக் கோணத்திலோ உண்டாகும். பூவடிச் செதில்கள் மெல்லிய முட்டை வடிவானவை; சிலவற்றில் இதழ் போன்றிருக்கும். புல்லிகள் குழலாகவும், புனல் வடிவாகவும் அல்லது மணி வடிவாகவும் இருக்கும். 4-9 புல்லியிதழ்கள் மெல்லியவை. அல்லிக் குழல் குறுகலாகவும், நீண்டும் 4-10 இதழ்கள் அடியில் ஒட்டியும், மேலே மடல்கலாகவும் இருக்கும். மகரந்தத் தாள்-2 வழக்கமாக அல்லிக் குழலுள் அடங்கியிருக்கும். மகரந்தப் பைகள் நீள் சதுரமாகவும், இணைந்துமுள்ளன. சூலகம் இரு அறைகளை உடையது. ஒவ்வொன்றிலும் 2 சூல்கள் அடி ஒட்டியிருக்கும். சூல்தண்டு நூல் போன்றது. நீண்டு அல்லது குட்டையாக இருக்கும். சூல் முடி இரு பிளவானது. கனி ஒரு சதைக்கனி. சூலிலைகள் உருண்டை, நீள்வட்டம் அல்லது நீண்டு இருக்கும். ஒவ்வொரு சூலிலையிலும் ஒரு விதை காணப்படும். அரிதாக 2 இருப்பதுண்டு. விதையின் முளைசூழ் தசையிலை வித்திலைகள் குவிந்தும், தட்டையாயும் காணப்படும். முளை வேர் கீழ்மட்டமானது.

தாவரப் பெயர் : ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்
தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஒலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆரிகுலேட்டம் (auriculatum)
தாவர இயல்பு : பல்லாண்டு வளரும் புதர்க் கொடி.
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 20 முதல் 30 மீட்டர் நீளம் படர்ந்து வளரும் ஏறுகொடி
வேர்த் தொகுதி : ஆணி வேரும், பக்க வேர்களும்
தண்டுத் தொகுதி : மெல்லியது, பசுமையானது, வன்தண்டின் இயல்புடைமையின் வலிமையானது.
கிளைத்தல் : இலைக்கோணத்தில் உள்ள குருத்து கிளைத்து வளரும்.
இலை : கூட்டு இலைகள் எதிரடுக்கில் அமைந்தவை.
வடிவம் : நீள்முட்டை
விளிம்பு : நேரானது
நுனி : நேர்கோணமானது.
தனிமை : மெல்லியது
இலையடிச் செதில் : இல்லை
மஞ்சரி : நுனி வளரா சைமோஸ் மஞ்சரி
மலர் : ஈரடுக்கு (Biseriate) மலர் இருபாலானவை, ஒழுங்கானவை.
பூவடிச் செதில் : சிறியது. மெலிந்தும் முட்டை வடிவிலும் இருக்கும்.
புல்லி வட்டம் : 4-9 புறவிதழ்கள், மெல்லிய, சிறிய, பசுமையான அடியில் இணைந்த இதழ்கள்.
அல்லி வட்டம் : 4-10 திருகு இதழமைப்பு அகவிதழ்கள் புனல் வடிவில் இணைந்திருக்கும். வெண்மையானவை.
மகரந்த வட்டம் : மகரந்தத்தாள்கள் 2 அல்லிக் குழலுள் அடங்கியிருக்கும். அல்லியின் மேல் நிலையில் ஒட்டியவை. இரு மகரந்தப் பைகளிலும் தாது விளைகிறது.
சூலக வட்டம் : சூற்பை 2 அறைகளையுடையது. ஒவ்வொன்றிலும் 2 சூல் தலைகீழானவை. சூல்தண்டு குட்டையானது. சூல்முடி இரு பிளவுடையது. சூலிலை நீள்வட்டமானது.
காய்/கனி : சதைக்கனி
விதை : ஒவ்வொரு சூலிலையிலும் ஒரு விதை நேராகக் காணப்படும். வித்திலைகள் குவிந்தும், விதை தட்டையாகவும் காணப்படும். விதையில் முளை சூழ் தசை இல்லை. விதையுறை மெல்லியது.
கரு : நேரானது
முளைவேர் : கீழ்மட்டமானது.
மகரந்தச் சேர்க்கை : வண்டினத்தால், நறுமணம்.
பயன் : தமிழ் மக்களின் அகத்துறை, புறத்துறை ஆகிய வாழ்வியலில் பெரிதும் இயைந்த மலர். நல்ல நறுமணம் உடைமையின், மக்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. இதில் மணமுள்ள எண்ணெய் எடுக்கப்படுகிறது. அதற்கு ‘ஜாஸ்மின் ஆயில்’ என்று பெயர். இதனைப் பலவகையிலும் பயன்படுத்துகின்றனர்.
 

செம்மல்—சாதிமுல்லை
ஜாஸ்மினம் அஃபிசினேல்
(Jasminum officinale,Linn.)

செம்மல் என்னும் மலர் குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே ‘சேடல் செம்மல்’ (குறிஞ். 82) எனக் கூறப்படுகிறது. இதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘செம்மல் - சாதிப்பூ’ என்றார். இது முல்லை இனத்தைச் சார்ந்தது. சாதி முல்லை என்றும், சாதிப்பூ என்றும் உலக வழக்கில் உள்ளது. ஆகவே, செம்மல் என்பது சாதி முல்லை என்று தெளியலாம். சாதி முல்லைக் கொடியை ஆய்ந்து இதன் தாவரப்பெயர் Jasminum officinale, Linn. என்று அறுதியிட்டு, கோவை தாவர ஆய்வியல் மையத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதுவும் முல்லையைப் போல ஏறுகொடியே. எனினும் முல்லைக் கொடியினின்றும் வேறுபட்டது. முல்லையின் இலைகள் தனியிலைகள். செம்மலின் இலைகள் கூட்டிலைகள். மேலும், இது முல்லையைக் காட்டிலும் மிகுதியாகக் கிளைத்துப் படரும் இயல்பிற்று. இதன் மலரும் முல்லை மலரைப் போலவே வெண்ணிறமுடையதாயினும், அரும்புகள் சற்று நீண்டும் மெல்லியனவாகவும் இருக்கும். முல்லையைக் காட்டிலும் மிக்க மணமுள்ளது. எனினும் முல்லைக்கொடி பூப்பது போல அத்துணை மிகுதியான மலர்கள் உண்டாவதில்லை.

செம்மல்-சாதிமுல்லை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச்சிற்றினப்பெயர் : அஃபிசினேல் ( officinale, Linn.)
 

செம்மல்
(Jasminum officinale)

சங்க இலக்கியப் பெயர் : செம்மல்
உலக வழக்குப் பெயர் : சாதி முல்லை, சாதிப்பூ
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின்
தாவர இயல்பு : பல்லாண்டு வளரும் புதர்க் கொடி
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 20 முதல் 40 அடி நீளம் வரை நன்கு கிளைத்துப் படரும் ஏறுகொடி
வேர்த் தொகுதி : ஆணிவேரும் பக்க வேர்களும்
தண்டுத் தொகுதி : மெல்லிய கம்பி போன்றது. வன்தண்டு அமைப்புடைமையின் வலிமையானது
கிளைத்தல் : இலைக்கோணத்தில் உள்ள குருத்து கிளைக்கொடியாக வளரும்.
இலை : கூட்டிலைகள்: எதிரடுக்கில் 5-7 சிற்றிலைகள், இறகு வடிவில் உள்ளன.
சிற்றிலை அடியில் உள்ளவை : நீளம் 10-12 மி. மீட்டர். அகலம் 6-8 மி. மீட்டர்.
இலை நுனியில் உள்ள சிற்றிலை : நீளம் 20-25 மி. மீட்டர் அகலம் 10-12 மி. மீட்டர் வடிவம் நீள் முட்டை
மஞ்சரி : நுனிக்கிளைகளில் உள்ள இலைக் கோணத்தில் பூவடிச் செதிலின், கோணத்தில் தனி மலர் செதில் இலை போன்றது. பூவடிச் செதில் முட்டை வடிவானது. 5-8 மி.மீ. நீளமானது.
மலர் : வெண்மையானது. நறுமணமுள்ளது 5 மடல்கள்.
புல்லி வட்டம் : பசுமையானது. 5 புல்லிகள் அடியில் இணைந்து குழல் வடிவாகவும், 8-10 மி. மீட்டர் நீளமாகவும் இருக்கும். நுனியில் 5 பிரிந்த இழை போன்ற புல்லிகள் 5-9 மி.மீட்டர் நீளமானவை.
அல்லி வட்டம் : வெண்மையான 5 இதழ்கள் அடியில் குழல் வடிவாக இணைந்து 20-25 மி.மீ
நீளமாகவும், நுனியில் மடல் விரிந்து 10–12 இதழ்கள். அடியும், நுனியும், குறுகி, நடுவில் அகன்று மிக மெல்லியதாக இருக்கும்.
மகரந்த வட்டம் : மகரந்தத் தாள்கள் 2 அல்லிக் குழலுள் அடங்கி இருக்கும். அல்லி ஒட்டியவை. ஒவ்வொன்றிலும் இரு மகரந்தப் பைகள்.
சூலக வட்டம் : சூற்பை 2 அறைகளையுடையது. ஒவ்வொன்றிலும் 2 சூல்கள் தலை கீழானவை. சூல்தண்டு குட்டையானது. சூல்முடி இரு பிரிவுள்ளது. சூலிலை நீள்வட்டமானது.
காய்/கனி : இதன் பேரினத்தின் சதைக்கனி அருகி உண்டாகும் என்பர். ஆனால், இதில் கனி காணப்படவில்லை.
விதை : சூலிலை ஒவ்வொன்றிலும் ஒன்று. தட்டையானது. விதையுறை மெல்லியது. வித்திலை குவிந்தது. முளை சூழ்தசை இல்லை.
கரு : நேரானது.
முளை வேர் : கீழ் மட்டமானது.
மகரந்தச் சேர்க்கை : வண்டினத்தால்.
பயன் : இதன் மலர் நறுமணம் மிக்கதாகலின், கண்ணி, மாலையாகத் தொடுத்துச் சூடிக் கொள்வர். விழாக்களில் அலங்காரப் பொருளாகப் பயன்படும். மலர்களில் இருந்து ‘ஜாஸ்மின் ஆயில்’ எனப்படும் நறுமண எண்ணெய் எடுக்கப்பட்டுப் பலவாறாகப் பயன்படுத்தப்படுகிறது. மலருக்காக இக்கொடி, பெரும் அளவில் மலர்த் தோட்டங்களில் பயிரிடப் படுவதோடு, வீட்டுத் தோட்டங்களிலும், திருக்கோயில் மலர் வனங்களிலும் வளர்க்கப்படுகிறது.
 

தளவம்-செம்முல்லை
ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)

குறிஞ்சிப் பாட்டில் காணப்படும் ‘தளவம்’ என்பதற்குச் ‘செம்முல்லை’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர் மேலும் அவர் இதனை முல்லை விசேடம் என்று கூறி, இது முல்லை வகையினதென்னும் தாவரவியலுண்மையையும் புலப்படுத்தியுள்ளார். இதற்குத் தாவரவியலில் ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் என்று பெயர். தொல்காப்பியத்தில் இது ‘தளா’ என்று குறிப்பிடப்படுகிறது. இது பல்லாண்டுகள் வாழும் புதர்க் கொடியாகும்.

மேலும், கபிலர் கூறும் ‘பித்திகம்’ என்பதற்குப் ‘பிச்சிப்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். ஆதலின், தளவம் என்பதும் பித்திகம் என்பதும் ஒன்றுதானா அல்லது வேறு பட்டவையா? என்பது பற்றிய இதன் விரிவைப் ‘பித்திகம்’ என்ற தலைப்பில் காணலாம்.

சங்க இலக்கியப் பெயர் : தளவம்
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர்கள் : தளா, தளவு, பித்திகம்
உலக வழக்குப் பெயர் : பிச்சிப்பூ
தாவரக் குடும்பம் : ஓலியேசி
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)

தளவம்-செம்முல்லை இலக்கியம்

‘தாழை தளவம் முட்டாள் தாமரை’ என வரும் குறிஞ்சிப் பாட்டில் (குறிஞ். 80) உள்ள தளவம் என்பதற்கு நச்சினார்க்

 

தளவம்
(Jasminum grandiflorum)

கினியர், ‘செம்முல்லை’ என்று உரை கூறியுள்ளார். அவரே, பொருநராற்றுப் படையில் வரும் (199) ‘அவிழ் தளவின்’ என்றவிடத்து, தளவு என்பது முல்லை விசேடம் என்பராயினர். தளவ மலரைப் பிச்சிப்பூ என்று வழங்குவர் உலகியலார்.

மேலும், குறிஞ்சிப்பாட்டில், ‘வஞ்சி பித்திகம் சிந்து வாரம்’ (குறிஞ். 89) என்று குறிப்பிடப்படும் ‘பித்திகம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பிச்சிப்பூ’ என்று உரை கண்டுள்ளார்.

“அவிழ் தளவின் அகன் தோன்றி
 நகு முல்லை உகு தேறுவீ”
-பொருந.199-200

என முடத்தாமக்கண்ணியாரும்,

“தளவின் பைங்கொடி தழீஇப் பையென
 நிலவின் அன்ன நேர்அரும்பு பேணி
 கார் நயந்து எய்தும் முல்லை”
-ஐங். 454

எனப் பேயனாரும், தளவத்தையும், முல்லையையும் வேறுபடுத்தி உரைக்குமாப் போலக் கபிலரும் இவற்றைத் தனித் தனியாகப் பாடுவர். ஆதலின், தளவம் வேறு, முல்லை வேறு என்பதும், தளவம் முல்லையின் விசேடமாகச் செம்முல்லை எனப்படும் என்பதும் அறிதல் கூடும். தளவ மலரின் அகவிதழ்கள் அடிப்புறம் சிவந்து இருப்பதாலும், இதன் கொடியும், அரும்பும், மலரும், மணமும் முல்லையை ஒத்திருப்பதாலும் இது செம்முல்லை எனப்பட்டது போலும்.

‘தளவின் பசிய கொடியைத் தழுவி முல்லை படரும்’ (ஐங். 454) எனவும், ‘தவழ் கொடித் தளவம்’ (கலி. 102 : 2) எனவும் கூறுபவாதலின், தளவம் ஒரு படர் கொடி என்பதும் பெற்றோம்.

இக்கொடி புதர்களின் மேலேறிப் படரும் என்று பலருங் கூறுவர்.

“புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை”
-அகநா. 23:3
“புதல் தளவின் பூச்சூடி”ーபுறநா. 395 : 5

“புதல்இவர் தளவம் பூங்கொடி அவிழ”-நற். 242 : 2

“. . . . . . . . புதல் மிசைப்
 பூ அமல் தளவமொடு”
-குறுந் 382 : 2-3

மேலும் ‘தளவ மலர் ததைந்தது ஓர் கானற் சிற்றாற்றயல்’-கலி. 108 : 27 என்றமையின், தளவம் முல்லை நிலத்தைச் சார்ந்தது என்பதும்,

“பூஅமல் தளவமொடு தேங்கமழ்பு கஞல
 வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று”

-குறுந் 382:3-4
“பிடவம் மலர, தளவம் நனைய
 கார்கவின் கொண்ட கானம் காணின்”
-ஐங். 499 : 1-2

என்றமையால், தளவம் கார்காலத்தில் பூக்கும் என்பதும், இதன் கொடியில் மலர்கள் நிரம்ப உண்டாகும் என்பதும், தளவ மலர் இனிய நறுமணம் உள்ளது என்பதும் அறியக் கூடும்.

தளவின் செம்முனையானது சிரல் பறவையின் வாயைப் போலச் சிவப்பாக இருக்குமென்றும், இம்முகை வண்டவிழ்ப்ப மலரும் என்றும் பேயனார் கூறுவர்.

“பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை
 ஆடுசிறை வண்டவிழ்ப்ப
 பாடுசான்ற காண்கம் வாணுதலே”
-ஐங்: 447 : 2-4

ஆகவே தளவம் என்பது செம்முல்லை என்ற கூற்று ஒக்கும்.

முல்லை முகையைப் போன்று தளவத்தின் முகை அத்துணை எளிதில் விரிவதில்லை. இதன் அரும்பு போதாகிப் பிணி அவிழ்வதைக் கண்டு புலவர்கள் அங்ஙனமே கூறுவர்.

“புதல்மிசைத் தளவின் . . . . .
 ஒருங்கு பிணி அவிழ”
-அகநா. 23 : 3-4

“தளவுப் பிணி அவிழ்ந்த”-அகநா. 64 : 4

“போதவிழ் தளவமொடு”-ஐங். 412 : 2

“தளவம் பூங்கொடி அவிழ”-நற். 242 : 2

“அவிழ் தளவின் அகன் தோன்றி”-பொருந. 199

தளவ மலர்க்கொடி திருக்கடவூர் சிவன் கோயிலில் தலவிருட்சமாக வளர்க்கப்படுகிறது. இதனைப் பிச்சிப்பூங்கொடி என்று கூறுவர். இச்கொடி ஆண்டு முழுவதும் தவறாது மலர் தருகிறது என்பர்.

ஆசிரியர் தொல்காப்பியர், ‘யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்’ -தொல். எழுத்து. (280 : 7 : 27) என்று இதனைத் ‘தளா’ என்று குறிப்பிடுகின்றார். தளவம் பிடவத்துடன் இணைத்துப் பேசப்படுகின்றது.

இந்நாளில் பிச்சிப் பூங்கொடி என வழங்கும் இத்தளவத்தில் இரு வகை உண்டு. ஒரு வகையில் செம்முல்லை மலர்கள் உண்டாகின்றன. மற்றொரு வகைக் கொடியில் வெண்ணிற மலர்கள் உண்டாகின்றன. ஏனைய இயல்புகள் எல்லாம் இரு வகைக் கொடிகளிலும் ஒரே மாதிரியானவை. இவற்றுள் முன்னையது தளவம் போலும், பின்னையது பித்திகம் போலும் எனக் கொள்ளுதல் கூடும். இதன் விரிவைப் ‘பித்திகம்’ என்ற தலைப்பிலும் கூறுதும்.

தளவம்—செம்முல்லை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Оleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : கிராண்டிஃபுளோரம் (grandiflorum)
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)
தாவர இயல்பு : பல்லாண்டு வாழும் புதர்க் கொடி
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 30 முதல் 50 மீட்டர் நீளம் ஏறிப் படர்ந்து வளரும் படர் கொடி.
கிளைத்தல் : இலைக் கோணத்தின் குருத்து, கிளைத்து நீண்டு வளரும்.
வேர்த் தொகுதி : வலிய ஆணி வேர், பக்க வேர்களும் உள.
தண்டுத் தொகுதி : மெல்லிய கம்பி போன்றது. வன் தண்டின் அமைப்புடையது.
அடித்தண்டு பருமன். 3-4 செ.மீ. கிளைகள் பருமன். 2-5 மி. மீ.
இலை : கூட்டிலை; எதிரடுக்கில் 5-7 சிற்றிலைகள் சிறகு அமைப்பு.
சிற்றிலை : 3-4 இணைகள்
அடியில் : 10-12 மி. மீ. 6-9 மி. மீ.
நுனிச் சிற்றிலை : 20-25 மி. மீ. 10-12 மி. மீ.
மஞ்சரி : கிளை நுனியிலும், இலைக்கோணத்திலும் நுனி வளராப் பூந்துணர் மும்முறை கிளைத்தது. ‘காரிம் போஸ் பானிக்கில்’ பூவடிச் செதில் முட்டை வடிவானது.
மலர் : 4-5 அடுக்கமுள்ள ஒழுங்கான மலர். அரும்பு மெல்லிய, நீளமான, இளஞ்சிவப்பு நிறமானது.
புல்லி வட்டம் : 4-5 நீளமானவை, மெல்லியவை, பசிய நிறம்.
அல்லி வட்டம் : 4-5 இதழ்கள் அடிப்புறம் இளஞ்சிவப்பு நிறமானவை, அடியில் இணைந்து குழல் வடிவாகவும் மேலே விரிந்தும் இருக்கும். அகவிதழ்கள் வெண்மை நிறமாகவும் இருக்கும்.
மகரந்த வட்டம் : 2 மகரந்தத் தாள்கள். அல்லிக் குழலுள் அடங்கியும், அல்லி ஒட்டியும் இருக்கும். ஒவ்வொன்றிலும் 2 தலைகீழ் சூல்கள்.
சூல் தண்டு : குட்டையானது. சூல்முடி இரு பிளவுடையது. சூலிலை நீள் வட்டமானது.
காய் கனி : காணவில்லை.
மகரந்தச் சேர்க்கை : வண்டினத்தால்.
பயன் : நறுமணம் மிக்குள்ளது. கண்ணியாகத் தொடுத்து அணியப்படும். ஜாஸ்மின் எண்ணெய் எடுக்கப்படுகிறது.
வளர்ப்பு : கிளைகளை நட்டு வளர்க்கலாம்.

மேலே கூறியாங்கு, பிச்சிப் பூங்கொடி என வழங்கும் தளவம் அல்லது பித்திகத்தில் செவ்விய அரும்புகளையுடைய கொடியைத் தளவம் என்றும், வெண்மையான அரும்புகளையுடைய கொடியைப் பித்திகம் என்றும் கொள்ளுதல் கூடும். தாவரவியல் இவ்விரு கொடிகளையும் ஒரே சிற்றினமாகவே கருதி, ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் என்று பெயரிடுகின்றது. இவற்றை இதுகாறும், யாரும் வேறுபடுத்தி ஆய்வு செய்யவில்லை என்று தெரிகிறது.

இதனுடைய குரோமோசோம் எண்ணிக்கை 2n = 26 என்று பவ்டன் (1940 a), கிருஷ்ணசாமி இராமன் (1948 а), டட்டா. எம் (1960) என்போர் கணக்கிட்டனர். மேலும்,

முல்லைக்கு 2n = 26 எனவும்,

செம்மலுக்கு 2n = 26 எனவும்,

கொகுடிக்கு 2n = 26, 39 எனவும்,

மல்லிகைக்கு 2n = 26, 39 எனவும்,

அதிரலுக்கு 2n = 26 எனவும்

பல்வேறு அறிஞர்கள் ஆய்ந்து கண்டுள்ளனர்.

 

பித்திகம்
ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)

இதனைப் பித்திகம், பிச்சிப்பூ எனவும் வழங்குவர். இதன் அரும்பு சிவந்த புறத்தை உடையதென்றும், பசிய காலை உடையதென்றும் புலவர்கள் கூறுவர். இது முல்லையினத்தைச் சேர்ந்தது. இதற்குச் ‘செம்முல்லை’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். இம்மலர் மிகுந்த மணமுடையது. இந்நாளில் இதனைப் பிச்சிப்பூ என்று கூறுவர்.

சங்க இலக்கியப் பெயர் : பித்திகம், தளவம்
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)
உலக வழக்குப் பெயர் : பிச்சிப்பூ, பிச்சி

பித்திகம் இலக்கியம்

குறிஞ்சிப் பாட்டில் தலைவன் பித்திகத்து (பிச்சியினுடைய) அழகிய இதழ்களை உடைய பூவைத் தொடுத்த அழகினை உடைய தொடையாகிய ஒரு வடத்தைச் சுற்றிக் கொண்டு வருகிறான் என்பர் கபிலர்.

“பைங்காற் பித்திகத்து ஆயிதழ் அலரி
 அந்தொடை ஒருகாழ் வளைஇ
-குறிஞ். 117-118

“வஞ்சி பித்திகம் சிந்து வாரம்-குறிஞ். 89

‘பித்திகத்து’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பிச்சியினது’ என்றும் ‘பித்திகம்’ என்பதற்குப் ‘பிச்சிப்பூ’ என்றும் உரை கூறினார். சங்கப் பாடல்களில் பித்திகம் என்ற சொல்லே பெரிதும் பயிலப்படுகின்றதாயினும், பித்திகை என்றும் குறிப்பிடப்படுகின்றது. ‘பித்திகம்’, முல்லை இனத்தைச் சார்ந்தது: செவ்விய அரும்புகளை உடையது. ‘தளவம்’ (குறிஞ். 80) என்பதற்குச் ‘செம்முல்லை’ என்று உரை கூறுவர். பித்திகமும், தளவமும் ஏறத்தாழ ஒன்றேயாகும். இரண்டும் படர் கொடிகள். தளவத்தைச் செம்முல்லை என்றழைப்பதோடு, பிச்சிப்பூ எனவும் வழங்குவர். தாவர இயலில் இவை இரண்டும் சிறிது வேறுபாடு உடையனவாயினும், ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் என்றே கூறப்படுகின்றன. பித்திக அரும்பின் கால்கள் பசிய நிறமானவை. தளவத்தின் அரும்புகள் முழுவதும் இளஞ்சிவப்பு நிறமானவை. திருக்கடையூர் சிவன் கோயிலின் தல விருட்சம் பிச்சி எனப்படுகின்றது. ஆனால், இது தளவமேயாகும். இதன் அரும்பு செவ்வியதாதலின், சங்க இலக்கியம் இதனைத் தனியாகக் குறிப்பிடுகின்றது.

பித்திகம் பசிய காலை உடையதென்பர் புலவர் பெருமக்கள்.

“பைங்காற் பித்திகத்து ஆயிதழ் அலரி”-குறிஞ். 117
“செவ்வி அரும்பின் பைங்காற் பித்திகத்து”
-நெடுநல். 39


பித்திகத்தின் முகை சிவந்த புறத்தை உடையதென்றும், மாரிக் காலத்தில் மலிந்து பொழிந்த மழை கண்டு பூக்குமென்றும், இயல்பாகவே சிவந்த கண்கள், தலைவி நீராடியதால் மேலும் சிவந்து மாரிப் பித்திக முகைக்கு ஒப்பாயிற்று என்றும் கூறுவார். இவ்வுண்மை, தாவரவியலுக்கும் ஒத்துள்ளது. இதனைப் பின்வரும் அடிகளிற் காணலாம்.

“மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
 கொயல் அருநிலைஇய பெயல் ஏர்மணமுகைச்
 செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்”

(வெரிந்-புறத்தை) -அகநா. 42 : 1-3

“மாரிப்பித் திகத்து நீர்வார் கொழுமுகை”
-குறுந் .168 : 1
“பெருங்தண் மாரிப்பேதைப் பித்திகத்து
 அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே”
-குறு. 94 : 1-2

“மாரிப்பித் திகத்து ஈர்இதழ் புரையும்
 அம்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்”

-அகநா. 295 : 19-20


பித்திகம், கொடியில் மலர்ந்தாலும், அரும்பாகக் கொய்து வைக்கப்பட்டு மலர்ந்தாலும், அந்திப் பொழுதிலேயே மலரும் இயல்புடையது. இவ்வியல்பினை உணர்ந்திருந்தனர் தமிழ்க்குடி மக்கள். இதனை விளக்குமாறு போல, நெடுநல் வாடையில் அந்தி மாலைச் சிறப்புச் செய்தியொன்று காணப்படுகின்றது.

பொழுது சாய்கிறது; கார் காலமாதலின், கதிரொளியில்லை. அந்திப் பொழுது வந்தவாறும் அறிதற்கில்லை. பசுங்காற் பித்திக அரும்புகளைப் பூந்தட்டிலே இட்டு வைத்திருந்தனர். அந்திப் போது இதுவென்றறிவிக்குமாறு போல, பித்திகப் போதெல்லாம் மலர்கின்றன. அவை விரிந்து, அலரும் செவ்வி மணக்கின்றது. மகளிர் அந்திக் காலம் வந்தது என்றறிந்தனர். இரும்புத் தகளியில் நெய் தோய்ந்த திரியைக் கொளுத்துகின்றனர். நெல்லையும், மலரையும் சிதறி, இல்லுறை தெய்வத்தை வணங்கினர். இவ்வளப்பத்தை மாலைக் காலத்தே அங்காடித் தெருவெல்லாம் கொண்டாடிற்று.

“மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
 செவ்வி அரும்பின் பைங்காற் பித்திகத்து
 அவ்விதழ் அவிழ்பதம் கமழ்பொழுது அறிந்து
 இரும்பு செய்விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
 நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
 மல்லல் ஆவணம் மாலை அயர”
-நெடுநல். 39-44
(பிடகை-பூந்தட்டு)

‘பித்திகை மலர்களைக் குருக்கத்தி மலர்களுடன் விரவி, உழவர் தனி மகள் மலர் விற்பள்’ என நற்றிணை கூறும்.

“துய்த்தலை இதழ் பைங்குருக் கத்தியொடு
 பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோஎன
 வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
 தண்டலை உழவர் தனிமட மகளே”
-நற். 97 : 6-9

இனி, தளவ மலரைச் செம்முல்லை என்று புலவர்கள் கூறுவராயினும், உலக வழக்கில் தளவத்தைப் பிச்சிப்பூ என்று கூறலால், தளவம் பற்றிய சில குறிப்புகளையும் இத்தாவரத்துடன் நோக்குவது ஒக்கும்.

 

கொகுடி–(கொகுட்டம்)–கொடிமுல்லை
ஜாஸ்மினம் சாம்பக் வகை ஹேனியானம்
(Jasminum sambac,Var. heyneanum C. B. Clarke)

குறிஞ்சிக் கபிலர் தமது குறிஞ்சிப் பாட்டினுள் அதிரல், குளவி முல்லை, தளவம், மௌவல், கொகுடி, செம்மல் ஆகிய ஏழு மலர்களையும் தனித்தனியாகவே கூறுகின்றார். இவை அனைத்தும் முல்லைக் குடும்பத்தைச் சார்ந்தவை. தாவரவியலில் இவையனைத்தும் ஜாஸ்மினம் என்னும் பேரினத்தில் அடங்கும். இச்சொற்களுக்குப் பொருள் கூறிய உரை ஆசிரியர்கள், இவற்றை உலக வழக்கில் உள்ளவாறு முல்லை விசேடம் எனவும், காட்டு முல்லை எனவும், மல்லிகை விசேடம், காட்டு மல்லிகை எனவும் உரை கூறினார். இவருள் நச்சினார்க்கினியர் சேடல் என்பது பவழக்கால் மல்லிகை என்றாராயினும் இம்மலர் முல்லையினத்தைச் சார்ந்ததன்று. மல்லிகை மலர் சங்கவிலக்கியங்களுள் பாரிபாடலில் மட்டுமே பயிலப்படுகின்றது. அங்ங்னமே கொகுடி என்பது ‘நறுந்தண் கொகுடி’ எனக் குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே (குறிஞ். 81) கூறப்பட்டுள்ளது. கொகுடி என்பதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ‘கொகுடிப்பூ’ என்றே கூறியுள்ளார். பிற்காலத்தில் இதனைக் கொகுட்டம் என்னும் ஒருவகை முல்லை என்றும் கூறுவர்.

மற்றும் கொடி முல்லை என்பதோர் மலர் உலக வழக்கில் உள்ளது. கொகுடி முல்லை[135]என்பது கொடி முல்லை என மருவி
 

கொகுடி
(Jasminum sambac Var. heyneanum)

இருக்குமோ என்பது சிந்தனைக்குரியது. முல்லையினத்தில் பெரிதும் ஏறுகொடிகளே உள்ளன. ஆதலின், கொடிமுல்லை என்பது மட்டும் கொண்டு, இதனுடைய தாவரவியல் பெயரைக் கண்டு கொள்ள இயலவில்லை. எனினும், தஞ்சாவூர்ப் புறநகரிலும், மன்னார்குடியிலும், குடந்தைக்கருகில் உள்ள முல்லை வனத்திலும் வழக்கில் உள்ள கொடி முல்லைக் கொடியைக் கொண்டு வந்து, ஆய்வு செய்து, இதன் தாவரப் பெயர் அறுதியிடப்பட்டது.

கொகுடி (கொகுட்டம்) கொடிமுல்லை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : சாம்பக் வகை ஹேனியானம் (sarnbac Ait. var. heyneanum C. B. Clarke)
சங்க இலக்கியப் பெயர் : கொகுடி
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர் : முல்லை
பிற்கால இலக்கியப் பெயர் : கொகுடி, முல்லை
உலக வழக்குப் பெயர் : கொடி முல்லை, முல்லைக் கொடி, நித்திய கல்யாணி.
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின்
இயல்பு : பல்லாண்டு வளரும் புதர்க் கொடி, ஏறுகொடி.
வளரியல்பு : மீசோபைட்
உயரம் : 20 முதல் 50 மீட்டர் நீளம். படர்ந்து வளரும் ஏறுகொடி.
வேர்த் தொகுதி : ஆணி வேர், பக்க வேர்கள்
தண்டுத் தொகுதி : 2-3.5 மி. மீ. பருமன்.
கிளைத்தல் : இலைக்கோணத்தில் உள்ள குருத்து நீண்டு, கிளைத்து வளரும். நுனியில் பூங்கொத்தாகி விடும்.
இலை : கூட்டிலை எதிரடுக்கில் 18 முதல் 20 செ.மீ நீளம், அடியில் 2, நுனியில் 1 சிற்றிலை. இலைக் காம்பு 12-15 செ.மீ. நீளமானது.
சிற்றிலை : அடியில் உள்ள இரண்டும் 5-6.5 செ.மீ.நீளம், 2.5-3 செ.மீ. அகலம். நீள் முட்டை வடிவம். நுனியில் உள்ள சிற்றிலை காம்புடன் 7-8.5 செ.மீ. நீளம், சிற்றிலைக் காம்பு 12-15 மி.மீ. நீளம்.
நீள, அகலம்
: 5.5-7 X 3-3.5 செ. மீ.
விளிம்பு
: பளபளப்பானது. நேர் விளிம்பு.
நுனி
: நேர் கோணமானது.
மஞ்சரி : மஞ்சரிக் காம்பு 6-8 செ.மீ. நீளம். இலைக் கோணத்திலும், கிளை நுனியிலும், நுனி வளராப் பூந்துணர் அடியில் துணர்ச் செதில் சிற்றிலை போன்றது; சிறியது; மெல்லியது. 3-4 X 1-1.5 மி.மீ.
அரும்பும் போது : 10-15 மலர்கள் உண்டாகும். 3-3.5 செ.மீ. நீளம்.
மலர்க் காம்பு : 2 மி.மீ. குட்டையானது.
புல்லி வட்டம் : 5 பச்சை நிறமுள்ள புறவிதழ்கள் இணைந்து, குழல் வடிவானது. 3-5 மி.மீ. நீளம். மேலே 5 விளிம்புகள் காணப்படும்.
அல்லி வட்டம் : 5 வெண்மையான இதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவானது. மேலே விரிந்து, இதழ் வடிவானது. 10-13 X 3-3.5 மி. மீ.
மகரந்த வட்டம் : 2 மகரந்தத் தாள்கள். அல்லிக் குழலுள் அடங்கியிருக்கும். இதழ் ஒட்டியவை.
மகரந்தத் தாள்கள் : 5 மி.மீ. நீளம்.
மகரந்தப் பை : 3-4 மி.மீ. நீளம்.
சூலக வட்டம் : சூற்பை 2 அறை. 2 தலைகீழ் சூல்.
ஏனைய இயல்புகள் : முல்லையைப் போன்றவை என்பர்.
 

ஊசி முல்லை
ஜாஸ்மினம் கஸ்பிடேட்டம்
(Jasminum cuspidatum,Rottl.)

ஊசிமுல்லைப் பூ என்பது முல்லைப் பூவைப் போன்றதாயினும் இதன் அரும்பு மெல்லியதாகவும் நீண்டும் இருக்கும். ஏனைய இயல்புகள் எல்லாம் முல்லைக் கொடியைப் பெரிதும் ஒத்தவை. சங்க இலக்கியத்தில் ஊசி முல்லை என்ற பெயர் இல்லையாயினும் உலக வழக்கில் ‘ஊசி முல்லைப்பூ’ உள்ளது.

உலக வழக்குப் பெயர் : ஊசி முல்லை
தாவரக் குடும்பம் : ஒலியேசி
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம்
தாவரச்சிற்றினப்பெயர் : கஸ்பிடேட்டம்
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் கஸ்பிடேட்டம்
(Jasminum cuspidatum,Rottl.)

ஊசி முல்லை தாவர அறிவியல்

இது முல்லையினக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அரும்பைக் கொண்டுதான் இதனை முல்லையினின்றும் வேறு படுத்தி அறியக் கூடும். ஏனைய இயல்புகள் எல்லாம் முல்லையைப் போன்றுள்ளன. ஆகவே, இது முல்லையின் வகை எனப்படும்.

இயல்பு : ஏறு கொடி, மெல்லிய கம்பி போன்ற தண்டினை உடையது.
இலை : கூட்டிலை, எதிரடுக்கில் சிற்றிலைகள் நீள முடடை வடிவானவை.
 

ஊசி முல்லை
(Jasminum cuspidatum)

சிற்றிலை : அடியில் உள்ள இரண்டும் நீள அகலம் 20 X 10 மி. மீ. நுனியில் உள்ள சிற்றிலை, 55-60 X 28-30 மி. மீ.
வடிவம் : நடுவில் முட்டை வடிவம். அடியும், நுனியும் வர, வரக் குறுகியிருக்கும்.
அரும்பு : :3-4 செ. மீ. நீளம். 1-2.5 மி. மீ. பருமன; மெல்லியது; நீண்டது.
மலர் : முல்லை போன்று அடியில் குழல் வடிவாயும், மேலே 4-5 இதழ்கள் விரிந்தும் இருக்கும்.

ஏனைய இயல்புகள் முல்லையைப் போன்றவை.

 

ஊசி முல்லை
(Jasminum cuspidatum)

 

நள்ளிருள் நாறி–மயிலை–இருவாட்சி
(Jasminum Sambac florae-manoraepleno)

குறிஞ்சிப் பாட்டில் கூறப்படும் ‘நள்ளிருள்நாறி’ (குறிஞ். 94) என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘இருவாட்சிப்பூ’ என்று உரை கூறினார். ‘இருவாட்சி’க்கு மயிலை என்று பெயர்[136]. இதனைக் கொண்டு இருவாட்சியாகிய மயிலைக்குத் தாவரப் பெயரைக் காண முடிந்தது[137].

சங்க இலக்கியப் பெயர் : நள்ளிருள் நாறி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : மயிலை
பிற்கால இலக்கியப் பெயர் : இருவாட்சி, இருள்வாசி
உலக வழக்குப் பெயர் : இருவாட்சி
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் சம்பக்
(புளோரே-மானோரேபிளினோ)
(florae-manoraepleno)

நள்ளிருள் நாறி–மயிலை–இருவாட்சி இலக்கியம்

“நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி-குறிஞ். 94

என்றார் கபிலர். நள்ளிருள் நாறி என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘இருவாட்சிப்பூ’ என்று உரை கூறினார். ‘இருள்வாசி’ என்பது ‘இருவாட்சி’ என வழங்குகிறது என்பர் பத்துப் பாட்டுப் பதிப்பாசிரியர்.

 

மயிலை
(Jasminum sambac var florae manorae)

இருவாட்சிக்கு மயிலையும் பேராகும் என்று கூறும் சூடாமணி நிகண்டு (8). ஆகவே, இருவாட்சியும் மயிலையும் ஒன்றென அறியலாம்.

மயிலையைப் பற்றிய செய்தி புறநானூற்றில் (342) காணப்படுகின்றது. ஒரு குறுமகள் தன் கூந்தலின் இருமருங்கும் இப்பூவாலாகிய கோதையைச் சூட்டிக் கொண்டுள்ளாள். இக்காட்சிக்குக் காட்டுக் காக்கையின் தழைத்த சிறகு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. கானக் காக்கையின் சிறகின் விளிம்புகள் வெண்மையான இறகுகளைக் கொண்டவை. அதன் வெண்மையையும் ஒழுங்கையும் கொண்டு, மயிலைப் பூங்கோதைக்கு கானக் காக்கை உவமையாயிற்று இக்குறுமகளின் நலங்கண்டான் ஒரு தலைமகன். அவளை மணந்து கொள்ள விரும்பிச் சான்றோராகிய அரிசில் கிழாரைக் கண்டு உசாவினான். அவர், அவனது பெருவிருப்புணர்ந்து ‘நெடுந்தகாய்’ இவள் திருநயத்தக்க செவ்வியும், பண்பும் உடையவளே. ஆனால், இவளுடைய தந்தை ஒரு தண்பணைக் கிழவன். இவளை மணத்தல் வேண்டி, வேந்தர் பலர் முயன்று, இவளைப் பெறாராய்ப் பொருது தோற்றோடினர். போரில் பலரைக் கொன்று குவித்த பெருமாட்சி உடையவர் இவள் உடன் பிறந்தார். நீ இதனை அறிந்து, செய்வன தேர்ந்து செய்வாயாக, எனக் கீழ் வரும் பாடலால் அவனைத் தெருட்டுகின்றார்.

“கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும்
 மயிலைக் கண்ணி பெருந்தோட் குறுமகள்
 ஏனோர் மகள்கொல் இவளென விதுப்புற்று
 என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை
 திருநயத்தக்க பண்பின் இவள் நலனே
. . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . .
 மாட்சியவர் இவள் தன்னை மாரே
புறநா. 342

பிற்கால இலக்கியங்களைக் கொண்டு ‘மயிலை’ ஒரு கொடி என்றும், இதன் மலர் வெண்ணிறமானது என்றும் அறிய முடிகிறது ([138] [139] [140]).

 

மயிலை-நள்ளிருள் நாறி
(Jasminum sambac var floraemanorae)

நள்ளிருள் நாறி—மயிலை—இருவாட்சி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
ஜென்ஷனேலிஸ்
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : சாம்பக் புளோரே-மானோரேபிளினோ
(sambac florae manoraepleno)
ஆங்கிலப் பெயர் : டஸ்கான் ஜாஸ்மின்
தாவர இயல்பு : படர் கொடி

இதனுடைய பிற தாவரச் சிறப்பியல்புகள் எல்லாம் முல்லைக் கொடியைப் போன்றவை. ஆதலின் அவற்றை ஆண்டுக் காண்க.

 

மல்லிகை
ஜாஸ்மினம் புயூபெசன்ஸ் (Jasminum pubescens,willd.)

மல்லிகை, புதர்ச் செடியாகவும் புதர்க் கொடியாகவும் வளரும் இயல்பிற்று. இது பல்லாண்டு வாழும்; முல்லையின் குடும்பத்தைச் சார்ந்தது. ஆயினும், முல்லையினின்றும் வேறுபட்ட இனம் என்று கூறலாம். மல்லிகையின் இலை, தனியிலை ஆகும். முல்லையின் இலை கூட்டு இலை ஆகும். முல்லையின் மலரைக் காட்டிலும் மல்லிகையின் மலர் சற்றுப் பருத்தது.

சங்க இலக்கியப் பெயர் : மல்லிகை, மல்லிகா
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : அதிரல், குளவி, மௌவல்
பிற்கால இலக்கியப் பெயர் : மல்லிகை
உலக வழக்குப் பெயர் : மல்லிகை
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் புயூபெசன்ஸ்
(Jasminum pubescens,willd)
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)

மல்லிகை இலக்கியம்

சங்க இலக்கியங்களில் பரிபாடலில் மட்டுமே மல்லிகை மலர் குறிப்பிடப்படுகிறது.

“கில்லிகா என்பாள்போல் நெய்தல் தொடுத்தாளே
 மல்லிகா மாலைவளாய்
-பரி. 11:105

 

மல்லிகை
(Jasminum pubescens)

“மல்லிகை மௌவல் மணங்கமழ் சண்பகம்”
-பரி. 12:77


எனினும் மல்லிகையைப் பெரிதும் ஒத்த அதிரல், குளவி, மௌவல் எனப்படும் மலர்கள் சங்க நூல்களில் பயிலப்படுகின்றன. இவை அனைத்தும் முல்லை இனத்தைச் சேர்ந்தவை. இவற்றைக் குறிஞ்சிக் கபிலர்,

“செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்”-குறிஞ். 75
“கரந்தை குளவி கடிகமழ் கலிமா”-குறிஞ். 76
“ஞாழல் மௌவல் நறுந்தண் கொகுடி”-குறிஞ். 81

எனத் தனித் தனியே கூறுகின்றார். ஆதலின், இவை மூன்றும் வெவ்வேறு மலர்கள் என அறிதல் கூடும். எனினும், கபிலர் மல்லிகை மலரைக் குறிப்பிடவில்லை. ஆயினும், மதுரைக் காஞ்சியின் ஈற்றிலுள்ள வெண்பா, மல்லிகை மலரைக் குறிப்பிடுகின்றது.

“சொல்லென்னும் பூம்போது தோற்றி பொருளெனும்
 நல்லிருந் தீந்தாது நாறுதலால்-மல்லிகையின்
 வண்டார் கமழ்தாம மன்றே மலையாத
 தண்டாரான் கூடற் றமிழ்”
-மதுரைக்கா: வெண்பா.

மேற்குறித்த பரிபாடலில் நல்வழுதியார் மல்லிகையையும், மௌவலையும் வேறு பிரித்தே பாடுகின்றார்.

“மாதவி மல்லிகை மௌவல் முல்லை”

என்று சிலப்பதிகாரச் சீரடி[141] செப்புதலின், பிற்காலத்திலும் மல்லிகை மலர், மௌவலினின்றும் வேறானதென்பது புலனாகும். மேலும், பண்டைய உரையாசிரியர்கள் அதிரல், குளவி, மௌவல் என்பனவற்றுக்குக் கூறும் உரைகளில் மல்லிகைப் பெயர் இடம் பெறுகின்றது.

அதிரல் : புனலிப்பூ ..நச்சினார்க்கினியர்
 குறிஞ். 75; முல்லைப். 51
 காட்டுமல்லிகை ..அரும்பத உரையாசிரியர்[142]
 மோசிமல்லிகை ..அடியார்க்கு நல்லார்.
குளவி : காட்டு மல்லிகை ..நச்சினார். குறிஞ். 76 ;
 மல்லிகை விசேடம்[143];
மௌவல் : மல்லிகை விசேடம்[144];
 மௌவற் பூ ..குறிஞ். 81
தாவரவியலில் இவையனைத்தும் ஜாஸ்மினம் என்ற முல்லை இனத்தைச் சார்ந்தவையாகும். நிகண்டுகளில் பிங்கலமும், சூடாமணியும், மல்லிகையை, முல்லையினின்றும் வேறு பிரித்துக் கூறுகின்றன.

மல்லிகை மலர் சிறந்த மணம் தருவது. முல்லைப் பூவைக் காட்டிலும், சற்றுப் பருத்தது. தூய வெண்மையானது. மிக மென்மையானது.

மல்லிகை சிறு புதராக வளரும். நீண்ட கொடியாக வளரும் மல்லிகையும் உண்டு. மனைத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதோடு, மலருக்காகப் பெரும் பண்ணைத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலரிலிருந்து விலை உயர்ந்த மல்லிகைத் தைலம் எனப்படும் (Jasmin oil) ஒரு வகை நறுமண எண்ணெய் எடுக்கப்படுகிறது. சிறந்த நறுமணமுள்ள இந்த எண்ணெய் பல்வேறு தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மல்லிகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : புயபெசன்ஸ் (pubescens)
தாவர இயல்பு : பல்லாண்டு வாழும். புதர்க் கொடியாகவும், புதர்ச் செடியாகவும் வளரும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 1-1.5 மீட்டர் உயரமுள்ள அடர்ந்த புதர்.
தண்டு : அடியில் 8-12 மி.மீ. பருத்து, சதைப் பற்று உள்ளதாக இருக்கும். முல்லைக் கொடியின் அடித்தண்டைக் காட்டிலும் பெரியது.
கிளைத்தல் : குற்றுச் செடியில் அடியிலேயே பல கிளைகள் உண்டாகிப் புதர் போன்றிருக்கும்.
இலை : தனி இலை, செதிலற்றது. எதிர் அடுக்கில் கணுவிற்கு இரண்டு இலைகள். இலைக் காம்பு 2-3 மி. மீ. நீளமானது.
வடிவம் : நீள் முட்டை வடிவம், 8-8.5 செ.மீ. X 3-4 செ.மீ. நேர் வடிவம் விளிம்பு கூர் நுனி. சிறகமைப்புள்ள நரம்புகள்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் கிளைத்த நுனி வளராப் பூந்துணர். சைமோஸ்-ஒவ்வொரு சைமிலும் 3 மலர்கள், நடு அரும்பு முதலில் முதிர்ந்து மலரும்.
மலர் : அரும்பு 1.5-2 செ.மீ. நீளமானது. தூய வெள்ளை நிறம்.
புல்லி வட்டம் : 5 அடியில் இணைந்து, குழல் வடிவாகவும், நுனியில் மெல்லிய பசிய கம்பி போன்றும் திருகிக் காணப்படும்.
அல்லி வட்டம் : 5 இதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாகவும், மேலே இதழ் விரிந்தும் மலரும். சிறந்த நறுமணம் உள்ளது.
மகரந்த வட்டம் : 2 மகரந்தத் தாள்கள் அல்லியொட்டியவை. அல்லியில் அடங்கி இருக்கும் ஒவ்வொரு தாளிலும் இரு மகரந்தப் பைகள் உண்டு.
சூலக வட்டம் : 2 சூலறைகள் உள்ள சூற்பை. ஒவ்வொன்றிலும் 2 தலை கீழ்ச் சூல்கள்.
சூல் தண்டு : குட்டையானது. சூல்முடி 2 பிளவானது.
சூலிலை : நீள்வட்டமானது.

ஓலியேசி (Oleaceae) என்னும் இத்தாவரக் குடும்பம், ஓலியாய்டியே (Oleoideae), ஜாஸ்மினாய்டியே (Jasminoideae) என்று சிறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஹட்கின்சன் (Hutchinson-1948) என்பவர் இக்குடும்பத்தை இயல்புக்கு மாறான குவியல் என்று குறிப்பிடுகின்றார். இதில் உள்ள இரண்டு மகரந்தத் தாள்களே இக்குழப்பத்திற்குக் காரணமாக இருக்கலாமெனவும் கூறுகின்றார். செல்லியல் அடிப்படையில் டெய்லர் (Taylor-1945) என்பவர், இக்குடும்பத்தின் பேரினங்களை மாற்றியமைத்துப் பாகுபாடு செய்தார். எனினும், இக்குடும்பத்தைப் பிற குடும்பங்களுடன் தொடர்பு படுத்த முற்படவில்லை.

இக்குடும்பத்தில் உள்ள ஓலியா விதைகளிலிருந்து ஆலிவ் எண்ணெய் எடுப்பதற்கும், பிராக்சினஸ் என்ற மரம் சிறந்த மர வேலைப்பாடுகட்கும் பயன்படுகின்றன. முல்லை, மல்லிகை முதலான நறுமண மலர்களைத் தரும் ஜாஸ்மினம் என்ற பேரினமும், அழகுத் தாவரங்களையுடைய சைரிங்கா, விகுஸ்ட்ராம் ஆகிய பேரினங்களும் இக்குடும்பத்தைச் சேர்ந்தவை.

 

அடுக்கு மல்லிகை
ஜாஸ்மினம் ஆர்போரெசென்ஸ்
(Jasminum arborescens,Roxb.)

இது மல்லிகை இனத்தைச் சார்ந்தது. இதனுடைய மலரைக் கொண்டு இது மல்லிகையினின்று வேறுபட்டதென்று அறியலாம். இது சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. ஆயினும் இது மல்லிகைப் பெயரால் வழங்கப்படுகிறது.

அடுக்கு முல்லை தாவர அறிவியல்

தாவரப் பெயர் : ஜாஸ்மினம் ஆர்போரெசென்ஸ்
(Jasminum arborescens,Roxb.)
பிற்கால இலக்கியப் பெயர் : மல்லிகை
உலக வழக்குப் பெயர் : அடுக்கு மல்லிகை
தாவர இயல்பு : அகன்ற புதர்ச்செடி, 1-1.5 மீட்டர் வரை உயர்ந்து படர்ந்து கிளைத்து வளரும்.
இலை : தனி இலை, அடியில் 2 இலைகள், எதிரடுக்கில் கிளைகளில் 3 இலைகள் வட்ட இலை அடுக்கில் காணப்படும்.
இலைக்காம்பு : சிறியது. 2-3 மி.மீ. நீளம்
வடிவம் : முட்டை வடிவம் 60-65 மி.மீ. நீளமும், 40-45 மி.மீ. அகலமும் உடையது.
இலைப் பரப்பு : பசிய மெல்லிய இலைகள் அடியில் நுண்மயிர் காணப்படும். இளம் இலைகளில் இரு புறத்திலும் நுண்மயிர் உண்டு.
நடுநரம்பு : இலை அடியில் இரு பெரு நரம்புகள் பக்கத்திலும் விளிம்பு வரை நீண்டிருக்கும். நடுநரம்பு இலையடியில் பருத்துத் தோன்றும்.
மஞ்சரி : 3-1 மலர்களை உடைய ‘சைம்’ நுனி வளராப் பூந்துணர். நடு மலர் முதலில் பூக்கும்.
மலர் : பெரியது. அரும்பு 15-25 மி.மீ. நீளமும், 10-15 மி.மீ. பருமனும் உள்ளது; வெண்மையானது.
புல்லி வட்டம் : 4-5 பசிய புறவிதழ்கள் அடியில் இணைந்து, .மேலே விளிம்புகளை உடையது.
அல்லி வட்டம் : 4-5 அகவிதழ்கள். அடியில் இணைந்து, ஒன்றின் மேல் ஒன்றாய் 3-5 அடுக்குகளாக இருக்கும். சிறந்த நறுமணம் உடையது.
ஏனைய இயல்புகள் : காணவில்லை.
 

குளவி-மலைமல்லிகை
ஜாஸ்மினம் கிரிபித்தியை
(Jasminum griffithii,Clarke.)

‘குளவி’ என்னும் புதர்க்கொடி மல்லிகை வகையைச் சார்ந்தது. இதன் இலைகள் அகன்று பெரியனவாக இருக்கும். இதனை மலைமல்லிகை என்று வழங்குவர். இதனுடைய தாவரப் பெயர் ‘ஜாஸ்மினம் கிரிபித்தியை’ என்பதாம். ஜாஸ்மினம் என்ற இத்தாவரப் பேரினத்தில் மிகப் பெரிய தனி இலையை உடைய சிற்றினம் ‘கிரிபித்தியை’ என்ற ஒன்றுதான். இதன் தாவரச் சிற்றினப் பெயரைக் கண்டு கொள்வதற்குத் துணை செய்த பாடல் குறுந்தொகையுள் உள்ளது (100). ‘பரு இலைக் குளவியோடு’ என இப்பாட்டில் கபிலர் கூறிய துணையானே இதன் தாவரச் சிற்றினப் பெயரை அறுதியிட முடிந்தது.

சங்க இலக்கியப் பெயர் : குளவி
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர்கள் : அதிரல், மௌவல்., மல்லிகை
பிற்கால இலக்கியப் பெயர் : மலைமல்லிகை, வன மல்லிகை,

காட்டு மல்விகை

உலக வழக்குப் பெயர் : மலை மல்லிகை. மலைப்பச்சை
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் கிரிபித்தியை
(Jasminum griffithii,Clarke.)

குளவி-மலைமல்லிகை இலக்கியம்

‘கரந்தை குளவி கடிகமழ் கலிமா’ என்ற குறிஞ்சிப்பாட்டு (76) அடியிலும், திருமுருகாற்றுப்படை (191) ‘குளவியொடு’
 

குளவி
(Jasminum griffithii)

என்றவிடத்தும் பயிலப்படும் குளவி என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘காட்டு மல்லிகை’ என்று உரை கூறியுள்ளார். பரிபாடலில் (62) இதற்குத் ‘தாளிப்பூ’ என்று உரை கூறப்பட்டு உள்ளது. குறுந்தொகை (100) உரையில் உ. வே. சா. இதனை ‘மனை மல்லிகை’ என்பர். புறநானூற்று உரைகாரரும் (168) இதற்கு ‘மலை மல்லிகை’ என்று உரை கூறினார். நற்றிணை (346) உரை ஆசிரியர் இதற்கு ‘மலைப்பச்சை’ என்று உரை கண்டார். நற்றிணையுடன், நிகண்டுகளில் திவாகரமும், சூடாமணியும் இதனை ‘மலைப்பச்சை’ என்றே குறித்தன. எனினும், இது மல்லிகை வகையானது. இதன் இலைகள் பெரியனவாக இருக்குமென்பதைப் ‘பரு இலைக் குளவி’ (குறுந். 100) என்றும், இலைகள் அடர்ந்திருக்குமென்பதை ‘அடை மல்கு குளவி’ (புறநா. 90) என்றும் புலவர்கள் கூறுவார்கள். மல்லிகை இனத்தில் 15 செ.மீ. நீளமும் 6 செ. மீ அகலமும் உள்ள மிகப் பெரும் இலைகளை உடைய ஒரு கொடிதான் தாவர இயலில் பேசப்படுகிறது. குளவியின் இவ்வியல்பைக் கொண்டு, இக்கொடியின் தாவர இரட்டைப் பெயரை உறுதி செய்வதற்குக் குறுந்தொகைச் செய்யுள் (100) துணையாக உள்ளது. மேலும் இது ‘பெருந்தண் கொல்லிச் சிறு பசுங்குளவி’ (நற். 346 : 9) எனப்படுதலின், தண்ணிய மலைப் பாங்கில் வளரும் பசிய சிறு கொடி என்பதை அறியக் கூடும். ஆகவே, இதனை மலை மல்லிகை எனக் கூறுதல் பொருந்தும். இதற்குத் தாவரவியலில் ஜாஸ்மினம் கிரிபித்தியை (Jasminum griffithii, Clarke) என்றழைப்பார்.

மேலும் இக்கொடி கயம், நீரோட்டம் முதலியவற்றிற்கருகில் வளருமென்று கூறப்படுகின்றது.

“நீரிழி மருங்கின் ஆரிடத் தமன்ற
 குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி”

-அகநா. 272 : 7-8
“குளவித் தண்கயம் குழையத் தீண்டி”一நற். 232 : 2

‘வேட்டைச் செந்நாய் உண்டு எஞ்சிய பகுதி, சிறுநீர் நிலையில் விழுந்து அழுகிக் கிடக்கிறது. அந்நீர் நிலைக்கு மேலே பூத்த குளவி மலர்கள் அதனை மூடியது போல விழுந்துள்ளன’ என்றார் சிறைக்குடி ஆந்தையார்.

“வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
 குளவி மொய்த்த அழுகற் சின்னீர்”
-குறுந். 56 : 1-2

இக்கொடி மலையில் வளரும் இற்றி மரத்தின் மேல் ஏறிப் படரும் என்று ஐங்குறுநூறு கூறும்.

“கல்இவர் இற்றி புல்லுவன ஏறிக்
 குளவி மேய்ந்த மந்தி துணையொடு
 வரை மிசை உகளும் நாட”
-ஐங். 279 : 1-3

இது புதராக வளரும். அதிலும், இலைகள் அடர்ந்து, செறிந்த புதராக முள்ளம்பன்றி பதுங்கி இருக்கும் அளவிற்குச் செறிந்த புதராக இருக்கும் என்பர் புலவர்கள்.

“வேட்டம் போகிய குறவன் காட்ட
 குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர
 முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட”
-அகநா. 182 : 6-8

இதன் இலை மல்லிகை இனத்திலேயே மிகப் பெரியதாகும். இதனை,

“பருஇலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
 காந்தள் அம்சிலம்பில்”
-குறுந். 100 : 2-3

என்றார் கபிலர். இதன் இலைகள் அடர்ந்திருக்கும் என்றும், அதனால் குளவிப் பொதும்பர் குளிர்ச்சியாக இருக்குமென்றும் கூறப்படுகின்றது.

“அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்”-புறநா. 90-2
“இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பர்”-ஐந்.எ. 3 : 1

இதன் மலர் நறுமணமுள்ளது என்பதைப் பல பாக்கள் குறிப்பிடுகின்றன.

“நாறிதழ்க் குளவி”-புறநா. 380 : 7
“கமழுங்குளவி”-பதிற். 12 : 10
“குளவி நாறு நறுநுதல்”-குறுந் . 59 : 3

இவற்றைக் காட்டிலும், இதன் நறுமணத்தைச் சிறப்பாகக் கூறும் பாடல் ஒன்றுண்டு. களிறும் புலியும் போரிட்டன. குருதி வழிந்தோடி, அந்நிலம் செங்களம் ஆயிற்று. குருதியால் புலால் நாறியது. இப்புலால் நாற்றத்தை மாற்றும் அளவிற்கு இதில் மணமுண்டு என்பதைப் பேரிசாத்தனார் புலப்படுத்துகின்றார்:

“அறியாய் வாழிதோழி பொறி வரிப்
 பூநுதல் யானையொடு புலிபொரக் குழைந்த

 

குளவி
(Jasminum griffithii)

“குருதிச் செங்களம் புலவுஅற வேங்கை
 உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
 மாமலை நாடனொடு மறுஇன் றாகிய<”

-அகநா. 268 : 1-5


இனி, குளவியுடன் கூதாளம் இணைத்துப் பாடப்பட்டுள்ளது:

“கூதளம் கவினிய குளவி முன்றில்”-புறதா. 168 : 12
“. . . . . . . . . . . . குளவியொடு
 வெண் கூதாளந் தொடுத்த கண்ணி”
-திருமுரு. 192
“நாறிதழ்க் குளவியொடு கூதளங்குழைய”-புறநா. 380 : 7
“குல்லை குளவி கூதளங் குவளை”-நற். 376 : 5

இங்ஙனமாகக் குளவிக் கொடி பயிலப்பட்டுள்ள சங்க இலக்கியப் பாடல்களை உற்று நோக்கினால், இது பெரிதும் மலையிடத்து வளரும் கொடி என்பதையும், குறிஞ்சித் திணைப் பாக்களில் மிகுதியும் பேசப்படுவதையும் அறியக் கூடும். ஆதலின், இக்குளவியைக் காட்டு மல்லிகை என்பதைக் காட்டிலும் மலை மல்லிகை என்று கூறுவது பொருந்தும்.

குளவி—மலை மல்லிகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : கிரிபித்தியை (griffithii)
தாவர இயல்பு : சிறு புதர்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 20-50 மீட்டர் நீளமாக வளரும் எறு கொடி.
வேர்த் தொகுதி : காணவில்லை.
தண்டுத் தொகுதி : பசுமையானது.
இலை : மிகப் பெரியது. 15 செ. மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் உள்ளது. அடியும், நுனியும் குறுகி, நடுவே அகன்றது. தடிப்பானது.
இலை நுனி
: நீண்டு, கூர்மையானது, இலையடியில் கூரிய நுண் மயிர் அடர்ந்து உள்ளது.
இலை நரம்பு
: தடித்திருக்கும்.
இலைக் காம்பு
: 5-6 மி.மீ. நீளம்.
மஞ்சரி : அடர்ந்து கொத்தாகப் பூக்கும். பல மலர்கள் உண்டாகும். மலரின் அடியில் செதில் உண்டு. நீளமானது. மஞ்சரியின் மேல் இலைகள் 6.5. செ. மீ. நீளமானது. நுனியில் உள்ளவை சற்று வெள்ளியதாக இருக்கும்.
புல்லி வட்டம் : புறவிதழ்கள் 12 மி. மீ நீளம்.
அல்லி வட்டம் : 4-10 அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழாய் வடிவினது. 12 மி.மீ. நீளமானது. மேலே இதழ்கள் விரிந்து விடும். 4 மி.மீ. அகலம். வெண்மையானது.
மகரந்த வட்டம் : 2 மகரந்தக் கால்கள் அல்லிக் குழலுள் அடங்கியிருக்கும். நுண் மயிர் அடர்ந்துள்ளது.

இதில் ஏனையவற்றைக் காணவில்லை என்பர்.

பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/481 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/482 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/483 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/484 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/485 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/486 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/487 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/488 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/489 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/490 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/491 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/492 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/493 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/494 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/495 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/496 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/497 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/498 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/499 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/500 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/501 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/502 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/503 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/504 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/505 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/506 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/507 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/508 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/509 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/510 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/511 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/512 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/513 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/514 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/515 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/516 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/517 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/518 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/519 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/520 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/521 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/522 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/523 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/524 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/525 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/526 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/527 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/528 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/529 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/530 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/531 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/532 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/533 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/534 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/535 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/536 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/537 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/538 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/539 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/540 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/541 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/542 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/543 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/544 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/545 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/546 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/547 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/548 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/549 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/550 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/551 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/552 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/553 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/554 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/555 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/556 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/557 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/558 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/559 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/560 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/561 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/562 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/563 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/564 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/565 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/566 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/567 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/568 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/569 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/570 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/571 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/572 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/573 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/574 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/575 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/576 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/577 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/578 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/579 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/580 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/581 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/582 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/583 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/584 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/585 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/586 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/587 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/588 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/589 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/590 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/591 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/592 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/593 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/594 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/595 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/596 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/597 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/598 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/599 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/600 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/601 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/602 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/603 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/604 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/605 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/606 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/607 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/608 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/609 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/610 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/611 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/612 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/613 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/614 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/615 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/616 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/617 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/618 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/619 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/620 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/621 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/622 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/623 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/624 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/625 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/626 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/627 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/628 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/629 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/630 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/631 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/632 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/633 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/634 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/635 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/636 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/637 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/638 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/639 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/640 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/641 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/642 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/643 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/644 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/645 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/646 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/647 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/648 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/649 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/650 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/651 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/652 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/653 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/654 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/655 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/656 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/657 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/658 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/659 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/660 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/661 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/662 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/663 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/664 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/665 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/666 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/667 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/668 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/669 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/670 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/671 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/672 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/673 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/674 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/675 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/676 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/677 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/678 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/679 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/680 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/681 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/682 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/683 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/684 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/685 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/686 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/687 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/688 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/689 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/690 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/691 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/692 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/693 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/694 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/695 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/696 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/697 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/698 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/699 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/700 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/701 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/702 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/703 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/704 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/705 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/706 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/707 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/708 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/709 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/710 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/711 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/712 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/713 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/714 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/715 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/716 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/717 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/718 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/719 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/720 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/721 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/722 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/723 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/724 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/725 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/726 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/727 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/728 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/729 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/730 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/731 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/732 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/733 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/734 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/735 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/736 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/737 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/738 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/739 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/740 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/741 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/742 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/743 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/744 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/745 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/746 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/747 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/748 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/749 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/750 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/751 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/752 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/753 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/754 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/755 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/756 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/757 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/758 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/759 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/760 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/761 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/762 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/763 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/764 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/765 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/766 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/767 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/768 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/769 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/770 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/771 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/772 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/773 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/774 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/775 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/776 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/777 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/778 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/779 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/780 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/781 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/782 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/783 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/784 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/785 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/786 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/787 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/788 மீடியாவிக்கி:Proofreadpage pagenum template#lst:பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/789

  1. சீ.சிந். 1650
  2. சீ.சிந். 2349
  3. சீ. சிந். 1314
  4. சீ. சிந் . 1662
  5. சிலப். 17 :20:2
  6. வீ. நெ: 355
  7. திணை மொ. ஐ. 40
  8. திணை மா. நூ. 72
  9. .ஞான. தே. கழுமலப்பதி: 3
  10. “அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
    வார்ப்புரு:Gapவெள்ளம் தீப்பட்டதென வெரீஇ - புள்ளினம்தன்
    வார்ப்புரு:Gapகைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ
    வார்ப்புரு:Gapநச்சிலைவேல் கோக்கோதை நாடு”
    வார்ப்புரு:Right
  11. இலக்கியம் ஒரு பூக்காடு: 183
  12. சிலப் : 2 : 14
  13. “கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை
     செங்குவளை பூத்தாள் செயலென்னே-எங்கோமான்
     பங்குற்றும் தீராப் பசப்பு”
    வார்ப்புரு:Float right
  14. “கழுநீர் மாலைக் கடவுள் போற்றி”-திருவா. 4:217
  15. திருவா. 49 : 4
  16. சீ. சிந். 316
  17. சிலம்பு. 14-138
  18. திருக்கோ. 1
  19. இலக்கியம் ஒரு பூக்காடு: பக் 176
  20. இலக்கியம் ஒரு பூக்காடு: பக். 217
  21. “நூற்றிதழ் அடுக்கி அதனில் துன்னூசி ஊன்றிடும் காலம் கணமாம்”வார்ப்புரு:Gap-பரத நூல்
  22. திருச்சிற்றம்பலக் கோவை : 1
  23. திருவாய் 9:7:3 -பழம்பாடல்
  24. திருவாசகம் : திருச்சதகம் : 26
  25. “கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்து” -சிலப். 11:110.
  26. சீ.சிந் : 1969
  27. சூடாமணி நிகண்டு : 4 ம. பெ. தொ : 4
  28. பிங்கல நிகண்டு : 3717
  29. சூடாமணி நிகண்டு : 4 ம. பெ. தொ : 4
  30. சூடாமணி நிகண்டு : 31
  31. கலைக்களஞ்சியம் : (IV பக் :2400)
  32. பிங்கல நிகண்டு : 3717
  33. சூடாமணி நிகண்டு : 4. ம. பெ. தொகுதி 4
  34. திணைமொ. ஐ: 50
  35. பெருங்: இலா. 12 : 17
  36. இலவம் பஞ்சின் பேர் பூளையாகும்-சேந். திவா.
  37. “இலவம் பஞ்சில் துயில்”-ஆத்திசூடி - 26
  38. சீ.சிந் : 1322 : 4
  39. சீ.சிந் :1208
  40. சிலப்பதிகாரம் 5 : 190
  41. சீ.சிந் : 1208
  42. குண சிந்தாமணி: 495
  43. சீ. சிந்: 461
  44. சிலப் : 22 : 40
  45. நாறு கூவிள நாகுவெண் மதியத்தொடு
     ஆறுசூடும் அமரர் பிரான்வார்ப்புரு:Gap-சுந். தேவா: காய்: 3
  46. திணைமா . நூ . 70 : 1
  47. திணை. மொ . ஐம்: 13
  48. திருவாச: 5 : 17
  49. திருவாய். இயற்பா : 2 : 31
  50. திருவா : 29 : 5. 3-4
  51. திணைமொ. ஐ: 21 : 1-2
  52. திணமொ. ஐ: 30 : 1-2
  53. கா.நா. 27 : 1-2
  54. சிலப் : மதுரைக். 12 : 2
  55. கோவை இளஞ்சேரனார்-இலக்கியம் ஒரு பூக்காடு-பக் : 338
  56. இலக்கியம் ஒரு பூக்காடு : பக்: 288
  57. திருவா. 24 : 8 : 1
  58. திணைமா. நூ. 91
  59. இலக்கியம் ஒரு பூக்காடு பக். 741
  60. பிங்.நி : 2695 “கவிரே சஞ்சுகம் முள் முருக்காகும்”
  61. சிலப். 13 : 165
  62. பெருங். 12:27
  63. அகரமுதலி
  64. கார் : 9
  65. புட்பவிதி : 3
  66. சீ. சிந் : 834
  67. பி. நிகண்டு : 2661
  68. சூடாமணி நிகண்டு
  69. கலைக் களஞ்சியம்: 5
  70. கே. நா: 277 : 16
  71. திணைமா. நூ : 64
  72. திணை மா : 67
  73. சீ. சிந்: 1454 : 1
  74. ஞானசம்பந்தர் தேவாரம்
  75. திணைமா. நூ : 64 : 4
  76. திணை. மொ : 14 : 1-2
  77. சீ. சிந் : 1649 :4
  78. இலக்கியம் ஒரு பூக்காடு: பக்: 685
  79. 1. சிலப்பதிகாரம் : பதிகம் : 4
  80. இலக்கியம் ஒரு பூக்காடு பக். 413
  81. திணைமா. நூ. 63 :1-2
  82. பெரி. திரு: 2-9
  83. சிலப்: 8-வெண்பா
  84. சீ. சிந்: 1710
  85. சிலப் : 26 : 133
  86. பாண்டிக்கோவை. 71
  87. திரு. வி. பு : இ.மு.ப. 12
  88. சீ. சிந். 1959
  89. திருவா. 6 : 36
  90. பிங். நி. 2862
  91. க. நா. 301
  92. சிலப். 17 : 11 : 1-2
  93. பாரத வெண்பா : துரோண பருவம்
  94. பெரி. 4 சண்டேசுர : 56 : 3-4
  95. பிங். நிக: 2666
  96. திணை. ஐ: 49
  97. சிலப்: 7:9:2
  98. “பொன்று ஞாழல் புலிநகம் கடுக்கும்”-கல்லாடம். 50 : 6
  99. “நறவம் சுள்ளி நாகம் ஞாழல்”- சேந்தன் திவாகரம்.
  100. உடை குடை வேலே -பிங். நி: 2688
  101. சிலப்: 25:18
  102. பிங். நிகண்டு : 2687
  103. சிலப். 2:14:186,187
  104. “வெல்லுநர் அணிவாகை வெற்றிப்பூவே”
    வார்ப்புரு:Float right
  105. சீ. சிந்: 1991
  106. சீ. சிந். 990
  107. சிலப். 23 : 81
  108. இலக்கியம் ஒரு பூக்காடு. பக்: 525
  109. நான். க. 1
  110. திரி. 2 : 4
  111. திணை மா. நூ. 100 : 4-5
  112. பி. நிகண்டு: 2730
  113. சிலப். 2 : 12 : 2
  114. சீ. சிந். 1649 :2-3
  115. நிகண்டுகள்
  116. சேந்தன் திவாகரம் : மரப்பெயர்
  117. பெருங்கதை இலா 15 : 15
  118. நிகண்டுகள்
  119. திணை மொ. ஐம்: 16
  120. புறத்திரட்டு. 752
  121. ‘நொச்சியாயினும் கரந்தையாயினும்
    வார்ப்புரு:Gapபச்சிலையிட்டுப் பரவுதல் தொண்டர்’ வார்ப்புரு:Float right
  122. சிலப் : 14 : 91
  123. பெருங்: இலா: 12 : 25
  124. திணை மாலை நூற். 24
  125. வார்ப்புரு:Left margin (தேருருளை; மேற்சூட்டு வையாத் தேருருளை) மகிழ், தேர் உருளைப் போலே பூத்தன என்று உரை கூறியுள்ளார். இம்மலர் பூக்காம்பினின்றும் கழன்று விழும். இக்காட்சியைத் திருத்தக்க தேவர், ‘ஒரு சிலந்திப் பூச்சி கீழ் விழுவது போன்ற’தென்பார். வார்ப்புரு:Left margin
  126. வார்ப்புரு:Left margin வார்ப்புரு:Float right
  127. ’மடல் பெரிது . . . . . . ’நல்வழி
  128. திருவாய். 4:10:11
  129. சேந்தன் திவாகரம் : மரப்பெயர் :197
  130. சிலப்: பதிகம்: அடியார்க்கு நல்லார் உரை
  131. சேந்தன் திவாகரம்: மரப்பெயர்: 197
  132. ‘தானுடை முல்லை எல்லாம் தாதுகப் பறித்திட்டாளே’-சீ. சிந், 686. இவ்வடிக்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘சீவகனையே கூடுவன் என்றலின் முல்லை – கற்பு’ என்பார்.
  133. “அகநகர் எல்லாம் அரும்பவிழ் முல்லை
     நிகர் மலர் நெல்லொடு தூஉய்ப் பகல் மாய்த்த
     மாலை மணி விளக்கம் காட்டி”-சிலப் 9 : 1-8

  134. “முல்லையந்தீங்குழல்” -சிலப். 17 : 21
  135. “கொகுடி முல்லை”
    வார்ப்புரு:Float right
    “பெருமான் கொகுடிக் கோயில்”
    வார்ப்புரு:Float right
    “பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்”
    வார்ப்புரு:Float right
    வார்ப்புரு:Left margin

    எனத் தேவாரத் திருமுறை கூறுவதைக் கொண்டு உ. வே. சாமிநாத அய்யர் இதனை ஒரு வகை ‘முல்லை’ என்பார். ‘இருவாட்சி, கொகுடி, பிச்சி இவை எல்லாம் கொடிப்பூவாமே’ என்று புட்ப விதிகள் கூறும்.

  136. சூடாமணி நிகண்டு: மரப்பெயர்: 8
  137. இப்பெயரைக் கணிப்பதற்கு லஷிங்டன் எழுதிய நூல்-தமிழ் அட்டவணை பக். 34-துணை செய்தது.
  138. “மௌவல்சூழ் மயிலைப் பந்தர்”வார்ப்புரு:Gap-சீ. சிந். 485
  139. “இல்வளர் முல்லை மல்லிகை மயிலை”வார்ப்புரு:Gap-சிலப். 5 : 191
  140. “வெள்ளை மந்தாரம் முல்லை மல்லிகை வெடிவாய்ச்சாதி
    வார்ப்புரு:Gapகள்ளவிழ் மயிலை ஆதி வெண்மலர்” வார்ப்புரு:Float right
  141. சிலப். 13 : 120
  142. சிலப். 13 : 156
  143. சீ. சிந். 485 உரை
  144. . . . . . நச்சினார். உரை
  145. சிலப். 13 : 156
  146. சேந்தன் திவாகரம்-மரப்பெயர்
  147. சீ. சிந், 485 (உரை)
  148. சிலப். 13:120
  149. புட்பவிதி
  150. மணி. 5 : 48–49
  151. மணிமே. மலர். பு. காதை: 104
  152. சிலப். 18:157
  153. சிலப். 14: 87
  154. வார்ப்புரு:Left margin
  155. பிங். நி. 2951
  156. அப்பர் தே. ஐயாறு.
  157. சூடாமணி நிகண்டு
  158. முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
     நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
     பாலை என்பதோர் படிவங் கொள்ளும்.
    வார்ப்புரு:Float right
  159. “பத்தொடு ஆறு நூறுஆயிரம் பெறப்
    வார்ப்புரு:Gapபண்டு பட்டினப் பாலை கொண்டதும்”
    வார்ப்புரு:Float right
  160. “வெள்ளெருக்கஞ் சடைமுடியான்”
    வார்ப்புரு:Float right
  161. ‘விரைசார்ந்து அறியாத புல்லெருக்கங் கண்ணி’ வார்ப்புரு:Float right
  162. ‘அடும்பு பாலிகை’-பிங். நிகண்டு.
  163. திணைமா. நூற். 51
  164. சிலப். 14 : 88
  165. சிலப். 13 : 156
  166. சிலப். 14 : 88
  167. சிலப். 22 : 40
  168. சிலப். 14 : 88
  169. சிலப். 22 : 40
  170. சிலப். 13 : 156
  171. திருக்குறள்‌: 1304
  172. “வள்ளைத்தாள் போல் வடிகாது இலைகாண்”
    வார்ப்புரு:Float right
  173. “ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
    வார்ப்புரு:Gapதண்ணீர்ககுத் தான்பயந் தாங்கு” வார்ப்புரு:Float right
  174. புட்பவிதி. 40 : 1
  175. ஞான. தே. திப்பாதிரி. 8
  176. பெரி. பு: திருநா. 38
  177. “எட்பகவன்ன சிறுமைத்தே ஆயினும்” வார்ப்புரு:Float right
  178. கம்பராமாயணம்.
  179. சிலப். 5 : 205
  180. மணி. 20 : 48
  181. கார் . நா. 28
  182. பிங். நி. 2685
  183. கார் . நாற். 39 : 1-2
  184. ஞான. தே. கச்சி ஏகம்பம். 2:2
  185. “நொச்சி யாயினும் கரந்தை யாயினும்
    வார்ப்புரு:Gapபச்சிலை யிட்டுப் பரவும் தொண்டர்” வார்ப்புரு:Float right
  186. கார். நாற். 39 : 2-3
  187. கஞ்சங் குல்லை. கஞ்சாவாகும் -திவாகரம்
  188. இலக்கியம் ஒரு பூக்காடு பக். 296
  189. “....போர்கருதித் துப்புடைத்தும்பை மலைந்தான்”
    வார்ப்புரு:Float right
  190. சீ. சிந்தாமணி: 2227
  191. “கொத்தலர் கவட்டி லையோடு ஏர்பெறத்
    வார்ப்புரு:Gapதுளவியல் தும்பையும் கழியச் சூடினான்”
    வார்ப்புரு:Float right
  192. “பூளை வெற்றிப் பூவாகும்மே”வார்ப்புரு:Float right
  193. கம்பராமா. அகலிகை. 39
  194. ஒரு மரப் பெயரும் ஓரிசைப் பெயரும்
    வார்ப்புரு:Gapகச்சிப்பதியும் கலையும் காஞ்சிவார்ப்புரு:Gap-பிங். நி. 3343
  195. திருவாசகம் : கீர்த்தித் திருவகவல் : 1
  196. திணைமா. நூ. 61
  197. நல்வழி
  198. “அன்றாலின் கீழிருந்து அறமுரைத்தான் காணேடி”
    வார்ப்புரு:Float right
  199. தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
    வார்ப்புரு:Gapசிறுமீன்சினையினும் நுண்ணிதே யாயினும்
    வார்ப்புரு:Gapஅண்ணல் யானை அணிதேர்ப் புரவி
    வார்ப்புரு:Gapஆட்பெரும் படையொடு மன்னர்க்கிருக்க நிழலாகும்மே.
  200. நல். 35
  201. நல்வழி: 35
  202. தொல் . எழு : 227 உரை
  203. “அந்தியின் வாய்எழில் அம்பலத்
    வார்ப்புரு:Gapதெம்பிரான் அம்பொன் வெற்பில்
    வார்ப்புரு:Gapபந்தியின் வாய்ப்பல வின்களை
    வார்ப்புரு:Gapபைந்தே னொடும் கடுவன்
    வார்ப்புரு:Gapமந்தியின் வாய்க்கொடுத்து ஓம்பும்
    வார்ப்புரு:Gapசிலம்ப மனங் கனிய
    வார்ப்புரு:Gapமுத்திஇன் வாய்மொழி நீயேமொழி
    வார்ப்புரு:Gapமொழிசென்று அம்மொய் குழற்கே”
    வார்ப்புரு:Float right
  204. பிங். நி. 4015
  205. இலக்கியம் ஒரு பூக்காடு. பக். 277
  206. வெண்கோடல்: சீவக. சிந், 17
  207. தோன்றிப்பூ: சீவக. சிந். 73:1563
  208. கல்லாடம். 20 : 7-11
  209. பிங்கல நிகண்டு. 1892; 2893
  210. சூடாமணி நிகண்டு மரம். 24:1:2
  211. சேந்தன் திவாகாரம்: : மரப் பெயர்
  212. “விரியும் மணம்அவிழ்க்கும் மலர்முகிழ் மேல்எல்லாம்
    வார்ப்புரு:Gapகரிய வரிவண்டு முத்தமிடல் காணாய்”
    வார்ப்புரு:Float right
  213. பிங்.- நி. 2767
  214. கல்லா. 20
  215. சீவக. சிந். 73 : 1563
  216. திணை. மா. நூ. 119 : 4
  217. திணை. ஐ. 21
  218. ஐந். எ . 17
  219. திணை. ஐ. 21
  220. ஐந். எ. 17
  221. திணை. ஐ. 29
  222. கார். நா. 11
  223. திணை. மா. நூ. 119 : 3-4
  224. இலக்கியம் ஒரு பூக்காடு : ப. 345
  225. இலக்கியம் ஒரு பூக்காடு. பக். 616
  226. இராம. இரா. வ. பட 176
  227. கா. நா. 25