சங்க இலக்கியத் தாவரங்கள்/011-150

நறவம்-நறை-நறா-நறவு
பிக்சா ஓரிலானா
(Bixa orellana-Linn.)

கபிலர் கூறும் ‘நந்தி நறவம் நறும் புன்னாகம்’ என்னும் குறிஞ்சிப் பாட்டடியில் (91) வரும், ‘நறவம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘நறைக்கொடி’ என்று உரை கண்டார். இது ஒரு புதர்க்கொடி: நறுமணம் மிகவும் உடையது. இதன் மலர் சிவப்பானது. நீண்ட அகவிதழ்களை உடையது. இதழ்களில் உள்ள வரிகளைக் கூர்ந்து நோக்கி, இவற்றை மகளிரின் செவ்வரி படர்ந்த கண்களுக்குப் புலவர்கள் உவமித்துள்ளனர்.

சங்க இலக்கியப் பெயர் : நறவம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : நறை, நறா, நறவு.
பிற்கால இலக்கியப் பெயர் : நறவங்கொடி
தாவரப் பெயர் : பிக்சா ஓரிலானா
(Bixa orellana,Linn.)

நறவம்-நறை-நறா-நறவு இலக்கியம்

கபிலர் “நந்தி நறவம் நறும் புன்னாகம்” (குறிஞ்சி 91) என்றார். இவ்வடியில் வரும் ‘நறவம்’ என்பதற்கு ‘நறைக்கொடி’ என்று பொருள் எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். குறிஞ்சிப் பாட்டில் வரும் ‘காந்தள் ஆம்பல் அனிச்சம்’ முதலாய எல்லாப் பெயர்கட்கும் அவற்றின் ‘பூ’ என்றே உரை கூறும் நச்சினார்க்கினியர், நறவம் என்பதற்கு ‘நறைக்கொடி’ என்று கூறுவது சிந்திக்கற்பாலது.

“மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியல்அறைப்
 பொங்கல் இளமழை புடைக்கும் நாடே”
-ஐங் 276 : 1-3

இப்பாட்டில் கடுவன் நறைக்கொடியைக் கொண்டு புடைக்கும் என்று கபிலர் கூறுதலின் ‘நறவம்’ என்பது ஒரு கொடி என்பதும் இக்கொடியே நறுமணமுடையதென்பதும் புலனாம். இதனை உட்கொண்டே நச்சினார்க்கினியர் ‘நறவம்’ என்பதற்கு ‘நறைக்கொடி’ என்று உரை கண்டார் போலும் என்று அறிய முடிகின்றது.

இக்கொடியினைச் சங்க நூல்கள் நறவம், நறை, நறா, நறவு என்ற நான்கு பெயர்களால் அழைக்கின்றன. நறா என்பது தேறலையும் குறிக்கும். இதனால் சூடும் நறவமாக மலரும், சூடா நறவமாகத் தேறலும் குறிக்கப்படும். தாவர இயலில் இதனை ஒரு புதர்க்கொடி என்பர். இக்கொடி கொத்தாகப் பூக்கும். தாவர இயலுக்கேற்ப ‘ஊழ் இணர் நறவம்’-பரிபா. 19:78 என்று கூறுவர் நப்பண்ணனார். நறவ மலரில் ஐந்து நீண்ட வெளிர் சிவப்பு நிறமான இதழ்கள் உள்ளன. இம்மலரை மகளிரது கண்ணுக்கும் கைக்கும், இதழ்களை மகளிருடைய கை விரல்களுக்கும் சங்கச் சான்றோர் உவமித்துள்ளனர். மகளிரது கருங்குவளை போன்ற கண்ணில், செவ்வரி படர்வதை இளங்கீரனார் கூறுவர். கருங்கண் சிவந்தது என்றும் கூறலாம்.

“மறவல் ஓம்புமதி, எம்மே-நறவின்
 சேயிதழ் அனைய ஆகிக் குவளை
 மாயிதழ் புரையும் மலர்கொள் ஈர்இமை”
-அகநா. 19 : 9-11
“நயவரு நறவிதழ் மதருண்கண் வாணுதல்”-பரிபா. 8 : 75
“நறவுப் பெயர்த்து அமர்த்த நல்எழில் மழைக்கண்
 மடவரல் மகளிரொடு பகல் விளையாடி”
-பெரும்பா. 386-387
“நறாஇதழ் கண்டன்ன செவ்விரற்கு ஏற்ப”-கலி. 84 : 22

மேலும், நறவம்பூ அலர்ந்தாற் போன்ற, தன்னுடைய மெல்லிய விரலையுடைய கையைத் தாங்கித் தலைவன் தன் அருளை உடைய சிவந்த கண் மறையும்படி வைத்துக் கொண்டதைத் தலைமகள் நினைவுபடுத்துகிறாள்.

“நறாஅ அவிழ்ந் தன்ன என்மெல்விரல் போதுகொண்டு
 செறாஅச் செங்கண் புதைய வைத்து”
-கலி. 54 : 9-10

சூடும் நறவத்தையும் சூடா நறவத்தையும் சேர்த்துக் கூறும் ஒரு பரிபாடல். புனலாட்டயர்ந்த தலைவி, மெய் ஈரந்தீர்ந்து வெய்தாக நுகர்தற்குக் கூடிய நறாவைப் பருகினாள். நெய்தற் பூவை (கருங்குவளை) ஒத்திருந்த அவள் கண், அந்நறவை ஆர்ந்த பொழுது கண்டார்க்கு மிக்க மகிழ் செய்யும் பெரிய நறவம் பூவை ஒத்தன என்கிறார் மையோடக்கோவனார்:

“விரும்பிய ஈரணி மெய்ஈரம் தீர
 சுரும்பு ஆர்க்கும் சூர்நறா ஏந்தினாள், கண் நெய்தல்
 பேர்மகிழச் செய்யும் பெருநறாப் பேணியவே
 கூர்நறா ஆர்ந்தவள் கண்”
-பரிபா. 7 : 61-64

நறவின் சேயிதழ் வரிகளை உடையது. இவை மகளிரது கண்ணின் செவ்வரியைக் குறிக்கும். மேலும் சங்கினுடைய முதுகில் அரக்கைத் தீற்றினாற் போன்ற சிவந்த வரி பொருந்திய இதழையுடைய இம்மலரின் நறுமணம் நெடுந்தூரம் வரையில் நுகரப்படும். இதில் நறுந்தாது ஆடிய தும்பி, பொன்னை உரைக்கும் கட்டளைக் கல் போல நல்ல நிறத்தைப் பெறும் என்பார் பேரிசாத்தனார்.

“அவ்வளை வெரிகின் அரக் கீர்த் தன்ன
 செவ்வரி யிதழ்சேண் நாறு நறவின்
 நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்
 பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம்”
-நற். 25 : 1-4

நறைக்கொடியில் நார் உரித்தல் உண்டு. இந்த நாரைக் கொண்டு வேங்கை மலர்களைத் தொடுப்பர்.

“நறை நார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி”

-புறநா. 169 : 15
இதனால் இது குறிஞ்சி நிலப்பூவாதல் கூடும் என்பர் இளஞ்சேரனார்.

ஆகவே, நறவம் ஒரு நறுமணமுள்ள புதர்க்கொடி எனவும், இதில் மலர்கள் கொத்தாகப் பூக்கும் எனவும், மலர் வெளிர் செம்மையானது எனவும், பெரிய செவ்விய இதழ்களை உடையதெனவும், இதழ்கள் செவ்வரிகளை உடையன எனவும், இம்மலரின் நறுமணம் நெடுந்தூரம் பரவும் எனவும், இம்மலரில் தாது மிகுத்து உகும் எனவும், இதில் வண்டுகள் மொய்க்கும் எனவும், இக்கொடியில் நார் இருக்கும் என புலவர் பெருமக்கள் கூறுவது கொண்டு பார்த்தால் இக்கொடியைப் பிக்சா

நறவம்
(Bixa orellana)

ஓரிலானா என்று கண்டு கொள்ள முடிகிறது. இதன் ஆங்கிலப் பெயர் அர்நோட்டோ, (Ar-notto) என்பதாகும். இதன் தாவரப் பெயரை இங்ஙனம் கண்டு கொள்ளுதற்குக் ‘காம்பிள்’ (பக். 36), ‘லஷிங்டன்’ (ஆங்கிலப் பெயர் வரிசை) ஆகிய இருவருடைய நூல்கள் துணை செய்தன.

பிக்சா ஓரிலானாவின், குரோமோசோம் எண்ணிக்கை 2n=14 என, சானகி அம்மாளும் (டி 1945), கிராஸ் (1965) என்பவரும் 2n = 16 என, சிம்மண்ட்ஸ் (1954) என்பவரும் கண்டுள்ளனர்.

நறவம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே, அகவிதழ் பிரிந்தவை
தாவரக் குடும்பம் : பிக்சேசி (Віxaceae)
தாவரப் பேரினப் பெயர் : பிக்சா (Bixa)
தாவரச் சிற்றினப் பெயர் : ஓரிலானா (orellana)
ஆங்கிலப் பெயர் : தி அர்னோட்டா (The Arnotto)
தாவர இயல்பு : புதர்ச் செடி; கிளைகள் நீண்டு வளர்ந்து கொடி போல் இருக்கும்; என்றும் தழைத்திருக்கும் தாவரம்.
இலை : தனியிலை, அகன்றது. நீள் இதய வடிவானது. நுனி கூரியது. இலைச் செதில்கள் நுண்ணியவை.
மஞ்சரி : கிளை நுனியில் கலப்பு மஞ்சரியாக இருக்கும்.
மலர் : பெரியது; சிவப்பு நிறமுடையது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் விளிம்பு ஒட்டியவை; விரைந்து உதிர்வன.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் அரும்பில் திருகு அமைப்பில் அமைந்துள்ளன.
மகரந்த வட்டம் : பல தாதிழைகள், தாதுப்பையில் உள்ள இரு துளைகளின் வழியே தாது உகும்.
சூலக வட்டம் : ஒரு செல்லால் ஆனது. சூல் தண்டு மெல்லியது, வளைந்தது. பல சூல்கள் இரு வரிசையாகச் சூலகச் சுவரை ஒட்டியிருக்கும்.
கனி : செந்நிறமானது. சிறுமுள் படர்ந்தது. காப்சூல் என்னும் தடுப்பு வெடிகனி.
விதை : பல விதைகள் உண்டாகும். விதையுறை சிவந்தது. விதையில் சதைப் பற்றுடைய ஆல்புமின் காணப்படும்.

இப்புதர்ச்செடி மேற்கு மலைத்தொடரில் தானாக வளர்வதோடு வளர்க்கவும் படும்.