சங்க இலக்கியத் தாவரங்கள்/012-150

நாகம்–புன்னாகம்–சுரபுன்னை
ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

சங்க இலக்கியப் பாக்கள் பலவற்றில் ‘நாகம்’ என்பது குறிப்பிடப்படுகிறது. நச்சினார்க்கினியர் குறிஞ்சிப்பாட்டடியில் வரும் ‘நாகம்’ என்பதற்கு ‘நாகப்பூ’ என்றும், மலைபடு கடாத்தில் வரும் ‘நாகம்’ என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்றும், பிறவிடங்களில் வரும் ‘நாகம்’ என்பதற்குச் ‘சுரபுன்னை’ என்றும் உரை கண்டுள்ளார். சங்கப் பாடல்களில் வரும் ‘வழை’ என்பதற்கும் இவர் ‘சுரபுன்னை’ என்று உரை கூறுவர். ஆகவே, நாகம், வழை என்பவை சுரபுன்னை எனக் கருதப்படுதலின், ‘நாகம்’ என்பதற்கான தாவர விளக்கவுரையினை ‘வழை’ என்ற தலைப்பிற் கண்டு கொள்ளலாம்.

சங்க இலக்கியப் பெயர் : நாகம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : வழை, புன்னாகம்
பிற்கால இலக்கியப் பெயர் : சுரபுன்னை
தாவரப் பெயர் : ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

நாகம்–புன்னாகம்–சுரபுன்னை இலக்கியம்

“நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி”-குறிஞ். 94

என்றார் குறிஞ்சிக் கபிலர்.

“நறுவீ உறைக்கும் நாக நெடுவழி”-சிறுபா. 88
“நளிசினை நறும்போது கஞலிய நாகு முதிர்நாகத்த”
(சிறுபா.108)

“நறுவி நாகமும் அகிலும் ஆரமும்”-சிறுபா. 116

என்றார் நத்தத்தனார்.

“. . . . . . . . . . . . . . . . . . . மீமிசை
நாக நறுமலர் உதிர”-திருமுரு. 301-302

என்றார் நக்கீரர்.

“நீள்நாக நறுந்தண்தார் தயங்கப் பாய்ந்தருளி”-கலி. 39 : 3
நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்”-மலை படு. 520

இவற்றிற்கெல்லாம் உரை எழுதிய நச்சினார்க்கினியர் குறிஞ்சிப் பாட்டடியில் வரும் (94) ‘நாகம்’ என்பதற்கு ‘நாகப்பூ’ என்றும், மலைபடுகடாத்தில் வரும் (520) நாகம் என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்றும், பிறவிடங்களில் வரும் நாகம் என்பதற்குச் ‘சுரபுன்னை’ என்றும் உரை கூறியுள்ளார். இவரே வழை என வரும் சங்கப்பாக்களில் ‘சுரபுன்னை’ என்றாராயினும்,

“மணிமலர் நாகம் சார்ந்து வழையொடு மரவ நீழல்”[1]

என வரும் சீவக சிந்தாமணிப் பாடலில் (1969) நாகமும், வழையும் ஒருங்கே கூறப்படுதலின் ‘வழை’ என்பதற்குச் சுரபுன்னையுமாம் என்று கூறி, ‘நாகம்’ என்பதற்கு ‘நாகம் ஒரு வகை மரம்’ என்று உரை கண்டுள்ளார்.

திருத்தக்கதேவர் இங்ஙனம் நாகத்தையும் வழையையும் தனித்தனியாகக் கூறியது போலவே,

“நல்லிணர் நாகம் நறவம் சுரபுன்னை”-பரிபா. 12 : 80

என்று நல்வழுதியாரும், ‘நாகத்தையும், சுரபுன்னையையும்’ தனித்தனியாகப் பாடியுள்ளார். குறிஞ்சிக் கபிலரும், பெருங்குறிஞ்சியில், ‘நாகத்தையும்’ (94) ‘வழையையும்’ (83) தனித்தனியாகப் பாடியுள்ளார்.

ஆதலின் சங்க நூல்களில் துறைபோகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘நாகம்’ என்பதற்கு 1) சுரபுன்னை 2) நாகப்பூ 3) புன்னைப்பூ என்று மூன்று உரைகளைக் கூறுமாறு யாங்ஙனம்?

நெய்தல் நிலத்திற்குரிய கருப்பொருள்களில் புன்னைமரம் ஓதப்படுதலானும், சங்க இலக்கியப் பாக்களில் புன்னை மலிந்து காணப்படுதலானும்,

“நந்தி நறவம் நறும்புன்னாகம்”-குறிஞ். 91

என்று கபிலர் புன்னாகத்தைக் குறிப்பிட்டுள்ளமையாலும், ‘நாகம்’ என்பதற்குப் புன்னை, வழை. சுரபுன்னை என்று சூடாமணி நிகண்டும்[2] நாகமென்றலின் புன்னாகம் புன்னையாகுமென்று பிங்கல நிகண்டும்[3] விளக்குதலாலும், ‘வழை’ என்பதும் ‘சுரபுன்னை’ என்று நிகண்டுகள் கூறுவதை ஏற்றுக் கொண்டு, ‘புன்னாகம்’ என்பதற்குப் ‘புன்னையின் விசேடம்’ என்றும், நாகம் என்பது சுரபுன்னை, புன்னை, நாகப்பூ என்பன மூன்றும் ஒன்றே என்றும் கொண்டு, உரை கூறினர் போலும் எனக் கோடல் பொருந்தும்.

ஆகவே வழை, சுரபுன்னை, புன்னாகம், நாகம் என்பன புன்னையின் விசேடமாகிய ஒரே மரத்தைக் குறிக்குமெனவும், புன்னை மட்டும் இவற்றின் வேறாயதொரு மரம் எனவும் கொள்ளுதல் கூடும். மேலும் சுரபுன்னைக்கு நாகம் என்ற பெயரும் வழங்கப்பட்டது எனச் சூடாமணி நிகண்டு கூறுவதும், நீளநினைத்தற் குறித்து. தாவரவியல் நூல்கள் புன்னையைக் கலோபில்லம், இனோபில்லம் என்றும், வழை, புன்னாகம் எனப்படும் சுரபுன்னையை ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ் என்றும் குறிப்பிடுகின்றன. இந்நூல்களில் நறுமணமுடைய புன்னையும், புன்னையின் விசேடமாகிய (சுரத்தில் வளரும்) சுரபுன்னையும் தனித்தனியுமாகப் பேசப்படுவதன்றித் தமிழ்நாட்டில் இக்குடும்பத்தைச் சார்ந்த இவ்விரு நறுமண மலருடைய மரங்களே வளர்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் நாகம், வழை எனப்படும் சுரபுன்னை மரம் மலைப்புறக் காடுகளிலும், புன்னை மரம் கடலோரமான நெய்தல் நிலத்திலும் வளர்வதும் உற்று நோக்குதற்குரித்து. இவ்விரு மரங்களையும் சங்கப் புலவர்களைப் போல அவை வளருமிடத்திற் கண்டு களித்த எம் போன்றோர்க்கல்லது, மரங்களிலும் மரப்பெயர்களிலும் உளதாகிய இவ்வேறுபாடு ஏனையோர்க்குப் புலனாதல் அரிதென்பதும் ஒன்று. இவ்வுண்மையைச் சூடாமணி நிகண்டு குறிப்பிடுகின்றது. புன்னாகம் : “புன்னைப் புன்னாகம் நாகம் வழை சுரபுன்னை பேரேப்”.[4] மற்று, நாகமும் புன்னாகமும் பிற்காலத்தில் ஒன்றேயெனக் கருதப்பட்டன போலும்.

“நந்தி நறவம் நறும்புன்னாகம்”-குறிஞ்: 91

என்றார் குறிஞ்சிக் கபிலர். இதில் வரும் புன்னாகம் என்பதற்கு நச்சினார்க்கினியர் புன்னையின் விசேடம் என்று உரை கூறியுள்ளார். ஆதலின், புன்னாகம் என்பது புன்னையின் வேறாகிய சுரபுன்னையாதல் கூடும். மேலும், சூடாமணி நிகண்டு கூறியுள்ள வண்ணம் நாகமாதலுங் கூடும்.

‘நாகம்’ எனப்படும், சுரபுன்னையைப் பற்றிப் புலவர் பெருமக்கள் கூறியுள்ளவற்றை உற்று நோக்கினால், ‘நாகம்’ என்பது ‘சுரபுன்னை’ எனவும், புன்னாகம் எனவும் கூறப்படுமாறு காணலாம்.

புலவர் பெருமக்கள் கூறும் இதன் இயல்புகளாவன:

  1. நெருங்கிய கொம்புகளிடத்தே நறிய பூக்கள் நெருங்கியுள்ளன;
  2. மலையின் உச்சியில் உண்டான சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிரும்;
  3. நாக மரம் நெடிது வளரும்;
  4. சுரபுன்னைப் பூவால் கட்டிய மாலையை ஆடவரும் அணிந்தனர்;
  5. பாலையின் நெடிய வழியிலே சுரபுன்னை மரம் பூக்கும்; மலர்கள் சுரும்பு உண்ணும்படி நறிய தேனைத் துளிக்கும்;
  6. நாகமரம், அகில், சந்தனம் முதலிய மரங்களோடு மலையிடத்துச் சுரத்திலும் வளரும்.


  1. சீ.சிந் : 1969
  2. சூடாமணி நிகண்டு : 4 ம. பெ. தொ : 4
  3. பிங்கல நிகண்டு : 3717
  4. சூடாமணி நிகண்டு : 4 ம. பெ. தொ : 4