சங்க இலக்கியத் தாவரங்கள்/048-150

உடை
அக்கேசியா பிளானிபிரான்ஸ்
(Acacia planifrons, W.&A.)

புறநானூற்றுப் பாடல்களில் காணப்படும் ‘உடை’ என்னும் இச்சிறுமரத்தைக் குடை மரமென்பர் [1]. வேலமரத்தின் இனத்தைச் சார்ந்தது. மிக மிகச் சிறிய சிற்றிலைகளைக் கொண்டது. கிளைகளில் நீண்ட வலிய முட்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : உடை
தாவரப் பெயர் : அக்கேசியா பிளானிபிரான்ஸ்
(Acacia planifrons, W.&A.)

உடை இலக்கியம்

உடை என்பது ஒரு சிறு மரம். கிளைகளில் உள்ள இலைக் கணுவில் எல்லாம் நீண்ட இரு முட்கள் இருக்கும். இதன் இலை மிகச் சிறியது; இதன் முள்ளைச் ‘சுரையுடை வால்முள்’ என்று கூறுவர். இந்த முள்ளை ஊகம்புல்லின் நுனியில் கோத்து அம்பு ஆக்கி அதனை வில்லில் பூட்டிக் குறவர் குடிச் சிறுவர் எலியை எய்வர் என்று கூறுவர் ஆலத்தூர் கிழார்.

“சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
 ஊக நுண்கோல் செறித்த அம்பின்
-புறநா. 324:4-5

‘இருங்கடல் உடுத்த இப்பெரிய மாநிலத்தின் நடுவே, உடையினது சிறிய இலை கூடப் பிறர்க்கு உரித்தாதல் இன்றித் தாமே ஆண்ட மன்னர்கள் இடு திரை மணலினும் பலர்’ என்று சிறுவெண்தேரையார் பாடுகின்றார்.

“இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
 உடையிலை நடுவணது இடைபிறர்க்கு இன்றி

“தாமே ஆண்ட ஏமங் காவலர்
 இடுதிரை மணலினும் பலரே”
-புறநா. 363 : 1-4

இதன் இலை கூட்டிலை ஆகும். சிற்றிலைகள் மிகச் சிறியவை. இது ஒரு வகை வேலமரமாகும் என்று பிங்கல நிகண்டு கூறும்; இம் மரம் சிறு குடைபோலப் பரவிக் கிளைத்துத் தழைத்திருக்கும். ஆதலின், இதனைக் குடை வேல மரமென்றனர் போலும்.

உடை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : லெகுமினோசி (Leguminosae)
தாவரத் துணைக் குடும்பம் : மைமோசாய்டியே (Mimosoideae)
தாவரப் பேரினப் பெயர் : அக்கேசியா (Acacia)
தாவரச் சிற்றினப் பெயர் : பிளானிபிரான்ஸ் (Plaifrons)
சங்க இலக்கியப் பெயர் : உடை
உலக வழக்குப் பெயர் : ‘ஓடை’ என்பார் காம்பிள்
பிற்கால இலக்கியப் பெயர் : குடைவேலம்
ஆங்கிலப் பெயர் : பாபுல் (Babul)(Umbrella-thornbabul)
தாவர இயல்பு : சிறு மரம்; குடை போலக் கவிழ்ந்து கிளை பரப்பித் தழைத்த முடியுடையது;
இலை : கூட்டிலை, 1 அங்குலத்திற்கும் குறைவான நீளமுடையது; சிற்றிலைகள் 3-4 இணைகள் சிறகு வடிவில்–சிற்றிலைகள் (.06×.01) அங்குலம்–மிகச் சிறியவை. இலைச் செதில்கள் இரண்டும் இரு நீளமான வலிய முட்களாக மாறியிருக்கும்.
மஞ்சரி : இணர்க் காம்பு மெல்லியது. நுனியில் 2 அங்குல நீளமும், 2.5 அங்குல அகலமும் உள்ள கொத்தாக இருக்கும்.
மலர் : வெண்ணிறமான சிறு மலர்கள்.
புல்லி வட்டம் : புனல் வடிவானது; குட்டையானது; பிளவுள்ளது.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்தது போலக் காணப்படும். மடல் விரிந்திருக்கும்.
மகரந்த வட்டம் : அளவற்ற தாதிழைகள்
சூலக வட்டம் : 2 முதல் பல சூல்கள். சூல்தண்டு மிக மெல்லிய இழையானது.
கனி : ‘பாட்’ (‘Pod’)எனப்படும் உலர்கனி; உருண்டையானது.

இதன் மரம் அடியில் வெளிர் மஞ்சளானது; வலியது; கனமானது; உழவியல் கருவிகட்குக் காம்பு போடப் பயன்படும்.


  1. உடை குடை வேலே -பிங். நி: 2688