சங்க இலக்கியத் தாவரங்கள்/058-150
அனிச்சம்
லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே
(Lagerstroemia flos-reginae, Retz.)
‘ஒண்செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்’ (குறிஞ். 62) என்று வரும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டடியில் உள்ள, ‘அனிச்சம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் அனிச்சம்பூ என்று உரை கூறினார். கலித்தொகையும் அனிச்சத்தைக் குறிப்பிட்டுள்ளது (கலி. 911)
‘மோப்பக் குழையும் அனிச்சம்’ என்பது வள்ளுவர் வாக்கு (திருக்கு. 90). இவ்வியல்புடைய ‘அனிச்சம்’ செடியா? கொடியா? மரமா? எங்குள்ளது? என்ற வினாக்களுக்குத் தக்க விடையிறுக்க இயலவில்லை.
எனினும் அனிச்சம் என்ற பெயரில் சீலங்காவில், ‘பாரடேனியா’ தாவரத் தோட்டத்திலும், மலேசியாவில் ‘கோலாலம்பூர்’ தாவரத் தோட்டத்திலும் வளர்க்கப்படும் சிறு மரத்திற்கு லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே என்ற தாவரப் பெயர் சூட்டப் பெற்றுள்ளது. இச்சிறுமரம் புதர்ச் செடி போன்று காணப்படுகிறது. பங்களூர் ‘லால்பாக்’ தாவரத் தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. இதற்கு ‘பிரைட் ஆப் இந்தியா’ (Pride of India) இந்தியப் பெருமித மலர் என்று பெயர். இதன் பூ மிக அழகானது. மென்மையானது. இளஞ்சிவப்பு நிறமான ஆறு அகவிதழ்களை உடையது. மகரந்த வட்டத்தில் பல மகரந்தங்கள் திரண்டு பூவின் நடுவில் மஞ்சள் நிறமாக இருக்கும். ஆனால், இப்பூவை மோந்தால் குழையும் இயல்பு இல்லை. இதுதான் ‘அனிச்சம்’ என்று துணிதற்கில்லையாயினும் இப்போதைக்கு இதனை அனிச்சம் எனக் கருதி இதன் தாவரவியல்புகளைப் பற்றிச் சிறிது கூறுவாம்.
சங்க இலக்கியப் பெயர் | : | அனிச்சம் |
பிற்கால இலக்கியப் பெயர் | : | அனிச்சம் |
உலக வழக்குப் பெயர் | : | தடலி |
தாவரப் பெயர் | : | லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே (Lagerstroemia flos-reginae, Retz.) |
அனிச்சம்
இலக்கியம்
‘ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்’ (குறிஞ். 62) என்று குறிஞ்சிக் கபிலர் காந்தள் மலருக்கு அடுத்தபடியாக அனிச்ச மலரைக் கூறுகின்றார். ‘அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்’ (கலி. 91 : 1) என்பது கலித்தொகை. இவ்விரு வரிகளும் முறையே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுள் காணப்படுகின்றன. அனிச்சம் என்ற பூவின் பெயரையன்றி, வேறு குறிப்புகளை இவ்வரிகளில் காணவியலவில்லை.
இவையன்றி அனிச்ச மலரைப் பற்றிய செய்திகளை மிகுத்துக் கூறுவது திருக்குறள். இந்நூல் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாயினும், அனிச்சத்தின் சிறப்பியல்பு கருதி இங்ஙனம் விரித்துரைத்தாம்.
“மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”-திருக்கு. 90
“நல்நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னிரள் யாம் வீழ்பவள்”-திருக்கு. 1111
“அனிச்சம்பூக் கால்களையாப் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை”-திருக்கு. 1115
“அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்”-திருக்கு. 1120
அனிச்சமலர் மோந்து பார்க்கும் அளவானே குழையும் தன்மையது என்று அதன் மென்மையைக் கூறுகின்றார். இதனால், மலரின் உயிர்த் தன்மையைக் காட்டுகின்றார் (90). இத்துணை மென்மையுடைய அனிச்ச மலரைக் காட்டிலும், மென்மையுடையவள் எம்மால் விரும்பப்பட்ட தலைமகள் என்று தலைவியின் மென்மையைப் புலப்படுத்துகின்றார் (1111). அனிச்ச மலருக்குக் காம்பு உண்டு என்பது அறியப்படும். அக்காம்பினை அகற்றாமல், தோழி இப்பூவினைத் தலைவியின் தலையிற் சூட்டினாள். இதனை இங்ஙனம் பெய்ததினால், அவளது இடை இதன் பளுவைத் தாங்க முடியாது இற்று விடும் என்று கூறி, மலரைக் காட்டிலும் காம்பு கனமுள்ளது என்பதையும், அனிச்ச மலர் மென்மையுடன் இலேசானது என்பதையும் புலப்படுத்துகின்றார் (1115). மேலும், அனிச்ச மலர் மாதரடிக்கு நெருஞ்சியின் முள் போன்றது என்று அனிச்ச மலரின் மென்மையினும் மாதரடியின் மென்மையை விதந்து கூறுகின்றார். (1120)
இத்துணை மென்மை வாய்ந்த அனிச்ச மலர் என்பது யாது? எங்குளது? என்ன நிறம்? எப்பொழுது பூக்கும்? அனிச்சம், மரமா? செடியா? கொடியா? இவ்வினாக்களுக்குச் சங்க இலக்கியத்தில் விளக்கமில்லை.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர் அ. நமச்சிவாய முதலியார் அவர்கள், லஷிங்டன் என்ற தாவரவியல் அறிஞர்க்குத் தமிழ் நாட்டு மரஞ்செடிகொடிகளின் தமிழ்ப் பெயர்களை அறிவுறுத்தினார் என்பர். லஷிங்டன் அவரது உதவியைக் கொண்டு, அன்றைய சென்னை மாநிலத்தில் வளரும் மரம், செடி, கொடிகளின் தமிழ்ப் பெயர்ப் பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் அப்பட்டியலில் ‘அனிச்சம்’ என்பது ‘லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே’ எனற தாவரப் பெயர் உடையதென்று குறிப்பிட்டுள்ளார்.
உலகில் உள்ள மிகப் பெரிய தாவரப் பூங்காக்களில் தாவரங்களுக்குத் தாவரப் பெயரை எழுதி விளக்குவது வழக்கம். இவற்றின் தாவரப் பெயருடன் தமிழ்ப் பெயரைச் சேர்த்து எழுதும் இரு பூங்காக்கள் உள்ளன. ஒன்று பாரடேனியா தாவரத் தோட்டம். இது சீலங்காவில் உள்ளது. மற்றொன்று கோலாலம்பூர் தாவரத் தோட்டம். இது மலேசியாவில் உள்ளது. இவ்விரு தோட்டங்களிலும் லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே என்ற சிறு மரத்திற்குத்தான் அனிச்சம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் உலர் படிவம் ஒன்றையும் யாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து வேண்டிப் பெற்றனம். இது மிக அழகான செவ்விய பூக்களையுடையது. இச்சிறு மரத்தை ஆங்கிலத்தில் (Pride of India) இந்தியாவின் பெருமிதம் என்று அழைப்பர்.
இப்போது இச்சிறுமரம் பங்களூரில் உள்ள லால்பாக் தாவரப் பூங்காவில் வளர்க்கப்படுகிறது.
இம்மலர் மிகவும் மெல்லியது. ஆயினும் மோப்பக் குழையும் இயல்பு இதில் இல்லை. இதனால் இது அனிச்சமன்று என்று கூறுவாறுமுளர். இதுவன்றி, வேறு சில புதர்ச் செடிகளை அனிச்சம் என்று கூறுவாரும் இந்நாளில் உண்டு. அனிச்சம் தமிழ் நாட்டில் இப்போது இல்லை. அஃது அழிந்து விட்டது என்பாரும் உளர். இதனை வலியுறுத்தும் செய்தி ஒன்றுண்டு. 1975 ஆம் ஆண்டு தொட்டு மேற்கு ஜெர்மனி நாட்டிலிருந்து ‘தாவர ஆய்வும் வளர்ச்சியும்’, (Plant Research and Development) என்ற பெயரில் ஓர் ஆய்விதழ் வெளியாகி வருகின்றது. இதில் ரோஸ்வித்தா ஷிமிட் (Roswittha schmid) என்ற பேராசிரியர், இன்றைய உலகில் அழிவை நோக்கும் தாவரங்கள் என்ற கட்டுரையில், ஏறத்தாழ 20,000 தாவர இனங்கள் அழிந்தும், அழிவை நோக்கியும் உள்ளன என்று IUCN குழுவினர் கணக்கிட்டுள்ளதாகக் கூறுகின்றார் (தொகுதி: 1 : பக்: 1.04). இதில் அனிச்சமும் ஒன்றாக இருக்கலாமென்ற எண்ணம் எழுகிறது.
இருப்பினும், சீலங்கா தமிழ் மக்களும், மலேசியா தமிழ் மக்களும் அனிச்சமெனக் கருதும் லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே என்ற சிறுமரத்தைப் பற்றி எமது ‘பூ மரங்கள்’ என்ற தமிழாக்கப் புத்தகத்தில் (பக். 163) விரிவாகக் காணலாம்.
அனிச்சம் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே, அகவிதழ்கள் இணையாதவை |
தாவரக் குடும்பம் | : | லித்ரேசி (Lythraceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | லாகர்ஸ்ரோமியா (Lagerstroemia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பிளாஸ்ரீஜினே (flos-reginae) |
தாவர இயல்பு | : | புதர்ச்செடியாகத் தோன்றும், சிறு மரம். ஏறக்குறைய 20 அடி உயரம் வளரும். |
இலை | : | தனி இலை அகன்றது. பசுமையானது. பெரியது. தண்டின் அடியில் எதிரடுக்கிலும், நுனியில் மாற்றடுக்கிலும் உண்டாகும். இலையின் அடிப்புறம் வெளிர் பச்சை நிறமானது. |
அனிச்சம்
(Lagerstroemia flos-reginae)
மஞ்சரி | : | இலைக்கோணத்தில் 1 முதல் 2 அடி நீளமான நுனி வளர் பூந்துணர். எனினும், கலப்பு மஞ்சரியாக வளர்ந்து விடும். |
மலர் | : | செந்நிறமானது. கவர்ச்சியானது. அழகானது. இளஞ்சிவப்பு நிறமானது. பூக்கள் உதிரும் போது, வெளுத்து விடும். இது இந்தியப் பூக்களில் சிறந்தது என்பர். இதற்கு இரு மலர்ச் செதில்கள் உள்ளன. |
புல்லி வட்டம் | : | 6 புறவிதழ்கள் இணைந்து, புனல் வடிவானது. |
அல்லி வட்டம் | : | 6 அகவிதழ்கள் உடையது. அகவிதழ்களுக்குச் சிறு காம்பு காணப்படும். இலையில் உள்ளது போன்று, நடு நரம்புப் பக்கத்தில் கிளை நரம்புகளும் உள்ளன. அகவிதழ் சற்று மடிந்து சுருங்கியிருக்கும். இதனால் இதனை மடிப்புப் பூவென்பது முண்டு. ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை பூக்கும். |
மகரந்த வட்டம் | : | பலப்பல மகரந்த இழைகள் திரண்டு, மலரின் நடுவில் மஞ்சள் நிறமாகத் தோன்றும். நீண்ட இழைகள், புல்லி வட்டத்தின் அடியிலிருந்து தோன்றும். |
சூலக வட்டம் | : | 3 முதல் 6 செல்களை உடையது. பல சூல்கள் அச்சு ஒட்டு முறையில் இணைந்துள்ளன. சூல்தண்டு நீண்டு வளைந்தது. சூல்முடி உருண்டை வடிவானது. |
கனி | : | கனி முற்றியவுடன் 6 பகுதிகளாக வெடிக்கும். புறவிதழ் கனியின் அடியில் சுருங்கி ஒட்டிக் கொண்டிருக்கும். |
விதை | : | விதைகள் பழுப்பு நிறமானவை. சிறகு போன்று விரிந்திருக்கும். மெல்லிய வித்திலைகள், மடிந்து வட்டமாகத் தோன்றும். |