சங்க இலக்கியத் தாவரங்கள்/059-150

பீரம்-பீர்க்கு
லஃபா ஈஜிப்டிகா (Luffa aegyptica, Mill.)

‘பாரம், பீரம் பைங்குருக் கத்தி’ என வரும் குறிஞ்சிப் பாட்டடியில் உள்ள ‘பீரம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பீர்க்கம்பூ’ என்று உரை கூறினார்.

‘பீர்க்கு’ ஒரு கொடி. மஞ்சள் நிறமான பூக்களை உடையது. பசலையூர்ந்த மகளிரின் நிறம், இதன் நிறத்திற்கு உவமிக்கப்படும்.

சங்க இலக்கியப் பெயர் : பீரம்
உலக வழக்குப் பெயர் : பீர்க்கு
தாவரப் பெயர் : லஃபா ஈஜிப்டிகா
(Luffa aegyptica, Mill.)

பீரம்-பீர்க்கு இலக்கியம்

‘பாரம் பீரம் பைங்குருக்கத்தி’ என்றார் கபிலர் (குறிஞ். 92). இதில் வரும் ‘பீரம்’ என்ற சொல் பீர் + அம் → பீரம் என்றாயிற்று.

‘பீர் என்கிளவி அம்மொடு சிவனும்’ எனக் கூறும் தொல்காப்பியம் (எழு. 366). பீரம் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பீர்க்கம்பூ’ என்று உரை கூறினார்.

“இவர்கொடிப் பீரம் இரும்பிதல் மலரும்-ஐங். 464 : 2

என்னும்படி இம்மலர் ஒரு கொடிப் பூவாகும். பீர்க்கங்கொடி தழைத்துப் புதர் போலப் படரும். இது கார்காலத்திற் பூக்கும் என்பதை அழகுறக் குறிப்பிடும் திணை மாலை நூற்றைம்பது.

“கார்தோன்ற காதலர்தேர் தோன்றா தாகவே,
 பீர்தோன்றி நீர்தோன்றும் கண்
[1]

பீர்க்கம்பூ சிறியது; அழகானது; பொன் போன்ற மஞ்சள் நிறமானது. காதலனைப் பிரிந்த தலைவிக்கு உண்டாகும் நிற வேறுபாடு, ‘பசலை’ எனப்படும். ‘பசப்பு’ என்பதும் இதுவே. ‘பசலை’ பாய்ந்த மகளின் நிறம் பீர்க்கம் பூவை ஒத்து, மஞ்சள் நிறத் தேமலாகத் தோன்றும். இதனை நெற்றியில் காணலாம் என்பர்.

“பசுநிலா விரிந்த பல்கதிர் மதியின்
 பெருநல் ஆய்கவின் ஒரீஇ சிறுபீர்
 வீ ஏர் வண்ணம் கொண்டன்று
 . . . . . . . . . . . . சிறுநுதலே”
-அகநா. 57 : 11-13

“பொன்போல் பீரமொடு புதல்புதல் மலர”நெடுநல். 14

“பொன்என இவர் கொடிப் பீர்”-ஐங். 464

“தோளேதொடி நெகிழ்ந் தனவே நுதலே
 பீர்இவர் மலரில் பசப்பூர்ந் தனவே”
-நற். 197 : 1-2

நெற்றியிற் காணப்படும் பசலையைக் கண்ட ஊரார் அலர் உரைப்பர். அலர் உரைத்தலாலும், பசலை உண்டாகும்; நறுநுதல் வனப்பிழக்கும்; உடல் மெலியும்.

“ஊர்அலர் தூற்றலின் ஒளிஓடி நறுதுதல்
 பீர்அலர் அணிகொண்டு பிறை வனப்பு
 இழவாக்கால்”
-கலி. 53 : 14-15

பசலை படர்ந்த தலைவியின் உரையாடலை நற்றிணைப் பாடல் ஒன்று கூறுகின்றது.

பீர்க்கம்பூ பொன் நிறமானது. எனினும், மணமில்லாதது. மணத்தில் நாடி பார்க்கும் வல்லமை கொண்டது தும்பி என்பர். இதனைக் கடிந்து கொள்ளுகின்றாள் காதலனைப் பிரிந்த ஒருத்தி.

‘தும்பியே! நீ கொடியை! முள் வேலியிற் படர்ந்த பீர்க்கம் பூவை ஊதித் தேனைப் பருகினாய். எனினும் முகம் சுளித்தாய். அப்பூவில் மணமில்லாமையின் முகம் வேறுபட்டாய் போலும்! நீ ஒன்று செய்திருக்கலாம். என் உடம்பில் படர்ந்துள்ள பசலையை ஊதியிருக்கலாம். மணமாவது பெற்றிருப்பாய்! இருப்பினும் வாழி!’ என்று கூறுகிறாள்.



பீரம்
(Luffa aegiptica)

“கொடியை வாழி தும்பி இந்நோய்
 நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய
 தாதுபடு பீரம் ஊதி வேறுபட
 நாற்ற மின்மையின் பசலை ஊதாய்”
-நற். 277 : 1-6-8

‘கொங்குதேர் வாழ்க்கைத் தும்பியை’ இங்ஙனம் ‘கொடியை’ என விளித்துப் பாடிய புலவரின் பெயர் தும்பிசேர் கீரனார்.

படப்பையில், வேலியில், புதரில், பீரம் படரலாம். ஆனால் இல்லின் மேல், மனையில், மன்றத்தில் படரக் கூடாது. மனையில் பீரம் முளைத்தால், அது பாழ்மனை என்று பொருள்.

“முனை கவர்ந்து கொண்டெனக் கலங்கிப்பீர்
 மனைபாழ் பட்ட மரைசேர் மன்றத்தில்”

-அகநா. 373 : 1-2


என்று ஏனாதி நெடுங்கண்ணனாரும்.

“பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
 பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்”
-புறநா. 116 : 5-6

என்று கபிலரும்,

“கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ
 ஊர்எழுந்து உலறியபீர் எழுமுது பாழ்”
-அகநா. 167 : 10

எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும், இவ்விளைவைப் பாடியுள்ளனர்.

இதன் காய் உணவுக்கு உதவும். இதன் முற்றிய கனி உடம்பு தேய்த்துக் குளிக்கப் பயன்படும். இதனைப் பிளெஷ்பிரஷ் (Flesh brush) என்பர்.

பீரம்—பீர்க்கு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே; பாசிபுளோரேலீஸ்;

அகவிதழ் இணையாதது என்பர் . எனினும், இதன் குடும்பத்தில் அகவிதழ்கள் இணைந்திருக்கும்.

தாவரக் குடும்பம் : குக்கர்பிட்டேசி(Cucurbitaceae)
தாவரப் பேரினப் பெயர் : லஃபா (Luffa)

பீர்க்கு
(Luffa acutangula)

தாவரச் சிற்றினப் பெயர் : ஈஜிப்டிகா (aegyptica)
தாவர இயல்பு : கிளைத்துப் படரும் ஏறுகொடி; நீளமானது, ஓராண்டுக் கொடி.
இலை : தனியிலை; அகலமானது; 5-7 பிளவுகளை உடையது.
மஞ்சரியும் மலரும் : பால் வேறுபாடுள்ள தனித் தனி மலர்கள் மஞ்சள் நிறமானவை; ஆண் மலர் நுனிவளர் பூந்துணரில் பூக்கும்; பெண்மலர் தனியாக இலைக் கோணத்தில் உண்டாகும்.
புல்லி வட்டம் : ஐந்து புல்லிகள் ஆண்மலரில் இணைந்து, புனல் வடிவமாக இருக்கும். பெண் மலரில் நீண்ட குழல் வடிவாக இருக்கும்; சூலகத்தை முற்றிலும் மூடியிருக்கும்.
அல்லி வட்டம் : இருபாலான மலர்களும் மஞ்சள் நிறமானவை; அகவிதழ்கள் அடியில் இணைந்திருக்கும். மேலே இவை 5 மடல்களாகப் பிளவுபட்டு இருக்கும்.
மகரந்த வட்டம் : ஆண் பூவில் 3-5 தாதிழைகள் புல்லியின் அடியில் இணைந்துள்ளன. தாதுப்பைகள் தனித்து நன்கு வெளிப்பட்டிருக்கும். தாதுப்பை இணைப்பு அகன்றது; பெண் பூவில் 3 மலட்டுத் தாதிழைகள் காணப்படும்.
சூலக வட்டம் : மூன்று சூலிலைகளை உடைய ஓரறைச் சூலகம். பல சூல்கள் உண்டாகும்.
சூல் தண்டு : பெண் பூவில் மட்டும் உண்டு. கம்பி போன்றது. சூல்முடி 3 பிளவானது.
கனி : நீளமான, தடித்த, பசிய காய். புறத்தில் 10 நீண்ட விளிம்புகளைச் சுற்றிலும் உடையது
விதை : பல கரிய பட்டையான விதைகள்.


இதன் காய் உணவுக்குப் பயன்படும். இதனால் இது தமிழ்நாட்டில் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. வீட்டுக் கூரைகளிலும், வேலிகளிலும் படர்ந்து வளரும்.


  1. திணை மா. நூ. 100 : 4-5