சங்க இலக்கியத் தாவரங்கள்/064-150

தணக்கம்–நுணா
மொரிண்டா கோரியா (Morinda coreia, Ham.)

‘தணக்கம்’ என்ற சொல் குறிஞ்சிப் பாட்டில் (85) மட்டும் ‘பாங்கர் மராஅம், பல்பூந்தணக்கம்,’ எனக் காணப்படுகிறது. இதற்கு நச்சினார்க்கினியர், ‘தணக்கம் பூ’ என்று உரை கண்டாராயினும், நிகண்டுகள் இதனை ‘நுணா’ என்று கூறுகின்றன. நுணா என்பது ஒரு மரம். மலையிடத்துக் காடுகளில் வளர்கின்றது. பல பூக்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : தணக்கம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : நுணா, நுணவு, நுணவம்
பிற்கால இலக்கியப் பெயர் : நுணா
உலக வழக்குப் பெயர் : நுணா, மஞ்சள்நாறி, மஞ்சலாட்டி
தாவரப் பெயர் : மொரிண்டா கோரியா
(Morinda coreia, Ham.)

தணக்கம்–நுணா இலக்கியம்

‘தணக்கம்’ என்னுஞ்சொல் குறிஞ்சிப்பாட்டில் மட்டும் வந்துள்ளது.

“பாங்கர் மராஅம் பல்பூங் தணக்கம்-குறிஞ். 85

நச்சினார்க்கினியர் பல்பூந் தணக்கம் என்பதற்குப் ‘பல பூக்களை உடைய தணக்கம்பூ’ என்று உரை எழுதினார். பிற்கால இலக்கியத்தில் - பெருங்கதையில்[1] ‘தண்பூத்தணக்கம்’ என்று கூறப்படுகிறது.

நிகண்டுகள் ‘தணக்கு நுணாவே’ என்றும், ‘நுணவு தணக்கே’ என்றும் கூறுவது கொண்டு தணக்கம் என்பது நுணா மரத்தைக் குறிக்கும் என்று கொள்ள வேண்டியுள்ளது.

சங்க இலக்கியங்களில் நுணா, நுணவு, நுணவம் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

“சுரும்பு களித்து ஆலும் இருஞ்சினைக்
 கருங்கால் நுணவம் கமழும் பொழுதே”
-ஐங். 352

என்பது கொண்டு, இதனைக் கரிய அடிமர்த்தையுடைய நுணா மரம் என்று கொள்ளலாம். இம்மரம் புறத்தே கருமையாகத் தோன்றினும், அகமரம் மஞ்சள் நிறமானது. மஞ்சள் நாறும் இதனை மர வணிகர் ‘தனக்கம்’ என்றும், ‘மஞ்சவட்டி’ என்றும், ‘மஞ்சநதி’ என்றும் கூறுவர். இம்மரத்தை மலையாளத்தில் மஞ்சணாத்தி, மஞ்சணாற்றி என்பர். ஆதலின், தணக்கம் என்பது நுணாவாக இருத்தல் கூடும்.

தலைவியை உடன்போக்கில் கொண்டு செல்லவிருக்கும் தலைமகன், அவளிடம் பாலை நிலப் பாதையை அறிவிக்கும் போது, செல்லும் வழியில் வெண்கடம்பு மரமும், நுணா மரமும் அலரவும், வண்டினம் பாலைப் பண்ணிசைப்பவும் கேட்கலாம் [2] என்கிறான்.

“கருங்கால் மராஅம் நுணாவோ டலர
 இருஞ்சிறை வண்டினம் பாலை முரல”
[3]

இதனால், தணக்கம் என்பது பாலை நில மரமெனவும், இளவேனிற் பருவத்தில் பூக்கும் எனவும் அறியலாம்.

“நறவுவாய் உறைக்கும் நாகுமுதிர் நுணவத்து”
-சிறுபா. 51


என்றமையின் இதன் பூவில் தேன் சிந்துவதும் ‘கருங்கால் நுணவம் கமழும் பொழுது’ என்றபடியால், இதில் நறுமணம் கமழும் என்பதும் அறியப்படும்.

இம்மரம், சிற்றருவியின் நீர்த்துளிகளால் மலருமெனவும், வெண்மையான பூக்களை உடையது எனவும் குடவாயிற் கீரத்தனார் கூறுவர்.

“சிறு வெள்ளருவித் துவலையின் மலர்ந்த
 கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூ”

-அகநா. 345 : 15-16


தாவர இயலில் தணக்கம் ரூபியேசி என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு மொரிண்டா கோரியா (Morinda coreia) என்பது தாவர இரட்டைப் பெயர். இதற்கு மொரிண்டா சிட்ரிபோலியா (M. citrifolia) என்று ‘பெடோம்’ என்பவரும், மொரிண்டா டிங்டோரியா (M. tinctoria) என்று, ராக்ஸ்பெர்க் என்பவரும் பெயரிட்டனர். எனினும், இக்காலத்தில் இதன் தாவரப் பெயரை மொரிண்டா கோரியா என்பர். இதன், குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என இராகவன் டி. எஸ். அரங்கசாமி (1941) என்போர் கூறுவர்.

மொரிண்டா என்னும் இப்பேரினத்தில், 5 சிற்றினங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன,

மொரிண்டா எனும் இப்பேரினம் கருநாடகம் முதல் திருவனந்தபுரம் வரையில், வறண்ட காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் வளர்கின்றது என்றும் ‘காம்பிள்’ கூறுவர்.

தணக்கம்—நுணா தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ்கள் இணைந்தவை; இன்பெரே
தாவரக் குடும்பம் : ரூபியேசி (Rubiaceae)
தாவரப் பேரினப் பெயர் : மொரிண்டா (Morinda)
தாவரச் சிற்றினப் பெயர் : கோரியா (coreia)
தாவர இயல்பு : சிறு மரம், 10-15 மீட்டர் உயரமாகக் கிளைத்து வளரும். அடி மரம் மிக வன்மையான நாட்டு வண்டியின் நுகத்தடியாகப் (நுகம்) பயன்படும். மஞ்சள் நிறமானது. மஞ்சள் நாறி என்று இதனைக் கூறுவதும் இதனால் போலும்.
இலை : அகன்று நீண்ட தனி இலை. 3 செ.மீ. அகலமும், 10-12 செ.மீ. நீளமுமான பசிய இலை. சுற்றடுக்கில் 3 அல்லது 4 இலைகள் காணப்படும். இலைச் செதில்கள் உண்டு.
மஞ்சரி : கிளை நுனியில் அல்லது இலைக்கோணத்தில் அம்பல் என்னும் நுனி வளராப் பூந்துணராகக் காணப்படும்.
மலர் : வெண்மை நிறமானது. பூவடிச் செதில் இல்லை.
புல்லி வட்டம் : புல்லிக் குழல் பம்பர வடிவமாகவோ, அரைக்கோளமாகவோ காணப்படும். கால்கள் குறுகியவை.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்தது. அல்லிக் குழல் ஏறக்குறைய புனல் வடிவமானது. நீளமாகக் காணப்படும். மடல்கள் 4 மொட்டில் தொடு இதழமைப்பானது.
மகரந்த வட்டம் : 4 தாதுக்கால்கள்; இவை அல்லியிதழ்களின் தொண்டையில் பொருத்தப்பட்டிருக்கும். மகரந்தக் கால்கள் குட்டையானவை. தாதுப்பைகள் நீள் சதுரமாகக் காணப்படும்.
சூலக வட்டம் : சூற்பை 2-4 அறைகளை உடையது. தடுப்புச் சுவர் அடித்தளத்தில் இருக்கும். சூல்தண்டு மென்மையானது. சூல்முடி இருபிளவாக இருக்கும்.
கனி : இணைந்த சூலிலைகளால் ஆன ‘அக்ரி கேட்’ சதைக் கனி; 4 பைரீன்கள் கொண்டது.
விதை : நீள் சதுரமானது. புறவுரை சவ்வு போன்றது. முளை சூழ்தசை சதைப் பற்றாக இருக்கும். வித்திலைகள் சிறியவை. முளை வேர் நீளமாகவும், கீழ் மட்டமானதாயும் இருக்கும்.

நுணா மரம் மஞ்சள் நிறமான தண்டுள்ளது; வலியது; நுகத்தடிக்கும் மர வேலைக்கும் பயன்படும். தமிழ் நாட்டில் பெரும்பாலும் பரவலாக வளர்கிறது.


  1. பெருங்கதை இலா 15 : 15
  2. நிகண்டுகள்
  3. திணை மொ. ஐம்: 16